வரலாறு என்ற மலைப்பாதைப் பயணம்

கட்டுரைகள் ராஜன் குறை

ராஜன் குறை

த்தியக் கடதாசி வலைத்தளத்தில் நான் விவாதித்திருந்த சில பிரச்சினைகளை எனது முன்னோடிகளில் ஒருவரான நண்பர் அ.மார்க்ஸ் தீராநதி இதழில் அன்புடன் கவனப்படுத்தியதற்கு (http://www.shobasakthi.com/archives/161) அவருக்கு நன்றி தெரிவிப்பதன்றி தனிப்பட்ட முறையில் ஏதும் கூறுவது கவனச்சிதறலாகிவிடும் என்பதால் மீண்டும் பிரச்சினைகளுக்கே வருகிறேன். ஒருமுறை கூட்டத்தில் உரையாற்றும்போது அ.மார்க்ஸ் தத்துவத்தளத்தில் கேள்விகளுக்கு பதில் தருவதென்பது விரும்பத்தகாதது எனக்கூறினார்; காரணம் பதில் என்பது கேள்விகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் கூற்றை வைப்பதாகும். தத்துவத்தின் வேலை கேள்விகளை வலுப்படுத்துவதுதான். அதன்படியே அவருடன் இணைந்து கேள்விகளை வலுப்படுத்தும் விதமாகவும், அக்கறைகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டும் சமகாலப் பிரச்சினைகளின் மேலும் சில அம்சங்களை விவாதிக்க விரும்புகிறேன்

முதலில் காந்தியைப்பற்றி அவர் கூறியிருப்பதை முழுதும் வழி மொழிகிறேன். முதலீட்டிய நுகர்வுக் கலாசாரத்திற்கு எதிர்முனையில் நுகர்வின் அறம் குறித்த கேள்விகளை எழுப்ப காந்தியை விட சிறந்த ஆளுமையை இருபதாம் நூற்றாண்டு வரலாற்றில் பார்க்க முடியாது. அடுத்து, வலைத்தளங்களில் மிசியோ காகுவின் சிந்தனைகளை பார்த்தபோது அவரது நம்பிக்கைகள் மனதிற்கு இதமளிப்பதாக இருந்தன. மனித வாழ்க்கைக்கு நம்பிக்கைகள் அவசியம்தான். அவை மூடாத, திறந்த நம்பிக்கைகளாக இருக்கும்வரை அவற்றால் பிரச்சினையில்லை. அத்தகைய நம்பிக்கைகளால் மானுடம் சிந்திக்க சோம்பலுற்றால் அது ஆபத்தானது.

சூழலியல் குறித்து புரூனோ லதூர் சமீபத்தில் எழுதியுள்ள “இயற்கை அரசியல்” (Politics of nature : how to bring the sciences into democracy / Bruno Latour ; translated by Catherine Porter. Cambridge, Mass. : Harvard University Press, 2004) என்ற நூல் மிகவும் முக்கியமானதென்று படுகிறது. இதுவரையிலுமான சூழலியல் இயக்கங்கள் செய்த தவறொன்றை அவர் சுட்டிக்காட்டுகிறார். அது மானுடம் இயற்கையை காப்பாற்றவேண்டும் என்ற கோட்பாடாகும். மானுடம் எதற்காக இயற்கையை காப்பாற்றவேண்டும்? மானுடம் தன்னைக்காப்பாற்றிக்கொண்டால் போதும் என்கிறார் அவர். இயற்கையை மானுடத்திடமிருந்து அன்னியப்படுத்தி, பொருள்வயமாகப் பார்க்கும் இருமைவாத மீமெய்யியலின் தொடர்ச்சியாகவே பசுமை இயக்கங்கள் இயற்கையைக் காப்பது குறித்து பேசத்துவங்கின. மானுடப் பண்பாடு X இயற்கை என்ற இருமையை நவீன காலத்தின் அடித்தளமாக்கியது கார்டீசிய சிந்தனை. மானுட அறிதலின் இலட்சியம் தன்னைக்காத்துக்கொள்வதன் பொருட்டு இயங்கினால் அவ்வியக்கத்தினூடே அதன் வாழ்வாதாரங்களான மழைக்காடுகளின் தேவை புரிந்துவிடும்.

மேலும், அறிவியலின் செயல்முறைகளை வடிவமைக்கும் தத்துவம் குறித்து லதூர் சில நூல்களை எழுதியுள்ளார். பரிசோதனைச்சாலையின் கருவிகள் மூலம் நிறுவப்படும் விதிகளை, சாத்தியங்களை இயல் பெருவெளிக்கு கடத்தும் போது உண்டாகும் உப, பின் விளைவுகளை அறிவியலால் கணிக்க முடிவதில்லை. பசுமைப்புரட்சி, மருத்துவத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகளின் எதிர்மறை உப-பின் விளைவுகள், அவற்றிற்கான மாற்று, அந்த மாற்றுகளுக்கான எதிர்மறை விளைவுகள் என்று விபரீத தொடர்சங்கிலி உருவாவதைப் பார்க்கிறோம். ஆகவே, அறிவியல்-அரசியல்-தத்துவம் ஆகிய மூன்றிற்குள்ளான விவாதம் மானுடத்தை வழிநடத்தவேண்டும். ஆனால் முதலீட்டியம் மூன்றையும் விழுங்கிவிட்டதால், அதன் வயிற்றிற்குள்ளிருந்து இந்த விவாதத்தை நடத்துவது சாத்தியமல்ல. அதன் வயிற்றைக்கிழித்துக்கொண்டு வெளிவரும் சக்தி தத்துவத்திற்கு இருக்கலாம். மற்ற இரண்டையும் வெளியே கொண்டுவரமுடியுமா எனத் தெரியவில்லை. முதலீட்டிய பூதத்தின் பூசாரிகளான பொருளாதார நிபுணர்கள் என்ற வேடிக்கை மனிதர்கள் போடும் கூச்சலில் தத்துவத்தின் தீனமான குரல் யார் காதிலும் விழுவதில்லை.

நிறப்பிரிகை ஆறாவது இதழை (ஏப்ரல் 1993) இன்று தற்செயலாகப் புரட்டிய போது கெயில் ஓம்வெத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதன் கடைசி வரிகள்: “இன்று ஏகாதிபத்தியத்தை விமர்சிப்பதென்பது இடது சாரிகளாலும் வலது சாரிகளாலும் “வளர்ச்சி” எனப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிற கருத்தாக்கத்தை விமர்சிக்காமல் நடக்காது. இத்தகைய “பசுமை விமர்சனத்தோடு” “சிவப்பு விமர்சனம்” இணையும் போதுதான் விடுதலைக்கான பாதையைக் கண்டடைய முடியும்.” நிறங்கள் பிரிவதும் இணைவதும்தானே இயற்கை.

இறுதியாக வரலாற்றின் பயணம் என்ற உருவகம் குறித்த சில வார்த்தைகள். இயற்பியல்-உயிரியல் காலத்தில் “பின்னோக்கிச்” செல்வது சாத்தியமில்லை. 1972-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிற்பகலில் கோவை நகரத்து வீதி ஒன்றில் சிறுவனாக நான் நடந்த போது, சாக்கடையில் அமர்ந்து சல்லடையில் உலோகத்துகள்களை சேகரித்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு இன்றைக்குச் சென்று கெளவரமான வாழ்க்கை அமைத்துத் தர முடியாது (கற்பனையில், நினைவுகளில்தான் சாத்தியம்). கடந்தவை எல்லாம் கடந்தவையே. மனித சிந்தனையின் சேகரமும் தத்துவ ரீதியாக முன்னால்தான் போகவேண்டும். எனவே வரலாறு என்கிற வண்டி முன்னால்தான் போகும். ஆனால் அது பயணம் செய்யும் பாதை பல திசைகளிலும் திரும்பலாம். சமவெளியில் பாதை நேர்கோடாக இருக்கலாம். அப்போது வண்டி பின்னோக்கித் திரும்பினால் புறப்பட்ட இடத்திற்கே சென்று விடுவோம். மலைகளில் பாதை வளைந்து வளைந்துதான் செல்லும். கொண்டையூசி வளைவில் வண்டி வந்த திசையிலேயே பின்னோக்கித் திரும்பும். ஆனால் ஏற்கனவே கடந்து வந்த இடத்திற்கு மேலே இன்னொரு புள்ளிக்குப் போகும். புதிய உற்பத்தி உறவுகளுடன் பழைய உற்பத்தி முறைகளுக்கு செல்லலாம் எனக்கூறும் ஈரியக்கவாதத்தை (இயங்கியல் என வழங்கப்படும் dialectic) உருவாக்க வேண்டும். அதுவே ஹெகலுக்கும், மார்க்ஸிற்கும், நிரந்தர மறுநிகழ்வை சிந்தித்த நீட்சேவிற்கும் நாம் செய்யும் மரியாதை எனக் கருதுகிறேன்.

9 thoughts on “வரலாறு என்ற மலைப்பாதைப் பயணம்

  1. மானுடப் பண்பாடு X இயற்கை என்ற இருமையை நவீன காலத்தின் அடித்தளமாக்கியது கார்டீசிய சிந்தனை.
    புதிய உற்பத்தி உறவுகளுடன் பழைய உற்பத்தி முறைகளுக்கு செல்லலாம் எனக்கூறும் ஈரியக்கவாதத்தை (இயங்கியல் என வழங்கப்படும் dialectic) உருவாக்க வேண்டும்
    My humble brain struggling a bit to get hold of these. Can you elaborate on this so that everyone can benifit. வரலாறு என்கிற வண்டி – looks bit silly to me.
    Please have a look at the following link
    http://www.greensocialist.org.uk/ags/resources/downloads/WOE2.pdf

    AGS-is not necessarily correct on all points. However they realised what’s more important and how to bring about the change. Its leading member participated in ‘National shop stewards network’ conference last Saturday 28/06. His understanding of dialectics is quite different my friend.
    Also researcher and Marxist Pete Dickinson wrote a book on this issue –‘planning green growth’ –worthwhile looking at. Now he spent his time between England and China doing his research. But I can arrange a time for you if you personally want to discuss these points.

  2. சேனனுக்கு,

    1. என்னுடைய எளிய அறிவைக்கொண்டு அந்த வரிகளை விரிவாக்கி எழுத நிறைய அவகாசம் தேவைப்படுகிறது. காலப்போக்கில் நிச்சயம் செய்வேன். விரிவாக எழுதும் வரை காத்திருக்காமல், ஒருசில சுட்டிகளை பதிவு செய்யும் பொருட்டுதான் சத்தியக்கடதாசியில் எழுதுகிறேன். யாரேனும் அவர்கள் அவ்வரிகளைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று எழுதினால், விவாத மார்க்கமாக மேலும் சில கருத்துக்களைக் கூறலாம். முன்னெக்காலத்தையும்விட இன்று எழுத்து என்பது மணலில்தான் எழுதப்படுகிறது. என் கருத்தை “நிறுவுவது”, பிற கருத்துக்களை “வெல்வது” போன்ற கற்பிதங்களுக்கும் எனது எழுத்துப் பயிற்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    2. ஒரு சில “கொச்சையான” வெளிப்பாடுகளை எழுத்தில் கலப்பது எனக்கு எப்போதுமே உவப்பாக இருக்கிறது. தமிழ் நிகழ்கலை மரபுகளிலும் அதன் தொடர்ச்சியாக சினிமாவிலும் இப்போக்கிருப்பது அதன் காரணமாக இருக்கலாம். வரலாறு தேரோட்டம் என்று சென்ற பதிவில் எழுதினேன். “வரலாறு என்ற வண்டி” என்பதில் என்ன பிரச்சினை என்று புரியவில்லை. வண்டி, பயணம், நடை,வரலாறு எல்லாம் மாற்றத்தை உருவகப்படுத்துவதுதானே.

    3. ஈரியக்கவாதம் குறித்து பல சிந்தனை போக்குகளிருப்பது இயல்புதான்; தத்துவத்தின் தொடக்கப்புள்ளிகளிலிருந்தே தொடர்வதுதானிது. எனது சிந்தனை ராய் பாஸ்கர் என்பாரது Dialectic: The Pulse of Freedom (Published 1993 Verso) என்ற நூலின் சில சரடுகளை வேறு தத்துவ சரடுகளுடன் இணைக்க விழைவதாக இருக்கிறது.

    பிற சுட்டுதல்களுக்கு நன்றி.

  3. கிடைக்கோட்டு ரீதியான “வளர்ச்சி” என்ற பெருங்கதையாடலுக்கு மாற்றாக ஒரு மாதிரியான செங்குத்து கோடு ரீதியான “முன்னேற்றம்” என்பதை ராஜன் குறை முன் வைக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் இதையே வேறொரு தத்துவப் பொருளில் கூறினால் இதற்கு நேர் மாறான மாற்றத்தையே பின் அமைப்பியல் வாத சிந்தனாவாதிகள் பிரேரணை செய்கின்றனர் என்று கூற முடியும். அதாவது பாராடிக்மேடிக் பதிலீடுகளுக்கு பதிலாக சின்டாக்மேடிக் மாற்றம் வேண்டுமென்று கூறுகிறார்கள். ராஜன் குறையின் மலைப்பாதை படிமத்தை தகர்ப்பு வாசிப்பு செய்தால், மலைப்பாதை ஹேர் பின் வளைவுகளால் ஆனது என்றால், வளைந்து வளைந்து ஆனால் மேலேறியபடியே இருக்கும். நடுவில் பேராபத்துகள் கொண்ட வளைவுகள் இருக்கும், அதில் தவறி விழாமல் இருந்தால் இன்னொரு புள்ளிக்குப் போகும். நீட்சேயின் “நிரந்தர மறு நிகழ்வு” அல்ல “நிரந்தர மீள் வரவு” என்பது கூட மலைப்பாதையிலிருந்து வளைந்து வளைந்து கீழ் இறங்குவதாகக் கூட இருக்கலாம். ஏனெனில் டௌன் கோயிங் பற்றித்தான் அவர் தனது ஜாரதுஷ்டிரன் நூலில் கூறுகிறார். மானுட குலம் ஏற்கனவே மலைப்பாதைகள் போன்ற வளர்ச்சி மாயா பாதையில் மலை உச்சியை எட்டிவிட்டுள்ளதாக இறுமாப்பு கொண்டுள்ளது. அந்த மலையுச்சியிலிருந்து டௌன் கோயிங் அல்லது டௌன் கமிங் நிகழவேண்டும் என்று மாற்று முறையாக கூறலாம். தகர்ப்பு விமர்சன தர்க்கத்தின்படி யோசித்தால் துவக்கப்புள்ளியும் சென்றடைந்த புள்ளியும் ஒன்றே அல்லது தெரிதா கூறுவது போல் புள்ளியே இல்லை. போகும் இடத்தில் புள்ளி இருக்குமா அல்லது அப்ய்ச்ச் இருக்குமா என்று தெரியாது. பிறகு புதிய உற்பத்தி உறவுகளுடன் பழைய உற்பத்தி முறைகளுக்குச் செல்லலாம் என்பது ரூசோ மாதிரி கற்பனாவாத திரும்புதல் உடோபியா அல்லது அடோபியா என்று கூடக் கூறலாம். மீண்டும் வரலாறு… உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்தி முறைகளுக்கும் முரண்பாடு தோன்றும் பிறகு மீண்டும் அறிவு ஜீவிகள் பழைய உற்பத்தி முறைகளுக்கு செல்லலாம் என்று அங்கலாய்த்தப்படியே இருக்கலாம். நீட்ஷேயிந் நிரந்தர மீள் வரவு இது போன்று ராஜன் குறை விரும்புவது போல் “நிரந்தர மறு நிகழ்வாக” மட்டுமே இருக்கும்

    ஆர். முத்துக்குமார்..

  4. முத்துக்குமாருக்கு
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. விவாத நோக்கில் சில பதிவுகள்.
    1.செங்குத்துக்கோடு ரீதியான “முன்னேற்றம்” என்பதை முன் வைக்கிறேன் என்று தோன்றுகிறது என்கிறீர்கள். உருவகத்தை கோட்பாடாக எடுத்துக்கொள்கிறீர்களோ என்று ஐயமாக இருக்கிறது. சத்தியக் கடதாசியில் என்னுடைய முன்னிறு பதிவுகளையும், திண்ணை இணைய தளத்தில் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் செய்த இரு பதிவுகளையும் இணைத்துப் படிக்கும்படி கேட்டுக் கோள்கிறேன். இன்றைய நிலையில் தத்துவத்தின் சாத்தியங்கள் குறித்தே யோசித்து வருகிறேன். நம்பிக்கை-அவநம்பிக்கை இருமை எதிர்வை கடந்து தத்துவத்தின் இன்றியமையாமையை அடிப்படையாகக் கொண்டால் உரையாடல் சிறக்கும் என்பது என் எண்ணம்.
    2.நிரந்தர மறு நிகழ்வை, நீங்கள் நிரந்தர மீள் நிகழ்வு என்று கூறுவது உங்கள் எதிர்வினையின் முக்கியமான அம்சமாகப் படுகிறது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்பது குறித்து சுருக்கமாகவோ, அல்லது விரிவாகவோ அவகாசம் கிடைக்கும்போது எழுதுங்கள். மீள் வரவு என்பது அவதூதர் அல்லது அவதார மரபில் நீட்சேவை இணைத்து விடும் என்பதால் எனது வரலாறு குறித்த மாற்று இயங்கியல் உருவாக்கத்திற்கு எப்படி உதவும்? இந்த விஷயத்தில் நான் தெல்யூஸின் சிந்தனைகளை அடியொற்றிச் செல்கிறேன் என்று கூறலாம். (பார்க்க: Repetition and Difference) ஆனால் நீட்சே வாசிப்பின் துவக்கத்திலேயேயிருக்கிறேன் என்பதால் உங்கள் கருத்துக்கள் எனக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
    3.“தெரிதா கூறுவது போல் புள்ளியே இல்லை” என்றால் என்ன பொருள் என்று விளக்குங்கள். தெரிதாவை தத்துவத்திற்கும், தர்க்கத்திற்கும் எதிரியாக மாற்றும் போக்கிற்கு “முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் (நகைமுரண்.)” பிரசன்னத்தின் மீமெய்யிலின் மேல் அவர் தொடுத்த பிரம்மாண்டமான விமர்சனம், “தகர்ப்பமைப்பு”, கடும் தார்க்கீக பலம் கொண்டது. அது கொச்சை சூன்யவாதமல்ல. தர்க்கமையவாதத்தை கேள்விக்குள்ளாக்குவதும் தர்க்கத்தையே துறப்பதுமல்ல. செயலுலகமும், கருத்துலகமும் இணைவதேயில்லையென்றால் பிரச்சினையே கிடையாதே. குரங்கினங்களில் ஒன்றான மனிதனும் வனங்களில் திரிந்து மகிழ்ந்திருக்கலாம், அல்லது அழிந்திருக்கலாம். எதற்காக எழுத்து, தத்துவம் வெங்காயமெல்லாம்.
    4.மானுடம் நல்லபடியாக இருப்பது சாத்தியம் என்று யோசித்தாலே உடோப்பியா, கற்பனாவாதம், ரூசோ என்று கூறினால் வீணாப்போவதிற்கும் அழிவதற்கும் எந்த தர்க்கமும் தேவையில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இருப்பை நேசிப்பது பிரசன்னத்தைக் கொண்டாடுவதல்ல.

  5. http://ravisrinivas.blogspot.com/2008/07/blog-post_04.html

    இன்று புவி வெப்பமடைவதல் பெரிய பிரச்சினை, ஒசோன் படுகை நாசமடைவது அத்துடன் ஒப்பிடுகையில் அவ்வளவு பெரிய பிரச்சினையல்ல.அது குறிப்பிடத்தக்க அளவிற்கு தீர்வு காணப்பட்ட பிரச்சினை. இதை ராஜன் குறையும், அ.மார்க்ஸும் குறிப்பிடுவதில்லை. முதலீட்டியம், புவி வெப்பமடைதல் குறித்து இடதுசாரிகள், மார்க்ஸியர்கள் எழுதியுள்ளனர். மார்க்ஸியம், சுற்றுச்சூழல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக பல புதிய நூல்கள், ஆய்வுகள் வெளியாகியுள்ளன. பசுமை(யாகும்) மார்ஸியம், எகோ சோசலிசம்(Eco-Socialism) என்றெல்லாம் பேசப்படுகிறது, மார்க்ஸின் எழுத்துக்களில் இயற்கை வளங்கள் குறித்த அக்கறை வெளிப்படுகிறது என்று தொடங்கி, இன்றைய உலகச் சூழலில் மார்க்ஸிய கண்ணோட்டத்தில் சூழல் பிரச்சினைகளை எப்படி புரிந்து கொண்டு, தீர்வுகளை முன் வைப்பது என்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அ.மார்க்ஸ் கூறும் விளக்கம் ”முதலீட்டு வடிவத்தில் மட்டுமின்றி கல்விமுறை,மருத்துவம்,குடும்ப அமைப்பு என எல்லாவற்றிலும் முதலாளியத்தை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை” ஒரளவே பொருந்தும். மாறாக சுற்றுச்சூழல், மார்க்ஸியம் குறித்த விவாதங்கள்தான் ஏன் இன்னும் அடிப்படையான கேள்விகளை, அதாவது சுற்றுச்சூழல், இயற்கை குறித்த மார்க்ஸிய புரிதலிலேயே பிழை(கள்) இருந்தனவா எழுப்பும்.

    அந்த வகையில் தமிழ்சூழலில் இவற்றை எழுப்பியவர்களில் முதன்மையானவர்கள் கோவை ஞானியும், எஸ்.என்.நாகராஜனும்தான். இவர்கள்தான் இயற்கை வேளாண்மையையும் ஒரு மாற்றாக முன்னிறுத்தி ஆதரித்தவர்கள். இந்த விவாதங்களில் அ.மார்க்ஸின் பங்களிப்பு, நான் அறிந்தவரை, அதிகமில்லை. மாறாக ஒரு காலகட்டத்தில் கெய்ல் ஒம்வேட்டின் கருத்துக்களை இங்கு சொல்லிக் கொண்டிருந்தவர் அவர். முதலீட்டியம் புவி வெப்பமடைதல் ஒரு பிரச்சினை என்பதை இப்போது கிட்டதட்ட ஏற்றுக் கொண்டு, தீர்வுகளை தேடுகிறது. முதலீட்டியம் என்பது ஒரு மாயப் பிசாசல்ல. அது எவற்றின் மூலம் தொழிற்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சந்தைப் பொருளாதராத்தினை அடிப்படையாக கொண்ட, முதலீட்டியம் வலுவாக உள்ள பல நாடுகள், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்தேரிலியா, கனடா போன்றவை இன்று உலக வெப்படைமதல் பிரச்சினைக்கு தீர்வு காண விழைகின்றன. புவி வெப்படைமதல் நாடுகள் தீர்வு காண வேண்டிய உலகளாவிய பிரச்சினை. இதில் தலைமுறைகளிக்கிடையேயான சமத்துவம், தலைமுறைக்கிடையேயான சமத்துவம் குறித்த கேள்விகள் உண்டு. யார் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தினை எந்த அடிப்படையில், எவ்வளவு காலத்திற்குள் எந்த அளவு குறைப்பது உட்பட பல சிக்கலான வினாக்கள் உள்ளன. நாடுகள் முன்பு ஒத்துழைத்து மாண்டிரியல் புரோடோக்கால் மூலம் ஒசோனை அழிக்கும் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, விநியோகத்தினை கட்டுப்படுத்தி, குறைத்தன.ஆனால் கியோட்டா புரோடடோக்கால் தோல்வியுற்றது. இது ஏன் என்பது சுவராசியமான, முக்கியமான கேள்வி. முதலீட்டியம் என்ற ஒன்றின் அடிப்படையில் இப்பிரச்சினையை புரிந்து கொண்டு தீர்வு காண முடியாது.

    காந்தியின் சிந்தனை, செயல்களின் தாக்கத்தினை சுற்றுச்சூழல் அறம் குறித்த கோட்பாடுகளிலும், சுற்றுச்சூழல் இயக்கங்கள்/போராளிகளின் செயல்பாடுகளில் காண முடியும். உதாரணமாக அர்னே நாயிஸ் என்ற நார்வே நாட்டு தத்துவவாதி முன்வைத்த கோட்பாடான ஆழ்சூழலியல் (Deep Ecology) என்பதை சுட்டிக்காட்டலாம். சூமாக்கர் போன்றவர்களிடமும் காந்தியத்தின் தாக்கம் உண்டு, மேலும் ஜெகன்னாதன் – கிருஷ்ணம்மாள், ராஜேந்திர சிங், மேதா பட்கர் உட்பட பல போராளிகளும் காந்தியத்தினை ஏற்றவர்களே. நுகர்வியம் குறித்த விமர்சனங்கள், தொழில் நுட்பத் தீர்வுகளை மதிப்பிடுதல் உட்பட பலவற்றில் காந்தியின் சிந்தனைகள் பயன்படும். இவையெல்லாம் பழைய கருத்துக்களே. எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டிப்பு’ செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான். கியுபா இயற்கை சார் வேளாண்மை மூலம்தான் தீர்வு கண்டது. இயற்கை வேளாண்மை மட்டும் போதுமா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். விரிவஞ்சி என் எதிர்வினையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
    —————————————————————————-

    பி.கு:எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டிப்பு’ செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
    என்பது
    ‘எப்படியோ அ.மார்க்ஸ் காந்தியை ‘மீள் கண்டுபிடிப்பு’ செய்து நமக்கெல்லாம் அறிவிக்கிறார் என்பதே ஒரு வரவேற்கத்தக்க ஒன்றுதான்’ என்றிருந்திருக்க வேண்டும்.பிழை எனதே.

  6. அன்பின் ராஜன் குறை,

    வரலாறு பற்றியும் இயங்கியல் பற்றியும் நீண்ட உரையாடலை பின்னூட்டத்தில் நிகழ்த்த தற்போது முடியாமைக்காக வருந்துகிறேன். இருப்பினும் தாங்கள் விரிவாக எழுதும்பொழுது நிச்சயமாக எனது கருத்துக்களை வைப்பேன்.
    சமீபத்திய உங்கள் சிறு குறிப்பு கட்டுரைகளில் தாங்கள் மார்க்சியம் பற்றி வைத்த குறிப்புகளை பார்த்ததால்தான் அவசரஅவசரமாக விரிவுகோரி பின்னூட்டம் இடநேரிட்டது. ஏனெனில் குறிப்புகளை வைத்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதன் தலைகால் பிடிப்பது எனக்கு சிரமமாக இருக்கிறது. இது மட்டம் தட்டுவதல்ல. மாறாக சமூகமாற்றத்திற்காக இயங்குவதன் பக்கவிளைவு!

    நிறுவுவது இயங்கியல் அல்ல.
    மாறும் என்ற விதியை தவிர எல்லாம் மாறும் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. எமது பிரச்சினை எது சரி-உண்மை என்பதல்ல. (,Jgw;wp உண்மையின் ஏகபோக உரிமை Monopoly of Truth
    vd;w Fwpg;ig ghHf;f: http://thesamnet.co.uk/?p=162) மாற்றத்தை கொண்டுவருவது எது என்பதே எமது சிந்தனை. இதன் பகுதியாகவே கொச்சையான வெளிப்பாடுகள் தவறுதலாக ஏற்படுத்தக்கூடிய வாசிப்புகளை அழுத்தமான கவனத்திற்குட்படுத்த விரும்புகிறோம்.

    கார்டீசிய சிந்தனை ஏற்படுத்திய இருமைகளை எல்லாவித இருமைகளுக்கும் பொருத்தி பார்ப்பதானது கார்ட்டீசியம்தான் இருமைகளை ஏற்படுத்தியது என்பதற்கு ஒப்பானது. இருமைகள் வாயிலான அறிதல் பல விஞ்ஞான சாத்தியங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதனால் அது நிறுவப்பட்டுவிடவில்லை. அடிப்படை தர்க்கத்திற்கு அப்பாற்படாத நேர்கோட்டு சிந்தனை முறையில் விளக்கத்துக்கான சாத்தியங்களை மிகவும் குறைக்கும் படிக்கு அறிதல் நிலை நன்றாக வளர்ச்சிகண்டுவிட்டது.(ஆர் முத்துக்குமாரும் இதை சுட்டுகிறார்) இதன் பாற்பட்டே பயனம் வண்டி என்ற பார்வைகள் போதாதவையாக படுகிறது. திசைகளின் சரிவு பற்றியும்- புள்ளியின் பன்மை பற்றியும்- நேரத்தின் கோனல்கள் பற்றியும்- விரைதலின் சார்பு பற்றியும்-உலகு நீண்ட நாட்களாக போசிக்கொண்டிருக்கும்பொழுது நாம் எமது பழய உதாரனங்களை கேழ்வி கேட்க வேண்டாமா? ஒரு புள்ளிக்கு பல இருப்புக்கள் இருப்பதன் சாத்தியத்தை விஞ்ஞானம் சொல்லும் பொழுது அப்புள்ளியின் இருத்தலை தத்துவம் கேழ்விக்குட்படுத்துவதில் என்ன பிழை.(அது தெரிதாவாக இருந்தாலென்ன யாராக இருந்தாலென்ன?). தத்துவத்தின் தேவை கேழ்விகளை வலுப்படுத்துவது மட்டுமல்ல.(ராய் பாஸ்கரின் தாக்கம் இதில் தெரிகிறது). மாறாக மாற்றத்தை செய்வது அதன் தலையாய கடைமையாக இருக்கிறது. கேழ்விகள் பலப்படுவதால் உண்மை நோக்கிய நெருங்குதல் சாத்தியமாகிறது என்ற நேர்கோட்டுக்கு மீண்டும் திரும்பாமல் கி போனோ என்ற றோமானிய காலத்துகேழ்வியை நாம் மீண்டும் மீண்டும் கேட்போம் (வலுப்படுத்த அல்ல-நகைமுரன்)

    பழய உற்பத்திமுறை என்று நீங்கள் கருதுவது எது என்று புரியாமையால் அதுபற்றி ஒரு குறிப்பும் எழுத முடியவில்லை.
    நன்றி
    சேனன்.

  7. அன்புள்ள சேனன்,

    உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியைத் தருகிறது. பல்வேறு சங்கதிகள் குறித்து ஆழமாக கேள்விகள் எழுப்புகிறீர்கள். எல்லாவற்றிற்கும் உடனே எதிர்வினை புரிவது சாத்தியமில்லை. ஆனால் சில அடிப்படைகளை சுட்ட வேண்டும்.

    சத்தியக் கடதாசியில் என்னுடைய முதல் பதிவு எரிபொருள் பிரச்சினையை முன்வைத்து முதலீட்டியம் உருவாக்கியுள்ள கடும் நெருக்கடிகளை சுட்டிக்காட்டியது. இரண்டாவது கட்டுரை 1968 பிரான்ஸ் நிகழ்வுகளை முன்வைத்து முதலீட்டியம்-வரலாறு ஆகியவற்றிற்கான தொடர்பை மார்க்ஸீயம் புரிந்துகொள்வது பற்றி பேசியது. நண்பர் அ.மார்க்ஸ் தீராநதியில் எழுப்பிய சீரிய கேள்விகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக. வரலாறு என்ற உருவகம் குறித்தும் அறிவியலின் சில அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் மூன்றாவது கட்டுரை சிலவற்றை கூறியது. இவை மூன்றிற்கும் பொதுவானது இன்று முதலீட்டியத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விதான். அதற்கான கோட்பாட்டாக்கங்களை நோக்கி நகரவேண்டும். ஹெகல் மார்க்ஸ் சிந்தனை மரபின் இழைகளையும், பின் அமைப்பியல் என்ற நீட்சே சிந்தனை மரபின் இழைகளையும், வேறு பல இழைகளையும் இணைத்து உரையாடல்களை உருவாக்கவேண்டும் என்பதே எனது அவா. அதை என்னுடைய சிந்தனையாக்கங்கள் மூலம் சிறிது, சிறிதாக பயிற்சி செய்ய விரும்புகிறேன். ஆங்கிலத்தில் நடைபெறும் ஏராளமான முயற்சிகளை படிக்கும்போது தமிழிலும் சில தடங்களை உருவாக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

    நீங்களும் சில விரிவான சிந்தனையாக்கங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னூட்டங்களல்ல, கட்டுரைகளும் உரையாடல்களே என்பதால் முதலீட்டியம். வரலாறு குறித்த உங்கள் கட்டுரைகளை படிக்க ஆவலாக உள்ளேன். ஏற்கனவே பதிவானதையும் தேடிப் படிப்பேன். பொதுவாக நாமே எழுதும்போதுதான் சில எதிர்கேள்விகளின் எல்லைகள் தெளிவாகும்.

    உதாரணமாக:
    ஒரு புள்ளிக்கு பல இருப்புகள் இருப்பது சாத்தியம் – சரி.
    புள்ளியின் இருத்தலை கேள்விக்குட்படுத்தவேண்டும் – ஏன்?

    இருப்பை சாத்தியம் என்று புரிந்துகொண்ட பிறகு எதற்காக இருப்பை கேள்விக்குள்ளாக்கவேண்டும்?

    அன்புடன்
    ராஜன் குறை

  8. அன்பின் ராஜன் குறை,

    எழுதுவது பற்றிய உங்கள் குறிப்புடன் முழுதும் உடன்படுகிறேன். நிச்சயமாக எழுத வேண்டும். எழுதுவோம்!

    //ஒரு புள்ளிக்கு பல இருப்புக்கள் இருப்பதன் சாத்தியத்தை விஞ்ஞானம் சொல்லும் பொழுது அப்புள்ளியின் இருத்தலை தத்துவம் கேழ்விக்குட்படுத்துவதில் என்ன பிழை//
    என்பதில் புள்ளியின் இருத்தல் என்று சொல்வது ஒற்றை இருத்தலையே. ஒற்றை என்ற சொல்லை விட்டது பிழையான அர்த்தப்படுத்தலை ஏற்படுத்திவிட்டதுபோலுள்ளது.

    இவ்வாறு கண்டகண்டபடிக்கு எழுந்தமானமான திசைகளில்-தீர்மானிக்கப்படாத கருத்துக்களை> சொல்லை பற்றி – சீரியசாக உரையாடுவது பின்னூட்டத்தில்தான் சாத்தியமாகிறது!!!

    சோசலிஸ்ட் விஞ்ஞானி ஜன்ஸ்டைன் 1915ல் பதிப்பித்த ஆய்வுகளில் இயற்கையின் இயங்குதன்மை பற்றி எழுப்பிய கேழ்விகள் இன்றுவரையும் எல்லா துறைகளிலும் எதிரொலிக்கிறது.
    இதன்பிறகு 1940 களில் இருத்தல் பற்றி சக்கை போடு போட்டவர் சார்த்தர். இருத்தலின் சாரம்சத்தை ஒரு பண்பாக பார்க்காமல் தொடரின் (தவிர்க்கமுடியாத) விளைவாக பார்த்தார் அவர். தோற்றம் சாரத்தை மறைக்கமுடியாது என்ற அவர்இ சாரமே ஒரு தொடராக தோற்றத்தையும் இருத்தலையும் தோற்றுவிக்கிறது என்றார்.

    சார்த்தரை தலைகீழாக படிக்கவில்லை. படித்த சொற்பத்தில் எடுத்த நோட்சை பார்த்தபோது மேற்சொன்ன விசயம் கண்ணில் பட்டது. அதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவதன் அவசியம் உங்களின் கடைசி கேழ்வியில் உள்ளது.
    //இருப்பை சாத்தியம் என்று புரிந்துகொண்ட பிறகு எதற்காக இருப்பை கேள்விக்குள்ளாக்கவேண்டும்?//

    சாத்தியமாகும் இருப்பு பல்வேறு வகைகளில் கேழ்விக்குள்ளாகக்கூடியது. தோற்றம் -அது விளக்கும் சாரம் என்று சிலதை சுட்டலாம். உண்மை என்பது புற – நிஜம் என்கிறது மார்க்சியம். அது ஒற்றைப் பண்பை உண்மையில் திணிப்பதாக அர்த்தப்படுத்துவது தவறு. ஒற்றை பண்பற்ற உண்மையும் பல்லிருத்தல் உள்ள புள்ளி இல்லாததாகும் சாத்தியமாகும்போல் புரியப்படலாமா என்ற குறுக்கு கேழ்வியை இங்கே கேட்கலாம்.
    அது அறிதலை நாம் பயன்படுத்தும் விதம் பற்றிய அடிப்படை கேழ்விக்கு நம்மை இட்டுச்செல்லும். அதன்பாற்பட்டு அறிதலை விலத்தும் வகைப்படுத்தலாக உண்மை புற-நிஜம் என்ற மார்க்சிய சிந்தனையை பார்க்கவேண்டும்என்று நினைக்கிறேன். அது மடடுமின்றி மார்க்சியம் தத்துவ கதையாடலுடன் முடியும் கதையல்ல. ஒவ்வொரு கருத்தும் அரசில் கலாச்சார தளங்களில் பாவிக்கப்பட்டு-பாpசீலிக்கப்பட்டு-எதிர்க்கப்பட்டு -காக்கப்பட்டு — என்று பலமாதிரி அடிபட்டு தொpவாகிறது. இதனால்தான் இன்று மார்க்சியம் பற்றி புத்திஜீவிகள் எழுதுவது சிக்கலாகியுள்ளது. அந்த வகை எழுத்துமுறைக்கு வயப்பட மனமில்லை-உங்களுக்கும் இருக்காது என்று நினைக்கிறேன்.
    தற்போது இலங்கை அரசியல் பற்றியும் இனத்துவேசம் பற்றியும் எழுதிக்கொண்டிருப்பதால் வரலாறுபற்றி எழுத அல்லது சுவாரஸ்யமான இந்த உரையாடலை தொடர முடியவில்லை. தற்போது எங்கல்சின் ஜேர்மன் ஜடியோலெஜி படித்துக்கொண்டிருப்பதால் நிச்சயமாக விரைவில் எழுத விருப்பம்!!

    சேனன்

  9. சேனன் நீண்ட நாட்களுக்கு பிறகு…
    ஜேர்மன் ஆய்டியாலஜி படிப்பது மகிழ்ச்சிக்குரியது 🙂

    ராஜன்குறையின் எழுத்துக்களைப் பார்ப்பதும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

    இந்த உரையாடலை தற்போதுதான் ‘பார்த்ததால்’ பங்கேற்க முடியாமல் இருக்கிறது.

    நச்திப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *