பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
December 30th, 2014 | : கதைகள் | Comments (5)

மாதா

இந்த நாட்டில் அப்போது கடுமையான பனிக்காலமாகயிருந்தது. வெண்பனி விழுந்து தரையில் ஓரடி உயரத்திற்குப் பூப்போல குவிந்து கிடந்தது. அம்மா தூய பனிக்குள் தனது கால்களை மிக மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்து வீதியின் ஓரமாக ஒரு முதிய வெண்ணிற வாத்துப் போல அசைந்து நடந்துவருவதை தனது காருக்குள் இருந்தவாறே குற்றவாளி கவனித்துக்கொண்டிருந்தான். அப்போது மழை தூறத் தொடங்கிற்று.

அம்மா தனது இரு கைகளையும் பக்கவாட்டில் ஆட்டியும் அசைத்தும் தனது உடலைச் சமன் செய்தவாறே வந்தார். முகத்தை வானத்தை நோக்கி அண்ணாந்து முகத்தில் மழைத் துளிகளை வாங்கிக்கொண்டார். அப்போது பனியில் சறுக்கிக் கீழே முழந்தாள் மடிய விழுந்தார். அம்மா சட்டெனத் தனது வலது கையைத் தரையிலே ஊன்றிக்கொண்டதால் முகம் அடிபடக் கீழே விழுவதிலிருந்து தப்பித்துக்கொண்டார். ஒருவாறு சமாளித்துக்கொண்டு அம்மா எழுந்திருந்து தன்னை யாராவது கவனிக்கிறார்களா என வெட்கச் சிரிப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தார். வீதியில் யாருமில்லை. சேலையைக் கணுக்கால் வரை தூக்கி ஏதாவது அடிபட்டிருக்கிறதா என அம்மா குனிந்து பார்த்தார். குற்றவாளி காருக்குள் இருந்து அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அம்மா தூய பனியை கைநிறைய அள்ளி, பந்துபோல் உருட்டிவிட்டு அதை நுனி நாக்கால் ஒருமுறை நக்கிப் பார்த்துவிட்டு அதை வீதியில் எறிந்து அந்த உருண்டை சிதறுவதைப் பார்த்துப் புன்னகைத்தார். அம்மா பனியோடு விளையாடியபடியே வீட்டை நோக்கி நடந்தார். வீதியோரத்தில் எதிர்வரிசையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களில் ஒன்றிற்குள் குற்றவாளி மறைந்திருந்து அம்மாவையே கவனித்துக்கொண்டிருந்தான்.

அம்மாவின் பெயர் மனோன்மணி. ஆனால் அவரை எல்லோரும்புஷ்பம் மிஸிஎன்றுதான் அழைப்பார்கள். யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியில் பிரசவ விடுதிக்குத் தலைமைத் தாதியாக அம்மா இருந்தார். அம்மா தேவதையைப் போல கருணையும் அன்பும் கொண்டவர் என அங்கே பெயர் வாங்கியிருந்தார். அம்மா அய்ந்தடி பத்து அங்குலம் உயரமுள்ளவர். எப்போதுமே நிமிர்ந்து கம்பீரமாக நடப்பார். சுத்தம் குறித்து அதீத கவனம். எப்போதும் தனது கைளையும் கால்களையும் கழுவியவாறேயிருப்பார். அவரது சருமத்தில் உரோமமோ மறுக்களோ இருக்காது. வீட்டிலிருக்கும்போது கூட மிகத் தூய்மையான ஆடைகளையே அணிந்திருப்பார். வீட்டுத் தரையையும் கதவுகளையும் சன்னல் கண்ணாடிகளையும் நாள் தவறாமல் சுத்தமாகத் துடைத்து வைப்பார்.

அம்மா தனது அய்ம்பதாவது வயதில் தாதிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வுபெற்றதற்கு அடுத்தநாள்தான் மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தது. அப்பா, அம்மாவைத் தனது மோட்டார் சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு ஒரேயொரு பெட்டியோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறினார். இயக்கம் விரைவிலேயே மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடும், தாங்கள் வீட்டிற்குத் திரும்பி வரலாம் என்று அப்பா நம்பியிருந்தார். அந்த இடப்பெயர்வு நடப்பதற்கு ஒரு வருடம் முன்பாகத்தான் அவர்களது ஒரே மகனை அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிவைத்திருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் கொடிகாமம் போனார்கள். அங்கேயிருந்த அப்பாவின் தங்கை வீட்டில் தங்கினார்கள். அப்பா கடுமையான கோபக்காரர். இராசரட்ணம் மாஸ்டர் என்றால் ஊருக்குள் மரியாதையும் அதைவிடப் பயமுமிருந்தது. தலைமை ஆசிரியராகயிருந்து ஓய்வு பெற்றபின்பு சிற்றூர் அவையில் தலைவராகயிருந்தவர். கொஞ்ச நாட்களில் இராணுவம் கொடிகாமத்தையும் பிடித்தது. இராணுவம் அம்மாவையும் அப்பாவையும் அவர்களது ஊருக்கே திருப்பி விரட்டிவிட்டது.

பின்னால், அம்மாவும் அப்பாவும் ஊரில்தான் இருந்தார்கள். மகன் இந்த நாட்டுக்கு வருமாறு எத்தனையோ தடவைகள் அழைத்தும் அப்பா இங்கே வருவதற்கு மறுத்துவிட்டார். எங்கள் இரண்டு பேருக்கும் போதுமான அளவு ஓய்வூதியப் பணம் கிடைக்கிறது, நாங்கள் எதற்கு அகதிகள் போல அந்நிய நாட்டில் சீவிக்கவேண்டும் என்பது அவருடைய வாதம். அம்மாவுக்கு மகனுடன் வந்து இருப்பதற்குத்தான் விருப்பமாயிருந்தது. அதற்காக அவர் பதினெட்டு வருடங்கள் அப்பாவை இடைவிடாமல் மன்றாடிக்கொண்டிருந்தார்.

அம்மாவின் அறுபத்தெட்டாவது வயதில்தான் அப்பாவுக்கு மனம் கொஞ்சம் இரங்கிற்று. சரி மகனுடன் போய் கொஞ்ச நாட்களிற்கு இருப்போம் என்றார். சென்ற வருடத்தின் பனிக்காலத்தில் அம்மாவும் அப்பாவும் இந்த நாட்டிற்கு வந்தார்கள்.

பேரனுக்கு ஏழு வயதாகியிருந்தது. பேரன் அவர்களது மகனின் சாயலில் இல்லாமல் அப்பாவின் சாயலிலேயே இருந்தான். அப்பாவுக்கு பேரன்மீது அப்படி ஓர் ஈர்ப்பு. இப்போது, ஊருக்குத் திரும்பிப் போகலாம் என அம்மா ஒருவேளை கேட்டாலும் அப்பா சம்மதியார். ஊரில் இருக்கும் வீட்டையும் காணி பூமிகளையும் அப்பாவின் தங்கையின் மகன் கவனித்துக்கொண்டிருக்கிறான்.

அப்பாவையும் அம்மாவையும் மகனும் மருமகளும் தெய்வங்கள் போல நடத்தினார்கள். மகன் விமானப் பராமரிப்புப் பொறியியலாளராக வேலை செய்கிறான். மருமகள் அம்மாவைப் போலவே மருத்துவத் தாதி. அந்த ஒரு காரணத்திற்காகவே அவளைக் கல்யாணம் செய்ததாக மகன் சொல்வான்.

அமைதியான மிகச் சிறிய பட்டினத்தில் அவர்களின் வீடு இருந்தது. அழகிய மாடிவீடு. வீட்டைச் சூழவரத் தோட்டம். வீட்டின் பின்புறம் சிற்றாறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அடிவளவுக் கதவைத் திறந்தால் அந்த ஆற்றில் காலை நனைக்கலாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கீழ்த்தளத்திலேயே விசாலமான அழகிய படுக்கையறையிருந்தது. அம்மாவுக்கென இருபது தமிழ்சனல்கள்இணைக்கப்பட்ட பெரிய தொலைக்காட்சி. அம்மாவின் பகல் பொழுதுகள் தொலைக்காட்சியில் தமிழ் நாடகத் தொடர்களைப் பார்ப்பதிலேயே கழியும். அப்பா எப்போதும் படிப்பறையில் புத்தகங்களிற்குள் மூழ்கியிருப்பார். அவர் பண்டைய ஈழத் தமிழரது பக்தி மரபு குறித்து ஆய்வு நூலொன்றை எழுதும் முயற்சியிலிருக்கிறார். அப்பா, வெள்ளிக்கிழமை காலைகளில் மட்டும் பேருந்தில் நீண்டதொரு பயணம் செய்து தலைநகரத்திலுள்ள அம்மன் கோயிலுக்குப் போவார். மதியமளவில் திரும்பி வரும்போது அந்தக் கிழமைக்கான மளிகைப் பொருட்களையும் இலங்கைக் காய்கறிகளையும் வாங்கி வருவார். மகனும் மருமகளும் பேரனும் பெரும்பாலும் இந்த நாட்டு உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவார்கள். மருமகள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சைவ உணவு சாப்பிடுவாள்.

மகனும் மருமகளும் தங்களிற்குள் இந்த நாட்டு மொழியில்தான் பேசிக்கொள்வார்கள். பேரனுக்கோ தமிழ் துண்டறத் தெரியாது. “நீங்கள் புருசனும் பெண்சாதியும் தமிழில் பேசிக்கொண்டால்தானே பேரனும் தமிழ் பேசுவான்என்பார் அப்பா. அந்த நேரத்தில் மட்டும் மகனும் மருமகளும் தமிழில் பேசிக்கொள்வார்கள்.

மகனும் மருமகளும் காலை ஏழு மணிக்கே ஆளுக்கொரு காரில் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள். பேரனைப் பராமரிக்கவும் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடவும் அழைத்து வரவும் முன்பொரு ஆபிரிக்கன் ஆயா இருந்தார். அம்மா வந்ததன் பின்பாக, அம்மா மகனோடு சண்டை போட்டு அந்த ஆயாவை வேலையால் நிறுத்திவிட்டு அம்மாவே அந்தப் பணிகளை ஏற்றுக்கொண்டார்.

இப்போது பேரனைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டுத்தான் அம்மா திரும்பி வருகிறார். பதினொன்றரை மணிக்குச் சென்று பேரனைத் திரும்ப அழைத்து வர வேண்டும். மற்றைய நாட்களில் அந்த நேரத்தில் அம்மா சமையலைக் கவனிக்க அப்பாதான் போய் பேரனைக் கூட்டிக்கொண்டு வருவார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே அவரும் புறப்பட்டுக் கோயிலுக்குப் போய்விட்டார். பாடசாலை விடுமுறைக்காலங்களில் பேரனையும் அழைத்துக்கொண்டு அப்பாவுடன் அம்மாவும் கோயிலுக்குப் போவதுண்டு. பேரன் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளையென்றாலும் அவனுக்கு இலங்கையானை மார்க் சோடாஎன்றால் பைத்தியம். கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நாட்களில் பேரனுக்கு இரண்டு போத்தல் யானைச் சோடாக்கள் நிச்சயமுண்டு. பனங்கொட்டையைக் கொண்டுபோய் சந்திரமண்டலத்தில் போட்டாலும் வடலி முளைக்கும் என்பார் அப்பா.

அம்மா வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போவதைக் குற்றவாளி பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது மழை சற்றே வலுக்கலாயிற்று. குற்றவாளி காருக்குளிருந்து இறங்கி குடையை விரித்து, குடையால் தனது முகத்தை மறைத்தவாறு வேகமாக நடந்து சென்று அம்மாவின் வீட்டின் முன்னின்று குடையை வாசலில் வைத்தான். மழை அவனைச் சற்று நனைத்தது. பின்பு குற்றவாளி தனது இடது கையால் அழைப்பு மணியை அழுத்தினான். அவனது வலது கையில் சிறிய ப்ளாஸ்டிக் பையிருந்தது.

அந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என அம்மா ஆச்சரியப்பட்டார். எப்போதும் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் குமிழ் கண்ணாடி வழியாக வெளியே பார்த்துவிட்டுத்தான் கதவைத் திறக்கவேண்டும் என மருமகள் சொல்லியிருந்தாள். ஆனால் அம்மா அதைப் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் இன்று அம்மா அந்தக் கண்ணாடிக் குமிழ் வழியே வெளியே பார்த்தபோது முப்பத்தைந்து வயதுகள் மதிக்கத்தக்க சற்று உயரம் குறைந்த சிவந்த நிறமுடைய இளைஞன் மழையில் நனைந்த கோலத்தில் நிற்பதைக் கண்டார். அவன் தமிழ் இளைஞனாகத் தெரிந்தான். அம்மா உடனேயே கதவைத் திறந்தார்.

குற்றவாளி ஈரமாகிவிட்ட தனது அடர்த்தியான சுருட்டைத் தலைமுடியை கையால் துவட்டியவாறே அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு மகனின் பெயரைச் சொல்லி அவர் இருக்கிறாரா எனக் கேட்டான்.

நீங்கள் யார் தம்பி?” என அம்மா கேட்டார்.

என்னுடைய பெயர் கபிலன், உங்களது மகனின் சிநேகிதன், எனக்குத் திருமணம் நடக்கயிருக்கிறது. அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன்என்றான் குற்றவாளி.

மழைக்குள் நிற்காதீர்கள்..உள்ளே வாருங்கள்எனக் கதவை அகலத் திறந்தார் அம்மா. குற்றவாளி தனது காலணிகளை கழற்றிவிட்டுத் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். அம்மா கதவை மூடினார்.

மகன்..இல்லையா அம்மா?”

இல்லைத் தம்பி..வேலைக்குப் போய்விட்டார்.. நீங்கள் இருங்கள்..”

அம்மா உள் அறைக்குப்போய் வெண்ணிறத் துண்டொன்றை எடுத்துவந்து தலையைத் துவட்டுமாறு குற்றவாளியிடம் கொடுத்தார்.

அப்போது குற்றவாளி தனது கைத் தொலைபேசியைக் காதில் வைத்திருந்தான்.

அம்மா மகனின் எண்ணுக்கு அழைத்தேன், அவர் எடுக்கிறார் இல்லையே

அம்மா சிரித்தார். “அவர் இப்பிடித்தான், வேலையில் இருக்கும்போதோ, வாகனம் ஓட்டும்போதோ தொலைபேசியை அநேகமாக எடுக்கமாட்டார். ஆனால் திரும்பக் கூப்பிடுவார். நீங்கள் கொஞ்சம் இருங்கள் நான் உங்களிற்கு கோப்பி எடுத்துவருகிறேன்என்று சொல்லிவிட்டு அம்மா சமையலறைக்குள்ளே போனார். குற்றவாளி இங்கிருந்தவாறே அம்மாவின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக் கவனித்தான்.

குற்றவாளி கிட்டத்தட்ட ஒரு மாதம் அந்த வீட்டைக் கண்காணித்திருந்தான். மகனும் மருமகளும் வேலைக்குப் போகும் நேரம், வெள்ளிக்கிழமை காலைகளில் அப்பா தவறாமல் கோயிலுக்குப் போவது, அன்றைய தினங்களில் காலை முழுவதும் அம்மா மட்டுமே தனியே வீட்டில் இருப்பது என எல்லாவற்றையும் அவன் அறிந்து வைத்திருந்தான். இப்போது உட்கார்ந்தபடியே வீட்டின் உட்புறத்தை மிகக் கவனமாகக் கவனித்தான்.

அம்மா கோப்பியைக் கொண்டுவந்து குற்றவாளிக்குக் கொடுத்துவிட்டு அவனுக்கு எதிராக அமர்ந்துகொண்டார். குற்றவாளி கோப்பியை வாங்கி ஒரு மிடறு குடித்துவிட்டு கோப்பையை மேசையில் வைத்துவிட்டு எழுந்தான்.

அம்மா நான் திருமண அழைப்பிதழை உங்களிடம் தருகிறேன். நீங்கள் மகனிடம் கொடுத்துவிடுங்கள். கண்டிப்பாக நீங்கள் எல்லோரும் எனது கல்யாணத்திற்கு வரவேண்டும்என்று சொல்லியவாறியே அம்மாவின் அருகில் வந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் பையைத் திறந்தான். அம்மா எழுந்து நின்று அழைப்பிதழைப் பெறுவதற்காக இரண்டு கைகளையும் நீட்டினார். குற்றவாளி ப்ளாஸ்டிக் பையிலிருந்து பளபளக்கும் நீண்ட கத்தியொன்றை எடுத்து அம்மாவின் முகத்துக்கு நேரே நீட்டினான்.

அம்மா திடுக்கிட்டுப்போய்என்ன தம்பிஎன்றார்.

பேசாமல் நாற்காலியில் உட்கார்என்றான் குற்றவாளி.

அம்மாவின் உதடுகள் ஒட்டிக்கொண்டன. அவரது கண்களிலிருந்து பொசுக்கென்று கண்ணீர் தெறித்தது. அவரது தேகம் நடுங்கியது.

குற்றவாளி மெல்லிய குரலில் ஆனால் கடுமையான தொனியில் சொன்னான்எடியே கிழட்டு வேசை, சொல்வது விளங்கவில்லையா, வாயை மூடிக்கொண்டு அசையாமல் இந்த இடத்திலேயே இருக்கவேண்டும். அசைந்தாயோ உன்னுடைய புண்டையில் கத்தியைச் சொருகுவேன்“.

அம்மா அப்படியே ரப்பர் பொம்மை போல மடிந்து நாற்காலியில் உட்கார்ந்தார். அவர் தனது கைகளால் முகத்தை மூடியபடியே விசும்பத் தொடங்கினார்.

குற்றவாளி கத்தியின் முனையால் அம்மாவின் உச்சந்தலையில் மெல்லத் தட்டியவாறே சொன்னான்:

மூச்சும் காட்டக்கூடாது! அலுமாரிச் சாவிகளெல்லாம் எங்கே?”

அம்மா அழுதுகொண்டே சொன்னார்:

நீங்கள் என்னுடைய மகனின் சிநேகிதன் என்பதால்தானே வீட்டுக்குள் விட்டேன்

குற்றவாளி தனது கையைச் சுழற்றி அம்மாவின் கன்னத்தில் பலமாக அறைந்தான். அம்மா கத்தக் கூட முடியாதவராக நடுங்கினார்.

சாவிகள் எங்கே?”

அம்மா எதிரிலிருந்த பெரிய மேசையைச் சுட்டிக் காட்டினார். அந்த மேசையில் சின்னதும் பெரிதுமாகப் பல இழுப்பறைகள் இருந்தன. குற்றவாளி அந்த மேசையின் அருகே குனிந்து மண்டியிட்டிருந்து மிக நிதானமாக ஒவ்வொரு இழுப்பறையாக ஆராய்ந்தான்.

குற்றவாளியின் முதுகை அம்மா பார்த்துக்கொண்டிருந்தார். அவன் எந்தக் கணத்திலும் தனது பார்வையை அம்மாவிடம் திருப்பலாம். அவனுக்கும் அம்மாவுக்கும் இடையே ஆறடி தூரம் மட்டுமேயிருந்தது. அம்மாவுக்கு அருகிலிருந்த ஒரு பீடத்தில் இரண்டடி உயரத்தில் தில்லையில் கூத்திடும் நடராஜரின் வெண்கலச் சிலையிருந்தது. அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான சிலை. அந்தச் சிலையையும் குற்றவாளி எடுத்துப் போய்விடுவான் என அம்மா நினைத்துக்கொண்டிருந்தபோதே அம்மாவின் வலதுகால் இரண்டி தூரத்தை ஒரேயடியாகப் பாய இரு கைகளும் சுழன்று நடராஜர் சிலையைத் தூக்க இடதுகால் மறுபடியும் இரண்டி முன்னே பாய, மண்டியிட்டிருந்து இழுப்பறைகளிற்குள் தேடிக்கொண்டிருந்த குற்றவாளி சத்தம் கேட்டுச் சடாரெனத் திரும்ப அவனது நடு நெற்றியில் நடராஜர்டங்என மோதினார்.

குற்றவாளி ஒரு விலங்கைப்போல உறுமிக்கொண்டே தனது நெற்றியை இடது கையால் பிடித்துக்கொண்டான். அவனது நெற்றியிலிருந்து இரத்தம் வடிந்தது. அவனது வாய் பாலியல் வசவுகளைச் சொல்லியபடியேயிருந்தது. அம்மா முகத்தில் அச்சமும் கோபமும் தெறிக்க அவனை வெறித்துப் பார்த்தார். அவரது கைகளிலே நடராஜர் இருந்தார். “போ வெளியேஎன்று அம்மா கத்தினார். அவன் மெதுவாக நடந்துசென்று அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தான். பொட்டு வைத்தது போல அவனது நெற்றியில் பிளவிருந்தது. அதிலிருந்து வடிந்த இரத்தம் அவனது கன்னமோடி அடர்த்தியான மீசையில் படிந்துகொண்டிருந்தது.

அவன் மெதுவாக நடந்து அம்மாவிடம் வந்துசிவபெருமான் எனக்கு நெற்றிக் கண்ணைத் திறந்திருக்கிறார்என்றான். அம்மா எதுவும் பேசாமல் தொலைபேசி அருகே சென்று இடது கையால் நடராஜரைத் தனது மார்போடு சேர்த்து அணைத்தவாறே வலது கையால் ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு தோளை உயர்த்தி ரிஸீவரைக் காதோடு அணைத்துக்கொண்டு எண்களை அழுத்தத் தொடங்கினார். அப்போது குற்றவாளிக்கும் அம்மாவுக்கும் நடுவில் பதினைந்து அடிகள் தூரமிருக்கும்.

அந்தத் தூரத்தை ஓநாய்போல குற்றவாளி ஒரே தாவாகத் தாவிக் கடந்து அம்மாவை வன்மத்துடன் கீழே தள்ளிவிட்டான். அம்மா குப்புறக் கீழே விழுந்தார். அவர் நடராஜர் சிலையைத் தன்னிடமிருந்து விலக விடவில்லை. குற்றவாளி அம்மாவை மல்லாக்கப் புரட்டிப் போட்டுவிட்டு அவரருகே குனிந்திருந்து அவரது முகத்தைப் பார்த்தான். அம்மாவின் கண்கள் வெறித்திருந்தன. ‘உன்னால் முடிந்ததைச் செய்துபார்என்ற ஏளனம் அந்தக் கண்களில் தெரிவதாகக் குற்றவாளி உணர்ந்தான். அவன் பற்களை இறுகக் கடித்துக்கொண்டு உதடுகளுக்குள் ஏதோ முணுமுணுத்தவாறே அம்மாவின் முகத்தில் ஓங்கி அறைந்தான். அம்மாவின் மூளை பளீரிட்டு அணைந்தது. அம்மாவின் கைகளிலிருந்து நடராஜார் வழுவிப் போனார். அம்மா மயங்கிப்போனார்.

குற்றவாளி அம்மாவை உலுக்கினான். அம்மா விறைத்த சவமாகக் கிடந்தார். அம்மாவின் சேலை மார்பிலிருந்து விலகிக்கிடந்தது. ரவிக்கை வலது பக்கத் தோளிலிருந்து சற்று விலகியிருக்க அந்த இடத்தில் அம்மாவின் மாசற்ற சருமத்திற்கு நடுவே பிரேஸியரின் கறுப்பு நிறப் பட்டை தெரிந்தது. குற்றவாளி மெதுவாகக் குனிந்து அந்தப் பட்டையை முகர்ந்தான். பின்பு அம்மாவின் முகத்தை முகர்ந்தான். அம்மாவில் தூய பனியின் குளிர்ச்சியை குற்றவாளி உணர்ந்தான்.

2

பதினொன்றரை மணிக்குப் பேரனைப் பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல யாரும் வராததால் பாடசாலையிலிருந்து மருமகளைத் தொலைபேசியில் அழைத்தார்கள். பதறிப்போன மருமகள் வீட்டு எண்ணிற்குத் தொலைபேசியில் அழைத்தபோது யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. மருமகள் உடனே தனது காரை எடுத்துக்கொண்டு விரைந்தாள். அவள் பாடசாலைக்குச் சென்றுகூடப் பார்க்காமல் முதலில் வீட்டிற்கே போனாள். கதவு மூடிக் கிடந்தது மருமகளிற்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது. அவள் தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனபோது, நடுக் கூடத்தில் அம்மா ஆடைகள் விலகிய நிலையில் அரை நிர்வாணமாக அசைவற்றுக் கிடந்தார். மருமகள் கூச்சலிட்டபடியே ஓடிச் சென்று முதலில் அம்மாவின் ஆடைகளைச் சரிப்படுத்தினாள். அதற்குப் பின்பு அம்மாவின் கையைப் பிடித்துப் பார்த்தாள். அம்மாவிற்கு உயிர் இருந்தது. மருமகள் அம்புலன்ஸை தொலைபேசியில் அழைத்தாள். அய்ந்து நிமிடங்களில் சைரன்களின் கூட்டு ஒலியால் அந்தச் சிறு பட்டினத்தையே அதிரச் செய்தவாறு அம்புலன்ஸும் காவற்துறையினரும் வந்து சேர்ந்தார்கள்.

மருத்துவமனையில் அம்மாவைச் சேர்த்துவிட்டு மருமகள் காத்துக்கொண்டிருக்கையில் மகன் வந்து சேர்ந்தான். சற்று நேரத்தில் மருத்துவர் இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்துவிட்டுச் சொன்னார்:

ஒன்றும் பயமில்லை. ஆனால் ஒரு கடுமையான குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அம்மா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்.” மருத்துவர் சொல்லிவிட்டு உதடுகளை மடித்துக்கொண்டு அவர்களைப் பார்த்தார்.

மகன் நாற்காலியிலிருந்து மெதுவாக எழுந்தான். நடந்துபோய் அந்த அறையின் கதவினருகே நின்று மருத்துவரைப் பார்த்தான். அவனின் பார்வை மருத்துவரை அறையிலிருந்து வெளியேற அனுமதிக்க மாட்டேன் என்பது போலிருந்தது. மகன் மூச்சுவிடச் சிரமப்படுபவன்போல் உடலைக் குலுக்கிக்கொண்டான். மருமகள் எழுந்துபோய் அவனது கைகளைப் பிடித்தபோது அவன் வெடித்து வாயைக் கைகளால் பொத்தியவாறு அழுதான். அம்மா கொடுத்த பால் அவன் கண்களில் நீராக வழிந்தது. அவனைத் தேற்றுவதற்கு மருத்துவர் படாத பாடுபட்டார்.

மருமகள் தனது கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்து தனது கணவனைப் பார்த்துக் கும்பிடுவது போல உயர்த்தினாள். அவளது கைகள் கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருந்தன. ” அம்புலன்ஸில் வரும்போதே மாமிக்குச் சாடையாக மயக்கம் தெளிந்தது. நான் என்ன நடந்தது மாமி என்று கேட்டதற்கு, ‘கள்ளன் வந்து என்னை அடித்துவிட்டான் நான் மயங்கிப்போனேன்என்று சொல்லிவிட்டு மறுபடியும் மாமி மயக்கமாகிவிட்டார்என்றாள் மருமகள்.

மருத்துவர் தலையை ஆட்டிக்கொண்டார். “அவரது உடலைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் மயக்கமாகயிருந்த நிலையில்தான் வல்லுறவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறதுஎன்றார் மருத்துவர்.

இப்போது மகன் தனது கண்களை அழுந்தத் துடைத்துவிட்டுக்கொண்டான். அவன் மருத்துவரைப் பார்த்து, அம்மா வல்லுறவு செய்யப்பட்ட விசயம் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ எக்காரணம் கொண்டும் தெரியக் கூடாது என்று கேட்டுக்கொண்டான்.

ஆனால் இது காவற்துறை தொடர்புள்ள விடயாமாயிற்றே, எப்படி மறைக்க முடியும்?” என்று மருத்துவர் கேட்டார்.

அவர்களிடமிருந்தும் மறைத்துவிடலாம்என்றாள் மருமகள்.

மகன் அவளைப் பிடித்துத் தூரத் தள்ளிவிட்டான்.

இல்லை..இந்தக் கொடூரத்தைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். அவன் எக்காரணம் கொண்டும் தண்டனையிலிருந்து தப்பிக்கக் கூடாது. “

அப்படியென்றால் இந்த விசயத்தை மாமியிடமிருந்தோ மாமாவிடமிருந்தோ எப்படி மறைக்க முடியும்?”

முடியும்..நான் காவற்துறை அதிகாரிகளிடம் பேசுகிறேன். இந்த விசயம் தெரிந்தால் என் அம்மா தற்கொலை செய்துகொள்வார் என்ற உண்மையை நான் அவர்களிற்குச் சொல்லி அவர்களிடம் இரந்து நிற்பேன். அவர்கள் எனது அம்மாவைக் காப்பாற்றுவார்கள்என்று அழுதுகொண்டே மகன் சொன்னான்.

காவற்துறை அலுவலகத்தில் உயரதிகாரியோடு மகனுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடாகியது. அந்த அமைதியான பட்டினத்தில் நடந்த அந்தக் கொடூரமான குற்றம் குறித்து அதிகாரி கடுமையான கோபத்திலும் வருத்தத்திலுமிருந்தார். எனினும் அவர் மகனோடு ஆதரவாகப் பேசி அவனது கோரிக்கையைக் கவனமாகக் கேட்டார்.

திருவாளர் சஜிதரன், உங்களது வேதனையையும் மனவுணர்வையும் நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். அதை மதிக்கிறேன். சட்டத்திற்கு விரோதமில்லாத எந்த உதவியையும் நான் உங்களிற்குச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விடயத்தை உங்களது பெற்றோர்களிடமிருந்து மறைத்துவிட சட்டத்தில் கூட வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன். நான் இது குறித்துப் பேச நீதிபதியிடம் உங்களை அழைத்துப்போவேன். எங்கள் எல்லோரது முழுச் சக்தியைச் செலவு செய்து இந்த விசயத்தை உங்களது பெற்றோரிடமிருந்து மறைக்க முயற்சிப்போம். உங்களது பெற்றோர்களிற்கு இந்த நாட்டு மொழி தெரியாமலிருப்பதும் ஒருவகையில் எங்களுக்கு உதவி செய்யும். பாலியல் வல்லுறவுக் குற்றம் நிகழ்ந்ததற்கான வலுவான மருத்துவ அறிக்கை ஆதாரங்கள் இருப்பதால் குற்றவாளி தப்பிக்க முடியாது. இது எங்களுக்குக் கொஞ்சம் விநோதமானதும் சிக்கலானதுமான வழக்குத்தான். எனினும் சட்டத்தை மனிதாபிமானம் வென்றதாகச் சில பதிவுகள் எங்களது துறையிலுமுண்டு. எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் நாங்கள் உங்களிற்குச் செய்வோம்என்றார் காவற்துறை அதிகாரி.

மகன் கைகுலுக்கக் கைகளை நீட்டியபோது அதிகாரியும் தனது கைகளை நீட்ட அதிகாரியின் கரத்தைப் பற்றி அதில் குனிந்து மகன் முத்தமிட்டான். அவனது கண்ணீர் அந்த அதிகாரியின் கையைக் கழுவிற்று.

3

அம்மா நான்கு நாட்கள் மட்டுமே மருத்துவமனையிலிருந்தார். அவரது உடலிலிருந்த வீக்கங்கள் வற்றிவிட்டன. வலது கண்ணுக்குக் கீழே மட்டும் சருமம் கொஞ்சம் கறுத்திருந்தது. அவர் பழையபடி கலகலப்பாகச் சிரித்த முகத்துடன் வீட்டை வளைய வரத் தொடங்கினார். அம்மா விரைவிலேயே தேறியதால் அப்பாவுக்கும் மகிழ்ச்சி.

அந்தச் சம்பவம் நடந்தபோது குற்றவாளியால் அதிகம் பொருட்களைத் திருட முடியாது போயிற்று. நகைகளும் பெறுமதியான பத்திரங்களும் வங்கிப் பெட்டகத்தில் பாதுகாப்பாகயிருந்தன. இரண்டு மடிக்கணினிகளையும் வெறும் சில்லறைச் சாமான்களையும் மட்டுமே குற்றவாளியால் எடுத்துப்போக முடிந்திருக்கிறது. எடுத்துப் போன வங்கி அட்டைகளை வைத்தும் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குற்றவாளி, மகன் குடிக்கும் உயர்ரக விஸ்கிப் போத்தல் ஒன்றையும் திருடிச் சென்றிருந்தான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மகனின் ஒரு மாதச் சம்பளத்தில் பாதிக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களே மொத்தமாகத் திருடப்பட்டிருந்தன.

ஆனால் அந்தச் சம்பவத்திற்குப் பின்னாக மகன் எப்போது பார்த்தாலும் இருண்ட முகத்தோடு இருந்தது அம்மாவையும் அப்பாவையும் வருத்தியது. மகன் அதிகமாகக் குடித்தான். அப்பாவுக்கு முன்னால் ஒருநாளும் குடியாதவன் அவர் இருப்பதையும் சட்டை செய்யாமல் குடித்து வெறித்தான். வேலைக்கும் ஒழுங்காகப் போகாமல் அடிக்கடி படுக்கையிலேயே கிடந்தான். அம்மாவோடும் அப்பாவோடும் ஒன்றிரண்டு வார்த்தைகளிற்கு மேல் அவன் பேசுவதில்லை.

அம்மா ஆனமட்டும் மகனைத் தேற்றப் பார்த்தார். தனக்கு இப்போது உடல் முழுமையாகத் தேறிவிட்டதென்றும் திருடனுக்குத் தானும் செம்மையான அடி கொடுத்தாரென்றும் அம்மா சிரித்தவாறே சொன்னார். “இதுவொரு சிறிய விபத்து, அவ்வளவும்தானே.. அதற்கு எதற்கு நீ இப்படிக் கவலைப்படுகிறாய்?” என்று மகனின் நாடியைத் தடவி விட்டவாறே அம்மா கேட்டார்.

மகன் அம்மாவின் கண்களை நேருக்கு நேராகச் சந்திக்க அஞ்சினான். “அம்மா உங்களிற்கு நிகழ்ந்திருக்கும் கொடுமையை நீங்கள் அறிய நேர்ந்தால் நீங்கள் செத்தே போய்விடுவீர்கள்என அவன் மனதுக்குள் அழுதான். மருமகள் இப்போது வெள்ளிக்கிழமைகளில் சைவ உணவு சாப்பிடுவதில்லை. அதை மகன் கவனித்தான்.

அம்மா பேரனோடு விளையாடியபடியே வழமைபோலவே அவனைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார். அப்பாவுக்குச் சுவையாகச் சமைத்துப் போட்டார். எப்போதும் போலவே வீடு வாசலையும் தோட்டத்தையும் மிகத் தூய்மையாக வைத்திருந்தார். அப்பா தனது ஆய்வு நூலை எழுதி முடிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். மகன் ஒவ்வொரு நாள் மாலையிலும் காவற்துறை அதிகாரியைச் சந்தித்து குற்றவாளியைக் கைது செய்துவிட்டீர்களா என விசாரித்துக்கொண்டேயிருந்தான்.

ஒருநாள் அதிகாலையில் படுக்கையிலிருந்தபோது மருமகள் தனது கணவனின் மார்பைத் தடவி விட்டபடியே அவனிடம் தயக்கத்துடன் பேசினாள்.

நான் ஒன்று சொன்னால் நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது

ம்

உங்களைப் பார்த்தால் என்னால் சகிக்க முடியவில்லை. சரியாகச் சாப்பிடுகிறீர்களில்லை, தூங்குவதில்லை, ஆடைகளைக் கூடச் சரியாக நீங்கள் அணிவதில்லை. நான் புரிந்துகொள்கிறேன்அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் நிலைகுலைந்து போய்விடுகிறீர்கள். கொஞ்ச நாட்களிற்கு அம்மாவையும் அப்பாவையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தால் என்ன?”

மருமகளின் கன்னத்தில் சடாரென ஓர் அறை விழுந்தது. அந்த அதிகாலை வேளையில் வெறி பிடித்தவன் போல வண்டியை எடுத்துக்கொண்டு மகன் காவல் நிலையத்தை நோக்கி படுவேகமாகச் சென்றான். அவன் காவற்துறை மீது வசவுகளைச் சொல்லிக்கொண்டே வண்டியைச் செலுத்தினான். மகன் காவல் நிலையத்தை அடைவதற்கு நூறு மீற்றர்கள் முன்பாக உறைபனியில் சறுக்கி வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிக் கவிழ்ந்தது.

மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கிறான் என்ற செய்தி வந்தபோது அம்மா மயங்கி விழுந்தார். மருமகள் வீறிட்டுக் கத்தினாள். அப்பா தாளாத துயரத்துடனும் பதற்றத்துடனும் மயங்கி விழுந்துகிடக்கும் அம்மாவைப் பார்ப்பதா அல்லது சுவரோடு தலையை மோதிக்கொண்டு அலறும் மருமகளைப் பார்ப்பதா அல்லது படுக்கையிலிருந்துகொண்டே தேம்பியழும் பேரனைப் பார்ப்பதா எனத் தவித்துப் போனர். எனினும் இனி நடக்கவேண்டிய காரியங்களைச் செய்வதற்கு மருமகளையே முதலில் தேற்ற வேண்டும் என்பது அவரது புத்திக்குத் தெரிந்தது. அவர் மருமகளை அணைத்துக்கொண்டு அவளை ஆறுதல்படுத்த முயன்றார். அப்போதுதான் மருமகளின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் அவளை அறியாமலேயே உருண்டு வந்தன:

அய்யோ மாமா.. மாமிரேப்செய்யப்பட்ட நாளிலிருந்தே உங்களது மகன் நிதானமில்லாமல்தான் கிடக்கிறார்.. நான் பாவி அவருடைய மனம் நோகக் கதைத்து அவரைச் சாவுவரை துரத்திவிட்டேனே!”

3

ஒருமாத தீவிர சிகிச்சைக்குப் பின்பு மகன் ஓரளவு தேறி வீட்டுக்குத் திரும்பினான். முன்னிலும் இப்போது அவன் நிதானம் இழந்திருந்தான். எப்போதும் அழுக்கான ஆடைகளையே அணிந்திருந்தான். சவரம் கூடச் செய்வதில்லை. ஆனால் நாள் தவறாமல் காவற்துறை அதிகாரியைத் தொலைபேசியில் அழைத்துகுற்றவாளியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?” எனச் சண்டை போட்டான். தனது அம்மா பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் தனது மனைவியின் வாயிலிருந்து தனது தந்தைக்குத் தெரிந்திருப்பதை அவன் அறியாமலேயேயிருந்தான்.

மகன் வீட்டுக்கு வந்ததும் அம்மா பழையபடி உற்சாகமான நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்பினார். ஆனால் இப்போது அப்பா, அம்மாவுடனோ மகனுடனோ மருமகளுடனோ எதுவும் பேசுவதில்லை. ஏதாவது கேட்டால் ஆம், இல்லை என்பதற்கு மேல் ஒரு சொல் அவரது வாயிலிருந்து வராது. வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவதுமில்லை. அப்பா இப்போது புத்தகங்கள் படிப்பதில்லை. எப்போதும் வீட்டிற்குப் பின்னாலிருக்கும் ஆற்றங்கரையிலேயே இருக்கிறார். இருட்டானதற்குப் பின்பும் அங்கேயே அசையாமல் இருப்பார். யாராவது போய் வீட்டிற்குக் கூட்டிவருவார்கள்.

மகன் தேறிவருகிறான், கவலைப்படாதீர்கள், உங்களது புத்தகத்தை எழுதி முடியுங்கள், கோயிலுக்குப் போய்வருவோம் வாருங்கள்.. என்றெல்லாம் சொல்லி அப்பாவைச் சமாதானப்படுத்த அம்மா முயன்றுகொண்டிருந்தார். ஆனால் அப்பா ஆற்றங்கரையிலேயே இருந்தார்.

ஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு அப்பா படுக்கைக்குப் போனார். பத்துமணிபோல அம்மா வந்து பார்த்தபோது அப்பா கண்களை மூடிக்கிடந்தார். அம்மா, அப்பாவின் நெற்றியைத் தடவிக்கொடுத்துவிட்டு அருகில் படுத்துக்கொண்டார். இரவு திடீரென அம்மா தூக்கத்திலிருந்து விழித்தபோது அருகில் அப்பா இல்லாததைப் பார்த்தார். அம்மா மெல்ல எழுந்துபோய் கதவைப் பிடித்துக்கொண்டு வெளியே பார்த்தார். அப்பாவின் படிப்பறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஒரு புன்னகை ஓடி அம்மாவின் முகத்தில் உறைந்தது. ” சந்நிதியானேஎனச் சொல்லிக்கொண்டே அம்மா திரும்பவும் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டார். அசதி அவரது கண்களை அமுக்கிற்று.

அதிகாலையில் அம்மா விழித்தபோதும் அப்பா அருகிலில்லை. அம்மா எழுந்து நடந்துபோய் படிப்பறையைப் பார்த்தார். அங்கே இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அம்மா பல் துலக்கி, முகம் கழுவிவிட்டு கோப்பி தயாரித்து எடுத்துக்கொண்டு சென்று படிப்பறையின் கதவைத் தள்ளித் திறந்தார். அங்கே அப்பா இல்லை.

அம்மா வீடு முழுவதும் அப்பாவைத் தேடிப் பார்த்துவிட்டுப் போய், மகனின் அறைக் கதவைத் தட்டினார். மருமகள் கதவைத் திறந்தபோது, ” இன்று வெள்ளிக்கிழமையா?” என்று அம்மா கேட்டார். அன்று சனிக்கிழமை. குளிரின் அளவு மைனஸ் ஏழு டிகிரி.

வீட்டுக்குப் பின்னாலுள்ள ஆற்றங்கரையில்தான் அப்பாவின் உடல் விறைத்துப் போய்க்கிடந்தது. கொலையோ தற்கொலையோ அல்ல. குளிரில் உடல் விறைத்து மரணம். அந்த வீட்டில் அழுவதற்குக் கூட யாருக்கும் சக்தியிருக்கவில்லை. அப்பாவின் உடலை மயானத்தில் எரியூட்டவிருந்த தருணத்தில் மருமகள் அம்மாவை அணைத்துக்கொண்டுஅழுதுவிடுங்கள் மாமி, எல்லாவற்றையும் அழுது தீருங்கள்என்றாள்.

அந்த வீடு ஒளியற்றுக் கிடந்தது. அம்மா எப்போதும் போல வீட்டைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். மகனையும் மருமகளையும் ஆறுதல் சொல்லித் தேற்றிக்கொண்டேயிருந்தார். அப்பாவும் இல்லாத இடத்தில் தாய்க்குத் தாயாகவும் தகப்பனுக்குத் தகப்பனாகவும் அவர்களிற்குத் தான் இருக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வு அம்மாவிடம் மிகுந்திருந்தது. எப்போதும் போல பேரனுடன் விளையாடியவாறே அவனைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார். பேரன் இப்போது கொஞ்சம் தமிழ் பேசப் பழகியிருந்தான்.

அப்பா இறந்த பதினாறாவது நாள் காவற்துறை அதிகாரியிடமிருந்து மகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டைக் கொள்ளையடித்து, அம்மாவைப் பாலியல் வல்லுறவு செய்ததாகத் தாங்கள் சந்தேகிக்கும் ஒரு நபரைக் கைதுசெய்துவிட்டதாக அந்த அதிகாரி சொன்னார். அந்தச் செய்தியைக் கேட்டதும் மகனுக்கு இன்னும் வெறி அதிகமாகியது. “நான் அந்த நாயைப் பார்க்க வேண்டும்என்று மகன் தொலைபேசியில் கூச்சலிட்டது அந்த வீடு முழுவதும் கேட்டது. “இந்த வீடு பேய் வீடாக மாறிக்கொண்டிருக்கிறதுஎன மருமகள் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள். கடந்த சில நாட்களாகவே விவாகரத்து குறித்த எண்ணம் அவளை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

காவலதிகாரி ஓர் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்த நாள் குளிர்காலத்தின் இறுதி நாளாகயிருந்தது. மகன், அம்மாவிடம் எந்த விபரமும் சொல்லாமல்அம்மா நாங்கள் எல்லோரும் வெளியில் போய்விட்டு வருவோம்என்று முணுமுணுத்தான். அம்மாவின் முகம் மகிழ்ச்சியால் பொங்கிற்று. எத்தனையோ நாட்களிற்குப் பிறகு அவர்கள் குடும்பத்தோடு வெளியே கிளம்புகிறார்கள். அம்மா எப்போதும் போல தூய ஆடைகளை அணிந்து உற்சாகத்துடன் தயாரானர். வண்டியை மருமகள் ஓட்டினாள். அவளுக்கு அருகில் மகன் வெறிபிடித்தவன் போலயிருந்தான். பின் இருக்கையில் அம்மா பேரனோடு விளையாடிக்கொண்டிருந்தார்.

அடையாள அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. மகன் எதுவும் பேசாமல் மவுனமாயிருக்க மருமகள்தான் அம்மாவுக்கு எல்லாவற்றையும் விளங்கப்படுத்தினாள். திருடனைப் பிடித்துவிட்டாகவும் அவனை அம்மா அடையாளம் காட்டவேண்டும் என்றும் அவள் சொல்லச் சொல்ல அம்மா அவள் சொல்வதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அம்மா அந்தக் குற்றவாளியை நினைத்துக்கொண்டார். அவனின் கண்கள் உடனடியாகவே அவரது ஞாபகத்தில் வந்தன. சில நொடிகளிலேயே அவனது மொத்த உருவமும் தெளிவாக அவருக்கு ஞாபகத்தில் வந்தது.

ஆனால் அம்மா நினைத்திருந்ததுபோல அடையாள அணிவகுப்பில் அவரால் இலகுவாக குற்றவாளியை அடையாளம் காணமுடியவில்லை. கண்ணாடியால் தடுக்கப்பட்ட ஓர் அறைக்கு வெளியே அம்மாவும் காவற்துறை அதிகாரிகளும் நின்றிருந்தார்கள். கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கம் இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர்கள் அருகருகாக நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் சந்தேக நபர். மற்றவர்கள் டம்மி நபர்கள்.

அம்மா கண்ணாடித் தடுப்புக்குள்ளால் உற்றுப் பார்த்தார். அந்த நான்கு பேர்களிடையே குற்றவாளி இல்லாதது போலத்தானிருந்தது. அம்மாவின் முகபாவனையைக் கவனித்த தலைமைப் புலனாய்வு அதிகாரி, அந்த நால்வரையும் பக்கவாட்டில் திரும்பி நிற்குமாறு சைகை செய்தார். அம்மாவால் குற்றவாளியை அடையாளம் காணமுடியவில்லை. அதிகாரி மறுபடியும் நால்வரையும் பழைய நிலையில் திரும்பி நிற்குமாறு சைகை செய்தார். அம்மா கொஞ்சம் யோசித்துவிட்டு அந்த நால்வரும் கண்ணாடித் தடுப்பை இன்னும் நெருங்கி வரவேண்டும் என்பது போல அதிகாரியிடம் சைகை செய்தார். அந்த நால்வரும் இப்போது கண்ணாடித் தடுப்புக்கு மிக அருகே வந்தார்கள். இப்போது அவர்களிற்கும் அம்மாவுக்கும் இடையில் ஓரடி தூரமேயிருந்தது. அந்த நால்வர் வரிசையில் மூன்றாவதாக இருந்தவனின் தலைமுடி மிகக் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவனது முகம் மழுங்கச் சிரைக்கப்பட்டிருந்தது. அவனது நடு நெற்றியில் அம்மா நடராஜர் சிலையால் தாக்கியதால் உண்டான வடு இருந்தது. அவனது கண்கள் கண்ணாடித் தடுப்பை ஊடுருவி அம்மாவை அருவருப்போடு பார்த்தன. அம்மாவால் அந்தப் பார்வையை எப்படி மறக்கமுடியும்.

தரையில் ஓரடி உயரத்திற்குத் தூய பனி கொட்டியிருந்த, மழை பெய்துகொண்டிருந்த அந்த வெள்ளிக்கிழமை காலையில் குற்றவாளி அம்மா மீது தனது உடற் பாரம் முழுவதையும் கிடத்தித் தனது இரண்டு கைகளாலும் அம்மாவது கால்களை விரித்துப் பிடித்தபடி தனது முகத்திலிருந்து வடிந்த இரத்தமும் கழுத்திலிருந்து வடிந்த வியர்வையும் அம்மாவின் முகத்தில் சிந்த அம்மாவைப் புணர்ந்துகொண்டிருந்தபோது அம்மாவுக்கு மயக்கம் தெளிந்துவந்தது. அவர் அந்தக் குற்றவாளியிடம் நான்கு சொற்கள் பேசினார். அப்போது அந்தக் குற்றவாளி அம்மாவின் கண்களை அருவருப்புடன் பார்த்தவாறே அம்மாவின் இடது காலைப் பற்றியிருந்த தனது கையை வேகமாக எடுத்து அம்மாவின் முகத்தில் அறைந்தான். அருவருப்பைக் கொப்பளித்த அவனது கண்களைப் பார்த்தவாறே அம்மா மீண்டும் மயங்கிப்போனார். மயங்குவதற்கு முன்பாக அம்மா குற்றவாளியிடம் இந்தச் சொற்களைச் சொல்லியிருந்தார்:

நான் உனது அம்மா மாதிரியல்லவா

தலைமைப் புலனாய்வு அதிகாரி ஓரடி முன்னால் வந்து தனக்கு அருகில் நின்று தன்னையே ஆர்வத்துடன் கவனிப்பதை அம்மா உணர்ந்தார். உடனேயே அம்மாவினது கண்கள் குற்றவாளியிடமிருந்து விடுபட்டு நான்காவது நபரிடம் சென்றன. பிறகு, அம்மா அதிகாரியிடம் ஆங்கிலத்தில் சொன்னார்:

இவர்களிடையே அந்தக் குற்றவாளி இல்லை“.

(‘காலம்டிசம்பர் 2014- இதழில் வெளியான கதை)


VN:F [1.9.4_1102]
Rating: 8.0/10 (9 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +5 (from 5 votes)
மாதா, 8.0 out of 10 based on 9 ratings
5 comments to மாதா
 • ஸ்ரீவிஜி

  அம்மாதானேமன்னிப்பார்.. அருமையான கதை

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +2 (from 2 votes)
 • Luxman

  புலம்பெயர் வாழ்வில் நடக்கிற கதைக்களம். கதையின் யதார்த்தம் நமக்குள் நடப்பது போல் சூழ்ந்து கொள்கிறது.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • siva surya

  yenaku ammavin nilai purigirathu aanalum inimaelum avan magan pithhu pidithar pol dhanae sutruvar manaivi magan iruvarkum manadhalavil kasapana tharunam erpattachae idhu innum thodarnthaal vivagarathu yaerpadum aalava

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • சக்திவேல் லோகநாதன்.

  அவனுக்கு அந்த நான்கு சொற்களே போதுமானது தான்.
  அதுவே அவனுக்கு மிகப்பெரிய-சரியான தண்டனை.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • Jagapriyan Somasundaram

  உடலில் மலம் பட்டால் அதனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அம்மாவுக்கு இருக்கும் மனப்பக்குவம் ஏனையோருக்கு இருக்கவில்லை. குற்றவாளியை அம்மா மன்னித்திருக்கத்தேவையில்லை. அம்மாவுக்கு சமூக அக்கறையும் இருக்கவேண்டும்.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner