பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
September 21st, 2017 | : கட்டுரைகள் | Comments (1)

நாவலரும் மைத்ரியும் மணியனும்

அருளினியன் எழுதி வெளியிட்ட ‘கேரள டயரீஸ்’ நூல் கடந்த ஒரு மாதமாகக் கிளம்பிய சர்ச்சைகளும் பிரச்சினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. நூலை வெளியிடவும் பெரும் இடர்பாடுகள். தான் கொல்லப்படக்கூடும் என அருளினியன் பேரச்சம் தெரிவித்தார். வரலாற்றில் முதற்தடவையாக ஒரு தமிழ் எழுத்தாளன், இலங்கை சனாதிபதியைச் சந்தித்துக் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டியதும், சனாதிபதியும் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கச் சூளுரைத்த காட்சிகளும் வண்ணப்படங்களாக எங்களிற்குக் காணக்கிடைத்தன.

இன்று என் கையில் கேரள டயரீஸ் கிடைத்தது. ஒரே மடக்கில் வாசித்து முடித்துவிட்டு என் உடனடி எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த நூலில் ‘வெள்ளார்கள் யாழ்ப்பாணத்தின் துயரம்’ (வெள்ளாளர்கள் இப்போது உலகின் துயராக மாறிவிட்டார்கள் என்பது வேறுகதை) என்ற பகுதியும் ஆறுமுக நாவலரின் சாதிவெறியைச் சான்றுகளுடன் முன்வைத்து நாவலரைக் கண்டதுண்டமாக்கிச் சாய்த்திருப்பதும், தேசவழமைச் சட்டம் எவ்வாறு வெள்ளாளர்களிற்கு முற்றிலும் சாதகமாக இருக்கிறது என்ற விவரிப்புப் பகுதியும் அருளினியனின் மிகச் சிறந்த ஆய்வுப் பங்களிப்புகளாக அமைகின்றன.

ஆறுமுக நாவலரின் சாதிவெறி குறித்து ஏற்கனவே பல தளங்களில் பேசப்பட்டிருந்தாலும் அருளினியன் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தே அதற்குப் பல்லுப் பிடுங்க முயன்றிருக்கிறார். யாழ் இந்துக்கல்லூரியிலும் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும் அவர் தனது நூலை வெளியிட முயன்றது இத்தகைய எத்தனம்.

பொறுப்பார்களா அவர்கள்? இந்து கலாச்சாரத் திணைக்களம் வரை புத்தகத்திற்கு எதிராகப் புகார்கள் சென்றதாகவும் திணைக்களம் நூலைத் தடை செய்ய முயன்றதாகவும் அருளினியன் என்னிடம் தனி மடலில் தெரிவித்தார். நாவலரையும் சைவசமயத்தையும் அருளினியன் அவமதித்ததிற்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்குத் தொடுக்கப் போவதாக தென் கயிலை ஆதினம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

இந்த வழக்கு நடந்தால் உண்மையிலேயே நல்லதுதான். நல்லதொரு புரக்கிராசியை வைத்தால் எங்கள் பக்கம்தான் வெல்லும். ஏனெனில் ஆறுமுக நாவலர் எத்தனை கொடூரமான சாதி வெறியன் என்பதற்கு நம்மிடம் நிறையவே சான்றுகளுண்டு. கவலையில்லாமல் வழக்காடலாம். ஆனால் இந்தக் கவலையின்மையிலும் ஒரு கவலை என்னவென்றால், ‘விகடன்’ நேர்காணல் பிரச்சினையில் நிகழ்ந்ததுபோல, ‘எனக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டது’ என வழக்கு முடியும்வரை அருளினியன் ஆதினத்திடம் மன்னிப்புக் கேட்டுவிடக் கூடாது என்பதுதான்.

இனிப் புத்தகத்தின் மற்றப் பகுதிகளையும் சிறிது பார்த்துவிடலாம்.

ஆறுமுக நாவலரை எதிர்க்கும் அதே தீவிரத்துடன் அருளினியன் அடிக்கொருதரம் தன்னை ஆதி இந்து என அழைத்துக்கொள்வது எனக்குப் புரியவே இல்லை. அதே போல புத்தகத்தின் முடிவில் காளி, சூலி, மகமாயி என்று ஊருப்பட்ட தெய்வங்களை அழைத்து, இந்த நூலை எழுதத் துணைபுரிந்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். நமக்கே இது புரியாவிடில் வழக்குப் போட நினைக்கும் தென் கயிலை ஆதினம் இதனால் எந்தளவிற்குக் குழம்பிப்போவார் என நினைக்கும்போதே திகிலாயிருக்கிறது.

இந்த, சாதியற்ற தமிழ்த் தேசியம்போல, சாதியற்ற இந்து மதம் என்று எதையாவது அருளினியன் ‘ட்ரை’ பண்ணுகிறாரோ தெரியவில்லை. நம்நாட்டில் சாதியற்று கிறிஸ்தவ மதமே கிடையாதபோது சாதியற்ற இந்துமதத்தை  எங்கே கண்டுபிடிப்பது? கட்டமைப்பது?

மதத்திற்கு வெளியே நின்று சிந்திக்க அருளினியன் போன்ற இளைஞர்களிற்கு என்ன தடை? இப்போது அண்மைக்காலமாக நம்முடைய சிறுபத்திரிகை உலகிற்குள்ளேயே ‘மதம் பண்பாட்டுக் கருவி, ஆன்மீக நிம்மதி, ஞானம்’ என்றெல்லாம் தீவிரமாக அனர்த்தத் தொடங்கிவிட்டார்கள். அப்படியானால் மதமற்றவர்கள் பண்பாடற்றவர்களா? ஞானமற்றவர்களா? பிரஞ்சு மக்களில் தொண்ணூறு விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் மதத்திற்கு வெளியே உள்ளவர்கள். அவர்கள் பண்பாட்டிலும் ஞானத்திலும் நம்முடைய மக்களைக்காட்டிலும் என்ன கெட்டுப்போய்விட்டார்கள் என  அருளினியன் வகையறா ஆதி இந்துகள் யாராவது விளக்கினால் புரிந்துகொள்ள முயல்வேன்.

ஈழத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரைக் குறித்து எழுதும் அருளினியன் முத்தாய்ப்பாக இப்படிச் சொல்கிறார்:

“எம்மைக் காத்த வீரர்கள் அவர்கள் என்ற புரிதல் இருந்தால், அவர்களை நாம் சாதியம் பேசி ஒடுக்கியிருக்க மாட்டோம்தானே.”

இங்கே நூலாசிரியர் அவர்கள் என்பது யாரை? நாம் என்பது யாரை? இந்த நூல் வழியே அவர் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்? இந்த நூலின் வாசகப்பரப்பிலிருந்து ‘அவர்கள்’ விலக்கப்பட்டிருக்கிறார்களா என்ன?

நூலின் துணைத் தலைப்பு ‘வேர் தேடுவோம்’. இதைப்பற்றிச் சொல்ல அதிகமில்லை. கேரளா முழுவதும் பயணம் செய்து அருளினியன் வில்லங்கத்திற்கு வேர் தேடியிருக்கிறார். அந்தக் காலத்தில் ‘இதயம் பேசுகிறது’ என மணியன் எழுதும் பயணக் கட்டுரைகளைப் போலயிருக்கிருக்கிறது அருளினியனின் கட்டுரைகளும்.

அருளினியன் சொல்லும் பல செய்திகளிற்கு எந்த வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது. ஈழவர் என்றால் ஈழத்திலிருந்து வந்தவர்கள், ஈழவர் என்பதே நழவராய் திரிந்தது, மறவன் மராட்சியானது, சங்கிலி மன்னனின் படைவீரர்கள் வல்வெட்டித்துறைக்கு ஓடிப் போய்க் குடியேறினார்கள், அவர்களிடையே பிரபாகரன் பிறந்தார் என்றெல்லாம் அருளினியன் சொல்வதற்கு எந்த நம்பகமான சான்றுகளும் கிடையாது. அவற்றை அருளினியன் தரவுமில்லை. சங்கிலியனின் வாரிசு பிரபாகரன் என்பதற்காவது காசி ஆனந்தனின் கவிதை ஒப்புக்காவாவது சான்றாயிருக்கிறது. மற்றவைக்கு அவையும் கிடையாது.

ஏனில்லை?  வையா பாடல், யாழ் வைபவமாலை போன்றவற்றில் இவையிருப்பதாகச் சொல்லியிருக்கிறேனே எனலாம் அருளினியன். இந்த நூல்களெல்லாம் அசலான வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்ளத் தக்கவையல்ல. இவை பெரும்பாலும் புராணங்களிலிருந்தும் கர்ண பரம்பரைக் கதைகளிலிருந்தும் கட்டப்பட்டவை.  இவற்றை  வைத்து வரலாறை மதிப்பிடுவது மகாவம்சத்தை வைத்து வரலாற்றை எழுதுவதற்கு ஒப்பானது.

கேரளத்திலும் புட்டு யாழ்ப்பாணத்திலும் புட்டு, அங்கேயும் தேங்காய்பால் இங்கேயும் தேங்காய்பால் அதனால் யாழ்ப்பாணத்தின் வேர் கேரளாவில் என்பதெல்லாம் என்ன ஆய்வு? தாய்லாந்து ஸ்பெஷல் தேங்காய்ப்பால் கறி ஞாபகம் வருகிறது. எம்பெருமான் மதுரையில் செம்மனச் செல்வியிடம் புட்டுக்கு மண் சுமந்ததை ஏற்கனவே யாரோ சுட்டிக்காட்டியிருப்பதாக ஞாபகம். நான் சின்னப் பையனாக இருந்தபோது, எங்கம்மாட ஜிமிக்கி கம்மலையும் எங்கப்பன் கொண்டுபோயி..அதற்காக என்னுடைய குடும்பம் கேரளாவாய்யா?

யாழ்ப்பாணத்தில் காலத்திற்குக் காலம் பல குடியேற்றங்கள் நடந்துள்ளன. அவை விரிவான ஆய்வுக்குரியவை. ஆனால் அதை ‘இதயம் பேசுகிறது’ பாணியில் எழுதிவிட்டு ஆய்வெனச் சொல்வது சரியற்றது.

நானொரு நன்நம்பிக்கைவாதி. எனவே இந்தக் குறைகளை அருளினியன் வருங்காலத்தில் சரி செய்வாரென நம்புகின்றேன்.

ஆறுமுக நாவலரின் சாதிவெறியை மறுபடியுமொருமுறை பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், யாழ் இந்துக்கல்லூரி – கொழும்புத் தமிழ்ச் சங்கம் – தென் கயிலை ஆதினம் போன்றவற்றின் வெள்ளாளத்தனத்தைத் தோலுரித்துக்காட்டியதற்கு வாழ்த்துகள் அருளினியன்!

VN:F [1.9.4_1102]
Rating: 6.3/10 (6 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +2 (from 4 votes)
நாவலரும் மைத்ரியும் மணியனும், 6.3 out of 10 based on 6 ratings
1 comment to நாவலரும் மைத்ரியும் மணியனும்
 • Yogoo

  இது நாவலா பயண கட்டுரையா ஆய்வா ஆர்ப்பாட்டம் என தெளிவு படுத்தினால் நல்லது.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner