எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன்!

கட்டுரைகள்

2014-ம் வருடம் சுவிஸில் நடந்த 43-வது இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்த ஒரு விஷயம்:

இந்த இலக்கியச் சந்திப்புக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையிலிருந்து எம்.ஏ.நுஃமானும், இந்தியாவிலிருந்து ம.மதிவண்ணனும், அமெரிக்காவிலிருந்து யாழினி ட்ரீமும் அழைக்கப்பட்டிருந்தார்கள். (நுஃமான் அவர்கள் உடல்நலக் குறைவால் இறுதிநேரதில் பயணத்தை இரத்துச்செய்ய, அவரின் கட்டுரை சந்திப்பில் வாசிக்கப்பட்டது). அய்ரோப்பா முழுவதுமிருந்து தலித் அரசியலாளர்களும் எழுத்தாளர்களும் சந்திப்புக்கு வந்திருந்தார்கள்.

அந்த இலக்கியச் சந்திப்பில் உரையாற்றிய தோழர் ஏ.ஜி.யோகராஜாவின் அமர்வில், அவருக்குப் பதிலளிக்கும் முகமாக நான் சொன்ன செய்தியை ஞாபகத்திலிருந்து இங்கே பதிவு செய்கிறேன்:

“நான் எனது சாதி அடையாளத்தை மறைத்து, என்னைத் தலித் எனச் சொல்லிவருவதாக எழும் கிசுகிசுக்களுக்கு அர்த்தமோ ஆதாரமோ கிடையாது. நான் எந்தவொரு இடத்திலும் எழுத்திலோ பேச்சிலோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களிலோ என்னை ஒரு தலித்தாக அடையாளப்படுத்தியதே கிடையாது. அப்படிச் செய்யவும் முடியாது. எல்லாக் கூட்டங்களிலும் எல்லா நேர்காணல்களிலும் என்னுடைய சாதி என்னவென்று அறிவித்துவிட்டுப் பேசத் தொடங்க வேண்டுமென்றா நீங்கள் சொல்கிறீர்கள்? நான் அதை வெறுக்கிறேன்! அதைச் செய்யமாட்டேன். “உன்னுடைய சாதி என்ன?” எனச் சீண்டும் வம்பர்கள் எனக்குப் பொருட்டே கிடையாது. ஆனால் ஒரு நேர்காணலிலோ ஒரு பொறுப்பான விவாதத்திலோ எனது சாதி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டால், என்னுடைய சாதிப் பின்னணி குறித்துப் பேச முடியாது என நான் மறுக்க முடியாது. அப்போது பேசுவேன். இப்போது கேட்டிருக்கிறீர்கள்! சொல்லியிருக்கிறேன்! நான் எங்கேயாவது என்னைத் தலித் என எழுதியதற்கோ, பேசியதற்கோ ஒரேயொரு ஆதாரத்தை, நீங்கள் யாராவது காண்பித்தால்கூட நான் எழுதுவதையே நிறுத்திக்கொள்கிறேன்!”

நான் இவ்வாறு பேசி முடித்ததன் பின்பாக, அங்கே மறுகேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட என். சரவணன், சயந்தன், ஜீவமுரளி, தமயந்தி, தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் எல்லோருக்குமே இது ஞாபகத்தில் இருக்குமென்றே நம்புகிறேன். சந்திப்பு ஏற்பாட்டார்களிடமோ தமயந்தியிடமோ ஒளிப்பதிவு கூட இருக்கலாம்.

புலம்பெயர் சூழலில் தொடக்ககாலம் முதலே தலித் அரசியலில் இயங்குபவர்களில் நானுமொருவன். இது குறித்து ஒரு முரண் உரையாடல் 2011 பெப்ரவரியில் எனக்கும் டிசே தமிழனுக்கும் இடையே இணையத்தில் நிகழ்ந்தது. அதில் நான் சொன்னதைச் சுருக்கமாக இங்கே குறிப்பிடுகிறேன். முழுமையான பதிவை இந்தத் தொடுப்பில் படிக்கலாம்.

தலித் அரசியலில் மட்டுமல்ல எந்த ஒடுக்கப்பட்டோரது அரசியலிலும் புகுந்து அந்த அரசியலின் பிரதிநிதி போல ஒடுக்கும் தரப்பைச் சார்ந்த ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்தக் கூடாது. நான் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யில் சாதாரண உறுப்பினனாகக் கூட இருந்ததில்லை. முன்னணியினர் தலித் மாநாடுகள் நடத்தும்போது நான் அவர்களுடன் கூடவே இருந்துள்ளேன். ஆனால் மாநாட்டில் ஒரு கட்டுரை வாசிக்க இடமளிக்குமாறு கூட நான் அவர்களைக் கேட்டதுமில்லை, வாசித்ததுமில்லை. எந்தக் கட்டத்திலும் என்னை தலித் அரசியலின் பிரதிநிதியாக நான் முன்னிறுத்தியதில்லை. சாதியொழிப்பு அரசியலில் ஒரு தலித் அல்லாதவருடைய பங்களிப்பு என்பது சாதியொழிப்புக் களங்களில் முன்நிற்பதும் தலித்திய அரசியலில் பிரதிநிதித்துவம் என்று வரும்போது பின்வாங்குவதுமாகவே இருக்கவேண்டும்”.

கீற்று இணையத்தளம் ஒருகாலத்தில் என்மீது தொடர்ச்சியான அவதூறுக் கட்டுரைகளை வெளியிட்டுவந்தது. அப்போது கீற்று இணையத்தில் ‘சோபாசக்தியின் கலைந்து போன தலித் வேடம்’ என்றொரு முழு அவதூறுக் கட்டுரையும் வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரையையே சில முகநூல் வம்பர்கள் ஆதாரமாகக் கருதி வாந்தியெடுப்பதுண்டு. அதையும் பார்த்துவிடலாம்.

இந்த அவதூறுக் கட்டுரையை எழுதியிருந்தவர் சார்லசு அன்ரனி. இந்த அவதூறாளர் அப்போது மே 17 இயக்கத்தில் இயங்கியவர். இவரது முன்னாள் இணையரும் எழுத்தாளருமான மீனா கந்தசாமி, இவரது யோக்கியதையை வெளிப்படுத்தி எழுதியதும், பதிலே சொல்லாமல் இந்த மனிதர் பொதுவெளியிலிருந்தே தலைமறைவாகிவிட்டார். இவ்வளவுதான் இவர் யோக்கியம். இவர் எழுதிய கட்டுரையையும் எடுத்து விவாதிப்பது என் தலைவிதி!

அந்த அவதூறுக் கட்டுரைக்கு வருவோம். தோழர் கவின்மலர் எழுதிய கட்டுரை ஒன்றை மையப்படுத்தியது அந்த அவதூறு. என்னிடம் பேசிப் பெற்ற தகவல்களை வைத்து “அந்தோணியின் கதை’ என்றொரு கட்டுரையை எழுதி கவின்மலர் வெளியிட்டிருந்தார். அந்தக் கட்டுரையின் இந்தப் பகுதியைத்தான் சார்லசு அன்ரனி பிடித்துக்கொண்டார்:

“(அந்தோணியின் ஊரில்) இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம் கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லா” பாட்டு மெட்டில்… வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான்.”

“கதையை போனபோக்கில் படிப்பவர்களுக்கு அந்தோணி ஒரு பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் என்றுதான் படும்.” இதுதான் சார்லசு அன்ரனியின் குற்றச்சாட்டு.

நான் என் இளம்வயதில், என் கிராமத்தில் பார்த்ததை நேர்மையாகப் பதிவு செய்துள்ளேன். அதை சார்லசு அன்ரனி போனபோக்கில் படிப்பதற்கு அவரது அவதூறு நோக்கைத் தவிர வேறுகாரணங்களே இல்லை.

சார்லசு அன்ரனி தனது கட்டுரையில் இன்னொன்றையும் சொல்கிறார்: “தோழர் கவின்மலர் என்னிடம் தொலைபேசியில் உரையாடியபோது அவர் தலித் என்ற அர்த்தத்தில் நான் எழுதவில்லை என்று சொன்னார்.”

அப்புறம் என்ன குற்றச்சாட்டு! வெங்காயம்! விளக்கம்!

இந்த அவதூறை என்மீது தொடர்ச்சியாகப் பொழிபவர்களுடைய நோக்கம் ‘போலி தலித்தியம்’ என்ற தங்களுடைய வக்கரிப்பைக் கொக்கரிப்பது மட்டுமே. இந்தக் கொக்கரிப்பு இப்போது முகநூல் வம்பர்களிடமிருந்து ஒன்றிரண்டு எழுத்தாளர்களுக்கும் தொற்றிவிட்டது. ஆறு வருடங்களுக்கு முன்பாக 43-வது இலக்கியச் சந்திப்பில் நான் சொன்னதையே, மறுபடியும் இந்த எழுத்தாளர்களிடமும் பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.

நான் என்னைத் தலித் எனப் போலியாக அடையாளப்படுத்திக்கொண்ட ஒரேயொரு எழுத்தை, ஒரேயொரு சந்தர்ப்பத்தை, ஒரேயோரு நிகழ்வை ஆதாரமாக முன்னே வையுங்கள்!
நான் எழுதுவதையே நிறுத்திக்கொள்கிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *