ஆத்தாதவன் செயல்

கட்டுரைகள்

‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல்’ என்பது யாழ்ப்பாணத்தில் பிரபலமான பழமொழி. கூத்தாடுபவர்களைக் கீழிறக்கி ஏளனமாக மதிப்பிடும் யாழ் சாதியச் சமூகத்தின் குறைப் பார்வையை இப்பழமொழி அறிவிக்கிறது. யாழில் கூத்துகளும் இசை நாடகங்களும் தழைத்தோங்கியிருந்த காலத்தில் மீனவச் சாதியினரும் தலித்துகளுமே இந்தக் கலைகளைப் பரம்பரை பரம்பரையாகப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள் .

நான் பால பருவத்திலேயே கூத்துக்காரனாகி விட்டேன். முதற் கூத்து ‘பண்டாரவன்னியன்’. அண்ணாவியார் நாரந்தனை சின்னப்புவின் இயக்கத்தில் தென்மோடிப் பாணியிலமைந்த அந்தக் கூத்தில் எனக்கு ‘காக்கை வன்னியன்’ வேடம். அறிமுகக் காட்சியில் ‘ஈழமாமணி நாடு ஆளும் மன்னவன், ஏழுமா கடல் வானளாவிய தென்னவன்’ எனப் பாடிக்கொண்டே மேடைக்கு வருவேன். கடைசியாக ‘நம்பிக்கையாய் வாரும் பின்னாலே, உம் தம்பியைப் போலவேயெண்ணி நம்பிக்கையாய் வாரும் பின்னாலே’ எனப் பாடியவாறே பண்டாரவன்னியனை நைஸாகக் கூட்டிச்சென்று வெள்ளையரிடம் மாட்டிவிடுவேன். அதன் பின்பு நான் நடித்தவற்றில் ஆகவும் பிரபலமானது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது வீதி நாடகமான ‘விடுதலைக்காளி’. தாயகத்தில் இருக்கும்வரை இந்தக் கால் ஆடிக்கொண்டுதானிருந்தது.

புலம்பெயர்ந்த பின்பு நான் எழுதிய நாடகங்கள் கனடாவிலும் பாரிஸிலும் நடத்தப்பட்டபோதும் எனக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. நான் கடைசியாக மேடை ஏறி ஆடிய வருடம் 1987. ‘கண்ணன் வருவானா’ என்றொரு நாடகம். இந்திய இராணுவம் இலங்கைக்கு வருமா என்ற கருப்பொருளைக் கொண்டது அந்நாடகம். நாடகம் முடிந்து நாங்கள் மேக் – அப்பை தேங்காய் எண்ணை பூசி அழிக்க முன்னமே இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தே விட்டது. நான் என் தாய்நிலத்திலிருந்து அவர்களாலேயே வெளியேறினேன். சரியாக முப்பது வருடங்கள் கழித்து மறுபடியும் ஆட அழைப்பு அவுஸ்ரேலியாவிலிருந்து வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம், சிட்னியின் புகழ்பெற்ற ‘ஃபெல்புவார் ‘ நாடகக் கொம்பனி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களுடைய ‘Counting and Cracking’ ஆங்கில நாடகத்தில் நடிக்கச் சம்மதமா எனக் கேட்டார்கள். இல்லையென்ற சொல்லே நம் அகராதியில் இல்லையென்பதால் வாட்ஸ் – அப்பிலேயே ‘யேஸ்..யேஸ்..’ என்று மண்டையை அதிகப்படியாகவே ஆட்டிவிட்டேன். நமக்குத்தான் ஆங்கிலத்தில் ஒரு வசனம் கூடத் தடக்குப்படாமல் பேச வராதே என்றெல்லாம் விபரமாக யோசிக்கத் தலையை, ஆடிய கால் அனுமதிக்கவில்லை.

நாடகப் பிரதியை அனுப்பிவைத்தார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூற்றைம்பது பக்கங்கள். ஒருவழியாக அகராதியின் துணையுடன் உருண்டு புரண்டு ஒரேநாளில் பிரதியைப் படித்து முடித்தேன். அடுத்த கட்டம் ‘ஓடிசன்’ எனப்படும் நடிகர் தேர்வு. அதுவும் வாட்ஸ் – அப்பில்தான் நடந்தது. என்னுடைய ஓட்டை ஆங்கிலத்தைச் செவிமடுத்த இயக்குனர் ஏமனும் நாடகத்தை எழுதிய சக்திதரனும் அந்த ஓட்டையைத் தங்களால் அடைத்துவிட முடியுமென்று நம்பியிருக்க வேண்டும். ஆனால் வேஷப் பொருத்தமோ ஏழு பொருத்தமும் அம்சமாகப் பொருந்தியிருந்தது. 21 வருடங்களாக வெலிகடைச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதியின் வேடம்.

டிசம்பர் மாதம் முதல் தேதி அவுஸ்ரேலியாவில் போய் இறங்கினேன். நான் போவதற்கு ஒரு மாதம் முன்பாகவே நாடக ஒத்திகை ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தது. பாரிஸில் ‘த லோயல் மேன்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் நான் தாமதமாகப் போக நேர்ந்தது.

நாடகத்தில் பதினாறு நடிகர்கள் அய்ம்பது பாத்திரங்களை நடித்தோம். ஒவ்வொரு நடிகரதும் கலாசார – புவியியல் பின்னணிகள் வேறுவேறு. நதி கமல்வீரவும் சாரதாவும் இலங்கையிலிருந்து வந்த சிங்களவர்கள். ராடி அவுஸ்ரேலியாவின் பூர்வகுடியான அபோர்ஜின் பெண். அகிலன் நியூஸிலாந்திலிருந்து வந்த ஈழத் தமிழர். வைஷ்ணவி, ஷிவ், நிக், ஜெய், ராஜ் அவுஸ்ரேலியாவில் வாழும் இந்தியர்கள். மோனிகா பிஜியிலிருந்து வந்தவர். காந்தி மக்கன்ராயரும் மன்றோவும் நீண்ட காலத்திற்கு முன்பே இலங்கையிலிருந்து நீங்கி சிட்னியில் குடியேறிய பறங்கியர்கள். பிரகாஷ் பெல்வாடி இந்தியாவிலிருந்து வந்தவர். சுகன்யா மலேசியாவிலிருந்து வந்தார். ஹஸன் பாலஸ்தீனர். சிட்னியிலிருந்து நாடகம் அடலெய்டுக்கு மாறியபோது, நதி கமல்வீரவும் ஹஸனும் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது அந்த இடங்களை காளீஸ்வரியும் (சென்னை) அக்கியும் (சைப்பிரஸ் அவுஸ்ரேலியர்) கச்சிதமாக ஈடுசெய்தார்கள்.

நாடகத்தின் இயக்குனர் அவுஸ்ரேலியாவின் புகழ்பெற்ற நாடகர் ஏமன். நாடகத்தை எழுதியது சக்திதரன். இவர் சுதந்திர இலங்கையின் முதல் தலைமுறை அரசியல்வாதியும் ‘அடங்காத்தமிழர்’ என அடைமொழி பெற்றவருமான சுந்தரலிங்கத்தின் கொள்ளுப் பேரன் என்பது எனக்கு நாடக ஒத்திகையின்போதுதான் தெரிய வந்தது.

நாடகம் இரண்டு இடைவேளைகளுடன் மூன்றரை மணிநேரம் நடக்கும். நாடகத்தின் கதையைச் சுருக்கமாக விபரிக்க நினைக்கிறேன். அரங்கில் காலம் முன் பின்னாக நகரும் நாடகம் இது.

1956-ல் இலங்கையில் தனிச் சிங்கள மொழிச் சட்டம் உருவாவதில் தொடங்கி, 1983 இனப்படுகொலை ஊடாக 2004-ல் சிட்னியின் அகதிகள் தடுப்பு முகாமில் கதை முற்றுப் பெறுகிறது. இலங்கையின் அரை நூற்றாண்டு கால வரலாற்றையும் நான்கு தலைமுறைகளின் கதையையும் பேசும் நாடகம் மிக நேரடியாக அரசியலைப் பேசுகிறது. இனப்படுகொலைகள், இலங்கைச் சிறைகளில் வதைக்கப்படும் தமிழர்கள், இலங்கை அரச படைகளின் கொலைபாதகம் ஆகியவற்றைப் பேசும் நாடகம் கூடவே தமிழ் இயக்கங்களின் பயங்கரவாதம், புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளிற்காக வேலை செய்பவர்களின் அராஜகங்கள் போன்றவற்றையும் பேசுகிறது. இலங்கைத் தீவில் இன மத வேறுபாடின்றிச் சாதாரண சனங்கள் கலந்தும் மகிழ்ந்தும் வாழ்ந்திருந்த காலத்தை இனவாத அரசியல் எவ்வாறு பிய்த்துப்போட்டது என்பதைச் சித்திரிக்கும் நாடகத்தின் ஆதார மொழியாக கொல்வின் ஆர்.டி. சில்வாவின் புகழ்பெற்ற வாக்கியமிருக்கிறது. இந்த வாக்கியம் நாடகத்தில் திரும்பத் திரும்ப அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது:

“இரு மொழியென்றால் ஒரு நாடு
ஒரு மொழியென்றால் இருநாடு.”

நாங்கள் நடிகர்கள் நாடகத்தில் வெறும் நடிகர்களாக மட்டும் இருக்கவில்லை. ஒத்திகையில் நாடகம் வளர வளர நிறைய விவாதித்தோம். எங்கள் கருத்துகளை இயக்குனரோடும் சக்திதரனுடனும் பகிர்ந்துகொண்டோம். தமிழரும் சிங்களவரும் பறங்கியரும் அவரவர் பார்வையோடும் அனுபவங்களோடும் இலங்கையின் இனம் – பண்பாடு – அரசியல் குறித்த பிரச்சினைகளை அணுகிப் பேசினோம். இவ்வாறுதான் நாடகத்தின் இறுதி வடிவம் உருவாயிற்று.

ஜனவரி 11ம் தேதி, சிட்னி டவுன் ஹோலில் தொடங்கிய நாடகம் தினசரி காட்சிகளாக பெப்ரவரி 2ம் தேதிவரை 30 காட்சிகள் நடத்தப்பட்டன. அய்நூறு இருக்கைகள் கொண்ட அரங்கில் எல்லாக் காட்சிகளுமே ஹவுஸ்ஃபுல்லாக நடத்தப்பட்டன. அடுத்த மாதம் அடலெய்ட் நகரத்தில் 10 காட்சிகள் நடத்தினோம். அங்கும் அரங்கு நிறைந்தது.

பார்வையாளர்களில் முக்கால்வாசிப்பேர்கள் அவுஸ்ரேலியர்கள். சிட்னியிலும் அடெலெய்டிலும் குடியேறியிருக்கும் இலங்கை மக்களும் காட்சிகளிற்கு பெருமளவில் வந்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தார்கள். ஒவ்வொரு காட்சியும் முடிய பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். குறிப்பாக அவுஸ்ரேலியர்களிற்கு இலங்கையின் வரலாறும் இன முரண்பாடுகளும் மிகக் குறைந்தளவும் இலங்கையின் கிரிக்கெட் அணி குறித்து நிறையவும் தெரிந்திருந்தன. இந்த நாடகம் இலங்கை இன முரண்பாட்டின் வரலாற்றையும் யுத்தத்தின் பாடுகளையும் அவர்கள் புரிந்துகொள்வதற்கான தொடக்கக் குறுக்குவெட்டுச் சித்திரமாக அமைந்திருக்கிறது என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது.
அவுஸ்ரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் இன – மத வேறுபாடுகளின்றி இந்த நாடகத்திற்குத் தங்கள் ஆதரவை வழங்கினார்கள். சிட்னியில் நடிகர்களில் பலர் இவர்களுடைய வீடுகளிலேயே தங்கியிருந்தோம். தமிழ் – சிங்கள ஊடகங்கள் அனைத்துமே தங்களது நிறைந்த ஆதரவை வழங்கி நாடகம் குறித்த செய்திகளைத் தங்களது ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.

நாடகத்தில் இலங்கை அரசு மீதும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் கூர்மையான விமர்சனங்கள் நிறைந்திருந்தது போலவே மொண்ணைத் தமிழ்த் தேசியவாதம் பேசிய அரசியல் கட்சிகள் மீதும் போராளிகளின் மனிதவுரிமை மீறல்கள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்துமே ஒரு தமிழ்க் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் உணர்ச்சிமயமான கதையைச் சொல்வதற்கு ஊடாகவே வெளிப்பட்டன. தமிழ் – சிங்களம் எனக் கன்னை பிரித்து மோதிக்கொள்ளும் புலம் பெயர்ந்த அரசியல் அந்த ஒற்றைக் குடும்பத்தின் கதையால் அரங்கில் தோற்கடிக்கப்பட்டது என்றே நம்புகிறேன். சாதாரண மனிதர்கள் பாடுகளினாலும் வலிகளினாலும் சொரியும் கண்ணீருக்கு முன்னால் இனவாத ஊளைக் கூச்சல்களிற்கு எந்தப் பெறுமதியுமில்லை என்பதை அரங்கிலிருந்த பார்வையாளர்களின் கண்ணீர் நிரூபித்தது.

இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தையும் ஒற்றை ஆட்சியின் வன்முறையையும் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளையும், பறிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களது உரிமைகளையும் குறித்த செய்திகளை அனைத்துலக மக்கள் முன்பு எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்ட மக்களதும் சனநாயகச் சக்திகளதும் நோக்கமாகவும் பகீரதப் பிரயத்தனமாகவும் இருக்கிறது. ஆனால் அனைத்துலக மக்கள் முன்னே ஒருதலைப்பட்சமாக வைக்கப்படும் எந்தச் செய்தியும் வதந்திக்கு நிகராகவே கருதப்படும். இலங்கையில் பயங்கரவாதத்தையும் மனித உரிமை மீறல்களையும் நிகழ்த்திய – நிகழ்த்திக்கொண்டிருக்கும் அனைத்துத் தரப்பையும் நாம் கண்டித்து நம் பரப்புரையை முன்வைக்கும் போதுதான் அந்தப் பரப்புரை பக்கச் சார்பற்றதாகக் கருதப்பட்டுப் பரிசீலிக்கப்படும். தனிப்பட்ட முறையில் நம் ஆன்மாவிற்கும் அதுவே தார்மீகத் தைரியத்தை வழங்கி நம்மைத் தொடர்ச்சியான இயங்கு நிலையிலும் வைத்திருக்கும். ‘கவுண்டிக் அன்ட் கிராக்கிங்’ நாடகம் அந்த வகையில் முக்கியமானதும் சரியானதுமான நம்முடையை பரப்புரைக் கருவியாக இருக்கிறது.

அவுஸ்ரேலியாவில் அரங்கக் கலைகளிற்கு வழங்கப்படும் அதி உயர் விருதான ‘HELPMANN’ விருதுக்கு இந்த வருடம் எட்டுப் பிரிவுகளில் இந்நாடகம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. Best Male Actor in a Supporting Role பிரிவில் நானும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறேன். நாடகம் அடுத்தடுத்த வருடங்களிலும் அவுஸ்ரேலியாவிலும் வேறு நாடுகளிலும் நடத்தப்படயிருக்கிறது. இந்த நாடகத்தை இலங்கைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்பது நாடகக் குழுவினரின் கனவு. அது மெய்ப்பட வேண்டும்.

ஒரு நாடகம் எவ்வளவு தூரத்திற்கு மக்களின் மனதில் சிந்தனையைத் தூண்டும், மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமையுடையது? இளமையில் பார்த்த ‘ஹரிச்சந்திரா’ நாடகம் தனது சிந்தனையைத் தூண்டி தன்னைச் சத்தியத்தை நோக்கித் திருப்பியது எனக் காந்தியார் சொன்னதாக நாம் படித்திருக்கிறோம். என். கே. இரகுநாதனின் ‘கந்தன் கருணை’ நாடகமும் குழந்தை மா. சண்முகலிங்கத்தின் ‘மண் சுமந்த மேனியர்’ நாடகமும் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியை நாம் நேரிலேயே கண்டிருக்கிறோம். இலங்கையில் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றையும் ஈழப் போராட்ட வரலாற்றையும் எழுதும்போது இந்த நாடகங்களைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது.

நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பழமொழிக்கு இன்னொரு வலுவான கோணமுமுள்ளது. “அதிகாரத்தால் வதைக்கப்படும் எளிய மக்கள், கிண்டல்களையும் கேலிகளையும் நையாண்டிகளையும் அதிகாரத்திற்கு எதிரான தமது வலுவான ஆயுதங்களாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்” என்பார் பேராசிரியர் ராஜ்கவுதமன். அதிகாரத்தின் முன்னே வெறுங் கையராக ஆற்றாதவர்களாய் கிடப்பவர்களின் எதிர்வினை கலையாகவும் இருக்கும்.

கூத்தாடுவது ஆற்றாதவன் செயல்!

    (இம்மாத ‘எதிரொலி’ பத்திரிகையில் வெளியான கட்டுரை)

1 thought on “ஆத்தாதவன் செயல்

  1. அந்தக் கூத்தில் எனக்கு ‘காக்கை வன்னியன்’ வேடம். அப்பவே முகத்தில சமூகவிரோதி எண்டு தெரிஞ்சிருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *