மே, 1968 பிரான்ஸ்: மனசாட்சியின் கனவுகள்

கட்டுரைகள் ராஜன் குறை

ராஜன் குறை

நாற்பதாண்டுகளுக்கு முன் இதே மே மாதத்தின் 24ம் தேதியன்று பாரிஸ் பங்குச் சந்தை கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது ஊடகங்களில் நினைவு கூரப்படுகிறது. 27ம் தேதி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓரிடத்தில் திரண்டார்கள். மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்க, தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து வேலை நிறுத்தம் செய்தார்கள். மாணவர்களும், மக்களும் வீதிகளில் தடைகளை அமைத்து போலீசுடன் மோதினார்கள். தேசமே பெருங்கொந்தளிப்பை நோக்கி நகர்வதாகத் தோன்றியது.. என்னதான் நடந்தது அந்த மே மாதத்தில்?

1789 பிரெஞ்சுப் புரட்சி, 1871 பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு பிரான்ஸ் வரலாற்றிற்கு வழங்கிய மூன்றாவது புதிர் மே 1968. அப்போது புழங்கிய ஒரு சுற்றறிக்கையை பாருங்கள். சிரிப்பாகவும் இருக்கிறது. சிலிர்ப்பாகவும் இருக்கிறது.
Slogans To Be Spread Now by Every Means (leaflets, announcements over microphones, comic strips, songs, graffiti, balloons on paintings in the Sorbonne, announcements in theaters during films or while disrupting them, balloons on subway billboards, before making love, after making love, in elevators, each time you raise your glass in a bar):
OCCUPY THE FACTORIES
POWER TO THE WORKERS COUNCILS
ABOLISH CLASS SOCIETY
DOWN WITH SPECTACLE-COMMODITY SOCIETY
ABOLISH ALIENATION
TERMINATE THE UNIVERSITY
HUMANITY WON’T BE HAPPY TILL THE LAST BUREAUCRAT IS HUNG WITH THE GUTS OF THE LAST CAPITALIST
DEATH TO THE COPS
FREE ALSO THE 4 GUYS CONVICTED FOR LOOTING DURING THE MAY 6TH RIOT

OCCUPATION COMMITTEE OF THEPEOPLE’S FREE SORBONNE UNIVERSITY
16 May 1968, 7:00 pm
(பார்க்க http://www.bopsecrets.org/index.shtml)

மே-68 பிரான்ஸ் நிகழ்வுகள் பல உலகளாவிய நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. வியட்நாமிய எழுச்சி- அங்கு அமெரிக்காவின் தலையீடு-அதற்கான எதிர்ப்பு ஆகியவை இந்நிகழ்வுகளின் மையச்சரடாக விளங்கினாலும் அமெரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு போன்ற பல்வேறு எழுச்சிகளும் உரிமைப் போராட்டங்களும், காலனீய எதிர்ப்பு தேச விடுதலை போராட்டங்களும் உலகின் இலட்சியக் கனவுகளை பெருமளவு பரப்பின.

பாகிஸ்தானில் பிறந்தவரும், வியட்நாம் போர் குறித்து உலக விசாரணை மன்றத்தை அமைத்தவர்களில் ஒருவரும், இன்று உலக இடதுசாரிகளின் ‘பீஷ்மராக’ விளங்குபவருமான தாரிக் அலியின் “தெருச்சண்டை வருடங்கள்” (Streetfighting Years) என்ற நூலே எனக்கு அறுபதுகளின் நிகழ்வுகள் குறித்த சிறந்த அறிமுகத்தை வழங்கியது. பின்னர் கிரிஸ் மார்க்கரின் “சிவப்பே அக்காலத்தின் பின்னணி” (The Background of the Age is Red; Le Fond de l’air est rouge 1993) என்ற அபூர்வமான ஆவணப்படத்தை பார்த்ததே ஒரு கனவு போலத்தான் இருக்கிறது. அது படமல்ல, பாடம் என்று சொல்லத்தகும்.
ஆனால் பிரான்சில் அந்த மே மாதம் நிகழ்ந்தவற்றை எளிதில் விளக்க முடியும் என்று தோன்றவில்லை. கலகமா, புரட்சியா, எழுச்சியா அல்லது அபத்த நாடகமா அல்லது இவையனைத்தும் சேர்ந்ததா என்று இனங்காண முடியாத கலவை நிகழ்வாகத் திரண்டதாகத் தோன்றுகிறது. முதிர்ச்சியற்ற இளைஞர்களின் சாகச உணர்வுகளின் வெளிப்பாடு, சுய இன்பம் பெறுவதைப்போன்ற “விடலைத்தனம்” என ஒரு புறமும் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பச்சைத் துரோகம் என மறுபுறமும் கடும் குற்றச்சாட்டுகள் நிறைந்த சர்ச்சைகளால் சூழப்பட்டிருக்கிறது அந்நாட்களின் நினைவுகள்.

பெருங்கொந்தளிப்பாக மாற இருந்த எழுச்சி தொழிலாளர்கள் பெற்ற கணிசமான ஊதிய உயர்வுடன் அடங்கிப்போனது. (தொழிலாளர்களுடன் ரகசிய பேரங்களை நிகழ்த்தியவர் ழாக் சிராக்) அன்றைய மாணவர் தலைவர்களில் பலர் அரசாங்கங்களிலும், வணிகக் குழுமங்களிலும், ஊடக நிறுவனங்களிலும் உயர் பதவி வகிக்கிறார்கள். வரலாற்றுவாதிகளிடம் முதலீட்டியம் “நானே இனி வரலாறு; புரிந்ததா?” எனக் கிசுகிசுப்பாக கேட்டது எங்கும் சரிவரப் பதிவாகவில்லை.

********
முதலில் வரலாறு என்றால் நாம் என்ன பொருள் கொள்கிறோம் என்பதை பார்க்கவேண்டும். தினசரிப் பேச்சில் கடந்துபோனவை எல்லாம் வரலாறு என்று புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் வரலாற்றுவாதம் என்ற தத்துவ நோக்கில் வரலாறு என்பது கடந்தவற்றின் பின்னணியில் நிகழ்காலத்தில் நின்று எதிர்காலத்தை சமைப்பதாகும். வரலாறு என்பது காலத்தை வழி நடத்துவது; நாம் வரலாற்றுவாதத்தை புரிந்துகொள்ள மானுட வாததத்தை அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும்.

மானுடவாதம் மனித உயிரி இயற்கையிலிருந்து வித்தியாசம் கொண்ட இருப்பென்று எடுத்துக்கொண்டு அப்படிப்பட்ட தனித்துவமிக்க மனித உயிரியை படைப்பின் உட்பொருளென கருதும் தத்துவமாகும். இறைமை என்ற கருத்தை ஏற்றுக்கொண்டாலும் கூட, மானுடவாதம் இறை பிரபஞ்சத்தின் சாவியை மானுடத்திடம் கொடுத்து வைத்துக்கொள்ள சொல்லிவிட்டதாக கருதுவதாகும். புத்தொளிக்கால ஐரோப்பாவில் மானுடவாதம் பெரும் வலுப்பெற்று வளர்ந்தது. அறிவியல்-தொழில் நுட்பம், முதலீட்டியம், புதிய அரசியல் சிந்தனைகள் எல்லாம் மானுடவாதத்தின் துணையுடன் வளர்ந்தன.

பெற்றோர்கள் இறந்த பிறகு பிள்ளைகள் அனைத்து தாவர ஜங்கம சொத்துக்களுக்களுக்கும் பொறுப்பாவதைப்போல, கடவுள், அரசன் போன்ற கட்டுகளிலிருந்து நீங்கி மானுட கூட்டு சக்தியே அனைத்திற்கும் பொறுப்பேற்க முன்வந்தது. அப்படிப்பட்ட மானுட சக்தி தோன்றியதன் காரணமே வரலாற்றின் ஆன்மா என்றும், மானுட சக்தியின் சுதந்திர அரசத்துவத்தில் அது வடிவம் கொள்கிறது என்றும் கருதப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதிய ஹெகல், தன் காலத்திய நவீன சமூக உருவாக்கத்தை வரலாற்றின் ஆன்மா மானுடத்தின் செயல்பாடுகளில் நிறைவடைவதின் அடையாளமாகக் கண்டார். அவரது தத்துவத்தில் மானுட வாதமும் வரலாற்றுவாதமும் இணைந்து ‘இயங்கியலாக’ வெளிப்பாடு கண்டது. நவீன அரசு என்ற அருவமான அரசத்துவத்தில் பழைய தனி நபர் இறையாண்மை குழப்பங்கள் நீங்கி வரலாற்றின் ஆன்மாவால் ஊடுருவப்படும் மானுட கூட்டு சக்தி இலட்சிய உலகினை உருவாக்கும் என்றார் ஹெகல். அவர் கூறிய இலட்சிய உலகு உருவாகி விட்டதாகவும், வரலாறு நிறைவு பெற்று விட்டதாகவும் தாராளவாத சிந்தனையாளர்கள் சிலர் அவ்வப்போது அறிவிப்பது வழக்கம் (உதாரணம் ஃபூக்கயாமா 1993யில் ‘எழுதிய “வரலாற்றின் முடிவு” என்ற புத்தகம்.)

ஹெகலின் வரலாற்றுவாதத்தை பின்பற்றிய கார்ல் மார்கஸ், ஹெகலை தலைகீழாக்குவதாகச் சொல்லி வர்க்கப்போரை வரலாற்றின் இயங்கியல் காரணியாகக் கூறினார். தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் பொதுவுடமை சமூகத்தை உருவாக்கிய பின் வர்க்க பேதமற்ற சமூகத்தில் வரலாறு நிறைவு பெறும் என்றார். வரலாறு செல்லும் திசையை ஒட்டி அரசியல் இயக்கத்தை நடத்திக் கொண்டு போனால் தொழிலாளர் இயக்கம் வரலாற்றின் துணையுடன் வெற்றி பெற்று, வரலாற்றை நிறைவு செய்யும் என்றே பல மார்க்ஸீயர்கள் கருதினர். விவாதம் எப்போதுமே வரலாறு எப்படி நகர்கிறது எனக் கணிப்பதில்தான். வரலாற்றை முந்திக்கொண்டு புரட்சி செய்தால் அது சாகசவாதம். வரலாற்றிலிருந்து பின் தங்கி புரட்சி செய்யாமல் விட்டால் அது பிற்போக்குவாதம்.

மே 1968 இல் வரலாறு புரட்சிக்கு தயாராக இருந்ததா, இல்லையா? மாணவர்கள் சாகசவாதிகளா அல்லது தொழிலாளர்கள் பிற்போக்குவாதிகளா? ஒரு நல்ல பட்டிமன்றத்திற்கான பொருள் கிடைத்துவிட்டது. சாலமன் பாப்பையா தலைமை தாங்குவாரா? இன்னொரு சந்தேகம். 1968 இல் வரலாறு பிரான்ஸில் புரட்சிக்குத் தயாரில்லை என்றால் எப்போது தயாராகும்? ஒரு வேளை வரலாறு புரட்சி வேண்டாம் என முடிவு செய்து திரும்பிப் போய்விட்டதோ? புரட்சி நடந்த இடங்களில் கூட வரலாறு பாட்டாளி வர்க்கத்துக்கு உதவியாக இருக்காமல், மீண்டும் முதலீட்டியத்திற்கே அனுசரணையாக நடந்துகொண்டுவிட்டது. இப்போது இந்த மானுட கூட்டு சக்தி எப்படித்தான் அரசியல் செய்து இலட்சிய உலகை உருவாக்குவது? இன்றைய உலகில் அனைத்து மக்களுக்கும் அரசியலதிகாரத்தில் பங்கிருக்கிறதா? ஓட்டுப் போட்டுவிட்டு ஒதுங்குபவர்கள் தவிர, ஓட்டுரிமையே இல்லாத அகதிகள் எத்தனை பேர்? மானுட கூட்டு சக்தியென்றால் இன்று எப்படி பொருள்கொள்வது? (பழைய கேள்விகள்தான்; மீண்டும் கேட்டுவைத்தேன் – மறக்காமலிருக்க)

*****
தமிழ்க் கவிஞர்களில் மிக முக்கியாமானவரும், பல சர்ச்சைகளின் நாயகரும், இலங்கையில் பிறந்தவருமான தர்மு ஜீவராம் ஒருமுறை புத்தகக் கடையொன்றில் வேறொரு நண்பரிடம் மே 1968 பிரான்ஸில் மார்க்ஸீயம் தவறென்று முடிவாகிவிட்டதாக கூறிக்கொண்டிருந்ததை கேட்டேன் மாணவர்கள் புரட்சிக்கு வித்திடுவதென்பது மார்க்ஸின் தத்துவப் புரிதலுக்கு மாற்றானதுதான். இதே போலத்தான் கிராம்சி ரஷ்யப் புரட்சியை மார்க்ஸீயத்திற்கு எதிரான புரட்சி என்றார். மார்க்ஸை பொறுத்தவரை அவர் வாழ்வின் பிற்பகுதியில் வரலாறு பல பாதைகளில் பயணிக்கலாம் என்று எண்ணியது எங்கெல்ஸுக்கு அவரெழுதிய கடிதங்களில் பதிவாகியுள்ளது.

ஆனால் இன்று வரலாறு பயணிக்கிறதா இல்லையா, எங்கே போகிறது என்றுதான் புரியவில்லை.தேரோட்டம் வரலாற்றிற்கு நல்ல உருவகம். நாம் வடம்பிடிக்கும்போது நாம் அதை இழுக்கிறோமா அது நம்மை இழுக்கிறதா என்று சந்தேகம் வரும். மனிதர்கள் இழுப்பதினால் தேர் ஓடவில்லை என்று கூட சில சமயம் தேர் வேகமாக ஒடும்போது தோன்றும். கண்ணுக்கு புலனாகா மானுட கூட்டு சக்தி ஒரு நகர்வை நிகழ்த்துவது நிதர்சனமாக வெளிப்படும்.

இதைச் சொல்லும்போது இன்னொரு முக்கியமான தமிழ்க் கவிஞரும், தன் பங்கிற்கு பல சர்ச்சைகளுக்கு வித்திட்டவருமான ஞானக்கூத்தனின் தேரோட்டம் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. கவிதையின் இறுதி வரிகள் மே 1968 பிரான்சிற்கு பொருத்தமாக காணப்படலாம்:

தெருவோடும் தூரமின்னும்
வடமோடிப் போகலையே
வடமோடும் தாரமின்னும்
தேரோடிப் போகலையே
காலோயும் அந்தியிலே
கண்தோற்றம் மாறையிலே
யாரோ வடம் பிடிச்சி
அய்யன் தேரு நின்னுடிச்சி!

3 thoughts on “மே, 1968 பிரான்ஸ்: மனசாட்சியின் கனவுகள்

  1. கையோடைகையா பிளெகானெவ், பெர்ன்ஸ்டைன் இவர்கள்பற்றியும் மறுமதிப்பீடு வைத்தால் பெரும் உதவியாய் இருக்கும். இவர்களுக்கு நாம் பெரும் அநீதி இழைத்துவிட்டோம்.

  2. மே 68ல் நடந்தது ஒரு எழுச்சி.வரலாற்றில் எல்லா எழுச்சிகளும்
    புரட்சிகளாவதில்லை. எல்லா புரட்சிகளுக்கும் அடியே எழுச்சிகள்
    இருந்தாலும் எழுச்சியை புரட்சியாக மாற்றுவது எளிதல்ல. செயல்திட்டம் கொண்ட தெளிவாக செயல்படும் கட்சி அதைச் செய்யும்.ஒரு குட்டி பூர்ஷவா கலகத்தில் தொழிலாளர்களும்
    சேர்ந்து கொண்டார்கள்.இனியும் எழுச்சி, கலகம் வரும்.ஆனால்
    எல்லாவற்றையும் 68டுடன் ஒப்பிட முடியாது.என்ன செய்வது
    வயோதிக வாலிப இடதுசாரிகளுக்கு மே 68 ஒரு கனவாய்
    கதையாய் எப்போதும் தொடர்கிறது. தாரிக் அலியைப் படித்து,
    சார்த்தை நினைவு கூர்ந்து அந்த நாட்களுக்காக அடிமனதில்
    ஏக்கமிருந்தாலும் 2008ல் ஒரு 68 நடக்காது என்பதும் புரிகிறது.
    அது கசக்கிறது. ஹெகல், மார்க்ஸைப் படிக்கலாம். ஆனால்
    வரலாறு எல்லோருக்கும் தண்ணி காட்டுகிறது. அதைப் புரிந்துள்ள
    கொலம்பியா பல்கலை வரை போக வேண்டியதில்லை :).

  3. மேற்கு ஐரோப்பிய அரசுகள் அவ்வப்போது வெடிக்கும் மக்கள் போராட்டங்களை அங்கீகரித்து, சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் தனது இருப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த வளைந்து கொடுக்கும் தன்மை, ஆண்டாண்டு காலமாக மக்கள் போராடி பெற்ற உரிமைகளை, தான் “மனவுந்து கொடுத்த” சலுகைகள் போல காட்டிக்கொள்ள உதவுகின்றது. அதனாலே தான் இன்று உலகில் பலர், 1968 பிரெஞ்சு புரட்சியை போன்ற பல விடயங்களைப் பற்றி கேள்விப்படாதவர்களாக உள்ளனர்.
    http://kalaiy.blogspot.com/2008/06/blog-post.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *