முப்பது காசுப் புரட்சி

கட்டுரைகள்

டுதல், பாடுதல், சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர், பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார்’ என்ற பாரதியின் வாக்கை மகுட வாக்கியமாகக்கொண்டு, 1966 ஓகஸ்ட் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் வெளிவந்த ‘மல்லிகை’ இதழின் தனி இயங்குசக்தியாக விளங்கியவர் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா. அவர் ‘மல்லிகைப் பந்தல்’ என்ற பதிப்பகத்தையும் உண்டாக்கி, அய்ம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டார். கடுமையான யுத்தச் சூழலிலும், விமானக் குண்டு வீச்சுகளுக்குக் கீழேயும் மல்லிகை ஓயாமல் மலர்ந்தது. மொத்தமாக 401 இதழ்கள் வெளிவந்தன. தமிழில் வேறெந்த இலக்கிய இதழும் இந்த எண்ணிக்கையை எட்டியதேயில்லை.

தனது பன்னிரண்டாவது வயதில், அய்ந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தி, தந்தையின் கடையில் முடிதிருத்தும் தொழிலைப் பயின்றவர் ஜீவா. ‘சவரக்கடையே எனது சர்வகலாசாலை’ என ஒரு நேர்காணலில் ஜீவா சொல்லியிருப்பார். ‘யோசப் சலூன்’ எனவும் ‘வண்ணான் குளத்தடிக் கடை’ எனவும் அழைக்கப்பட்ட அந்தச் சிகையலங்கார நிலையமே, ஜீவாவின் கற்கை நிலையமானது.

இளம் ஜீவாவின் அரசியல் ஆர்வம் திராவிட இயக்கத்தாலேயே தூண்டப்பட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களது எழுத்திலும் பேச்சிலும் தனக்கு வெகுவாக ஈர்ப்பு இருந்ததை ஜீவா பதிவு செய்திருகிறார். அவர் ‘திராவிட நாடு’ இதழுக்குச் சந்தாதாரரும் கூட.

யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட போது, ஜீவா இடதுசாரித் தத்துவத்தால் ஈர்க்கப்படுகிறார். புகழ் பெற்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் 1948-ல் இந்தியாவிலிருந்து தப்பிவந்து, யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்தார். அப்போது ஜீவானந்தத்தைச் சந்தித்த டொமினிக், அவரால் கவரப்பட்டுத் தன்னோடு ஜீவா என்ற பெயரை இணைத்துக்கொண்டார்.

டொமினிக் ஜீவா 1927-வது வருடம், யாழ்ப்பாண நகரத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணச் சாதியச் சமூகக் கட்டமைப்பில் ஜீவா பிறந்த சாதி ‘பஞ்சமர்’ என்ற கட்டமைப்புக்குள்ளேயே வருகிறது. ஆலய நுழைவு, தேநீர் கடை நுழைவு போன்ற அடிப்படை மனித உரிமைகளே தலித்துகளுக்கு மறுக்கப்பட்டிருந்த, கொடிய சாதியத் தீண்டாமை நிலவிய காலத்திலேயே இளம் ஜீவா உருவாகிறார். பள்ளிக்கூடத்திலேயே பிஞ்சு ஜீவா மீதான சாதிய ஒடுக்குமுறை தொடங்கிவிடுகிறது. அந்த ஒடுக்குமுறை கடந்த 28.01.2021-ல் தொண்ணூற்று நான்கு வயதில் அவர் மறையும்வரை, அவரை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தேயிருக்கிறது. மரணம் தான் அவரைத் தீண்டாமையிலிருந்து நிரந்தரமாக விடுவித்திருக்கிறது என்பதே சகிக்கவொண்ணாத உண்மையாகிறது.

தனது முப்பத்து மூன்றாவது வயதிலேயே ‘சாகித்ய விருது’ பெற்ற ஜீவா, தன்னுடைய இடையறாத இலக்கியச் செயற்பாடுகளால் இலங்கைக்கு வெளியேயும் புகழ் பெற்றவர். ஜீவாவுடைய ஆரம்பகால நூல்களை சரஸ்வதி, என்.சி.பி.எச். போன்ற தமிழகத்தின் இடதுசாரிப் பதிப்பகங்கள் வெளியிட்டன. தமிழகத்து எழுத்தாளர்களோடு இறுதிவரை ஜீவாவுக்கு உறவும் நட்பும் இருந்தன. சோவியத் எழுத்தாளர் ஒன்றியம் 1987-ல் ஜீவாவை சோவியத் நாட்டுக்கு அழைத்து மதிப்புச் செய்தது. டிசம்பர் 2000-ல் அய்ரோப்பாவுக்கு ஜீவா அழைக்கப்பட்டு மூன்று நாடுகளில், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். 2013-ல் ஜீவாவுக்கு இயல் விருதை விழங்கி, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அந்த விருதுக்கு மகிமையைத் தேடிக்கொண்டது.

ஆனாலும், சாதியின் இரகசியக் கரங்கள் ஜீவாவைத் துரத்திக்கொண்டேயிருந்தன. 1999-ல் வெளியாகிய அவரது தன்வரலாற்று நூலான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ நூலைப் படிக்கும் போது, சாதியத்தால் அவர் எதிர்கொண்ட அவமானங்களும் வேதனைகளும் பற்கடிப்புகளும் மட்டுமல்லாமல், சாதியத்துக்கு எதிராக அவர் விடாமல் தொடுத்துவந்த போரும் நமக்கு அறியவும் ஆவணமாகவும் கிடைக்கின்றன.

தன்னுடைய சிறுகதைகளை ஆய்வு செய்து, பல்கலைக்கழக மாணவர்கள் ‘கலாநிதி’ பட்டம் பெற்றிருப்பதைக் குறிப்பிடும் ஜீவா “ஆனால், இந்த மண்ணிலுள்ள எந்தப் பல்கலைக்கழகமும் என்னை அழைத்து, என்னுடைய எழுத்துப் பணி குறித்து மாணவர்களோடு உரையாட வைத்ததில்லை” என மனம்வருந்திச் சாடுகிறார். கல்வி நிறுவனங்களில் கூட இறுக்கமாகப் படிந்து கிடக்கும் சாதியத்திற்கு ஜீவாவின் வாழ்விலேயே இன்னோர் எடுத்துக்காட்டும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பாக, யாழ் பல்கலைக்கழகம் ஜீவாவுக்கு கௌரவ எம்.ஏ. பட்டம் வழங்க முன்வந்தது. கௌரவ கலாநிதிப் பட்டம் பெறுவதற்குச் சகல தகுதிகளும் உரித்துகளுமுள்ள ஜீவாவை எம்.ஏ. பட்டத்திற்குக் கீழிறக்கிப் பரிந்துரைத்த பல்கலைக்கழகத்தின் இழிசெயலில் உறைந்திருந்தது சாதியமே. பல்கலைக்கழகம் வழங்க முன்வந்த எம்.ஏ. பட்டத்தை ஜீவா சுயமரியாதையுடன் நிராகரித்தார்.

ஜீவாவின் எண்பதாவது பிறந்தநாளில் ‘தினக்குரல்’ நாளிதழில் முதன்மை ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் ‘ஜீவாவை வாழ்த்துவோம்’ எனத் தலையங்கக் கட்டுரை எழுதி வெளியிட்டார். கட்டுரை வெளியானதும் ஆசிரியரை அழைத்த பத்திரிகையின் உரிமையாளர் ‘ டொமினிக் ஜீவாவைப் புகழ்ந்து ஆசிரியத் தலையங்கம் தீட்டியது சரியான காரியமா? அவர் யாழ்நகரில் கஸ்தூரியார் வீதியில் முடிதிருத்தும் நிலையம் வைத்திருந்தவர் என்பது உமக்குத் தெரியுமா?’ என்று கோபப்பட்டார் என்பதை வீ. தனபாலசிங்கம் பதிவு செய்துள்ளார். மல்லிகை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள் சிலவற்றின் முகவரியில் ‘ஆசிரியர்’ என்பதற்குப் பதிலாக ‘ஆசிரையர்’ எனக் குறிப்பிட்டு அனுப்பப்படுவதுண்டு.

இத்தகைய நச்சுச் சாதி வலையைக் கண்ணி கண்ணியாக அறுத்துக்கொண்டே ஜீவா முன்னோக்கி நடக்க வேண்டியிருந்தது. தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த சாதிகளது விடுதலைக்காகத் தொடக்கப்பட்ட ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யில் செயலாற்றியவர் ஜீவா. அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்களிலொருவர். ஆலய நுழைவுப் போராட்டக்களத்தில் நின்றிருந்த ஜீவா மீது, ஆதிக்க சாதி வெறியர்களால் மலம் கரைத்து ஊற்றப்பட்டது. அந்த மலத்தின் நாற்றம் தன்னுடலிலிருந்து இன்னும் விலகவில்லை என பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் உரையாற்றும்போது ஜீவா அளித்த சாட்சியம் இரக்கத்தைக் கோரிய குரலாக இல்லாமல் அறைகூவலாகவே ஒலித்தது. சாதியத்திற்கு எதிரான போரில் இறுதிவரை ஜீவா பணியவேயில்லை. அவரது எழுதுகோலும் நாவும், முதுமையாலும் நோயாலும் ஓயுமட்டும் அவர் முனைப்போடு போராடிக்கொண்டேயிருந்தார்.

ஜீவாவிடம் வறட்டுவாதச் சிந்தனைகளோ முரட்டுப் பிடிவாதமோ கிடையாது என்பதை மல்லிகை இதழ்களைப் படிக்கும்போது நாம் புரிந்துகொள்ளலாம். அனைத்துவிதமான முற்போக்குச் சக்திகளையும் அரவணைத்தே அவர் இயங்கினார். சாதிய ஒழிப்பு என்ற பெயரில், சுயசாதிப் பற்றில் அவர் வீழ்ந்து போனவரில்லை. விடுதலைக்கான புதிய சிந்தனைகளை ஓயாமல் கண்டடைந்தார். தலித் அரசியலை மட்டுமல்லாமல், தலித் என்ற சொல்லையே அங்கீகரிக்க இடதுசாரிகள் தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த போது, சென்ற நூற்றாண்டின் இறுதி வருடத்தில் ஜீவா தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு பதிவு செய்கிறார்:

“தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, பஞ்சப்பட்ட, தாழ்த்தப்பட்ட சகல மக்கள் பகுதியினரையும் உள்ளடக்கிய சொல்லாக -இலக்கியம் அங்கீகரித்த சொல்லாக – புழக்கத்தில் வந்துவிட்டது. அகில இந்தியச் சொல்லாகவும் பரிமாணம் பெற்றுவிட்டது. தலித் என்ற சொல்லின் விரிவும் வீரியமும் மராட்டியத்திலும் கன்னடத்திலும் ஆந்திராவிலும் பரவலாகவும், தமிழகத்தில் சிறப்பாகவும் இன்று உணரப்படுகிறது. இதன் உள்ளடக்கக் கருத்து பலராலும் புரிந்துகொள்ளக் கூடியதாக வியாபித்து நிலைத்துவிட்டது. இந்தச் சொல்லை இனி யாராலும் புறக்கணித்துவிட முடியாது. அலட்சியம் செய்துவிடவும் முடியாது. அந்தச் சொல்லின் வலிமை என்னையும் ஆட்கொண்ட காரணத்தாலேயே, நான் எனது சுயசரிதையை நூலாக எழுதி வெளியிட முன்வந்தேன். நாங்களும் மனுசங்கடா! தலித் இயக்கம் கற்றுத் தந்த மூல மந்திரம் இது!”

ஜீவாவின் சுயசரிதையைப் படிக்கும்போது, அவருக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த சில விஷயங்களை இரகசியமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பது போல் ஓரிடத்தில் நான் உணர்வேன். இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது, ஜப்பான் யாழ்ப்பாண நகரத்தில் குண்டு வீசும் என்ற அச்சமிருந்தது. ஜீவாவின் குடும்பம் யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்து வந்த இடம் எனது கிராமமான அல்லைப்பிட்டியாக இருந்தது.

அல்லைப்பிட்டியில் ஜீவா ஒரு மாதம் தங்கியிருந்திருக்கிறார். எங்கள் கிராமத்துக் கடலில் ‘சூள்’ கொளுத்தி ஜீவா மீன் பிடித்திருக்கிறார். என் கிராமத்தின் காத்தான் கூத்துப் பாடல்களைச் சுகித்திருக்கிறார். ஒடியல் கூழின் சுவையில் திளைத்திருக்கிறார். ஜீவா அவரது உறவினரான மாணிக்கம் அய்யா வீட்டிலேயே அப்போது தங்கியிருந்தார் . ஜீவா தன்னுடைய சுயசரிதைப் பக்கங்களில் மாணிக்கம் அய்யாவின் பெருமைகளை வாயூறச் சொல்லியிருப்பார். மாணிக்கம் அய்யாவை அவரது இறுதிக் காலங்களில் நானும் பார்த்திருக்கிறேன் என்பதால் நான் அந்தப் பக்கங்களோடு ஒன்றிப் போய்விடுவேன். ஜீவா மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர் மட்டுமல்லாமல், மிகச் சிறந்த கதைசொல்லியும் கூட. மக்களின் வழக்காறுகளாலும், செழித்த அனுபவப் பாடங்களாலும் மட்டுமல்லாமல், கொந்தளிக்கும் உணர்ச்சிகரத்தாலும் அவர் தனது மொழியைக் கட்டியிருக்கிறார்.

டொமினிக் ஜீவாவின் எழுத்துலகம் அதிகமும் தலித்துகளாலும் விளிம்புநிலை மனிதர்களாலுமானது. இலக்கியம் அவருக்கு வெறும் ரசனைக்கான பண்டமல்ல. எழுத்து அவருக்கு விடுதலைக்கான கருவி. அவரது ஆரம்ப கால எழுத்துகளுக்கு, தமிழகத்தின் இடதுசாரி இதழ்களான சரஸ்வதியும் தாமரையுமே களம் அமைத்துக்கொடுத்தன. இந்த இதழ்களை முன்மாதிரியாக் கொண்டுதான், ஜீவா ‘மல்லிகை’ இதழைத் தொடக்கினார்.

ஜீவாவின் சிறுகதைப் பாணி, நேரடியான எளிமையான கதை சொல்லல். கதைக்குள் ஒரு செய்தியை வெளிப்படையாக வைத்திருத்தல். ஒருவகையில் எழுத்தில் உரத்துப் பேசல். ‘முற்போக்கு இலக்கியம்’ என்ற இலக்கிய எல்லைக்குள் கச்சிதமாக அடங்கியதே அவரது சிறுகதை வீச்சு. ஆனால், மல்லிகை இதழ் வெவ்வேறு குரல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. ஈழத்தின் நவீன எழுத்தாளர்களில் பலர் மல்லிகையில் உருவாகி வந்தவர்களே.

எண்பதுகளில் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களினால் பல இடதுசாரிகளும், எழுத்தாளர்களும் தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால், ஜீவா ஒருபோதும் போரை ஆதரிக்கவில்லை. தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு முன்னே அவரது எழுதுகோல் தலை குனிந்ததே இல்லை. தமிழ்த் தேசிய வெறிக்கு அவர் பணிந்ததுமில்லை. இனப் பகைமைக்கு மாறாக, இன ஒற்றுமையையே அவர் முன்னிறுத்தினார்.

ஜீவா ‘மல்லிகை இதழின்’ ஆசிரியர் மட்டுமல்ல. அவரது தோளில் தொங்கிய பைக்குள் ‘மல்லிகை’ இதழ்கள் எப்போதும் வழங்குவதற்குத் தயார் நிலையிலிருந்தன. தெருக்களிலும் இலக்கிய அரங்குகளிலும் அவர் இதழைக் கொண்டு சென்று பரப்பினார். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஒவ்வொரு வாசற்படியாக ஏறியிறங்கி இதழை விற்பனை செய்தார். எத்தனையோ தடைகளையும், சாதிய வன்மங்களையும், சதிகளையும் எதிர்கொண்டு ‘மல்லிகை’யை ஓர் இயக்கமாகவே டொமினிக் ஜீவா நிறுவிக்காட்டினார்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைப் பண்டிதர் அயோத்திதாசர் ஆரம்பித்து நடத்தினார். ‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ என்றார் அயோத்திதாசர். அதற்கு அறுபது வருடங்களுக்குப் பின்னாக ‘மல்லிகை’ இதழை ஜீவா ஆரம்பித்தபோது, தனி இதழின் விலை முப்பது சதம். இதழை எவருக்கும் இலவசமாக ஜீவா வழங்கமாட்டார். அது இலக்கியத்துக்கும் எழுத்துக்கும் இழுக்கு என்றார். ஓர் எளிமையான இதழாக முகிழ்த்த மல்லிகை, ஒரு வாசிப்புப் புரட்சியையே நடத்திக் காட்டியது. மல்லிகை அளவுக்குப் பரவலாக அறியப்பட்ட, படிக்கப்பட்ட இலக்கிய இதழ் ஈழத்தில் வேறொன்றில்லை. காலம் காலமாக வாசிப்பு மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட சாதியினரையும், அடிமட்டத் தொழிலாளர்களையும், விளிம்புநிலையினரையும் இலக்கிய வாசிப்பை நோக்கி வரலாற்றில் முதன் முதலாக இழுத்துவந்தவர் ஜீவாவே. எப்போதுமே தூய வெண்ணிற உடை தரித்து, படிய வாரிய தலையுடன் கைகளில் மல்லிகையை ஏந்தி யாழ்ப்பாணத் தெருக்களில் நிமிர்ந்து நடந்த ஜீவா ஒற்றையாள் ரூபம், அந்த ரூபம் அறிவு வெளிச்சம்!

1 thought on “முப்பது காசுப் புரட்சி

  1. டோமினிக் ஜீவாவின் ஒரே ஒரு நூலை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அது அவரின் சுயசரிதை நூல் என நினைக்கிறேன்.தொய்வில்லாமல் எழுதப்பட்டிருந்தது. ஜீவாவுக்கான இரங்கல் கட்டுரைகளில் இக்கட்டுரை ஜீவாவை முழுமையாக அடையாளமிடுகிறது. ஆசிரையர் என்ற சொல்லால் எவ்வளவு புண்பட்டிருப்பார் ஜீவா. ம்ரணம் மட்டுமே அவர் அனுபவித்த சாதியக் கொடுமையிலிருந்து விடுதலை அளித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *