பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
November 9th, 2014 | : கட்டுரைகள் | Comments (2)

பறவையின் நுட்பம்

( ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ நேர்காணல் தொகுப்பு நூலின் முகச் சொற்கள்)

எனது முதலாவது நேர்காணலை புத்தாயிரத்தின் முதல் வருடத்தில் ‘எக்ஸில்’ இதழுக்காக பாரிஸ் நகரத்தின் கஃபே ஒன்றிற்குள் வைத்து தோழர் அ. மார்க்ஸுடன் நிகழ்த்தினேன். அடுத்த நேர்காணல் எஸ்.பொவுடன். அதுவும் பாரிஸ் நகரத்தின் ஒரு கஃபேயில்தான் நிகழ்த்தப்பட்டது. இதுவரை தமிழின் முக்கியமான இருபது ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறேன். தோழர். கே.ஏ. குணசேகரனை பிரான்ஸ் ‘ஏ.பி.ஸி. தமிழ் வானொலி’க்காக நேர்கண்டதைத் தவிர்த்து, மற்றைய நேர்காணல்கள் சிறுபத்திரிகைகளிலும் எனது அகப்பக்கத்திலும் வெளியாகின. நான் கண்ட நேர்காணல்களின் முதற் தொகுப்பை 2010-ல் “நான் எப்போது அடிமையாயிருந்தேன்” என்ற பெயரில் கருப்புப் பிரதிகள் பதிப்பகமே வெளியிட்டிருந்தது. இது இரண்டாவது நேர்காணல் தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் நான்கு ஆளுமைகளும் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள். இலங்கையின் வெவ்வேறான சமூகங்களிலிருந்தும் நிலவியல் பகுதிகளிலிருந்தும் உருவானவர்கள். தங்களது பதின்பருவங்களிலிருந்தே எழுத்தையும் விடுதலை அரசியலையும் தங்களது வாழ்க்கை நெறியாகத் தேர்ந்துகொண்டவர்கள். முப்பது வருடங்களாக நிகழ்ந்த கொடிய யுத்தத்திற்குள் வாழ்ந்தவர்கள். யுத்தத்தின் நேரடிச் சாட்சியங்கள். இலங்கையில் இன்று நிலவும் கடுமையான கருத்து – எழுத்துச் சுதந்திர மறுப்புக் கண்காணிப்புச் சூழலுக்குள் வாழ்ந்தபோதும் தைரியமாகத் தமது குரல்களை ஒலிப்பவர்கள்.

இந்த நான்கு ஆளுமைகளில் ஒருவரைத்தன்னும் நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. கருணாகரனைத் தவிர மற்றைய மூன்று பேர்களுடனும் நான் இதுவரை தொலைபேசியில் கூட ஒரு சொல் உரையாடியதில்லை. அவர்களது குரல் எப்படியிருக்கும் என்றே எனக்குத் தெரியாது. எனினும் அவர்களின் ஆகிருதிகளையும் அவர்கள் குறித்த சித்திரங்களையும் அவர்களது எழுத்துகளிலிருந்து நான் உருவாக்கிக்கொண்டேன். இந்த நான்கு நேர்காணல்களுமே முழுக்க முழுக்க மின்னஞ்சல் வழியேதான் நிகழ்த்தப்பட்டன. முதலில் ஒரு தொகுதிக் கேள்விகளை அனுப்பிவைத்து, கிடைத்த பதில்களிலிருந்து மறுகேள்விகளை உருவாக்கிக் கட்டம் கட்டமாக ஆனால் துரிதமாக நிகழ்ந்து முடிந்த நேர்காணல்கள் இவை.

நான் ஒருவரை நேர்காணல் செய்ய விரும்புவதற்கு ஒரேயொரு விதியை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். நான் நேர்காணல் செய்யவிருக்கும் ஆளுமை எந்த அரசியலைப் பேசினாலும் எனக்குப் பிரச்சினையில்லை. அவரது அரசியலை வெளிக்கொணரத்தான் நான் நேர்காணலைச் செய்யவே விழைகிறேன். அந்த ஆளுமை எதையும் ஒளிவு மறைவில்லாமல் பேசக் கூடியவராக எனக்குத் தோன்றினால் நான் நேர்காணலிற்காக அவரை அணுகுகின்றேன்.

எனது கணிப்புகள் இதுவரை பத்துத் தடவைகளிற்குக் கிட்டவாகப் பிழைத்தும் போயிருக்கின்றன. இன்றைய முக்கியமான ஈழத் தமிழ்த் தேசியவாதத் தலைவர் ஒருவரிலிருந்து, புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரதிநிதிவரைக்கும் எனது நேர்காணல் செய்யும் கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்கள். இதுதவிர சில நேர்காணல்கள் நடுவில் முறிந்துபோயுள்ளன. சிலர் கேள்விகளை வாங்கி வைத்துவிட்டு வருடக்கணக்கில் மவுனம் காக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நான் செய்த சில நேர்காணல்கள் மோசமான நேர்காணல்களாக அமைந்துபோயின என்பதில் ஒளிக்க ஏதுமில்லை. அந்த நேர்காணல்கள் மோசமானாதற்கு நானே முழுப் பொறுப்பு. ஆகவேதான் எனது தொடக்கால நேர்காணல்களை நான் தொகுப்பு நூலாகக் கொண்டுவரவில்லை. நேர்காணல் செய்யப்படும் ஆளுமையின் முழுச் சித்திரத்தையும்; நேர்காணலில் கொண்டு வருவதற்குப் பதிலாக நான் அவர்களோடு மல்லுக்கு நின்றேன். நான் அவர்களைப் பேச வைப்பதற்குப் பதிலாக அவர்களை வாயடைக்க வைக்கவே முயற்சித்துக்கொண்டிருந்தேன். இத்தகையை முதிராச் செயலைத்தான் எஸ்.பொ. மனம் நொந்து ‘பாரிஸில் பன்றியின் முன் முத்துகளை எறிந்தேன்’ எனத் தனது தன்வரலாற்றுச் சித்திரத்தில் பதிவு செய்தார். தொடர்ந்து செயற்படுவதன் மூலம் நான் கற்றுக்கொண்டேன். பானையின் அடியில் கிடக்கும் நீரைப் பானையோடு கொட்டிக் கவிழ்க்காமல், சிறிய கூழாங் கற்களைப் போட்டு நீரை மேலே வரச் செய்யும் பறவையின் நுட்பத்தைக் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

எனது நூல்கள் எதற்கும் இதுவரை யாரிடமும் நான் முன்னுரை பெற்றதில்லை. இனியும் பெறப் போவதில்லை. ஆனால் இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை நிலாந்தனின் முன்னுரையை விடாப்பிடியாக நின்று கோரிப்பெற்றேன். அவரது முன்னுரையில்லாமல் இந்தத் தொகுப்பு முழுமையடையாது என நான் நம்புகின்றேன்.

நேர்காணப்பட்ட நான்கு ஆளுமைகளையும் நான் இதுவரை நேரில் கண்டதில்லை எனச் சொன்னேன். ஆனால் முன்னுரை எழுதியிருக்கும் ஆளுமையை எனது பதினாறு வயதிலிருந்து நான் அறிவேன். 1985-ல் திம்புப் பேச்சுவார்த்தைக் காலத்தில் அவர் எழுதிய ‘விடுதலைக் காளி’ தெருக்கூத்தில் எனக்கொரு பாத்திரம் கொடுத்திருந்தார். பின்னாளில் என்னுடைய ‘கொரில்லா’ நாவலில் அவரொரு பாத்திரம்.

நான் முன்னுரை எழுதக் கேட்டபோது, இந்நேர்காணல்களில் தனக்குப் பரவலாகக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக நிலாந்தன் சொன்னார். அவ்வாறு கருத்து வேறுபாடுகள் இருப்பவரின் முன்னுரைதான் இந்த நூலுக்குத் தேவையானது, நீங்கள் எழுதும் ஓர் அட்சரமும் மாறாமல் பிரசுரிப்பேன் என்றேன். சொல்லப் போனால் இந்தத் தொகுப்பிலுள்ள நான்கு ஆளுமைகளுமே அரசியற் கருத்துருக்களில் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்களாக இருப்பதை இத்தொகுப்பில் அருகருகாக வைத்து நாம் வாசிக்கிறோம். வெளிவெளியான முரண் உரையாடல்களின் வழியேதான் நாம் நிறுதிட்டமான கூட்டுச் சுயபரிசோதனைகளைச் செய்ய முடியும் என நான் விசுவாசிக்கிறேன்.

நான் சிறுவனாக இருந்தபோது யாழ்ப்பாணத்தின் சில தேநீர்க் கடைகளிலும் வாசிகசாலைகளிலும் ‘இங்கே அரசியல் பேசக் கூடாது’ என எழுதியிருப்பார்கள். நான் இளைஞனான போது நாட்டில் யாருமே அரசியல் பேச முடியாத நிலையிருந்தது. பேசியதற்காக எனது சக எழுத்தாளர்களும் கலைஞர்களும் கடத்தப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். இந்த பேச்சுச் சுதந்திர மறுப்பை புலம் பெயர்ந்த தேசங்களில் கூட விடுதலைப் புலிகள் முன்னெடுத்தார்கள். எங்களது அருமைத் தோழர் சபாலிங்கத்தை புலிகளின் மூளையற்ற துப்பாக்கிக்கு  பாரிஸில் நாங்கள் பறிகொடுத்தோம். தாய்நிலத்திலும் இந்தியாவின் பயிற்சி முகாம்களிலும் பேசியதற்காக  இயக்கங்களால் கொல்லப்பட்ட போராளிகளின் கணக்கு யாருக்குமே தெரியாது. அவர்கள் மாவீரர்கள் பட்டியலிலுமில்லை. துரோகிகள் பட்டியலிலுமில்லை.

இது பேச வேண்டிய காலம். நல்லது பொல்லாதது எல்லாவற்றையும் பேச வேண்டிய காலம். தோல்வியுற்றோம் என்று பேசினால் மட்டும் போதாது. ஏன் தோல்வியுற்றோம் என்பதையும் நாம் ஒளிவு மறைவற்று  மனம் திறந்து பேசுவோம். இதுவரைகாலமும் இரகசியங்களிற்கு ஊமைச் சாட்சிகளாக இருந்தவர்கள் இப்போது உண்மைகளைச் சாட்சியமளிப்பதைக் கேட்கக் காதுள்ளவர் கேட்கட்டும்.

– ஷோபாசக்தி

07.09.2014 – பிரான்ஸ்.

VN:F [1.9.4_1102]
Rating: 6.8/10 (6 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +3 (from 7 votes)
பறவையின் நுட்பம், 6.8 out of 10 based on 6 ratings
2 comments to பறவையின் நுட்பம்

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner