பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
January 22nd, 2015 | : கட்டுரைகள் | Comments (2)

அப்பையா

(பாரிஸில் , 04 சனவரி 2015-ல் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடத்தியஎஸ்.பொ. நிழலில் சிந்திக்கும் தினத்தில்நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.)

இந்த நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் தோழர்களே, நினைவுரைகளையும் ஆய்வுரைகளையும் நிகழ்த்திய தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவரையும் பணிவுடன் வணங்குகின்றேன்.

ஆறுமுகம் சண்முகம் பொன்னுத்துரை என்ற எஸ்.பொ. அவர்கள் ஈழ இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் மிக முதன்மையான எழுத்தாளுமை என்பதில் யாருக்கும் அய்யப்பாடு இருக்க முடியாது. அவ்வாறு யாருக்காவது அய்யப்பாடுகள் இருப்பின் அவர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் அரிச்சுவடியைக் கூட அறியாதவர்கள், அவர்கள் வெறும் கலை இலக்கியப் போலிகள் அல்லது வரட்டுச் சித்தாந்தவாதிகள் என்பதை என்னால் அய்யப்பாடற்ற வகையில் கூறமுடியும். அவசியமானால் நிறுவவும் ஏலும்.

இன்னொருபுறத்தில் எஸ்.பொ. அவர்களின் அரசியற் செயற்பாடுகளும் அவரது நற்போக்கு இலக்கியக் கோஷமும் அவர் அவ்வப்போது உதிர்த்த அரசியல்பண்பாட்டியல் கருத்துகளும் விவாதத்திற்கும் மறுபரிசீலனைகளிற்கும் உரியவை என்பதையும் எவரும் மறுப்பதற்கில்லை. அவற்றில் நெல்லுமுண்டு புல்லுமுண்டு எள்ளுமுண்டு கொள்ளுமுண்டு. அதை எஸ்.பொ. அவர்களே மறுக்க ஒண்ணார். அவர் தன்னைக் காலத்திற்குக் காலம் சுயவிமர்சனம் செய்துவந்தவர்தான். அபிப்பிராயங்களைத் திருத்திக்கொள்ளல் சந்தர்ப்பவாதமல்ல, மாறாக அவை செப்பங்களே என்றவர் அவர்.

எஸ்.பொ அவர்களுடைய படைப்பாளுமை குறித்தும் அவரது அரசியல் செல்நெறிகள் குறித்தும் இங்கே நிறையவே பேசியிருக்கிறீர்கள்.எனக்குப் பின்பும் பேச இருக்கிறீர்கள். உணர்வுபூர்வமான உவத்தலை மட்டுமே அல்லாமல் கறாரான காய்தல்களையும் இந்த அவையின் முன்னே வைத்திருக்கிறீர்கள். நான் , எனக்கும் எஸ்.பொ. அவர்களிற்குமான உறவை முன்வைத்து இங்கே சில வார்த்தைகளைச் சொல்லி அவருக்கான எனது அஞ்சலியைச் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

எஸ்.பொ. எண்பத்தியிரண்டு வருடங்கள் நிறைவாக வாழ்ந்தவர். யாழ்ப்பாணத்தின் பண்டாரக்குளத்தடியில் பிறந்து, கன்னாதிட்டியிலும் சேணிய தெருவிலும் வளர்ந்து, யாழ்ப்பாணத்தின் சாதிய இரும்புக் கதவுகளை முட்டித் திறந்துகொண்டு சென். பற்றிக்ஸ் கல்லூரிக்குள்ளும் பரமேஸ்வராக் கல்லூரிக்குள்ளும் முதல் தலித் மாணவனாக நுழைந்து, மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ ஊழியம் செய்து, சென்னையில் கல்வி கற்று, ஊறாத்துறையிலும் கொழும்பிலும் வாத்தியாராகயிருந்து, மட்டக்களப்பில் மணம் செய்து, நைஜீரியாவில் ஆங்கல இலக்கியம் கற்பித்து, சென்னையிலே பதிப்பகம் நடத்தி, சர்வதேசம் முழுதும் பயணித்து இலக்கிய ஊழியம் நடத்தி, அவுஸ்ரேலியாவில் மறைந்துபோனவர்.

அவருடைய இந்த நீண்ட வாழ்வில் நான் அவரை இரண்டேயிரண்டு மணிநேரங்கள் மட்டுமே நேரில் சந்தித்து ஒரு நேர்காணலிற்காக உரையாடியிருந்தேன். அந்த நேர்காணல் ஏடாகூடமாக முடிந்து போனது. அந்த நேர்காணலிற்கு நான்வானத்தால் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய கதைஎனத் தலைப்பிட்டிருந்தேன். அதற்காக எஸ்.பொ. ஒருபோதும் என்னை மன்னிக்கவேயில்லை. நான் செய்தது ஒருவகையில் குருநிந்தனையே. அது குறித்த எனது வருத்தத்தைப் பதினைந்து வருடங்களிற்குப் பின்பாக சென்ற ஒக்டோபர் மாதம் தான் நேர்காணல் தொகுப்பு நூலொன்றின் முன்னுரையில் தெரிவித்திருந்தேன். எஸ்.பொவுக்கு அந்தவருத்தம்படிக்கக் கிடைத்திராது.

எஸ்.பொ. அவர்களை எனது முதன்மையான இலக்கிய ஆசான் என்று நான் நேர்காணல்களில் குறிப்பிடுவதுண்டு. நவீன தமிழ் இலக்கியம் குறித்து நான் பேச நேரிட்ட தருணங்களிலெல்லாம் அங்கே முதலாவது பெயராக எஸ்.பொ. தானிருந்தார். சில வருடங்களிற்கு முன்பாக அவருக்கு கனடாவில் இயல் விருது கிடைத்தபோது நான் இவ்வாறு எழுதினேன்:

எஸ்.பொ. பெற்றுக்கொள்வதால் இம்முறை இயல் விருது கவுரவம் பெறுகிறது. விருதுபெறும் துரோணாச்சாரியாரை இந்த ஏகலைவன் வணங்குகின்றான்என்றெழுதினேன்.

நீ ஏகலைவன் என்றால் அர்ச்சுனன் யார்? கலாமோகனா ? என்றெல்லாம் நீங்கள் குறுக்குக் கேள்வி கேட்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். இதெல்லாம் ஒரு உவமான உவமேயத்திற்காகச் சொல்வதுதான். ஏகலைவனதும் அர்ச்சுனனதும் பாத்திரங்களில் வேண்டுமென்றால் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் எஸ்.பொ. வித்தைக்கார துரோணாச்சாரியார் என்பதிலும் அவர் நேரடிச் சீடர்களையும் என்போன்ற மானசீகச் சீடர்களையும் உருவாக்கிய இலக்கிய மூப்பர் என்பதிலும் உங்களிற்குச் சந்தேகமே இருக்க முடியாது. சற்றே காவிய அவலச்சுவையுடன் சொன்னால், தனது பாசத்திற்குரிய மகன் அசுவத்தாமன் போரில் கொல்லப்பட்டான் என்ற சேதியைக் கேட்டவுடன், கற்ற அனைத்து வித்தைகளையும் கைவிட்டு களத்திலே மயங்கி தரையிலே பொத்தென உட்கார்ந்த துரோணாச்சாரியாருடன் எஸ்.பொ. அவர்களையும் ஒப்பிடலாம். அதன்பின்பு துரோணாச்சாரியார் எழுந்திருக்கவேயில்லை.

என்னுடைய இந்த அஞ்சலி உரைக்கு நிகழ்வுநிரலில் நான்அப்பையாஎன்ற தலைப்பை இட்டிருந்தேன். எஸ்.பொ.வுடைய பிரதிகளிலே நெடுகவும் நம்மைத் தொடரும் பாத்திரம்தான் அப்பையா . அவரது பல சிறுகதைகளிலும் நனவிடை தோய்தலிலும் பல்வேறு கட்டுரைகளிலும் அப்பையா இருக்கிறார். ‘அப்பையா காவியம்என்றொரு குறுங்காவியத்தையும் எஸ்.பொ. படைத்துள்ளார். சண்முகம் என்ற எஸ்.பொவின் நேசத்திற்குரிய தந்தையே இந்த அப்பையா. தந்தையாரை அப்பையா என விளிப்பதே எஸ்.பொ. வழக்கு. அந்த அப்பையாவை தனது வழிகாட்டியாகவும் தான் பின்பற்ற வேண்டிய ஆதர்சமான காட்டானாகவும் எஸ்.பொ.குறிப்பிடுகிறார். அதை அடியொற்றிச் சொன்னால் எனக்கு, நான் பின்பற்ற வேண்டிய இலக்கிய வழிகாட்டியாகவும் ஆதர்சமான காட்டானாகவும் எஸ்.பொ. என்ற அப்பையா இருக்கிறார்.

இதைச் சற்றே துலக்கமாக உணர்த்த முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்னால் செல்ல விரும்புகின்றேன். எனது பள்ளிப்பருவ காலமது. இலவசப் பாடநூல்கள் இலங்கையில் அறிமுகமாகியிராத காலப்பகுதியது. ஒவ்வொரு ஆண்டுப் பரீட்சையிலும் சித்தியடைந்து அடுத்த வகுப்புக்குச் செல்லும்போது புதிய பாடநூல்களை நாங்கள் விலைக்கு வாங்க வேண்டியிருக்கும். என்போன்ற வசதி குறைந்த வீட்டுப் பிள்ளைகள் புதுப் புத்தகங்களை வாங்காமல்செகன்ட் ஹான்ட்புத்தகங்களையே அரைவிலைக்கு வழமையாக வாங்குவோம். எங்கள் அயல்வீடுகளில் இருக்கும் மாணவர்கள் யாருடையாவது புத்தகத்தை வாங்குவோம். சனவரியில் தான் விடுமுறை முடிந்து அடுத்த ஆண்டுக்கான புதிய வகுப்புத் தொடங்கும். ஆனால் எனக்கு அதுவரை காத்திருக்கப் பொறுமையில்லாமல் விடுமுறை விட்ட மறுநாளே புத்தகங்களைத் தேடித் திரிவேன். குறிப்பாகத் தமிழ்ப்பாட நூலை வாங்கிப் படிப்பதிலே அவ்வளவு இன்பம். இதற்குக் காரணம் எனது கல்விக் காதலல்ல. கதைகள் மேல் கொண்ட காதலே. தமிழ்ப் பாடநூலில் இடம் பெறும் பாடங்கள் அவ்வளவு சுவையாகயிருக்கும்.

ஆறாவது அல்லது ஏழாவது வகுப்புப் பாடநூலிலேஇருநூறு மீற்றர் ஓட்டம்என்றொரு பாடம். உண்மையில் ஆகச் சிறந்த சிறுகதையது. வன்னி ஏழை விவசாயக் குடும்பதைச் சேர்ந்த வரதன் என்ற மாணவன் மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனாக இருக்கிறான். அவன் அகில இலங்கை அளிவிலான இருநூறு மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பு செல்கிறான். அவனது பள்ளி வாத்தியார் அவனைக் கொழும்புக்கு அழைத்துச் செல்வதும் அவன் அந்தப் பந்தயத்தில் வெற்றி பெறுவதுமே கதை. மாணவன் வரதனின் குரலில் அந்தக் கதை நகரும். ஏழ்மையை, தாழ்வுணர்ச்சியை, கிராமத்துச் சிறுவனின் மிரட்சியைச் சித்திரிக்கும் அந்தக் கதை இறுதியில் அவனது தன்னம்பிக்கைப் பார்வையுடன் முடிவுறும்.

ஓட்டப்பந்தயத்தில் அவன் அணிந்திருந்த வெள்ளை பனியனுக்கு மேலாக இலக்கத் துண்டு குத்தப்படும். ” சாய்இந்த நம்பர்த் துண்டு இன்னும் கொஞ்சம் பெரிசாயிருந்தா பெனியலிருக்கிற பாலைப் பழக் கயரை மறைச்சிருக்கும்என்று வரதன் நினைப்பான். அப்போதெல்லாம் அந்தச் சிறுவன் வரதனின் இடத்திலேயே நான் என்னைப் பொருத்தி வைத்து அந்தக் கதையைப் படித்துக்கொண்டேயிருப்பேன். வன்னிப் பேச்சு வழக்கில் படிக்கப் படிக்கத் திகட்டாத இலக்கியமாக அந்தக் கதையிருந்தது.

வழிகோலிகள் பாலம் கட்டுகிறார்கள்என்று இன்னொரு சுவையான கதை. கல்முனை முஸ்லிம் சிறுவன் கொண்டாடும் ரம்ழான் பெருநாள் குறித்தொரு கதை எனப் பல கதைகளை நான் திரும்பத் திரும்பப் படிப்பேன். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள். எனது புனைவுமொழியின் அடி அத்திவாரம் இந்தப் பாடநூல் கதைகளே. எனது முதல் எழுத்து ஆசான் இந்தப் பாடங்களை ஆக்கியோனே. நான் பாரிஸுக்கு வந்ததற்குப் பின்பாகத்தான் இந்தப் பாடங்களை ஆக்கியோன் அப்போது இலங்கை பாட விதான சபையிலிருந்த எஸ்.பொவே என அவரின் நூலொன்றிலிருந்து அறிந்துகொண்டேன்.

எனது பாரிஸ் வாழ்க்கையின் தொடக்க காலங்களில்தான் எஸ்.பொவின் நூல்கள் அனைத்தையும் படிக்கவும் அவை குறித்து நண்பர்களோடு சல்லாபிக்கவும் வாய்ப்புக் கிட்டியது. நான் கதைகள் எழுதத் தொடங்கிய காலமும் அதுதான். எனது அநேக தொடக்ககாலக் கதைகள் வட்டார வழக்கில் எழுதப்பட்டிருப்பதற்கு அப்போது என்னை ஆட்கொண்டிருந்த எஸ்.பொவின் எழுத்துகளே முதலும் கடைசியுமான காரணம். அப்போது ஒரு விமர்சகர்எஸ்.பொவுக்கு அடுத்து யாழ் வட்டார வழக்கை சிறப்பாக எழுதுபவர் ஷோபாசக்திஎனக் குறிப்பிட்டிருந்தபோது எனக்கு கொஞ்சம் மிதப்பாகத்தான் இருந்தது என்பதையும் மறைப்பதற்கில்லை. அந்த விமர்சகரின் வார்த்தையை குருவிடம் சிரத்தையுடன் கற்றுக்கொண்ட மாணவனுக்கு வழங்கப்பட்டசேர்டிபிகட்டாகக்கருதிக்கொள்கிறேன்.

எஸ்.பொவின் படைப்புகளிற்குள் நான் திளைத்துக்கிடக்கையிலே, பெரிதும் கொண்டாடப்படும் அவருடையதீநாவல் மீது எத்தனையோ வாசிப்பு எத்தனங்களை நான் வைத்தபோதும் அந்த நாவல் என்னைக் கவருவதாக இருக்கவில்லை. அந்த நாவலில் எஸ்.பொ. கையாண்ட மொழி இருண்மையும் பெருங் கவித்துவமும் கொண்டிருந்ததேயொழிய வாசிப்புக்குத் துன்பத்தைத்தரும் திருகல்மொழியல்ல அது. அந்த நாவல் பாலியலையும் ஓரினக் காமத்தையும் பேசுவதால் எனக்குள் மறைந்திருந்த பண்பாட்டு மனது எனக்கும் எஸ்.பொவின் பிரதிக்கும் இடையே தடையாக நின்றது எனவும் மனசாரச் சொல்ல முடியாது. ஏனெனில் அந்த நாவலை நான் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான்பாலியலையும் காமத்தையும் வேட்கையையும் வெளிவெளியாகக் கலையில் வெளிப்படுத்தவேண்டும்.இந்த உலகில் ஆபாசம் என ஒன்றுமேயில்லைஎன நான் இலக்கியத்தில் பச்சை அறிக்கையும் எனது சக இலக்கியத் தோழர்கள் மதிப்பு மறுப்பறிக்கைகளும் எழுதிக்கொண்டிருந்த காலமது. ஆக எனக்கும்தீபிரதிக்கும் இடையில் என்ன சீனப் பெருஞ்சுவர் தடையாக நிற்கமுடியும் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் தடையாக நின்றது பெருங்சுவரல் மெல்லிய சரிகை இழை ஒன்றே என்பதை எஸ். பொ.வின் சுயவிமர்சனம் ஒன்றிலிருந்து அறிந்துகொண்டேன்.

காமத்தையும் வேட்கையையும் வெளிவெளியாக இலக்கியத்தில் எழுதுவதில் தவறில்லை என்பதை நான் தெளிவுற உணர்ந்திருந்தபோதும் நான் தீயை எழுதிக்கொண்டிருக்கும்போது சுய கூச்சத்துடனேயே அதை எழுதினேன்என அறிக்கையிட்டிருந்தார் எஸ்.பொ.

அந்தச் சுயகூச்சத்தை மிக அநாயசமாகச் சடங்கு நாவலில் தூக்கிஎறிந்துவிட்டார் எஸ்.பொ. அறுபதுகளின் யாழ்ப்பாணக்ளறிகல் சேர்வென்டின்மானுடவியல் ஆவணம் அந்த நாவல். வேட்கையையும் உடலின் கொண்டாட்டத்தையும் பரிபூரணமாக சடங்கில் ஆடித் தீர்த்தார் எஸ்.பொ. இதற்குப் பிறகுதான் அவருக்குஇந்திரிய எழுத்தாளர்என்ற பட்டத்தை அவரது விமர்சகர்கள் வழங்கினார்கள். எஸ்.பொ. அவர்களிற்குக் கிடைத்தஇயல்விருதையும் விட இந்தஇந்திரிய எழுத்தாளர்என்ற மகுடமே அவரை இலக்கியப் பரப்பில் மகிமையுறச் செய்வது என்பதே எனது கணிப்பு. இந்திரியத்தை இலக்கியமாக்குவது ஏப்பைசாப்பை வேலை கிடையாது. அது நாம் புழங்கும் பண்பாட்டுச் சூழலை ஆழப் புரிந்துகொள்வதாலும் ஆழமான மானிட நேசிப்பாலும் உளம் குறித்த இடையறாப் பரிசோதனைகளாலும் உடல் குறித்த ஞானத்தாலும் சித்திப்பது.

சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், தன்வரலாற்று நூல், அரசியல்பண்பாட்டுக் கட்டுரைகள், தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகள், விமர்சன நூல்கள், நாடகங்கள், உரைச்சித்திரங்கள், கவிதை, மேடைப்பேச்சுக் கலை, நூற்பதிப்பு எனத் தமிழ் இலக்கியத்தின் அனைத்துப் பரப்புகளிலும் இடையறாது இயங்கியவர் எஸ்.பொ. அவரது சமகாலத்தவர்களான கே.டானியல், டொமினிக் ஜீவா, மு.தளையசிங்கம், .. இராசரத்தினம், மஹாகவி போன்ற பெரும் எழுத்தாளர்களிடமிருந்து எஸ்.பொவைத் தனித்துவமாகத் துலங்கச் செய்த புள்ளிகளையும் நாம் கொஞ்சம் கவனிக்கலாம்.

எஸ்.பொ. நான் மேற்சொன்னவர்களைக் காட்டிலும் தமிழ் மரபு இலக்கியத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஆழக் கற்றவர். ஆங்கிலப் புலமை மிக்கவராக இருந்ததால் சர்வதேச இலக்கியங்களிலும் தத்துவநூல்களிலும் பயிற்சி வாய்க்கப்பெற்றிருந்தார். யாழ்ப்பாண அல்லது மட்டக்களப்பு வாழ்க்கைக்குள் முடங்கிவிடாது உலகம் முழுக்கச் சென்று தனது அனுபவப் பரப்புகளை அகலிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தது. முக்கியமாக வாழ்க்கையை இறுதிவரை கொண்டாட்டமாக குடியும் புகையும் கலையுமாகக் கழித்தவர். சாவுப் படுக்கையில் கிடந்த தனது தந்தைக்கு தெளிவுநீராக வாயில் சாராயம் விடும் மனநிலை வாய்த்தவர். பிஞ்சிலே காமத்தை அறிந்தது மட்டுமல்லாமல் தனது நாற்பதாவது வயதிலிருந்து பிரமச்சாரியத்தையும் பயின்றவர். ஈழப்போராட்டத்திற்கு ஒரு மகனை ஈந்தவர். அந்த உணர்வுகளோடேயே தனது இறுதி முப்பது வருடங்களை வாழ்ந்தவர். கட்சிகளிற்கோ அமைப்புகளிற்கோ கட்டுப்படாத விமுக்தியாளர். இந்தப் புள்ளிகள் அவரது தனித்துவங்களாக அவரது இலக்கியப் பிரதிகளில் பிரவகித்தன.

வட்டார வழக்கை பிரயோகித்து இலக்கியம் படைப்பதில் எஸ்.பொ. விண்ணன் என்பர். நாங்கள் அனைவரும்தான் வட்டார வழக்குகளை அறிவோம். யாழ்ப்பாணத்தார் யாழ்ப்பாண வழக்கிலும் மட்டக்களப்பார் மட்டக்களப்பு வழக்கிலும்தான் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறோம். எனினும் வெறும் வட்டார வழக்குச் சொல்களை வைத்துச் சுழற்றிப்போட்டால் மட்டும் அது மண் சார்ந்த இலக்கியப் பிரதியாகிவிடாது. அந்த வட்டாரம் சார்ந்த வித்தியாசம்வித்தியாசமான பண்பாடுகளையும் தொன்மங்களையும் வரலாற்றையும் ஆழ ஊடுருவித் தெரிந்துகொண்டும் எழுதும்கலையைப் பயின்றும் அதை வட்டார மொழியின் வழியே பிரதியில் பொதியும்போதுதான் அது ஆக்க இலக்கிய வகையாகும் அல்லது அங்கிருப்பவை வெறும் சத்தற்ற சொற்குப்பைகளே. ஈழத்தின் வட்டார வழக்குகளையும் மரபையும் கலையாக்கிய ஈழத்தின் ஆகச் சிறந்த கதைஞன் எஸ்.பொவே என்பது எனது துணிபு.

எஸ்.பொ. அவர்கள் பேராசிரியர் கைலாசபதியையோ கே.டானியலையோ விமர்சிக்கப் புகும் தருணங்களிலெல்லாம் முன்னீடாக ஒரு மகுட வாக்கியத்தை எழுதத் தவறுவதேயில்லை. ” வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம் சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டிமுழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றிற்குச் செய்யப்படும் துரோகம்என்பார் எஸ்.பொ. அவரது விசுவாசமான மாணவனான நான் அதையும் சொல்லத்தான் வேண்டும்.

ஈழத்து இலக்கியத்தைப் பிடித்த சனியனாக கடந்த அய்ம்பது வருடங்களிற்கும் மேலாக இந்த கைலாசபதிசிவத்தம்பிஎஸ்.பொ. முரண்பாடு என்றவொரு வஸ்து இருந்து வருகிறது. எஸ்.பொ. இறக்கும் வரை பேராசிரியர்கள் இருவரையும் தருணம் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் சும்மா விட்டாரில்லை.

இந்த மூவருக்குமான முரண் எதைக் குறித்தது? எஸ்.பொ. தன்னையும் மார்க்ஸியவாதியாக இறுதிவரை சொல்லிக்கொண்டவர். தன்னை அமைப்புச் சாரா மார்க்ஸியர் என்பார். இவர்களிற்கிடையில் என்னதான் அப்படிச் சித்தாந்தகோட்பாடு விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எஸ்.பொ. வம்படியாக எழுதியகேள்விக்குறிஎன்ற சிறு எள்ளல் பிரதியை விட்டால் இவர்களது கோட்பாடு சமர்களிற்கு ஆதாரமாக என்னபளாய்தான் மிஞ்சியுள்ளது? அதில் எவை தமிழ் இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ பாதிக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன?

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை விமர்சித்ததால் பேராசிரியர்கள் இருவரும் எஸ்.பொவை கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்கிறார்கள். பதிலுக்கு எஸ்.பொ. சிவத்தம்பியை பூதத்தம்பியென்றும் கைலாசபதியை பதவிப்பித்தர் எனவும் போட்டுத்தாக்கினார். இவையெல்லாம் கோட்பாடுச் சமர்களா என்ன? இவைகள் வரலாற்றுப் பெறுமதியுள்ள இலக்கிய விவாதங்களா என்ன? நற்போக்கு இலக்கியம் என்பது சும்மா ஒரு இதுக்கு வெறும் லேபிளாக மட்டுமே இருந்தது. அந்த லேபிள் ஒருபோதும் முற்போக்கு இலக்கியத்தின் பொருட்படுத்தத்தக்க எதிரியே அல்ல.

மேற்சொன்ன பெரியோர்கள் மூவருமே தங்களது துறைகளில் நிகரற்ற சாதனையாளர்கள், சிலபல இலக்கிய கர்த்தர்களிற்கு துணைநின்று அவர்களின் வளர்ச்சியில் மகிழ்ந்தவர்கள், பழகுவதற்கு இனியவர்கள், தங்களது துறைகளில் அரிய நூல்களைப் படைத்தவர்கள் என்பதால் இவர்கள் வரலாற்றில் வாழ்வார்கள். ஆனால் இந்த இலக்கியத் தனகலும் ஈகோச் சண்டைகளும் எந்தவிதத்திலும் பெறுமதியற்றவை. இவர்களது சாதனை வெளிச்சத்திற்குள் சும்மா பறந்து திரியும் தூசிகளவை.

எஸ்.பொவும் எல்லோரைப் போலவும் பலமும் பலவீனமும் கொண்ட மனிதனாகத்தான் ஆரம்பத்திலிருந்தே அரசியற் புலத்தில் இருந்துவந்தார் என்ற போதிலும் கடந்த , இருபதாண்டுகளிற்கு முன்பு அவர்தமிழ்த்துவம்என தலை வால் இல்லாத ஒரு முண்டச் சித்தாந்தத்தை மொழிந்து அதைக் காவிச் செல்ல முயன்று அதன் வழியே பிற்போக்குகளின் மொத்த உருவமாகத் துலங்கினார். தலித் அரசியலைச் சாடினார். தலித் இலக்கியத்தை எள்ளிநகையாடினார். பெண்ணியவாதிகளை வீம்புக்கு பகிடி பண்ணினார். விடுதலைப் புலிகளின் அராஜகங்கள் ஏற்கமுடியாதவை என்றபோதும் அவற்றை நாம் விடுதலையின் பெயரால் சகித்துக்கொள்ளப் பழகவேண்டும் எனச் சடைந்து பேசினார். எல்லாவற்றிற்கும் உச்சக்கட்டமாக 2010-ல் கொழும்பில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக அவர் செய்தஊழியம்அவருக்கு எந்த விதத்திலும் பெருமை சேர்ப்பதாயில்லை.

அந்த மாநாட்டை எழுத்தாளர் லெ. முருகபூபதியின் ஏற்பாட்டில் எழுத்தாளர்களே சுயாதீனமாக நடத்தினார்கள்.  ‘இதற்குப் பின்னால் இலங்கை அரசாங்கம்இருக்கிறது என எஸ்.பொ. கொழுத்திப்போட்ட பட்டாசு நன்றாகவே வேலைசெய்தது. தொடர்ந்து பொய்ச் செய்திகளை எஸ்.பொ. பத்திரிகைகளில் தெரிவித்துக்கொண்டார். எஸ்.பொ.வின் நல்லனவற்றைத் தொடர எங்களைப் போன்ற ஒரு கூட்டம் இருக்கிறது எனில் எஸ்.பொவின் பொல்லாதவற்றைப் பயிலவும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. அவர்கள் எஸ்.பொ.வைப் பின்பற்றி மாநாட்டுக்கு எதிராகக் கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். குரு துரோணோச்சாரியருக்கு எதிராக நாணேற்றிய இளைய பாண்டவர்கள் போல நாங்கள் மாநாட்டுக்கு ஆதரவாக அறிக்கைவிட்டோம். இந்த அறிக்கைப் போரை நடத்துவதில் விதுரர் முருகபூபதிக்கு அவ்வளவு விருப்பமில்லை. ஏனெனில் எங்களைப் போல அறிக்கை விட்டுப்போட்டு அவரால் ஹாயாக உட்கார்ந்திருக்க முடியாது. அந்த மனுசன்தானே முழு மாநாட்டு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். எனவே அவர் எஸ்.பொவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார். மாரடைப்புக் காரணமாகத் தான் இறந்தால் அதற்கு எஸ்.பொவே காரணம் என்பதுபோல அவர் எழுதியிருந்ததாக ஞாபகம். அந்த மாநாடு குறித்த எஸ்.பொவின் குற்றச்சாட்டுகள் அனைத்துமே முழுக்க முழுக்கப் பொய்யானவை என்பதைக் காலம் நிரூபித்துத்தான் காட்டிற்று.

இப்போது இரண்டொரு நாட்களிற்கு முன்பு நமது இளைய கவி தீபச்செல்வன் எஸ்.பொ. அவருக்கு எழுதிய கடிதமொன்றை முகநூலில் வெளியிட்டுள்ளார். எஸ்.பொ. அஞ்சலியுரையை நான் நிகழ்த்தப்போகிறேன் எனத் தெரிந்து அதைத் தீபச்செல்வன் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை. அந்தக் கடிதம் எனக்கு தீபச்செல்வன் வழங்கிய நேர்காணலைக் குறித்தது. அதில் எஸ்.பொ. அவர்கள் சற்றுத் தாராளமாகவே என்னை நிந்தனை செய்திருக்கிறார். புலி எதிர்ப்பு இலக்கியத்தின் மூலம் போராட்டத்தை ஊறுசெய்கிறேன் தமிழகத்து புலியெதிர்ப்பாளர்களின் நிபந்தனையற்ற ஆதரவு எனக்கு இருக்கிறது என்றெல்லாம் எஸ்.பொ. சொல்லியிருக்கிறார். இதுவும் 2010 கொழும்பு மாநாட்டை ஒத்த கதைதான். எனினும் நான் அதைப் பறுவாய்ப்படுத்துவதாயில்லை. நம்மிட அப்பையாதானே சொன்னார்.. கோழி மிதிச்சு குஞ்சு சாகாது. ஆனால் தீபச்செல்வன் குறித்து ஒன்றை எஸ்.பொ. அந்தக் கடிதத்தில் சொல்லியுள்ளார். அதாவது எனக்களித்த நேர்காணலில் கவிஞர் சத்தியத்தின் பக்கம் நின்று வாளைச் சுழற்றுகிறாராம்.

அந்த நேர்காணல் முழுவதுமே தீபச்செல்வன் அசத்தியங்களாகவே சொல்லிக்கொண்டிருந்தார். நான் விடுத்து விடுத்துக்கேட்டால் அந்தக் கேள்விகளையும் பொய்களால் அநாயசமாகக் கடந்துபோனார். புலிகள் கட்டாயப் பிள்ளைப் பிடிப்புச் செய்யவில்லை என்றார், அப்படிப் பிடித்தாலும் நியாயம் என்றார். மக்களை புலிகள் பணயக்கைதிகளாக வைத்திருக்கவில்லை என்றார். கவிஞரது பொய்களையும் காலம் இன்று கிழித்துத்தான் போட்டிருக்கிறது. அந்தப் பொய்களால் புழுத்த வாய்க்குள்ளிருந்து சத்திய வாளைச் சிரமம்பட்டு உருவியெடுத்துக் காட்டினார் அப்பையா. அவர் இவ்வாறு கன பேய் வேலைகள் பார்த்திருக்கிறார். ஒருவேளை இன்னும் சில காலங்கள் உயிருடன் இருந்திருப்பின் அவரது இத்தகைய கருத்துகளில் கூட மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். துப்பாக்கி ஏந்திப் பலவருடங்கள் களத்தில் போராடிய போராளிகளிடமே மாற்றமும் சுயவிமர்சனமும் ஏற்பட்டிருக்கும்போது அது எஸ்.பொ. போன்ற ஒரு சிந்தனையாளரிடமும் ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும் தன்னை நேர்செய்துகொள்ளும் வாய்ப்பை காலம் எஸ்.பொவிற்கு மறுத்துவிட்டது.

எஸ்.பொவின் அப்பையா சண்முகம் அவர்களிற்குபேய்க்கர்என ஒரு பட்டமும் ஊருக்குள் நிலவியதாம். அவர் பார்க்கும் பேய் வேலைகளால் இந்தக் கியாதியான பட்டம் அவருக்கு வாய்த்தது என எஸ்.பொ. வாஞ்சையுடன் குறிப்பிடுகிறார். ‘பேய்க்கர்என்றாலும் அவர் அப்பையா இல்லாமல் ஆகிவிடுவாரா என்ன! என்னுடைய அப்பையாவும் பேய் வேலைகள் பார்த்தாலும் அவர் எனக்கு அப்பையாதான்.ஏனெனில் இந்த அப்பையா என்ற உறவு எனது பள்ளிப்பருவத்திலேயே அவரின் தமிழாலும் எழுத்தாலும் இலக்கியத்தாலும்என்னுள்ளே முகிழ்த்த இரத்த உறவு.

அப்பையாவுக்குத் தலைதாழ்த்தி அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(‘ஆக்காட்டி‘ – சனவரி இதழில் வெளியாகியது)

VN:F [1.9.4_1102]
Rating: 7.1/10 (9 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +7 (from 9 votes)
அப்பையா, 7.1 out of 10 based on 9 ratings
2 comments to அப்பையா
 • T.Ganesh

  Dear Sobah,

  Can i talk with yoiu regarding the communual differences.

  I am in SriLanka. My Phone No 00 94 77 74 89515.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • johan paris

  வட்டார வழக்கை பிரயோகித்து இலக்கியம் படைப்பதில் எஸ்.பொ. விண்ணன் என்பர்.//
  மிக உண்மை!
  அருமையான உரையின் எழுத்துரு!
  இருபக்கங்களையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
  நமக்கு, அவர் எழுத்தாலே மாத்திரம் அறிமுகமானவர்.
  ஈழத்தின் எழுத்தாழுமையை- உங்களுக்கு அப்பையா ஆக்கியுள்ளீர்கள். உங்கள் எழுத்தில் அது
  தெரிகிறது.
  நீங்கள் இவ்வுரையில் குறிப்பிட்ட கதைகள் படிப்பதற்காக , தமிழ்மலர், தமிழ் எனும் இலங்கைப் பாடநூல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட, புத்தகங்களைப், உங்களைப் போல் படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.
  இப்போதும் “ஓம் நான் சொல்லுகிறேன்” எனும் கதை வந்த புத்தகத்தைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.
  நீங்கள் கட்டாயம் படிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள்.
  அது உங்களிடம் இருந்தால் எனக்கு ஒரு பிரதி தரமுடியுமா?
  நன்றி!

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner