கற்பிதங்களின் கீழே

கட்டுரைகள்

முன்னுரை: சுருக்கப்பட்ட நெடுங்கதைகள் / குமாரி / தமிழில் – ரிஷான் ஷெரிப் / வம்சி பதிப்பகம்.

சிங்களவரும் மனிதநேயப் பணியாளருமான குமாரி அவர்களின் இந்நூலை வாசிக்கப்போகும் தமிழ் வாசகர்களில் அநேகருக்கு ஈழப்போராட்டம், இயக்கத் தலைமைகள், போராளிகள் குறித்துப் புனிதமான கற்பிதங்கள் இருக்கக்கூடும். ஈழப் போராட்டம் ஒரு பொற்கால வரலாறாகவும், அதனுடைய தலைவர்கள் காவிய நாயகர்களாகவும் இவர்களின் மனதில் ஆழப் பதிந்துமிருக்கலாம். இந்தக் கற்பிதங்களைக் கொண்டாடும் இலக்கியவாதிகளும், ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் தங்களது விசுவாசத்தை அழகிய எழுத்துகளாக உருமாற்றி, இந்தப் புனிதக் கற்பிதங்களின் உச்சியில் ஒரு விளக்காக வைத்துவிடுகிறார்கள். பெரும்பான்மையான தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்தப் புனிதம், தேர்தலில் வாக்குகளைத் திரட்டித்தரும் வெளிச்சமாகவுமிருக்கிறது.

கார்த்திகை மாதத்தின் இறுதியில் வரும் மாவீரர் நாளில், தாய்மார்கள் கைகளில் தீபங்களை ஏற்றியவாறு கல்லறைகளுக்கு நடுவே துயரத்தால் தள்ளாடியவாறே நடந்துகொண்டிருப்பார்கள். தங்களது பிள்ளைகளின் கல்றைகளுக்கு முன்னால் அவர்கள் மண்டியிட்டுக் கதறும் சத்தம் எவரது மனதையும் உருக்கிவிடக்கூடியது. அவ்வாறு கதறியழுதுகொண்டிருக்கும் தாய்மார்களதும் அல்லது தொலைந்துபோன குழந்தைகளை இன்னும் தேடிக்கொண்டிருக்கும் பெற்றவர்களதும், கல்லறைகளிலிருந்து மீண்ட குழந்தைகளதும் துயரக் குரல்களே உங்களது கையிலிருக்கும் இந்நூல்.

நூலாசிரியர் குமாரி, மட்டக்களப்பு நிலத்திலேயே ஆண்டுக்கணக்காகத் தங்கியிருந்து, தமிழ் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டு, எளிய தமிழ் மக்களுக்கு உறவாகவும், உதவியாகவுமிருந்து செவிமடுத்த துயரக் கதைகளை நமக்குத் தொகுத்துத் தருகிறார். இந்தக் கதைகளை ஒலிக்கும் நாவுகளும் இருதயங்களும் ஈழப் போராட்டத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் புனிதக் கற்பிதங்களை தங்களது கண்ணீரால் கரைத்து, கோபத்தால் பொசுக்கிவிடுகின்றன.

இந்தக் குரல்களைத் தொகுக்க வேண்டிய அவசியம் ஒரு சிங்களத்திக்கு ஏன் வந்தது என நாம் கேட்பது தேவையற்றது. ஆனாலும் அதற்கான பதிலை நூலினுள்ளே குமாரி தெளிவாகக் கூறியிருக்கிறார். இந்தக் குரல்களை மட்டுமல்லாமல், போரால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குரல்களையும் தொகுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துகிறார். தமிழர்கள் மீதான சிங்கள இனவாதத்தினது கட்டுக்கதைகளையும், அந்தக் கதைகள் பரந்துபட்ட சிங்கள மக்களிடம் எப்படி நம்பிக்கைகளாகப் படிந்துள்ளன என்பதையும் குமாரி சுட்டத் தவறவில்லை.

குமாரி தொகுத்த கதைகளின் மைய இழையாக இருப்பது ஒன்றேதான். அது தமிழ்ச் சிறார்களைப் படைக்குக் கட்டாயமாகச் சேர்த்தல் அல்லது கடத்திச் செல்லல். இந்தக் கொடுமைகளை இழைத்தவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கிறார்கள் அல்லது அவர்களிலிருந்து பிரிந்து சென்ற கருணா அணியினராக இருக்கிறார்கள். புலிகள் தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இதைச் செய்ய, கருணா அணியினரோ இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ளும் இதைச் செய்திருக்கிறார்கள். அதற்கு இலங்கை இராணுவத்தினரின் அனுசரணையும் இருந்திருக்கிறது.

யுத்தப் பிரபுகள் தங்களது படையணிகளில் சிறார்களைச் சேர்த்துக்கொள்வது அல்லது பலவந்தமாகப் பிடித்துச் சேர்ப்பது உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுதான். எத்தனையோ நூல்களிலும், Netflix திரைப்படங்களிலும் இந்தக் குழந்தைகளின் கதைகளைப் படித்தும் பார்த்தும் கண்ணீர் உகுக்கும் தமிழ் வாசக மனம், ஈழப் போராட்டத்திலும் இவை நிகழ்ந்தன எனச் சொல்லும்போது மட்டும் கண்களை மூடிக்கொண்டிருந்தால் அது நியாயமற்றது. “கட்டாய ஆட்சேர்ப்புகளில் எனக்கும் விமர்சனம் உண்டுதான், ஆனால் இதை மட்டும் வைத்துப் போராட்டத்தை மதிப்பிட முடியாது” எனத் தப்பித்துச் செல்லும் நியாயமார்களுக்கும் நம்மிடையே பஞ்சமில்லை. அவர்களைப் பார்த்து; ஓர் அப்பாவிச் சிறாரின் உயிரினதும் ஏழைத்தாயின் கண்ணீருக்கும் முன்னே உங்களது நியாயவாதங்களுக்கு எந்த மதிப்புமில்லை என இந்நூலினுள்ளே குழந்தைகளும் தாய்மார்களும் இரத்த சாட்சியங்களை உரைக்கிறார்கள்.

2

இயக்கப் படையணிக்குள் சிறார்களை உள்வாங்குவது என்பது ஈழப் போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் நேர்ந்த ஒரு வழுவா என நான் யோசித்துப் பார்த்துள்ளேன். பத்து வயதுப் பாலஸ்தீனச் சிறுவன் இஸ்ரேல் இராணுவத்திற்குக் கல்லால் எறிந்து போராடுவதை நாம் பார்த்துள்ளோம். பிரஞ்சுப் புரட்சியின் போது, பாலகர்கள் யுத்தகளத்தின் முன்னணியில் ஆயுதம் ஏந்தி நின்றதைப் படித்திருக்கிறோம். இந்தச் சரித்திரம் ஈழத்தில் நடக்கும்போது மட்டும், அதை நியாயமற்றது என நாம் சொல்லிவிட முடியுமா?

ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையிலும் சிறுவர்கள் ஆயுதப் போராட்டக் களத்தில் நிறுத்தப்படுவது குற்றமே என நான் உறுதியாகவே சொல்ல விரும்புகிறேன். இந்தச் சிறார்களை யுத்த களத்தை நோக்கித் தள்ளிய காரணிகள் எந்தப் புனிதக் காரணிகளாக இருந்தாலும் அவை நிராகரிக்கப்பட வேண்டியவையே. உகண்டாவின் குழந்தைப் போராளி சைனா கெய்ரெற்சி “அவர்கள் என்னிடமிருந்து அம்மாவைப் பறித்துக்கொண்டு எனது கைகளில் துப்பாக்கியைக் கொடுத்தார்கள்” என்று எழுதியது உலகம் முழுவதுமுள்ள குழந்தைப் போராளிகளுக்கானது.

என்னுடைய சொந்த அனுபவத்தையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1983 யூலை தமிழினப் படுகொலைகளின் பின்னாக, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இணையும்போது எனக்குப் பதினாறு வயது. நான் கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டவனல்ல. நானாகவே விரும்பிப் போய்த்தான் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். என் வயதொத்தவர்கள் மட்டுமல்லாமல், எங்களிலும் குறைந்த வயதுள்ளவர்களும் அப்போது வகைதொகையற்றுப் பல்வேறு தமிழ்ப் போராட்ட இயக்கங்களில் இணைந்துகொண்டார்கள். அந்தக் ‘கறுப்பு யூலை’ எங்களது உள்ளங்களில் ஏற்படுத்தியிருந்த கொந்தளிப்பை, துப்பாக்கிகள் மூலமாகவே நாங்கள் கடக்க நினைத்தோம்.

அப்போது, இயக்கங்கள் தங்களை நோக்கி அலையலையாக வந்த சிறுவர்களில் எல்லோரையுமே சேர்த்துக்கொண்டார்கள் எனச் சொல்லிவிட முடியாது. ஆனாலும் பதினெட்டு வயதுக்குக் குறைந்த சிறுவர்களைப் படையில் சேர்க்கக்கூடாது என்ற கொள்கையோ, கட்டுப்பாடோ எந்த இயக்கத்திலும் இருக்கவில்லை. இதை இயக்கங்களின் மிகப் பெரிய தவறென்றே நான் சொல்வேன். தன்னுடைய வாழ்வையும் பயணத்தையும் தீர்மானித்துக்கொள்ளும் வயதுவராத ஒரு சிறுவனின் அல்லது சிறுமியின் கைகளில் கொடுக்கப்படும் துப்பாக்கி அவர்களுக்கு மட்டுமே கேடாகாது.

“யுத்தகால இரவுகளின் நெருக்குதலில் எங்கள் குழந்தைகள் வளர்ந்தவர்கள் ஆயினர்” என்ற கவிஞர் சிவரமணியின் குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. நமது சிறார்களின் குழந்தைமை துப்பாக்கிகளால் களவாடப்பட்டன. இயக்கத் தலைவர்களது தவறான கொள்கை முடிவுகளையும் உத்தரவுகளையும், தங்களது பிஞ்சு முதுகில் சுமந்துகொண்டே களத்தில் முன்னேற இக்குழந்தைகள் கட்டளையிடப்பட்டார்கள். இந்தக் குழந்தைகள் தந்திரமான கொலைகாரர்களாகவும், உளவாளிகளாவும் வளர்த்தெடுக்கப்பட்டார்கள். தற்கொலைப் போராளிகளாக உருமாற்றப்பட்டார்கள். தலைமையின் கட்டளையை எதிர்த்தபோது அல்லது மீறியபோது இந்தக் குழந்தைகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள் அல்லது கொன்று புதைக்கப்பட்டார்கள். நிகழ்ந்த ஒவ்வொரு பயங்கரவாதச் செயல்களிலும் இந்தக் குழந்தைகள் கட்டாயமான பங்காளிகளாக்கப்பட்டார்கள். போர்க் குற்றங்களின் இரத்தத்தில் இக் குழந்தைகள் அறியாலேயே தங்களது கைகளை நனைத்துக்கொண்டார்கள். இந்தக் குழந்தைகள் இலங்கை இராணுவத்தினரின் கைகளில் சிக்கியபோது, அவர்களைக் காப்பாற்ற எந்தத் தலைமையாலோ அல்லது புனித வழிபாட்டாளர்களாலோ மட்டுமல்லாமல், மனதவுரிமைச் செயற்பாட்டாளர்களாலும் முடியாமற்போனது. இராணுவத்தால் தலையில் சுடப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்ட குழந்தைகளுக்கு இன்றுவரை கணக்கில்லை.

உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு வந்த சிறார்களின் கைகளில் துப்பாக்கியைத் திணித்த இயக்கங்களுக்கு மனிதவுரிமைச் சட்டங்களோ, சமூக அறங்களோ ஒரு பொருட்டாகயிருக்கவில்லை. இந்த விஷயத்தில் மட்டுமல்லாது எல்லா விஷயங்களிலுமே போராளிகள் மீறல்களைச் செய்தார்கள். போராட்டத்தில் இவை தவிர்க்க முடியாதவை என்ற வாதங்கள் கயமையானவை. இந்த மீறல்களால் நாம் பெற்றது எதுவுமேயில்லை. இழந்தவற்றுக்கோ கணக்கேயில்லை. இந்த மீறல் அடுத்தகட்டமாக, சிறார்களைப் பலவந்தமாகப் படைக்குப் பிடித்துக்கொள்ளும் செயலாக அசிங்கமாக வளர்ச்சியடைந்தது.

ஈழத்தில் இந்தக் கட்டாய ஆட்சேர்ப்பு ஒழுங்கமைக்கப்பட்டு, பெரிய அளவில் நடத்தப்பட்டது இந்திய அமைதிப் படையின் காலத்தில்தான். இந்திய இராணுவத்தின் வழிகாட்டலின் கீழே ‘தமிழ் தேசிய இராணுவம்’ என்ற படையை உருவாக்க முயன்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே இந்தக் கொடுமையை முன்னின்று நடத்தியது. இந்தக் காலத்தில்தான் நான் யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்து கொழும்புக்கு ஓடினேன். எனது தம்பியையும் இன்னும் பல நண்பர்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் விரட்டிப் பிடித்து, கட்டாயப் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பிவைத்தது.

எனது தாயார் வடபகுதி முழுவதும் என் தம்பியைத் தேடியலைந்து, கிளிநொச்சியில் ஒரு பயிற்சி முகாமில் தம்பியைக் கண்டுபிடித்தார். கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரின் உதவியுடன் தம்பியைக் கடைசியில் மீட்டெடுத்தார். ஆனாலும் தொடர்ந்தும் தம்பியை வடபகுதியில் வைத்திருக்க முடியாது. எனவே பாதுகாப்பான இடமொன்றுக்குத் தம்பியை அனுப்பிவைக்க அம்மா முடிவெடுத்தார்.

அப்போதிருந்த பிரேமதாஸ அரசு, இந்திய இராணுவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. வடக்கு -கிழக்கில் இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்த புலிகளோடு பிரேமதாஸவின் அரசுக்கு ஓர் ஒப்பந்தமும் ஏற்பாடாகியிருந்தது. குறுகிய காலமே நீடித்த இந்தத் தேன்நிலவுப் பருவத்தில், கொழும்பு தமிழர்களுக்குப் பாதுகாப்பான இடமாகியிருந்தது. அதேகாலப் பகுதியில் கொழும்பிலும் சிங்களப் பகுதிகளிலும் ஜே.வி.பியினர் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்ப் பகுதிகளில் புலிகள் இந்திய இராணுவத்தோடு மோதிக்கொண்டிருக்க, இலங்கை அரச படைகள் தங்களது முழுக் கவனத்தையும் ஜே.வி.பியை அழித்தொழிப்பதில் குவித்து வைத்திருந்தன. கொழும்பின் மருதானைப் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய மிகப் பெரிய சுற்றிவளைப்பில் நான் அகப்பட்டுக்கொண்டேன். அந்தச் சுற்றிவளைப்பில் ஒரு புதுமை நிகழ்ந்தது. தமிழர்களையெல்லாம் இராணுவம் விடுவித்துவிட்டு, சிங்கள இளைஞர்களை மட்டுமே கைது செய்து அழைத்துச் சென்றது.

யாழ்ப்பாணத்தில் சிறார்களைப் பிடிப்பவர்களிடமிருந்து, தங்களது குழந்தைகளைக் காப்பாற்றிய தாய்மார்கள், பலாலியிலிருந்த இலங்கை விமானப்படை முகாமுக்கு குழந்தைகளை இரகசியமாக அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். விமானச் சீட்டுக்கான பணத்தைக் கட்டிவிட்டால், இலங்கை இராணுவம் இந்தச் சிறார்களை விமானத்தில் அழைத்துவந்து கொழும்பு – இரத்மலானை விமான நிலையத்தில் இறக்கிவிட்டது. அவ்வாறாக வந்துசேர்ந்த எனது தம்பியையும் இன்னும் சில நண்பர்களையும் வரவேற்பதற்காக நான்தான் விமான நிலையத்திற்குச் சென்றேன்.

தப்பி வந்தவர்கள் அச்சத்தின் குழந்தைகளாகயிருந்தார்கள். மனிதர்களின் முகம் பார்த்துப் பேசத் தயங்கினார்கள். இரவுகளில் அலறியடியே தூக்கத்திலிருந்து பதறியடித்து எழுந்தார்கள். பகலில் அறைகளுக்குள்ளேயே உட்கார்ந்திருந்து வெறித்துப் பாரத்துக்கொண்டிருந்தார்கள். குழந்தைப் பருவத்தில் படைகளில் இணைந்தவர்கள் அல்லது இணைக்கப்பட்டவர்கள், அதற்குப் பின்பும் பல வருட காலங்களுக்கு உளம் பிறழ்ந்தவர்களாக வாழ்ந்துகொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சிலருக்கோ மரணம் வரை இது நீடிக்கிறது. புதைகுழிக்குள்ளும் அச்சம் அவர்களோடிருக்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ்வால் தொடக்கிவைக்கப்பட்ட கட்டாய பிள்ளை பிடிப்பைப் புலிகளும் தொடர்ந்தார்கள். வீட்டுக்கு ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளையெனச் சட்டம் செய்து சிறார்களை விரட்டிப் பிடித்தார்கள். புலிகள் முள்ளிவாய்க்காலில் வீழும்வரை இந்த நடவடிக்கை தொடர்ந்தது. போரில் தோல்வி நிச்சயமென அறிந்த பின்பும்கூட, புலிகள் சிறார்களைத் தூக்கிச் சென்றார்கள். இரண்டு வாரப் பயிற்சியின் பின்பாக, இச்சிறார்களை யுத்தத்தின் முன்னரங்கத்தில் நிறுத்தி வைத்துக் கொல்லக் கொடுத்தார்கள்.

வன்னியில் புலிகள் மட்டுமே சிறார்களைப் பிடித்துக்கொண்டிருக்க, கிழக்கிலோ புலிகளும் கருணா அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகளைப் பிடித்து, ஒரு சிறார் படைக்கு எதிராக இன்னொரு சிறார் படையை நிறுத்தினார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு வயது அண்ணனும், பதின்முன்று வயதுத் தங்கையும் ஒருவருக்கொருவர் எதிராகத் துப்பாக்கியைப் பிடிக்க வேண்டியிருந்தது. இந்த இரு குழந்தைகளையுமே மீட்டு, வீட்டுக்கு அழைத்துவர அவர்களின் தாயார் போராடிக்கொண்டிருந்தார். பெரும்பாலான வேளைகளில் அந்தத் தாய்க்குக் குழந்தைகளின் சடலம் கூடக் கிடைக்கவில்லை.

அழுவதற்குக் கண்களில் நீருமற்ற இந்த எளிய தாய்மார்களின் நடுவே நின்று கதைகளைச் சேகரித்த குமாரி, வெறுமனே ஓர் எழுத்தாளராகவோ ஆய்வோளராகவோ செயற்பட்டு இந்தக் கதைகளை எழுதவில்லை. வஞ்சிக்கப்பட்ட குழந்தைகளும், தாய்மார்களின் கண்ணீரும் அவருக்கு நூலுக்கான பண்டங்களல்ல. இந்தக் கதைகளில் ஒரு பாத்திரமாகவே அவர் மாறிப்போய்விடுகிறார். துக்கங்களின் பங்காளியாக இருந்து நம்முடன் பேசுகிறார். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர் வெளிப்படுத்தும் தனது கையறுநிலையும் குற்றவுணர்வும் வாசிப்பவர்களையும் தொற்றாமல் விடாது.

இந்தப் பாவப்பட்ட குழந்தைகளதும், தாய்மார்களதும் பெயரால் தங்களது வயிறுகளை வளர்க்கும் என். ஜி. ஓ. அலுவலகர்களது இரட்டை வேடங்களையும் குமாரி விலாவாரியாகவே தோலுரித்துப்போடுகிறார். இது ஒருவகையில் அவரது சுய ஒப்புதல் வாக்குமூலமும் தான். ஒரு தாய் தன்னுடைய வயிற்றெரிச்சலை நூலில் இப்படிப் பதிவு செய்கிறார்: “இலங்கையை வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தை விட, இப்போது அதிகமான வெள்ளைக்காரர்கள் நாட்டிலிருக்கிறார்கள்.”

3

இயக்கங்கள் குழந்தைகளைக் கட்டாயமாகப் படையணிகளில் இணைத்ததை நியாயப்படுத்துவோர் இன்னமும் நம்முள்ளே இருக்கிறார்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு இந்நிலை ஏற்பட்டால், அவர்கள் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள்? தங்களுடைய குழந்தையைக் கடத்திச் சென்று கொலைக்களத்தில் தள்ளியவர்களை அவர்கள் வழிபடுவார்களா? சிலைகள் அமைப்பார்களா? கவிதைகளாகப் பாடித் தள்ளுவார்களா? எந்தத் தத்துவத்தின் பெயராலும் புனிதங்களின் பெயராலும் இக்கொடுமையை நியாயப்படுத்திவிட முடியுமா?

ஒரு குழந்தை கடத்தப்படுவது தனிச் சம்பவமல்ல. இந்தச் செயல் ஒரு குடும்பத்தையே முழுவதுமாக அழித்துப்போடுவதை நாங்கள் இந்த நூலினுள்ளே காணலாம். சில சமயங்களில் ஒரு கிராமமே இடம்பெயர்ந்து, பிள்ளை பிடிகாரர்களுக்குத் தப்பி அகதியாக அலைந்து திரிகிறது. தங்களது வீடுகளையும் விவசாய நிலங்களையும் விட்டு, ஏதிலிகளாக அகதி முகாமில் அவர்கள் தஞ்சமடைகிறார்கள். அங்கே என்.ஜி.ஓக்கள் வழங்கும் புழு நாறும் அரிசிக்காகவும் வயிற்றைப் பொருமச் செய்யும் கோதுமை மாவுக்காகவும் வெயிலில் நீண்ட வரிசைகளில் கையேந்தி நிற்கிறார்கள். “வரிசைகளில் ஆட்கள் நெருக்கியடித்துக்கொண்டு காத்திருக்கும் அளவுக்கு வரிசையை உருவாக்கியவர்களின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்” என்று நூலில் சொல்லப்படும் வார்த்தைகளில் பொதிந்திருப்பது, ஒரு மக்கள் கூட்டத்திடமிருந்து சுயமரியாதை பிடுங்கப்பட்டதற்கான சாட்சியம்.

குமாரி அவர்கள் சொல்வதுபோலவே, அவர் இங்கே செய்திருப்பது துயரச் சித்திரமொன்றின் பகுதிதான். இலங்கை அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும், விடுதலைப் புலிகளாலும் சிறார்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளையும் கொடுமைகளையும் எக்காலத்திலாவது முழுமையாகத் தொகுத்துவிட முடியுமென்று நான் நம்பவில்லை. சாட்சியங்கள் திட்டமிட்டே அழிக்கப்படுகின்றன. அரசபடைகளை நியாயப்படுத்தும் தரப்போ, புலிகளுக்குப் புனித வெள்ளையடித்துக்கொண்டிருக்கும் தரப்புகளோ இவற்றை இதய சுத்தியுடன் செய்யப்போவதில்லை. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு நிதி பெறுவதிலும் ஊதியத்திலும் இருக்கும் ஆர்வமளவுக்கு, இந்தச் சனங்களின் மீதும் அக்கறை இருப்பதற்கான தடயங்களில்லை. தொழில்முறை ஆய்வாளர்களிடமிருந்து ஒரு பருமட்டான புள்ளிவிபரங்களும், தேர்ந்தெடுத்துச் சொல்லப்படும் தரவுகளும் நமக்குக் கிடைத்தாலும், பாதிக்கப்பட்ட எளிய இதயங்களின் உணர்வுளை அவர்களால் நம்மிடம் கடத்திவிட முடியாது.

இந்நூலாசிரியர் குமாரி அதைச் செய்திருக்கிறார். இவரைப் போன்ற சுயாதீனச் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களுமே மீதிச் சித்திரத்தையும் எழுதி, நம்மிடம் கையளிக்க முடியும் என்றே நான் நம்புகின்றேன். எந்த மொழியில் லிபியில் எழுதினாலும் உண்மையின் வெப்பம் தகிக்கவே செய்யும்.

ஷோபாசக்தி
15.07.2020

1 thought on “கற்பிதங்களின் கீழே

  1. அருமையிலும் அருமை,, வாழ்த்துக்கள்.. ஒரு எழுத்தாளராக இருந்து, இன்னொரு நாவலை அடையாளப்படுத்திய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *