புலியூர் முருகேசன் அவர்களுக்கு!

கட்டுரைகள்

ண்ணே வணக்கம்!

என்னைக் குறித்து உருட்டல்கள் நடந்துகொண்டிருந்த ஒரு முகநூல் திரிக்கு நீங்கள் சென்று, “ஷோபாசக்தி இங்கே வந்து பதிலளிப்பார் என எனக்கு நம்பிக்கையிருக்கிறது” என எழுதியிருந்ததைப் பார்த்தேன். உங்களது நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியதற்காக முதற்கண் என்னை மன்னித்துவிடுங்கள்.

நான் சிலருடன் அல்லது சில தளங்களில் விவாதத்தில் இறங்குவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளேன். என்னுடைய சக்தியைத் தேவையில்லாமல் செலவழிக்கக் கூடாது என்பது ஒருபுறமிருக்க, அந்த இடங்களில் விவாதிப்பது யாருக்கும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை என்று கருதுவதாலேயே அங்கெல்லாம் விவாதம் செய்வதில்லை. அங்கே நடக்கும் விவாதங்களிடையே என்மீதான ரொம்பவும் தனிப்பட்ட அவதூறுகள் எப்போதாவது கண்ணில்பட்டால் மட்டுமே, அங்கு சென்று ஒரு சிறிய மறுப்பைப் பதிவு செய்வதுண்டு. அப்போது கூட விவாதத்திற்குள் இறங்குவதேயில்லை

நானெல்லாம் விவாதங்களிலேயே பிறந்து, விவாதங்களிலேயே வளர்ந்தவன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த விவாதங்களில் முக்கால்வாசியாவது எனது இந்த வலைப்பதிவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். அப்படியானால் யாரோடு விவாதம் செய்வதை நான் தவிர்க்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ஒருவேளை விரும்பக்கூடும். விளக்கிவிடுகிறேன்.

எந்த விஷயத்திலும் கண்மூடித்தனமான நம்பிக்கையுள்ளவர்கள், இனவெறியர்கள், சாதி வெறியர்கள், முகநூல் வம்பர்கள், அவமரியாதையாக விவாதிப்பவர்கள், முழுப் பொய்யர்கள் ஆகியோரிடம் விவாதிப்பது என் கடமையல்ல என்றே கருதுகிறேன். விவாதிக்கும் விஷயத்தில் எந்தவித அறிவுமற்ற ஒருவரிடம் கூட ஓரளவு விவாதிக்க முயற்சிப்பேன். ஆனால் அவரது அந்த அறியாமை திமிராகத் திரளும்போது நாம் விவாதத்திலிருந்து ஒதுங்கிவிடுவதே மாண்பு. இந்த மாண்பை நான் மட்டுமே கடைப்பிடிப்பதில்லை, நம்முடைய சக எழுத்தாளர்கள் பலரும் இந்தப் பண்புடையவர்களே என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

அதேவேளையில் திறந்த மனதோடு விவாதத்துக்கு வரும் எவருடனும், புதிய வாசகர்களுடனும், என் சக எழுத்தாளர்களுடனும் நான் எப்போதும் விவாதித்தே வந்துள்ளேன். தமிழில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் முக்கிய எழுத்தாளர்களில் அரைவாசிப் பேர்களாவது, என்னுடன் ஒருமுறையாவது சிறுபத்திரிகைகளிலோ இணையத்திலோ கருத்தியல் விவாதம் செய்தவர்களாகவே இருப்பார்கள்.

சிலநேரங்களில் நமக்கு முற்றிலும் எதிர்க் கருத்துக் கொண்டவர்களிடம் விவாதிக்க நேர்ந்துவிடும். அதைக்கூட நான் உற்சாகத்தோடு செய்வதுண்டு. ‘மூலதனம்’ நூற்தொகுதியைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் தியாகுவிடம் நேரடியாக விவாதம் செய்து அது ‘கொலைநிலம்’ என்ற நூலாகவும் வெளிவந்தது. கீற்று இணையத்தோடு நடத்திய விவாதங்கள் ‘பஞ்சத்துக்கு புலி’ என்ற நூலாக வெளியாகியது. வேறுபல அரசியல் இயக்கங்கள், அமைப்புகள் மீதான விமர்சனங்கள் ‘முப்பது நிறச் சொல்’ என்ற நூலில் வெளியாகியுள்ளன. இன்னும் ‘வேலைக்காரிகளின் புத்தகம்’, ‘இன்றெமக்குத் தேவை சமாதானமே’, சில கையடக்கப் பிரசுரங்கள் என்றெல்லாம் உள்ளன. ஈழப் போராட்டம் குறித்த என்னுடைய விவாதக் கட்டுரைகளை நான் இங்கே பட்டியல் போட, முழுதாக இரண்டு நாட்கள் தேவைப்படும் என்பதால் அதைத் தவிர்த்துவிடலாம். என்னுடைய புனைகதைகளைக் கூட இந்தப் பட்டியலில் சேர்த்துவிடவே நான் துணிவேன். அதனால்தான், என்னுடைய சிறுகதைகளும் நாவல்களும் சற்றே அளவில் பெரிய அரசியல் துண்டுப்பிரசுரங்களே என நான் எப்போதும் குறிப்பிடுவதுண்டு.

மிக எளிய கேள்விகளை அல்லது விவாதங்களை சிலர் முன்வைக்கும்போதும், சலிப்பால் அவற்றைத் தவிர்த்துவிட நேர்கிறது. மதமாற்றம் சாதியை ஒழிக்குமா? அம்பேத்கர் முற்போக்காளரா? சாதியை ஒழிக்க மார்க்ஸியத்தைத் தவிர வேறு மார்க்கமுண்டா? ஒருபாலீர்ப்பு இயற்கையானதுதானா? பின்நவீனத்துவம் என்றால் என்ன? என்பது போன்ற தொடக்கநிலை கேள்விகளுக்கெல்லாம் திரும்பத் திரும்பப் பதில் சொல்ல நம்மால் ஆகாது. கேள்வி கேட்டவர்கள்தான் தேடிப் படிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு மார்க்ஸிய நம்பிக்கையாளர் என எண்ணுகிறேன். எனவே எனது விவாதங்களில் அல்லது பதில்களில் மார்க்ஸிய அணுகுமுறை இல்லையே என நீங்கள் எண்ணக்கூடும். உங்கள் எண்ணம் மிகச் சரியே. நான் மார்க்ஸிய அணுகுமுறையிலிருந்து விலகிப் பல காலங்களாகின்றன. சரியாகக் காலத்தைக் கணித்துச் சொல்வதென்றால், 2000-ம் வருடத்தில் பாரிஸில் ‘மார்க்ஸியமும் பின்நவீனத்துவமும்’ என்றொரு முழு நாள் கருத்தரங்கை நடத்தினோம். அக்காலப் பகுதியையொட்டியே அந்த விலகல் நடந்தது. அந்த விலகலுக்கு முன்பு ட்ராட்ஸ்கிய மாணவனாகயிருந்தேன். என்னுடைய இப்போதையை அரசியல் – இலக்கியப் பார்வைகளும் அணுகுமுறைகளும் பின்நவீனத்துவ அறிதல்முறை சார்ந்தவை.

இவ்வளவு தானண்ணே விஷயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *