கொலைநிலம்

கட்டுரைகள்

‘வடலி’ பதிப்பகத்தாரின் பதிப்புரையிலிருந்து:


துவக்குகளுக்கு அஞ்சி
கருத்துகளைச் சொல்ல முடியாது
மரணித்தவர்களுக்கும்
மௌனித்தவர்களுக்கும்
இந்நூல் காணிக்கை…

லங்கைத் தீவில் ஒரு சிறிய இனத்தின் உரிமைச் சமரை உலகப் பேரினவாதங்கள் துவக்குகளின் முனையில் ஒடுக்கியிருக்கின்றன. ராஜபக்சே சிங்களத்தின் நவீன துட்டகைமுனுவாக உருவெடுத்திருக்கிறார். தீவின் தமிழ் பேசும் மக்களிற்கான அரசியல் பேரம் பேசும் சக்தி வெற்றிடமாக இருக்கும் நிலையில் எதிர்காலம் என்பது மிகுந்த கவலை அளிப்பதாய் உள்ளது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகான இக்காலகட்டத்தில் பிரபாகரன், ராஜபக்சே என்ற இரண்டே சதுரங்களுக்குள் எல்லாமும் அடக்கப்படுகின்றன. அல்லது அந்தக் கட்டங்களுக்கு வெளியே வருவதை தமிழ்மாயை மனம் விரும்பவில்லை. முதலில் நாம் இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும். நடந்து முடிந்த போரில் தமிழ் வீரம் தோற்றிருக்கிறது. இவற்றை ஒப்புக்கொள்ளாமல் வெறுமனே மீட்பர் வருவார் என்பது மாதிரியான நம்பிக்கையூட்டும் பிரச்சாரகர்களின் பின்னால் போவது எவ்வகையிலும் எதிர்கால அரசியலுக்கு நன்மை சேர்க்காது. எனவே ஈழ மக்களின் எதிர்கால நலன்கள் மீது அக்கறைகொண்டிருக்கும் நாம் இனிமேலான ஈழத்தமிழ் அரசியலின் சிந்தனைப் போக்கைப் பேசியாக வேண்டியிருக்கிறது. அப்படிப் பேசுவது என்பது விருப்பு, வெறுப்புகளிற்கு அப்பாற்பட்டதாய் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கமாய்க் கொண்டதாய் இருக்க வேண்டும்; அதற்கு முதலில் நம்மிடமிருக்கும் முத்திரை குத்தும் இயந்திரங்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி முன்செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம்.

எப்போதும் போர்க்கள எல்லைகளில் இருக்கும் சூன்யப் பிரதேசம் போல ஒரு மௌனமான, அதேநேரம் மிகவும் அழுத்தம் நிறைந்ததுமான ஒரு சூன்யவெளி ஈழத்தமிழ் அரசியல் சூழலில் உண்டு. அதை எதிர் கருத்தியலாளர்களோடு கைகுலுக்கி உரையாடுவதன் மூலமே கடக்க முடியும். அதன் மூலம் மட்டுமே இன்றைய ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியலை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும். இதன் பொருட்டுத் தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள சமரசமற்ற சக்திகளுடன் நாம் மனம் திறந்த உரையாடலை நிகழ்த்த வேண்டும். அதன் ஒரு பகுதியாகவே ஈழத் தமிழ் சமூகத்தின் உளவியல் சமநிலை குலைந்துகிடக்கும் இச்சூழலில் இந்தச் சூன்யவெளியைக் கடக்குமொரு முதற் காலடியாக வடலி இந்த உரையாடலை ஒழுங்கு செய்தது.

தமிழகத்தின் தமிழ் அரசியலில் சமரசமற்ற சக்தியாகச் செயற்படுபவரும் ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் காலம்தோறும் கவனம் கொண்டுள்ளவருமான தோழர் தியாகுவையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் புலிகளின் அரசியல் மீது கடுமையான விமர்சனங்களை நீண்டகாலமாகவே முன்வைத்துக்கொண்டிருப்பவருமான தோழர் ஷோபாசக்தியையும் இவ்வுரையாடலுக்காகச் சந்திக்க வைத்தோம்;. இந்த உரையாடலானது எந்த முடிந்த முடிவுகளையும் முன்வைக்கவில்லை. மாறாகத் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்த முரண் அரசியல்கள் ஒரே மேடையில் அமர்ந்து சகோதரத்துவத்துடன் பேச முடியும் என்பதற்கான தொடக்கமாக இதைக் கொள்ளலாம். இதற்கான வாசலே இதுவரை இழுத்துச் சாத்தப்பட்டிருந்தது என்பதைக் கவனத்திற் கொண்டே நாம் இதைப் பார்க்க வேண்டும்.

இந்நூல் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டும் பின்னர் உரையாடலாளர்களால் தத்தமது கூடுதல் குறிப்புகள் எழுதிச் சேர்க்கப்பட்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. தமது நேரத்தைச் செலவிட்டு இந்த உரையாடலை நிகழ்த்திய ஷோபாசக்தி, தியாகு இருவருக்கும் வடலியின் நன்றிகள். மற்றும் இந்நூலுருவாக்கப் பணிகளிற்கு எமக்கு ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் வழங்கிய பத்திரிகையாளர் பாரதி தம்பி, கவிஞர் சுகுணா திவாகர் ஆகியோருக்கும் எமது நன்றிகள். இந்நூல் தொடர்ந்தும் இப்படியான உரையாடல் வெளிகளைத் திறக்குமாயின் மகிழ்சி. தொடர்ந்து உரையாடுவோம்.

-‘வடலி’
டிசம்பர் 2009.

நூல்  கிடைக்குமிடம்: வடலி பதிப்பகம்
13/54, 10-வது குறுக்குத் தெரு,
டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம்,
சென்னை-24
E-mail: [email protected]

தொடர்பு எண்: 9003086011, 044-43540358