வள்ளி பெலகேயாவின் மகன்

கட்டுரைகள்

நூல் மதிப்புரை: ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி / தன்வரலாறு / என். கே. ரகுநாதன்.

ழத்தில் சென்ற நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி வரைக்கும், ஆதிக்க சாதியினரால் உருவாக்கப்பட்ட ஒரு கொடூரமான சாதியச் சட்டம் நிலவியது. தீண்டத்காதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தலித் மக்கள் வெள்ளாளர்களின் தெருக்களிலோ, வளவுகளிலோ பிரவேசிப்பதென்றால் அவர்கள் தங்களது இடுப்பில் ஒரு காவோலையைக் கட்டித் தொங்கவிட்டிருக்க வேண்டும். கழுத்திலே ஒரு கலயத்தைக் கட்டியிருக்க வேண்டும். தீண்டப்படாதோரின் காலடிச் சுவடுகள் கூடத் தீட்டாகக் கருதப்பட்டன. அந்தக் காலடிச் சுவடுகளை அவர்கள் நடக்கும் போதே அவர்களது இடுப்பிலே கட்டப்பட்டிருக்கும் காவோலை துடைத்தபடியே பின்னால் இழுபட்டுவரும். வாயில் சுரக்கும் எச்சிலைக் கீழே துப்பினால் நிலம் தீட்டாகிவிடும் என்றார்கள். அதனால் தலித்துகள் வாயில் சுரக்கும் எச்சிலைத் தங்களது கழுத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளிலேயே உமிழ்ந்து எச்சிலை அவர்களுடனேயே கொண்டு திரிய வேண்டும். உலகத்தின் எந்தப் பகுதியிலும், எந்தக் காலத்திலும் நடைமுறையிலிருக்காத, ஆகக் கொடுமையான ஒடுக்குமுறையிது. அடிமை வியாபார காலத்திலோ, அமெரிக்காவின் பண்ணைகளிலே கருப்பின அடிமைகள் வதைக்கப்பட்ட காலத்திலோ கூட இத்தகைய வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதில்லை. எங்கு இந்து மதமிருந்ததோ, எங்கு சாதியச் சமூகம் இருந்ததோ அங்கு மட்டுமே இந்தக் கொடுமை நிகழ்ந்தது. அதனால் தான் சாதியத்தைக் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஒர் இலட்சம் பக்கங்களிற்கு மேல் எழுதிய மேதை பாபா சாகேப் அம்பேத்கர் “அடிமை முறையிலும் கொடுமையானது சாதிய முறைமை” என்றார். அதை வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவியும் காட்டினார்.

இவ்வாறு இடுப்பிலே காவோலையைக் கட்டிக்கொண்டு நடந்த வள்ளியம்மை என்ற தாய்க்கும் மரமேறும் ஏழைத் தொழிலாளியான கந்தன் என்றழைக்கப்பட்ட கந்தப்பருக்கும் சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கையில் 1929-ல், வடமராட்சியின் வராத்துப்பளை என்ற கிராமத்தில், நளவர் சாதியில் பிறந்த என். கே. ரகுநாதன் அவர்களது தன் வரலாற்றுச் சித்திரமே இந்த நூல்.

நூலை, ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி” என்ற தலைப்பில் 1991-ல் யாழ்ப்பாணத்திலிருந்து என்.கே. ரகுநாதன் எழுதத் தொடங்கினார். போரினால் அலைந்தும் புலம்பெயர்ந்தும் வாழ வாய்க்கப்பெற்ற நாட்களில் விட்டுத் தொட்டுத் தொடர்ந்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து இந்த நூலைக் கனடாவில் வைத்து அவர் எழுதி முடித்தார். இந்த நூலின் முதற் பதிப்பை ‘குமரன் பதிப்பகம்” 2004- ல் வெளியிட்டது. பத்தாண்டுகள் கழித்து செம்மை செய்த பதிப்பாக இரண்டாவது பதிப்பைக் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகம் ‘உயிர்மெய்’ பதிப்பகத்துடன் இணைந்து வெளியிட்டிருக்கின்றது.

தலித் தன்வரலாற்று நூல்கள் 1990-களை ஒட்டி வெளிவரத் தொடங்கின. வடமொழிகளில் எழுதப்பட்ட குலாத்தி, உபாரா, உச்சாலியா ஆகிய தலித் தன்வரலாற்று நூல்கள் ‘தந்தையற்றவன்’, ‘அன்னியன்’, ‘பழிக்கப்பட்டவன்’ என்ற தலைப்புகளில் தமிழில் வெளியாகிப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. தமிழ் உலகம் என்றென்றும் நன்றி பாராட்டவேண்டிய ‘விடியல்” சிவா அவற்றை வெளியிட்டார். தமிழகத்தில் பாமாவின் ‘கருக்கு, கே.ஏ. குணசேகரனின் ‘வடு’, ராஜ்கவுதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ போன்ற தன்வரலாற்று நூல்கள் வெளியாகி மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. ஈழத்தைப் பொறுத்தளவில் 2001-ல் வெளியான டொமினிக் ஜீவாவின் ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ தலித் தன்வரலாற்று நூல் வரிசையின் முதல் நூலாகிறது. அடுத்ததாக 2004-ல் ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி” வெளியாகிறது. தொடர்ந்து 2005-ல் இலங்கையன் செல்வரத்தினத்தின் ‘வாழ்வும் வடுவும்’ வெளியாகியது. மூன்றாண்டுகளிற்கு முன்பாக யோகரட்ணத்தின் ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்’ வெளியாகியது. எனது அறிதலுக்கு உட்பட்ட வகையில் இந்த நான்கு நூல்கள் மட்டுமே ஈழப்புலத்தில் எழுதப்பட்ட தலித் தன்வரலாற்று நூல்களாக உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் முன்பு வெளியான கே. டானியலின் ‘என் கதை’ என்ற பிரதி சில சுயகுறிப்புகளைச் சொல்லிச் சென்ற ஒரு நீள் கட்டுரைதான். அது முழுமையான நூலன்று.

ஈழத்துச் சாதியமைப்பின் அடிப்படைக் கட்டுமானம் இந்தியச் சாதியமைப்பை ஒத்ததாக இருப்பினும், அந்த அமைப்புமுறையின் மேற்கட்டுமானத்தில் சில வித்தியாசங்களுண்டு. இலங்கையில் இருக்கின்ற அனைத்துச் சாதிகளும் இந்தியப் பெருநிலப்பரப்பில் இருந்தாலும் ஈழத்திலிருக்கும் நளவர், கோவியர் ஆகிய இரு சாதிகளும் இந்தியாவில் கிடையாது. எனவே இந்தச் சாதிகளின் தோற்றம், ஆதி வரலாறு குறித்து ஒரு ஆய்வு மயக்கம் இப்போதுவரை இருந்துகொண்டேயிருக்கின்றது. இந்த நூலிலே இது குறித்து முரண்பட்ட வெவ்வேறு ஆய்வுகளை ரகுநாதன் தொகுத்துத் தந்துள்ளார். பண்டைய காலத்தில் சிற்பங்கள் செதுக்கும் வேலைகளிற்காக இலங்கைக்கு வந்த மலையாளிகளே இலங்கையில் நிரந்தரமாகத் தங்கி பனையேறும் தொழிலில் ஈடுபட்டு நளவர்கள் ஆனார்கள் என்பது அவற்றில் ஒன்று. யாழ் வைபவமாலை வேறொரு தகவலைச் சொல்கிறது. அறுபது படைவீர்களான கத்திக்கார நம்பிகளே தங்களின் சாதியிலிருந்து நழுவி, சாணாக்கருக்குப் பணிவிடை செய்து சாணாக்கரின் தொழிலான கள் இறக்குதலை கற்றுக்கொண்டு நளவர்களாக உருவானார்கள் . அவர்கள் நம்பிகள் குலத்திலிருந்து நழுவிச் சென்றதால் நளவர்களானார்கள் என்கிறது யாழ் வைபவ மாலை. ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ எழுதிய செ. இராசநாயகமோ குண்டக்க மண்டக்க ஒரு செய்தியைச் சொல்கிறார். சிங்கள மரமேறும் தொழிலாளர்களே நளவர்கள் என்கிறார். நளவர் சமூகங்கள் பரவலாக வாழும் கிராமங்களின் பெயர்கள் ஆங்காங்கே சிங்களச் சாயலுடன் ‘வத்தை’ என்ற பின்னொட்டுகளுடன் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இதை நிராகரிக்கும் ஆய்வாளர் ச.தில்லைநடேசன் ‘வத்தை’ என்பது தொல் திராவிட மொழிச் சொல்லே என்கிறார். வராத்துப்பளை நளவர்கள் வணங்கி வந்த ஒரு வைரவருக்குப் பெயர் ‘சிங்கள வைரவர்’ என்ற தகவலையும் நூலிலே ரகுநாதன் தருகிறார். இந்தியாவில் பாடிகாட் முனீஸ்வரர் என்று கூட ஒரு சாமியுண்டு. துலுக்க நாச்சியார் என்றொரு பெண் தெய்வத்திற்கு திருவரங்கரத்தில் தனிச் சந்நிதியுள்ளது. தாய்லாந்தின் நாற்சந்திகளில் தும்பிக்கை விநாயரை நிறுவி வைத்து ‘புத்தா’ என்கிறார்கள். எனவே சிங்கள வைரவர் என்ற பெயரை மட்டும் எடுகோளாகக் கொண்டு இனவரைவியல் ஆய்வுகளிற்குள் நாம் துணிந்து இறங்கிவிட முடியாது.

தங்களது சமூகத்தில் மட்டுமே ‘பறைவது’ என்றவொரு வார்த்தை இருப்பதால் தங்களது சமூகத்திற்கும் மலையாளிகளிற்கும் ஏதும் தொடர்புண்டோ என்று கூட ரகுநாதன் அய்யத்தை எழுப்புகிறார். ஆனால் யாழ்ப்பாணத்தில் பலசாதியினரிடம் ‘பறைவது’ என்ற வார்த்தை புழக்கத்திலுண்டு. எனவே மேற்சொன்ன ஆய்வுகளையும் அய்யங்களையும் உறுதியான வரலாற்றுச் சான்றுகளாக நம்மால் கொள்ளமுடியாது. எனினும் நளவர் என்ற சாதி இந்தியாவிலிருந்து இலங்கையில் குடியேறிய மற்றைய சாதிகளைப் போல் அல்லாமல் இலங்கையிலேயே உருவான சாதிக் குழுமம் என்ற ஆய்வாளர்களின் அனுமானத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்.

ரகுநாதன், பனஞ்சோலைக் கிராமமான வராத்துப்பளையிலிருந்து உயர்பள்ளிக்குச் சென்ற முதல் இரண்டு தலித் மாணவர்களில் ஒருவர். மற்றைய மாணவர் கவிஞர் பசுபதி. அதேபோன்று திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரியில் பயின்ற முதல் இரு தலித் மாணவர்களில் ரகுநாதனும் ஒருவர். மற்றவர் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்கள்.

படிப்பை முடித்த ரகுநாதன் ஆசிரியர் பயிற்சி பெற முயன்றிருக்கிறார்.திருநெல்வேலியில் இயங்கிவந்த சைவாசிரியர் பயிற்சிக் கலாசாலை சாதி காரணமாக அவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. நல்லூரில் இயங்கிவந்த அய்க்கிய கிறித்தவ ஆசிரியர் பயிற்சி நிலையம் கிறித்துவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும். இந்த நிலையில் ரகுநாதனிற்கு பகுத்தறிவு மற்றும் நாத்தீகச் சிந்தனைகளைக் கற்றுக்கொடுத்த தமிழ்ப் புலவர் கந்த முருகேசனார் கிறித்துவ மதத்திற்கு மாறி இந்து மதச் சாதித் தடிப்பாளர்களிற்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்குமாறு ரகுநாதனுக்கு வழிகாட்டுகிறார். நாத்திகராயிருந்த போதும் பேருக்கு கிறித்துவ சமயத்தில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியை முடிக்கிறார் ரகுநாதன். மலையகத்தில் கந்தப்பளையில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய இரகுநாதன் யாழ் மத்திய கல்லூரியில் இறுதியாகப் பணியாற்றி ஓய்வு பெறுகிறார். ஆனால், இவையெல்லாம் இயல்பாகவோ சுலபமாகவோ நடந்து முடிந்துவிடவில்லை. தனது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு படியும், தன்னைப் பிணைத்திருந்த தளைகளை ஒவ்வொன்றாக அறுத்தவாறே அவர் மேலேறி வந்திருக்கிறார். தொழிலாளி குடும்பத்திற்குரிய வர்க்கச்சுமை தலித்துகளிற்கு விதிக்கப்பட்ட சாதிச்சுமை என இரட்டைச் சுமைகளைச் சுமந்துகொண்டே அவர் நடந்திருக்கிறார். அந்தச் சுவடுகளின் உயிர்ச் சித்திரம்தான் இந்த நூல்.

ரகுநாதன் பிறந்தபோது குழந்தைக்குத் தந்தையார் இட்ட பெயர் இராசன். இராசன் என்றே பெயர் அரச பதிவாளரிடம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தலித்துகளிற்கு இத்தகைய பெயர்கள் வைப்பதை வெள்ளாளர்களான பதிவாளர்கள் விரும்புவதில்லை. அவர்கள் தமது வாயில் வந்தமாதிரி கந்தன், சூரன், பூதன், செல்லன், செல்லி, பாறி, மாதி என்று தமது விருப்பப்படியே அரசாங்க ஆவணங்களில் தலித் குழந்தைகளின் பெயர்களைப் பதிந்துவிடுவாரகள். அதாவது பிறந்த அன்றே இராசன் -பிற்காலத்தில் ரகுநாதன் – மீது சாதியத்தின் ஒடுக்குமுறை தொடங்கிவிட்டது.

இராசன் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதுதான் பிறப்புச் சான்றிதழ் பள்ளியில் பதியப்படுகிறது. அப்போதுதான் இராசனுக்கு தனக்குப் பதிவாளர் இட்ட பெயர் கணவதி என்று தெரிய வருகிறது. பதிவாளரிடம் சென்று நியாயம் கேட்டால் உங்கிட ஆக்களிற்கு அப்படித்தானே வைக்கிறது..இனி மாற்ற ஏலாது என்கிறார். கணவதி என்ற பெயர் இராசனது சகமாணவர்களால் கிண்டல் செய்யப்படுகிறது. அப்படிக் கிண்டல் செய்வதில் முன்னணியில் நிற்கும் மாணவனுக்குப் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தியார் 1927-ல் யாழ்ப்பாணம் வந்தபோது பெற்ற தாக்கத்தால் அவனது தந்தையார் இட்ட பெயரது. வெள்ளாளருக்கு வடநாட்டுப் பெயர், வாயில் நுழையாத பெயர்களைக் கூட வைத்திருக்க முடிந்திருக்கிறது. தலித்துகளிற்கு தாங்கள் விரும்பிய இராசன் என்ற சிறிய பெயரை வைத்திருக்கக்கூட அனுமதி கிடையாது.

பாடசாலையிலும் ரகுநாதன் தனிவாங்கு மாணவர்தான். கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும் சாதிய இழிவு அவரை அமுக்கிக்கொண்டேயிருக்கிறது. அந்த அழுத்தத்தை, அந்தப் பாரத்தை, அந்த இழிவை தலித் அல்லாத ஒருவரால் எதிர்வு கூறவும் முடியாது, உணரவும் முடியாது. சைலன்ஸர் துப்பாக்கியில் சினைப்பர் பூட்டப்பட்டு அதிலிருந்து ரேசர் குண்டு சுடப்படுவதுபோல சத்தமில்லாமல் சாதியத் தாக்குதல் நெருப்பைக் கக்கிக்கொண்டு வரும். எந்தப் பக்கத்தால் வரும், எது இலக்கு, எதுவுமே புரியாது. வகுப்பில் நளவெண்பாவை ஆசிரியர் கற்பிக்கும்போதெல்லாம் இயல்பிலேயே தமிழ் ஆர்வமுள்ள ரகுநாதன் இலக்கிய வெள்ளத்தில் நனைவதில்லை. மாறாக அவமானத்தில் எரிகிறார். நளவெண்பா என வகுப்பில் உச்சரிக்கப்படும் போதெல்லாம் ஆதிக்கசாதி மாணவர்கள் இழிந்த குறும்புடன் ரகுநாதனைப் பார்க்கிறார்கள். நளவெண்பா உங்கிட ஆக்களின்ர பாட்டு என்கிறார்கள். இந்தச் சூழலிலிருந்து படிப்பதற்கு எவ்வாறு மனம் அவாவும்? ஆனால் ரகுநாதன் படித்தார். அனைத்து அவமானங்களையும் சகித்துக்கொண்டு மனதிற்குள் குமுறியபடியே படித்தார்.

அந்தப் பனஞ்சோலைக் கிராமத்திலிருந்து நெல்லியடி மத்திய கல்லூரிக்கு படிக்கச் சென்ற முதலாவது தலித் பெண் ரகுநாதனின் தங்கையார் பாக்கியம். நெல்லியடிக் கல்லூரியில் அவர் படிப்பது வெள்ளாள வாலிபர்களிற்கு பிடிக்கவில்லை. ரகுநாதன் தனது தங்கையை சைக்கிளில் ஏற்றிவரும்போது குறுக்கே தடி போட்டு வீழ்த்தப் பார்க்கிறார்கள். ரகுநாதன் அவர்களிற்கு கைநீட்டி விடுகிறார். ஆனால் தங்கையின் படிப்பு நிறுத்தப்படுகிறது. துடித்துப்போகும் ரகுநாதன், பருத்தித்துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரியின் அதிபராயிருந்த பாக்கர் அம்மையார் அவர்களைச் சந்தித்து தனது தங்கையை அங்கே சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகிறார். பாக்கியத்தை கல்லூரியில் சேர்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் இலவச விடுதி வசதியையும் பாக்கர் அம்மையார் வழங்குகிறார். தமிழ் மொழியைப் பேசும் வெள்ளாளர்களால் பாக்கியத்திற்கு மறுக்கப்பட்ட கல்வி, அந்நிய மொழியான ஆங்கிலம் பேசும் வெள்ளைக்காரியால் பாக்கியத்திற்கு மறுபடியும் கிட்டுகிறது. அதற்காக எல்லா வெள்ளைக்கார்களும் அப்படியென்று எண்ணவும்கூடாது என்பதற்கான சான்றையும் இந்த நூலிலேயே ரகுநாதன் தந்துவிடுகிறார்.

யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு ரகுநாதன் சென்று தன்னை மாணவனாகச் சேர்த்துக்கொள்ளுமாறு கல்லூரியின் அதிபர் பாதிரியார் லோங்கிடம் விண்ணப்பிக்கிறார். பாதிரியார் லோங்கின் கியாதிகள் உலகறிந்தது. அவர் கல்வித் தந்தை அதுஇதுவென்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஆனால் தன்முன்னே கல்வியைக் கோரி நின்ற, சாதாரணமான வேட்டி சட்டை அணிந்திருந்த சிறுவனை இங்கே இடம் கிடையாது என்ற ஒரே வார்த்தையில் நிராகரித்துவிடுகிறார். யாழ்ப்பாணத்தின் சாதிய ஒடுக்குமுறைகளை அறியாதவரல்ல லோங் அடிகள். ஒரு தலித் மாணவனுக்கு பாடசாலைகளில் இடம் கிடைப்பதிலுள்ள மிகப் பெரும் தடைகளையும் அவர் அறிவார். சொல்லப்போனால் சாதி பாராட்டாத கிறித்துவ மிஷனரிகளின் பிரதிநிதியாகிய அவர் ரகுநாதனுக்கு முன்னுரிமை வழங்கிக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டும். அதை மறுத்ததன் மூலம் லோங் அடிகள் ரகுநாதனுக்கு பெரும் அநீதியை இழைத்திருக்கிறார்.

ரகுநாதன் நெல்லியிடி மத்திய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கே அதிபராயிருந்த டொக்டர் சிவப்பிரகாசத்தின் வீடு பருத்தித்துறை நகரத்திலிருந்தது. அங்கே தனியாகத் தங்கியிருந்தவரைச் சந்திக்க மாணவர்கள், நண்பர்கள் வந்துபோவதுண்டு. ரகுநாதனும் அங்கே போவதுண்டு. டொக்டரின் வளவுக்குள் வல்லிபுரம் என்றொரு சீவல் தொழிலாளி கள் இறக்குகிறார். டொக்டர் அவ்வப்போது வல்லிபுரத்திடம் கொஞ்சம் கள் வாங்கி அருந்துவதுமுண்டு. ஒருநாள் வல்லிபுரத்திடம் கள்ளைப் பெற்றுக்கொண்ட டொக்டர், தேனீர் தயாரித்து வல்லிபுரத்திற்குக் கொடுக்குமாறு ரகுநாதனிடம் சொல்கிறார். ரகுநாதன் தேநீரைத் தயாரித்து ஒரு கிளாஸில் ஊற்றியெடுத்துக்கொண்டு அதை வல்லிபுரத்துக்குக் கொடுக்கச் செல்ல, வல்லிபுரம் வேலியில் கொழுவிக்கிடந்த பேணியை எடுத்த நீட்ட ரகுநாதன் மனம் வெதும்பிப்போய்விடுகிறார். இந்தச் சம்பவத்தை ஒரு நளவன் இன்னொரு நளவனுக்கு பேணியில் தேநீர் ஊற்றிக்கொடுத்த இச்சம்பவம் காலம் முழுவதும் என் நெஞ்சை அறுத்துக்கொண்டிருக்கும் என ரகுநாதன் தனது வெதும்புதலை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். டொக்டர் அதாவது பேணியில் தேநீர் கொடுக்க வைத்த சிவப்பிரகாசம் யாரென்றால் தென்னாசியாவிலேயே உளவியல் துறையில் ஆய்வு செய்து டொக்டர் பட்டம் பெற்ற முதலாவது நபராவார். ரகுநாதன்களதும் வல்லிபுரங்களதும் ஆன்மாக்களை அவரது உளவியல் அறிவு ஒருபோதுமே அறிந்துகொள்ளப்போவதில்லை.

292- பக்கங்கள் கொண்ட இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ரகுநாதன் அனுபவித்த வாதைகளின் இரத்தமிருக்கிறது. ஒவ்வொரு எழுத்திலும் ஆதிக்க சாதிகளது குற்றமிருக்கிறது. இந்த இரத்தங்களுக்கும் குற்றங்களுக்கும் ஊடாக இளைய ரகுநாதன் ஒரு கொம்யூனிஸ்ட் ஆகிறார்.

1940-களின் பிற்பகுதியில் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி வடபகுதியில் காலூன்றுகிறது. கார்த்திகேசன் மாஸ்டர், அ.வைத்திலிங்கம், பொன். கந்தையா போன்றவர்களுடன் தலித் மக்களின் பெருந்தலைவர் எம்.சி. சுப்பிரமணியமும் கொம்யூனிஸ்ட் கட்சியை யாழ்ப்பாணத்தில் நிலை நிறுத்திய தலைவர்களில் ஒருவராயிருக்கிறார். ஏற்கனவே சாதிக் கொடுமைகளால் கொதித்துக்கொண்டிருந்த தலித் இளைஞர்கள் பேரார்வத்துடன் கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொள்கிறார்கள். எம். சி. சுப்பிரமணியம் அவர்களது தொடர்பின் மூலமே கே.டானியல், டொமினிக் ஜீவா, எஸ்.பொ. போன்றவர்கள் கொம்யூனிச இயக்கத்தில் ஈர்க்கப்படுகிறார்கள். ஏற்கனவே எம்.சி. சுப்பிரமணியத்தோடு அறிமுகமிருந்ததால் ரகுநாதனும் இயக்கத்தில் இணைகிறார். வடமராட்சியில் கட்சி வகுப்புகளை நடத்துபவர்கள் ரகுநாதன் வீட்டிலேயே தங்கி உண்டு உறங்கிச் செல்வதுண்டு. அ. வைத்திலிங்கம் போன்ற கார்காத்த வெள்ளாளர்கள் வந்தாலும் சரி, இராமசாமி அய்யர் என்ற பார்ப்பனர் வந்தாலும் சரி, எம்.சி. சுப்பிரமணியம் போன்ற தலித் தலைவர் வந்தாலும் சரி அங்கேயே தங்குகிறார்கள். கொடிய வறுமையையும் பொருட்படுத்தாது ரகுநாதனது தாயார் வள்ளியம்மை வந்தவர்களிற்கு சமைத்துப்போடுகிறார். இதில் இன்னுமாரு சிக்கல் என்னவென்றால் இராமசாமி அய்யர் வரும்போது மரக்கறி உணவு சமைக்க வேண்டிய துன்பத்திற்குள் அவர் தள்ளப்படுகிறார். அவருக்குச் சைவ உணவுகள் சமைத்துப் பெரிதாகப் பழக்கமில்லை; அய்யர்மாருக்குச் சமைத்து அறவே பழக்கமில்லை. வள்ளியம்மை சமைத்ததை அய்யர் சிரமப்பட்டு இரண்டுபிடிதான் சாப்பிட்டார். அவரில் குற்றமில்லை. சாதியம் சாப்பாட்டு வகைகளில் கூட மனிதர்களைச் சாதியாகப் பிரித்தே வைத்திருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு சமையல். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுறை . ஒருவருக்கு தீட்டானது மற்றவருக்கு தீட்டில்லை. ஒருவருக்கு அசுத்தமானது மற்றவருக்கு அமிர்தமாயிருக்கிறது.

மகனது கட்சித் தோழர்களிற்கு சமைத்துப் போட்டு மனம் கோணாமல் உபசாரம் செய்யும் தனது அன்னையின் பண்பை மர்க்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலின் நாயகி பெலகேயா நீலவ்னாவுடன் ஒப்பிட்டுத் தனது தாயை வள்ளி பெலகேயா எனப் பெயரிட்டு நூலில் பதிவு செய்கிறார் ரகுநாதன். நூல் முழுவதும் சொல்லிச் செல்லப்படும் ரகுநாதனுக்கும் அவரது அன்னைக்குமுள்ள உணர்ச்சிகரமான பிணைப்பு நம்மை நெகிழ வைக்கிறது. எழுதப் படிக்கத் தெரிந்திருக்காத அந்த அன்னையின் அன்புள்ளமும் அறவுணர்வும் போராட்டக் குணாம்சமுமே இளைய ரகுநாதனை வடிவமைத்திருக்கின்றது.

சமூகக் கொடுமைகளை நேரடியாகச் சாடியும் அதேவேளையில் முற்போக்கு இலக்கியத்துக்கேயுரிய சோசலிச எதார்த்தப் பாணியுடனும் இலக்கியம் படைத்தவர் ரகுநாதன். அவரது எழுத்துப்பாணியை சொற்களிற்குப் பின்னால் இயங்கும் ஆழ்மனம் என்று மதிப்பிடுகிறார் எழுத்தாளர் பாவண்ணன். அவரது சிறுகதைகள் நிலவிலே பேசுவோம், தசமங்கலம் என இரு தொகுப்புகளாக வெளியாகின. வெறுமனே கற்பனையில் மட்டுமே கதைகளைக் கண்டடையாமல் களத்திலும் கால்பதித்து நின்று கதைகளைக் கண்டடைகிறார் ரகுநாதன். அவர் மாவட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் பங்குகொண்டு பெற்றெடுத்ததுதான் அழியாப் புகழ்பெற்ற கந்தன் கருணை நாடகம். அந்த நாடகம் நெல்லியடி அம்பலத்தாடிகளாலும் வேறு வேறு குழுக்களாலும் மேடைகளேற்றப்பட்டு நாட்டை ஒரு கலக்குக் கலக்கிப்போட்டது.

நமது மூத்த இடதுசாரிகளிற்குள் சாதியத்தின் ஆணிவேராக இந்து மதத்தை அடையாளம் கண்டவர் ரகுநாதன் ஒருவரே. அதை அவர் இந்த நூலிலே பதிவு செய்கிறார். உலகம் முழுவதும் உழைப்பினால் பணப் பெருக்கத்தால் நாகரிகப் பாங்கினால் படிப்பறிவினால் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டேயுள்ளன. ஆனால் எம் மத்தியில் இந்துத்துவத்தின் பங்களிப்பினால் இந்த ஏற்றத்தாழ்வு சாதியாக வகுக்கப்பட்டிருக்கிறது என அவர் அறிக்கையிடுகிறார்.

நாங்கள் நண்பர்கள் இணைந்து நடத்திய ‘அநிச்ச’ பத்திரிகைக்காக ரகுநாதன் 2006-ல் வழங்கிய நேர்காணலில் ஒரு விசயத்தை அழுத்திச் சொன்னார். வர்க்கச் சுரண்டலைவிட சாதியக் கொடுமையே கடுமையானது என இந்த நூலில் அழுத்திச் சுட்டும் அவர், அந்த நேர்காணலில் பாட்டாளி வர்க்கத் தலித்துக்கும், அதே பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த வேளாளருக்குமிடையில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு தீர்க்கப்பட முடியாதது. உழைக்கும் பாட்டாளி மக்கள் சுரண்டப்படும்போது அவர்கள் எந்தச் சாதியினராயிருந்தாலும் ஒன்றுபட்டுச் சுரண்டலுக் கெதிராகப் போராடுவார்கள். அதனால் சாதி ஒழிந்து விட்டது என்று அர்த்தமில்லை. அந்தப் போராட்டத்தின் போது சாதித் தடிப்பு நிறம் மங்கினாலும் அதன் அடிப்படையான பாகுபாடு இருந்து கொண்டேயிருக்கும் என்று சரியாகவே சொன்னார். அவர்கள் பாட்டாளிகளாக இணைகிறார்கள். ஆனால் சாதியாகப் பிரிந்தேயிருக்கிறார்கள்.

இங்கேதான் பார்ப்பனியமும் முதலாளியமும் நமது இரட்டை எதிரிகள் என்ற அம்பேத்கரையும் சுயமரியாதை இயக்கத்தின் வழியே சமூகநீதியை முன்வைத்துப் போராடிய பெரியாரையும் நாம் ஆழமாகக் கற்றுச் செயற்பட வேண்டியிருக்கிறது. அம்பேத்கரிய – பெரியாரிய சிந்தனைகளைத் தொட்டுக்கூடப் பார்க்காத நமது முந்தைய தலைமுறைகளிடமிருந்து நாம் வேறுபட்டு நிற்க வேண்டிய கருத்தியல் புள்ளிகளிவை.

இந்த நூல் ஒரு தனிமனிதனின் வரலாறல்ல. இந்த நூல் ஒடுக்கப்பட்ட சமுகத்தின் வரலாறாக மட்டுமல்லாமல் ஒடுக்கிய சமூகத்தின் வரலாறாயுமிருக்கிறது. இந்த வரலாற்றை ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த எவரும் பதிவாக்கி வைக்கப்போதில்லை. இரு பகுதிக்குமாகச் சேர்த்து ரகுநாதனே தனது முதிய வயதில் இந்தச் சுமையைச் சுமந்திருக்கிறார். வள்ளி பெலகேயாவின் மகனது சுவடுகள் இவை. அன்னையின் அரையிலே காவோலையைக் கட்டச்செய்து அவர் நடந்த சுவடுகளை அழித்ததுபோல தனயன் நடந்த சுவடுகளை யாரும் அழித்துவிட முடியாது. ஏனெனில் வரலாற்றில் அவர் எடுத்துவைத்த காலடிகளின் சுவடுகளை அவர் இந்தப் புத்தகத்தின் பக்கங்களில் பதிந்து வைத்து அடுத்தடுத்த தலைமுறைகளிடம் இரத்தமும் தசையுமாகக் கையளித்திருக்கிறார்.

(42-வது இலக்கியச் சந்திப்பில் – Berin, 17.05.2014 – நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம். ‘ஆக்காட்டி’ இதழில் வெளியாகியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *