பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
August 31st, 2016 | : கட்டுரைகள் | Comments (1)

பத்மநாபம் 15

யர்’ என்பது சாதிப்பட்டமில்லை அதுவொரு பெயரே எனச் சொல்பவர்களுடன் வாதிடுவது வெட்கக்கேடானது. சூடு சுரணையே இல்லாத சாதிய மனங்களவை. எனவே ‘ஐயர்’ என்பது சாதிப்பட்டமே என ஒப்புக்கொண்டு, ஆனாலும் ‘சாதிப்பட்டத்தை வைத்துக்கொள்ளவும் ஒரு காரணம் இருக்கிறதுதானே’ எனக் காரணங்களைக் கண்டுபிடிப்பவர்களிற்காக ஒரு குறிப்பு:

ஏன் இப்போது திடீரென பத்மநாப ‘ஐயர்’ பிரச்சினை கிளம்புகிறது? இதுவரை ஏன் யாரும் பேசவில்லை? எனக் கேட்கிறார்கள். உண்மையில் இது திடீர் எதிர்ப்பல்ல. இந்த எதிர்ப்புக்கு பதினைந்து வருடத் தொடர்ச்சியான வரலாறும் பதிவுமுள்ளன. ‘யாரும் என்னவும் எழுதுங்கோ, சொல்லுங்கோ நாங்கள் படிக்கவும் மாட்டோம் கேட்கவும் மாட்டோம்’ எனக் கிணற்றுத் தவளைகள் போலயிருந்துவிட்டு திடீரெனப் பதறியடித்து முழித்து, என்னயிது திடீர் எதிர்ப்பெனப் பாசாங்கு செய்வது சரியற்றது.

2001 -ல் ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் சாதி ஒழிப்புப் போராளிகளில் முதன்மையானவருமான தோழர் டொமினிக் ஜீவா தனது தன்வரலாறான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ நூலின் 112-வது பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்:

“புலம் பெயர்ந்து அதனால் தமது இருப்பை இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர்களையும் இந்த உயர்குல வருணாச்சிரமத் தர்மப் பிரச்சினை விட்டு வைக்கவில்லை. பிரம்ம குலத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டனுக்குப் போயும் அகதிகளில் ஒருவராகத் தன்னைப் பதிந்து கொண்டிருந்த போதிலும் கூட ‘ஐயர்’ என்ற வாலை ஒட்டியபடியே பவனி வந்துகொண்டிருக்கிறார் என ஒரு இலக்கிய நண்பர் சமீபத்தில் எனக்குச் சொல்லி வருத்தப்பட்டார். புலம்பெயர்ந்து அகதிநிலை ஏற்பட்டபோதிலும் கூடப் பிரம்ம, சத்திரிய,வைசிய, சூத்ர, பஞ்சம என்ற வர்ணாச்சிரமப் படிநிலை அய்ரோப்பாவில் இன்று நம்மவர்களால் கைக்கொள்ளப்படுகின்றது.”

அதே வருடம் சுகனும் நானும் தொகுத்து வெளியிட்ட ‘சனதருமபோதினி’ நூலின் முன்னுரையில், பத்மநாபர் ‘அய்யர்’ என்ற சாதிப்பட்டத்தோடு இலக்கிய உலகில் வலம்வருவதைக் கடுமையாகக் கண்டித்து எழுதியிருந்தோம்.

2002-ல் நடந்த புகலிட இலக்கியச் சந்திப்பில் மறைந்த தோழர் சி.புஷ்பராஜா, பத்மநாபர் தொகுத்த நூலொன்றை முன்வைத்துப் பேசும்போது, சாதிப்பட்டமான அய்யரைப் பத்மநாபர் சூடியிருப்பதைக் கண்டித்து பகிரங்க உரை நிகழ்தினார். அய்யர் என்பது வெறுமனே பெயர், பிறப்புச் சான்றிதழில் அவ்வாறிருக்கிறது போன்ற சாக்குப்போக்குகளைச் சொல்லி அய்யர் பட்டத்தை நியாயப்படுத்த முடியாது என்றார்.

2008-ல் இலண்டனிலிருந்து வெளிவந்த ‘இன்மை’ இதழில் சேனன் இவ்வாறு எழுதினார்:

“இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பூசையில் ஈடுபடாத ஒரு ஐயரும் உலாவி வருகிறார். பத்மநாப ஐயர் என்ற இந்த ஐயர் இலக்கியத்துக்கான சர்வதேச பரிசு ஒன்றை கனடாவில் பெற்றவர். ஆனால் இவரது நீண்ட கால இலக்கிய வரலாற்றில் இவர் ஒரு இலக்கியமும் படைத்ததில்லை. இலக்கியம் எதுவும் படைக்காமல் இலக்கியவாதியாக உலாவும் ஒரே ஒரு நபர் இவர் தான். இவர் மேல் அன்பும் பண்பும் கொண்டு பல்வேறு முன்னணி அரசியல் நிர்வாகிகள் ஆளுமைகள் அவர் பற்றி கண்ணியமான கருத்துக்களை வைக்கின்றனர். எமக்கு காதல் சார்ந்து சிந்தித்தல் வராது என்றபடியால் இவர்மேல் கடும் விமர்சனம் வைக்கும் துணிவு உண்டு. இவர் ஐயர் என்ற பெயரை பாவிப்பது பற்றி ஏற்கனவே பல தடவை நாம் விமர்சித்துள்ளோம். லண்டனில் நடந்த பல கூட்டங்களில் பங்குபெற்று உரையாடும்படி பல தடவைகள் கேட்டிருந்தோம். அவர் மறுத்துவிட்டார்.”

இன்னும் தேவதாசன், விஜி, ஜீவமுரளி, அசுரா, எம்.ஆர்.ஸ்டாலின், தமயந்தி போன்ற பல தோழர்கள் ‘அய்யர்’ என்ற சாதியப்பட்டத்தைக் கண்டித்துத் தொடர்ச்சியாக எழுதி வருபவர்கள். எனவே இதுவொரு திடீர் எதிர்ப்பு என்பது சரியற்றது.

சமீபத்தில் இந்தச் சாதிப்பட்டம் குறித்து நான் எழுதியபோது அங்கே பின்னூட்டமிட்ட தமிழக விமர்சகரும் கவிஞருமான இந்திரன், “எங்கள் நேசத்துக்கும் பாசத்துக்குமுரிய நண்பர் பத்மநாபரே….. டைனோசரின் தூக்க முடியாத வால்போல அந்த “ ஐயர்” பட்டத்தை ஏன்தான் சுமந்து திரியிறீங்களோ தெரியலையே….நான் கூட நினைத்துக் கொள்வதுண்டு உங்களின் நெருங்கிய நண்பர்களான நித்தி, யமுனா ராஜேந்திரன், ஓவியர் ராஜா…யாரும் சொல்ல மாட்டார்களா உங்களிடம் என்று ….” என எழுதியிருந்தார்.

இந்த நீண்ட விவாதங்களிற்குள்ளால்தான் சாதியப்பட்டத்திற்கு எதிரான முன்னெடுப்பு நடந்திருக்கிறது. கவிஞர் இந்திரனின் ஆதங்கத்தை மு.நித்தியானந்தனும் ராஜாவும் செவிமடுத்திருக்கிறார்கள் என்றே நம்புகின்றேன்.

சாதிப் பட்டம் விட்டொழிப்பதற்கு அவ்வளவொன்றும் சிரமமான பண்டமாக எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிய ‘சர்மா’ எனச் சாதியப் பெயரோடு அறியப்பட்ட, இலக்கிய – ஊடகத் தளங்களில் இயங்கும் நண்பர்களான ஹரி ராஜலட்சுமியும், தேவகாந்தனும் (ஜெர்மனி), பரணிதரனும் அந்தப் பட்டங்களைத் தூக்கி எறிந்துவிட்டு கம்பீரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

1929-ல் செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பகிரங்கமாக ‘நாயக்கர்’ என்ற சாதிப்பட்டத்தை விட்டெறிந்து ஈ.வெ.ராமசாமி ஆனார். பெயர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ‘அய்யர்’, ‘அய்யங்கார்’, ‘பிள்ளை’, ‘தேவர்’ போன்ற சாதிப்பட்டங்களை விட்டொழிக்க அங்கே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்மநாபர் சாதியப் பட்டமான அய்யரை   சூடியிருப்பதில் தவறே இல்லை என்பவர்கள் முதலில் ஈ.வெ.ரா. பெரியாரையும் தோழர் டொமினிக்  ஜீவாவையும் மறுக்க வேண்டும். இது ஒரு நூற்றாண்டையே பின்னால் இழுக்கப் பார்க்கும்  பயனற்ற முயற்சி.

இலக்கியத்தின் சளையாத உபாசகராகத்தான் வரலாறு பத்மநாபரை ஞாபகம் வைத்திருக்கவேண்டுமே தவிர ஆயிரம் வருடங்களாக நம்மிடையே இருந்த அநாகரிக வழக்கத்தின் கடைசி எச்சமென அவர் வரலாற்றில் பதிவுபெறக் கூடாது.

அவருக்கு பவளவிழா வாழ்த்துகளைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

VN:F [1.9.4_1102]
Rating: 8.4/10 (7 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +4 (from 6 votes)
பத்மநாபம் 15, 8.4 out of 10 based on 7 ratings
1 comment to பத்மநாபம் 15
 • Jey Iyadurai

  Let us drop those cowards from our discussion, who try to play duel roles of progressive minded intelectuals and literary experts, but choose to carry the symbol of social stigma as their birth rightness.

  It is the same Eelam hypocrisy of Naming the village library behind Barathy’ and forcing the Rule of Caste in using the Library!

  It is still a social ill in our Tamil Nation and Diaspora, where the Caste is being used to Earn credits for dummies and to defame the Real talents!

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner