கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத பதில்களும் – நிலாந்தன்

கட்டுரைகள்

( தமிழ்க்கவி, ஸர்மிளா ஸெய்யித், பழ.ரிச்சர்ட், கருணாகரன் நேர்காணல்கள் அடங்கிய ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ தொகுப்பு நூலுக்கு நிலாந்தன் வழங்கியிருக்கும் முன்னீடு )

பி.பி.ஸி. தமிழோசையில் ஆனந்தி வேலை செய்த காலத்தில் கொழும்பிலுள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்களைப் பேட்டி காண்பதுண்டு. இப்பேட்டிகளின்போது அவர் ஓர் அனைத்துலகப் பேரூடகத்தின் விதிகளுக்கு அமைவாகக் கேள்விகளை கேட்பவர் போல் தோன்றுவார். ஆனால் அவர் அக்கேள்விகளுக்குள் இனச்சாய்வுடைய நுட்பமான கொழுக்கிகளை மறைத்து வைத்திருப்பார். அக்கொழுக்கிகளின் மூலம் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ் இயக்கங்களை அவர் அம்பலப்படுத்த முயற்சிப்பார். ஒரு வெளிப்பார்வையாளருக்கு ஆனந்தியின் கேள்விகள் பி.பி.ஸி. நியமங்களுக்கு உட்பட்டவையாகவே தோன்றும். ஆனால், இனச்சாய்வுடையோருக்கு அங்கே நுட்பமாக மறைக்கப்பட்டிருக்கும் கொழுக்கிகள் தெரியும். போர்க் காலங்களில் ஈழத் தமிழர்கள் ஆனந்தியின் கேள்விகளை ரசித்துக் கேட்பார்கள். அவருடைய கொழுக்கிகளில் மாட்டுப்பட்டு; இயக்கத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் தளம்புவதையும் தத்தளிப்பதையும் தமிழ் மக்கள் ரசிப்பார்கள்.

ஆனந்தியின் கேள்விகளுக்குள் கொழுக்கிகள் மறைக்கப்பட்டிருந்ததைப் போலவே ஷோபாசக்தியின் கேள்விகளுக்குள்ளும் கொழுக்கிகள் மறைக்கப்பட்டிருப்பதாக அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். ஆனந்தியின் கொழுக்கிகள் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவானவை என்றும் ஆனால் ஷோபாசக்தியின் கொழுக்கிகள் அதற்கு எதிரானவை என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஷோபாசக்தி மற்றவர்களை பேசத் தூண்டுகிறார் என்றும் அவர்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள். இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நான்கு நேர்காணல்களுக்கூடாகவும் அவர் அப்படி ஒரு நுட்பமான, சூதான வலையை விரிப்பதாகவும் அவர்கள் நம்புகின்றார்கள்.

இந்நூலுக்கு அவர் என்னிடம் முன்னுரை கேட்டபோது எனது நண்பர்கள் சிலர் அப்படித்தான் எச்சரித்தார்கள். இதில் என்னையும் சம்பந்தப்படுத்த அவர் வலை விரிக்கிறார் என்று.

நான் யோசித்தேன். மெய்யாகவே ஷோபாசக்தி அப்படி ஒரு வலையை விரிக்கிறாரா? ஆயின் அப்படி விரித்தால் பதில் சொல்பவர்களுக்கு என்ன  மதி? இங்கு நேர்காணப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஓர் விதத்தில் துருத்திக்கொண்டு தெரியும் ஆளுமைகள்தான். எல்லோருமே செயற்பாட்டாளுமைகள்தான். தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை நன்கு சிந்தித்து வழங்கிய பதில்களே இங்குள்ளன. எனவே, ஷோபாசக்தி கொழுக்கிகளைப் போட்டார் என்பதை விடவும், பதில் சொல்பவர்கள் அதுவாக இருந்தார்கள் என்பதே சரி. அவர்கள் எதுவாக இருந்தார்களோ அதைத்தான் ஷோபாசக்தி வெளியில் கொணர்ந்துள்ளார். அவர் என்னிடம் முன்னுரை கேட்டபோது “நான் எதுவாக இருக்கிறேனோ அதைத்தான் எழுதுவேன்” என்று அவருக்கு சொன்னேன். “அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் விரும்பியதை எழுதுங்கள்” என்று சொன்னார். “இந்த நேர்காணல்களில் எனக்கு உடன்பாடில்லாத பல அம்சங்கள் உண்டு” என்று சொன்னேன். “எனக்கும் அப்படித்தான், உங்கள் முன்னுரைக்கூடாக இந்த நூலை சமநிலைக்குக் கொண்டு வாருங்கள்” என்று கேட்டார்.

இதில் ஏதும் ரகசியக் கொழுக்கிகளோ அல்லது கண்களுக்குப் புலனாகாத வலைகளோ மறைக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, இந்த முன்னுரையை எழுதச் சம்மதித்தேன்.

இதைவிட மற்றொரு காரணமும் உண்டு. தமிழ் – சிங்கள அரசியல் அதிகபட்சம் கறுப்பு – வெள்ளையாகத் தான் இருக்கிறது. ஆனால், தமிழ் சமூகம் தமது அகச்சூழலை கறுப்பு – வெள்ளையாக வைத்திருக்க முடியாதென்று வலிமையாக நம்புகிறேன். ஆகக்கூடிய பட்சம் சாம்பல் பரப்புக்களை பேணுவதன் மூலம்  ஆகக்கூடிய பட்ச பொதுத்தளம் ஒன்றை உருவாக்கினால் தான் தமிழர்கள் இப்போதிருக்கும் தேக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரலாம் என்றும் நம்புகிறேன். இப்போதுள்ள நிலைமைகளின் படி அய்க்கியம் தான் ஈழத் தமிழர்களின் முதலாவது தேசியக் கடமையாகும். ஒரு நெல் மணிகூட வீணாகச் சிந்தப்படக்கூடாது. எனவே, இந்த முன்னுரையை எழுதுவது என்று முடிவெடுத்தேன்.

இங்கு நேர்காணப்பட்டிருக்கும் நால்வருமே எனக்குக் கிட்டவாகவோ அல்லது எட்டவாகவோ நான் வாழும் அரங்கினுள் வாழ்பவர்கள். செயற்பாட்டாளுமைகள். கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ்த் தேசியப் பாரம்பரியத்துக்கூடாகத் துலங்கியவர்கள். ஸர்மிளா ஸெய்யித் பெண்ணியச் செயற்பாட்டாளர். பழ.ரிச்சர்ட் இடதுசாரிச் செயற்பாட்டாளர்.

நான்கு நேர்காணல்களும் அவற்றுக்கேயான தனித்தனியான போக்குகளைக் கொண்டுள்ளன. அதேசமயம் ஒரு பொதுப்புள்ளியில் அவை சந்திக்கின்றன. ஸர்மிளா எதிர்கொள்ளும் சவால்கள் வேறு, பழ.ரிச்சர்ட் எதிர்கொள்ளும் சவால்கள் வேறு. கருணாகரனும் தமிழ்க்கவியும் எதிர்கொள்ளும் சவால்கள் வேறு. எனினும், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரை; குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலான விமர்சனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையில் ஒரு பொதுத்தன்மை உண்டு.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதான விமர்சனம் எனப்படுவது; குறிப்பாக 1986 வசந்த காலத்தின் பின்னிருந்து விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில், 1986 வசந்த காலத்தில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் ‘ரெலோ’ இயக்கத்தைத் தோற்கடித்து அரங்கில் தனிப்பெரும் இயக்கமாக எழுச்சி பெறத் தொடங்கியது. இதிலிருந்து தொடங்கி படிப்படியாக ஏனைய எல்லா இயக்கங்களையும் தோற்கடித்து அல்லது உள்ளுறுஞ்சி, மிதவாதிகளையும் அரங்கிலிருந்து அகற்றி போராட்டத்தின் மையமாக விடுதலைப் புலிகள் இயக்கம் மேலெழுந்தது. அதற்குப் பின்னரான நல்லதுக்கும் கெட்டதிற்கும் அந்த இயக்கந் தானே பொறுப்பு? எனவே, அந்த இயக்கத்தின் மீதே அதிகம் விமர்சனங்கள் பாயும்.

ஆனால், இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது எதுவெனில், விடுதலைப் புலிகள் இயக்கம் எனப்படுவது ஒரு மூல காரணம் அல்ல என்பதுதான். மூல காரணம் இன ஒடுக்குமுறைதான். புலிகளும் ஏனைய இயக்கங்களும் விளைவுகள்தான். ஆயுதப் போராட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் அனைத்தும் அந்த விளைவின் விளைவுகள் தான்.

புலிகள் இயக்கம் தோன்ற முன்பே அந்த மூல காரணம் இருந்தது. அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கடந்த அய்ந்தாண்டுகளாக அது மாறாதிருக்கிறது. அது முன்னெப்பொழுதும் பெற்றிராத உச்ச வளர்ச்சியைப் பெற்றதால்தான் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. அதாவது, இன ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்கால். இப்படியாக மூல காரணமானது அதன் உச்சக்கட்ட வளர்ச்சியையும் உச்சமான வெற்றியையும் பெற்று வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில் தோற்கடிக்கப்பட்ட மிகச் சிறிய மக்கள் கூட்டத்தின் மீட்சியைப் பற்றிச் சிந்திக்கும் எவரும் தமிழ் மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக்கொள்வார்களா? நிராகரிப்பார்களா?

இது தொடர்பில் ஆகப் பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு கூறலாம். ஒரு புலம் பெயர்ந்து வாழும் செயற்பாட்டாளர் என்னை அண்மையில் சந்தித்தார். அவர் ஒரு தீவிர புலி எதிர்ப்பாளர். சிங்கள இனவாதத்துக்கு எதிரான தமிழ் இனவாதமும் பிழை என நம்புமொருவர். தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடைய  அச்சங்களைப் போக்கினால்தான் நாட்டில் நிரந்தரத் தீர்வெதையும் கொண்டுவர முடியும் என்றும் நம்புகிறவர். மே 19 -இற்குப் பின்னர் இவர் கொழும்பில் ‘ஹெல உறுமய’ தலைவரைச் சந்தித்திருக்கிறார். இதன்போது ‘ஹெல உறுமய’ தலைவர் சொன்னாராம்…”நாங்கள் ஆனந்தசங்கரியோடு அதிகாரத்தைப் பகிர முடியும். அவரைக் குறித்து நாங்கள் பயப்படவில்லை. அவர் கேட்டால் தனி நாட்டைக்கூடக் கொடுக்கலாம்…” என்ற தொனிப்பட.

ஆனால், அவை இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள் அல்ல. ஆனந்தசங்கரியை விடவும் சிங்களவர்களை அதிகம் நெருங்கிச் சென்றவர் டக்ளஸ் தேவானந்தா. கடந்த இருபதாண்டுகளாக சிங்களத் தலைவர்களோடு அவரளவுக்கு வேறு யாரும் இணங்கிச் சென்றதில்லை. ஆனந்தசங்கரி கூட மே 19- இற்குப் பின் கூட்டமைப்பில் சேர்ந்தவர்தான். ஆனால், தேவானந்தா அப்படியல்ல.

அப்படிப் பார்த்தால் அவர்கள் ஆனந்தசங்கரிக்குக் கொடுக்க நினைப்பதை தேவானந்தாவுக்குக் கொடுக்கலாம் தானே? இந்தக் கதையை அய்ரோப்பாவில் உள்ள ஒரு நண்பருக்கு சொன்னேன். அவர்  கேட்டார் “அவர்கள் தேவானந்தாவுக்கு தனிநாட்டைக் கொடுக்க வேண்டாம், குறைந்தது அவருடைய வீணைச் சின்னத்தையாவது கொடுக்கலாம்தானே?” என்று.  அதுதான் உண்மை. கடந்த அய்ந்தாண்டுகளாக தேவானந்தாவை அவருடைய சொந்தச் சின்னத்தில்கூட போட்டியிட அனுமதியாத ஒரு வெற்றிவாதமே கொழும்பில் கோலோச்சி வருகிறது. அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களோடும் இணக்க அரசியல் இல்லை. முஸ்லிம்களோடும் இணக்க அரசியல் இல்லை. தமிழர்களும், முஸ்லிம்களும் வேண்டுமானால் சரணாகதி அரசியல் செய்யலாம். ஒரே நாடு! ஒரே தேசம்!!

எனவே, தோற்கடிக்கப்பட்ட மக்கள் கூட்டமாகிய தமிழர்களின் தேசிய இருப்பை ஏற்றுக்கொண்டு, அதைப் பலப்படுத்துவது பற்றிச் சிந்திப்பவர்களே மெய்யான செயற்பாட்டாளுமைகளாக இருக்க முடியும். அதற்கு, முதலில் தேசியம் என்று எதை நாங்கள் விளங்கி வைத்திருக்கிறோம் என்பது இங்கு முக்கியம்.

சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஸ்டி. அதைப் போலவே தமிழர்கள் மத்தியில் அதிகம் பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை தேசியம். எமது காலத்தின் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று பல தரப்பட்டவர்களும் தேசியம் என்பதை இனமான அரசியலாகவே விளங்கி வைத்திருக்கிறார்கள். பெரிய இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான சிறிய இனத்தின் போராட்டம் என்பதாகவே அதற்கு பொருள் கொள்ளப்படுகிறது. வாளேந்திய சிங்கத்திற்கு எதிராக துவக்கேந்திய புலி.

ஆனால், தேசியம் எனப்படுவது அதைவிட ஆழமானது. ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப் பிரக்ஞையே தேசியம் எனப்படுகிறது. இது ஒரு பிரயோக நிலை விளக்கம்தான். எந்தவொரு கூட்டு அடையாளத்தின் பெயரால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ அந்தக் கூட்டு அடையாளத்தின் பேரால் வரும் ஒரு கூட்டுப் பிரக்ஞைதான் தான் தேசியம். எல்லாக் கூட்டுப் பிரக்ஞைகளும் முற்போக்கானவைகளாகத்தான் இருக்கும் என்பதில்லை. அவை அவற்றின் வேரில் பிற்போக்கானவைகளாகவும் இருக்க முடியும். ஆனால், அத்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பு அல்லது கட்சிதான் குறிப்பிட்ட கூட்டுப் பிரக்ஞையின் உள்ளடக்கத்தை ஜனநாயக ஒளி கொண்டு இருள் நீக்கம் செய்ய வேண்டும். அதாவது, தேசியத்தின் உள்ளடக்கம்; ஆகக் கூடிய பட்ச ஜனநாயகமாக இருக்க வேண்டும். (பார்க்க:http://www.nillanthan.net/?p=180).

எனவே, ஆயுதப் போராட்டத்தின் மீதான எந்த ஒரு விமர்சனமும் தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கப் போதாமையின் மீதான விமர்சனம் தான். படைத்துறைமையச் சிந்தனை, இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள், முஸ்லிம்களுடனான மோதல்கள், பால், சாதி, பிரதேச அசமத்துவங்களை போதியளவு கடக்க முடியாமற்போனவை போன்ற எல்லா வகைப்பட்ட சறுக்கல்களும் தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கப் போதாமையின் பாற்பட்ட விளைவுகள் தான்.

இது என்னுடைய விளக்கம். ஷோபாசக்தியும் மற்றவர்களும் இதை ஏற்கலாம், ஏற்காமல் விடலாம். ஆனால் இந்த விளக்கத்தின் வெளிச்சத்தில் வைத்தே இந்நூலை நான் வாசித்தேன். அப்போது என்னிடம் சில கேள்விகள் தோன்றின. அவை வருமாறு:

பழ. ரிச்சர்ட் குறிப்பிடத்தக்களவுக்கு கோட்பாட்டு பரப்பிற்குள் வருகிறார். எதையாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார். மூல காரணம் பொறுத்து அவர் மிகத் தெளிவாகப் பேசுகிறார். இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டம் முற்போக்கானது என்பதையும் ஏற்றுக்கொள்கிறார். அதில் புலிகளையும் மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதையும் மிகத் தெளிவாக விளங்கி வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தசாப்தத்திலும் அவர் ஜே.வி.பி.யுடன் ஓரளவுக்கு இணைந்து வேலை செய்யலாம் என்று எப்படி நம்பினார்?

ஜே.வி.பி.யுடன் முரண்பட்ட பின் அதிலிருந்து விலகிய அணியில் அவர் இணைகிறார். பின்னாளில் அந்த அணியுடனும் முரண்பட்டு ஈரோஸில் இணைகிறார். இலங்கைத் தீவின் நவீன வரலாற்றை, குறிப்பாக கடந்த அரைநூற்றாண்டு கால ஜே.வி.பி.யின் அரசியலை அந்த அமைப்பிற்கு அருகில் சென்றுதான் அறிய வேண்டுமா? தேசிய இனப் பிரச்சினைகள் தொடர்பில் உலகு பூராகவும் எப்பொழுதோ இடம்பெற்ற மார்க்ஸிய உரையாடல்களை கற்றிருக்கக் கூடிய எவரும் இன்றைய தசாப்தத்திலும் ஜே.வி.பி.யுடன் இணைந்து இயங்கலாம் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும்?. பழ.ரிச்சர்ட் எல்லாவற்றையும் ஏன் சற்றுப் பிந்தியே கண்டுபிடிக்கின்றார்?

ஸர்மிளா, ஒரு பெண்ணியச் செயற்பாட்டாளராக எம்மைப் பிரமிக்க வைக்கிறார். பெண்ணிய நோக்கு நிலையில் நின்று தமது சமூகத்தை விட்டுக் கொடுப்பின்றி எதிர்க்கும் அவர் இனப்பிரச்சினை என்று வரும்போது முஸ்லிம் நிலைப்பாட்டுக்குக் கிட்டவாக வருகிறார். அது ஒரு யதார்த்தம் தான். தமிழ் மக்களின் தேசிய இருப்பை வற்புறுத்தும் எவரும் முஸ்லிம்களின் தேசிய இருப்பையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.  இலங்கைத் தீவின் இப்போதுள்ள அரசியல் யதார்த்தத்தின் படி முஸ்லிம்களுக்கு இணக்க அரசியலைத் தவிர வேறு தெரிவுகள் இல்லைதான். ஆனால், அதற்காக தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுவது சிங்களவர்களுக்கு எதிரானானது, ஆபத்தானது என்று ஒரு பெண்ணியச் செயற்பாட்டாளர் கூறமுடியுமா? இது யாருடைய நோக்கு நிலை? இது இறுதியிலும் இறுதியாக யாருக்குச் சேவகம் செய்யும்? ஒரு பெண்ணியவாதியாக பேசும் போது அனைத்துலகவாதியாகப் பிரகாசிக்கும் அவர் இன உறவுகள் பற்றி உரையாடும் போது இலங்கை முஸ்லிம்களின் அச்சங்களை அதிகம் பிரதிபலிப்பவராக மாறியது ஏன்? முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் எழுதிய வ.ஐ.ச.ஜெயபாலனையும் வில்வரட்ணத்தையும் அவர்களைப் போன்றவர்களையும் புலிகளை எதிர்த்த தமிழ்த் தேசியவாதிகளாக அவர் அடையாளம் காண்பது சரியா?

தமிழ்க்கவி எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுகிறார். வன்னியிலும் அவர் அப்படித்தானிருந்தார். ஆனால், அங்கே இருந்தபோது இயக்கத் தலைமை குறித்து அவர் வைத்திருக்கக்கூடிய விமர்சனங்கள் உட் சுற்றுக்குரியவை. இப்பொழுது அவை பகிரங்கமாக வருகின்றன. ஆனாலும் அவர் எதையும் மறைக்கவில்லை. தன்னுடைய அகமுரண்பாடுகளையும் கூட மறைக்க முற்படவில்லை. ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்பது தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அவர் சொல்கின்றார். ஆயின் வெல்ல முடியாத ஒரு யுத்தத்திற்காக ஆயிரக்கணக்கில் பிள்ளைகளை இணைத்த ஒரு பிரிவில் எப்படி அவரால் பணியாற்ற முடிந்தது? ஏன் அப்பொழுதே அதிலிருந்து விலகவில்லை? அவருடைய சொந்தப் பிள்ளைகளும் போராளிகளாக இருந்தனர் என்ற ஒரு தகுதி மட்டும் இந்த முரண்பாட்டை நியாயப்படுத்தப் போதுமா?

கருணாகரன் ஓரளவுக்கு கோட்பாட்டு ஆழங்களுக்குள் இறங்க முற்படுகிறார். ஆனால் தேசிய இனப் பிரச்சினை தொடர்பில் அவருடைய தரிசனம் முழுமையானது அல்ல. அல்லது 2009 மே- க்கு முன்பிருந்த நிலைப்பாட்டிலிருந்து இப்பொழுது அவர் விலகி வந்திருந்தால் அதற்குரிய தர்க்கபூர்வ நியாயங்களைக் கூற வேண்டும்.

மூல காரணமாது அதன் உச்சக்கட்ட வளர்ச்சியைப் பெற்றதால்தான் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தது. எனவே இன ஒடுக்குமுறையின் உச்சக்கட்டம் தான் முள்ளிவாய்க்கால். அதை வழமையான அரசு இயந்திரத்தின் ஒடுக்குமுறைகளோடு சமப்படுத்திப் பொதுமைப்படுத்த முடியாது. தென்னாபிரிக்க ஆயர்  டெஸ்மென்ட் டுட்டு கூறியது போல “ஓரிடத்தில் அநீதி நடக்கும் பொழுது நீங்கள் நடுநிலைமை வகித்தால், ஒடுக்குமுறையாளனின் பக்கம் சேர்ந்துகொள்கிறீர்கள். ஓர் எலியின் வாலை யானை மிதித்துக் கொண்டிருக்கும் போதும் நீங்கள் நடுநிலைமையாக இருந்தால், எலி உங்களது நடுநிலைமையை மதிக்கப்போவதில்லை”.

தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கப் போதாமைகளின் விளைவுகளே பால்,சாதி,பிரதேச வேறுபாடுகளை போதியளவு கடக்க முடியாமற் போனமையாகும். ஆனால் அதற்காக தமிழ்த் தேசியத்தை வெள்ளாளத் தேசியமாகக் குறுக்குவது ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் கூட்டுக் காயங்களை மட்டுமல்ல, தனது சொந்தக் காயங்களையும் அவமதிப்பதாகும்

கருணாகரனும், தமிழ்க்கவியும்  உட்பட வன்னியால் வந்தவர்களின் அச்சங்களையும் நிச்சயமின்மைகளையும் நிலை பெறாத்தன்மைகளையும் இம்முன்னுரை ஏற்றுக் கொள்கிறது. பாதுகாப்பற்ற இறந்த காலத்தைப் பெற்றவர்கள் எல்லாரும் நிகழ்காலத்தில் சிலவற்றை உத்தி பூர்வமாகவேனும் அனுசரித்துப் போகவேண்டியிருப்பதையும் மிகக் குரூரமான, அவமானகரமான வாழ்நிலை யதார்த்தத்தோடு சுதாகரித்துக்கொள்ள வேண்டியிருப்பதையும் இம்முன்னுரை புரிந்துகொள்கிறது. ஆனால், அதற்காக உத்திகளை கோட்பாட்டாக்கம் செய்வது சரியா?

பொதுவாக உத்திகள் கோட்பாட்டின் செய்முறை ஒழுக்கத்துக்குரியவைகளாகத்தான் காணப்படுவதுண்டு. ஆனால், ஒரு யுகமுடிவொத்த அழிவின் பின்னர் உத்திகள் மூலக் கோட்பாட்டிற்கு மாறாகக் காணப்படுவதுமுண்டு. இவ்வாறான காலங்களில் உத்திகளை கோட்பாட்டாக்கம் செய்யக்கூடாது

வரலாறு நெடுகிலும் மறுதலிப்புக்கள் உண்டு. மறுதலித்தவன் அதை ஓர் உத்தியாகச் செய்கிறானா அல்லது, மூலோபாயமாகச் செய்கிறானா என்பதையே இங்கு முக்கியமாகப் பார்க்க வேண்டும். காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில் பேதுரு ஆண்டவரை இரு முறை மறுதலித்தான். பின்னாளில் அவனே ஆண்டவரின் தாய்க் கோவிலின் அத்திவாரக் கல்லாயானான். பேதுரு, ஆண்டவரை மறுதலிக்காதிருந்திருந்தால் அவனைக் கிறிஸ்துவோடு சிலுவையில் அறைந்திருப்பார்கள். மறுதலித்தபடியாற்தான் பின்னாளில் அவன் முதற் கோவிலின் அத்திவாரக் கல்லாயானான் என்றும் எடுத்துக்கொள்ளலாமா?

பேதுருவைப் போலவே கலிலியோவும் தனது வாழ்நாள் கண்டுபிடிப்பை திருச்சபை அரங்கத்தில் மறுதலித்தார். இல்லையென்றால் அவர் கண்டுபிடித்த உண்மைக்காகவே அவரைக் கொன்றிருப்பார்கள். விசாரணை முடிந்து வெளியில் வந்தபோது அவருடைய மாணவர்கள் கேட்டார்கள், “ஏன் நீங்கள் கண்டுபிடித்த உண்மையை மறுதலித்தீர்கள்” என்று. அதற்கு கலிலியோ சொன்னார், “நான் தட்டையானது என்று பொய் சொன்னதால் பூமி தட்டையாகி விடப்போவதில்லை. அது எப்பொழுதும் போல உருண்டையாகவே இருக்கும்”. அந்த உண்மையை பிறகொரு நாள் நிரூபிப்பதற்காக இன்று அதை மறுதலித்தேன் என்ற தொனிப்பட.

பேதுருவும் கலிலியோவும் வரலாற்றின் இருவேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள். இருவரும் தமது உயிருக்கு நிகரான உண்மையை மறுதலித்து தமது உயிர்களைப் பாதுகாத்தவர்கள். ஆனால் அவர்கள் மறுதலித்த உண்மைகளே அவர்களை பிறகொருகாலம் மகிமைப்படுத்தின. எனவே மறுதலித்தவனெல்லாம் துரோகியுமல்ல, மறுதலியாதவன் புனிதனுமல்ல.

கருணாகரன், தமிழ்க்கவி இருவருக்கும் மாண்புமிகு இறந்த காலங்கள் உண்டு. அந்த இறந்த காலங்களில் ஒரு பகுதியை அல்லது பெரும் பகுதியை மறுதலிக்கும் ஒரு நிலைக்கு அல்லது சுயவிசாரணை செய்யும் ஒரு நிலைக்கு அவர்கள் வரக் காரணம் என்ன?

இத்தகைய கேள்விகளை அல்லது இதையொத்த கேள்விகளை ஷோபாசக்தி மேலும் மேலும் கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால் இந்நேர்காணல்கள் வேறொரு தளத்திற்குச் சென்றிருக்கக் கூடும். அவை அவற்றுக்கேயான கோட்பாட்டு ஆழங்களை சென்றடைந்திருக்கக்கூடும். அவ்விதம் இந்நூல் இப்போதிருப்பதை விடவும் அதிகரித்த அளிவில் அதன் கோட்பாட்டு ஆழங்களைச் சென்றடையத் தவறியதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கக்கூடும்.

ஷோபாசக்தி கூறினார், இந்நேர்காணல்களை செய்யும்போது தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் தொழில்நுட்ப இடைவெளிகள் இருந்ததாக. அதாவது மின்னஞ்சல் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களுமே இவை. இது ஒருவிதத்தில் ஒருவழிப் போக்குவரத்து தான். பதிலாக ஆளையாள் முகம் பார்க்கும் உரையாடல்களாக அவை அமைந்திருந்தால் அங்கே இருவழிப் போக்குவரத்து நிகழ்ந்திருக்கும். பதில்களின் மீது உடனடியாகக் கேள்விகளைக் கேட்கும் வாய்ப்புகள் இருந்திருக்கும். அவ்வாறான உரையாடல்களாக அமையும் போதே நேர்காணல்கள் அதிகபட்சம் அவற்றின் கோட்பாட்டு ஆழங்களை நோக்கிச் செல்கின்றன. ஆனால் இங்கு அது போதியளவு நிகழவில்லை. இது ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை. இது முதலாவது காரணம்.

மற்றது, இங்கு நேர்காணப்பட்ட அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் சர்ச்சைக்குரியவர்கள். எனவே இந்நேர்காணல்கள் பெரும்போக்காக அந்தச் சர்ச்சைகளைச் சுற்றிச் சுற்றியே வருகின்றன. அதாவது இது சர்ச்சை மைய நேர்காணல். இது ஓர் ஊடக உத்தி. சர்ச்சைகளை மையப்படுத்தும் போது அது குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பரபரப்பாக ஓடும். இந்நேர்காணல்களும் அவ்வாறு பரபரப்பாக வாசிக்கப்பட்டவை தான். ஆனால் சர்ச்சைகள் நிகழ்காலத்திற்குரியவை. அவை எக்காலத்திற்கும் உரியவை அல்ல. ஆனால் கோட்பாட்டு உண்மைகள் அப்படியல்ல. இதனால் சர்ச்சை மைய நேர்காணல்கள் அவற்றுக்குரிய கோட்பாட்டு ஆழங்களைச் சென்றடையாவிட்டால் அதாவது கோட்பாட்டு உண்மைகளை வெளிக்கொணரத் தவறினால் இவை நிகழ்காலத்தின் பரபரப்பைப் பெற்றதற்கும் அப்பால் நீடித்து நிலைத்திருப்பதில்லை. எனவே சர்ச்சை மைய நேர்காணல்களைக் கொண்டிருப்பது இந்நூலின் பலம். அதுவே பலவீனம். இது இரண்டாவது காரணம்.

சர்ச்சைகளைக் கடந்து போயிருந்தால் இந்நூல் அதன் கோட்பாட்டு ஆழங்களை கண்டு பிடித்திருக்கக் கூடும். சர்ச்சைளை ஏன் கடக்க முடியவில்லை? இக்கேள்விக்கான பதிலே மூன்றாவது காரணம்.

சர்ச்சைகளைக் கடக்க முடியவில்லை என்பதை விடவும் மே 2009 -க்குப் பின்னரான தமிழ் உளவியலைக் கடக்க முடியவில்லை என்பது அதிகம் பொருத்தமாக இருக்கும்.

மே 19 -க்குப் பின்னரான தமிழ் உளவியல் எனப்படுவது பெருமளவிற்கு இயல்பற்றது. அதிகம் கொந்தளிப்பானது. அதிகம் உணர்ச்சிப் பெருக்கானது. புலிகளுக்கு ஆதரவான தரப்புகளாலும் அதைக் கடக்க முடியவில்லை, புலிகளுக்கு எதிரான தரப்புகளாலும் அதைக் கடக்க முடியவில்லை. இது தான் பெரும்போக்கு. ஏனையவை ஒப்பீட்டளவில் சிறிய போக்குகள் தான். தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தைப் பலப்படுத்த விளையும் மிகச் சிறிய ஒரு தரப்பே ஒப்பீட்டளவில் நிதானத்திற்கு வந்திருக்கிறது. மற்றும்படி புலிகளை ஆதரித்த தரப்பு புலிகளால் முன்னெடுக்கப்பட்ட, தமிழில் தோன்றிய நவீன வீர யுகம் ஒன்றை அப்படியே மம்மியாக்கம் செய்ய முற்படுகிறது. அதேசமயம் புலிகளுக்கு எதிரான தரப்பு எல்லாப் பழிகளையும் புலிகளின் மீது சுமத்தி புலிகளின் தோல்வியை தமிழ்த் தேசியத்தின் தோல்வியாக மாறாட்டம் செய்ய முற்படுகிறது. மொத்தத்தில் இரண்டு தரப்புமே இறந்த காலத்தில் தேங்கி நிற்பவைதான். ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை இறந்த காலத்தில் தேங்கி நிற்பது என்பது தோல்வியோடும் தோல்விக்கான காரணங்களோடும் வாழ்வது தான்.

ஆனால் இலங்கைத் தீவில் இப்போதுள்ள அரசியல் எனப்படுவது மே 2009 -லிருந்து விலகி வந்து ஏறக்குறைய அய்ந்தாண்டுகள் ஆகிவிட்டன. அய்ந்தாண்டுக்காலம் எனப்படுவது தோற்கடிக்கப்பட்ட மிகச்சிறிய மக்களின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் குறிப்பிடத்தக்களவு தீர்மானகரமான ஒரு காலகட்டம் தான். எப்படியெனில் முழு ஆயுதப் போராட்ட காலகட்டமாகிய 38 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் அது எட்டில் ஒரு பகுதி. அதே சமயம் புலிகள் இயக்கம் தனிப்பெரும் இயக்கமாக ஆதிக்கம் செலுத்திய 23 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் அது நான்கில் ஒரு பகுதி. எனவே இலங்கைத் தீவின் அரசியல் குறித்து ஆராயும் எவரும் புலிகளுக்கு பின்னரான அய்ந்தாண்டு காலத்தை ஆழமாகக் கற்க வேண்டும். மூல காரணம் வீங்கிப்பெருத்து வெற்றிவாதமாக இறுகிக் கட்டிபத்திப் போயிருக்கும் ஓர் அரசியல் சூழல் இது.

இந்நிலையில் புலிகளுக்கு ஆதரவான தரப்புக்களும் சரி, எதிர்ப்பான தரப்புக்களும் சரி 2009 மே -யுடன் தேங்கி நிற்க முடியாது. தோல்வியில் இருந்து பெற்ற படிப்பினைகளோடு கடந்த அய்ந்து ஆண்டுகளில் பெற்ற படிப்பினைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தே எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும்.

ஸர்மிளா, தனது நேர்காணலில் ஒர் இடத்தில் பின்வருமாறு சொல்கின்றார் “இலங்கை சிங்கள பௌத்த பெரும்பான்மை நாடு என்பது வேறு. இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பது வேறு. முன்னையது பாசிசக் குறியீடு. பின்னையது எதார்த்தம்” என்று. கடந்த 60 ஆண்டுகாலப் படிப்பினைகளை வைத்துக் கூறின், குறிப்பாக அரங்கில் தமிழ் எதிர்ப்பு பூச்சியமாக்கப்பட்டிருக்கும் கடந்த அய்ந்து ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் கூறின், ஸர்மிளா கூறிய பாசிசக் குறியீடுதான் இலங்கைத் தீவின் அரசியல் யதார்த்தமாகக் காணப்படுகிறது. தமிழ் எதிர்ப்பை தின்று செமித்த பின், அது இப்போது முஸ்லிம்களை நோக்கிப் பாய்கிறது.

எனவே ஒருபுறம் செயலூக்கம் மிக்க சிங்கள பௌத்த மேலாண்மை வாதம். இன்னொரு பக்கம் செயலுக்குப் போகாத தமிழ்த் தேசியம் அல்லது செயலின்றி வெளியாருக்காகக் காத்திருக்கும் தமிழ்த் தேசியம். இது தான் இப்போதுள்ள களநிலவரம். சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கி விட்டதெங்கள் பட்டம்.

அதேசமயம் பூகோள அரசியலில் புதிய சிற்றசைவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு துருவ ஒழுங்கிலிருந்து பல துருவ இழுவிசைகளின் பல்லரங்க உலக ஒழுங்கு ஒன்றை நோக்கி பூகோள அரசியல் நிலை மாறுகின்றதா என்ற கேள்வி வலிமையுற்று வருகின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில் இலங்கைத் தீவில் கடந்த சுமார் 60 ஆண்டு கால அரசியலை கற்றுத்தேறிய எந்தவொரு படைப்பாளியும் செயற்பாட்டாளரும் எப்படிப்பட்ட ஒரு தெரிவை மேற்கொள்வார்?

தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கப் போதாமைகளை முன்னிறுத்தி தமிழ்த் தேசியத்தையே முற்றாக நிராகரிப்பதன் மூலம் எதிர்த் தரப்பிற்குச் சேவகம் செய்யும் ஒரு தெரிவையா? அல்லது தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தைப் பெலப்படுத்தி அதன் மூலம் தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்ட கூர்ப்பை நோக்கி மேலுயர்த்தும் ஒரு தெரிவையா?

இந்நூலை தொகுத்து உருவாக்கிய அய்ந்து ஆளுமைகளையும் நோக்கி இக்கேள்வியை முன்வைக்கிறேன்.

15 ஓகஸ்ட் 2014

யாழ்ப்பாணம்.

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

First Published: October 2014 by Karuppu Pradhigal

B55, Pappu Masthan Darga, Lloyds Road

Chennai 600 005, Tamil Nadu, South India

Mobile: 94442 72500 – Email: [email protected]

Cover: Vijayan – Layout: Jeevamani

Pages 160 – Price: Rs. 140

3 thoughts on “கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத பதில்களும் – நிலாந்தன்

  1. //கருணாகரன், தமிழ்க்கவி இருவருக்கும் மாண்புமிகு இறந்த காலங்கள் உண்டு. அந்த இறந்த காலங்களில் ஒரு பகுதியை அல்லது பெரும் பகுதியை மறுதலிக்கும் ஒரு நிலைக்கு அல்லது சுயவிசாரணை செய்யும் ஒரு நிலைக்கு அவர்கள் வரக் காரணம் என்ன?//- (Y)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *