அரம்பை

கதைகள்

நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான்.

விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. இம்முறை இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் ஒப்புதலோடு நிறைவேறுவதற்கு எல்லா வாய்ப்புகளுமுள்ளன. ஆனால், இலங்கைத் தீவு, செயின்ட் ஹெலினா தீவு மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலப்பகுதிகளில் இந்தச் சட்டத்திற்கு விலக்கு வேண்டும் என்ற குரல்கள் நாடாளுமன்றத்தின் மேலவையான, பிரபுக்கள் அவையில் பலமாக உள்ளன. குறிப்பாக இலங்கைத் தீவிலும் ஹெலினா தீவிலுமுள்ள ஆயிரக்கணக்கான அடிமைகள் விடுதலைக்குப் பக்குவமடையாதவர்கள் என்ற கருத்து மேலவைப் பிரபுக்களிடமிருக்கிறது.

இந்த விவாதத்தில், சேர்.வில்மெட் நோர்மென் ஆகிய என்னுடைய ஆதரவு எந்தப் பக்கம் இருக்கப் போகிறது? என்னுடைய மனைவி எஸ்மெரெல்டாவுக்குக் கூட நான் இதுபற்றி எதுவும் இதுவரை சொல்லவில்லை. பொதுச்சபையில் என்னுடைய கை எந்தப் பக்கமாக உயரப்போகிறது என்பதை அவளும் நாளைக்குத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். ஸ்பெயினின் நாட்டுப்புறக் குயவக் குடியில் பிறந்தவளான அவளுக்கு என்னுடைய முடிவு உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தக்கூடும். எனக்கே இப்போது அப்படித்தானிருக்கிறது.

இந்த விஷயத்தில், என்னுடைய குரலை முக்கியமானதாகவே பலரும் கருதுகிறார்கள். அடிமைமுறை ஒழிப்புக்கு ஆதரவான சங்கத்தினர், பத்திரிகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியினர் எல்லோருமே என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இரண்டு காரணங்களுள்ளன. பொதுச்சபை உறுப்பினர்களிலேயே வயதில் குறைந்தவன் நான்தான். எனக்கு இப்போது 28 வயதுதான் ஆகிறது. என்னுடைய இருபதாவது வயதுவரை நான் இலங்கைத் தீவில் வாழ்ந்ததும் இன்னொரு காரணம். பிரபுக்கள் அவையிலிருப்பவர்கள் இலங்கைத் தீவை, வரைபடத்தில் கூடச் சரியாகப் பார்த்திருக்க மாட்டார்கள். இலங்கைத் தீவின் நில ஆவண வரைபடத்தை, முதன் முதலில் திருத்தமாக வரைந்தவர் என் தந்தை சேர். வில்மெட் பெரிய பிரெக்மன் தான்.

ஒல்லாந்தரை இலங்கையிலிருந்து அகற்றிய பிறகு, ஊர்காவற்துறைப் பட்டினம், யாழ்ப்பாணப் பட்டினம், மன்னார் பட்டினம், கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தறை ஆகிய கரையோரப் பிரதேசங்களெல்லாம் ஆறு வருடங்களாகக் கிழக்கிந்தியக் கம்பெனியாலேயே ஆளப்பட்டன. 1802 ஆவது வருஷம் இந்தப் பகுதிகளில் கம்பெனியாரின் அதிகாரம் நீக்கப்பட்டு, பிரித்தானிய முடிசார் அதிகாரத்தின் கீழ் இந்தப் பகுதிகள் வந்தன.

1815 ஆவது வருஷம் கண்டி ராஜ்ஜியம் எங்களது கைகளில் வீழ்ந்து, முழு இலங்கைத் தீவும் மூன்றாவது ஜோர்ச் சக்கரவர்த்தியின் ஆட்சிக்குள் வந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்பாகத்தான், எனது தந்தையின் உத்தியோகம் நிமித்தமாக எங்களது குடும்பம் மெட்ராஸிலிருந்து நீங்கி, இலங்கைத் தீவின் ஊர்காவற்துறைப் பட்டினத்தில் குடியேறியது.

ஊர்காவற்துறைப் பட்டினத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட ‘பொலிஸ் கோர்ட்’டில் நீதிபதியாகப் பணியாற்றவே என் தந்தை வில்மெட் பெரிய பிரெக்மன் பிரபு இங்கே அனுப்பட்டார். அதுவரை மெட்ராஸில் கிழக்கிந்தியக் கம்பெனியில் காணி வரி அதிகாரியாகவே தந்தை கடமையாற்றினார். கப்பலில் வரும்போதுதான், என் தந்தை பிரிட்டிஷ் தண்டனைச் சட்டக் கோவையைப் படித்துக்கொண்டு வந்தார்.

எங்களது குடும்பம் சற்றே பெரியது. எனக்குக் கீழே நான்கு தங்கைகளிருந்தார்கள். எனது தாயார் மிகவும் ஊக்கமான பெண்மணி. கையில் தவிட்டைக் கொடுத்தாலும், அதை ஊதி ஊதியே பொன்னாக மாற்றத் தெரிந்தவர். மிகவும் கஞ்சத்தனமுடையவர். பெற்ற குழந்தைகள் சாப்பிடும் ரொட்டிக்கும் வெண்ணைக்கும் கூடக் கணக்குப் பார்ப்பவர். தந்தையோ மிதமிஞ்சிக் குடிப்பவர். காலையில் எழுந்தவுடனேயே மதுவருந்திவிடுவார். ஊர்காவற்துறைப் பட்டினத்துக்கு தானே அரசன் என்பது அவரது நினைப்பாகயிருந்தது. அது ஒருவகையில் உண்மைதான்.

அந்தச் சிறு பட்டினத்தில், தேவாலயத்தை ஒட்டியிருந்த பங்களாவில் நாங்கள் குடியேறினோம். சிறிய துறைமுகத்தாலும், கடற்கோட்டையாலும் அந்தப் பட்டினம் புகழ் பெற்றிருந்தது. மாலுமிகளும், மீனவர்களும், புகையிலைக் கமக்காரர்களும் நிரம்பிய அந்தப் பட்டினத்தில்; திருடர்களுக்கும், போக்கிரிகளுக்கும், பிச்சைக்கார நாடோடிகளுக்கும் கூடக் குறைவில்லை. தென் இந்தியாவிலிருந்து குடியானவர்கள் பஞ்சம் பிழைக்க இந்தப் பட்டினத்தை நாடி வந்துகொண்டிருந்தார்கள். பட்டினத்தில் ஒவ்வொரு நாளும் குற்றங்கள் பெருகிக்கொண்டேயிருந்தன. எனது தந்தை ஓய்வு ஒழிச்சலில்லாமல் தண்டனைகளை வழங்கிக்கொண்டேயிருந்தார். அப்போது, வரி வசூலிக்கும் பொறுப்பும் என் தந்தையின் வசமே இருந்தது. வரி செலுத்தாவிட்டாலும் கடுமையான ஒறுப்புகள் உள்ளன.

நாங்கள் தங்கியிருந்த பங்களாவின் ஒருபகுதி ‘பொலிஸ் கோர்ட்’ ஆக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருநாள் காலையிலும் பங்களாவின் அகன்ற வராந்தாவில், தந்தையின் நீதி பரிபாலன தர்பார் தொடங்கிவிடும். அதையெல்லாம் பார்த்த பின்புதான், நான் தேவாலயத்தில் ஸ்ராட்டென் பாதிரியாரிடம் படிக்கச் செல்வேன். காலையில் என் தந்தையின் தர்பாரில் கண்ட காட்சிகளை, நான் பாதிரியாரிடம் லத்தீன் மொழியில் விவரித்துச் சொல்லவேண்டும் என்பது பாதிரியாரின் கட்டளை. பாதிரியார் கண்களை மூடியவாறே அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பார். அதற்குப் பின்பு, பூமிசாஸ்திரம், லத்தீன், கணக்கு ஆகிய பாடங்களை மதியம் வரை பாதிரியாரிடம் வாசிப்பேன். மதியம் நான் பங்களாவுக்குத் திரும்பி வரும்போது, பங்களா முற்றத்தில் உச்சி வெயிலின் கீழே குற்றவாளிகள் முழந்தாள்களில் நின்றிருப்பார்கள். பெண்களும் சிறுவர்களும் கூட அவ்வாறு கொதிக்கும் மணலில் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

இந்த ஊர் மக்களுக்கு வரி செலுத்துவது என்றாலே என்னவென்று தெரியாமலிருந்தது. ராயனுக்கு உரியதை ராயனுக்கும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் செலுத்துவதை இவர்கள் அறியாமலேயே இருந்தார்கள். என் தந்தை சவுக்கால் அதை அவர்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார்.

புகையிலை பயிரிட்டால் வரியுண்டு. மீன்பிடித்தாலும் வரியுண்டு. தென்னைமரம் காய்த்தாலும் காய்க்காவிட்டாலும் வருடத்துக்கு இரண்டு பணம் வரி செலுத்த வேண்டும். முயல், உடும்பு உட்பட எதை வேட்டையாடினாலும் வரியுண்டு. திருமணம், மரணம் போன்ற சடங்குகளுக்கும் வரியுண்டு. நகைகள் அணிந்தால் வரியுண்டு. இந்தத் தீவில் மக்கள் சோழிகளால் செய்த மாலைகளையும், ஆமையோட்டில் செய்யப்பட்ட ஆபரணங்களையும் அணிகிறார்கள். ஆனால், அவற்றுக்கு வரி செலுத்த மறுக்கிறார்கள். யாழ்ப்பாணப் பட்டினத்திலும், பருத்தித்துறைப் பட்டினத்திலும் முடியாட்சிக்கு வரி கொடுக்காமல் கலகம் செய்கிறார்கள். ஆனால், என் தந்தையிடம் அது பலிக்கவில்லை. தந்தைக்கு மாதத்திற்கு முந்நூறு றிக்ஸ் டொலர்கள் ஊதியம். அந்தப் பணத்தை, வரியாகவும் தண்டப்பணமாகவும் பத்தாயிரமாகப் பெருக்கி, மூன்றாவது ஜோர்ச் சக்கரவர்த்திக்கு என் தந்தை விசுவாசமாகச் செலுத்தினார்.

தென்னைமரத்திற்கு இரண்டு பணம் வரி என்று சொன்னேன். அதேபோல, அடிமைச் சான்றிதழ் ஒன்றை வழங்க, என் தந்தை மூன்று பணம் அறவிட்டார். தப்பியோடிய ஒரு கோவிய அடிமையை வன்னியில் வைத்துப் பிடித்துக் கொண்டுவந்து என் தந்தையின் முன்னே நிறுத்தினார்கள். அந்த அடிமையின் முதுகில் உடைமையாளரின் ‘கனகசபை இளைய சேதுகாவலர் முதலி’ என்ற நீண்ட பெயர் குறி சுடப்பட்டது. அந்த அடிமை எலும்பும் தோலுமாகயிருந்தான். காய்ச்சிய சூட்டுக்கோல் அவனது எலும்பில்தான் எழுதியிருக்கும். அவன் அழுத குரல் தேவாலயம் வரை கேட்டதாம். நான் அந்த அடிமையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்த போது “பணியாத மனிதன் கடவுளின் இடதுபுறம் ஒதுக்கப்படுவான், அவனைக் கடவுள் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டார், தூய்மைப்படுத்தவும் மாட்டார் ” எனச் சொல்லிக்கொண்டே ஸ்ராட்டென் பாதிரியார் தனது மார்பில் விரலால் குறியிட்டுவிட்டு, என் நெற்றியிலும் குறியிட்டார்.

இந்தப் பட்டினத்தின் மக்கள், ஆணும் பெண்ணுமாகப் பலதார மணங்களைச் சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள். அவர்களது குழந்தைகளோ சவலைக் குழந்தைகளாக காலையிலிருந்து மாலைவரை ஆடாமல் அசையாமல் மணலில் உட்கார்ந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் மலம் கழிப்பது போன்ற நிலையில் குந்தியிருந்து பனம்பழங்களைச் சப்புகிறார்கள். அநேகமான பெண்களும் ஆண்களும் இடுப்புக்கு மேலே துணிகளை அணிவதில்லை.

சிறியதொரு ஒழுக்கக்கேட்டைக் கூட என் தந்தை பொறுத்துக்கொள்ள மாட்டார். அவர் வழங்கும் கடுமையான தண்டனைகளைப் பார்க்கும்போது, ஓரளவு தைரியசாலியான என் மனதே கொஞ்சம் கலங்கிப்போகும். கைகால்களை அடித்து முறிப்பது, நூற்றுக்கணக்கான கசையடிகளைக் கொடுப்பது, தலையில் பாரமான கல்லை வைத்து முள்ளில் முழங்காலால் நடக்கவைப்பது, குதிக்கால் நரம்பை அறுத்துவிடுவது என்றெல்லாம் தண்டனைகள் அமையும். பத்து மைல்கள் தூரத்தைக் கடக்க நான்கு மணிநேரங்களை எடுத்துக்கொண்ட சோம்பேறியான ஓர் அஞ்சல்காரனுக்கு, என் தந்தை இருபது கசையடிகளை வழங்கினார். கொலைக் குற்றவாளிகளும், தேசாதிபதியின் ஆட்சியை மானங்கெடுத்திப் பேசுவோரும் கடற்கோட்டைக்கு அனுப்பப்பட்டு, அங்கே தூக்கிலிடப்பட்டார்கள்.

ஊர்காவற்துறைப் பட்டினத்திலிருந்தும், சுற்றியுள்ள சிறிய தீவுகளிலிருந்தும் போக்கிரிகளையும் சோம்பேறிகளையும் நாடோடிகளையும் திருடர்களையும் என் தந்தை கடுமையாகத் தண்டித்துத் துரத்திவிட்டார். சில குற்றவாளிகள் என் தந்தையின் கைகளுக்குத் தப்பிப்போய், கண்டி ராஜ்ஜியத்தில் ஒளிந்துகொண்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிக்குள் குற்றம் புரிந்தவர்கள் எல்லையைத் தாண்டிச் சென்று கண்டியரிடம் தஞ்சம் புகுவது மட்டுமல்லாமல், கண்டி அரசனும் கலகக்காரர்களையும் கொள்ளையர்களையும் பிரிட்டிஷ் ஆட்சிப் பரப்புக்குள் அனுப்புவித்துத் தீராத உபத்திரவம் செய்துகொண்டிருந்தான். அப்போது கண்டி ராஜா ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் நாட்கள், தேசாதிபதி ரொபெர்ட் பிரவுண்றிக் பிரபுவாலும் குடியேற்ற மந்திரியாராலும் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன.

திருடர்களே இல்லாத ஜெருசலேமாக, ஊர்காவற்துறைப் பட்டினத்தை மாற்றிவிட என் தந்தை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். ஒரு மாங்காயைத் திருடினால் கூட, திருடியவனின் முழங்கை உலக்கையால் அடித்து முறிக்கப்பட்டது. தேங்காயைத் திருடினால் முழங்கால் முறிக்கப்பட்டது. ஆனால், மகரசிங்கம் என்று அறியப்பட்ட பெயர் பெற்ற திருடன் மட்டும் என் தந்தையிடம் சிக்காமலேயே இருந்தான். இந்தப் பகுதிகளில் எங்காவது மாடுகள் திருடப்பட்டால், அது அந்தக் கள்வனின் வேலையாகவே இருந்தது.

மகரசிங்கம் என்ற அந்தத் திருடனைப் பிடித்துத் தலைகீழாகக் கட்டித் தோலை உரித்துவிட்டு, கீழே நெருப்பு மூட்டிவிடப் போவதாக என் தந்தை சொல்லிக்கொண்டிருந்தார். நான் அந்தச் செய்தியை ஸ்ராட்டென் பாதிரியாரிடம் சொன்னேன். அவர் அதைக் கண்களை மூடியவாறே கேட்டுக்கொண்டிருந்தார்.

II

“மகரசிங்கம்! எக்காரணம் கொண்டும் வங்களாப் பறங்கியிடம் நீ சிக்கிவிடக் கூடாது, உன்னை மாடாகக் கட்டித் தோலாக உரிக்கப்போவதாக அவன் பறைகிறானாம்” என்று குறிஞ்சன் என்னிடம் சிரித்தவாறே சொன்னான். உண்மையில் நான் மாடு பிடித்ததே கிடையாது. பறங்கிச் சிப்பாய்கள் திருடித் தின்னும் மாட்டுக் கன்றுகளின் கணக்கையெல்லாம் என் தலையில் சுமத்திவிட, வங்களாப் புதுப் பறங்கி திட்டமிடுகிறான்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் திருடுகிறேன். எனது தந்தையும் திருடுவார். அதற்காகச் சனங்கள் எங்களை மரியாதைக் குறைவாக நடத்தியதே கிடையாது. திருடிக் கொண்டுவரும் பொருட்களை சிலவேளைகளில் சொந்தபந்தங்களுடன் நான் பகிர்ந்துகொள்வதுமுண்டு. என்னுடைய தீவிலிருந்து கிளம்பிப்போய், ஊர்காவற்துறைப் பட்டினத்திலோ யாழ்ப்பாணப் பட்டினத்திலோதான் திருடுவேன். ஏதாவது துண்டு துணுக்குப் பொன் எப்போதாவது கிடைத்தால், அதை சாவகர்சேரியிலிருந்து வரும் மலையாள யாவாரி கோயிலான் வாங்கிக்கொள்வான்.

நல்லூர் இராசவாசல் முதலியாரின் ஆசைநாயகி நவரத்தினம்மாளிடம் பஞ்சலோகங்களாலான, நாட்டியம் ஆடும் ஓர் அம்மையின் சிலை இருப்பதாகவும், அச்சிலைக்கு ‘அரம்பை’ சிலையெனப் பெயரெனவும் மலையாளத்தான் சொன்னான். அந்தச் சிலையை எப்படியாவது திருடித் தன்னிடம் தருமாறும், கூலியாக முப்பது பணம் கொடுப்பதாகவும் அவன் சொல்லியிருந்தான். ஓரிரவில் நான் நவரத்தினம்மாளின் வீட்டுக்குள் இறங்கித் தேடியபோது, அந்தச் சிலை கிடைக்கவில்லை. வெள்ளிச் சரிகை இழைக்கப்பட்ட பச்சை நிறச் சேலையொன்றுதான் அங்கிருந்து எடுத்து வரக்கூடியதாக இருந்தது.

அந்தச் சேலையை விற்பதற்காக, வேலணை வள்ளியப்பச் செட்டியைத் தேடிப் போனேன். நான் அய்யனார் துறையில் இறங்கி நடக்கும்போது, தலைப்பாகைகள் அணிந்த உயரமான இருவர் என்னைப் பின்தொடரத் தொடங்கினார்கள். அவர்கள் இராசவாசல் முதலியாரின் ஆட்கள் என்றுதான் நினைத்தேன். அருகிலிருந்த பனங்கூடலுக்குள் நுழைந்து, மடியில் வரிந்து வைத்திருந்த சரிகைச் சேலையை, ஒரு பட்டுப்போன பனைமரப் பொந்துக்குள் மறைத்துவைத்துவிட்டு, எதிர்த்திசையால் பனங்கூடலுக்குள் நடந்துகொண்டிருந்தேன். எங்கிருந்தோ ஒரு நாய் ஓசையில்லாமல் என் மீது பாய்ந்து, என் கழுத்தைக் கவ்விக்கொண்டது. நாயின் பாரம் தாங்காமல் நான் மல்லாக்கப் பறிய விழுந்தேன். அந்த நாய் ஒரு குதிரையளவு இருந்தது. மறைந்திருந்த சிப்பாய்கள் என்னைப் பிடித்துக்கொண்டுபோய் வங்களா புதுப் பறங்கியின் முன் நிறுத்தினார்கள்.

நான் எதையெல்லாம் திருடினேன், எதையெல்லாம் திருடவில்லை எனப் பொன்னியம்மனின் பெயரால் சத்தியம் செய்வதற்குத் தயாராகவே நான் நின்றிருந்தேன். பொன்னியாச்சியின் பெயரால் நாங்கள் யாரும் பொய் சொல்லவே மாட்டோம். ஆனால், அந்தப் பறங்கி என்னிடம் எதுவுமே கேட்க முயலவில்லை. அவனின் குதிரை வண்டியுடன் நான் பத்து முழ நீள் கயிற்றில் பிணைக்கப்பட்டேன். அவனுடைய குதிரை வண்டி துறைமுகத்தை நோக்கிச் செல்ல, நான் பின்னாலேயே ஓட வேண்டியிருந்தது. வழியெல்லாம் இரண்டு சிப்பாய்கள் குதிரைச் சவுக்கால் என்னை அடித்தபடியே குதிரைகளில் வந்துகொண்டிருந்தார்கள்.

துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு முன்னால், கடற்கரை மணலில் குழியொன்றைத் தோண்டுமாறு சிப்பாய்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். நான் மண்வெட்டியால் குழியைத் தோண்டிக்கொண்டிருக்கும் போதே, என்னை அவ்வப்போது சவுக்கால் அடித்துக்கொண்டிருந்தார்கள். என் தேகம் முழுவதும் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. நெற்றியில் வடிந்த இரத்தம் பிசுபிசுத்து கண் இமைகளை ஒட்ட வைத்தது. இவர்கள் என்னை உயிரோடு புதைக்கப் போகிறார்கள். அதற்கு முன்பாக, பொன்னியாச்சியின் பெயரால் நான் சத்தியம் செய்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே குழியை வெட்டி முடித்தேன்.

வெட்டப்பட்ட குழிக்குள் என்னை நிர்வாணமாக நிற்கவைத்து மண்ணால் மூடினார்கள். என் கழுத்துவரைதான் மண்ணால் மூடப்பட்டது. தலை வெளியே தெரிந்தது. அப்போதும் தலையில் சவுக்கால் அடித்துக்கொண்டேயிருந்தார்கள். வங்களா புதுப் பறங்கி மெதுவாக நடந்து வந்து, என் தலையில் காறி உமிழ்ந்தான். அந்தக் கணத்தில் நான் பொன்னாச்சியின் பெயரால் எனக்குள் சத்தியம் செய்துகொண்டேன். நான் இங்கிருந்து சீவனோடு மீண்டால், இந்த வங்களாப் பறங்கியைப் பழி தீர்ப்பேன்.

நான்கு பகலும் இரவும் நான் அப்படியே புதைத்து வைக்கப்பட்டிருந்தேன். நாளுக்கு ஒரு தடவை சிரட்டையில் குரக்கன் கஞ்சி வைக்கப்பட்டது. நாயை விடக் கேவலமாக நான் அதை நக்கிக் குடிக்க வேண்டியிருந்தது. துறைமுகத்துக்குப் போவோரும் வருவோரும் நின்று என்னைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குறிஞ்சன் கூட்டத்தோடு கூட்டமாக நின்று என்னைப் பார்த்துவிட்டுப் போனான். என் ஆத்தை இதைக் கேள்விப்பட்டால் எப்படியெல்லாம் மருகிப்போவாள் என்பதை நினைக்கும்போது, என் கண்கள் இருண்டு என்னை மயக்கம் அழுத்தப் பார்க்கும்.

உடலெல்லாம் மரத்துப் பிணமாகிவிட்டேன். நாவும் கண்களும் மட்டும் அசைந்துகொண்டேயிருந்தன. எனது மூளை பிசகத் தொடங்கிற்று. காதுகளுக்குள் பூச்சிகள் புகுந்து, இரைந்துகொண்டே என் வயிற்றுக்குள் பறப்பதை உணர்ந்தேன். என்னைப் பார்ப்பவர்களையும், எனக்கு மாறி மாறிக் காவலுக்கு நின்ற சிப்பாய்களையும் வசையால் ஏசத் தொடங்கினேன். அப்போதெல்லாம் என் முகத்தில் சவுக்கு எழுதியது. உண்மையில் அப்போது எனக்கு அந்த அடி தேவைப்பட்டது. வலியே என்னை நனவோடு வைத்திருந்தது. இல்லாவிட்டால் செத்த மாடு போல மணலுக்குள் புதைந்திருப்பேன்.

என் தலையைக் கொத்தித் தின்றுவிடுவதற்காக, பறவைகள் என் தலைக்கு மேலேயே சுற்றிக்கொண்டிருந்தன. நான் கண்களை மூடினால் பறவைகள் தலையைத் தின்றுபோடும். அவ்வப்போது ஏதாவது ஒரு பறவை சர்ரெனக் குத்திட்டு இறங்கி என்னைக் கொத்த முயன்றது. அப்போதெல்லாம் நான் என்னையறியாமலேயே விநோதமாகக் கூச்சலிட்டேன்.

நான்காம் நாளில், சிப்பாய்கள் மணலைக் கிளறி, என்னைத் தூக்கி வெளியே எடுத்தபோது, என்னால் நிற்கவே முடியவில்லை. அங்கேயே என்னைப் போட்டுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அடுத்தகணமே குறிஞ்சன் ஓலமிட்டுக்கொண்டே ஓடி வந்தான். அவன் நான்கு நாட்களாக எங்கேயும் போகாமல், இங்கேயே மறைந்து இருந்திருக்கிறான். என் அருகே தரையில் உட்கார்ந்து, கடற்கரை மணலை வாரித் தனது தலையில் போட்டபடியே குறிஞ்சன் புலம்பி அழுதான். எனது முழுப் பலத்தையும் திரட்டி, கையை ஓங்கி அவனது கன்னத்தில் ஓர் அறை கொடுத்துவிட்டு, நாவைச் சுழற்றி முனகினேன். “அய்யோ மகரசிங்கம்! நீ ஒரு பறவையைப் போல கரைகிறாய்” எனச் சொல்லிக் குறிஞ்சன் குழறி அழுதான். நான் ஆகாசத்தைப் பார்த்தபோது, பறவைகள் சிறகுகளை விரித்தவாறு அசையாமல் காத்துக்கொண்டிருந்தன.

அடுத்த பவுர்ணமி நாளில் பழி தீர்க்க முடிவு செய்தோம். பவுர்ணமி பொன்னியம்மனுக்கு வாலாயமான நாள். முன்னிரவில் பொன்னியம்மனுக்கு விளக்கு ஏற்றிவிட்டு, அம்மனின் முன்னால் பச்சைப் பாக்குகளை வைத்து அனுமதி கேட்டோம். அம்மனின் வாக்கு சாதகமாய் உருண்டதும், என்னுடைய தீவிலிருந்து குறிஞ்சனும் நானும் கிளம்பி, பரவைக் கடலுக்குள்ளால் நடந்தோம். அப்போது கோடை காலமென்பதால் இடுப்புவரைதான் கடலிருந்தது. இறாத்தலடியில் நிலத்தில் ஏறி, அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஊர்காவற்துறைப் பட்டினத்துக்கு வந்து சேர்ந்தோம்.

குறிஞ்சன் கடந்த வாரம் முழுவதும் அந்தப் பக்கமாகச் சுற்றி, இரவு பகலாக உளவு பார்த்து வைத்திருந்தான். நம்மால் வங்களாவுக்குள் நுழையவே முடியாது. வங்காளவைச் சுற்றி நாய்களும் சிப்பாய்களும் இரவு பகலாகக் காவல் காக்கிறார்கள். வங்களாப் பறங்கியைக் கொல்வதற்கு நாங்கள் ஒரு திட்டம் வைத்திருந்தோம். வங்களாவுக்குப் பின்புறமாக, இருநூறு பாகம் தூரத்திலிருந்த கிணற்றுக்கு அருகே, தென்னங்கிடுகுகளால் மறைப்பு அமைக்கப்பட்ட கக்கூஸ் அறை இருந்தது. அந்த அறைக்கும் வங்களாவுக்கும் நடுவில் பனைகளும் தென்னைகளும் காடாக வளர்ந்திருந்தன. விடிவதற்கு முன்பே, வங்களாப் பறங்கி கையில் விளக்கை ஏந்தியவாறே, தனியாக அந்த அறைக்கு வருகிறான் என்று குறிஞ்சன் சொன்னான்.

பறங்கியை அங்கே வைத்து இருளில் மடக்கிப்போட்டு, அவனைக் குத்தினால் தானுண்டு. அதல்லாமல் வேறெந்த வழியிலும் பறங்கியை நம்மால் நெருங்கவே முடியாது. முன்னொருமுறை மலாய் கூலிச் சிப்பாய் ஒருவன் சாராய வெறியிலிருந்தபோது, அவனிடம் திருடிய, பித்தளைக் கைப்பிடி கொண்ட அருமையான கத்தி என்னிடமிருந்தது. ஒன்றரைச் சாண் நீளமுள்ள அந்தக் கத்தி இருபுறங்களிலும் கூர்மையானது. அந்தக் கத்தியை வங்களாப் பறங்கியின் நெஞ்சில் இறக்குவேன். தன்னைக் கொல்வது யாரென அந்தப் பறங்கி தெரிந்துகொண்டுதான் சாக வேண்டும்.

நாங்கள் வங்களாவுக்குப் பின்னாலிருந்த பனங்கூடலுக்குள் நுழையும் போது, வேதக் கோயிலைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது கோயிலுக்கு முன்னால் பொட்டுப் போல நெருப்பு அலைந்துகொண்டிருந்தது. நாங்கள் கொஞ்சம் நெருங்கி, பூரணை வெளிச்சத்தில் பார்த்தபோது, வேதச் சுவாமி சுருட்டுப் பிடித்துக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக இருளில் நிழல் போல நடந்துகொண்டிருந்தான். அப்போது நடுச் சாமத்திற்கு மேலேயேயிருக்கும்.

கக்கூஸ் அறைக்குப் பக்கவாட்டில் சடைத்துக் கிடந்த, மருதாணிப் புதர்களுக்குள் நானும் குறிஞ்சனும் பதுங்கிக்கொண்டோம். பறங்கியின் சாவு என் கையில் சந்திர வெளிச்சத்தில் மினுங்கிக்கொண்டிருந்தது. ஆனால், பறங்கி வருவதாகயில்லை. அப்போது முதலாவது பறவை கத்தியது.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்துவிடும், நாம் இப்போது போய்விட்டு அடுத்த பவுர்ணமிக்கு வருவோம் ” என்றான் குறிஞ்சன். பறங்கிக்கு இன்னும் முப்பது நாட்களை பொன்னியம்மன் பிச்சை போட்டிருக்கிறாள் என்றவாறு நான் நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பத் தயாரானபோது, கைவிளக்கு வெளிச்சம் எங்களை நோக்கி வந்தது.

நான் கத்தியை இறுகப் பிடித்துக்கொண்டேன். நான் ஒரு கொலையைச் செய்வேன் எனச் சில நாட்களுக்கு முன்புவரை நித்திரையிலும் நினைத்திருந்ததில்லை. ஆனால், இந்தப் பறங்கி, பொன்னி அம்மனின் பெயரால் செய்யப்படும் சத்தியத்தைக் கேட்க மறுப்பவன். என்மீது நாறும் இவனது எச்சிலை, இவனது இரத்தத்தாலேயே கழுவுவேன்.

விளக்கு வெளிச்சம் எங்களை நெருங்கியபோது, ஓங்கிய கத்தியோடு புதர் மறைவிலிருந்து பாய்ந்தேன். என்மீது பாய்ந்த குதிரையளவு நாயை விட, இரட்டிப்பு வேகத்துடன் பாய்ந்தேன். விளக்கோடு வந்த உருவம் திடுக்கிட்டு அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றது. குறிஞ்சன் அந்த உருவத்துக்குப் பின்புறமாகப் பாய்ந்து, அந்த உருவத்தின் வாயைத் தனது உள்ளங்கையால் பொத்திப் பிடித்துக்கொண்டான். அந்த உருவமோ சிறு எதிர்ப்பும் காட்டாமல் நின்றிருந்தது. அதனுடைய கையிலிருந்த விளக்கு மட்டும் இலேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. வங்களாப் புதுப் பறங்கி எனது முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓங்கிப் பிடித்த கத்தியோடு, கால்களை விரித்து வலுவாக மணலில் ஊன்றிக்கொண்டு நானும் அசையாமல் நின்றிருந்தேன். அந்த உருவம் மெதுவாக விளக்கை என் முகத்துக்கு உயர்த்தியது. அப்போதுதான் எனக்கும் அந்த உருவத்தின் முகம் புலப்பட்டது. தோள்வரை பொன்னிற முடியுடனிருந்த அந்த உருவம், நான் தேடி வந்த வங்களாப் பறங்கியல்ல. இடுப்பில் மட்டும் சிறு துணியணிந்து நின்றிருந்த அந்த உருவத்தின் பச்சை நிறக் கண்கள் என்னை அச்சத்தோடு பார்த்தன. நான் வலது கையால் கத்தியை அந்த உருவத்தின் கழுத்தில் வைத்தவாறே, இடது கையால் அந்த உருவத்தின் இடுப்பிலிருந்த துணியைப் பிடுங்கி, அந்த உருவத்தின் வாயில் திணித்துவிட்டு, கைவிளக்கை ஊதி அணைத்தேன்.

நாங்கள் சிறைப் பிடித்திருப்பது பறங்கியின் பத்து வயது மகனை என்று குறிஞ்சன் அடையாளம் சொன்னான். விடிந்துகொண்டே வருகிறது. வங்களாவில் நாய்கள் குரைக்கும் சத்தமும் கேட்கிறது. பறங்கிச் சிறுவனை இழுத்துக்கொண்டு பனங்கூடலுக்குள் மறைந்தோம். இப்போது பணயத்தை என்னுடைய தீவுக்கு அழைத்துக்கொண்டு போக முடியாது. வழியில் நிச்சயமாக யாருடைய பார்வையிலாவது பட்டுவிடுவோம். மகனைக் காணவில்லை என்பதை அறிந்தவுடன் வங்களாப் பறங்கி பைத்தியமாகிவிடுவான். அவனது நாய்களும் பைத்தியங்களாகிவிடும். அவை எங்களைத் தேடி இந்த நிலம் முழுவதும் திரியும். பறங்கியின் மகனின் வாசனை, தடமாக எங்களைக் காட்டிக்கொடுக்கும். கடலைக் கடப்பதே புத்தியான வழி.

“இங்கிருந்து தம்பாட்டிக்குப் போய்விட்டால், கரையில் கிடக்கும் ஏதாவதொரு வத்தையைத் தள்ளிக்கொண்டு பரவைக் கடலைத் தாண்டி, களபூமியில் இருக்கும் எனது அக்காவிடம் போய்விடலாம்” என்று குறிஞ்சன் யோசனை சொன்னான். வேறெதையும் யோசிப்பதற்கு நேரமில்லை. முற்றாக விடிந்து, வெளிச்சம் பரவுவதற்குள் நாங்கள் இந்தச் சிறுவனை மறைத்துவிட வேண்டும்.

பனங்கூடல்களிடையே பதுங்கி ஓட்டமும் நடையுமாகப் போனோம். எனது தலையில் சுற்றியிருந்த துணியை அவிழ்த்து, சிறுவனின் கைகளைக் கட்டியிருந்தேன். சிறுவன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து போதம் தெளியவில்லை. தூக்கத்தில் ஏதோ கனவு வந்திருப்பதாகத்தான் அவன் நினைக்கிறான் போலிருக்கிறது. சிறுவனின் கையில் கட்டப்பட்டிருந்த துணியைப் பற்றி இழுத்தவாறே குறிஞ்சன் முன்னால் போக, நான் சிறுவனுக்குப் பின்னாக நடந்தேன்.

காணாமற்போன தனது மகனுக்காக, எத்தனை பேர்களை வங்களாப் பறங்கி பழிவாங்குவானோ தெரியாது. எத்தனை உயிர்களைப் பதில் பணயமாகப் பிடிப்பானோ தெரியாது. இந்தச் சிறுவனின் தடமே தெரியாமல் நான் மறைத்துவிட வேண்டும். அது வங்களாப் பறங்கியைக் குழப்பிப்போடும், வாழ்க்கை முழுவதும் அவனைத் தீராத் துன்பத்தில் வீழ்த்தும். ஆனால், இந்தப் பொன்னிறத் தோலையும் பச்சைக் கண்களையும் நான் எங்கேதான் மறைத்துவைப்பது? எத்தனை நாள்தான் மறைக்க முடியும்? எரிந்துகொண்டிருக்கும் விளக்கைப் பன்னாடையால் மூடுவது நடக்கக் கூடிய காரியமா?

களபூமிக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது விடிந்துவிட்டது. சிறுவனின் வாயிலிருந்த துணியை உருவி, அவனது இடுப்பில் கட்டிவிட்டோம். துணியை உருவியதும் அந்தச் சிறுவன் திக்கித் திணறியவாறு பேசினான். அப்போது குறிஞ்சன் இளித்துக்கொண்டே சொன்னான்:

“பறவையைப் போல கத்துகிறான் பறங்கி!”

குறிஞ்சனின் அக்காக் கிழவி கைம்பெண். தனியாகத்தான் அங்கே சீவித்துக்கொண்டிருந்தாள். தப்புத்தண்ணிக்குள் குறுநண்டும் மட்டியும் அமர்த்தி வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தாள். எங்களைத் திடீரெனப் பார்த்ததும், அவளுக்கு என்ன ஏதென்று புரியவில்லை. நாங்கள் கடலிலிருந்து ஏதோவொரு அதிசய உயிரினத்தைப் பிடித்து வந்திருப்பதாகவே அவள் நினைத்தாள். நாங்கள் சிறுவனைக் குடிசைக்குள் உட்காரவைத்து, இறால் பிடிக்கும் பிரம்புக் கூடையால் மூடிவிட்டோம். அவன் அந்தக் கூடைக்குள்ளிருந்து, பறவையைப் போல கீச்சுக் கீச்சென்று அவ்வப்போது சத்தமெழுப்பினான். நீரைத் தவிர வேறெதையும் அருந்தாமலிருந்தான்.

நாங்கள் பறங்கிச் சிறுவனை இங்கே கொண்டு வந்ததை, பொன்னியம்மனும் பனங்காடுகளும் எவரின் கண்களிலும் காட்டிக் கொடுக்கவில்லை. குறிஞ்சனின் அக்காவின் குடிசை, மணற்திட்டிகளுக்கு நடுவே பள்ளத்தில் தனியே இருந்தது. மணற்திட்டிகள் உயரமான கோட்டைச் சுவர்களைப் போல அந்தக் குடிசையைப் பாதுகாத்தன.

உச்சிப் பொழுதானபோது, அந்தச் சிறுவன் இழுத்து இழுத்து மூச்சுவிடுவது போலிருந்தது. “தேவனுக்கு வெப்பம் தாங்க முடியவில்லைப் போலிருக்கிறது” எனச் சொல்லிவிட்டு, கிழவி கூடையைத் திறந்துவிட்டாள். அந்தச் சிறுவன் எழுந்து நடந்துவந்து குடிசைக்கு வெளியே பார்த்தான். குடிசை முற்றத்தில் புங்கை மரமொன்று சடைத்து நின்றது. அவன் நடந்துபோய் அந்த மரத்தின் வேரில் உட்கார்ந்துகொண்டான்.

நான் இப்போதுதான் அந்தப் பறங்கிச் சிறுவனை நிதானித்துப் பார்க்கிறேன். உடலும் தோள்களில் விழுந்த முடியும் பொன்னிறம். வயதில் சிறியவனானாலும் நல்ல வளர்த்தி. மெல்லிய தேகம். அவனது சருமம் உடும்பின் இறைச்சிபோல மினுங்கிக்கொண்டிருந்தது. பச்சை நிறக் கண்கள் கிறங்கியிருந்தன. உதடுகள் இரத்தச் சிவப்பு. சிறிய இடுப்பு. ஒடுங்கிய பாதங்கள்.

அக்காக் கிழவி ‘தேவன்’ என இவனைச் சொன்னபோது, என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. நான் குறிஞ்சனை ஒரு செய்தியோடு மலையாளத்தானிடம் அனுப்பிவைத்தேன். ‘கையில் அரம்பை உண்டு’ என்ற செய்தியைத் தவிர வேறெதுவும் மலையாளத்தானிடம் பேசக் கூடாது எனக் குறிஞ்சனிடம் வழிக்குவழி சொல்லி அனுப்பினேன்.

உச்சிவெயில் இறங்க, பறங்கிச் சிறுவன் பசியைப் பொறுக்க முடியால் கொடுத்ததை எல்லாம் தின்றான். அதன் பின்பு மர நிழலிலேயே உறங்கினான். அவன் இங்கிருந்து தப்பி ஓடுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பொத்திப் பொத்தி இவனை வளர்த்திருக்கிறார்கள். கரையில் ஒதுங்கிய வெண்சங்கு போல அசையாமல் கிடந்தான்.

அடுத்தநாள் இரவே, மலையாளத்தான் என்னைத் தேடி வந்துவிட்டான். “எங்கே அந்தச் சிலை?” எனப் பரபரத்தான். நான் அவனைக் குடிசைக்குள் அழைத்துச் சென்று, விளக்கு வெளிச்சத்தில் பறங்கிச் சிறுவனைக் காண்பித்தேன். அந்தச் சுடரின் ஒளியில் சிறுவனின் முகம் பஞ்சலோகச் சிலை போலத்தான் ஒளிர்ந்தது. மலையாளத்தான் மயங்கி விழாத குறைதான்.

அந்த இரவில், கிழவியின் குடிசை முற்றத்தில் நானும் குறிஞ்சனும் மலையாளத்தானுமாக உட்கார்ந்திருந்து நீண்ட நேரமாக ஆலோசித்தோம். சிறுவனை கண்டி ராஜ்ஜியத்துக்குக் கொண்டுபோய், அடிமையாக கொழுத்த பணத்துக்கு விற்றுவிடலாம் என்று மலையாளத்தான் ஆலோசனை சொன்னான். அது நல்ல யோசனைதான். ஆனால், இங்கிருந்து சிறுவனை எப்படி கண்டிவரை கொண்டு போவது? ஒளியை எப்படி மறைத்து எடுத்துச் செல்வது?

“நாங்கள் மலைநாடு வரை போகத் தேவையில்லை. வன்னியில் ‘கப்பாச்சி’ கிராமத்தைக் கடந்துவிட்டால், கண்டி ராஜ்ஜியத்தின் எல்லை வந்துவிடும். எல்லைப்புறத்திலேயே விற்றுவிடலாம்” என்றான் மலையாளத்தான். கிடைக்கும் பணத்தில் தனக்குப் பாதி, எனக்கும் குறிஞ்சனுக்கும் பாதி என்றான். “எல்லாச் சாலைகளிலும் பறங்கிகள் காவல் போட்டிருப்பார்களே, கப்பாச்சி வரை சரக்கை எப்படிக் கொண்டு போவது? கடல் வழியாகப் போக முடியுமா?” என்று கேட்டேன்.

“அது என்னுடைய பொறுப்பு” என்றான் மலையாளத்தான். அவன் வானத்தால் கூடப் பறப்பான்.

III

புஸ்ஸவல்ல கெலிகொட என்பது எனது பெயரானாலும் ‘ரட்ட மகாத்யோ’ என்றே என்னைச் சனங்கள் அழைத்தார்கள். வன்னி – கண்டி ராஜ்ஜிய எல்லையிலுள்ள இந்தப் பெரிய கிராமத்துக்கும், சுற்றியுள்ள எட்டுப் பத்துக் கிராமங்களுக்கும், என்னுடைய அறுபது வயதுவரை நானே பெரிய திஸாவையின் உதவி அதிகாரியாக இருந்தேன். வயது மூப்பால்தான் என்னுடைய பதவியை பெரிய திஸாவ ரத்துச் செய்தான். நான் கண்டிப் பிரதானிகளுக்கு எழுதிப்போட்டும், பதவி எனக்குத் திரும்பக் கிடைக்கவேயில்லை. என்னுடைய பதவி கழற்றப்பட்டதும், நான் வாயில் இரத்தினமுள்ள செத்த பாம்பு ஆகிவிட்டேன்.

என்னுடைய பதவிக் காலம் முழுவதும், நான் மக்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவே நடந்துகொண்டேன். அதனாலேயே எனக்கு வம்ச விருத்தி இல்லையென்று என் காதுபடவே சிலர் பழித்ததுண்டு. சென்ற வருடம்தான் என்னுடைய இரண்டு மனைவிகளும் ஒருவர் பின் ஒருவராக இறந்துபோனார்கள். என் வீட்டின் எல்லா அறைகளிலும் செல்வம் பரவிக்கிடந்தாலும், அதைக் கட்டியாள ஒரு பெண்ணில்லை. ஞாபகக் குறைபாடுள்ள இந்த முதியவனிடம் வேலைக்காரர்கள் முடிந்தவரை திருடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வீட்டுக்குத் தகுதியான ஒரு ராணியைக் கொண்டுவர வேண்டும் என நான் எண்ணிக்கொண்டிருந்த போதுதான், எனக்கு அந்தச் செய்தி கிடைத்தது.

மலபார் வியாபாரி ஒருவன், தேவதை போன்ற கன்னிப் பெண்ணொருத்தியை, அடிமையாக விற்பதற்காக இங்கே கொண்டுவந்திருக்கிறானாம். இங்கே நல்ல விலை அமையாவிட்டால், மதவாச்சிக்கோ அனுராதபுரத்துக்கோ கன்னியைக் கொண்டு போய்விடுவானாம். இன்று ஓரிரவு மட்டும்தான் வியாபாரி இந்தக் கிராமத்தில் இருப்பானாம்.

மலபார் வியாபாரி, நெலும் விகாரைக்கு முன்னால் ஒரு சிறிய சந்தையையே கூட்டிவிட்டான். மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு, கன்னியைப் பார்க்கக் கூடியிருந்தார்கள். அந்தப் பெண்ணின் வசீகரத்தைப் பார்த்துச் சனங்கள் பேச்சிழந்து நின்றபோது, நான் அங்கே போய்ச் சேர்ந்தேன்.

தரையில் சாயப் பாய் விரிக்கப்பட்டு, அதிலே அந்தப் பெண் உட்கார வைக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு இருபுறமும் கருகருவென்ற தமிழர்கள் இருவர் காவலாளிகளைப் போல நின்றிருந்தார்கள். இருளுக்குள் அவர்களது பற்களும் முட்டைக் கண்களும் மட்டுமே தெரிந்தன. மலபார் வியாபாரி ஒரு கல்லில் அமர்ந்திருந்து புகையிலை கசக்கிக்கொண்டிருந்தான்.

நான் அந்தப் பெண்ணை நெருங்கிச் சென்று பார்த்தேன். ஒரு தமிழன் பெண்ணின் முகத்தை நிமிர்த்தி, தீபத்தின் வெளிச்சத்தில் பிடித்தான். பொன்னால் வார்க்கப்பட்ட தேவகன்னிகை என் முன்னிருந்தாள் என்பதைத் தவிர என்னிடம் அதை விபரிக்கச் சொற்கள் கிடையாது. அவளது தலையையும் முகத்தையும் உள்ளங்கைகளையும் ஒடுங்கிய பாதங்களையும் தவிர, மற்றப் பாகங்கள் அனைத்தையும் ஒரு பச்சை நிறச் சேலை மூடியிருந்தது. சேலையில் இழைக்கப்பட்டிருந்த வெள்ளிச் சரிகைகள், அந்தப் பெண்ணில் விண்மீன்கள் போல ஒளிர்ந்துகொண்டிருந்தன.

பெண்ணின் விலை அறுநூறு லறின்கள் என்று மலபார் வியாபாரி உறுதியாகச் சொல்லிவிட்டான். இந்தக் கிராமத்தில் அவ்வளவு பணம் யாரிடமும் இருக்காது என்ற ஏளனம் அவனது புகையிலை அதக்கும் வாயிலிருந்தது. “வரவேண்டும் ரட்ட மகாத்யோ… இவள் உங்களுக்கானவள்” என வியாபாரி சொன்னபோது, அங்கே கூடி நின்ற மக்களிடமிருந்து “ஆம்…ஆம்” என ஆர்ப்பரிப்பு எழுந்தது. என் பதவியோடு சேர்த்துக் காணாமற்போயிருந்த என் கவுரவம், இந்தப் பெண் மூலம் எனக்குத் திரும்பக் கிடைத்துவிடும் போலிருந்தது.

திடீரென வியாபாரி எழுந்து தமிழில் ஏதோ சொல்ல, பெண்ணுக்கு அருகில் நின்றிருந்த ஒரு தமிழன் பெண்ணை எழுந்திருக்குமாறு சைகை காட்ட, அடுத்த தமிழன் பாயைச் சுருட்டத் தொடங்கினான். “செல்வச் சீமானும், ஆயிரம் அடிமைகளை வைத்திருக்கவும் தகுதியுள்ளவருமான ரட்ட மகாத்யோவே இந்த பச்சைக் கண் அழகியைக் கொள்ளாவிட்டால், நான் என்னதான் செய்வது! இந்த அரம்பைக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான். மலைநாட்டில் யாராவது முரட்டு திஸாவையிடம் இவள் அடிமையாகி வாழ்க்கை முழுவதும் துன்பப்படப் போகிறாள். ரட்ட மகாத்யோவுக்கு வேண்டுமானால், இவளின் துணியை முழுவதுமாக அவிழ்த்துக் காட்டட்டுமா? அப்போதாவது உங்களது தயாள மனம் இரங்குமா?” என அந்த வியாபாரி என்னைப் பார்த்துக் கேட்டான்.

எனது கவுரவ கெதறவுக்கு வரப் போகும் பெண்ணை, இந்த இழிசனங்கள் முன்னே துணியவிழ்ப்பதா என்ன! மலபார் வியாபாரியிடம் பேரம் பேசவும் என் கவுரவம் இடம் கொடுக்கவில்லை. உண்மையில் இந்தத் தேவகன்னிகை ஆறாயிரம் பொன்னுக்கும் மதிப்பானவளே. சில வெளிநாட்டு அடிமைகள் கண்டி மலைநாட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இந்தப் பிரதேசத்திலே இதுவரை திஸாவை கூட இப்படியொருத்தியை வைத்திருந்தது கிடையாது. தொலைந்துபோன கவுரவம் தேடி வந்து, என் முன்னே தெய்வச்சிலையாக நிற்கிறது. நான் அந்த இடத்திலேயே வியாபாரத்தை முடித்துவிட்டு, மாட்டுவண்டியில் ஏறி அமர்ந்துகொண்டேன். எனது வண்டிக்குப் பின்னே, தமிழர்கள் அடிமையை நடத்திக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

கிராம அதிகாரியை அழைத்துவர ஆள் அனுப்பினேன். அவன் என் வீட்டுக்கு வாயைப் பிளந்துகொண்டு வந்தான். “ரட்ட மகாத்யோ புத்தரின் கருணையால் எப்போதுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றான். அடிமைச் சான்றிதழ் எழுதிக் கொடுத்தவிட்டு, அரை லொறின் நாணயம் வாங்கிக்கொண்டு போனான். பணத்துக்காக மலபார்காரன் துடித்துக்கொண்டு நின்றான். இந்தக் கறாரான வியாபாரக் குணம்தான், நாட்டின் கால்வாசி கறுவாத் தோட்டங்களும், முக்கால்வாசிக் கள்ளுக்கடைகளும் இவர்களது கையில் வரக் காரணமாகயிருக்கிறது. அறுநூறு லொறின்களை பெற்றுக்கொண்ட மறுகணமே, மலபார் வியாபாரியும் தமிழர்களும் அவசர அவசரமாகப் புறப்பட்டுவிட்டார்கள். புறப்படும்போது, அந்த வியாபாரி என் காதருகே வந்து இரகசியமாகச் சொன்னான்:

“ரட்ட மகாத்யோ பெரிய மனது பண்ணி இரண்டு நாட்களுக்குப் பொறுமை காக்க வேண்டும், அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது. அவள் இப்போது உங்களுக்கு உரித்தான நிலம். நிதானமாக உழுது விளைவித்துக்கொள்ளுங்கள்.”

அப்போது வீட்டில் முதிய வேலைக்காரன் திமிது மட்டுமே இருந்தான். திமிது அந்தத் தேவகன்னிகையை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறத் தாழ்வாரத்துக்குப் போனான். காலையில் நான் துயிலெழும் போது, வேலைக்காரி சீவாலி என் காலருகிலேயே உட்கார்ந்திருந்தாள். நான் எழுந்ததும், அவள் தனது வாயைக் கையால் பொத்தியவாறே “மோசம் போய்விட்டீர்கள் ரட்ட மகாத்யோ” என்று இரகசியக் குரலில் சொன்னாள். மலபார் வியாபாரியும் தமிழர்களும் இப்போது எல்லையைக் கடந்து வன்னிக்குள் புகுந்திருப்பார்கள்.

ரட்ட மகாத்யோ தன்னுடைய தள்ளாத வயதில், ஒரு பறங்கிப் பையனை, பெண் என நம்பி வாங்கி ஏமாந்திருக்கிறான் எனத் தெரிந்தால், இந்தக் கண்டி ராஜ்ஜியமே ஊளையிட்டுச் சிரிக்காதா? இதைப் போலொரு அவமானம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லையே! ஒரு நாயை ஆட்டுத் தோல் போர்த்திச் சந்தையில் விற்ற கதையை வேடிக்கையாகச் சொல்வார்கள். இப்போது நானே பரிகாசத்துக்குரியவனாக ஆகிவிட்டேனே. நான் ஏமாந்தது யாருக்குமே தெரியக் கூடாது!

இரவுதான் அவசரப்பட்டு மதியீனமாக நடந்துகொண்டேன். பகலிலும் அதைச் செய்யக் கூடாது. நான் நிதானமாக யோசித்தேன். ஊர் மக்களின் வாயிலிருந்து எப்படித் தப்பிப்பது என மண்டையைப் போட்டுக் குழப்பினேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். நான் வாங்கிய அடிமை தேவகன்னிகையாகவே இருக்கட்டும். அந்தத் தேவகன்னிகை ஆண் என்ற உண்மை இந்த வேலைக்காரியோடும் என்னோடும் மட்டுமே இருக்கட்டும். அந்தக் கணத்திலிருந்து, இந்த வேலைக்காரி சீவாலியைத் தவிர, மற்றைய வேலைக்காரர்கள் அனைவரையும் வீட்டு வேலைக்கு வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். அவர்களை வயலில் வேலை செய்யுமாறு உத்தரவிட்டேன்.

இந்தப் பறங்கிப் பையன் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருந்தான். மிகவும் பணிவாக இருந்ததோடு மட்டுமல்லாமல், சிங்களச் சொற்களையும் விரைவிலேயே பேசத் தொடங்கினான். என்னுடைய அழகிய அடிமையைப் பார்ப்பதற்காக, தூரத்து ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்தபோது, வேலைக்காரி சீவாலி சிங்கள முறையில் அவனுக்குச் சேலை அணிவித்து, பூக்களால் அலங்கரித்துவிட்டாள். அந்தச் சிறுவனின் நடையும் அசைவும் அசல் பெண்ணைப் போலவேயிருந்தன. அவன் இப்போது சிரிக்கக் கூடத் தொடங்கிவிட்டான். தேவகன்னிகையின் சிரிப்பது.

இந்த நாடகத்தை அதிக நாட்களுக்கு நடத்த முடியாது. பையனின் ஆணுறுப்பை அறுத்துவிட்டால் என்னவென்று கூட நான் யோசித்தேன். கண்டி அரண்மனையில் இப்படியாகக் காயடிக்கப்பட்ட அடிமைச் சிறுவர்கள் உள்ளார்கள் எனக் கேள்விப்பட்டிருந்தேன். காயடிக்கும் மனிதன் ஒருவனை நான் இரகசியமாகத் தேடிக்கொண்டிருந்த போதுதான், கண்டி அரசன் காட்டுக் கொடிகளால் பிணைக்கப்பட்டு, பறங்கிப் படையால் சிறைப்பிடிக்கப்பட்டான் என்ற சேதி வந்தது.

பறங்கிப் படைகள் வன்னி எல்லையைத் தாண்டி, கண்டி ராஜ்ஜியத்துக்குள் இரவோடு இரவாகப் புகுந்துவிட்டன. காலையில் என் வீட்டின் முன்னால் வந்து நின்ற குதிரையில், ஏழடி உயரப் பறங்கி துப்பாக்கியோடு அமர்ந்திருந்தான். அவன் துப்பாக்கியை என் மார்புக்குக் குறி வைத்தபடியே “வில்மெட் நோர்மென்” என்று அலறியபோது, பறங்கிச் சிறுவன் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டு, தேவகன்னிகை போல நடந்துவந்து, என்னருகே தலையைக் குனிந்தவாறு நின்றான்.

IV

என் கணவர் சேர். வில்மெட் நோர்மன், இரவு ஏழு மணியளவில் ‘எஸ்மெரெல்டா’ என்று என்னை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோதே, அவரது மனநிலை உற்சாகம் குன்றியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அவரது கையில் ‘த ஸ்டாண்டர்ட்’ மாலைப் பத்திரிகை சுருட்டப்பட்டிருந்தது. பத்திரிகையை மேசையில் போட்டுவிட்டு, எதுவும் பேசாமலேயே மாடிக்குச் சென்றுவிட்டார். நான் குழந்தைகளைத் தூங்கவைக்கும் முயற்சியிலிருந்தேன். எட்டு மணிக்கு, கணவர் உணவருந்தக் கீழே வருவார். சமையற்காரி இப்போதே உணவு மேசையைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டாள்.

மூன்றாண்டுகளுக்கு முன்பான இளவேனிற் காலத்தில் எங்களது காதல் திருமணம் நடந்தது. சாதாரண குடிப் பின்னணியிலிருந்து வந்த என்னை மருமகளாக்கிக்கொள்ள கணவரின் குடும்பம் சம்மதிக்கவேயில்லை. என் கணவர் என்னிடம் கொண்ட அசைக்க முடியாத காதலாலும் இரக்கத்தாலுமே எங்களின் திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான அடுத்த மாதமே என் கணவருக்கு ‘சேர்’ பட்டம் வழங்கப்பட்டது. பினாங்குத் தீவில், அய்ந்து வருடங்கள் பிரிட்டிஷ் முடியாட்சிக்கு ஆற்றிய பணிகளுக்காகவே, இந்தப் பட்டம் இளம் வயதிலேயே என் கணவரை வந்தடைந்தது.

இவர் இங்கிலாந்து திரும்பி, கிறிஸ்தவ அரசியல் மன்றத்தில் செயற்படத் தொடங்கிய போதுதான் என்னைச் சந்தித்தார். அன்றிலிருந்து என்னுடைய வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாகவே அமைந்துவிட்டது. கணவரால் வயிற்றில் கனியாகிய இரண்டு குழந்தைச் செல்வங்களும் எனக்கு நித்தமும் அற்புதங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

என் கணவர் தன்னைக் குறித்த எந்தச் செய்தியையும் என்னிடம் மறைத்ததில்லை. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நான் அறிந்திருக்கிறேன். அவர் எவ்வளவுக்கு உண்மையானவரோ, இனிமையானவரோ அந்தளவுக்கு அடக்கமான குணமுடையவரும் கூட. வேலைக்காரர்களிடமோ, குதிரை வண்டிச் சாரதியிடமோ அவர் கடிந்து பேசி நான் பார்த்ததில்லை. நான் அவர் முன்னே மண்டியிடவோ, பணிவான சொற்களைப் பேசவோ அவர் என்னை அனுமதித்ததே கிடையாது. “ஆண் மண்ணால் படைக்கப்பட்டவன், பெண் எலும்பால் படைக்கப்பட்டவள்” என்பார்.

குழந்தைகள் உறங்கியதும், நான் மாலைப் பத்திரிகையை விரித்தேன். முதற் பக்கத்திலேயே நாடாளுமன்றத் தீர்மானம் குறித்த செய்தியிருந்தது. நான் குறிப்பிட்ட ஒரு பகுதியைத் திரும்பத் திரும்பப் படித்தேன். என்னால் அதை அவ்வளவு இலகுவாக நம்ப முடியவில்லை. இலங்கைத் தீவில் அடிமைமுறையைத் தொடர வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியிருந்தது. என் கணவர் சேர்.வில்மெட் நோர்மென் அடிமை முறைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

எட்டு மணியாகியும் என் கணவர் கீழே வராமல் மாடியிலேயே இருந்ததால், நான் மாடிக்குச் சென்றேன். அவரிடம் பேச வேண்டிய சொற்களை என் மனதில் உருப்போட்டவாறே போனேன். சொற்களை மினுக்கி முத்துகளைப் போல அவர் முன்னே வைப்பேன்.

அவர் உடைகளைக் கூட மாற்றாமல், படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அடக்கமான புன்னகையை வெளிப்படுத்தினார்.

“பத்திரிகையில் செய்தி படித்தேன். வெற்றி பெற்ற என் பிரபுவுக்கு வாழ்த்துகள்” என்று நானும் அடக்கமான குரலில் சொன்னேன்.

என் கணவர் கண்களை இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு மெதுவாகச் சொன்னார்:

“துன்ப ஞாபகங்களின் வழியாகவோ அல்லது இன்ப ஞாபகங்களின் வழியாகவோ நாங்கள் பால்ய காலத்தைச் சென்றடையலாம்…ஆனால், சென்றடையும் அந்தக் காலம் எப்போதும் இனிமையானதாகவே இருக்கிறது இல்லையா எஸ்மெரெல்டா!”

நான் கண்களை உயர்த்தி, படுக்கையறை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சலோகங்களாலான நடன மங்கை சிலையைப் பார்த்தேன்.

(‘ஏகலைவன்’ சனவரி 2021 இதழில் வெளியானது)

1 thought on “அரம்பை

  1. மேற்க்கத்தைய வரலாறு முழுமையும் நாவலாசிரியர்கள் அவர்களது சமூக , அரசியல் கருத்துக்களை ஒரு புறநிலை உண்மையுடன் எழுதுவது வழக்கம். உதாரணமாக Charles Dickens தனது Oliver Twist இல் அன்றைய பிரித்தானியாவின் ஏழைகளின் வாழ்க்கையினை மையமாக எழுதியிருந்தார். அந்த எழுத்தில் அவர் பிரித்தானிய அன்றைய ஆட்சிக்கு எதிரான அவரது அரசியலை மறைக்கவில்லை.
    சோபாசக்தியின் பெண்ணியம், தலித்தியம், இலக்கிய சித்தாந்தம் இன்னும் பல வாதங்கள் இன்றைய சமுதாய அமைப்பின் பெரும்பான்மையான மனிதர்களின் பிரச்சினைகளுடன் தொடர்பில்லாதவை. ஒரு நூறு ஐரோப்பாவில் வாழும் ஒரு மட்ட வசதி கொண்ட “இலக்கிய” நிபுணர்கள் தங்களுக்குள் கூட்டம் போட்டு ஆர் நூறு வீதம் சுத்தமான தலித்திய வாதி, பெண்ணியவாதி அல்லது ஏதோவொரு வாதி என்று சமூக வலைத்தளங்களில் விடும் புளிச்சல் ஏவறைகள் சாதாரண மனிதர்களினால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அது அவர்களுக்கு தேவையும் இல்லை.
    சோபாசக்தி இந்த புளிச்சல் ஏவறை விடுவதில் ஒரு நிபுணத்துவம் பெற்றதுடன் இந்த கும்பல்களில் ஒரு கன்னையின் அரசன். அப்படி இருந்தும் சோபாசக்தியின் கதைகளில் சமூகம் தொடர்பான ஒரு நேர்மை இருக்கின்றது. இதுவும் புதிதல்ல இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *