தொடரும் துரோகம்

வ.அழகலிங்கம்

:தோட்டத் தொழிலாளர்களது வாழ்வாதாரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்காத தமிழ்த் தேசியவாதிகள்

-வ.அழகலிங்கம்
தொடரும் துரோகம்
இலங்கையில் அரசுடமையாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களது தற்போதைய நாளாந்தச் சம்பளம் 195 ரூபாவாகும். அது மூன்று அமெரிக்க டொலர்களுக்கும் குறைவானதாகும். தோட்டத் தொழிலாளர்கள் 100 ரூபா சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்தார்கள். கொம்பனி நிர்வாகங்களோ, உலகமே புரண்டு விழுந்தாலும் 250 ரூபாவுக்கு மேல் சம்பளத்தை உயர விடுவதில்லை என்று அடித்துக் கூறினார்கள். போராட்டம் வெடித்தது. 14 நாட்களாகப் போராட்டம் நீடித்தது. 14 நாட்கள் வேலை நிறுத்தத்தால் 2.9 பில்லியன் ரூபா (US$ 26.9 million)தோட்டப் பொருளாதாரத்திற்கு இழப்பேற்ற்பட்டது. 2004 ஆண்டு கடைசிச் சம்பள உயர்வு ஏற்பட்டபோது 3826 இருந்த வாழ்க்கைச் செலவுப் புள்ளி இப்பொழுது 4998 ஆக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கைப்படி தனியார் தோட்டங்களில் நாளாந்தச் சம்பளம் 300ரூபாவாகும். 2004 ல் பணவீக்கமானது 7.6 வீதமாயும், 2005 ல் 11.6 வீதமாயும் அதிகரித்து 2006ல் பணவீக்கம் 12 வீதத்தையும் தாண்டியுள்ளது. உண்மையிலேயே இப்படியான விலைவாசி ஏற்றச் சூழலில் தோட்டத் தொழிலாளர்களால் வாழவே முடியாது.

அரசாங்கமானது 35 ரூபாவை மட்டுமே சம்பள உயர்வாகக் கொடுத்துள்ளது. இந்த 35 ரூபாவுக்கு கிலோ அரிசியோ இரண்டு தேங்காய்களோ வாங்க இயலாது. ஒரு கிலோ சீனியின் விலை ரூபா62, ஒரு கிலோ மாவின் விலை ரூபா42, 450 கிராம் பாண்துண்டின் விலை ரூபா20, குழந்தைகளுக்கான பால்மா பெட்டியின் விலை ரூபா 210. ஒரு கைக்குழந்தைக்கு மாதம் குறைந்தது நான்கு பால்மாப் பெட்டிகளாவது வேண்டும். தொண்டமான் தொழிற்சங்கத்திற்கு மாதாந்தம் ரூபா 45 கட்டணமாகச் செலுத்த வேண்டும். சந்திரசேகரன் தொழிற்சங்கக் கட்டணம் மாதாந்தம் ரூபா 60!

2005இல் பாராளுமன்றத்தில் கொணரப்பட்ட The Budgetary Relief Allowance of Workers Act (BRAWA) வாழ்க்கைத் தரவீழ்சியை ஈடுசெய்வதற்கென்ற சலுகையாக ஒவ்வொரு தனியார்துறைத் தொழிலாளர்களுக்கும் 1000ரூபா சலுகை வழங்கப் பட்டது. இது கூடத் தோட்டதொழிலாளர்களுக்குச் செல்லுபடியாகாது. பிரஜா உரிமை இல்லாத காலத்தில் இப்படிப் புறக்கணிப்பு இருந்ததை அவர்கள் ஏதோ விதத்தில் சகித்தார்கள். அதே புறக்கணிப்பும் வஞ்சகமும் இப்பொழுதும் நீடிப்பதை ஏன் பொறுக்க வேண்டும்?

அரசாங்க புள்ளிவிபரங்களின்படியே தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டின் கீழ்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த மருத்துவ வசதி கூட வழங்கப்படுவதில்லை. அவர்களிலேதான் ஆகக் கூடிய இறப்பு விகிதமும் நிகழுகின்றது. இந்த வேலை நிறுத்தத்தால் அவர்கள் அரைவாசிக்கு மேலான மாதாந்தச் சம்பளத்தை இழந்ததால் அவர்கள் நத்தார் பண்டிகைக்கான மலிவு விற்பனைக் கொள்வனவுகளை இம்முறை செய்யாது விட்டனர். வருடப் பிறப்போடு பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணம் வாங்கும் சுமையும் சேர்ந்தே வந்துள்ளது. குழந்தை களின் (நேர்சறிக்கும்)பாலர்வகுப்புக்குப் போவதற்கும் காசு கட்ட வேண்டும்.

தொடரும் துரோகம்
மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையான ‘மகிந்தாவின் சிந்தனையில்’ இலங்கை மக்கள் முழுப்பேருக்கும் வளமான வாழ்வு, எல்லையற்ற மகிழ்ச்சி, தரமான வாழ்க்கை, வறுமையில் இருந்து மீட்சி, பெண்களும் ஆண்களும் முன்னேறுவதற்காக நிறையச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல், உற்பத்தித் திறனோடு கூடிய வேலை, நல்ல வேலை நிலமைகள், சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு, மானிட கௌரவம் மிளிரும் என்றெல்லாம் பொழிந்து தள்ளப்பட்டது. அதனோடு தோட்டத் தொழிலாளர்களும் மற்றய இலங்கையரோடு சரிநிகராக நிமிர்ந்து நிற்கும் நிலமை ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இப்பொழுதோ இருந்ததையும் கெடுத்தானாம் இளையாம்பி மேத்திரி என்ற கதையாகிவிட்டது. இலங்கையின் தேசியச் செல்வத்தில் அதிகூடிய பங்கை, பரம்பரை பரம்பரையாக உற்பத்தி செய்த அந்த மக்களது வாழ்வு இப்படியாகிவிட்டது.

தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒவ்வொரு போராட்டத்தையும் நன்றாகத் திட்டமிட்டுத் தயாரித்தே செய்வார்கள். வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதற்கு இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன்னரே தோட்டம் எங்கணும் ஆர்ப்பாட்டங்களும் மறியற் போராட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. தோட்டம் முழுவதும் போராட்டத்திற்கு ஒத்தாசை வழங்குவதைச் சமிக்ஞை செய்யுமுகமாக கறுப்புக் கொடிகள் பறக்கவிடப் பட்டன.

6 டிசெம்பர் 2006ல் டிக்கோயா, டன்பார், கற்றன் தோட்டங்களில் உள்ள ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து டிக்கோயா நகரத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றைச் செய்தார்கள். அவர்கள் வத்தளாவளைத் தோட்ட நிர்வாகத்தின் காரியாலயத்திற்கு ஆர்ப்பாட்டமாகப் போக முனைந்த பொழுது பொலிசாரால் தடுக்கப்பட்டு அவர்களது ஆர்ப்பாட்டக் கொடிகளும் பறிக்கப் பட்டன. இருந்தபோதும் தொழிலாளர்கள் மலைகளின் குறுக்கு வழிகளால் ஏறி இறங்கித் தோட்டக் காரியாலயத்தை அடைந்து அங்கே ஆறுமுகம் தொண்டமானின் கொடும்பாவையை எரித்தார்கள். ‘துலைவர்’ தொண்டமான் தமது கூலிக் கோரிக்கையை 270 ரூபாவாகக் தொழிலாளர்களைக் கேளாமலேயே குறைத்துவிட்டதால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கொடும்பாவையை எரித்தார்கள்.

அதே நாள் Osborn, Ann Field தோட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் பொலிசால் தடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன. ‘பொங்குதமிழ்’ ஆர்ப்பாட்டங்களுக்கு வாழ்த்தி வரங்கொடுத்த பொலீஸ், தொழிலாளர்களின் அமைதியான, பயங்கரவாதமில்லாத போராட்டங்களை ஒடுக்கியது. மறுநாள் தமது போராட்டத்திற்கு ஆதரவாகக் கடையடைப்புச் செய்யும் படி ஹற்றன் நகரில் பலநூறு தொழிலாளர்கள் கோரினார்கள். ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் ஹற்றனிலே ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்தத் திட்டமிட்ட செயல்களானது அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கத் தலைமைகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடனே அரசாங்கம் தொழிலாளர்களை ஒடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வந்தது. இச் சட்டத்தின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடை செய்யலாம். தொழிலாளர்களின் கண்ணிலே மண்ணைத் தூவுவதற்காகப் புலியை ஒடுக்கவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற நாடகம் ஆடப்பட்டது.

டிசெம்பர் 7-8 ல் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் தொழில்மந்திரி அத்தவுடா செனிவரத்தினா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒரு பலாபலனையும் தரவில்லை. அன்று எட்டியாந்தோட்டையில் இனந் தெரியாத ஆயுததாரிக் குண்டர்படை புகுந்து தொழிலாளர்களை கொடூரத்தனமாகத் தாக்கிப் பல தொழிலாளர்களைக் காயப்படுத்தியது. வெள்ளிக்கிழமை நிவித்திகலையிலுள்ள கொலம்பாகமத் தோட்டத்துள் ஆயுதந் தாங்கிய குண்டர்படை சென்று வேலைநிறுத்தம் செய்தால் கொலை செய்வோமெனத் தொழிலாளர்களை மிரட்டியது.

நாளுக்கு ரூபா 195 சம்பளம் பெறும் 500 000த்துக்கும் மேலான தேயிலை இரப்பர் தோட்டத் தொலாளர்கள் தொழிற்சங்கத் தலைமையின் காட்டிக்கொடுப்பினால் தமது இரண்டு கிழமைகள் நீடித்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மேல்மாகாண மக்கள் முன்னணி, இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து போரிட்டன.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் புகையிரதப் பாதைகளையும் மற்றும் போக்குவரத்தையும் தடைசெய்யுமுகமாக மறியற் போராட்டங்களை நடாத்தினர். Norwood, Puliyawatte, Dickoya, Bogawantalawa, Saami Malai, Maskeliya, Norton Bridge, Wattawala, Kottagala, Talawakelle, Dayagama west, Chandirikamam, Wawelli, Goodwill, Hamwood, New Portmore, Torrington, Albion, Belmoral, Nanu Oya Desbord, Clarendon, Glaxo, Radella, Uda Radella, Panawatte, Leyland, Algolla, Udappana, Abila, Wee Oya, Polidagama Ethoolaploa, Karuppana,Lavella, Kelani, Giriboruwa, Ganeppalla,Sorghum, Kalugalla, Nifmel Port, Rosaylle, Sanguwary, Delta, Attabage, New Peacock, Roxley, Old Peacock, Nayapana, Stephan போன்ற தோட்டங்களில் கூட்டாக மிகுந்த ஐக்கியத்தோடு வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் அவரது சகாக்களும் தொழிலாளர்களைப் பிச்சைச் சம்பளத் தீர்வை ஏற்கும்படி நிர்ப்பந்தித்து அவசர அவசரமாக கூட்டு ஒப்பந்தம் ஒன்றை 19.12.2006ல் ஜனாதிபதி முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

முற்பகல் 11 மணியளவில் ஒன்றுகூடிய முதலாளிகள் சம்மேளனமும் பெருந்தோட்டத் தெழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சம்பளம் 35 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் 260 ரூபாவைச் சம்பளமாகப் பெறுவர். இது தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பளமானது 3 அமெரிக்க டொலர்களிலும் குறைவானதாகும். இலங்கையில் சராசரி ஒரு மணித்தியாலக் கூலி- 0.31 அமெரிக்க டொலர் என்றே சர்வதேச நாணயசபையின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த உடன்பாட்டையடுத்து கடந்த 14 நாட்களாக 300 ரூபா சம்பளம் வழங்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் துரோகம்

மலையகத்தில் குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்களே பணிக்குத் திரும்பியுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டதையடுத்து இன்று அற்ப அளவிலான தொழிலாளர்கள் பணிகளுக்குச் சென்றுள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் தொழிலாளர்கள் பணிகளுக்கு திரும்பவில்லையென்றும் கூறப்படுகிறது. கண்டி கலகா குரூப்பைச் சேர்ந்த நான்கு தோட்டப் பிரிவுகளின் தொழிலாளர்கள் நேற்றைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இதுவரை வேலைக்குத் திரும்பவில்லை. இதேவேளை நேற்றைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொகவந்தலாவை நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. பொகவந்தலாவை செல்வகந்த தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியாயமான சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி இரு வாரங்களுக்கு மேலாக தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த போதிலும் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கோரியதிலும் பார்க்க ஆகக் குறைந்த பேய்க்காட்டும் பிச்சைச் சம்பள உயர்வே கிடைத்தது. தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கட்டளையிட்டபோதும் தொழிலாளர்கள் தொடர்ந்து தமது போராட்டப் பிரச்சாரத்தைத் தொடுக்கின்றனர்.

புதிய உடன்படிக்கையின்படிக்கு இதுவரைகாலமும் 135 ரூபாவாக இருந்த சம்பனம் 35 ரூபாவால் கூட்டப் பட்டுள்ளது. மேலதிக மாறும் சலுகை 30 ரூபாவாற் கூட்டப்பட்டு 90 ரூபா ஆக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சனி, ஞாயிறு, போயா மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களுக்கும் நோய்வாய்ப்பட்டு வேலைக்குப் போகாது விட்டாலும் வழங்கப்படமாட்டாது. பெரும்பான்மைத் தோட்டத் தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதால் 75 வீதமானவர்கள் இந்த சலுகையைப் பெறமாட்டார்கள். மாதத்தில் 75 வீதத்திற்குக் குறைந்து வேலைக்குப் போனால் இந்த மேலதிக சலுகை வழங்கப்பட மாட்டாது. பெரும்பாலும் குழந்தைகளைப் பெற்ற பெண்களால் மாதத்தின் 75 வீதமான நாட்களுக்கு வேலைக்குப் போவது மிகக் கடினமாகும். அதுவும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் நாளொன்றுக்கு 18 கிலோகிராமுக்கு மேலாகக் கொழுந்து கிள்ளினால் மாத்திரம்தான் ரூபா90 சலுகையாக வழங்கப்படும்.

ஜனாதிபதி முன்பாக பிச்சைச் சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுக் காட்டிக்கொடுக்கப்பட்டு வேலைக்குப் போகும்படி தொழிற்சங்கத் தலைமைகள் அறிவித்ததுதான் தாமதம் ஹற்றனில் உள்ள தொழிலாளர்கள் இதைக் கண்டித்துள்ளனர். அதற்கு எதிர்ப்புக் காட்டுமுகமாகத் தாம் வேலைக்குப் போகப் போவதில்லையென்று கூறியுள்ளனர். மற்றய மலைநாட்டுப் பிரதேசங்களிலும் இதேமாதிரியான கண்டனத்தையே தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

ஆறுமுகம் தொண்டமானே அந்த வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கோரியவராகும். அதற்கெதிராக சந்திரசேகரனோ மற்றய தொழிற் சங்கத் தலைமைகளோ ஏதும் கூறியது கிடையாது. இந்தக் காட்டிக்கொடுப்பை எதிர்பார்த்தே ஆறுமுகம் தொண்டமானுக்கும் சந்திரசேகரனுக்கும் மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டன. மந்திரிப் பதவியை ஏற்கும்போது அதனால் தாம் தொழிலாளர்களது பிரச்சனையை இலகுவில் பேசித் தீர்க்கலாம் என்றே இவர்கள் இருவரும் பதவியேற்கும்போது அன்று சொன்னார்கள். வாழத்தெரிந்த இந்த இரண்டு கனவான்களும் வன்னியாத்திரை சென்று, தமிழ்த்தேசிய அரசியற் கவிபாடி, பரிசுகள் பெற்று, தோட்டத் தொழிலாளர்களைத் தமிழ்ப் பிற்போக்குத் தேசியத்தோடு இணைக்க எடுத்த முயற்சிகள் கடுகளவும் கைகூடாமற் போகவே, கரணம் அடித்து ராஜபக்சவின் விசுவாசமான மந்திரியாக மாறிய மந்திரசக்தி படைத்தவர்கள் இவர்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மந்திரிசபைக் கூட்டத்தில் ‘அரசாங்கம் நிதிநெருக்கடியில் உழல்வதாகவும் வேலைநிறுத்தத்தை எப்பாடுபட்டும் மீளப் பெறவேண்டும்’ என்றும் ஜனாதிபதி, சந்திரசேகரனை வேண்டிய செய்தியும் ஏதோவிதத்தில் தொழிலாளர்களுக்குத் தெரிந்துள்ளது. மந்திரிசபைக் கூட்டம் முடிந்ததுதான் தாமதம் UPF தலைவர் சந்திரசேகரன் ஹட்டனில் தொழிற்சங்கப் பிரதிகள் கூட்டத்தைக் கூட்டிப் பிரதித் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவைப் பேசவிட்டுத் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி தூண்டச் செய்துள்ளார். ஹட்டன் கூட்டத்திலே தொழிலாளர்கள் உடன்பாட்டுக்கு வராததோடு கோபமும் அடைந்துள்ளனர். மேர்வின் சில்வாவைத் தொழிலாளர்கள் திட்டித் தீர்த்து வாய்பொத்தச் செய்ததையடுத்து சந்திரசேகரன் தலையிட வேண்டி வந்தது. தொழிலாளர்கள் 300 ரூபா சம்பள உயர்வு தந்தாலொழிய வேறெதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று கூறிவிட்டனர்.

இருந்தபோதும் சந்திரசேகரனும் தொண்டமானும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று பிடிவாதமாக நிற்கின்றனர்.

இது சம்பந்தமாக ஜேவிபி National Trade Union Centre (NTUC) ல் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காகத் தேசியத் தொழிற்சங்க நடுவத்தின் தலைவர் லால் கந்த தலைமையில் கூடியது. லால் கந்த தொழிற்சங்கத் தலைவரோடு பாராளுமன்ற அங்கத்தவருமாகும். அந்தக் கூட்டத்திலே தோட்டத் தொழிலாளர்களின் 300 ரூபா சம்பளக் கோரிக்கையை முழுமையாகக் கொடாது விட்டால் இலங்கைத் தீவு முழுவதற்குமான வேலைநிறுத்தத்தைக் கோரப் போவதாக அங்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தோடு சேர்ந்திருக்கும் JVP நாடுதழுவிய வேலைநிறுத்தத்தைக் கோருமா என்பதைக் காத்திருந்துததான் பார்க்க வேண்டும். இதன் பின்பு JVP தொழிற்சங்கமான அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கமும்(ACPWU), தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் (WUF)சேர்ந்து ஓர் பத்திரிகையாளர் மகாநாடு நடாத்தினார்கள். அதிலே தோட்டத் தொழிலாளர்களது போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த சந்திரசேகரனையும் தொண்டமானையும் திட்டித் தீர்த்தார்கள். ஆனால் அங்கே ஜே.வி.பி தேசம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. ஜே.வி.பி அங்கத்தவரும் ACPWU தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் ‘சம்பள அதிகரிப்பு போதாதுதான் ஆனாலும் தொழிலாளர்க்கு வெற்றி’யென்று பிரகடனப்படுத்தினார். இந்தப் பத்திரிகையாளர் மகாநாட்டுக்குப் பிறகு ஜே.வி.பியின் தொழிற்சங்கத் தலைமையானது ‘தங்களுக்கு மாற்றுவழி ஏதும் இல்லை’யென்று தமது தொழிற்சங்கத் தொழிலாளர்களுக்குக் கூறியுள்ளது. ‘தொண்டமானும் சந்திரசேகரனும் காட்டிக் கொடுத்து ஜனாதிபதியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராகத் தாம் நீதிமன்றத்தில் வழக்கு வைக்கப் போவதாக ஜே.வி.பியினர் இப்போது கூறுகின்றனர். ஆனால் ஜே.வி.பி தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொழிற்சங்கங்களைத் தோட்டத் தொழிலாளர்களது போராட்டத்திற்கு ஆதரவாக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடவில்லை என்பதே உண்மை. இருந்தபோதும் ஒரு காலத்தில் தோட்டத் தொழிலாளர்களை இந்தியத் தேசவிஸ்தரிப்பாளர்களென்று கூறி அரசியல் செய்த ஜே.வி.பி தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களையும் ஏற்படுத்தி அவர்களது போராட்டத்தைச் சிங்கள தொழிலாளர்களோடு இணைக்கும் சம்பவமானது வர்க்கப் போராட்டத்தின் எதிர்காலத்தில் தமிழ்- சிங்களத் தொழிலாளர்கள் இணைவதன் இயற்கையான விதியையே புலப் படுத்துகிறது. தொழிலாளர்களது வர்க்க பாரம்பரியம் அதுவாகும்.

அவசர அவசரமாக ராஜபக்ச அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களது மிகமிக நியாயமான சம்பள உயர்வுப் போராட்டத்தை ஏன் முடிவுக்குக் கொண்டு வந்ததெனில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மற்றய தொழிலாளர்களும் போராட்த்தில் இறங்கும் சூழலே காணப்படுகிறது. ஏனெனில் இலங்கையின் விலைவாசி விஷம்போல ஏறி வாழ்க்கைத்தர வீழ்சியும் சகிக்க முடியாததாகிவிட்டது. 1 டிசெம்பர் 2006 ல் தொடங்கி 5 நாட்களுக்கு ‘ரெலிக் கொம்’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். சென்ற கிழமைதான் கட்டுநாயக்காவிலுள்ள சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள். மின்சக்தித் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் மறுசீரமைப்புக்கு எதிராகவும் போராடப் போவதாகச் சூழுருரைத்துள்ளனர். 14 டிசெம்பர், 200 க்கு மேற்பட்ட பேரதனைப் பல்கலைக் கழக மாணவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு காட்டுமுகமாகப் பேராதனை வளாகத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பொதுக் கூட்டமொன்றையும் நடாத்தியுள்ளனர். அதிலே அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையான 300 ரூபாவையும் முழுமையாகக் கொடுக்கும்படியே கோரினார்கள். அவர்கள்” தொழிற்சங்கங்கள் செத்துவிட்டன!, தொழிலானர்களைக் காட்டிக் கொடுக்காதே!,தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல!!’ என்பது போன்ற சுலோகங்களைத் தாங்கி நின்றனர். இதிலே மேல்மாகாண மாணவர் சங்கமும் கலந்துகொண்டது. அதன் செயலாளர் சந்திரமோகன் உரையாற்றுகையில் வரலாற்றில் இதுவே முதற் தடவையாக மாணவர்கள் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என்று கூறினார். அவர் இ.தோ.கா வினர் வீடு வீடாகச் சென்று வேலைக்குப் போகும்படி பிரச்சாரம் செய்ததாகவும் கூறினார். இ.தொ.கா வின் காட்டிக் கொடுப்பு அந்தமட்டத்திற்கு இருந்தது. இம்முறை வேலை நிறுத்தத்தில் பலநூறு சிங்களத் தொழிலாளர்களும் சேர்ந்தே வேலைநிறுத்தம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் ராஜபக்ஸ அரசாங்கமானது கதிகலங்கியுள்ளது.

இன்றைய இலங்கை நிலமையானது ஓர் வெடிமருந்துப் பீப்பா போலவேயுள்ளது. சிங்கள- தமிழ்- முஸ்லீம் தோட்டத் தொழிலாளர்கள் ஒருங்கே ஐக்கியப்பட்டுப் போராடும் நிலமையே காணப்படுகிறது.தோட்டத் தொழிலாளர்களது வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் பொலீஸ்மா அதிபர் விக்டர் பெரேரா ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளிக்கையில் தான் பெரும் பொலிஸ் படையைப் போராட்டம் நடைபெறும் தோட்டங்களுக்கு அனுப்பப் போவதாகக் கூறினார். அவர் சொன்னது போன்று தோட்டப் பிரதேசங்களிலே போலீஸ் ரோந்தும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களே இலங்கையில் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ள, சுரண்டப்பட்டுள்ள தொழிலாளர்களாகும். பிரித்தானியக் காலனியக் காலத்திலிருந்தே அவர்கள் லயன்களிலே வாழ்கிறார்கள். சுகாதாரக் கேடு! ஆகக் குறைந்த வாழ்க்கை தரம்! மற்றய மக்களோடு இரண்டறக் கலக்கும் வாய்ப்புகள் இல்லை!! ஆனால் தோட்டங்களோ இலாபத்திலே கொழிக்கின்றன. வத்தாவளைத் தோட்டத்தில் கடந்த 6மாதத்தில் 140 மில்லியன் ரூபா நிகர இலாபமாகும். அகலவத்தைத் தோட்டத்தில் கடந்த 9 மாதத்தில் 90 மில்லியன் ரூபா நிகர இலாபமாகும். பலாங்கொடத் தோட்டத்தில் கடந்த 9 மாதத்தில் 123 மில்லியன் ரூபா நிகர இலாபமாகும். கொட்டாகலத் தோட்டத்தில் கடந்த 6 மாதத்தில் 222 மில்லியன் ரூபா நிகர இலாபமாகும். இப்படியே பெருந்தோட்டப் பொருளாதாரம் லாபத்தில் ஓடத் தோட்டத் தொழிலாளர்கள் வரவர ஓட்டாண்டிகளாகத் தேய்கிறார்கள். இலாபம் என்பது உபரி உழைப்பைச் சுரண்டுவதேயொழிய வேறில்லை.

இந்தக் காட்டிக் கொடுப்பை, ஏதோ ஜனாதிபதி தொழிலாளர்களுக்கு வேண்டிய சலுகையை வழங்கி விட்டதாகவும், தொழிலாளர் பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டதாகவும் EPDP யின் வானொலியான இதயவீணையும் EPRLF வின் இணையத்தளமும் புளுகித் தள்ளித் தமது தோட்டத் தொழிலாளர் விரோதத்தை வழமைபோலக் காட்டியுள்ளனர். TBC வானொலிக்கும் அதன் அரசியல் ஆய்வாள வித்துவான்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுக்கான போராட்டம் ஒரு பொருட்டேயல்ல. அவர்களுக்கு ‘தமிழீழத்தி’லேயுள்ள வன்னி இரணைமடுக் குளத்தில் சித்தெறும்பு வயிறு முட்டத் தண்ணீர் குடிப்பதுதான் பெரிய செய்தியும் பெரிய அரசியலுமாகும். EPDP யின் ‘இதயவீணை’ வேலைக்குப் போக மறுத்துப் போராட்டத்தைத் தொடரும் போராளிகளைக் குழப்பவாதிகள் என்றே மீண்டும் மீண்டும் சொல்கிறது. திரு. இரத்தினசபாபதியின் மறைவுடன் திடீரென்று மார்க்ஸியவாதிகளாக ஞானஸ்னானம் எடுத்தவர்களும் தோட்டத் தொழிலாளரை ஆதரிக்காமல் முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரிக்கும் கொடுமையை நாம் பார்க்க வேண்டியுள்ளது. ‘திரு. இரத்தினசபாபதி தமிழ் தேசியத்தைத் தோட்டத் தொழிலாளரோடு இணைத்தார்’ என்று சொன்னவர்கள்கூட, ‘அவர் ஈழப் போராட்டத்தை ஒரு சமுதாயப் புரட்சியாக மாற்றப் போராடினார்’ என்று சொன்னவர்கள் கூடத் தோட்டத் தொழிலாளருக்கு ஆதரவு காட்டவில்லை என்பதை அவர்களது பிரச்சாரத்திலிருந்து கண்டுகொள்ளாலாம். என்ன அடிப்படையில் ராஜபக்ஸ தொழிலாளர் பிரச்சனையைத் தீர்த்துவிட்டார் என்று இவர்கள் பிதற்றுகிறார்களோ தெரியாது! ஏழை அழுத கண்ணீர் இவர்களைச் சும்மாயும் விடாது!!

24 thoughts on “தொடரும் துரோகம்

  1. இன்று ரி. பி. சி. யில் பிற்பகல் 3 மணிக்கு ” பசித்த பறையனுக்கு ………….” என்று ஒரு சாதிவெறிப் பழமொழி சொன்னார்கள். கேட்டீர்களா? தோழர் !

  2. //தோட்டத் தொழிலாளர்களது வாழ்வாதாரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்காத தமிழ்த் தேசியவாதிகள்
    ///
    தலையங்கத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பைக் காணவில்லையே! ஒருவேளை வழமைபோல் திரிக்கும் வேலையில் ஆரம்பித்து பிழைத்து விட்டதோ?

    இதை வாசிக்கும் போது, முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தரும் ரஷ்ய பிரச்சார ஏடுகள் வாசிப்பது போல் இருந்தது!

    //மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையான ‘மகிந்தாவின் சிந்தனையில்’ இலங்கை மக்கள் முழுப்பேருக்கும் வளமான வாழ்வு, ….///
    இதை ஏனண்ணை நம்பினியள்? இனிமேலில்லை எண்ட சிங்கள வெறியனும் நம்பாத ஒண்டு இது. ஆக ஈ.பி.டி.பி, ராமராசு கூட்டம் தான் நம்பினது. அதுகளுக்கும் வேற வழி இல்லை!!!

    //அன்று எட்டியாந்தோட்டையில் இனந் தெரியாத ஆயுததாரிக் குண்டர்படை புகுந்து தொழிலாளர்களை கொடூரத்தனமாகத் தாக்கிப் பல தொழிலாளர்களைக் காயப்படுத்தியது.////
    நல்ல காலம் வன்னிப்புலியள் தான் இந்த இனந்தெரியாத குழு எண்டு சொல்லாமல் விட்டியள்.

    //தேயிலை இரப்பர் தோட்டத் தொலாளர்கள் தொழிற்சங்கத் தலைமையின் காட்டிக்கொடுப்பினால் தமது இரண்டு கிழமைகள் நீடித்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மேல்மாகாண மக்கள் முன்னணி, இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து போரிட்டன./
    //
    இரண்டு வசனத்துக்குமிடையில ‘லொஜிக்’ உதைக்கிதே!!!

    //வாழத்தெரிந்த இந்த இரண்டு கனவான்களும் வன்னியாத்திரை சென்று, தமிழ்த்தேசிய அரசியற் கவிபாடி, பரிசுகள் பெற்று,…./
    இணையேக்க தொழிலாள வர்க்கத்துக்காக யாழ் மேலாதிக்க சக்திகள் கைவிட்டுவிட்டனர், அதனால் தான் சிங்கள தொழிலாள வர்க்கத்துடனும் அவர்களின் உண்மையான ஆதரவாளன் ராஜபக்ஸவுடனும் இணைந்தார்கள் எண்டும் புத்திசாலித்தனமான முடிவெண்டும் பலர் கவிபாடிப் பரிசும் பெற்றார்களே!!!!

    //அரசாங்கமானது 35 ரூபாவை மட்டுமே சம்பள உயர்வாகக் கொடுத்துள்ளது. இந்த 35 ரூபாவுக்கு கிலோ அரிசியோ இரண்டு தேங்காய்களோ வாங்க இயலாது. ஒரு கிலோ சீனியின் விலை ரூபா62, ஒரு கிலோ மாவின் விலை ரூபா42, 450 கிராம் பாண்துண்டின் விலை ரூபா20, குழந்தைகளுக்கான பால்மா பெட்டியின் விலை ரூபா 210. …/
    அண்ணை, எல்லாம் புலிக்கும்பலும் யாழ்ப்பாண குட்டி முதலாளியளும் செய்யிற வேலை தான். சும்மா சண்டை பிடிக்கிறதால ஏழையளின்ர காசு குண்டு வாங்க பயன்படுது. அதுக்கு ஏன் அரசாங்கத்தை குற்றம் சொல்லுறியள்??

  3. //ஏழை அழுத கண்ணீர் இவர்களைச் சும்மாயும் விடாது!! ///

    கடைசியா , நீங்களும் பழைய பம்மாத்து தத்துவம் உதிர்க்க தொடங்கி விட்டிட்டியள். உதைத்தான் முந்தி ஊரிலையும் ‘ஏன் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கவில்லை’ எண்டு கேட்டவங்களுக்கு சொல்லிப்போட்டு திண்ணையில படுத்தவங்கள். அவங்களைத்தான் குட்டி முதலாளியள் எண்டு சொல்லித் தப்பலாம். ஆனா சோசலிசம், கியூகோ சாவெஸ், கியூபப் புரட்சி அப்பிடி இப்பிடி எண்டு கதைக்கிறவையும் விட வெளிக்கிட்டியள். வாழ்க கார்ல் மாக்ஸ்!!!!!

  4. மலையக மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். – செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை.
    மலையக மக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மக்களது ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தலையிட்டு நல்லதொரு தீர்வினை எட்ட முன்வர வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆண்டாண்டு காலமாக பின்தங்கிய நிலையில் வாழ்க்கையை மேற்கொண்டுவரும் மலையக மக்கள், தமது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, அச்சமூகமும், நாட்டின் ஏனைய சமூகங்களோடு சமாந்தரமான நிலையைக் காணவேண்டும் என்பதே தனது அபிலாஷையாகுமெனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மலையக மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் முகமாக அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து சுமுகமான ஒரு தீர்வை எட்ட முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதேநேரம், இப்பிரச்சினையை மென்மேலும் தொடரவிடாது சுமுகமாகத் தீர்த்து வைக்கும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலையிட்டு, உடனடித் தீர்வைக் காண முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

  5. //மலையக மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். – செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை…..//

    கர்ணன் கூறியதில் ‘டக்ளஸ் தேவானந்தா’ வுக்குப் பதிலாக எந்த தமிழ் அரசியல்வாதியின் பெயரைப்போட்டாலும் சரியாக வரும். வாசித்து வாசித்து களைத்துவிட்டிருப்பார்கள் மலையக மக்கள்.
    பாவம் டக்ளஸ் ‘கோரிக்கை’, ‘வேண்டுகோள்’ என்ற வட்டத்துக்குள் வந்து விட்டார். டக்ளசின் ‘வடக்கு கிழக்கு என்றும் பிரிக்க முடியாத அலகு’ என்றகோசமும் புலிஎதிர்ப்பில் அடிபட்டுப் போய்விட்டது. இப்போது சங்கரியும் வேண்டுகோளும் கோரிக்கையும் விடுகிறார். கேட்டால் ‘தமிழர் மீது ஒர் கல்லைக்கூட எறியாத ஜே.வீ.பி’ செந்தோழர்கள் கத்தி எடுப்பார்கள். அதனால் ராஜபக்சாவுக்கு ‘தேனீ.கொம்’ ஊடாக ‘பொறுத்தருளுக’ கடிதம் எழுதுகிறார்.

  6. ஈபிடிபி ஈபிஆர்எல் எவ் ரிபிசி இவர்களுக்கு அப்பப்ப வந்து குடுக்காமல் ஒரேயடியாக ஒருவிமர்சனத்தை வைத்து புலிக்கு சுலமான வழிஅமைத்துக் கொடுங்கள்.ஏன் இவர்களோடு நேரடி விமர்சனத்தில் ஈடுபட உங்களால் முடியாதுள்ளது. சிலவேளை அவர்கள் தீண்டத்தகாதவர்களோ? உங்களுடைய தத்துவ வித்தகத்திற்கு தீட்டு வந்துவிடுமோ?உங்கயளுடைய வரட்டுத்தனங்களை விட்டு விட்டு இருப்பவர்களுக்கு வழி காட்ட முன்வாருங்கள்.

  7. ” ஏனென்று கேட்க நாஙகள் யார்,நாஙகள் உழைக்கவும் சாகவுமே பிறந்தவர்கள் “” என்று மலையக பெருந்தோட்டத் தொழிலாளி தனது கல்லறையில் எழுதி நூறாண்டுகளாகிறது.நடேசையர்,சண்முகதாசன் போன்ற பெரும் இடதுசாரித் தலைவர்களாலும் விடிவைக் கொண்டுவர முடியவில்லை, தொண்டைமான்,சந்திரசேகரன் போன்ற பெரும் வலதுசாரித்தலைவர்களாலும் விடிவில்லை. தொழிலாளர் விரோத அரசமைப்பும் அரசும் ஆட்சியில் இருக்கும்வரை இப்ப்டியான துரோகஙகள் தொடரும்…..!.மிக முக்கியமான சம்பவம் ஒன்றில் உஙகள் கவனத்தைக் குவித்துள்ளீர்கள், அது சிஙகள தொழிலாளர்களதும் மாணவர்களதும் ஆதரவு. அரசியல் அனாதைகளாக்கப்பட்ட வடமாகாணத் தமிழ் மக்கள் பிச்சைக்காக கப்பலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். கிழக்கில் வாகரை அகதிகளுக்கு ஒருநேர சாப்பாட்டிற்கு குறைந்தது எழுபதாயிரம் வேண்டும். பஙகர் திருமகனுக்கும் அதேஅளவு. ஒரு தாய் தனது குழந்தையை முப்பதாயிரம் ரூபாவுக்கு விற்றார். முப்பதுக்கு மேலே குடுக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஏதோ வித்துச் சாப்பிட கையில் குழந்தையாவது இருந்தது, எதுவும் இல்லாதவர் ஏது செய்வர்? பிரபாகரனுக்குக் குறைவின்றி சாப்பாடு கிடைக்க வேண்டுமானால் இருக்கிறதை அறுத்துக் குடுக்கத்தான் வேணும். எல்லோரும் தியாகம் செய்யத்தான்வேண்டும். மலையக மக்கள், முஸ்லிம் மக்கள் எல்லோரும்.

  8. ரகு!…
    நீங்கள் சொன்ன கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. அழகலிங்கத்தின் முந்திய பதிவுகளில் சொன்னது போல் இந்தியா கூப்பிட்டு தமிழ் கட்சிகளை யு. என்.பி க்கு ஆதரவளிக்குமாறு கூறியதும் உண்மை என்றுதான் அறியப்படுகின்றது. எல்லா தமிழ் கட்சிகளுக்கும் ரணில் மீது வெறுப்பு. காரணம் வானத்திலை போய்க்கொண்டிருந்த புலியை ஏணி வைத்து வீட்டு முற்றத்தில் இறக்கி சக போராளிகளையும் புத்திஐPவிகளையும் அழிப்பதற்கு ரணில் வழி வகுத்தவர் என்ற குற்றச்சாட்டு. ஆறு சுற்று பேச்சு வார்த்தை நடத்தியும் ஒரு முடிவும் ரணிலாலோ புலியாலோ எட்டவும் முடிந்திருக்கவில்லை. ஆக ரணில் செய்த சாதனை புலியை உள்ளே நுழைய விட்டது மட்டும்தான். சந்திரிகா தீர்வுத்திட்டத்டதை பாராளு மன்றம் கொண்டு வந்த போது இதே ரணில் Nஐ.வி.பி … உறுமய… புலி ஆதரவு தமிழ் கட்சிகள்…. ஆனந்தசங்கரி உட்பட தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த தீர்வை வர விடமுடியாது தடுத்தனர். உண்மையில் அந்த தீர்வுத்திட்டம் ஒரளவு பரவாயில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒத்த அதிகாரங்கள் அதில் இருந்தன. ஆனால் இன்று அதே ரணிலும் ஆனந்த சங்கரியம் இன்று தீர்வை வைக்குமாறு கோருகின்றனர். அன்று அந்த தீர்வு நடைமுறைக்கு வந்திருந்தால் இன்று யாரையும் நாம் குறை கூறத்தேவையில்லை. அந்த வரலாற்றத்துரோகம் புலி>.. புலி ஆதரவு தமிழ்க்கட்சிகள்… அனந்த சங்கரி உட்பட அனைவரையம் சாரும். ரணிலிடமிருந்தும் ராஐபக்சவிடமிருந்தம் யாரும் நம்பிக்கைகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் முதலில் நாங்கள்தான் சரியாக நடக்க வேண்டும். புலி உட்பட வரலாற்றில் வந்து போன சந்தரப்பங்களை உதறித்தள்ளியவர்கள்தான் இதற்கு பதில் கூற வேண்டும். டக்ளஸ் ராமராஐ; கூட்டம் மட்டும்தான் ராஐபக்சவை நம்பினார்கள் என்பது உங்கள் வாதம். அது உங்கள் கருத்து. ஆனால் உண்மையில் புலிகளும் அரசாங்கத்தோடு உறவு வைக்க கூடாது என்ற பின்கதவால் மட்டும் உறவு வைத்திருக்கும் சிலரும்தான் அரசாங்கத்தை நம்பி தீர்வை வை என்று அறிக்கை விடுவதும் அரசாங்கத்தோடு பேசுவதற்காக உலகத்தை சுற்றுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் டக்ளஸ் அதற்கு மாறாக நடப்பதாகவே தெரிகிறது. இப்படி கேட்டு எதுவும் நடக்கப்போவதில்லை. ஏதாவது மக்களுக்கு முடிந்ததை சேர்ந்திருந்துதான் சாதிக்கலாம் என்று அரசாங்கத்திற்க ஆதரவளித்து வருகின்றார். சந்திரிகாவை தீர்வு வைப்பதற்கு டக்ளஸ் அணியினர் தூண்டியது போல் ராஐபக்சவையும் தனது சேர்ந்திருக்கும் அரசியலால் முடியும் என்றால் ராஐபக்சவையும் செய்ய தூண்ட வேண்டும். அதை விட தோட்டத்தொழிலாளர்களின் உரிமையை முழுமையாக தீர்த்து வைப்பதற்க ராஐபக்ச புரட்சித்தலைவரும் அல்ல. இலங்கை புரட்சி நடத்த புPமியும் அல்ல. இந்த முதலாளித்தவ பேரின வாத அமைப்பு முறைக்குள் இவைகள்தான் சாத்தியம். ஆனால் அழகலிங்கம் அவர்களது கருத்துக்கள் இப்படி எழத்தான் வேண்டும். அவர் கூறியது நியாமான உரிமைகளை. அரசாங்கம் செய்ய நினைப்பது தம்மால் விரும்பியதை மட்டும். இது அந்த மக்களுக்கு திர்வாகாது என்ற குரல் எழுத்தான் வேண்டும். கிடைப்பதை பெற்றுக்கொண்டு தொடர்ந்தும் போராட வேண்டும். மலையக தலமைகள் வன்னிக்கு காவடி தூக்கி பிரபாகரனின் காலடிக்கு கற்பூரம் கொழுத்துவதை விடுத்து அராங்கத்திடம் முறைப்படி அந்த மக்களின் அழுத்தத்தை பிரயோகித்து உரிமைகளை கேட்க வேண்டும்.

  9. //உங்களுடைய தத்துவ வித்தகத்திற்கு தீட்டு வந்துவிடுமோ?/ /

    அதத்தான் நானும் கேக்கிறன். நிங்கள் படிச்ச சோவியத் , சீன பிரசுரங்கள் (மிக மொத்தமானவை) சொன்ன தத்துவங்களை இன்னுமேன் கட்டிப்பிடிச்சு அழுகிறியள். அத அவங்களே காத்தில விட்டிட்டாங்கள். இன்னிமேன் அந்த ‘தத்துவ வித்தகத்தை’ மலையக மக்களின் போராட்டத்தில ஏதோ வழியிலை பலவந்தமாயும் செயற்கையாயும் புகுத்தி, ‘தீட்டு’ வராமல் பாக்கிறியள்.

    உங்கயளுடைய வரட்டுத்தனங்களை விட்டு விட்டு இருப்பவர்களுக்கு வழி காட்ட முன்வாருங்கள்.
    /
    ///
    ஓமோம், வெறும் வரட்டுவாதம் கதைச்சுக்கொண்டு, இன்னும்நான் முன்னுக்குச்சொன்ன மொத்த மொத்க புத்தகங்களிலை எதோ மூலையிலை போறபோக்கில சொன்ன வரட்டு வாதம் கதச்சுக்கொண்டிடுக்கிறியள்.

  10. பரன்,

    உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!
    //எல்லா தமிழ் கட்சிகளுக்கும் ரணில் மீது வெறுப்பு. காரணம் வானத்திலை போய்க்கொண்டிருந்த புலியை ஏணி வைத்து வீட்டு முற்றத்தில் இறக்கி சக போராளிகளையும் புத்திஐPவிகளையும் அழிப்பதற்கு ரணில் வழி வகுத்தவர் என்ற குற்றச்சாட்டு.//

    மற்றைய இயக்கங்களின் எல்லா அல்லல்களுக்கும் புலியையும் ரனிலையும் குறை கூறி ஒன்றும் ஆகப்போவதில்லை. அதுமட்டுமல்ல இந்த குற்றச் சாட்டு புலி தலை யெடுக்கும்போதே தொடங்கிவிட்ட ஒன்று தான். இதனை நான் நங்கு அறிந்தவன். ஏனெனில் ‘காலை எழுந்தவுடன் புலிப்பாட்டு’ கூட்டத்தினருடன் திரிந்தவன். நேற்று வந்த புரிந்துணர்வு ஒப்பந்தமே இலங்கையின் எல்லா சிக்கல்களுக்கும் காரணம் என்பது மிகவும் இலகுவான விவாதம்.

    //இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒத்த அதிகாரங்கள் அதில் இருந்தன. ஆனால் இன்று அதே ரணிலும் ஆனந்த சங்கரியம் இன்று தீர்வை வைக்குமாறு கோருகின்றனர்.//

    அப்படிக்கேட்டாலும் பரவாயில்லை! இந்தியா உண்மையான சமஷ்டியை தர ஓமெண்டுமே? எண்டு சங்கரியயர் கேட்டார் ஒருகேள்வி! ஜே.வீ.பி காறனுக்கு புல்லரிச்சிருக்கும்!!!

    //மலையக தலமைகள் வன்னிக்கு காவடி தூக்கி பிரபாகரனின் காலடிக்கு கற்பூரம் கொழுத்துவதை விடுத்து அராங்கத்திடம் முறைப்படி அந்த மக்களின் அழுத்தத்தை பிரயோகித்து உரிமைகளை கேட்க வேண்டும். /
    /

    உங்களுடன் உடன் படுகிறேன். அத்துடன் புலியை எதிர்க்க வேண்டும் என்றே ‘வன்னிப்புலி மலையக மக்களுக்கு ஒண்டும் செய்யேல்லை’ எண்டு வாயின்ர மற்றப்பக்கத்தால கதைக்கிறதயும் நிப்பாட்ட வேணும். புலிக்கு எதிரா மலையக மக்கள் தனைத்துவமானவர்கள்ல் எண்டு கதை விடுறது பிறகு ஒண்டும் செய்யேல்ல எண்டு பாட்டுப்பாடி கிண்டுறது.

    //ஏதாவது மக்களுக்கு முடிந்ததை சேர்ந்திருந்துதான் சாதிக்கலாம் என்று அரசாங்கத்திற்க ஆதரவளித்து வருகின்றார். ///

    என்ன முடியும் எண்டு மட்டும் ‘இதய வீணையில’ விடுறாரில்ல. நீட்டி முழங்கி முடிவில ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, வடக்கு கிழக்கு என்றும் பிரிக்கமுடியாத அலகு’ எண்டு முழங்கி முடிச்சார். இப்ப அதைக்காணோம். இப்ப புதிசொண்டு…’திட்டங்கள் எங்களது…தீர்மானம்……” இப்படிப்போகுது!!!!

  11. பெருமதிப்பிற்குரிய விமலா ! “தீண்டத்தகாதவர்கள்” பட்டியலில் தேனீயைத் தவிர்த்துள்ளீர்கள்!!!.இந்தத் தீண்டத்தகாதவர்கள் என்ற பதம்,வார்த்தை, சொற்செட்டு பிரபாகரனும் தனது மாவீரர் உரையில் உபயோகித்த ஒன்று. சர்வதேச சமூகம் தஙகளைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதி ஒதுக்குவதாக அழுதிருந்தார். தமிழ்ப் பொதுப்புத்தி அதை ஏற்றுக் கொண்டது.தேனீ இணையமும் அதே வார்த்தையை அதை எதிர்ப்பதற்கு ஆக்ரோசமாக பயன்படுத்தியது.நாம் அவ் வார்த்தையை ஏற்றுக்கொள்வதில்லை. அன்ரசபிள்_ (ப்ரென்சில்: அந்தூசாப்ள்) எனும் வார்த்தைக்கு “தீண்டப்படாதோர் “என்று எழுதுமாறு வலியுறுத்தி வருகிறோம் நீண்ட காலமாக. தலித் உளவியலில் இத் திருப்பம் முக்கியமானதொன்று. ஆனால் இது பற்றிய அறிதல் எதுவுமின்றி பிரபாகரனும் தேனீயும் நீஙகளும் அதை ‘இயல்பாகப் ‘பயன்படுத்துகின்றீர்கள். ‘தீண்டத்தகாதவர்களாக எம்மைப் பார்க்காதீர்கள், என்று அறிக்கையிடும்போது நாம் அவர்களல்ல, அவர்கள் வேறையாக்கள், அவையள் வேறை,நாஙகள் வேறை என்ற மேற்சாதி உளவியலிலிருந்து பிரபாகரனாலும் மீள முடியவில்லை, தேனீயாலும் மீள முடியவில்லை, நீஙகள்….????

  12. பரன்,

    மன்னிக்கவேண்டும் மீண்டும் மீண்டும் டக்ளஸ் பற்றி பேசுவதற்கு.
    அவசரப்பட்டு ‘திட்டங்கள் எங்களது..தீர்மானம் உங்களது…’ தான் தற்போதைய கோசம் எனக்கூறிவிட்டேன்.
    இப்போது தான் பார்தேன் அவர்கள் புதிதாக ‘சொல்வதை செய்வோம்..செய்வதை சொல்வோம்” என எம்.ஜி.ஆர் ஸ்ரைலில் புதுக்கோஷம் விட்டிருக்கிறார்கள். சிலவேளை புலிகளும் இவர்களை பின்நாளில் சேர்த்துக்கொள்ள நேரிட்டால் (சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போல்) எமக்கும் எம்.ஜி.ஆரை பிடிக்கும் டக்ளசும் எம்.ஜி.ஆர் போல் ‘உள்ளதை சொல்வேன் …சொன்னதை செய்வேன்..’ என ‘இதயவீணை’ வாசித்தவர் எனக்காரணம் சொல்லலாம்!!!!

  13. ரகு உலகம் தெரியாமல் நிற்கிறாரோ அல்லது புலியைப்போல் லாடன் கட்டிய குதிரையைப்டபொல் அக்கம் பக்கம் தெரியாமல் நிற்கிறாரோ தெரியாது. டக்ளஸ் தன்னால் முடிந்ததை புலிகளின் தற்கொலை தாக்கதலுக்கு மத்தியிலும் தனக்க வாக்களித்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். பாவவம் என்று சொல்லும் அளவிற்கு அவர் படியிறங்கி நிற்கவில்லை. 22 பொம்மை எம்பி மார்தான் பாவம்!

  14. புலிகள் டக்ளஸை சேர்த்தால் என்ற சொல்லே பிழை…
    சேர விரும்பினால் பிரபாகரன் பல தடவை தூதனுப்பிய போது சேர்ந்திருப்பார். கொள்கை இல்லாமல் புலியோடு ஒட்டுவதற்கு டக்ளஸ் தயாராகமாட்டார். செல்வம்… சுரேஸ் போன்றவரும் அவரில்லை. ஈ.பி.டி.பி யின் கொள்கை இன்னமும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எக்காலமும் பிரிக்கப்பட முடியாத இணைந்த வடக்கு கிழக்க ஒரு அலகு… முஸ்லிம்களுக்கு அதில் அகச்சுயாதிக்கம். இதில் மாற்றமில்லை. கிழக்கு மக்கள் பிரிந்து வாழவேண்டும் என்பது அந்த மக்களின் தீர்மானம். நீதிமன்னத்தின் தீர்மானமாக இருக்க முடியாது.அந்த மக்கள் அந்த முடிவை எடுத்தால் ஈ.பி.டி.பி யும் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு தலைவராக இருப்பவர் பல கோசங்களையும் சொல்லவார். அவருடைய கருத்துக்கு நீங்கள் விளக்கம் கொடுப்பது சரியா?… சொன்னதை செய்வோம் என்றால் அது வடக்கு கிழக்க இணைப்பு அலகு அகச்சயாதிக்கம் எல்லாம்தான் அவர்களால் அசால்லப்பட்டது. பொறுத்திருந்து பார்ப்பம் டக்ளஸ் வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து தனது கருத்தை தெரிவிக்கத்தானே வேண்டும். ஏன் அவசரம்….

    மலையக மக்களுக்காக தமிழ் தேசியவாதிகள் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் இங்கு பதிவு. டக்ளஸ் குரல் கொடுத்தால் வெறும் அறிக்கை என்பீர்கள். அதுவம் கொடுக்கவில்லை என்றால் ஒண்டும்’ கதைக்கவில்லை என்பீர்கள். அப்ப எதை நீங்கள் விரம்புகிறீர்கள்?… இதுதான் முட்டையிலை…..

  15. //மலையக மக்களுக்காக தமிழ் தேசியவாதிகள் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் இங்கு பதிவு. டக்ளஸ் குரல் கொடுத்தால் வெறும் அறிக்கை என்பீர்கள். அதுவம் கொடுக்கவில்லை என்றால் ஒண்டும்’ கதைக்கவில்லை என்பீர்கள். அப்ப எதை நீங்கள் விரம்புகிறீர்கள்?… இதுதான் முட்டையிலை…..//

    முட்டையில்….. வது , நானல்ல. கட்டுரை எழுதியவர் இட்ட உள்நோக்கம் கொண்ட தலைப்பு. எனது முன்னைய இடுகைகளை வாசிக்கவும். தேசியவாதிகள் குரல்கொடுத்தபோது ‘மலையக தொழிலாளர்களை வெறும் குறுந்தேசியவாதத்துக்கு பலியாக்கி விட்டார்கள்’, ‘குட்டி முதலாளிகளின் சுயலாபத்துக்கு உரமாக்கி விட்டார்கள்’ ‘ தமது குறுந்தேசிய கொள்கைகளால் தொழிலாள வர்க்கத்தினை பரந்துபட்ட (சிங்கள என வாசிக்கவும்) பாட்டாளிகளின் கண்களில் ஐமிச்சத்துக்குரியவர்களாக காட்டிவிட்டார்கள்’ என முட்டையில்….வர்கள் எவர் என உங்களுக்கு தெரியாததல்ல!

  16. //பொறுத்திருந்து பார்ப்பம் டக்ளஸ் வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து தனது கருத்தை தெரிவிக்கத்தானே வேண்டும். ஏன் அவசரம்….///

    இதே பொறுமையை தோட்டத்தொழிலாளர் பிரச்சினையிலும் தேசியவாதிகளீடமும் கடைப்பிடித்திருக்கலாம் தானே???

  17. //கிழக்கு மக்கள் பிரிந்து வாழவேண்டும் என்பது அந்த மக்களின் தீர்மானம். நீதிமன்னத்தின் தீர்மானமாக இருக்க முடியாது.///

    கேட் க என்னவோ நல்லாத்தான் இருக்கு. இப்படி எத்தனையோ கோசங்கள்….

  18. 250 ரூபாவிற்கு குறையாத அளவில் சம்பளம் வழங்கப்படுமானால் எமது போராட்டத்தை நிறுத்தவோம் என்று மலையக தொழிற்சங்கங்கள் நிபந்தனை விதித்தன. இதன்படி அலரி மாளிகையில் 19. 12. 06 காலை 11 கால் மணிக்கு ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்டது. 260 ரூபா சம்பளம் இரண்டு வருடங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் அது. இது தினச்சம்பளம். இது போதுமா என்பது ஒரு புறம் இருக்க தொழிற்சங்கங்களின் கோரிக்கை இதுவாக இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும். மலையகத்தின் எழுச்சி என்பது இலங்கையின் முதல் தொழிற்சங்கவாதி நடேச ஐயரோடு ஆரம்பித்து சண் தலமையிலான செங்கொடிச்சங்கம் வரை புரட்சிகர சிந்தனையோடு வளர்ந்து வந்தது. ஆனால் இ.தோ.கா… மற்றம் ம. ம. மு போன்றவை அரசியல் நோக்கம் கொண்டவைகள். சில சலுகைகளை மட்டும்தான் அவர்களால் அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடிகின்றது. ஆனாலும் எமது வடக்கு கிழக்கு கட்சிகளை விட அவர்கள் மேலானவர்கள். அரசாங்கத்தடன் வெளிப்படையாக உறவு வைத்து முடிந்ததை சாதிக்கின்றார்கள். வடக்கு கிழக்க எம்பிமார்கள் அல்லது தமிழ் கட்சிகள் பின் கதவால் உறவு வைத்து தங்களுக்கு குண்டு துளைக்காத காரும் ஐப்பான் வாகனமும் …. சம்பந்தன்…. கூட்மைப்பு…. வாங்கியிருக்கிறார்களே ஒழிய வேறெதையும் சாதிக்கவில்லை. பிரச்சினைகள் வேறாக இருப்பினும் இதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தோழர் அழகலிங்கம் அவர்கள் தொடர்ந்தும் இது போன்ற பதிவுகளை ஆக்கவேண்டும். ஆனாலும் சில நடைமுறை ஐதார்த்தங்களையும் இன்றைய அரசியல் சூழலையும் இன்னும் புரிந்து கொண்டு உங்களது தத்துவார்த்த பார்வையில் எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம்.

  19. //இது போதுமா என்பது ஒரு புறம் இருக்க தொழிற்சங்கங்களின் கோரிக்கை இதுவாக இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்.//

    இதே கேள்வியைத்தான் தமிழ்த் தேசியவாதிகளும் கேட்டால் முனாவில மனாபுடுங்குறவை என்ன சொல்லுவினம்? எங்கேயோ எழுதின புத்தகத்தில இருந்து மேற்கோள் காட்டுவினம்!!! இல்லை என்றால் விசமத்தனமான் தலைப்பு வைத்து பதிவு போடுவினம்

    //வடக்கு கிழக்க எம்பிமார்கள் அல்லது தமிழ் கட்சிகள் பின் கதவால் உறவு வைத்து தங்களுக்கு குண்டு துளைக்காத காரும் ஐப்பான் வாகனமும் …. சம்பந்தன்…. கூட்மைப்பு…. வாங்கியிருக்கிறார்களே ஒழிய வேறெதையும் சாதிக்கவில்லை.///

    மிகச்சரியாக சொன்னீர்கள். இதைத்தான் ‘கேட்டது தமிழீழம், கிடைச்சது ஜப்பான் ஜீப் என்று சுவரில் எழுதினார்கள்!!!

    //அரசாங்கத்தடன் வெளிப்படையாக உறவு வைத்து முடிந்ததை சாதிக்கின்றார்கள்//

    இல்லை, அவர்களும் ‘ புலியிட்டை போகப்போறம்’ கதை மூலம் தான் நடத்துகிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஏன் பரனுக்கு தெரியாமல் போனதோ தெரியவில்லை!
    தாத்தா தொண்டமான் பிரச்சனை வரும்போதெல்லாம் ‘புலிகள் தியாகிகள்’ அது இது எண்று அப்பப்ப கதை விடுவார். இந்தக் கதை உச்சமாக , ‘பிரபாகரன் கடவுளால் அனுப்பப்பட்டவர் ‘ என்றவரை போனது. நல்லகாலம் தொண்டமானை கடவுள் கூப்பிட்டிட்டார்!
    பேரனோ இன்னொரு வழியால போனார். தனது போட்டி சந்திரசேகரன் ‘புலியிட்டைப் போறார், நீங்கள் ஒண்டும் தராட்டி எங்கட ஆக்கள நான் ஒண்டும் செய்யேலாது’ எண்டு விளையாடினார். சந்திரசேகரன் அரசுடன் சேர்ந்தவுடன் அந்த பிளானும் அவுட்! தற்போதைய பிரச்சினையில் ஒரு கதை விட்டார் . வேலைநிறுத்தத்தை கடைப்பிடிடக்க, மகிந்தவின் தம்பி குண்டுத்தாக்குதலுக்குட் பட்டிருப்பதால் இது தகுந்த தருணமல்ல என்று!!!அதுதான் தற்போதைக்கு உச்சம்

    //ஆனாலும் சில நடைமுறை ஐதார்த்தங்களையும் இன்றைய அரசியல் சூழலையும் இன்னும் புரிந்து கொண்டு உங்களது தத்துவார்த்த பார்வையில் எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம். //

    பரன், நடைமுறை ஜதார்த்தங்களும், சூழ்நிலைகளும் தத்துவார்த்தப் பார்வைக்குள் ஒன்றுபடாது. அதனால் தான் அவை வெறும் தத்துவமாகவும் , நடைமுறைக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது.
    இவை இரண்டையும் வலிந்து பொருத்த முயன்றதன் விழைவுதான் மேலே குறித்த கட்டுரை.
    ஆனாலும் தோழர் அழகலிங்கம் தொடர்ந்து எழுதுவது மிக அவசியம்.

  20. //உலகம் தெரியாமல் நிற்கிறாரோ அல்லது புலியைப்போல் லாடன் கட்டிய குதிரையைப்டபொல் அக்கம் பக்கம் தெரியாமல் நிற்கிறாரோ தெரியாது///

    கரரண்,
    அப்படி எண்டு சொல்ல மாட்டன். “லாடன் கட்டாத” குதிரை, கழுதையளோட (பொதி மற்றும் பாவங்களை சுமந்தது)சுத்தினதால வந்த பட்டறிவு எண்டு சொல்லலாம்.

  21. மலையக சமூக அரசியல் முற்றிலும் வேறானது. கட்டுரையில் 49 தோட்டங்களைக் குறிப்பிட்டீர்கள்.நல்லது,ஆனால் ‘அவர்கள்’ இன்று 15 லட்சம் பேர். போராட்டம்நடைபெறும்போது ‘மற்றவர்கள்’ கிளர்ச்சியடைவதும் இல்லையேல் ஏதாவது உளறுவதும் நடைபெறுவதுதான். பல தொழிற்சங்கங்கள் பல அரசியல் கட்சிகள் என தேசிய அரசியலில் மலையகத்தின் இருப்பு முற்றிலும் வேறானது.மாத்தையா கூட ஒருமுறை சொன்னார்;மலையகமக்களே! கிளர்ந்தெழுங் கள்,போராடுங் கள்,இதுதான் தருணம்” என. யாழ்ப்பாணத் தலைமைகள் தமதுலாபத்துக்காக பேசும், அல்லது பேசாமல்விடும். எந்தநேரம் என்ன பேசவேண்டும், என்ன செய்யவேண்டும் என அவர்களுக்குத்தெரியும். ஜி.ஜி.யின்வாரிசுகள். ஜோர்ஜ் புஜ் மலையக கூலிஉயர்வுக்காக குரல் கொடுப்பானா? அந்த மட்டத்தில் யாழ்ப்பாணத்தலைமைகளை நீங்கள் மதிப்பிடவேண்டும். துரோகம் என்ற உங்கள் மதிப்பீடு வர்க்கம், சமூகம் பற்றிய உங் களிடமுள்ள மயக்கத்தைக்காட்டுகிறது. நீங் கள் படித்த மேற்தட்டு வர்க்கத்தவரா,? பெரும் கம்யூனிசத் தலைவரான காவுட்ஸ்கியையே லெனின்: ஓடுகாலி காவுட்ஸ்கி ,தெருவில் அலையும் விபச்சாரி” என விமர்சித்தார்.நீங்கள் இவர்களை செல்லமாகக் கடிந்துகொள்கிறீர்கள். மற்றும் தமிழ்த்தேசியம் குறித்த உங் கள் அணுகுமுறை காவுட்ஸ்கி , பப்லோ வகைப்பட்டது.

  22. தேனீ.கொம் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க வின் குரலில் பேசுகிறது

  23. (//மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையான ‘மகிந்தாவின் சிந்தனையில்’ இலங்கை மக்கள் முழுப்பேருக்கும் வளமான வாழ்வுஇ ….///
    இதை ஏனண்ணை நம்பினியள்)அப்படிப் போடுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *