மொழியுணர்வும் தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்

கட்டுரைகள் ராஜன் குறை

-ராஜன் குறை
மிழ் மொழியிலிருந்தே தன் அணியலங்கார அல்லது சொல்லணி (rhetoric) நடையின் மூலம், தமிழ் என்ற வித்தியாசமான குறியை உருவாக்கி மொழியுணர்வை ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக அண்ணா பயன்படுத்தினார் என்பது தமிழக வரலாற்றின் முக்கியமான திருப்பு முனை. உண்மையில் தமிழர்கள் உணர்வளவில் தேசமாகிவிட்டார்கள், தேசிய அரசைத்தான் தோற்றுவிக்கவில்லை என்று சொல்லலாம். மத்திய அமைச்சரவையில் பங்குபெறும் நிலையில் தமிழகத்தில் அது இனி பிரச்சினையில்லை. ஆனால், இலங்கையில் தமிழர்கள் வரலாற்றின் முரண்களில் சிக்கி பெரும் அழிவை சந்தித்துள்ளனர். இந்த மாபெரும் சோகத்தின் உணர்வலைகளை தமிழவன் எழுத்தில் காண முடிகிறது. இந்நிலையில் தமிழவன் அண்ணாவின் பணி குறித்து கவனம் குவித்து எழுதி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் உணர்வின் அளவுக்கு சிந்தனைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை தமிழவன் ஏற்றுக்கொள்வார். அதனிடப்படையில் சில கருத்துக்கள். தமிழவன் “ஆதி” “மூலம்” போன்ற சொற்களை பயன்படுத்துவது எதனால் என்று புரியவில்லை. மொழியுணர்வு ஏன் ஆதி உணர்வாக இருக்கவேண்டும்? ஏன் மூலாதாரமாக அல்லது தமிழவன் வார்த்தையில் “மூலப்படிமமாக” இருக்க வேண்டும் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். மொழியுணர்வு தமிழவன் கூறுவது போல தமிழகத்து தமிழர்களை இணைப்பதுடன் அவர்களை இலங்கைத்தமிழர்களுடனும் பிணைக்கிறது என்றால் அதன் பலன் மக்கள் ஒன்றுபட்டு ஏற்றத்தாழ்வு, சுரண்டல் நீங்கி வாழ்வதாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றும். உதாரணமாக கீழ்கண்ட விதமான உடனடிப்பலன்களையாவது எதிர்பார்க்கத் தோன்றுகிறது.

  1. தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமையும், வசதியான மறுவாழ்க்கையும் அமைத்துத் தர அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் சேர்ந்து முன்வரலாம்.
  2. இலங்கையின் பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களில் இருந்தவர்கள் பழையதை மறந்து ஒன்றுபட்டு தமிழர்களுக்கு கெளவரமான வாழ்வைப் பெறுவதற்காக இயங்கலாம்.
  3. சாதி என்பதையே குழிதோண்டிப் புதைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழரை சக தமிழர் தீண்டத்தகாதோராக பார்ப்பதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து பாடுபடலாம்.

இதெல்லாம் நடப்பதிலுள்ள சிக்கல்களை யோசிக்கும்போத்தான் மொழியுணர்வின் போதாமை புலனாகிறது. மொழியுணர்வு மட்டுமல்ல. சாதியுணர்வு, மத உணர்வு போன்றவை கூட பொருளில்லார்க்கு, பொருள் படைத்தவர் உதவி செய்ய வைக்கவல்லவையாக இல்லை. கடும் ஏழ்மையில் வாடுபவர்கள் எல்லா சாதிகளிலும், மதங்களிலும் இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் மார்க்ஸீயம் சுட்டும் வரலாற்று அம்சமான வர்க்க பேதம் முழுவதும் புறக்கணிக்கத் தக்கதல்ல. நல்லவேளையாக மனிதாபிமானம் கொள்ளும் எளிய மனிதர்கள் சக மனிதர்களுக்கு உதவி செய்ய மொழி,சாதி,மதம் எதுவும் தடையாக இருப்பதில்லை. Mr. and Mrs. Iyer படத்தில் வருவது போல தமிழர் ஒருவரை கணவரைப்போல அமரவைத்து சிங்கள வன்முறையாளர்களிடமிருந்து காத்த சிங்களப்பெண்ணைப் பற்றி பேராசிரியர் வாலண்டைன் டானியலின் “கருகிய தாலாட்டுக்கள்” (Charred Lullabies) நூலில் படிக்கலாம். சிங்கள வன்முறை, தேசியம் குறித்த சில ஆழ்ந்த சிந்தனைகளையும் கூட படிக்கலாம். தமிழவன் கூறுவது போல பெனடிக்ட் ஆண்டர்சனை போன்ற சிலரல்ல, ஏராளமானோர் தேசியம் குறித்து எழுதியுள்ளார்கள் என்பதே உண்மை. இந்தியரான பார்த்தா சாட்டர்ஜியின் தேசியம் குறித்த நூல்கள் உலகெங்கும் பயிலப்படுகின்றன. உதாரணமாக அவரது சமீபத்திய நூலான “ஆளப்படுவோரின் அரசியல்” (Politics of the Governed, 2004) நமது உடனடி கவனத்திற்குரியது. தமிழரான அர்ஜுன் அப்பாதுரையின் “Modernity at large” (1996) என்ற நூலும் உலகமயமாதல் கோணத்தில் முக்கியமானது.

தமிழவன்  பெனடிக்ட் ஆண்டர்சனை சுட்டுவதால் அவரைப்பற்றி கவனிக்கவேண்டும். வரலாற்றுவாதியான ஆண்டர்ஸன் மார்க்ஸீயத்திற்கும் தேசியத்திற்குமான சிக்கலான உறவின் அடிப்படையிலேயே சிந்திக்கிறார். இந்த மதவுணர்வு, சாதியுணர்வு, மொழியுணர்வு போன்ற இன்னொரு உணர்வான தேசிய உணர்வை மார்க்ஸியர்கள் பலர் சந்தேகித்தே வந்திருக்கிறார்கள். காரணம் ஆண்டர்சன் அழகாகப் புலப்படுத்துவதைப் போல முதலீட்டியமே தேசியத்தின் முதன்மைக்காரணம் (பார்க்க ஆண்டர்சனின் “கற்பனை சமூகங்கள்” – Imagined Communities, 1983/1991, Verso, London: page 37). சரியாகச் சொன்னால் தேசியம் குறித்த விவாதத்திற்கு ஆண்டர்சனின் கொடையாகிய “அச்சு முதலீட்டியம்” என்ற கருத்தாக்கம். இதை நாம் இப்படிப் புரிந்துகொள்ளலாம். இரண்டாயிரம் ஆண்டுகளோ, அதற்கு மேலோ தமிழ் மொழி இருந்தால் கூட ஏன் இருபதாம் நூற்றாண்டில்தான் தமிழர்களெல்லாம் ஒன்றுபட்ட அரசியல் அடையாளமாகலாம் என்ற கருத்து தோன்றுகிறது? அதற்கு முன்னால் அத்தனை நூற்றாண்டுகளிலும் பேரரசுகளும், சிற்றரசுகளும், நிலக்கிழார்களுமாகப் பிரிந்து தமிழர்கள் தங்களுக்குள் ஓயாமல் போரிட்டுதானே வந்தார்கள்? கா.அப்பாதுரையின் “தென்னாட்டுப் போர்க்களங்கள்” நூலில் இடம்பெறும் போர்களில் எத்தனை போர்கள் தமிழர்கள் இடையேயானது? சோழன் மதுரையை எரித்ததும், பாண்டியன் உறையூரை எரித்ததும் இரண்டுமே தமிழ் வீரமென்றால் தோற்றதும் தமிழந்தானே? தமிழ்நாடு மட்டுமல்ல உலகெங்கும் இதே நிலைதான். இத்தாலியின் நகர அரசுகள் தங்களுக்குள் ஓயாமல் போரிட்டதுடன் பிரெஞ்சு, ஜெர்மானிய அரசுகளையும் துணைக்கழைத்தன. பதினேழாம் நூற்றாண்டிலிருந்துதான் எல்லைகள், தேசம், நவீன அரசு போன்ற சிந்தனைகள் தோன்றின. (அண்ணாவுக்கும் இது தெரியுமென்பதால்தான் அவர் ரூஸோவை தொடர்ந்து புகழ்கிறார். திராவிட இயக்கத்தினர் பிள்ளைகளுக்கு ரூஸோ என்று பெயரிடுகிறார்கள்).

அப்படி பதினேழாம்/பதினெட்டாம் நூற்றாண்டில் எப்படி தேசியம் என்பது தோன்றி பின் உலகெங்கும் பரவியது என்று ஆண்டர்சன் விசாரணை செய்கையில் ஐரோப்பிய தேசங்களை பொறுத்தவரை அச்சு முதலீட்டியத்தின் முக்கியத்துவத்தை காண்கிறார். ஏனெனில் முதலில் தோன்றிய தேசங்கள் அமெரிக்க கண்டங்களின் குடியேற்ற தேசங்கள். அவை அதே மொழி பேசும் தாயகத்திலிருந்து குடியேற்ற பகுதி மக்கள் போராடி விடுதலை பெற்ற தேசங்கள். அதன் எதிரொலியாக ஐரோப்பாவிலும் தேசிய உணர்வு, அதாவது மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள வசதியாக ஒரு அடையாளத்தின் கீழ் ஒன்று படுவது அல்லது நிர்வாக வசதிக்காக அரசுகளே மக்களை தேசமாக ஒன்றிணைப்பது நடக்கிறது. அப்போதுதான் மொழி ஒரு அடிப்படையாகிறது. அதற்கு முக்கியக் காரணம் ஆண்டர்சனை பொறுத்தவரை பெரும்பான்மை மக்கள் ஒற்றை மொழி பேசுவோராக இருப்பதால் அச்சகங்கள் அந்தந்த பிரதேச மொழியிலேயே நூல்களை வெளியிடத் துவங்கியது. அது மட்டுமின்றி வால்டர் பெஞ்சமனின் கருத்தான உள்ளீடற்ற சமச்சீரான காலம் கதையாடலில் செயல்படத் துவங்குகிறது என்றும் விவாதிக்கிறார். ஆண்டர்சனை பொறுத்தவரை அவரது நோக்கம் மார்க்ஸீய வரலாற்றுவாத அடிப்படையில் தேசத்திற்கும் வரலாற்றில் இடமிருக்கிறது என்று வாதிடுவது. அதாவது எரிக் ஹாப்ஸ்பாம் “உண்மையில் மார்க்ஸீயர்கள் அவ்வளவில் தேசீயவாதிகளல்ல” என்று கூறுவதன் போதாமையை சுட்டி வரலாற்றில் தேசியம் தவிர்க்க முடியாதது என்று கூறுவது. குறிப்பாக கம்யூனிஸ நாடுகளிடையேயான முரணை புரிந்து கொள்வது.

தேசத்தை கட்டமைக்கும் சூழலில் ஆண்டர்சன் மொழியுணர்வு என்ற மூலாதார உணர்வு (primordial sentiment) தேசப்பற்றிற்கு உதவுகிறது என அங்கீகரிக்கிறார். இந்த இடத்தில் அவர் மூலாதார உணர்வு என்று கூறும்போது கடந்தகாலத்துடன் தொடர்புகொள்ளும் உணர்வை மொழி தருகிறது என்பதையே சுட்டுகிறார். ஆனாலும் கூட தேசப்பற்று அன்பை வளர்க்கும் என்றெல்லாம் ஆண்டர்ஸன் கூறுவதை படிக்கும் மாணவர்கள் வாய்விட்டுச் சிரிப்பதை பார்த்திருக்கிறேன். தமிழவன் ஆண்டர்ஸனின் பலவீனமான இந்த இடத்தை வலியுறுத்துவதும், அண்ணாவின் தமிழுணர்வை இப்படிப்பட்ட மூலாதார உணர்வாக்குவதும் அண்ணாவின் இலட்சியபூர்வமான வரலாற்றுவாதப் பார்வையை வெறும் மீட்புவாதமாகக் குறுக்குவதாகும். ஆனால், ஆண்டர்ஸனைப் பொறுத்தவரை அப்படி அவர் மொழியுணர்வை வர்ணிக்கும் நிலையிலும் அத்தகு உணர்வில் உருவாகும் தேசம் பிற மொழியினரை உள்ளடக்கும் சாத்தியமுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறார் (Imagined Communities பக்கம் 145.) தேசம் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்டதாகத் தோன்றினாலும் அது வரலாற்றில் பொதிந்தது என ஆண்டர்ஸன் வலியுறுத்தவது கவனிக்கப்படவேண்டும். இங்கு வரலாறு என்பது இறந்த காலமல்ல. மானுடத்தொகுதி தன் எதிர்காலத்தை வகுத்தெடுப்பது என்ற வரலாற்றுவாத வரலாறாகும். எனவேதான் ஆண்டர்ஸன் தேசமென்பது ஒரு மூடிய அடையாளமாக இல்லாமல் திறந்த அடையாளமாக இருக்க வேண்டும் என்ற விழைவை வெளிப்படுத்துகிறார். அண்ணாவும் திராவிட நாட்டை ஒரு திறந்த அடையாளமாக வரலாற்றுவாத நோக்கில் யோசித்தார் என்பதற்கு நிறைய சான்றுகள் தர முடியும். தமிழவன் அண்ணா “தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்களல்ல” என்று சொன்னார் என்பதும், அத்தகைய நோக்கினை ஆண்டர்ஸனுடன் தொடர்புபடுத்துவதும் இருவருக்குமே செய்யும் நியாயமல்ல. அண்ணா எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு சொன்னார் என்று தமிழவன் விளக்கவேண்டும். மொழியுணர்வு ஒரு கலாசார ஆற்றலாக மக்களை ஒன்றுபடுத்த வேண்டுமே தவிர பாசிச நோக்கில் தேங்கச்செய்வதாக இருக்கக்கூடாது. குணாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” போன்ற ஆபத்தான கருத்துக்களை தமிழவன் மறந்திருக்க மாட்டார் என நம்புகிறேன்.

அதுமட்டுமில்லாமல், ஆண்டர்ஸன் தமிழவனின் “அமைப்பியல்” நூல் வெளிவந்த 82 ஆம் ஆண்டிற்கு அடுத்த ஆண்டு தனது “Imagined Communities” நூலை வெளியிட்டார். 1991 ஆம் ஆண்டு அதன் திருத்திய பதிப்பை வெளியிட்டார். அதன் பிறகு இந்த பதினெட்டு ஆண்டுகளில் வரலாறு வெகுதூரம் கடந்து வந்துவிட்டது. இன்றைய நிலையில் நாம் புரிந்த கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. மொழியுணர்வு, தேசிய உணர்வு எல்லாமே மக்களிடையே பயன்மிகு ஆற்றலாக செயல்படலாம்; ஆனால்,ஒரு புதிய தேசிய அரசை உருவாக்கவேண்டும் என நினைப்பது பொருளற்றது. இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரச்சினையில் கூட எட்வர்ட் செய்த் ஒற்றை அரசு-இரட்டை தேச தீர்வையே (Bi-national One State Solution) தன் வாழ்நாளின் இறுதியில் பரிந்துரைக்கத் தலைப்பட்டார். தேசிய இன விடுதலையின் வரலாற்றுக் கட்டம் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. காரணம் தேசிய அரசின் அரசத்துவம் அல்லது இறையாண்மை (sovereignty) வடிவம் விரைவாக மாறி வருகிறது. தெய்வத்தின் அம்சம் கொண்ட பழைய அரசனுக்கு இருந்த அரசியலாற்றல் இறையாண்மை என்றும், நவீன தேசிய அரசின் ஆற்றல் அரசத்துவம் என்றும் கொண்டால் இப்போது அவ்வாற்றல் ஃபூக்கோ கூறிய நிர்வாகத்துவம் (governmentality) என்ற அளவிலேயே இருக்கிறது. அதனால் தேசிய அரசு என்பதற்கு இனி எந்த வரலாற்றுவாத உள்ளடக்கமும் கொடுப்பது கடினம். எந்த ஒரு தேசத்தினுள்ளும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் அல்லது தனித்த அடையாளம் கொண்டோர் தங்கள் கலாசார உரிமைகளுக்காகவும், நிர்வாக அளவில் தன்னாட்சிக்கும் (autonomy) போராடலாமேயொழிய தனி தேசிய அரசுதான் குறிக்கோள் என்று முனைவதில் எந்த பொருளுமில்லை. இருக்கும் தேசிய அரசுகளே முக்கியத்துவத்தை விரைவில் இழந்து வரும் நிலையில் இரத்தத்தைப் பெருக்கி உயிர்களைத் தியாகம் செய்து இன்னொரு அரசையும் இராணுவத்தையும் ஏன் உருவாக்க வேண்டும் என்றே யோசிக்க வேண்டும். இது குறித்து ஏராளமான ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தமிழவனும் கூட தனது “அமைப்பியல்” புதிய, விரிவாக்கிய பதிப்பில் Michael Hardt & Antonio Negri எழுதிய “Empire” என்ற நூலை குறிப்பிட்டுள்ளார். அந்நூலை பொறுத்தவரை அது ரோஸா லக்ஸம்பர்கை நினைவு படுத்தும் வகையில் தேசியமும், தேசிய அரசுகளும் முக்கியத்தவமிழந்த பிறகு சர்வதேச “வர்க்க” முரணை வரலாற்றின் அச்சாக முன்வைக்கிறது. ஆனால், இன்றிருக்கும் தேசிய அரசுகள் அப்படி கரைந்து போகுமா, அப்படி நேர்வது “ஆளப்படுவோர்க்கு” நன்மையா என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. தமிழவன் தனது மொழியுணர்வு, ஆண்டர்சன் குறித்த சிந்தனைகளை Empire நூல் குறித்த சிந்தனைகளுடன் இணைத்து எழுதினால் பயனுள்ளதாய் இருக்கும்.

இரண்டாம் அகிலம் முதல், ஆண்டர்சன், Empire நூல் ஈராக மார்க்ஸீயத்தின் முக்கிய கேள்வி என்ன? வரலாற்றில் முதலீட்டியம் ஏன் தேசியத்தன்மை கொண்டதாகவும், சர்வதேசியத்தன்மை கொண்டதாகவும் நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர் போல் இரட்டை வேடம் போடுகிறது என்பதுதான். இதற்கு மிக விரிவான பதிலை தந்தவர் இந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மறைந்த அறிஞர் Giovanni Arrighi என்பவராவார்.  இவரது “Long Twentieth Century: Money, Power and the Origins of our Times” (1994) என்ற நூலும், “Adam Smith in Beijing: Lineages of Twenty-First Century” (2007) என்ற நூலும் இன்றைய அரசியலையும், உலகின் எதிர்காலத்தையும் புரிந்து கொள்ள இன்றியமையாதவை. இவற்றை குறித்து தமிழில் விரிவாக எழுத திட்டமிட்டுள்ளேன் என்றாலும் அதற்கு முன்னால் சாத்தியமும், ஆர்வமும் உள்ள வாசகர்கள் ஆங்கில மூலத்தை வாசிக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிடுகிறேன். “பீஜிங்கில் ஆடம் ஸ்மித்” நூலின் இறுதியில் எதிர்காலம் குறித்த பகுதியில், எதிர்பாரா விதமாக ஒரு மனிதர் தோன்றுகிறார். அவர் எம்.கே.காந்தி. காரணம் முதலீட்டிய வளர்ச்சிக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடு. தனது ஆய்வுப்பொருளுக்கு அப்பாற்பட்டதானாலும் தவிர்க்கவியலாமல் ஜியோவானி அரிகி இதை சுட்டிக்காட்டுகிறார்.

ஹெகலிடமிருந்து மார்க்ஸ் பெற்ற வரலாற்றின் தத்துவம் குறித்த பார்வையை அனுசரித்து யோசித்தால் இன்று மானுடம் உலகளாவிய தன்மை பெறுவது ஒட்டு மொத்த அழிவின் சாத்தியத்தை காணும்போதுதான். இந்த ஆண்டு இறுதியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினை குறித்து விவாதிக்க கோபன் ஹேகனில் G-20 நாடுகள் கூடப்போகின்றன. முற்றிலும் புதிரான, நிச்சயமற்ற எதிர்காலத்தினுள் மானுடம் அடியெடுத்து வைக்கிறது. எந்த உள்ளூர் அரசியலும் உலகளாவிய வரலாற்று நிலைக்கு தொடர்பற்றது என கருத முடியுமா என்றும் கூட கூற முடியவில்லை. இந்நிலையில் தமிழவன் போன்ற இருமொழி சிந்தனையாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக மாறுகிறது. தமிழ் சிந்தனையாளர்களுக்கிடையே ஆரோக்கியமான விவாத மரபை வளர்த்தெடுப்பது கடினமானதானாலும், அவசியமானது என்றுதான் தோன்றுகிறது.

நவ.2009 ‘தீராநதி’ இதழில் வெளியானது.