இலக்கியச் சந்திப்பும் இயேசுக் கிறிஸ்துவும்

கட்டுரைகள்

இலண்டனில் நடந்து முடிந்த 40வது இலக்கியச் சந்திப்பைக் குறித்து ஏப்ரல் 9ம் தேதிதேசம் நெட்வெளியிட்டிருந்த கட்டுரையின் ஒரு பகுதி இவ்வாறிருந்தது:

இந்த இலக்கியச் சந்திப்பில் நூலகவியலாளர் என். செல்வராஜாவின் நூற்றுக்கணக்கான இலக்கிய மற்றும் அரசியல் நூல்களை காட்சிப்படுத்த அனுமதிக்காமை, ஏற்பாட்டுக் குழு மிக மோசமான இலக்கிய அரசியல் தடையை மேற்கொள்வதாகவே உணர வேண்டியுள்ளது.

இலக்கிய அரசியல் தேடலுக்கு விருந்தளிக்க வேண்டிய இலக்கியச் சந்திப்பு அதற்கு வழங்கிய காரணம் அவர்களின் குறுகிய பார்வையை வெளிப்படுத்தி நிற்கிறது. இலக்கியச் சந்திப்பின் நீண்டகாலச் செயற்பாட்டாளரான பெளசர் நூல்களின் காட்சிப்படுத்தலையும் விற்பனையையும் மேற்கொள்வதால் இன்னுமொருவருக்கு வாய்ப்பு அளிக்க முடியாதாம்.”

தேசம் நெட்டின் இச்செய்தியை ஏப்ரல் 17ல் நட்சத்திரன் செவ்விந்தியன் தனது முகநூலிலும் பதிவிட்டிருந்தார். என்னால் இந்தச் செய்தியை உடனடியாக உண்மையென நம்ப முடியாமலிருந்தது. எனவே நான் 23ம் தேதி நூலகர் செல்வராஜாவிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி தேசம் நெட்டில் வெளியான செய்தியின் நம்பகத்தன்மையை அவரால் உறுதிப்படுத்த முடியுமா எனக் கேட்டிருந்தேன். சிலமணி நேரங்களிலேயே அவரிடமிருந்து மின்னுஞ்சல் வழியே எனக்குப் பதில் கிடைத்தது. கீழே வருவது அவரது மின்னஞ்சல்:

அன்புள்ள ஷோபாசக்தி,

நடந்தது உண்மையே. அதற்கு முன்னர் ஒரு தகவல். இலக்கியச் சந்திப்புக்களில் முன்னர் நான் பங்கு பற்றியவன் அல்ல. எனது நூல்தேட்டப் பணி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கின்றது. எந்தவித அரசியல் குழுநிலை ஈடுபாடும் அற்றநிலையில் எல்லாக் கருத்துக்களும் மதிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை விதியுடன் தனிப்பாதையில் இயங்குவது நூல்தேட்டப்பணி. அதனை இலக்கியச் சந்திப்புக்காரர் (நான் தொடர்புகொண்டவர்கள் கிருஷ்ணராஜாவும் பௌசரும் மட்டுமே) இருவரும் நன்கறிவர்.

என்னுடன் தொடர்புகொள்பவர்கள் நூல்தேட்டத்தில் நான் குறிப்பிடும் நூல்களை எங்கு எடுக்கலாம் என்ற கேள்வியை அடிக்கடி என்னிடம் கேட்டுவந்தார்கள். அதே வேளையில் லண்டனிலும் சுற்றுப் புறங்களிலும் ஈழத்தவரின் நூல்களைப் பெறமுடியாத நிலை உள்ளது. வாசிப்புப் பழக்கம் அருகிவருகிறது என்று மேடைகளிலும் வெற்றுப் பேச்சொலி எழுந்தவண்ணம் இருந்தன. இந்நிலையிலேயே ஈழத்துப் புத்தகச் சந்தை என்றொரு புதிய திட்டத்தை ஈழத்துப் பதிப்பகங்கள் சிலவற்றுடன் சேர்ந்து நான் அறிமுகப்படுத்தி அண்மைக்கால நூல்களை இலங்கையிலிருந்து தருவித்து அவற்றை மலிவு விலையில் (இலங்கை விலையுடன் இங்கு எடுக்கும் செலவு சேர்த்து) விநியோகித்து வரத்தொடங்கினேன். இதுவரை ஆறு புத்தகச்சந்தைகள் இவ்வாறு நடந்துவிட்டன். ஒன்றிற்கு பௌசரும் ஒரு நாள் வந்திருந்தார். லாபநோக்கமற்ற இச்சந்தையில் தனிப்பட்ட எழுத்தாளர்களும் இணைந்து வருகிறார்கள். இது எனது பின்னணி. இனி நீங்கள் கேட்ட விடயத்துக்கு வருகின்றேன்.

ஆறாவது புத்தகச் சந்தை ஈஸ்ட்ஹாமில் 1.4.2013 அன்று நடந்தபோது ஜெயபாலன் மற்றும் சிலர் என்னை அணுகி லண்டனில் இலக்கியச்சந்திப்பு நடக்கவிருக்கிறது. வாசிப்பில் ஆர்வம் மிக்க தீவிரமானவர்கள் அங்குவருவார்கள்.அதிலும் இந்தப்புத்தகங்களைக் காட்சிப்படுத்தினால் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். இதற்கு ஜெயபாலன், தானே அவர்களுடன் கதைப்பதாகக் கூறிச் சென்றார். பின்னர் ஒரு மாலை எனக்கு அவர் திரு. சிவலிங்கத்தடன் தொடர்புகொண்டதாகத் தெரிவித்து புத்தகச்சந்தை நடத்துவது வரவேற்கத்தக்கதென்ற ஆதரவுச் செய்தியை தெரிவித்தார்.

அதன்படி சுமார் நான்கு பெட்டிகளில் நவீன இலக்கியம், அரசியல், வரலாறு மற்றும் சமூகவியல் நூல்களைத் தேர்ந்து அடுக்கி தயாராக வைத்திருந்தேன். இந்நிலையில் மற்றொருநாள் மின்னஞ்சலில் அவர்களது அழைப்பிதழ் வந்திருந்தது. அதில் ஒரு தகவல்புத்தகக் கண்காட்சி விற்பனையும் இடம்பெறும் என்றிருந்தது. உடனே நான் ஜெயபாலனிடம் தொடர்புகொண்டு அதுபற்றித் தெரிவித்து இது எனது புத்தகக் கண்காட்சியா (சந்தையா) என்று கேட்டேன். அதற்கு அவர் அவர்கள் புத்தகச் சந்தை என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். என்னுடையது வெறும் கண்காட்சி இல்லையே என்று கூறிவிட்டு மீண்டும் சிவலிங்கத்துடன் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது திரு சிவலிங்கம் அவரிடம் பௌசர் புத்தகச்சந்தை வைப்பதால் எனது புத்தகச்சந்தை வைக்க இடமில்லை என்று அவர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.

இந்நிலையில் நான் புத்தகச் சந்தை வைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் மேலானதாகக் கருதும் எனது பணியை கொச்சைப்படுத்தி அரசியலாக்கவோ லாபமீட்டவோ விரும்பவில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல இவ்வாறான புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இலக்கியச் சந்திப்புக்கு எப்போதுமே அவசியமானது. துர்அதிர்ஷ்டம் அதனை அவர்கள் புரிந்துகொள்ளாதது.

அன்புடன்

என்.செல்வராஜா

****

இதுவரையான 39 இலக்கியச் சந்திப்பு அரங்குகளும் திறந்த களமாகவே இருந்திருக்கின்றன. கலைஇலக்கியத்தளம் சார்ந்த யாரும் அங்கே புத்தகக் கண்காட்சியையோ புகைப்படக் கண்காட்சியையோ ஓவியக் கண்காட்சியையோ விற்பனையையோ நடத்திக்கொள்ளலாம். நான்கூட சில இலக்கியச் சந்திப்புகளில் எனது நூல்களையும் தோழர்களது நூல்களையும் மேசை போட்டு விற்பனை செய்திருக்கிறேன்.

ஆனால் லண்டன் 40வது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டாளர்களால் மிகவும் அநீதியான முறையில் நூலகர் என். செல்வராஜா அவர்களது புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் தடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லிய காரணமோ கொடுமையாக இருக்கிறது. ‘பௌஸர் புத்தக சந்தை வைப்பதால் நூலகர் என். செல்வராஜா அவர்களது நூல்களுக்கு இடமில்லைஎன்றிருக்கிறார்கள். என்னேயொரு தகிடுதத்தம்!

இடமில்லை என்று சொல்வதற்கு செல்வராஜா ஒன்றும் நான்கு கென்டெயினர்களில் புத்தகம் கொண்டுவருவதாகச் சொல்லியிருக்கவில்லை. வெறும் நான்கு பெட்டிகளிற்குள்தான் அவர் புத்தகங்களைத் தயார் செய்திருக்கிறார். பௌசரின் புத்தக வியாபாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலேயே நூலகர் என். செல்வராஜா நடத்தத் திட்டமிட்டிருந்த புத்தக சந்தை இலண்டன் இலக்கியச் சந்திப்பில் தடுக்கப்பட்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இலக்கியச் சந்திப்பை இலண்டனில் நடத்தும் தற்காலிகப் பொறுப்புத்தான் பௌசருக்கு வழங்கப்பட்டிருந்ததே தவிர இலக்கியச் சந்திப்பை தனக்குச் சொந்தமாகப் பாத்தியதை கொண்டாடி, அங்கே அவரது புத்தகங்களை மட்டுமே விற்கவும் மற்றவர்களது புத்தகங்களைத் தடுக்கவும் அவருக்கு உரிமை கொடுக்கப்படவில்லை. பல்வேறு எழுத்தாளுமைகளுடனும் வாசகர்களுடனும் மட்டுமல்லாமல் புத்தகங்களுடனும் உறவாடவே இலக்கியச் சந்திப்பாளர்கள் ஒன்று கூடுகின்றனர். அங்கே ஒருவரின் புத்தக விற்பனையைத் தடுப்பது என்பது இலக்கியச் சந்திப்புக்கு இழைக்கப்படும் உச்சக்கட்டத் துரோகம். புலிகள் மாற்றுக் கருத்தாளர்களது பத்திரிகைகள், நூல்களது விற்பனையைத் தடுத்ததன் பின்னணியிலாவது புலிகள் சார்ந்தஅரசியல்நோக்கங்கள் இருந்தன. ஆனால் நூலகர் என். செல்வராஜாவின் புத்தக விற்பனையைத் தடுத்ததின் பின்னணியில் அவ்வாறான அரசியல் நோக்கங்கள் ஏதுமில்லை. வெறும் வியாபார நோக்கம் மட்டுமே இதன் பின்னணியிலிருக்கிறது.

புலம் பெயர்ந்த இலக்கியம் நடந்த சுவடைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள். மாதம் முழுவதும் உணவு விடுதிகளிலும் தொழிற்சாலைகளிலும் கடூழியம் செய்து கிடைக்கும் மொத்தச் சம்பளத்தையும் கொட்டி சிறுபத்திரிகைகளையும் கருத்தரங்குகளையும் நடத்திய தோழர்கள் எத்தனை எத்தனை! புத்தகங்களை வெளியிட்டு நிரந்தரக் கடனாளிகளாகியும் அதைக் குறித்துச் சிறுதும் கவலையுறாமல் புத்தகங்களையும் தொகுப்புகளையும் வெளியிட்டவர்கள் எத்தனை எத்தனை! தங்களது சொந்தப் பணத்தில் இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் இலக்கிய ஆளுமைகளை புகலிடத்திற்கு வரவழைத்துக் கொண்டாடியவர்கள் எத்தனை எத்தனை! எந்தத் தருணத்திலும் புலம் பெயர் சிறுபத்திரிகைத் தளம் இலாப நோக்கங்களுடன் இயங்கியதேயில்லை. இந்த மரபு இலக்கிய வணிகர்களால் சிதைக்கப்படுவது தீராத மன உளைச்சலையும் பதற்றத்தையும் நமக்கு ஏற்படுத்தக் கூடியது.

செல்வராஜாவின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் தடுக்கப்பட்டது தனியே செல்வராஜா அவர்களுக்கான பிரச்சினையல்ல. இந்த மோசமான முன்னுதாரணம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டால் அது இலக்கியச் சந்திப்புக்கும் எழுத்தாளர்களிற்கும் வாசகர்களிற்கும் பெரும் இழப்பு. புத்தக வியாபாரிகள் நாலு பணம் பார்ப்பதற்காக இலக்கியச் சந்திப்பின் மரபை நாம் சிதைத்துவிடக் கூடாது.

இயேசு ஜெருசலேம் தேவாலயத்திற்குள் பிரவேசித்து, ஆலயத்திற்குள் வியாபாரம் செய்துகொண்டிருந்த வியாபரிகளை நோக்கிஎன்னுடைய வீடு ஜெபவீடு, நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்எனக் கடிந்து பேசி வியாபாரிகளைச் சாட்டையால் அடித்து விரட்டினாராம்.

தயவு செய்து இயேசுக் கிறிஸ்து இலக்கியச் சந்திப்புக்கும் வரவேண்டும்!

2 thoughts on “இலக்கியச் சந்திப்பும் இயேசுக் கிறிஸ்துவும்

  1. நியாயமான குமுறல். இலண்டன் 40வது இலக்கியச்சந்திப்பு ஏற்பாட்டளர்கள் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

  2. ஷோபா,ஏசுவைக் கூட்டி வந்து,சாட்டையடி வாங்காது,செல்வராசாவைத் தப்ப வைக்க,பௌசர் செய்த அளப்பெரும் முயற்சியாகவிருக்கும்.மற்றவர்களும் இப்பிடியே முகம்மது,காளி,வைரவர் என…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *