இலங்கையில் ஆர். எஸ். எஸ். வரும் ஆனா வராது!

கட்டுரைகள்

ஒரு கிழமையாகவே, ‘இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம்’ என்ற எச்சரிக்கை மணி முகநுாலில் திரும்பிய பக்கமெல்லாம் அடித்துக்கொண்டிருக்கிறது. எப்படி ஆர். எஸ். எஸ். இலங்கையில் நுழைந்ததென்பதைக் கவனித்தால் அது மிக மிகச் சுலபமான வழியில் இலங்கையில் கால் பதித்திருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு அதாவது ஒரேயொரு இலங்கை முகநுால் பதிவர்  ”ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவை இலங்கைக்குத் தேவை” என எழுதிவிட்டார். உடனே இலங்கையில் ஆர். எஸ். எஸ். அபாயம் தோன்றிவிட்டதாக எதிர்ப்பதிவுகள் முகநுாலில் தோன்றின. ஓர் அமைப்பு இலங்கையில் நுழைவதற்கு ஒரேயொரு முகநுால் பதிவு போதுமானதா என்ன!

முகநுாலில் அவரவர் தங்களது அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் கொட்டுகிறார்கள். அதற்காக அதுவெல்லாமா நடந்துவிடும். அப்படியானால்  தோழர் பாலன் முகநுாலில் போட்ட பதிவுகளால் இதுவரை இலங்கையில் நான்கு தடவைகள் வர்க்கப் புரட்சி வந்திருக்க வேண்டும். நமது கலையரன் போட்ட பதிவுகளால் உலகப் புரட்சியே நடந்து முடிந்திருக்க வேண்டும்.

“இலங்கையில் இந்து ஆகம விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள், முஸ்லீம்களுடனான உரசலுமுண்டு எனவே ஆர். எஸ். எஸ். காலுான்ற சாத்தியம் அதிகமுண்டு“ என்றொரு முகநுால் எதிர்வுகூறலுமுண்டு. இலங்கையில் தொழிலாளர்கள் அதிக சுரண்டலுக்குள்ளாகிறார்கள், முதலாளிகள் மீது அதிருப்தியுமுண்டு, எனவே அங்கு வர்க்கப் புரட்சி விரைவில் வரப்போகிறது என்பதைப் போன்றதொரு அடிப்படையற்ற எதிர்வுகூறலே இது. இலங்கையிலிருந்து சில இளைஞர்கள் ISIS அமைப்பில் இணைந்திருப்பதால் இலங்கையில் ISIS அபாயம் என்பதைப் போன்ற மிகை எதிர்வுகூறலும்தான். வரலாற்றை இப்படியெல்லாம் போகிற போக்கில் நாம் எதிர்வு கூறிவிட முடியாது. ஆழமான சமூகவியல் ஆய்வுகளின் வழியேதான் எதிர்வுகளைக் கூறிட முடியும். அப்படியான விரிவான ஆய்வு வழி வரலாற்று எதிர்வுகூறல்களே  கூட அநேகமாக வரலாற்றில் பொய்த்துத்தானே போகின்றன இல்லையா!

சரி..இலங்கையில் ஆர். எஸ்.எஸ். அபாயம் என்பதற்கு அந்த முகநுால் பதிவையும் அதற்குக் கிடைத்த சில லைக்குகளையும் விட வேறு என்னதான் இருக்கிறது? இதுவரை ஆர். எஸ்.எஸ். இலங்கையில் ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தியதில்லையே. அதற்கு பேருக்கு ஒரு கிளை அமைப்புக் கூட இலங்கையில் இல்லையே. ஒத்தை உறுப்பினர் கூடக் கிடையாதே.

சேவா பாரதி அமைப்பு, இலங்கையில் சில தொண்டுப் பணிகளைச் செய்துள்ளது என ஓரிரண்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடந்த யுத்தத்தின் பின்னான புனரமைப்புப் பணிகளில் நுாற்றுக்கணக்கான நாடுகளின் பல்வேறு அரசியல் – மதப் பின்புலங்களைக் கொண்ட அமைப்புகள் சேவையில் ஈடுபட்டன. அவற்றிலொன்று இந்தச் சேவா பாரதி. இதற்குமேல் அந்த அமைப்புக்கு இலங்கையில் இதுவரை அரசியற் பாத்திரம் ஏதுமில்லை.

காந்தளகம் சச்சிதானந்தனின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிவசேனை’ இந்தியாவில் இயங்கும் சிவ் சேனையின் ( சிவாஜியின் சேனை) இலங்கைக் கிளை கிடையாது. அதற்கு அமைப்புப் பலமும் கிடையாது. சனத்தின் ஆதரவும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. எனினும் வீட்டிற்குள் புகுந்த கரப்பான் பூச்சியாட்டம் சச்சியர் ஒரு தேவையற்ற இம்சைதான் நமக்கு.

இந்துத்துவத்தை மதமாகப் புரிந்துகொள்வதைவிடச் சாதியாகப் புரிந்துகொள்வதே சரியானது. ஆர்.எஸ்.எஸ். போன்ற ஒரு தீவிர இந்துத்துவ அமைப்பு பார்ப்பனியத்தின் உந்துவிசையிலேயே இயங்குவது. இலங்கையில் அந்த உந்துவிசை அறவே கிடையாது. இலங்கையின் சூத்திர சாதிகளை இந்துத்துவத்தின் பெயரால் அரசியல் சக்தியாகத் திரட்டுவதற்கு எந்தவொரு அடிப்படை அரசியற் காரணியும் கிடையாது. எனவே ஆர். எஸ். எஸ். இலங்கையில் காலுான்ற முடியாது என்றே நான் நம்புகிறேன்.

இலங்கையில் காலங்காலமாகவே ஊருக்கு ஊர் இந்து மன்றங்கள், சைவ பரிபாலன சபை, இந்து ஊழியர் சங்கம், இந்து வாலிபர் சங்கம் என்றெல்லாம் நுாற்றுக்கணக்கில் அமைப்புகள் உள்ளன. ஆனால் இந்த அமைப்புகள் ஒருபொழுதும் பிற மதங்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது கிடையாது. வரலாற்றில் அப்படி ஒரேயொரு சம்பவம் கூடப் பதிவானதில்லை. இலங்கை அவ்வளவு சுலபமாக இந்துத்துவ அரசியலிற்குள் விழுந்துவிடுவதற்கு எந்த வரலாற்றுப் பண்பாட்டுப் பின்னணியும் கிடையாது என்றே நம்புகிறேன்.

ஈழத்தமிழர்களிற்குள் சைவர்களிற்கும் கத்தோலிக்கர்களிற்கும் இடையே உள்ள பிணைப்பு உண்மையிலேயே உலகத்திற்கே உதாரணமாகச் சொல்லக் கூடிய மதம் கடந்த ஒற்றுமை நிலை. அவர்களிடையே மதப் பூசலே இருந்ததில்லை. அதேபோல தமிழர்களிற்கும் இஸ்லாமியர்களிற்கும் இடையேயான முரண்களிற்கு தமிழர்களின் இந்து அல்லது கிறித்தவ மத அடையாளங்கள் காரணம் கிடையாது. தமிழ் கிறித்தவர்களும் சிங்கள கிறித்தவர்களும் ஒருவரோடொருவர் யுத்தகளத்தில் மோதிச் செத்தார்கள். இலங்கையில் பவுத்தம் கூட சிங்கள இனவெறிக்கு ஒரு முலாம்தான். சுருங்கச் சொன்னால் இலங்கையில் சமூகங்களிற்கிடையேயான முரண்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. அவை உறுதியாகவே இன முரண்களை அடிப்படையாகக் கொண்டவை.

திருகோணமலை கல்லுாரியில் நடைபெற்ற ‘அபாயா’ எதிர்ப்புச் சம்பவம் ஒரு விதிவிலக்கான துக்ககரம். அனைத்து மதத்தினரும் தமது மத அடையாளங்களை எந்த இடத்திலும் தரிக்க உரிமையுள்ளவர்கள் என்றே அரசு முடிவு செய்யவேண்டும். அதுதான் அரசியல் சாசனச் சட்டம்.

இந்துத்துவம் வளர்ந்தால் அதன் பக்க விளைவுகளாக கிறித்தவ அடிப்படைவாதமும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் வளரும். ஒரு முகநுால் விவாதத்திற்குக் கூட தேவையற்ற அச்சத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் கிறித்தவ – இஸ்லாம் மதத்தவரிடையே விதைத்துவிடாமல் எல்லோரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய காலமிது.

இது இராவண ஜென்மபூமி!

6 thoughts on “இலங்கையில் ஆர். எஸ். எஸ். வரும் ஆனா வராது!

  1. முகநூலின் கற்பனை எழுத்துக்கள் கூட பெரும் விவாதப் பொருளாக்கப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் உங்களிடம் இருந்து வரும் ஒரு சிறு விளக்கம் அல்லது ஒரு தொகுப்பு, சர்வ சாமானியனையும் தெளிவுபடுத்தி விடுகிறது. நன்றி..

  2. சுயாந்தனுக்கு அப்படி என்ன அவசரமோ தெரியவில்லை! அவரிடம் நிறைய வேடிக்கைக் காரணங்கள் இருக்கும்போல். கிழக்கு ஜிஹாதிகளால்தான் வடக்கில் முஸ்லீம் சுத்திகரிப்பு நிகழ்ந்தது எனக்கூறியிருப்பது அவரின் மிகவும் வரலாற்றுக் ஹாஷ்யம்தான்.
    நன்றிகள் திரு ஷோபா அவர்களே…அச்சம் நீங்கினோம்.

  3. எனது புரிதலின் படி RSS பல கால்களை கொண்ட ஒக்டோபஸ் போன்றது. இலங்கையில் அது இந்து மக்கள் கட்சி போன்ற ஒரு அடியாள் கூட்டத்தையே கட்டமுயல்கிறது. அதன் தளத்திலிருந்து அது தனது ஆளுகையா மேற்கொள்ளக்கூடும்.

  4. #இலங்கையிலிருந்து சில இளைஞர்கள் ISIS அமைப்பில் இணைந்திருப்பதால் இலங்கையில் ISIS அபாயம் என்பதைப் போன்ற மிகை எதிர்வுகூறலும்தான். #
    360 பேர் உயிரிழக்க காரணமான குண்டுவெடிப்பிற்கு ISIS பொறுப்பேற்றுள்ளது. இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?

  5. ஆம். நான் ஒருபோதும் இந்த அபாயத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *