இலங்கையில் இந்துத்துவம் -2

கட்டுரைகள்

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம் குறித்து நான் எழுதிய கட்டுரை மேலோட்டமானதென மேலோட்டமாகச் சொல்லப்படுவதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சிவசேனை இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் இலங்கை தொடர்பான இந்திய இந்துத்துவ சக்திகளின் நிலைப்பாடுகளையும் கூற்றுகளையும் நான் தொடர்ச்சியாகப் படித்தும் கவனித்தும் பேசியும் வந்திருக்கிறேன். தங்களது கடையை இலங்கையில் விரிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது மிக வெளிப்படையான உண்மை. ஆகவே அவர்கள் இலங்கையின் சிவசேனைக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். இந்தச் செய்திகளை ஆங்கிலத் தினப் பத்திரிகைகளை விடவும் தமிழக இந்துத்துவ இணையத்தளங்கள் இன்னும் துல்லியமாகக் கட்டுரைகளாகத் தீட்டி வெளியிடுகின்றன. சிவாஜிலிங்கம் தமிழக இந்து முன்னணி மேடைகளில் பேசியபோதே எழுதி எதிர்வினை ஆற்றியிருந்தேன்.

இந்திய இந்துத்துவ சக்திகள் இலங்கையில் புகுவதற்கு ஒருபக்கம் துடித்துக்கொண்டிருக்க, சச்சிதானந்தன், யோகேஸ்வரன் போன்றவர்கள் அவர்களை  இலங்கைக்கு அழைத்துவரத் துடிக்கிறார்கள். அப்படிச் சில வருகைகளும் நிகழ்ந்தன. ஆனால் அவர்களது இந்துத்துவ அரசியல் எண்ணம் இலங்கையில் நிறைவேற முடியாது என்பதுதான் என் எண்ணம்.

இன்று இலங்கையில் இந்துக்கள் 12.6 வீதம். இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் 17.1 வீதம். பவுத்தர்கள் 70.02 வீதம். இந்தியாவில் இருக்கும் வரிசைக்கு தலைகீழ் வரிசை.  இந்தியா போல்  இந்துக்களை அறுதிப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடல்ல இலங்கை. இங்கே அந்த இடம் பவுத்தத்திற்கு.

சிவசேனை போன்ற இந்துத்துவ அமைப்புகளும் – பவுத்த அடிப்படைவாத பொதுபலசேனாவும் இஸ்லாமியர் – கிறித்தவர்களிற்கு எதிரான காரியக் கூட்டாளிகள் என்பது உண்மை. அதேபோல இந்த இரு அடிப்படைவாத சக்திகளும் ஒருவர்மேல் ஒருவர் தீராத பகைகொண்டவர்கள் என்பதும் உண்மை. இலங்கையை பவுத்த தேசமாகப் பிரகடனப்படுத்தி நாடு முழுவதும் புத்த கோயில்களை எழுப்பத் திட்டமிடும் பொதுபலசேனா ஒருபோதும் இந்துத்துவத்தை பரப்ப முயலும் சக்திகளின் நீடித்த நட்புச் சக்தியாக இருக்காது. இந்த இடத்தில் பவுத்தர்களுக்கு இந்தியா மீதும் இந்து ஆட்சியாளர்கள் மீதும் வரலாற்றுரீதியாகவே உள்ள ஆதி அச்சத்தை நாம் மறந்துவிடலாகாது. பவுத்த – இந்து நாகரிகங்களின் கூட்டென்பதெல்லாம் அவர்களின் தந்திர வார்த்தைகள். இந்தியாவில் பவுத்தத்தைப் பார்ப்பனியம் கருவறுத்தது ஒன்றும் புராணக்கதையல்ல. வரலாறு!

இன்று ஆஞ்சநேயர் சிலைகள் முளைப்பதையும் முதல்வர் விக்கினேஸ்வரன் சாமி கும்பிடுவதையும் இந்துத்துவ எழுச்சியாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். எல்லா அரசியல்வாதிகளும் சாமி கும்பிடத்தான் செய்கிறார்கள்.  டக்ளஸ் தேவானந்தாவும் வாசுதேவ நாணயக்காரவும் கூட விதிவிலக்கல்ல. இலங்கையில் எல்லா மதங்களுமே புதிய வழிபாட்டிடங்களையும் சிலைகளையும் உருவாக்குகிறார்கள். குறிப்பாக கிறித்தவ சபைகள் கடந்த 20 வருடங்களில் இலங்கையில் பெருகியுள்ளன. இவற்றை மதம் பரப்பும் அல்லது மதத்தை வளர்க்கும் முயற்சிகளாகவே கணிக்கவேண்டும். அது அவர்களது அடிப்படை உரிமை. ஆர். எஸ். எஸ். வகை இந்துத்துவப் பயங்கரவாதம் என்பது வேறு.

மதம் மாற்றாதே என இந்துக்கள் மட்டுமல்ல கத்தோலிக்கர்களும்தான் குரல் கொடுக்கிறார்கள். உண்மையில் இலங்கையில் நடக்கும் கிறித்தவ சபை மதமாற்ற முயற்சிகளை இந்துக்களைவிட பாரம்பரியக் கத்தோலிக்கர்களே அதிகமாக எதிர்க்கிறார்கள் . இஸ்லாமியர்களிடமும் மதம் பரப்பும் முயற்சிகள் இருக்கின்றன. பவுத்தர்களும் மத மாற்றங்களை எதிர்க்கிறார்கள். இவையெல்லாம் மதவாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள். ஆனால் ஆர். எஸ். எஸ். வகை இந்துத்துவம் வேறு. அது பிற மதத்தவர்கள் மீது வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட,  வன்முறை வழியை ஏற்றுக்கொண்ட, அரசியல் அதிகாரத்தைக் குறியாகக்கொண்ட அடிப்படைவாத நிறுவனம். இந்த வேறுபாட்டை விளங்கிக்கொள்வது முக்கியம் என நினைக்கிறேன்.

இன்று  இலங்கையில் வாழும் இந்துக்கள் தொகையில் வெள்ளாளர்களின் தொகை இருபது விழுக்காடுதான் வருமென எண்ணுகிறேன்.வெள்ளாள சாதிக்குள் கிறித்தவர்களின் செல்வாக்கு குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.  அரசியல் -கல்வி – பொருளாதாரம் எல்லாவற்றிலும் அவர்கள் இந்து வெள்ளாளர்களிற்கு ஓரளவு நிகராகவேயுள்ளார்கள். அதேவேளையில் எண்பது விழுக்காடு இந்துக்கள், வெள்ளாள ஆதிக்கசாதிக்கு வெளியே உள்ளவர்கள் என்பதையும் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியுள்ளது. இலங்கையின் அறுதிப் பெரும்பான்மை இந்துக்கள் வெறுக்கத்தக்க ஆர். எஸ்.எஸ் – சிவசேனை அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான எந்த நியாயமோ தேவையோ அரசியல் – கலாசார- பொருளியல்ரீதியாக அவர்களிற்குக் கிடையாது.

5 thoughts on “இலங்கையில் இந்துத்துவம் -2

  1. தங்களின் முதலாவது பதிவுக்கு றியாஸ் குரானாவின் பதில் பதிவு கிஞ்சித்தும் சம்பந்தமில்லாதிருந்தும் அது பற்றி அலட்டாமல் ஜப்னா பேக்கரியின் விமர்சனம் எங்கே? எனக்கேட்டு முடித்த பின்னூட்டின் நியாயம் என்ன என்று புரியவில்லை. குரானா நேர் முரணாய் பதிவிட்டிருந்தும் அதுபற்றி பேசலியே நீங்கள்?ஏன்?

  2. //கிஞ்சித்தும் சம்பந்தமில்லாதிருந்தும்// பிறகு அவரட்ட என்னத்தைப் பேச..

  3. இலங்கையில் ஆர் எஸ் எஸ் தாக்கம் இருக்காது என்று சொன்ன காரணத்துக்காக உங்களை உங்கள் ஆசான் மார்க்ஸ் அந்தோணிசாமி வறுத்தெடுக்க போறாரே

  4. சரியான பார்வை. சில முகநூல் புரட்சியாளர்கள் இதையெல்லாம் ஊதிப்பெருக்குகிறார்களோ எனும் அச்சம் மேலிடுவதும் தவிர்க்க இயலவில்லை.

  5. I savor, cause I found exactly what I was taking a look for.

    You have ended my 4 day long hunt! God Bless you man. Have a nice
    day. Bye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *