ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்

கட்டுரைகள் ராஜன் குறை

மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள்

– ராஜன் குறை

பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008.

வம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்காவில் வரலாறு தன் முகத்தை மீண்டும் காட்டியது. ஒருபுறம், கடவுளைக் கண்டது போல வரலாற்றுவாதிகள் மகிழ்ந்தனர். இன்னொரு புறம், நள்ளிரவில் நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் ஆடிப்பாடினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சி யாரையும் நெகிழச் செய்வதாய் இருந்தது. மனிதர்களாகவே நடத்தாத, ஓட்டுப் போடும் உரிமைக்காக போராட வைத்த அமெரிக்க நிறவெறி, ஒரு கறுப்புத் தோல் மனிதரை நாட்டின் அதிபராக அனுமதிக்க நேர்ந்ததை எப்படிக் கொண்டாடாமல், நெகிழாமல் இருக்க முடியும்? எங்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கண் கலங்குவதையும், அழுவதையும் பார்க்க முடிந்தது. அவர்களது நினைவுகளின் சுமை அத்தகையது. வரலாற்றுவாதிகளுக்கோ இரண்டுவிதமான மகிழ்ச்சி. ஒன்று, மானுட வரலாற்றை தலைமையேற்று வழிநடத்தும் அமெரிக்கா தனது அவமானகரமான கடந்த காலத்திற்கு பரிகாரம் செய்துவிட்டது. இரண்டு, மாற்றம் என்ற ஒற்றைச் சொல் கோஷத்தை முன்வைக்கும், தீர்க்கதரிசியின் தொனி கொண்ட மனிதர் அமெரிக்க அதிபராகியிருக்கிறார். ஆனால், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட எனக்கு வரலாற்றுவாதிகளின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள முடியவில்லை. பல சிந்தனையாளர்களின் நிலையும் இதுதான்.

முதலில் தேர்தலின் போக்கையும், முடிவுகளையும் பரிசீலிக்கும் போது கடும் பொருளாதார நெருக்கடி தோன்றியிராவிட்டால் ஓபாமா வெற்றி பெற்றிருப்பாரா என்பது சந்தேகம் என்றே தோன்றுகிறது. தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள் (Blue Collar Whites) – குறிப்பாக பென்சில்வேனியா மாநிலத்தில் – நாங்கள் எப்போதும் ஜனநாயகக் கட்சிக்கு (ஓபாமாவின் கட்சி) வாக்களித்தாலும் அதற்காக ஒரு கறுப்பருக்கு ஓட்டுப் போட முடியாது என வெளிப்படையாகக் கூறியதாகப் பத்திரிகைகள் தெரிவித்தன. பெரும்பாலான வெள்ளையர்க்கு கடைசி நொடியில் ஒரு கறுப்பருக்கு ஓட்டுப் போட முடியாமல் கை இழுத்துக் கொண்டுவிடும் என பல பத்திரிகையாளர்கள் நினைத்தனர். இது எப்படியானாலும் ஓபாமாவின் வெற்றியுடன் நிறவெறி முடிவுக்கு வந்துவிட்டது என்பது நுனிப்புல் பார்வை. கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் இந்திய அதிபர்களானதால் கைர்லாஞ்சியும், குஜராத்தும் நிகழாமல் போய்விடவில்லை. தவிரவும் என்னுடைய முதல் அரசியல் நடவடிக்கை, பள்ளியிறுதியாண்டில் (1977), கோவையில் ஜனதா கட்சி, CPI (M) கட்சித் தொண்டர்களுடன் “ஜெய் ஜெய் ஜனதா, ஜெயிச்சாச்சு ஜனதா” என்று கோஷமிட்டு ஊர்வலத்தில் சென்றதுதான். வரலாறு என்பது அபத்த நாடகம் என்று தோன்ற சில ஆண்டுகளே தேவைப்பட்டன.

இந்திய ஜனநாயகத்திற்கும் அமெரிக்க ஜனநாயகத்திற்கும் வேற்றுமைகள் பல இருந்தாலும், ஒற்றுமைகளும் அதிகரிக்கின்றன. இஸ்லாமிய வெறுப்பு, அறிவுஜீவி வெறுப்பு, இடதுசாரி வெறுப்பு ஆகிய மூன்றிலும் இந்திய வலதுசாரி தேசிய மன நிலையும், அமெரிக்க வலதுசாரி தேசிய மனநிலையும் இணைய முனைகின்றன. முக்கியமாக அமெரிக்க ஜனநாயகத்தை புரிந்துகொள்ள ஓபாமா மீது குடியரசுக் கட்சி (அவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கெயினின், இகழ்பெற்ற தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் கட்சி) ஓயாமல் சுமத்திய மூன்று கடும் குற்றச்சாட்டுகளை கவனிக்கவேண்டும். இவை மக்களிடையே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதுடன் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையும்கூட.

1. ஓபாமா ஒரு சோஷலிஸ்ட். (அமெரிக்காவில் மோசமான கெட்ட வார்த்தை). செல்வத்தை பகிர்ந்தளிக்கவேண்டும் என்கிறார். பணக்காரர்களுக்கு வரி அதிகரிப்பு என்கிறார். (என்ன அநியாயம்?)

ஒபாமா எதிர்வினை: நான் சோஷலிஸ்ட் இல்லை. இது சத்தியம், இல்லாவிட்டால் கோடீஸ்வரர் Warren Buffet என்னை ஆதரிப்பாரா?

2. அவர் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார். புரட்சியாளர், ஆபத்தானவர். Too Radical, Too Risky.

(அ) வில்லியம் அயர்ஸ் என்கிற வியட்நாம் போர் காலத்தில் (1969) குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட நபருடன் நட்பாக இருந்தார்.

ஓபாமா எதிர்வினை: பொது இடத்தில்தான் அவரை பார்த்தேன். அவர் இப்போது ஒரு பேராசிரியர். இருவரும் சில நலத்திட்டங்களுக்கான நிர்வாகக் குழுவில் இருந்தோம். அவ்வளவுதான். அவர் குண்டு வைத்தபோது எனக்கு எட்டு வயது. அச்செயலை நான் கண்டித்து விட்டேன்.

(ஆ) ரஷித் காலிதி (Rashid Khalidi) என்ற பாலஸ்தீன ஆதரவு பேராசிரியருடன் நட்பாக இருந்தார். எனவே தீவிரவாத உணர்வு கொண்டவர். இஸ்ரேலுக்கு எதிரானவர்.

ஓபாமா எதிர்வினை: காலிதி ஒரு புகழ்பெற்ற அறிஞர். சிகாகோ, பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஆனாலும் அவருடன் கருத்துக்களை விவாதித்திருக்கிறேன். அவ்வளவுதான்.

3. அவர் ஒரு ரகசிய முஸ்லிம். இந்த திடுக்கிடும் “குற்றச்சாட்டு” பகிரங்கமாக வைக்கப்படவில்லை; வதந்தியாக பரப்பப்பட்டது. அவரது நடுப் பெயரான ஹுசைன் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டது.

ஓபாமா எதிர்வினை: என் தந்தை முஸ்லிம். தாய் கிருஸ்துவர். நான் கிருஸ்துவன். தயவுசெய்து என்னை நம்புங்கள்.

ஓபாமா பலமுறை ‘ஓசாமா பின் லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்தாவது பிடிப்பேன்’ என உறுதி கூறினார். ஓபாமாவின் வெற்றியை ஒளிபரப்பியபோது போது கென்யாவில் அவரது ஆப்பிரிக்க முஸ்லிம் பங்காளிகளை காட்டினர். எனவே இப்போது ஒரு சுவாரசியாமான, ஆனால் அபத்தமான சித்தரிப்பு சாத்தியமாகிறது. ஒரு ஆப்பிரிக்க முஸ்லிம் குடும்பத்திற்கு வம்சாவழி உறவுடைய ஓபாமா, உலக வரலாற்றுத் தலைமை கொண்ட தேசத்தின் அடையாளமாகிறார். அந்தத் தேசத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பதாக, பிற்போக்குத்தனமானதாக, மாற்றத்தை விரும்பாததாக கூறப்படும் அதே முஸ்லிம் மதத்தின் தீவிரவாத்திற்கு அடையாளமான ஓசாமா அவரது முதல் எதிரி ஆகிறார்.

ஓபாமா x ஓசாமா. மானுட வரலாற்றின் அடுத்த சுற்று. அதன் கேள்வி: தேசமா? மதமா? தேசமென்னும் மதமா, அதன் முன்னேற்றமா? அல்லது மதம் என்னும் தேசமா, அதன் தேக்கமா? முடிவை டி.வி. திரையில் காண்க. இந்தச் சித்தரிப்பு ஏன் அபத்தமானது? அப்படித்தானே ஊடகங்கள் கூறுகின்றன? சில காரணங்களைக் காண்போம்.

பகுதி 2: காகமோனா

சென்ற ஆண்டு, என் நண்பரின் 11 வயது மகளிடம் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் கம்ப்யூட்டரெல்லாம் கிடையாது என்றேன். அவளுக்கு ஆச்சர்யம். அப்போது எப்படி ஈ-மெயில் பார்ப்பீர்கள் என்று கேட்டாள். அப்போது ஈ-மெயிலே கிடையாது என்றுவிட்டு அடுத்த கேள்விக்கு முன்னால் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன். தமிழ் சமூக அறிதலின் பிரச்சினை நாம் வாழும் காலத்தில் காண்பதெல்லாம் எல்லா காலங்களிலும் இருந்ததாக நம்புவதுதான். குகைச்சுவரில் கிறுக்கப்பட்டதும், புறாக்காலில் கட்டப்பட்ட ஓலைத்துணுக்கும், ஈமெயிலும் ஒன்றுதான் எனக் கூறும் சாராம்சவாதிகள் வித்தியாசத்தை மறுப்பவர்கள். தகவல் பரிமாற்றம் என்று ஒன்று இருந்தால் அது ஈமெயில் வரை வந்துதான் தீரும் என நம்பும் வரலாற்றுவாதிகள் தற்செயலை மறுப்பவர்கள். வித்தியாசம், தற்செயல் ஆகிய இரண்டு கருத்துக்களின்றி வரலாற்றுத் தடங்களிலிருந்து சமூக அறிதலை உருவாக்கிக் கொள்ள முடியாது. தேசம், மதம், மனிதன் ஆகிய மூன்றுமே பன்னெடுங்காலமாக ஒரே போல் தொடர்வதாக மேற்குலகிலும் இந்தியாவிலும் பலர் கருதுகின்றனர். Samuel Huntington போன்று ‘பண்பாடுகளின் மோதல்’ என்று ஓபாமா x ஓசாமா பிரச்சினையை வர்ணிக்கின்றனர். இவர்களுக்கு காகமோனா பற்றித் தெரிவதில்லை; அதன் முக்கியத்துவம் புரிவதில்லை.

சில வருடங்களை மறக்கக் கூடாது. 1439 – கூடன்பர்க் அச்சுக்கூடத்தை உருவாக்கினார். 1492 – கொலம்பஸ் இந்தியா போக நினைத்து புதிய நிலப்பகுதியை கண்டறிந்தார். 1498 – வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்து காலிகட்டில் வந்திறங்கினார். இவற்றால் நிகழத்துவங்கிய மாற்றங்கள் அடுத்த நூறாண்டுகளில் ஐரோப்பாவை மானுட வரலாற்று மாலுமியாக உருவகம் கொள்ள வைத்தன. இங்கு ஐரோப்பாவை நிலப்பகுதியாக பார்க்காமல், ஒரு கருத்தாக்க-உருவகமாக பார்க்கவேண்டும். (Concept-Metaphor; ஐரோப்பாவை இப்படி அணுகுவது தீபேஷ் சக்ரவர்த்தியின் பரிந்துரை. பார்க்க: Provincializing Europe) பதினேழாம் நூற்றாண்டில் ஹாப்ஸ், தேகார்த், கலிலியோ ஆகிய மூவரையும் குறிகளாகக் கொண்டால் காகமோனா காலம் துவங்கியது தெளிவாகும். காகமோனா என்றால் என்ன?

கா – CA – CAPITALISM – முதலீட்டியம்
க – CO – COLONIALISM – காலனீயம்
மோ – MO – MODERNITY – நவீனம்
னா – NA – NATIONALISM – தேசியம்

CA-CO-MO-NA = காகமோனா.

இது ஒரே நாளில் தோன்றியதில்லை. முன்னூறு ஆண்டுகளாக வலுப்பெற்று இன்று உலகளாவிய நிலையாக இருப்பது. காலனீயமும், தேசியமும் நுட்பமாக பிணைக்கப்பட்டவை. உதாரணமாக ஒரு தேசிய அரசினுள் இருக்க விரும்புவோருக்கு அந்த அரசு தேசிய அரசு. விரும்பாதோர்க்கு காலனீய அரசு. வட கிழக்கு மாநில, காஷ்மீர் மக்கள் இயக்கங்கள் இந்திய அரசை காலனீய அரசாகவே பார்க்கின்றன. தமிழ் புனைவெழுத்தாளர் ஜெயமோகன் தேசிய அரசாகப் பார்க்கிறார். கா, க, மோ, னா – இவை நான்கும் கலந்த அற்புதக் கலவையாக காகமோனாவை புரிந்து கொள்ளாவிட்டால் எந்த விஷயத்திலும் தெளிவு பிறக்காது. காகமோனா தான் தீண்டிய அனைத்தையும் மாற்றி அமைக்கும். சில இடங்களில் மாற்றம் கண்ணுக்குத் தெரியும், பல இடங்களில் தெரியாது. எல்லாமே எப்போதும் மாறும் தன்மையன என்பதால் காகமோனா மாற்றத்தின் தனிக் குணங்கள் புரிந்துகொள்ளப் படுவதில்லை.

இதில் பெரிய வேடிக்கை, தேசியவாதிகள் தங்கள் பழமையை காப்பாற்றிக் கொள்வதாக கூறுவது. அவர்கள் தேசியமே காகமோனா என்னும்போது எந்தப் பழமையை எதைக்கொண்டு காப்பாற்றப் போகிறார்கள்? அதேபோல முதலீட்டியமும், நவீனமும் நுட்பமாக பிணைக்கப்பட்டவை. நவீனத்தில் காலூன்றி முதலீட்டியத்தை மட்டும் எதிர்க்கும் இடதுசாரிகள் தேசியவாதிகள் போன்றே முரண்பாடான நிலைக்கு வருகிறார்கள். இடதுசாரி தேசியவாதிகளோ மிகப்பெரிய குழப்பத்திற்கு இட்டுச்செல்கிறார்கள். மாற்றத்தையே தேசத்தின் சாராம்சமாக்கிவிடலாம் என்ற மூன்றாமுலக நம்பிக்கை படிப்படியாக தகர்ந்துவிட்டது. அந்த தகர்ப்பின் ஒரு பகுதிதான் 1992 டிசம்பர் மற்றும் 2002 குஜராத்.

இப்படியெல்லாம் கூறும்போது காகமோனாவை விடுத்து பின்னோக்கி போகவேண்டும் என்பதல்ல. ஒரு வளைவில் திரும்பவேண்டும். முதலில் காகமோனாவை ஒரு வாழ்முறையென்றும், அதேசமயம் ஒரு அறிதல் முறையென்றும் புரிந்துகொள்ளவேண்டும். இரண்டையும் அதாவது அறிதல்முறையையும் வாழ்முறையையும் பிரிக்க முடியாது. ஒன்றை சுவீகரிக்கும்போது மற்றொன்றும் இணைந்தே வரும். ஆனால் இரண்டையும் பிரிக்கலாம் என்ற நம்பிக்கை காகமோனா அறிதல்முறையின் ஓரங்கம். இதை புரிந்துகொள்ள எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் One Step Outside Modernity என்ற கட்டுரையில் விவாதிக்கப்படும் யு. சிவசாமி அய்யரை உதாரணமாகப் பார்க்கலாம். விரிக்கில் பெருகும். ஆனால் காகமோனாவின் இயங்கியலில் விமர்சனப்பார்வையும் எழுந்தது. காலங்காலமாக இயங்கும் தத்துவம் என்ற சுயபரிசீலனையின் துணையுடன் அந்த விமர்சன மரபுகள் வளர்ந்தன. இதை நான் சமூக அறிதல் என குறிக்க விரும்புகிறேன். முக்கியமான வரையொன்றை முன்வைக்கிறேன்.

காகமோனா வாழ்முறையையும், காகமோனா அறிதல்முறையையும் கருத்தில் கொண்டு எந்த ஒரு நிகழ்பொருளின் காகமோனாவுக்கு முந்தைய பிந்தைய வடிவங்களையும் வம்சாவழித் தொடர்ச்சியாக அறிவதே சமூக அறிதல்.

இது காகமோனா அறிதல் முறையுடன் சுய விமர்சனத்தை இணைப்பது. வம்சாவழித் தொடர்ச்சி என்பது சுய மறு உருவாக்கமில்லை. பல விதமான மாற்றங்களையும், உடைப்புகளையும், முரணியக்கத்தையும் உள்ளடக்கியது.தமிழில் இச்சமூக அறிதலின்பாற்பட்டு ஒரு இயக்கமே உடனடியாகத் தோன்றவேண்டியிருக்கிறது. சமூக அறிதல் என்பது தகவல் சேகரிப்பல்ல. கோட்பாடுகளின் அணிவகுப்புமல்ல. அது காகமோனாவின் தடங்களை ஓயாது விசாரிப்பது. காகமோனா மனிதனைப்பார்த்து ‘செய் அல்லது செத்துமடி’ என்று சொல்லிவிட்டது. மனிதன் என்ற கருத்தையே காகமோனா அறிதல்முறை மாற்றிவிட்டதால் மானுடம் சந்திக்கும் சவால் மிகக் கடுமையானது. ஒவ்வொரு உள்ளூர் பிரச்சினையும் தனித்துவமானது. ஆனால் அந்த எந்தப் பிரச்சினையையும் காகமோனாவை விமர்சிக்கும் சமூக அறிதலன்றி எதிர்கொள்ள முடியாது. இந்தப் புரிதலே ஃபூக்கோவின் பரிசு.

பகுதி 3: தமிழில் சமூக அறிதலும் இலக்கிய முதன்மைவாதமும்

இலக்கியமும் சமூக அறிதலின் ஒரு பகுதிதான். ஆகச்சிறந்த இன்றியமையாத பகுதி என்று கூட சொல்ல்லாம். கோணங்கி, பிரேதா-பிரேதன், ஷோபாசக்தி, பா.வெங்கடேசன் உள்ளிட்ட பலரது எழுத்து சமூக அறிதலின் இன்றியமையாத அங்கம்தான். ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ கதை காகமோனாவின் பயணத்தை மிகச் சிறப்பாக சொல்கிறது. பிரச்சினை என்னவென்றால், ஜெயமோகன் போன்ற முக்கியமான எழுத்தாளர் சிறுபிள்ளைத்தனமாக ‘எனது இந்தியா’ என ஒரு உணர்ச்சிக் கட்டுரையெழுதிவிடுவார். அவரது குரலுக்கும் அமெரிக்க வலதுசாரிகளின் குரலுக்கும் உள்ள ஒப்புமைகளை கவனியுங்கள்.
தமிழின் பிரச்சினை, சமூக அறிதலின் பாற்பட்டு இயங்கும் அ.மார்க்ஸ் என்ற சிந்தனையாளர் ஜெயமோகனை கண்டித்து எழுதுவதில் நேரத்தை செலவிட வேண்டியிருப்பதுதான்.

இந்தியா என்ற கருத்தாக்கத்தையும், இஸ்லாம் என்ற கருத்தாக்கத்தையும் சமூக அறிதலின் பாற்பட்டு விமர்சிக்க கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த இருநூறு ஆண்டுகளில் மத்தியக் கிழக்கு எனப்படும் பகுதியில் ஐரோப்பா செலுத்திய வன்முறையின் பரிமாணங்களையறியாமல் ஜிஹாத் குறித்தும், இஸ்லாம் குறித்தும் பேசும் நண்பர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஏராமான ஆய்வுகள் இருக்கின்றன ஆங்கிலத்தில். ரஷித் காலிதி ஒரு உதாரணம். டிமோதி மிட்சலை படித்தேயாகவேண்டும். தலால் அசாதை தவிர்க்க முடியாது. எடவர்ட் சயித், ஜோசப் மசாத், ஃபைசல் தேவ்ஜி. அடேயப்பா, எத்தனை அறிஞர்கள், ஆய்வுகள், பார்வைகள். ஒரு அ.மார்க்ஸ் போதுமா? தமிழின் உடனடித் தேவை குறைந்தது நூறு அ.மார்கஸ்.

இஸ்லாமிய சமூகங்களை குறித்த காகமோனா வம்சாவழி சமூக அறிதலை தமிழில் ஏற்படுத்த மட்டும் நூறு பேர் வேண்டும். பிற சங்கதிகளுக்கு மேலும் ஆட்கள் தேவை. சமூக அறிதல் வலுப்பெறாவிட்டால் தொடர்ந்து விபரீதமான அடையாள அரசியல் மயமாதல் நடப்பதை தடுக்க முடியாது. இளைஞர்கள் மட்டுமின்றி, புனைவெழுத்தாளர்களும் கொச்சையான வன்முறை நிறைந்த அடையாள அரசியலே கதி என நினைக்கும் சூழல் உருவாகிறது. ஆங்கிலம் முதலீட்டியத்தின் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ள ஒரு பெண் (ஒரு உருவகம்தான்.) அந்தப்பெண்ணால் சில உபகரணங்களை உருவாக்கி வெளியில் தூக்கி எறிய முடியும். பிற மொழிச் சமூகங்களில் அந்த உபகரணங்களால் ஆரோக்கியமான இயக்கங்கள் பிறக்க முடியும். ஏனென்றால் அச்சமூகங்களில் காகமோனா உறைநிலைக்கு வரவில்லை. தோரோவும், தால்ஸ்தாயும் அவர்கள் ஊரில் சாதிக்க முடியாததை அவர்களைப் படித்த காந்தியால் சாதிக்க முடிந்தது. வன்முறையற்ற மக்கள் இயக்கத்திற்கான மாதிரியை உருவாக்க முடிந்தது.

அ.மார்க்ஸ் என்ற பெயர் ஒரு உதாரணம்தான். தமிழில் சிந்தனைகளைப் பதித்த, பதிக்கும் அனைத்து நண்பர்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் அபிமானமும் உண்டு. தமிழ் சிறு பத்திரிகை குழுத்தன்மையை நாம் பொருட்படுத்தக்கூடாது. சமூக அறிதல் உத்வேகம் கொள்ளும்போது இவை மறைந்துவிடும். கருத்துவேற்றுமை இல்லாத நட்பும், கருத்தொப்புமை இல்லாத விலகலும் சாத்தியமில்லை. எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ரவிகுமார், சுந்தர் காளி (‘சுயமுகமும், திருமுகமும்’ என்ற அற்புதமான சிறு நூலை தமிழுக்கு அளித்துள்ளார்; அவசியம் படிக்கப்படவேண்டிய நூல்), தொ.பரமசிவம், ராஜ்கவுதமன், ‘அந்தக் காலத்தில் காபி இல்லை’ ஆ.இரா.வெங்கடாசலபதி, பொ.வேல்சாமி, இ.முத்தையா, ரவி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலர் சமூக அறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கியுள்ளனர். ஞானி, தமிழவன், நாகார்ஜுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, பிரேம் போன்ற முக்கியமான சிந்தனையாளர்கள் கோட்பாடு, தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை முக்கியப்படுத்தியவர்கள். இவர்களிடம் செயல்படுவது ஒருவகை இலக்கிய முதன்மைவாதம் என்று எனக்குத் தோன்றுகிறது. (எம்.டி.எம் இப்போது நானறிந்தவரை எழுதுவதில்லை) சமூக அறிதலின் களவயப்படுத்துதல் (localization) இவர்கள் இயக்கத்தில் படைப்பிலக்கியமாகவும் இலக்கிய விமர்சனமாகவும் கோட்பாட்டியலாகவும் பரிணமிக்கிறது. நிறுவனங்கள், இயக்கங்கள், சமூக நிகழ்வுகள் போன்றவற்றை ஆய்வதில்லை. மேற்கத்திய வகைப்பாட்டில் இவர்கள் Humanities எனப்படும் கலை,இலக்கிய சிந்தனைத்துறைகளில் நிற்கின்றனர். Social Sciences என்னும் சமூக அறிவியலை கருதுவதில்லை.

உதாரணமாக இந்திய சிந்தனையின் சமகால சாதனையாகிய அடித்தள ஆய்வுகளை (Subaltern Studies) அ.மார்க்ஸ்தான் தமிழில் கவனப்படுத்தினார். ரணஜித் குஹாவின் ‘சந்திராவின் மரணம்’, சாஹித் அமினின் ‘காந்தி மஹாத்மா’, பார்த்தா சாட்டர்ஜியின் ‘காந்தி: குடிமைச் சமூகத்தின் விமர்சகர்’ போன்ற கட்டுரைகளே தமிழில் சமூக அறிதல் தன் பயணத்தை துவங்க உதவும். சமீபத்தில் பார்த்தா சாட்டர்ஜி எழுதிய ‘ஆளப்படுவோரின் அரசியல்’ (The Politics of the Governed) உடனடியாக தமிழில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நூலாகும். களவயப்படுத்துதல் என்பதை விரிந்த பொருளில் கொள்ள வேண்டும். தெரிதா, ஃபூக்கோ, தெல்யூஸ், அகம்பென், பாதியூ எல்லாம் படித்தாலும் நாம் ஆராய்ந்து எழுதவேண்டியது வள்ளலார் குறித்தும், வைகுண்டசாமி குறித்தும், அயோத்திதாசர் குறித்தும்தான்; அதாவது உள்ளூர் களங்களைக் குறித்துதான். அத்தகைய எழுத்து மொழி, பிரதி, இலக்கியம், கதையாடல் என்று மட்டும் போகாமல், சொல்லாடல், செயல் வலைப்பின்னல், வம்சாவழி ஆய்வு என்றும் பரிணமிக்கவேண்டும். ஃபூக்கோவின் ஆய்வுகளை மறக்கக்கூடாது.

இலங்கை பிரச்சினை குறித்த கோட்பாட்டு நூல்கள், கட்டுரைகள்கூட ஏராளமாக ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. நானறிந்தவரை அவை தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. இலங்கை அறிஞர்கள் உலகப்புகழ் அல்லது ஆங்கிலக் கல்விப்புல புகழ் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் தமிழில் அறியப்பட்டவர்களில்லை. சிங்களத்தின் நிலை எனக்குத் தெரியாது. அங்கு ஒரு இடதுசாரி இயக்கம், அடையாள வெறிகொண்ட தேசிய வலதுசாரி இயக்கமாக மாறியதை அறியும்போது அச்சம் பெருகுகிறது. தமிழில் வந்த புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியமோ’, நேபாளத்துடன் ஒப்பிட்டு அ.மார்க்ஸ் முன்வைத்த சீரிய சிந்தனைகளோ ஆங்கிலத்தில் எழுதும் நானறிந்த சிலர் கவனத்திற்கு வரவில்லை. இருமொழிச் சூழலின் சிக்கலிது. இதையே தமிழ் சமூகம் உலக வரலாற்றின் இன்றைய கட்டத்தில் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக நினைக்கிறேன். என்னால் முடிந்தவரை என்னுடைய எளிய சாத்தியங்களுக்கு எட்டியவரை இச்சவாலை எதிர்கொள்வேன். என் கடன் இருமொழிகளிலும் எழுத்துப்பணி செய்து கிடப்பதே.

16 thoughts on “ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்

  1. ராஜன் குறை,
    உங்களது எழுத்துக்கள் ‘சத்தியக்கடதாசி’ யினது வழமையான எழுத்துக்களில் இருந்து வேறுபட்டவை. அடையாள அரசியலை கும்பிட்டு கருத்தியலுக்குள் கவிண்டு போய் வன்முறை ஆதரிப்பாளர்களாக மாறிவிட்ட சத்தியக்கடதாசி நண்பர்களிடம் இருந்து மிகவும் வேறுபடுகின்றது இவ்வெழுத்து. ரத்தக்கறை படிந்துவிட்ட சத்தியக் கடதாசியை ராஜன்குறை தான் மீட்டெடுக்க வேண்டும்.

    மேலும், ஆய்வுகளுக்கு ‘தகவல்கள்’ வேண்டும். இலவச தகவல் உள்ளடக்கங்களை பெருக்கும் நிலையில் மட்டுமே ஆய்வுக்கட்டத்திற்கு நகரமுடியும். சுகனது பொய்ப்புனைவுகள் வெள்ளாளனை முறியடிக்க உதவாது. அவை வெள்ளாளன் தன்னை வளர்த்துக்கொள்ள மட்டுமே உதவும். வெள்ளாளனின் பெருமை மிக்க ஒவ்வொரு எழுத்தையும் காட்சிப்படுத்துவதனூடாக மட்டுமே வெள்ளாளனின் அடக்குமுறையை வெளிப்படுத்த முடியும். ராஜன் குறை கூறியது போன்று ஆய்வுகளை மையப்படுத்திய எழுத்துக்கள் உருவாக வேண்டும்.

  2. ஒரு அ.மார்க்ஸ் செய்யும் பொய் பிரச்சாரமே இவ்வளவு மோசமாக இருக்கிறது. இதில் இன்னும் நூறு அ.மார்க்ஸா, ராஜன்குறை, உங்களுக்கு தமிழர்கள் மீது அவ்வளவு கோபமா?. இப்படியா சபிப்பது.
    அ.மார்க்ஸ் எழுதுவதெல்லாம் உண்மை என்று நீங்களே நம்பினால் நான் என்ன சொல்ல முடியும்.ஜெயமோகனின் மோசமான கட்டுரைக்கு அவர் எழுதிய பதிலில் எத்தனை அரைப்பொய்கள், எத்தனை பொய்கள் என்று உங்களுக்கு புரியவில்லையா?.நிலத்தில் தற்காலிக கட்டிடம்தான் கட்ட அனுமதி என்பதை மறைத்து விட்டு பொய்களை அள்ளி வீசுவது உங்களுக்குக் கூட புரியவில்லையா.ஜமாலன், ராஜன்குறை போன்றவர்கள் நாளிதழ்களை வாசிப்பதில்லை போலும். அ.மார்க்ஸின் சராம்சவாதமும், திரிபுவாதமும் இன்னமும் உங்களுக்கு புரியவில்லையா?
    நீங்கள் கூறுவது போல் humanities, social sciences என்ற ஒன்றாக பார்ப்பது கடினம். ஏனெனில் பல்துறை ஆய்வுகளை அறிவது தேவை.நாகார்ஜுனன் science studiesல் லத்தூரின் ஆய்வுகளைச் சொல்கிறார்.அவர் action network theoryஐ பயன்படுத்தும் பிறரை (உ-ம் ஜான் லா)
    எழுதுவதில்லை.விளைவு அவர் எழுதுவது லத்தூரில் துவங்கி லத்தூரில் முடிகிறது. social construction of science என்பது
    ஒரு நபரில் துவங்கி அவருடன் முடிவதில்லை.அப்படி எழுதும்
    போது அது குறுகிவிடுகிறது. international environmental law/politics குறித்த அக்கறை இல்லாமல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியாது. வெறும் கோட்பாடுகளைக் கொண்டு அவற்றை அறிய முடியாது.
    இன்றைய அறிவுப் பெருக்கத்தில் ஒரு துறைசார்ந்த் அறிவைப் பெற,புரிந்து கொள்வதே போராட்டமாக உள்ளது. Science studies
    என்பதை எடுத்துக் கொண்டால் எத்தனை சிந்தனைப் போக்குகள்,
    எத்தனை கோட்பாடுகள், எத்தனை ஆய்வுகள். இதில் ஒருவரை
    மட்டும் படித்தால் கிடைக்கும் புரிதலைக் கொண்டு அந்த துறையைக்
    கூட மதிப்பிட முடியாது. ஒருவரின் அணுகுமுறையும்,புரிதலும்
    ஒரு/சில துறை(கள்) சார்ந்தும், இன்னொருவர் புரிதலும்,அணுகுமுறையும் வேறு துறை(கள்) சார்ந்து இருக்கும்
    போது ஒருவொருக்கொருவர் ஒரு பொருள் குறித்து பேசும் போது உரையாடுவதை விட் talking past to
    each other என்பது நடக்கவே நம் சூழலில் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

  3. ரவி (ஸ்ரீநிவாஸ்), நேரடியாக உரையாட வேண்டியதில்லை என்ற கருத்தை ஏற்கிறேன். மறைமுகமாகக்கூட உரையாடாமல் அவரவர்களுக்கு தோன்றும் பணியை செய்தால் போதும். ஆனால் கூடியவரை பிறர் எழுத்தை வாசிப்பதும் சாத்தியமானால் உரையாடுவதும் நன்மை பயக்கும் என நம்புகிறேன். அ.மார்க்ஸ்-மீது உங்களுக்கு என்ன கோபமென்று புரியவில்லை. காஷ்மீர் பிரச்சனையில் உங்களுக்கு ஏதோ கருத்து மாறுபாடு இருப்பது புரிகிறது. ஆனால் மார்க்ஸின் பணிகள் எத்தகைய பன்முகம் கொண்டவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தேசம் ஒரு கற்பிதம் என்ற அவர் கட்டுரையே என்னை நிறப்பிரிகையுடன் இணைத்துக் கொள்ள காரணமாயிருந்தது – அதற்கு முன்னரே அவரது ரசியா பற்றிய கட்டுரைகள் என்னை கவர்ந்திருந்தாலும். தொடர்ந்து தேசியம் என்ற கருத்தாக்கத்தை அவர் விமர்சித்து வருவதே நான் அவரை முன்னுதாரணிக்க முக்கியக் காரணம். வித்தியாசமான அரசியல் அமைப்புகளை நோக்கி சிந்திக்காமல் தினமும் குண்டுகள் வெடித்து அப்பாவி மக்களை கொல்லும் காலத்தில் என்னால் வாழ முடியாது. இதற்கு மதம்தான் காரணம், தேசமல்ல, முதலீட்டியமல்ல என்ற கூறும் நவீன மாய்மாலத்தை விமர்சிப்பது அவசியம் என்பது என் துணிபு. லதூர் குறித்தும் அறிவியல் மீதான ஆய்வுகள் குறித்தும் நீங்கள் விரிவாக எழுதினால் படிக்க ஆவலுடன் இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை லதூர் தத்துவ ரீதியாக நவீன ஆய்வுமுறை சட்டகத்தை விமர்சிப்பதே முக்கியமானது.

  4. ஒவ்வொரு தேசமும் தனக்கான இலக்கை கண்டறிய வேண்டும். கண்டறிந்து அதையடைவதில் வெற்றியோ தோல்வியோ காண வேண்டும்” என்று அல்ஜீரிய புரட்சியாளர் ‘பிராண்ட்ஸ் பெனான்’, 1961’ல் தன்னுடைய ‘ரெச்சட் ஆப் தி எர்த்’ நூலில் “தேசிய பண்பாட்டைக் குறித்து” என்ற அத்தியாயத்தில் காலனிய ஆட்சியிலிருந்து விடுபட்டிருந்த்த புதிய நாடுகளின் சிந்தனையாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

    நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நமது முந்தைய தலைமுறைக்கு (தெற்காசியாவில் 1940’களில், ஆப்ரிக்காவில் 1960’களில்), காலனியத்திலிருந்து மீண்ட அவ்வேளையில், அத்தலைமுறைக்கு வெற்றுவெளியிலிருந்து தேசத்தை உருவாக்குவது தலையாய கடமையாய் இருந்தது. நமது கடமை வேறு. முந்தய தலைமுறைக்கு தேசியத்தின் மீது இருந்த நம்பிக்கை நமக்கில்லை, இருக்கவும் முடியாது. இப்படி சொல்வதை ஒரு fஅச்கிஒன்’ஆக பார்க்கக் கூடாது. தேசியத்தின் பெயரால் நடக்கும் வன்முறையைக் கண்டும் வாளாயிருப்பது எப்படி? காலனிய தேசங்களனைத்திலும் இத்தகைய வன்முறையும் ஒடுக்குமுறையும் இருப்பதேன்? இது தெரிந்த பிறகும் தேசியத்தை/ தேசம் என்ற கருத்தாக்கதை கேள்விகுள்ளாக்காமல் இருப்பது எப்படி சாத்தியம்? தேசம் பற்றி பேசுவோர் எல்லோரும் ‘ஒரு பூகோள எல்லைக்குள் வேறுபாடற்ற மக்கள் கூட்டம் காலம்காலமாக இருந்து வந்திருக்கிறது’ என்பதை கேள்விகிடமில்லாமல் எற்றுக்கொள்கிறார்கள் என்று ரோசா லக்சம்பர்க் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    தேசம் என்பது யார்? தேசத்தின் சார்பில் யார் பேசுவது? இந்த கேள்விகளுக்கான எந்த பதிலும் நமக்கு உவப்பாயிருக்க முடியாது. 1980’ல் ரொடீசியா, ஜிம்ப்பாப்வேயாக உருவான போது நம்மில் யார் அதை கொண்டாடவில்லை? ஆனால் அம்மக்களின் இன்றைய நிலை என்ன? ஜிம்ப்பாப்வேயின் இப்போதய பணவீக்கம் 1.2 கோடி சதவிகிதம்! டோரிஸ் லெஸ்ஸிங்கின் ஜிம்ப்பாப்வே குறித்த நோபல் பரிசு உரையை படித்த பிறகு 80’களில் நடந்த கொண்டாட்டங்கள் அபத்தமாக தெரிகின்றன.
    ராஜன்குறை சொன்னது போல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் நிலைமை எப்படிப்பட்டது? காஷ்மீரில் இந்திய ராணுவம் என்ன செய்கிறது? தேசம் என்பது எல்லா காலகட்டங்களிலும் சிறுபான்மையினர் என்று கருதுகின்றவர்களையும், பெண்களையும், ஒடுக்கியே வந்திருக்கிறது. எல்லா தேசங்களிலும் தேசியமென்பது சிலரை, வெவ்வேறு காலகட்டங்களில், அத்தேசத்துக்கு வெளியே நிறுத்தியே வைத்திருக்கிறது (உ-ம். மேற்கத்திய நாடுகளில் கறுப்பர், ஈழத்தில் தமிழர், தோட்டத்தொழிலாளர்) ஆனால் ‘இவ்வெல்லைக்குள் உள்ளோர் எல்லோரும் இந்த தேசத்தில் உட்பட்டவரே, எல்லோரும் சமம்’ என்று கூறியபடியேதான் இவ்வெளிநிறுத்தம் செயல்படுகிறது. இதை கண்டுகொண்டு இனங்காட்டுவது நமது பொறுப்பு, கடமை. ஆக நமக்கு தேசியத்தை சந்தேகித்தே ஆக வேண்டிய கட்டாயம், கடப்பாடிருக்கிறது. இது எதுவும் தமிழுக்கு புதிதல்ல, அ.மார்க்ஸ், ரவிகுமார், போன்றோர் பல இடங்களில் பல சந்தர்பங்களில் எழுதியதுதான், இருந்தாலும் ‘எனது இந்தியா என்றும், ‘தமிழன் என்னும் மூலப்படிம உணர்வு’ என்றும் தமிழின் மூத்த எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் எழுதும்போது இதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.
    ராஜன்குறையின் கட்டுரை இரண்டு முக்கிய விடயங்களை முன்வைதிருக்கிறது ஒன்று அறிதல்முறையையும் வாழ்வுமுறையையும் பிரிக்க முடியாதென்பது. இரண்டாவது தமிழில் சமூக-அறிவியலின் குறிப்பாக வம்சாவழிசமூக அறிவியலின் அத்தியாவசியத்தை சுட்டிக்காட்டியது. காகமோனாவின் தாக்கத்கதை நுண்ணீயமாக ‘ரப்பர்’ ‘மாடன் மோட்சம்’ போன்ற புனைவுகளில் காட்டிய அதே எழுத்தாளர் இஸ்லாம் என்பது தேசிய கருத்தாக்கம் என்று எவ்வாறு எழுதினார்? இவ்வாறு எழுதுவதன் விளைவுகள் என்ன? காஷ்மீர் மன்னர் இந்தியாவில் சேர்ந்தார் அதை கேள்விகுள்ளாக்கக்கூடாதென்றால், திருவிதாங்கூரும், ஐதராபாத்தும், ஜுனாகத்தும் இந்தியாவில் சேரவில்லையே! வலுக்கட்டாயமகவல்லவா சேர்க்கப்பட்டார்கள்! இது ஒன்றும் மறைக்கப்பட்ட வரலாறு அல்லவே. இதைப்புரிந்து கொள்ள வேண்டுமானால் (விளக்க அல்ல!) “இந்தியா என்ற கருத்தாக்கத்தையும், இஸ்லாம் என்ற கருத்தாக்கத்தையும் சமூக அறிதலின் பாற்பட்டு விமர்சிக்க கடுமையாக உழைக்க வேண்டும்”என்பது வெளிப்படை. சமூக அறிவியல்சார் எழுத்தாளர்கள், ராஜன்குறை சொன்னதுபோல் நூறுபேர் இல்லாவிட்டாலும் ஒரு முப்பதுபேரும், நிறப்பிரிகை போல சமூக அறிவியல் ஏடுகள் சிலவும் இருந்திருந்தால் ஒருவேளை தமிழில் இலக்கியவாதியே யாதுமாகி நிற்கும் நிலை வந்திருக்காதோ என்னவோ?! ராஜன்குறையின் மிக முக்கியமான கட்டுரையின் இரண்டாம், மூன்றாம் பகுதிகளின் ஒரு சிறு தொடர்ச்சியே இப்பினூட்டம். கடந்த சில மாதகங்ளாக சிறு பத்திரிக்கை உலகுடன் நன்கு பரிச்சியம் உள்ள நண்பர்கள் இஸ்லாம்/இஸ்லாமியர் குறித்து சொன்ன கருத்துக்களையும், மற்றொரு நண்பர் வலைத்தளத்தில் வாசித்து என்னிடம் சொன்ன சில கட்டுரைகளும் மிக கவலை தருவதாக இருக்கின்றன. ராஜன்குறையின் கட்டுறைக்கு இது ஒரு தொடுகோடுதான்.

    ஸ்ரீரவி

  5. ராஜன் குறை

    கட்டுரையை வாசித்தேன். மறுமொழி என் பதிவில் எழுதுகிறேன்.

    ரவி சீனிவாஸ்

    ஸெர், லத்தூர் பற்றி எழுதுவது ஒரு தொடக்கம்தான். மற்றவர்கள் பற்றி எழுதுகிறேன். ஏன் நீங்களும் எழுதலாம்.

    நாகார்ஜுனன்

  6. ராஜன் குறை, அ.மார்க்ஸ் குறித்த விமர்சனம் என் வலைப்பதிவில்.
    தேசியத்தை விமர்சிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு மதவாத சக்திகளை தூக்கிப் பிடிப்பதும். அவர்களுடன் கைகோர்த்துக் கொள்வதும் சரிதானா.எனக்கும் தேசியம் குறித்த விமர்சன்ம்
    உண்டு.அதற்காக மதவாதத்தினை முன்னிறுத்த முடியாது.

    ‘ஆனால் மார்க்ஸின் பணிகள் எத்தகைய பன்முகம் கொண்டவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்’
    அறிவேன், ஆனால் அந்த பன்முகம் எதைக் நோக்கி குவிகிறது
    என்பதுதான் கேள்வி.ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை கேள்விக்குட்படுத்திவிட்டு உலகளாவிய இஸ்லாம் சமூகம்
    என்பதை முன்னிறுத்தும் போது, ஹிந்த்துவாவை விமர்சித்து
    விட்டு, ரஷ்டி இந்தியாவிற்குள் வரக்கூடாது, தஸ்லீமாவை
    விரட்டு என்பவர்களுடன் சேரும் போது பன்முகம் என்பது
    கேள்விக்குறியாகிறது.டாவின்சி கோட் என்ற திரைப்படத்தை தடை
    செய்வதை இஸ்லாமிய அமைப்புகளும் வரவேற்றன.இதை மறைத்துவிட்டு கிறித்துவ அமைப்புகள்,ஆர்.எஸ்.எஸ் மட்டும்
    வரவேற்றதாக எழுதும் போதும், அரசியல்சட்டம் குறித்த
    பொய்களை பரப்பும் போது உள்நோக்கம் தெளிவாகிறது.
    இவையெல்லாம் தொடர்ந்து செய்யப்படும் போது விமர்சனம்
    வரத்தான் செய்யும்.

  7. ‘தோரோவும், தால்ஸ்தாயும் அவர்கள் ஊரில் சாதிக்க முடியாததை அவர்களைப் படித்த காந்தியால் சாதிக்க முடிந்தது. ‘
    ஆம், அதற்குக் காரணம் காந்தியால் இந்திய மரபையும்,படித்ததையும் இணைக்க முடிந்தது.
    அறவழிப் போராட்டம் என்பதை மரபிலிருந்தும்
    எடுத்துக் கொள்ள முடிந்தது, மக்கள் புரிந்து
    கொண்டு ஈடுபடுத்திக் கூடிய idioms உருவாக்க
    முடிந்தது. அதே சமயம் காந்தியம் வேறு பல
    நாடுகளில் வேறு வகையான செயல்பாடுகள்,
    வாசிப்புகளுக்கும் உட்படுத்தப்பட்டது.
    இதுவும் கவனம் பெற வேண்டும்.

  8. ரவி ஸ்ரீநிவாஸ்,

    அ.மார்க்ஸ் மதவாதத்தை 1) தூக்கிப்பிடித்தார்; 2)கைகோர்த்தார்; 3) முன்னிறுத்தினார் என்று மூன்று வர்ணனைகளை கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டுவதெல்லாம் ஒரு சில விடுபடல்கள் மற்றும் தகவல் துல்லியமின்மை. அவையெல்லாம் உண்மையாக இருந்தால் கூட நாம் மார்க்ஸை கவனமாக நடுநிலையுடன் எழுதும்படி கோரலாம் அல்லது விவாதிக்கலாம். அவ்வளவுதான். மதவாதம் என்ற கருத்தியலையோ, மத அடையாளமே எல்லாப்பிரச்சினைகளுக்கும் இறுதித் தீர்வு என்பதையோ மார்கஸ் ஏற்றுக்கொள்வார் என்று தோன்றவில்லை. ஓபாமா தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்தார் என்பதை ‘Guilt by association’ என்ற சொற்றொடரில் வகைப்படுத்தி ஊடகங்கள் விவாதித்தன. அப்படி செய்யத் தொடங்கினால் சிந்தனையாளர்களெல்லாம் கண்ணாடிக்கூண்டில் ஆளற்ற தீவில்தான் வசிக்கவேண்டும். தொடர்ந்து மக்களுடன் உரையாடாமல் இயங்க முடியாத அ.மார்க்ஸ் போன்ற களப்பணி சார் சிந்தனையாளர்களுக்கு அது சாத்தியமில்லை. இன்றைய நிலையில் ஆர்.எஸ்.எஸ், இஸ்லாமிய அமைப்புகள், தேவர் பேரவைகள் அனைத்துடனும் சிந்தனையாளர்கள் விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பயனிருக்கிறதோ இல்லையோ வேறு வழியில்லை என்றுதான் தோன்றுகிறது. நாம் ஒருபுறம் எழுதுவோம், அவர்கள் ஒருபுறம் வன்முறை அடையாள அரசியலை நடத்தட்டும் என்று எல்லா சிந்தனையாளர்களூம் முடிவு செய்ய முடியாது. உங்களது வலது சாரி, இந்துத்துவ மற்றும் பார்ப்பனீய சார்பு தொனிக்கும் வரிகளை கவனத்தில் கொண்ட பிறகுதான் உங்களுடன் விவாதிக்கிறேன். காரணம் உங்கள் செயல்பாடுகளும் அக்கறைகளும் விரிவானவை என்ற எண்ணம்தான். சர்ச்சயை உரையாடலாக, விவாதமாக மாற்றுவோம்.

  9. ராஜனகுறை அ.மார்க்ஸ் எழுதியதை வாசிக்காமல் எழுதுகிறார் என்று தோன்றுகிறது.விவாதம் என்பது வேறு, மத அடிப்படைவாத அமைப்புடன் சேர்ந்து வேலை செய்வது என்பது வேறு.அ.மா செய்வது பின்னது.உங்களைப் பொருத்த வரை ஒருவேளை கீழே உள்ளது போல் எழுதுவது கூட சரியானதாக இருக்கலாம்.என்னால் அப்படி கருத முடியாது.அப்படி எழுதும் ஒரு நபரை ஒரு லிபரலாகக் கூட கருத முடியாது.

    ‘பிறப்பால் பார்ப்பனர் ஆயினும் அவரது நேர்மையும், அறிந்த உண்மைகளை அது தமது கருத்தியலுக்கு எதிரானதாக இருந்த போதிலும், சொல்லத் துணிவதும் நாம் வணங்கத்தக்க பண்புகளாகின்றன.’
    http://www.keetru.com/sancharam/mar08/a_marx.php

    பாரிஸில் தஸ்லீமாவிற்கு ஆதரவு,தமிழ்நாட்டில் தஸ்லீமா
    இந்தியாவில் இருக்கக்கூடாது என்று கோரும் அமைப்பிற்கு ஆதரவு.
    இது போன்ற உதாரணங்கள் தந்தும் உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
    ‘உங்களது வலது சாரி, இந்துத்துவ மற்றும் பார்ப்பனீய சார்பு தொனிக்கும் வரிகளை கவனத்தில் கொண்ட பிறகுதான் உங்களுடன் விவாதிக்கிறேன்’
    தாரளமாக.அவை எவை என்றும் குறிப்பிடலாம்.நான்
    எப்போதும் ‘பொலிடிகல் கரெக்டனஸ்’ பார்த்து எழுதுவதில்லை.எனக்கு சரி என்று தோன்றுவதை எழுதுகிறேன்.இன்றைய இந்திய சூழலில் ‘இடதுசாரி’
    அமைப்புகள் மீது எனக்கு கடும் விமர்சனம் இருக்கிறது.
    அவை சாதிய,மதவாத அரசியலுக்கு துணை போகின்றன/
    ஊக்குவிக்கின்றன என்று எழுதியிருக்கிறேன்.மதம் மாற்றும் உரிமை அடிப்படை உரிமை அல்ல என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பினை ஆதரித்து எழுதியிருக்கிறேன்.மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது சரியல்ல என்று எழுதியிருக்கிறேன்.தீர்ப்புகளை முன்வைத்து,அரசியல் சட்டப் பிரிவுகளை காட்டித்தான் எழுதியிருக்கிறேன். இந்த இரு நிலைப்பாடுகளும் சர்ச்சைக்குரியவை
    என்று தெரியும்.இன்றைய ‘இடதுசாரி’ ‘பொலிடிகல் கரெக்ட்னஸ்’
    மதமாற்றம் அடிப்படை உரிமை என்று வாதிடுவது என்பதும் எனக்குத் தெரியும்.அத்துடன் காஞ்சா ஐலையா,அ.மார்க்ஸ்
    மதமாற்றத்தை தலித்-பகுஜன்களுக்கு ஒரு தீர்வாக வைப்பதும்
    எனக்குத் தெரியும்.ஆனால் சமீபத்திய உரை ஒன்றில் காஞ்சா
    எழுப்பியுள்ள சில கேள்விகள் அவர் நிலைப்பாட்டில் மாறுதல்
    தோன்றுவதைக் காட்டுகிறது.
    http://countercurrents.org/ilaiah241008.htm
    ‘While we know that Hinduism is almost on the verge of collapse in Nepal and is in a deeper crisis in India, yet Islam is not attracting the Dalitbahujan mass because the peoples’ life in Afghanistan, Pakistan and Bangladesh has not become modernist. Modernity, in my view, is not merely political, but also spiritual. For Dalitbahujans who suffered for centuries because of the total lack of reformative energy the slow and halting reformative energy of Islam of that region does not seem to be a very attractive alternative. Even in a spiritual democracy people do not want to be poor, hungry and illiterate. I leave it to Islamic scholars to examine why Afghanistan, Pakistan and Bangladesh are unable to negotiate with democracy, capitalism and modernity. ‘
    இதை எழுதியுள்ளது ஜெயமோகனோ அல்லது நானோ அல்ல.
    காஞ்சா ஐலையா.இந்த கேள்வியை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்
    என்பதை அறிய விரும்புகிறேன்.பாகிஸ்தான் குறித்த அ.மார்க்ஸின்
    கருத்துக்களையும் இங்கே கவனத்தில் கொள்ளுங்கள்.

  10. ரவி ஸ்ரீநிவாஸ், அ.மார்கஸ் பற்றிய உங்கள் மதிப்பீட்டுடன் எனக்கு உடன்பாடு இல்லை. தொடர்ந்து அதை விவாதிப்பதில் ஆர்வமுமில்லை. மற்றபடி இஸ்லாம், முதலீட்டியம், நவீனம் குறித்து மேலேயுள்ள என் கட்டுரை சில கருத்துக்களை கூறுகிறது. பார்க்கவும். உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  11. // கடும் பொருளாதார நெருக்கடி தோன்றியிராவிட்டால் ஓபாமா வெற்றி பெற்றிருப்பாரா என்பது சந்தேகம் என்றே தோன்றுகிறது. தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள் (Blue Collar Whites) – குறிப்பாக பென்சில்வேனியா மாநிலத்தில் – நாங்கள் எப்போதும் ஜனநாயகக் கட்சிக்கு (ஓபாமாவின் கட்சி) வாக்களித்தாலும் அதற்காக ஒரு கறுப்பருக்கு ஓட்டுப் போட முடியாது என வெளிப்படையாகக் கூறியதாகப் பத்திரிகைகள் தெரிவித்தன.//

    அத்துடன் கெலரி கிளிண்டன் ஒரு வெள்ளை ஆணாக இருந்திருந்தாலும் ஒபாமா வென்றிருப்பாரா என்பதும் கேள்விதான்..
    தொழிலாள வர்க்கத்தைச்சேர்ந்த வெள்ளையர்களும் இனவாதிகளாகத்தான் இருக்கிறார்கள் இங்கு ஜரோப்பாவிலும் அதைப்பார்க்கலாம் .. ( இவர்கள் எமது நாட்டுகளின் தொழிலாள வர்க்கத்துக்காக குரல் கொடுக்கப்போவதும் இல்லை..)
    ஒபாமாவின் வெற்றி கறுப்பு இன மக்களிடத்தில் மிகுந்த மகிழ்ச்சியை வரலாற்று நிகழ்வாக எண்ணும்படியான சந்தோசத்தைக்கொடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை அவர்கள் அவ்வளவுதூரம் அடிமைதனத்தை அனுபவித்திருக்கிறார்கள்.. ஒபாமாவிடம் நல்ல யோசனைகள் இருக்கிறது ஆனாலும் 4 வருடங்கலில் அவர் ஒரு தனியாளாக இருந்து எதையும் சாதித்திட முடியாது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீழவே நீண்ட காலம் எடுக்குமென்று நினைக்கிறேன் ..அதுமட்டுமல்ல அவர் விரும்பினாலும் அவரைச்சுற்றியுள்ள அரசியல் அவரைத்தனித்து இயங்க விடப்போவதுமில்லை . ஈராக் ,அப்கானிஸ்தான்போன்ற நாடுகளிருந்து அமெரிக்க ராணுவத்தை இலகுவாக திருப்பி எடுக்கவும் அவரால் முடியாது என்றுதான் தொன்றுகிரது அமெரிக அரசியலை இலகுவாக யாராலும் மாறிவிடமுடிந்தால் அதுவே உலக அதிசயம் இல்லையா….

    அ. மார்சின் கட்டுரை இவ்வளவு பிரச்சனை சிக்கல்களை பலரிடத்தே உருவாக்கிறதென்பதே அவரின் கட்டுரைக்கான வெற்றி என்றுதான் தோன்றுகிறது. அ.மார்க்சை எனக்கு தெரிந்த காலம்வரை தனது கருத்திலிருந்துவிலகாமல் தேசியம் ஒரு கற்பிதமென்றே சொல்லிவருகிறார் ..
    பாகிஸ்தான் , கஸ்மீர் பற்றி ஏன் இவ்வளவு ஒரு கொலைவெறி பலருக்கு.. எல்லா நாடுகளிலும் பிரச்சனை இருக்கிரது பாகிஸ்தானில் மடுமல்ல மதவாதம் இந்தியாவிலும்தான் , மசூதியை உடைத்து ராமர்கோயில் கட்டுவதும் மதவாதம்தான் கஸ்மீர் பிரச்சனையை எப்பவோ தீர்க்காமல் பாகிஸ்தானிலும் ,முஸ்லீம் மக்கள்மீதும் பழியைபோடுவதும் மதவாதம்தான் .. எல்லா நாடுகளிலும் மதவாதம் இருக்கிரது கிறிஸ்துவர்கள் உலகம் முழுக்க ஆழ நினைப்பதுவும் மதவாதம்தான் ..தஸ்லிமாவையும் சல்மன்ருஸ்டியையும் நாட்டிற்க்கு வரவிடாமல் தடுப்பதுவும் மதவாதம்தான் எங்குதான் இல்லை இந்தப்பிரச்சனைகள் ஆனால் சொந்த நாட்டு பிழைகளைச் சொன்னவுடன் ஏன் எமது தேசிய உணர்வு மேலோங்க வேண்டும்…

    இவ்வலவு காலத்தில் எந்த நாளிதழ் துணிந்து அல்லது தேசப்பற்றைமீறி அ.மார்க்ஸ்போல உண்மைகளை வெளியிட்டிருக்கிறது என்று தெரியவில்லை

    //ஒவ்வொரு உள்ளூர் பிரச்சினையும் தனித்துவமானது. ஆனால் அந்த எந்தப் பிரச்சினையையும் காகமோனாவை விமர்சிக்கும் சமூக அறிதலன்றி எதிர்கொள்ள முடியாது. இந்தப் புரிதலே ஃபூக்கோவின் பரிசு.//

  12. றஞ்சினி உங்கள் கருத்துக்களூக்கு நன்றி. நீங்கள் கூறியவற்றுள் இந்த தனி ஆள் என்ற கருத்தை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஓபாமா மட்டுமல்ல நாம் ஒவ்வொருவருமே எந்த அளவு தனி ஆள் என்ற கேள்வி முக்கியம். நவீன நிறுவனங்களில் மிக ஆபத்தானதும், முக்கியமானதும் இந்த தனி நபர் என்ற புனைவுதான். இதை காலங்காலமாக மனிதனிடம் செயல்படும் அகந்தை என்று நினைத்துவிடக்கூடாது. அதைவிட நுட்பமான ஒரு கட்டுமானம். ஃபூக்கோவின் “எழுத்தாளன் என்றால் என்ன?” (What is an author? )என்ற கட்டுரை இந்த விவாதத்திற்கான நல்ல தொடக்கப் புள்ளியாக இருக்கும் என நினைக்கிறேன்.

  13. நன்றி ராஜன் குறை, /நாம் ஒவ்வொருவருமே எந்த அளவு தனி ஆள் என்ற கேள்வி முக்கியம். நவீன நிறுவனங்களில் மிக ஆபத்தானதும், முக்கியமானதும் இந்த தனி நபர் என்ற புனைவுதான்./ ஆம் .தொடருங்கள் விவாதிப்போம் ..

  14. கம்பளத்தின்கீழ் மூடி மறைப்பது மட்டும் இல்லை–அதுவும் தீவிரமான குற்றம்தான். மாறாக அமெரிக்க நலன்களை வெளிநாடுகளில் தொடர்வதற்கும் உள்நாட்டில் சமூக அமைதியின்மை, வர்க்க விரோதம் ஆகியவற்றை அடக்குவதற்கும் இதே வழிவகைகளை சற்று வண்ணப்பூச்சுடன் மீண்டும் செயல்படுத்துவதற்கான தயாரிப்புக்கள்தான் நடைபெற்று வருகின்றன.

    வாசகர்களே; உலக சோசலிச வலைத்தளம் (ஷ்sஷ்s) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது.
    தயவு செய்து மின்னஞ்சல் அனுப்பவும்

    ——————————————————————————–

  15. நன்றி ராஜன் குறை.
    நீண்ட நாட்களாக சத்தியக் கடதாசியை நான் பார்க்கவில்லை…
    காரணம் சோபா சக்தியின் எழுத்துக்கள் மீது எனக்கு மதிப்பு இருந்தாலும் சத்தியக் கடதாசி தெருச் சண்டியராக இருப்பது எனக்கு உடன்பாடில்லாத ஒன்று…
    வாசிப்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கே அருவருப்வை தருகின்ற ஒன்று…
    குறிப்பாக தனிநபர் தாக்குதல்கள்…தெருச் சண்டித்தனமாகவே தொப்கன்றது…
    இன்று தற்தெயலாக என் உள்ளுணர்வு சத்தியக் கடதாசியை பார்க்கத்துண்டியது…
    அது தங்களது கட்டுரையை வாசிப்பதற்காக இருக்கலாம்…
    மீண்டும் தங்கள் கட்டுரைக்கும் பிறருக்கு அளித்த பதில்களுக்கும் நன்றிகள்…
    பல புதிய பார்வைகளைத் தந்தன…
    எது எப்படியோ எனது இன்றைய கேள்விகள் எல்லாம்…
    இவ்வாறான த்ததுவங்களை கோட்பாடுகளை கட்டுரைகளை எழுதும் தனிமனிதா;களைப்பற்றியது தான்…
    நாம் ஒவ்வொருவரும் எந்தளவிற்கு நம்மை அறியாமலே…
    நமது மொழி சாதி மதம் தேசியம் தேசம் கோட்பாடுகள் தத்துவங்கள் … என்பவற்றுடன் பிரக்ஞையின்றி ஐக்கியமாகியிருக்கின்றோம் என்பது…
    அவற்றின் அடிமைகளாக இருக்கிற்றோம் என்பது…
    அவற்றால் வழி நடாத்தப்படுகின்றோம் என்பது…
    கவலையான விடயம் என்னவெனில் இது பற்றிய புரிதலோ…
    முக்கயமான பிரக்ஞையோ இல்லாமலிருப்பதுதான்…
    இதனால்தானோ என்னவோ மனிதா;களுக்கிடையுளும் அவர்களது கோட்பாடுகள் தத்துவங்களுக்கு இடையிலும் இந்தளவு முரண்பாடுகள்…
    இன்றைய நிலையில் தனிமனித பிரக்ஞையின் வளர்ச்சியே மனிதரை அடுத்த கட்டத்திற்கு புதிய ஆரோக்கியமான மாற்றத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது எனது புரிதல்…உள்ளுணர்வு…நம்பிக்கை…
    மேலும் தங்களது கட்டுரையை எனது வலைப்பதிவில் பதிவு செய்யவிரும்புகின்றேன்.
    நன்றி
    மீராபராதி
    யுறுயுமுநுNஐபேுயுறுயுசுநுநேுளுளு.ழசப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *