உடனடித் தேவை தத்துவ ஆசிரியரல்ல, தமிழ் ஆசிரியரே!

கட்டுரைகள்

நேற்று முன்தினம் விகடன் தடம் இதழில் வெளியாகிய என்னுடைய கட்டுரையில் இப்படியொரு பந்தி வரும்:

“புலிகள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை நிரப்ப அல்லது புலிகளின் தொடர்ச்சியாகக் காட்டிக்கொள்ள, புகலிட நாடுகளில் பல முயற்சிகள் நடந்தன. நாடு கடந்த அரசு, பிளவுண்ட புலிகளின் சிறு சிறு குழுக்கள் என்பன ஒரு பக்கமும், அதுவரை இறுக்கமான இடதுசாரித் தத்துவங்களை உதிர்த்துக்கொண்டிருந்த குழுக்கள் ‘சமவுரிமை இயக்கம்’, ‘மே 18 இயக்கம்’, ‘தமிழ் சொலிடாரிட்டி’ என்ற பெயரிலெல்லாம் மறுபக்கத்திலும் குத்துக்கரணங்கள் போட்டுப் பார்த்தன. புலிகள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது என்ற நப்பாசையைத் தவிர, இக்குழுக்களுக்கு வேறு தனித்துவமான அரசியல் நிலைப்பாடுகள் இல்லாததால், இவை செயலற்ற சவலை அமைப்புகளாகிப்போயின. புலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்!”

என்னுடைய கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து இங்கே குறிப்பிடப்படும் அமைப்புகளில் ஒன்றாகிய ‘தமிழ் சொலிடாரிட்டி’யின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் முகநுாலில் “இதோ பதிலடி வெளியாகப் போகிறது”..”இன்னும் சில நிமிடங்களில் வெளியாகயிருக்கிறது” என அறிவித்தல் விடத் தொடங்கினார். “நாளைக்கு உங்களுக்கு தரமான சம்பவம் ஒண்டு காத்திருக்கு” என்றும் தேசியச் செயலாளர் எழுதினார். அவர் வகிக்கும் உயர்மட்டப் பொறுப்புக்கு ‘பேட்ட’ ரஜினிகாந்தின் டயலாக்கை அவர் கடன் பெறுவது உண்மையிலேயே பொருத்தமற்றது.

என்னை டமேஜ் பண்ணவும் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் தவறவில்லை. ‘விகடன் விருது பெறுவதற்காக நான் இப்படியெல்லாம் மேடையில் பேசுவதாக’ செயலாளர் எழுதினார். உண்மையில் செயலாளர் குறிப்பிடும் அந்த மேடையில் எனக்கு விருது வழங்கப்படவில்லை. வேறு பலருக்கு வழங்கினார்கள். பெற்றவர்களில் மே 17 இயக்க திருமுருகன் காந்தியும் ஒருவர்.

ஓர் அமைப்பின் அதுவும் ட்ராஸ்கியப் பின்னணிகொண்ட அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் இவ்வாறு பொறுப்பின்மையாக நடக்கக்கூடாது என நான் அவரது முகநுால் பக்கத்தில் சுட்டிக்காட்டினேன். அடுத்தமுறை இப்படி நேராமல் பார்த்துக்கொள்வதாகச் செயலாளர் சொல்லியிருக்கிறார். அவ்வளவில் புரட்சிகர மகிழ்ச்சியே எனக்கு.

நான் செயலாளரிடம் ஒன்றை வேண்டிக்கொண்டேன். CWI-SP-USP போன்றவை அமைப்புரீதியாகப் பதிலளித்தால் நானும் பதில் அளிப்பேன் என்றேன். ஒரு புதிய வாசகருக்கு இது கொஞ்சம் முரணாகத் தெரியலாம். தமிழ் சொலிடாரிட்டி பற்றிய விசயத்திற்கு ஏன் CWI-SP-USP போன்றவை பதிலளிக்க வேண்டும் எனப் புதிய வாசகர் யோசிக்கலாம். தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு தனித்து இயங்கும் அமைப்பல்ல. United Socialist Party- Srilanka, Socialist Party – UK ஆகிய கட்சி அமைப்புகளின் ஒரு முகம்தான் தமிழ் சொலிடாரிட்டி. ஆனால் அதை அவர்கள் வெளிப்படையாக அதிகமும் சொல்லிக்கொள்வதில்லை. ஆயினும் ‘தமிழ் சொலிடாரிட்டி’யின் அடிப்படை அரசியலை இந்தக் கட்சிகளும் இந்தக் கட்சிகளின் அரசியலை Committee for a Workers’ International-ம் தீர்மானிக்கின்றன. எனவேதான் தலையிருக்க வால் ஏன் ஆடுவான் என்ற நல்லெண்ணத்தில் CWI-SP-USP போன்றவை பதிலளிக்க வேண்டுமென்றேன். இம்முறை தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் ரஜினியை விட்டுவிட்டு மகான் கவுண்டமணியைத் துணைக்கழைத்து ‘பெட்ரோல்மாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என்றார் . சரி, தமிழ் சொலிடாரிற்றியே பதிலளிக்கட்டும் என்றேன்.

செயலாளர் கட்டியம் கூறிய பதிலடிக் கட்டுரை சற்று முன் ‘தமிழ் சொலிடாரிட்டி’யின் தளத்தில் வெளியாகியிருக்கிறது. நான் அஞ்சியதுதான் நிகழ்ந்தது.

கட்டுரையைப் படிக்கும் எவருக்கும் இந்தக் கட்டுரையின் தொனி ஒரு பொறுப்பான அமைப்பு வெளியிட்ட மறுப்பு என்பதாகத் தோன்றாது. கட்டுரையிலும் மறுபடியும் அதே காய்ந்துபோன நகைச்சுவை. கட்டுரையின் முடிவில் “முன்பே சொன்னேன் – சும்மா இப்படி அரசியற் கட்டுரைகள் என எழுத வெளிக்கிட்டு நாற வேண்டாம்” என்றொரு முத்தாய்ப்பு. “முன்பே சொன்னேன்” என்ற கட்டுரையின் வரி கட்டுரையை தமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பின் குரலாக அல்லாமல் தனிநபரின் குரலாகவே நிறுத்துகிறது. தனிநபரின் குரல்தான் தமிழ் சொலிடாரிற்றியின் குரல் என்றால் தேசிய இணைப்புச் செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

மறுப்புக் கட்டுரையில் ஒரு வாக்கியம் இது: “தாம் போராட்டத்தின் தொடர்ச்சி என தமிழ் சொலிடாரிட்டி அழுத்தி சொல்லி வருகிறது.”

இவ்வளவுதான் விசயம். புலிகள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை நிரப்ப (புலிகளின் இடத்தையல்ல)தமிழ் சொலிடாரிற்றி முயல்கிறது. தங்களைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ் சொலிடாரிட்டி சொல்வது இதானாலேயே. இல்லாவிட்டால் Committee for a Workers’ International-ஆல் வழிநடத்தப்படும் இந்த அமைப்பு ட்ராஸ்கியத்தின் தொடர்சியாகவும் வர்க்கப் போராட்டத்தின் தொடர்சியாகவுமே தன்னை மக்கள் முன்னே நிறுத்தும். மிக எளிமையாக விளங்கக் கூடிய மாதிரிச் சொல்வதென்றால் குமார் குணரத்தினத்தால் தலைமை தாங்கப்படும் ஜே.வி.பி.யின் ‘நவீன’ முகமான முன்னிலை சோசலிசக் கட்சி, ‘சமவுரிமை இயக்கம்’ என்ற அடையாளத்தோடு தமிழ் மக்களிற்குள் செயற்படுவதைப் போன்றது இது.

மறுப்புக் கட்டுரையில் என்னை குறிவைத்து இப்படியொரு அடி:

“மே 18 இயக்கம் என்று ஒரு இயக்கம் இருப்பது எனக்குத் தெரியாது! மே 17 இயக்கம் என்ற ஒரு இயக்கம் உண்டு. எழுதுகிற அரசியல் ஞானத்தை வைத்துப் பார்த்தால் அதுபற்றி ஷோபாசக்தி கேள்விப் பட்டிருக்க நியாயமில்லை.”

மே 17 இயக்கத்தை எனக்குத் தெரியாமல் போவது இருக்கட்டும் (திருமுருகன் காந்தியைத் தெரியாவிட்டாலும் லெனா குமாரையும் வளர்மதியையும் எனக்கு எப்படித் தெரியாமல் போகும்). தமிழ் சொலிடாரிட்டிக்கு மே 18 இயக்கத்தைத் தெரியாதது ஒன்றும் ஆச்சரியமில்லை. புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும் தீப்பொறி அமைப்பின் முதன்மையாளர்களில் ஒருவருமான தோழர் ரகுமான் ஜானின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பாக உருவான அமைப்பே மே 18 இயக்கம். ‘வியூகம்’ என்ற பெயரில் இதழெல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள்.

மறுப்புக் கட்டுரையில் என்மீது எனக்கே வெறுப்பு வருமளவிற்கு ஒரு கண்டனம்:

“சாலை அமைப்பு என்றால் என்ன தம்பி ? தார் ஊத்தி தட்டி நிரப்பும் வேலையோ? சுலோகங்களை தெருவில் தூக்கி வந்து போரடுவது உங்களுக்கு அவ்வளவு இளக்காரமாகிப் போச்சோ? நிற வெறியர்கள் வீடற்று சாலையில் நிற்போரை தாக்கும் துவேசத்தின் வலதுசாரிய வேகமும் வெறுப்பும் இங்கு தெரிகிறது. நீங்கள் வீடு வாசல்காரனாகி விட்டீர்கள். அதனால் இப்படியும் பேசுவீர்கள். வலது சாரிய கொழுப்பு வீங்கி உங்கள் கண்கள் மங்கத் தொடங்கி விட்டன.”

நிறவெறி, வலதுசாரி, துவேசம் என்றெல்லாம் தமிழ் சொலிடாரிட்டி என்மீது பொங்கியிருக்கிறது. எதுக்கு இந்தப் பொங்கல் என்று நானே ஒரு கணம் ஆடிப்போனேன். மேட்டர் என்னவென்றால் “இவை செயலற்ற சவலை அமைப்புகளாகிப்போயின” என்று நான் எழுதியதை தமிழ் சொலிடாரிட்டி “சாலை அமைப்புகளாகிப்போயின” என்று படித்துவிட்டு வீணாக விரயமாகப் பொங்கியிருக்கிறது.

எனக்குள்ள சந்தேகமெல்லாம் என்னவென்றால், என்னதான் வாசிப்புப் பிழையென்றாலும் ‘சவலை’யை ‘சிவலை’ எனப் படிக்கலாம் ‘சவாலை’ எனக் கூடப் படிக்க வாய்ப்புண்டு. ஆனால் ‘சாலை’ என எப்படிப் படிக்க முடியும்? அதுவும் ஒரு அமைப்பு முழுவதும் அப்படியே வாசிக்குமா? தமிழ் சொலிடாரிட்டிக்கு உடனடித் தேவை தத்துவ ஆசிரியரல்ல, தமிழ் ஆசிரியரே.

என்னுடைய கட்டுரைமீது தமிழ் சொலிடாரிட்டி வைத்திருக்கும் சாலை மன்னிக்க, சவலையான வர்க்கப் பார்வை அரசியல் விமர்சனங்களைப் பற்றியெல்லாம் எனக்கொரு குறையுமில்லை. நானே இருபது வருடங்களிற்கு முன்பு இதே விமர்சனங்களோடு மூர்க்கமாக நின்று தெருவில் ‘தொழிலாளர் பாதை’ விற்ற எளிய பிள்ளைதானே. பின்பு கற்றுக்கொண்டவையாலும் அனுபவத்தாலும் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட்டேன். என்றாலும் இடதுசாரிகள் மீதான வாஞ்சை இன்னும் குறையாதவன். அதுவும் ட்ராஸ்கியப் பிள்ளைகள் என்றால் கூடுதல் பட்சம்.

தமிழ் சொலிடாரிட்டியின் இந்த மறுப்புக் கட்டுரையில் பல இடங்களில் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்ற சேனனால் எழுதப்பட்ட புத்தகத்தின் பெயர் வருகிறது. அந்தப் புத்தகத்திற்கு நான் பதில் சொல்லவில்லையாம்.
உண்மையில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது வேறு பெயரோடு. சேனன் என்னவோ வைத்த தலைப்பு ‘கொலை மறைக்கும் அரசியல்’ தான். ஆனால் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்ட என் இனிய நண்பர் மனுஷ்யபுத்திரன் “இப்படித் தலைப்பு வைத்தால் புத்தகம் கவனம் பெறாது, உபதலைப்பாக -ஷோபா சக்தியை முன்வைத்து- எனப் போடுங்கள்” எனச் சேனனுக்குப் பரிந்துரைத்ததால் புத்தகத்தின் தலைப்பு “கொலைமறைக்கும் அரசியல்-ஷோபா சக்தியை முன்வைத்து” என மாற்றப்பட்டு வெளிவந்தது. இவ்வளவுதாங்க புரட்சிகர அரசியல்! இதுவொன்றும் ஊகமல்ல. சேனனே நேரடியாக என்னிடம் சொன்னதுதான். இதுகுறித்து நான் அந்தப் புத்தகம் வெளியான தருணத்திலேயே முகநுாலில் பதிவு செய்துள்ளேன்.

என்னை முன்வைத்து என்னத்தையாவது செய்யாமல் இருக்குமாறு தமிழ் சொலிடாரிட்டியினரைக் குறிப்பாகத் தேசிய செயலாளர் கஜனையும் தேசியத் தலைவர் சேனனையும் சத்தியமான தோழமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *