அறிஞர் யமுனா ராஜேந்திரனும் இனப்படுகொலையும்

கட்டுரைகள்

கொஞ்ச நாட்களிற்கு முன்புதான், இனி ஈழப் பிரச்சினை குறித்துத் தான் எழுதப்போவதில்லை என யமுனா ராஜேந்திரன் அறிவித்திருந்தார். ‘விட்டுதடா சனி’ எனச் சற்றே நிம்மதியாக இருந்தோம். இந்தா மறுபடியும் கிளம்பிவிட்டார்.

இம்முறை அவர் சொல்வது ஈழத்தில் முஸ்லீம்கள்  மீது புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகளையும் வெளியேற்றத்தையும் ‘இனப்படுகொலை’ எனச் சொல்லக்கூடாதாம்.  அதை ‘இனச் சுத்திகரிப்பு’ என்றுதான் சொல்ல வேண்டுமாம்.

நேற்று, வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரி நுாலிற்கு விருது வழங்கியதைக் கண்டித்து  700-க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லீம்கள்  இணைந்து  வெளியிட்ட கூட்டறிக்கையின் தலைப்பு:  இது எம்மீதான இன்னொரு இனப் படுகொலை.  

இதைத்தான் அறிஞர் இங்கே விமர்சிக்கிறார்.  யமுனா ராஜேந்திரன் ‘ யாழ்ப்பாண வெளியேற்றம்  இனச்சுத்திகரிப்பே’ எனச் சொன்னதை மிகுந்த பெருமையுடன் ஆசான் என விளித்து தனது முகநுால் பக்கத்தி்ல் வாசு முருகவேல் மறுபதிவு செய்கிறார்.  ஓர் இனச்சுத்திகரிப்பு  நடவடிக்கையை நியாயப்படுத்தி ஒரு நாவல் எழுதி அதற்கு சீமான் கையால் விருதும் பெற்றிருக்கிறோம் என்பதில் கொஞ்சமாவது வெட்கமோ சுரணையோ இருக்கிறதா பாருங்கள்!

இவ்வளவுக்கும் முஸ்லீம்கள் வெளியிட்ட அந்தக் கூட்டறிக்கை யாழ்ப்பாண வெளியேற்றத்தை இனச்சுத்திகரிப்புத்தான் என்கிறது.  ‘இனப்படுகொலை’ என அறிக்கை சுட்டுவது, முஸ்லீம்கள் மீது ஒட்டுமொத்தமாகப் புலிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் இனவாதச் செயல்களையும்தான் என்பதைப் புரிந்து கொள்வதற்கு பெரிய அரசியல் அறிவெல்லாம் தேவையில்லை. சற்று மனச்சாட்சி இருந்தாலே போதுமானது.

இப்போது அறிஞரின் கூற்றிற்கு திரும்பலாம். ருவண்டாவில் பொஸ்னியாவில் மோடி ஆட்சியில் ஈழத்தில் நிகழ்ந்ததெல்லாம் இனப்படுகொலைகள் என்பதை உறுதி செய்யும் அறிஞர் இலங்கையில் முஸ்லீம்கள் மீது புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகளை இனப்படுகொலையாக ஏற்க மறுக்கிறார். இதை ‘இனப்படுகொலை’ என அழைப்பது  உண்மைக்குப் புறம்பானது, இது பாரதுார விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.

இனப்படுகொலை என்பதை எப்படி வரையறுப்பது? யார் அதை வரையறை செய்வது?

ஈழத்தில்  தமிழர்கள் மீது இனப்படுகொலை  நிகழ்த்தப்படவில்லை  என  எழுத்தாளர் ஜெயமோகன்  முன்பொருமுறை எழுதியபோது நான் அவருக்கு எழுதிய  எதிர்வினையைக் கீழே தருகிறேன்:

<<இன அழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச்செயல்பாடுகள்’ என்கிறார் ஜெயமோகன்.

ஆனால் இன அழித்தொழிப்புக்கான அய்க்கிய நாடுகள் அவையின் வரையறை வேறு சிலவற்றையும் சொல்கிறது. ஓர் இனக்குழுவை திட்டமிட்ட முறையில் பகுதியாக அல்லது குழுவாக அழித்தொழிப்பது, கூட்டுப் படுகொலைகளைச் செய்வது, அவர்கள்மீது உளவியல் யுத்தம் நடத்துவது, அவர்களது நிலத்திலிருந்து துரத்தியடிப்பது போன்றவையும் இனப்படுகொலையென்றே அய்.நா. வரையறை சொல்கிறது. >>

இலங்கையிலிருந்து வெளியிடப்படும் இஸ்லாமிய இதழான ‘விடிவெள்ளி’  புலிகளால் கடந்த காலத்தில் மொத்தமாக ஏழாயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரத்தை வெளியிட்டிருந்தது.  இஸ்லாமியர் கூட்டுப் படுகொலைகளிற்கு ஆளானார்கள், அவர்களது நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டார்கள். இவற்றை வைத்துப் பார்க்கும்போது அய்.நா வரையறைகளின்படி முஸ்லீம்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்றே வரையறுக்கமுடியும் என்றுதான் நான் கருதுகிறேன்.

ஈழத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை அல்ல என்று பலர் சொல்லியிருக்கிறார்கள்.  கொழும்பிலே பரவலாக வாழும் தமிழர்களை, இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் மக்கள் கொல்லப்படாதிருந்ததை அவர்கள் தங்கள் தரப்பை நிலைநாட்ட ஆதாரங்களாக முன்வைப்பதுண்டு.  இந்த வாதத்திற்கு எதிராகப் பல அரங்குகளிலும் கட்டுரைகளிலும் நான் ஒன்றைச் சொல்வதுண்டு:

என்றைக்கு தமிழன் என்ற இன அடையாளத்தின் காரணமாக ஒருவன் திட்டமிட்ட முறையில் அரசால்  கொல்லப்பட்டானோ அன்றே எம்மீதான இனப்படுகொலை ஆரம்பித்துவிட்டது.  என்றைக்கு எம் நிலங்களிலிருந்து துரத்தப்பட்டோமோ, என்றைக்கு எம் நிலங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதோ அன்றே எம்மீதான இனப்படுகொலை நிகழத் தொடங்கிவிட்டது.  இனப்படுகொலையாளர்கள் பல்வேறு வழிகளில் அதை நிகழ்த்துவார்கள். இதை இனப்படுகொலையா இல்லையா எனத் தீர்மானிப்பது சர்வதேச நீதிமன்றமோ கல்விமான்களோ அரசியில் ஆய்வாளர்களோ அல்ல. பாதிப்புக்குள்ளான மக்களே தங்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவும் எதிர்வினையாற்றவும் முழுமையான உரித்துடையவர்கள்.

இப்போது பாதிப்புக்கு உள்ளான மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்கிறார்கள், ஜெப்னா பேக்கரி நிகழ்த்தியிருப்பது அதேபோன்ற இன்னொரு இனப்படுகொலை என்கிறார்கள். இதில் யமுனா ராஜேந்திரனைத் தீர்ப்புச் சொல்ல யார் அழைத்தார்கள்!

யமுனா ராஜேந்திரன் என்னயிருந்தாலும் எழுத்தாளர், மார்க்ஸியவாதி என்றுவேறு அடிக்கடி சொல்லிக்கொள்கிறார், அவருக்கு ஒரு கருத்துச்சொல்ல உரிமையில்லையா  என நீங்கள் கேட்கலாம்.

அந்த உரிமை எப்போது அவருக்கு இருந்திருக்கும் என்றால், புலிகள் முஸ்லீம்கள் மீது இழைத்த கொடுமைகள் குறித்து,  புலிகள் இருந்தபோது  யமுனா ராஜேந்திரன் ஒரேயொரு வார்த்தை  கண்டித்து எழுதியிருந்தால்  ஒருவேளை இப்போது இங்கே இனப்படுகொலையா அல்லது இனச்சுத்திகரிப்பா என அவர் பச்சைத் தண்ணிப் பட்டிமன்றம் செய்வது சரியாயிருக்கலாம்.  புலிகள் இருந்தவரை அவர்கள் முன்னே கைகட்டி வாய்பொத்தி நின்று அவர்களது பத்திரிகையில் வாராவாரம் கூலிபெற்று  யமுனா ராஜேந்திரன் எழுதிக்கொண்டிருந்தாரே அல்லாமல் புலிகள் முஸ்லீம்கள் மீது இழைத்த எந்தக் கொடுமை குறித்தும் இந்த அறிஞர்   ஒருபோதும்  வாய் திறந்தாரில்லை.

எனக்கு கடைசிவரை ஒன்று புரியவில்லை. நடந்தது இனப்படுகொலையல்ல இனச்சுத்திகரிப்பே என்பதன் மூலம் இவ்வறிஞர் என்னதான் சொல்லவருகிறார்? இனப்படுகொலைக்கு இனச்சுத்திகரிப்பு சற்றுப் பரவாயில்லை என்கிறாரா? இனப்படுகொலை எனச் சொன்னால் பாரதுார விளைவு வரும் என்பவர் இனச்சுத்திகரிப்பு என்றால் பாரதுாரமான விளைவு வராது என்கிறாரா? இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் இடையில் அரசியல்ரீதியாகவும் தார்மீகரீதியாகவும் என்னதான் வித்தியாசம்?

( முகப்புப் படம்: 03.08 1990-ல் காத்தான்குடி மீரானியா, ஹுச்சைனியா பள்ளிவாசலில்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 140 பேர்  புலிகளால் படுகொலை)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *