பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
April 25th, 2017 | : நேர்காணல்கள் | Comments (3)

கத்னா

உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு

ங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே  இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத்  துண்டித்துவிடும்  அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து ரேணுகா சேனநாயக்கா 1996-ல் எழுதிய SRI LANKA-CULTURE: Mothers Watch as Daughters are Circumcised என்ற கட்டுரையில் தொண்டு நிறுவனமொன்று இலங்கை முஸ்லீம்களிடையே கிளிட்டோரிஸ் துண்டிப்புக் குறித்துக் கருத்துக்கேட்டபோது கருத்துத் தெரிவித்தவர்களில் 90 விழுக்காடானவர்கள் இந்தக் ‘கத்னா’ வழக்கத்திற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர் எனப் பதிவு செய்கிறார்.

கடந்த வருடம் இதுகுறித்து ‘த ஐலண்ட்’ பத்திரிகையில்  The Hidden Horrors of Female Genital Mutilation என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய நபீலா சபீர் இலங்கைச் சட்டங்களின்படி இச் சடங்கு தண்டனைக்குரிய குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சடங்கை அய்.நா. பெண்களிற்கு எதிரான வன்முறை என வரையறுத்திருக்கிறது. இக்கொடிய சடங்கு இன்று அய்ந்து கண்டங்களிலும்  எழுபத்தைந்துக்கு மேற்பட்ட நாடுகளில் வழக்கத்திலுள்ளது. Prevalence of female genital mutilation by country என்ற ‘விக்கிபீடியா’ கட்டுரை இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தச் சடங்கு வழக்கிலுள்ளதைச் சான்றுகளுடன் தெரிவிக்கிறது.

இலங்கையிலுள்ள தமிழ் வாசிப்போர் மத்தியில் இந்தக் கொடிய சடங்கு குறித்து ஒன்றிரண்டு பதிவுகளுள்ளன. அனார் இச்சடங்கு குறித்து ‘ப்லேட் (Blade) என்ற சிறுகதையை எழுதியுள்ளார். சமூக வலைத்தளத்தில் லபீஸ் ஸாகீட் ‘சில ஆண்டுகளுக்கு முன்பு உஸ்தாத் மன்சூர் தன்னுடைய ‘நகர்வு’ சஞ்சிகையில் இந்த வழமைக்கு எதிராக எழுதவும் அதற்கு சூபி செல்வாக்கு கொண்ட மதரஸாக்கள் கடுமையாக மறுப்பு வெளியிட்டமைக்கு நான் சாட்சி. சுருக்கமாக சொல்வது எனில் மரபு ரீதியான முஸ்லிம்களிடத்தில் இந்த வழமை இன்னும் செல்வாக்கு இழந்திடவில்லை என்பதே உண்மை’ எனப் பதிவு செய்துள்ளார்.

Naseeha Mohaideen தன்னுடைய முகநுால் பதிவொன்றில் “கிளிட்டோரிசை நீக்காமல் அதில் சிறுபகுதியை வெட்டுதல்/ கிளிட்டோரிஸை வெட்டி அதை முற்றாக நீக்குதல்  போன்ற வழக்கங்கள் இலங்கையில் உள்ளதாகத் தெரிகிறது…” எனக் குறிப்பிட்டு இந்தச் சடங்கிற்கு எதிரான பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

கல்முனையைச் சேர்ந்த மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் ‘பெண்களுக்கு கத்னா செய்வது என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும். இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை. முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.’ என  பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டுமா? என்ற கட்டுரையில் (mailofislam.com) இரக்கமற்றுக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இச்சடங்கு ஓர் இரகசியமான புதிர்த் தன்மையுடனேயே இன்னுமிருக்கிறது. இப்பேசாப் பொருளைப் பேசத் துணிந்தோருக்காக ஒரு தொகை  முஸ்லீம் பெண் மழலைகள் காத்துக்கிடக்கிறார்கள்.  அந்த மாசற்ற மழலைகளை ஒஸ்தா மாமிகளின் கைகளிற்கு ஒப்புக்கொடாமல் தப்புவிப்பதைத் தவிர வேறென்ன முக்கிய கடமை நமக்கிருக்கப்போகிறது?

ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதுபவரும்  derailedwords.com என்ற வலைப்பதிவில் பதிவிடுபவரும், தற்போது பாரிஸில் தரித்து நிற்பவருமான தோழர். முகமட் ஃபர்ஹான் அண்மையில் இக்கொடிய வழக்கத்தைக் கண்டனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அவருடன் ‘ஆக்காட்டி’க்காக ஒரு தொடக்க உரையாடல்

ஷோபாசக்தி

***

இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு இலங்கையில் எப்படி உருவாகி நீடித்து நிற்கிறது? இந்தச் சடங்கு இஸ்லாமிய வழிமுறையா? அல்லது பழங்குடிப் பண்பாட்டு எச்சமா?

இச்சடங்கு அதிபழைமைவாதமான சூஃபி மரபிலிருந்து உருவானதாகவே கருதுகிறேன்.  வஹாபிகள் மட்டுமே இந்தச் சடங்கை இலங்கையில் சமகாலத்தில் எதிர்த்துக்கொண்டிருக்கும் ஒரே தரப்பாகும். அவர்கள், ஹதீதுகளில் இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு குறித்துக் குறிப்பிடப்படவில்லை, அதனால் இச்சடங்கு இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார்கள். மற்றைய வலுவான முஸ்லீம் தரப்புகள் -குறிப்பாகத்  தம்மை முற்போக்கெனப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் –  ஜமாத்  ஏ இஸ்லாமி, முஸ்லீம் பிரதர் கூட் (MFCD)போன்ற அமைப்புகள் இந்தக் காட்டுமிராண்டித்தனமான சடங்கு குறித்துப் பேசாமலேயே இருக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்திலுள்ள அறிவுஜீவுகள் மத்தியிலும் கல்விச் சமூகத்தின் மத்தியிலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் இச்சடங்கு குறித்து நீண்ட கள்ள மௌனமே இதுவரை சாதிக்கப்படுகிறது. இலங்கை முஸ்லீம்களால் நடத்தப்பட்ட-  நடத்தப்படும் சீரிய இலக்கியச் சிறுபத்திரிகைகள் கூட இந்த விடயத்தில் இதுவரை மௌனம் காத்துள்ளன. வானத்திற்கும் பூமிக்கும் நடுவிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் தட்டச்சும் அவர்களது விசைப் பலகைகள் கத்னாவுக்குப் பலியாகும் சிறுமிகள் பற்றி எழுத மட்டும் தயங்கிக்கிடக்கின்றன.

இந்தச் சடங்கு இலங்கை முஸ்லீம் சமூகத்தினரிடையே தற்போது எவ்வளவிற்கு நிலைகொண்டிருக்கிறது? ரேணுகா சேனநாயக்க 90 விழுக்காடு முஸ்லீம்கள் இலங்கையில் இச்சடங்கை ஆதரிப்பதாகக் கூறுகிறாரே?

ரேணுகா சேனநாயக்க குறிப்பிடுவது மிகச் சரியெனவே நான் எண்ணுகின்றேன். இந்தச் சடங்கு  என்னுடைய குடும்ப உறவுகளிற்கே நடந்திருக்கிறது.  இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு குறித்து  முஸ்லீம் பெண் ஆளுமைகளுடன் பேசியிருக்கிறேன். அவர்களும் இச்சடங்கிற்கு உள்ளாகியிருப்பதாகச் சொன்னார்கள். எனினும் இது குறித்து ஓர்மமான எதிர்ப்புக் குரலோ உரையாடலோ இன்னும் கிளம்பாமலிருப்பது மிகப் பெரிய துக்கம்.

எழுத்தாளர் றியாஸ் குரானா கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்துத் தான் அறிந்திருக்கவில்லை எனவும் ஆனால் குழந்தைகளின் பெண்ணுறுப்பில் சிறுதுளி இரத்தம் எடுப்பதுபோல ஒரு சடங்கு நிலவி வருகிறது எனவும் எழுதியிருக்கிறாரே?

றியாஸ் குரானா சொல்வதுபோலவே இச் சடங்கு சிறுதுளி இரத்தம் எடுப்பதுதான் என்று வைத்துக்கொண்டாலும் அதுவும் வன்கொடுமைதான். ஆனால் ,இலங்கையில் நடப்பது கிளிட்டோரிஸ் துண்டிப்பு அல்லது சிதைப்புத்தான். அதைத்தான் கத்னா என்கிறார்கள். நான் என் குடும்பத்திற்குள்ளும் வேறுபலரிடமும் பேசி உறுதிப்படுத்திக்கொண்டுதான் இதைச் சொல்கிறேன். றியாஸ் குரானா இது குறித்து அறியாதவர்போன்று நன்றாக நடிக்கிறார். அவருக்குள் உறைந்திருக்கும் பழைமைவாத முஸ்லீம்  இந்தக் கொடுமையைப் பூசிமெழுகிவிட முனைகிறார். ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமே இது குறித்து உரையாட விரும்பாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் இச்சடங்கு இப்போது அருகி வருகிறது என்று சிலர் சொல்கின்றார்களே?

நீங்கள் யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களிடம் இப்போதும் சாதிமுறை இருக்கிறதா எனக் கேட்டுப்பாருங்கள்.  இப்போது அது அருகிவிட்டது என்பார்கள். ஆனால் உண்மையிலேயே சாதிமுறை பலமாக அங்கிருக்கிறது.

இந்தக் கத்னா சடங்கு இப்போது அருகிவிட்டதென இவர்கள் எந்த ஆய்வின், தரவுகளின் அடிப்படையில் சொல்கிறார்கள்? இவர்கள் சொல்வதற்குச் சான்றுகள் என்ன? இப்போதும் வழக்கத்திலிருக்கும் ஒரு மிகப் பெரிய சமூகக் கொடுமையை இப்படியான சப்பைக்கட்டுகளைக் கட்டி இவர்கள் மூடி மறைப்பது  வருத்தத்திற்குரியது. மதத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை மறைப்பதையும் சகித்துக்கொள்வதையும் அனுமதிக்கவே முடியாது.

இந்தச் சடங்கு குறித்து பரவலான எதிர்ப்பு இதுவரை தோன்றாததற்கான காரணமென்ன?

ஒன்றை யோசித்துப் பாருங்கள்… அனாரும் நஸீஹாவும் உஸ்தாத் மன்சூரும் இது குறித்துப் பேசியது கற்பனைத்தளத்திலிருந்தா? ஒரு உண்மையை அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் குரல்களை என் சமூகம் நிராகரித்திருக்கிறது. கடுமையாக எதிர்க்கவும் செய்கிறது. மதவாதத்திற்குள் விழுந்து கிடப்பவர்கள் இந்தச் சடங்கை இயல்பானதொன்றாக ஏற்கும் மனநிலையிலிருப்பதே இதுவரை எதிர்ப்புத் தோன்றாததற்கான காரணம். அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்புக் குரல்கள் தோன்றும்போது கூட, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை எனப் பொய்ச்சாட்சியம் உரைப்பது மதவாத நோய்க் கூறாகும்.

இந்தச் சடங்கைத் தடுத்து நிறுத்துவதற்கான எதிர்ப்புச் செயற்பாடுகளை நாம் எங்கிருந்து தொடங்கவேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

கண்டிப்பாக முஸ்லீம்கள் மத்தியிலிருந்துதான்  எதிர்ப்புக் குரல்களைத் தொடங்க வேண்டும்.  முஸ்லீம் சிந்தனையாளர்களாலும் எழுத்தாளர்களாலும் இது குறித்த ஒரு விழிப்புணர்வைச் சிறிய அளவிலாவது  உண்டாக்க முடியும்.

இலங்கை முஸ்லீம்களிடையே இடதுசாரி இயக்கங்களோ தீவிர பெண்ணிய இயக்கங்களோ கிடையாது. எனவே மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள இஸ்லாமிய இயக்கங்கள் தான் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து இந்தக் கொடூரமான வழக்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அவர்களால் மட்டுமே முழுவதுமான மாற்றம் சாத்தியம்.

அப்படியானால் இந்தச் சடங்கைத் தீவிரமாக எதிர்க்கும் வஹாபிகளை நாம் இந்த விடயத்தில் ஆதரிக்கத்தானே வேண்டும்?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். வஹாபிகள் சிறுமிகள், பெண்கள் மீதுள்ள அக்கறையால் இச் சடங்கை எதிர்க்கவில்லை. ‘பித்ஹத்’ என்பதாலேயே எதிர்க்கிறார்கள். அதாவது இறைத்தூதர் செய்யாத, மொழியாத விடயமாக இந்தச் சடங்கை அவர்கள் பார்க்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாமியப் பெண்கள்மீது மட்டுல்லாமல் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தின் மீதும் வஹாபிகள் ஏராளமான அடக்குமுறைகளைத் திணித்துவருகிறார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். 70-களில் இலங்கையில் காலுான்றிய வஹாபிஸம் இப்போது  வலுவான ஒரு தரப்பாகி முஸ்லீம் சமூகத்தை மத அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளிச் சீரழிக்கிறது. பிற சமூகங்களிற்கும் முஸ்லீம் சமூகத்திற்குமான நல்லிணக்க உரையாடல்களிற்கான சாளரங்களை  வஹாபிகளின் அடிப்படைவாதம் மூடியும்விடுகிறது. ஆக கிளிட்டோரிஸ் துண்டிப்புக்கு எதிரான வஹாபிகளின் எதிர்ப்பு அவர்களிற்கும் சூஃபி மரபுக்கும் இடையேயான போரின் ஒரு அம்சமே தவிர பெண்களின் நலனுடன் தொடர்புடையதல்ல.

இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு முஸ்லீம்களிடையேயுள்ள பண்பாட்டுப் பிரச்சினை. இது குறித்து முஸ்லீம்கள் அல்லாத மேற்குலகும் பிறரும் பேசுவது ஒருவகையான மூக்கு நுழைப்பு,ஆதிக்கச் செயற்பாடு  எனக் கருதுகிறீர்களா?

மேற்குலகம் உட்பட எல்லாத் தரப்புகளும் தங்களது சொந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகக்கூடியவைதான். அதேவேளையில் நம்மிடையேயிருக்கும் கிளிட்டோரிஸ் துண்டிப்பு அல்லது சிதைப்பு போன்ற விடயங்கள் குறித்து அவர்கள் பேசும்போதும் தலையீடு செய்யும் போதும் நாம் அந்தக் குரல்களை முற்றிலுமாக மறுத்துவிட முடியுமா என்ன!  இலங்கையில் நடைபெறும் இந்தக் கத்னா சடங்கை இனியும் அனுமதிப்பது முஸ்லீம் சமூகத்திற்கு பெருத்த சுய அவமானமாகும். கத்னாவை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான பண்பாட்டுத்தளத்திலான நடவடிக்கைகளை மட்டுமல்லாமல் சட்ட நடவடிக்கைகளையும் நாம் ஒருகணமும் தாமதியாது தொடங்கியாக வேண்டும்.

மதத்தின் பெயரால் கிளிட்டோரிஸ் துண்டிப்புக்கு உள்ளான ‘பாலைவனப் பூ’ வாரிஸ் டைரி தனது தன்வரலாற்று நுாலில் சொல்வதைக் கவனியுங்கள்:

விசுவாசத்தை காட்டுமிராண்டித்தனமான சடங்குகளின்  வழியே பெறுவதைவிட, நம்பிக்கையின் மூலம், அன்பின் மூலம் பெறமுடியும் என்பதை அறிய வேண்டும். துன்பங்களைச் சுமந்திருக்கும் பழைய முறைகளை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது!

ஆக்காட்டி -ஏப்ரல் 2017 இதழில் வெளியானது.
VN:F [1.9.4_1102]
Rating: 6.8/10 (6 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +5 (from 9 votes)
கத்னா, 6.8 out of 10 based on 6 ratings
3 comments to கத்னா
 • Rishvin Ismath

  துணிச்சலான பேட்டியை வழங்கிய நண்பன் பார்ஹானுக்கு பாராட்டுக்கள்.

  நண்பன் கவனிக்கத் தவறிய பகுதி : வஹ்ஹபிகள் மொத்தமாக இந்தப் பழக்கத்தை எதிர்ப்பதில்லை. வஹ்ஹபிகளில் உள்ள TNTJ போன்ற ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே இந்த கொடுமையை எதிர்க்கின்றனர். மெயின்ஸ்ட்ரீம் வஹ்ஹபிகள், சலபிகள் போன்றவர்கள் இதனை ஆதரிக்கின்றனர். இதனை ஆதரித்து வஹ்ஹாபிகள் எழுதியும் இருக்கின்றார்கள்.

  மேலும் இக்கொடுமை அதிபழைமைவாதமான சூஃபி மரபிலிருந்து உருவானதான கருதுகோள் தவறானதாகும். முகம்மது நபி அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்யும் உம்மு அதிய்யாஹ் என்ற பெண்மணிக்கு “முழுமையாக அடியோடு வெட்டிவிடாதே” என்று வெட்டுவதற்குரிய முறையை கற்றுக்கொடுத்தை அபூதாவுத் 5271 ஆவது ஹதீஸில் குறிப்பிடுகின்றது. (இதே ஹதீஸ் அபூதாவுத் 4587, ஹாகிம் 6236, பைஹகி 17338 ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளது.)

  மேலும் முஹம்மது நபி தனது 53 ஆவது வயதில் 6 வயதுக் குழந்தையாக திருமணம் செய்துகொண்ட அவரது மனைவிகளில் ஒருவரான ஆயிஷா அவர்கள், ஆணும் பெண்ணும் சேர்ந்த பின்னர் எப்பொழுது குளிப்பு கடமையாகின்றது என்பது குறித்து கூறும் பொழுது, ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் வெட்டப்பட வேண்டியவை என்பதை அழுத்தமாக குறிப்பிடுகின்றார்.

  ஆகவே, பெண்ணுறுப்பு சிதைப்பு என்பது இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்தும் உள்ள ஒன்றாகும் என்பதை அறியலாம்.

  இந்தக் கொடுமை எந்த புனித மூலாதாரங்களில் இருந்தாலும், காட்டுமிராண்டித்தனத்திற்கு கடைக்குப்போகும் புனிதங்கள் புறம்தள்ளப்பட்டு, இந்தக் கொடுமையான பழக்கம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +7 (from 7 votes)
 • sumathy

  ‌நான் clitoredectomy சரி அல்லது பிழை என்று ‌‌சொல்ல வரவி‌ல்லை. ஆனால், காது குத்துவதை ஏன் நிறுத்தமுடியாமல் இருக்கின்றது எங்களுக்கு? அல்லது கால்களில் உள்ள மயி‌ரை சவரம் செய்வதற்கு ‌எதிராக குரல் ‌கொடுக்காமல் இருக்கின்றோம்? நான் கூறுவதற்கும் ஒரு தனிப்பட்ட பெண் ‌இந்த வழக்கத்துக்கு ‌எதிராக குரல் கொடுப்பதற்கும் ‌தொடர்பும் இல்லை. ‌அவருக்‌கெதிரான குறிப்பு ‌இல்லை ‌இது. மற்றும் ஆண்களின் circumcision வழக்கத்தைப் பற்றி ஒன்றும் ‌‌சொல்லாமல் இருக்கின்‌றோம். HIGH HEELS?

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: -5 (from 7 votes)
 • mohammed aflal

  http://www.onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/pengaluku_kathna/

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner