பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
August 7th, 2016 | : கட்டுரைகள் | Comments (12)

அன்புள்ள ஜெயமோகன் : சில கேள்விகள்

ன்புள்ள ஜெயமோகன்,

‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள்,  ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக,  அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் எழுதிய இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி… என்ற கட்டுரை தொடர்பாகவே இந்த மின்னஞ்சலை உங்களிற்கு அனுப்புகின்றேன்.

‘இலங்கையில் இனப் படுகொலை நிகழவில்லை’ என்று கூறியதற்காக உங்களை இந்திய அரசின் கைக்கூலி என்றோ தமிழின விரோதி என்றோ நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. அதேபோன்று ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே’ என்று ஆணித்தரமாகக் கூறுபவர்கள் எல்லோரையுமே ‘சுத்தமான சூசைப்பிள்ளைகள்’ என்றும் நான் கூறமாட்டேன். நீங்கள் மிகச் சரியாகவே சுட்டிக்காட்டுவது போல புலிகள் இழைத்த யுத்தக் குற்றங்களையும், புலிகள் நடத்திய முஸ்லீம் இனச் சுத்திகரிப்பையும் நியாயப்படுத்துபவர்களும் அவர்களிற்குள் உள்ளார்கள்.

இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே என்பது என் தரப்பு. இதை நீண்டநாட்களாகவே நான் சொல்லிவருகிறேன். மாறாக அங்கு நிகழ்ந்தது இனப் படுகொலை அல்ல என்பது உங்களது தரப்பு. எனினும் இந்த விசயத்தில் உங்களோடு வாதிட்டு நிற்பது எனது நோக்கமில்லை. ஏனெனில் நடந்தது இனப்படுகொலையே அல்ல என உங்களைப் போலவே பலமாக வாதிடும் பல ஈழத் தமிழர்களும் இருக்கிறார்கள். அதேபோன்று நடந்தது இனப்படுகொலையே எனச் செல்லும் சிங்களவர்களும் இருக்கிறார்கள். சர்வதேச சமூகத்திலும் இனப்படுகொலையே எனச் சொல்லும் தரப்பும் அதை மறுக்கும் தரப்புமிருக்கிறார்கள். நீங்கள் தடம் நேர்காணலில் சொல்லியது போலவே இது பெரும் உரையாடலாகத் தொடரப்பட வேண்டிய விஷயம்.

எனவே இந்த விடயத்தில் உங்களோடு வாதிடுவதை விடுத்து உங்களது கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்த எனது சில அய்யப்பாடுகளைக் கீழே கேள்விகளாக எழுதுகின்றேன்:

1. இன அழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச்செயல்பாடுகள்’.

என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் இன அழித்தொழிப்புக்கான அய்க்கிய நாடுகள் அவையின் வரையறை வேறு சிலவற்றையும் சொல்கிறது. ஓர் இனக்குழுவை திட்டமிட்ட முறையில் பகுதியாக அல்லது குழுவாக அழித்தொழிப்பது, கூட்டுப் படுகொலைகளைச் செய்வது, அவர்கள்மீது உளவியல் யுத்தம் நடத்துவது, அவர்களது நிலத்திலிருந்து துரத்தியடிப்பது போன்றவையும் இனப்படுகொலையென்றே அய்.நா. வரையறை சொல்கிறது. இவ்வளவற்றையும் இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தியிருக்கிறது. இவைகுறித்து ஏராளமான சாட்சியங்களும் ஆதாரங்களும் நூல்களுமுண்டு ( முறிந்த பனை, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – 2011 ஏப்ரல்,  தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 , Palmyra fallen)…

இவ்வாறிருக்க, அய்.நா. வரையறையை மேலோட்டமாக  சுட்டிக்காட்டி நிழ்ந்தது இனப்படுகொலை அல்ல என நீங்கள்   நிறுவ முயல்வது சரிதானா? உண்மையில் உங்களது வாதம் அய்.நா. வரையறைக்கு எதிரானதல்லவா?

2. இலங்கை மண்ணில் பிறந்து அந்த நாட்டை உருவாக்கிய அம்மக்களுக்கு குடியுரிமை மறுக்கபடவேண்டும் என்றும் அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்றும் வாதிட்டவர்கள் இலங்கைத்தமிழர்கள்தான். அவர்களின் பெருந்தலைவர் சி.ஜி.பொன்னம்பலம்தான் நாடாளுமன்றத்தில் அக்கோரிக்கையை முன்வைத்தார். அது இன ஒடுக்குமுறையேதான். ஆனால் அதைச்செய்தவர்கள் அங்குள்ள தமிழர்களும்தான்.

என்று சொல்லியிருக்கிறீர்கள். இது தவறான தகவல்.

இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அல்ல. 1948-ல் இந்தச் சட்ட மசோதாவை, டி.ஸ். சேனநாயக்க தலைமையிலான யூ.ன்.பி. அரசே நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. முதலாவது மசோதாவை இடதுசாரிக்கட்சிகளும் ஜி.ஜி.பொன்னம்பலமும் அவர் தலைமை தாங்கிய தமிழ் காங்கிரசும் எதிர்த்தார்கள். இரண்டாவது தடவை இந்த மசோதா முன்மொழியப்பட்டபோது அப்போது UNP அரசில் அமைச்சராகிவிட்ட ஜி.ஜி.பொன்னம்பலம் மசோதாவை ஆதரித்தார். இத்தோடு ஈழத்தமிழ் அரசியலில் அவருக்கு வீழ்ச்சி ஆரம்பித்தது. அதன் பின்னால் அவரால் ஈழத் தமிழர்களிடம் அரசியல் ஆதரவை மீளப்பெறவே முடியவில்லை.

ஜி.ஜி. பொன்னம்பலம் அந்த மசோதாவை ஆதரித்ததால் அவரது கட்சியில் இயங்கிவந்த முன்னணித் தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம்,  கு.வன்னியசிங்கம், எம்.வி.நாகநாதன் போன்றவர்கள் உடனடியாகவே கட்சியைவிட்டு வெளியேறி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸிற்கு மாற்றாகத் தமிழரசுக் கட்சியைத் தொடக்கினார்கள். இந்தக் கட்சிதான் அடுத்த சில தசாப்தங்களிற்கு ஈழத் தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒரே கட்சியாக இருக்கிறது. அந்தக் கட்சியின் தலைமையில்தான் இன்று தமிழ் மக்களிடம் பெரும்பான்மை அரசியல் ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது.

வரலாறு இப்படியிருக்க ‘பொன்னம்பலமே நாடாளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தார், இந்திய வம்சாவழித் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்று வாதிட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான்’ என்று நீங்கள் எழுத எப்படி நேர்ந்தது?

3. எழுபதுகளில் ஜனதா விமுதிப்பெருமுனே என்னும் இடதுசாரிக் கிளர்சியமைப்பை முழுமையாகவே சிங்கள அரசு கொன்று அழித்தபோது சிங்கள அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தமிழ்க்கட்சிகள். இன்று இன அழித்தொழிப்புக்கு தாங்கள் அப்போதே ஆளானோம் என்று நம்மிடம் சொல்கிறார்கள்.

என்று சொல்லியிருக்கிறீர்கள்.

இதுவும் குழப்பமான கூற்றுத்தான். 1970 -ல் இலங்கையில் சுதந்திரக் கட்சி – இடதுசாரிகள் கூட்டாட்சி அமைந்தது. இந்த ஆட்சியிலேயே ஜனதா விமுக்தி பெரமுன அழிக்கப்பட்டது. இந்தியா இராணுவமே நேரடியாக இலங்கையில் இறங்கி இந்த அழிப்பிற்கு இலங்கை அரசிற்கு துணைநின்றது. ஆனால் இந்தக் கூட்டாட்சி அரசு அமைந்ததிலிருந்தே அதைக் கடுமையாகத் தமிழ்க் கட்சிகள் எதிர்த்து நின்றன. தமிழர்களின் முக்கியமான மூன்று கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின.

ஜே.வி.பி. அழிக்கப்பட்டபோது தமிழ்க்கட்சிகள் இலங்கை அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது? அவ்வாறு ஆணித்தரமாக ஆதரித்த தமிழ் கட்சிகள் எவை?

4. மலையகத் தமிழர் சிங்களர் சூழ்ந்த பகுதிகளில் மட்டும்தான் வாழ்கிறார்கள். இன அழித்தொழிப்புக்கு அவர்கள் ஆளானார்களா என்ன?

என்று கேட்கிறீர்கள்.

இலங்கையில் நிகழ்ந்த நாடுதழுவிய எல்லா இன வன்செயல்களின் போதும் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் மலையகத் தமிழர்கள்தான். அவர்களில் கணிசமானோர் மலையகத்திலிருந்து அகதிகளாக 1970-களில் வன்னிக்குச் சென்று குடியேறினார்கள். இறுதி யுத்தத்தில் இலங்கை அரசால் கொல்லப்பட்டவர்களில் பெருந்தொகையினராக இந்த மக்கள் இருந்தார்கள். 1983 வன்செயல்களைத் தொடர்ந்து கணிசமானோர் நிரந்தரமாகவே தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்கள். இவ்வாறு நிர்ப்பந்தித்து குடிபெயரச் செய்வது இன அழித்தொழிப்பின் ஒரு கூறில்லையா?

5. இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையென திருப்பித் திருப்பிச் சொல்பவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்தமிழரில் ஒருசாராரும் தமிழகத்தின் பிரிவினைபேசும் தமிழ்த் தேசியர்களும் மட்டுமே .

-என்கிறீர்கள்.

இன்று இலங்கையில் தமிழ் மக்களிடையே மிகப் பெரும்பான்மை ஆதரவை நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் பெற்றிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரனின் முன்வைப்பில் வடக்கு மாகாணசபையில் சென்ற வருடம் பெப்ரவரி 10ம் தேதி ‘இலங்கையில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை மீதான தீர்மானம்’ ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கும் ஈ.பி.டி.பி. கட்சியும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருந்தது. எனவே “நிகழ்ந்தது இனப்படுகொலை எனச் சொல்வது புலம் பெயர் தமிழரில் ஒருசாராரும் தமிழகத் தமிழ்த் தேசியர்களுமே” என நீங்கள் சொல்வது தவறாகாதா?

6. “சர்வதேசம் இதை இனப்படுகொலையென ஏற்றுக்கொள்ளாது”  எனத் திரும்பத் திரும்ப நீங்கள் நிறுவ முயல்கிறீர்கள். அதை நானும் மிகத் தெளிவாகவே அறிவேன். ஒரு சர்வதேச ஊடகத்தின் முன்னே நிகழ்ந்தது இனப்படுகொலை என நான் சொல்லும்போதே அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெரிந்தே சொல்கிறேன்.

இனப்படுகொலை விசாரணை மட்டுமல்ல, போர்க்குற்ற விசாரணைகள் கூட இலங்கை அரசுமீது நிகழாது என்பதையும் நானறிவேன். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிகழ்த்தியது போர்க்குற்றமே என நாங்கள் எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எந்த நாடும் எந்த சர்வதேச அமைப்பும் அதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

அய்.நா. உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளும் தீவிரமான சாய்வுகளுடனேயே இயங்குகின்றன. அவை ஈராக்கிலும் லிபியாவிலும் பொஸ்னியாவிலும் காட்டும் அக்கறைக்கும் இலங்கை மீதும் மியன்மார் மீதும் காட்டும் பாராமுகத்திற்கும் வலுவான அரசியல் – பொருளியல் காரணிகளுள்ளன.

எனினும் திரும்பத் திரும்ப நீதி கேட்டு ‘நிகழ்ந்தது இனப்படுகொலை’ என நாங்கள் உலகை நோக்கிச் சொல்லவேண்டியவர்களாயிருக்கிறோம். இது நடந்து முடிந்த இனப்படுகொலைக்கான நீதி கோரிய குரல் மட்டுமல்ல. இனி இலங்கையில் இன்னொரு இனப்படுகொலை நிகழாதிருப்பதற்கான குரலும் கூட.

ஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நான் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும்? அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் எவ்வாறு முன்வைக்காமலிருக்க முடியும்? என்னைப் போன்றவர்களது குரல் நீங்கள் சொல்வது போன்று வெறும் உணர்சிவசப்பட்ட குரல் மட்டும்தானா? சென்ற ஆண்டு வட மாகாணசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை தீர்மானம்’ ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தின் கூட்டுக் குரலில்லையா?

அன்புடன்
– ஷோபாசக்தி
07-08-2016

VN:F [1.9.4_1102]
Rating: 8.8/10 (48 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +20 (from 22 votes)
அன்புள்ள ஜெயமோகன் : சில கேள்விகள், 8.8 out of 10 based on 48 ratings
12 comments to அன்புள்ள ஜெயமோகன் : சில கேள்விகள்
 • சரியாகச் சரியானதைச் சொல்லுயிருக்புறீர்கள் அண்ணா. இந்தக் குரலுக்குப் பின் இந்த மடலுக்குப் பின் என் போன்றவர்கள் இருப்பார்கள் எப்போதும்..

  VA:F [1.9.4_1102]
  Rating: 4.7/5 (7 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +5 (from 7 votes)
 • thambayah Rajan

  அழுத்தம் திருத்தமாக இலங்கையில் நடந்தவற்றை தெளிவாக தெரியாதோரும் தெரிந்துகொள்ளவும் உண்மையை மறைத்து பொய்யான புனைக்கதை சொல்லும் செயமோகனுக்கும் விளக்கியிருக்கிறீர்கள்.
  நன்றி

  VA:F [1.9.4_1102]
  Rating: 5.0/5 (1 vote cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • Vithushan

  மிகச் சரியாக சொன்னீர்கள். அவர் குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் பொய்யென்று நிரூபித்து விட்டீர்கள்.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • Tharunyan Ravi

  நல்லது ஷோபா,
  நாமெல்லோருமே அறிந்தபடி…. புலிகளும் இழைத்த யுத்தக் குற்றங்களுக்காக திரும்பத் திரும்ப நீதி கேட்டுக் கொண்டிருக்கும் சிங்கள மக்களும் இருப்பார்கள், புலிகள் நடத்திய முஸ்லீம் இனச் சுத்திகரிப்பையும் மறக்காமல் திரும்பத் திரும்ப நீதி கேட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம் மக்களும் தொடர்ந்து இருப்பார்கள், புலிகளால் கொல்லப்பட்ட சக இயக்கங்களின் போராளிக் குடும்பங்களும் படுகொலையான பொதுமக்களின் குடும்பத்தினரும் தங்களுக்கு நேர்ந்த குற்றஇழைப்பை பேசவே இடமில்லாமல் இருக்கிறதே என்ற வெப்பியாரத்துடன் நீதிக்காக உள்ளுக்குள் வெம்பிக் கொண்டிருப்பார்கள் ( துரோகிகளும் நீதி கேட்கிறார்களே என்று நம்மில் பலருக்கு இது வேடிக்கையாகவும் கூட இருக்கும்….)
  இந்த நீதிகோரல்கள் எல்லாம், இனி இலங்கையில் இவ்வாறான கொலைகள் திரும்பவும் இடம்பெறாதிருப்பதற்கான குரல்கள் என நினைத்தே திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கலாம்….
  எனில் –
  இங்குள்ள தமிழ் மக்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவாவது இங்கு நல்லபடியானதொரு வாழ்வை அடைந்துகொள்வதற்கு இவையெல்லாம் எவ்வாறு உதவப்போகின்றன என்பது குறித்து நாம் பேசவேண்டாமா?
  பகைமறப்பு, நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு, பன்மைத்தன்மை என்பதெல்லாம் சிங்களப் பேரினவாதக் காட்டுமிராண்டிகளுடன் ஒருபோதும் சரிவராது என்பதே நம் கூட்டுக்குரலாக இருக்க வேண்டுமா?
  இது யாருடைய நலனுக்கான கூட்டுக்குரல் ஷோபா?

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +3 (from 5 votes)
 • Gopal

  This article mentions that ITK was formed by Mr Chelvanayagam in 1948 because Mr GG Ponnambalam formed a coalition wiht United National Party(UNP) . But in 1956, ITK also joins with UNP. So doesnt it mean, they indirectly agree and morally responsible for the eviction of the tamils?

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: -1 (from 1 vote)
 • வே. இளஞ்செழியன்

  அருமையான, சிந்தனையைத் தூண்டும் பதில்கள். ஒரு சிறு வட்டத்துக்குள் இருந்துகொண்டு வட்டத்துக்கு வெளியில் இவ்வாறுதான் இருக்கும் எனத் தனது கற்பனையை நிஜத்துக்கு நிகராக வைக்க முனையும் ஜெமோவுக்கு ஏற்ற விளக்கம்.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +2 (from 2 votes)
 • துடுப்பதி ரகுநாதன்

  நல்ல ஆணிதரமான இலங்கைத் தீவின் வரலாற்றை அறிந்தவரின் கருத்தாக இருக்கிறது! பாராட்டுகள்!
  இதுபோன்ற பிரச்னையில் எல்லோருடைய கருத்துக்கும் எதிரான கருத்தைச் சொன்னால், தன் பெயர் தனித்து மக்களால் பார்க்கப்படும் என்று சிலர் கருத்து சொல்வார்கள் அந்த லிஸ்டில் நீங்கள் இல்லை எனபதில் மகிழ்ச்சி!

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • நா குருபரன்

  நீங்கள் சொன்ன விடயங்கள் ஜெயமொகனுக்கு தெரியாதவையல்ல. ஆனாலும் நம்மில் யாரோ ஒருவர் வாய்ப்புகள் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் எமது மூச்சு உள்ளவரையிலும்.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +5 (from 5 votes)
 • நக்கீரன்

  நான் ஜெயமோகன் எழுதிய கட்டுரையை முழுசாகப் படிக்கவில்லை. ஷோபாசக்தி மேற்கோள் காட்டிய பத்திகளை வைத்தே இதனை எழுதுகிறேன்.
  ஜெயமோகன் பெரிய எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் இந்த இனப்படுகொலை தொடர்பாக அவருக்கு அரைகுறை அறிவு மட்டுமே இருக்கிறது. ஈழத்தமிழர் வரலாற்றை அவர் சரியாகப் படிக்கவில்லை. அதனால் வரலாற்றுத் திரிப்புகளை எந்த வெட்கமோ சங்கடமோ இன்றி அள்ளி வீசுகிறார். மலையகத் தமிழரது குடியுரிமையைப் பறித்தது டி.எஸ் சேனநாயக்கா தலையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு. அந்தச் சட்டவரைவுக்கு எதிராக தந்தை செல்வநாயகம் நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் ஜிஜி பொன்னம்பலம் எதிர்த்துப் பேசவில்லை. இருந்தும் அவர் அந்த சட்ட வரைவுக்கு எதிராக வாக்களித்தார். ஆனால் அந்தச் சட்ட வரைவு சட்டமாகு முன்னரே பொன்னம்பலம் சேனநாயக்கா அரசில் மீன்பிடி கைத்தொழில் அமைச்சராக பதவி ஏற்றுவிட்டார். உண்மையில் அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிகப்பட்ட வேளையில் பொன்னம்பலம் சேனநாயக்கா அமைச்சரவையில் சேர பேரம் பேசிக் கொண்டிருந்தார். மலையகத் தமிழர்களுக்கு பொன்னம்பலம் செய்த மாபெரும் துரோகம் இதுவாகும். 1949 இல் மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறிக்கும் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பொன்னம்பலம் வாக்களித்தார். 1948 இல் இருந்து தமிழர்களது வரலாற்றைப் பார்த்தால் அவர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருகிறார்கள் என்பது விளங்கும். குடியுரிமை சட்டம், வாக்குரிமைச் சட்டம், 1956,1958, 1977,1979,1981 மற்றும் 1983 இல் நடந்த இனக் கலவரங்கள் தமிழர்களை குறிவைத்தே நடத்தப்பட்டன. 1956 இல் இயற்றப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் ஒரு இனவாத சட்டமே. இலங்கையின் கிழக்கில் 1948 தொடங்கி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரிய சிங்களக் குடியேற்றங்கள் இனச் சுத்திகரிப்பே. இதனால் கிழக்கு மாகாணத்தில் சுதந்திரத்துக்கு (1946) முன்னர் பெரும்பான்மையாக (53.54 விழுக்காடு) இருந்த தமிழர்கள் 2012 இல் 39.79 விழுக்காடு ஆக மாற்றப்பட்டு விட்டனர். அதே காலகட்டத்தில் சிங்களவர்கள் விழுக்காடு 4.66 இல் இருந்து 23.15 விழுக்காடாக அதிகரித்தது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக 3,000 அதிகமான ஆவணங்கள் ஐநாமஉ பேரவைக்கு அனுப்பப்பட்டும் இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புக்கு ஆளானார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு போதிய காரணங்கள் இல்லை என்று அந்தப் பேரவையின் பேச்சாளர் செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

  We were able to conduct a comprehensive investigation nonetheless, with more than 3,000 written submissions, interviews in 11 countries, photos, videos and satellite imagery with expert analysis.
  What is your response to the criticism that the report has not dealt with the issue of “genocide” comprehensively?
  The legal analysis in the report is based on its extensive findings. On the basis of the findings, we can say that there are strong indications that war crimes and crimes against humanity were most likely committed by both sides to the conflict. The crime of genocide requires specific objective and subjective elements [laid out in paragraphs 202-203 of the report]. On the basis of the information we were able to gather, we did not come to the conclusion that these elements were met. This does not preclude such a finding being made as a result of further criminal investigations, including [an investigation] by the hybrid court that we recommend. (http://www.frontline.in/world-affairs/the-findings-are-independent-of-political-considerations/article7698130.ece
  )

  VA:F [1.9.4_1102]
  Rating: 1.0/5 (1 vote cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +3 (from 3 votes)
 • bala

  அன்பின் ஷோபா,
  இனப் படுகொலை இல்லை என்று சொல்ல ஒரு ஆதாரம் வேண்டும். நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈழத் தமிழரை விட வேறு இனத்தவர் யாராவது கொல்லப்பட்டனரா ? அப்படி இருந்தால் அவர் சொல்வது போல போர்க்குற்றம் அதில் கொஞ்சம் ஈழத்தமிழர் கொல்லப்பட்டனர் எனலாம். அதைவிட வேறொரு பிரச்சனை என்னவென்றால் இவ்வளவு காலமும் இனக் கலவரம் என்று சொல்லியே பழகி விட்டது. அது சரியோ என்றும் கேட்க வேண்டியுள்ளது.
  நடந்து முடிந்த ஒன்றை ஆய்வதில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது தீயாய் எமது தேசம் எரிந்து கொண்டிருக்கையில் எத்தனை இருந்திருக்கும்.
  இது எங்களின் வலி.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • சு;கருணாநிதி

  நானும் யெயமொகனின் பேட்டியைப்படிக்கவில்லை,அவர் வெறும் இலக்கியவாதிதான் அரசியல்வாதியல்ல,அவருக்கேன் அரசியல் சம்மந்தமான பேட்டி,ஏதாவது சுயலாபமிருக்குமோ? சோபாசக்தி சரியாகவே பதில் சொலியிருக்கின்றார், சோபாசக்தி அரசியல் இலக்கியவாதியாயிருக்கின்றார் என்பதால் ,மற்றவர்களாலும் அப்படிபேச எழுதமுடியுமா?முதலில் யெயமோகனை வழிபடும் அறிவிலிகள் திருந்தவேணடும்,அவர் சொல்லிக்கொண்டிருப்பது அவர்க்குரிய உரிமை,பிழையென நாம் சொல்லிக்கொண்டிருப்பது எமது உரிமை , நன்றி சோபா,

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • சுப்பிரமணியன்

  இந்தப் பதி்ல் நிறைவாக இருக்கிறது. தொடர்ந்து ஜெயமோகன் பக்கத்தை வாசித்துவந்தபோதும், அவரது அந்த பதில் நிறைவளிக்காததாகவே இருந்தது. ஆனால் முழுமையான மறுப்போ, தர்க்கப்பூர்வமான ஆதாரமோ உங்களைப் போன்ற ஒருவரால்தான் அளிக்கமுடியும் எனத் தோன்றுகிறது.

  VA:F [1.9.4_1102]
  Rating: 1.0/5 (1 vote cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 3 votes)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner