டிசே தமிழனின் கேள்விகள்

கட்டுரைகள்

டிசே தமிழன்  Facebook ஊடாக ஆறு கேள்விகளை முன்வைத்து  என்னைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார். வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனினும் “கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை” என்று கூறிய மல்கம் எக்ஸின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பதில்களைச் சொல்லலாமென்றாலும் இவையொன்றும் ஏற்கனவே கேட்கப்படாத கேள்விகளும் அல்ல. ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட தேய்ந்துபோன கேள்விகளே இவை. எனினும் டிசே தமிழன் மீது நான் கொண்ட தோழமையாலும் மரியாதை நிமித்தத்தாலும் அந்தக் கேள்விகளிற்கு இங்கே பதிலளிக்க  நான் கடப்பாடுடையவன். வாசகத் தோழர்கள் பொறுத்தருள்க. என் கடமையைச் செய்ய என்னை அனுமதியுங்கள்.

  • 1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?

இக் கேள்வி மேற்பார்வைக்கு மடத்தனமாகத் தோன்றினாலும் உள்ளே வஞ்சகத்தனமானது. நமது சூழலில் தலித்திய அரசியல் குறித்த உரையாடல்கள் ஆரம்பமாகி முப்பது வருடங்களாகின்றன. ஏற்கனவே பலராலும் பதில் சொல்லப்பட்ட கேள்வியை அந்தப் பதில்களை எல்லாம் கணக்கில் எடுக்காமலேயே ஏதோ ஒளிக்கற்றை ஊழலைக் கண்டுபிடித்த பாணியில் புத்தம் புதிதாகக் கேட்பது போன்ற பாவனையுடன் டிசே கேட்பது வருத்தத்திற்குரியது.

தலித் அரசியலில் மட்டுமல்ல எந்த ஒடுக்கப்பட்டோரது அரசியலிலும் புகுந்து அந்த அரசியலின் பிரதிநிதி போல ஒடுக்கும் தரப்பைச் சார்ந்த ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்தக் கூடாது. இதை எத்தனை தரம்தான் நாம் திருப்பித் திருப்பிச் சொல்வது.

ஆனால் டிசே இந்தக் கேள்வியை விளக்க அ.மார்க்ஸ் x ரவிக்குமார் எடுத்துக்காட்டை கையாளுவதற்கு டிசேயிற்கு அ.மார்க்ஸ் மீது உள்ள காழ்ப்புணர்வு மட்டுமே காரணமாயிருக்க முடியும். தமிழகத்துத் தலித் அரசியலில் அ.மாவின் மிகப் பெரிய பங்களிப்பாக அவர் முன்னின்று ‘தலித் அரசியல் அறிக்கை’யை உருவாக்கியதை நான் சொல்லுவேன். ஆனால் அவர் எந்த இடத்தில் தன்னை தலித் மக்களின் அரசியல் பிரதிநிதியாகச் சொன்னார், தலித் மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்ததாகப் பேசியிருக்கிறார்? நிரூபிக்க முடியுமா டிசே! இங்கே நீங்கள் ரவிக்குமாரின் குற்றச்சாட்டை அங்கீரித்து, அ.மார்க்ஸ் சொல்லாத ஒன்றைச் சொன்னதான பொருள்பட எழுதுவதையே நான் வஞ்சகம் என்றேன்.

ரவிக்குமார் அதனால்தான் அ. மார்க்ஸை ஒதுக்கித்தள்ளினார் என்றொரு கேடுகெட்ட எடுத்துக்காட்டைத் தந்திருக்கிறீர்கள்.
ஏன் டிசே, ரவிக்குமார் மார்க்ஸை மட்டுமா திட்டினார். அவர் பெரியாரையே சாதிய வெறியனென்றும் ஸ்திரீ லோலன் என்றும் தொடந்து அய்ந்து வருடங்களாகக் காலச்சுவட்டிலும் தாய்மண்ணிலும் எழுதி வந்தவரவல்லவா. அவருக்கு அ.மாவைத் திட்டுவதா பெரிய காரியம்.  ரவிக்குமாரின் அ.மார்க்ஸ் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதே வழியில் பெரியாரையும் சாதி வெறியன் என்றும் ஸ்திரி லோலன் என்றும் சொல்லலாமே. நீங்கள் செய்தாலும் செய்வீர்கள். அ.மார்க்ஸை திட்டிவிட்டு ரவிக்குமார் அடுத்து  செய்த காரியம் என்ன?

பார்ப்பனிய காலச்சுவட்டில் ஆசிரியராக வீற்றிருந்தார். குறுகிய காலத்திலேயே ஊழல் தி.மு.கவின் செல்லப்பிள்ளையானார். பெரியாரைத் திட்டிய வாயைத் திறந்து இளித்தபடியே கலைஞரின் கையால் ‘அண்ணா விருது’ பெற்றுக்கொண்டார். கலைஞர் அவரை வாழ்த்திப் பேசியதை தனது வலைப்பதிவில் போட்டு மகிழ்ந்தார். அவரது கட்சி இப்போது திமுகவுடனும் காங்கிரசுடனும் கூட்டிணியிலுள்ளது.
கனிமொழியும் நீராராடியாவும் பேசிய ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்திற்குள் ரவிக்குமாரும் கனிமொழியும் ஒன்றும் தெரியாத பாப்பாக்களாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் காமராஜர் அரங்கில் மொக்கை ஜோக்குகள் அடித்தவாறே உரையாற்றிய காட்சியை நான் நேரிலேயே பார்த்தேன். ரவிக்குமாரின் இந்த அரசியல் தகிடுதத்தங்களுக்கு மார்க்ஸ் இடைஞ்சலாக இருக்கலாம் என்ற காரணத்தாலேயே அ.மார்க்ஸிடமிருந்து ரவிக்குமார் விலகியிருக்கலாமே தவிர தலித் தனித்துவத்தின் மீதுள்ள அக்கறையால் அவர் அ.மாவிடமிருந்து விலகவில்லை என்பதற்கு ரவிக்குமாரின் இன்றுவரையான செயற்பாடுகள் உதாரணம். நீங்கள் எந்த யோக்கியதையில் ரவிக்குமாரின் உதாரணத்தை இங்கு எடுத்துவருகிறீர்கள்?

அருந்தததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரவிக்குமாரின் கட்சி மூர்க்கமாக எதிர்த்ததை நீங்கள் அறிவீர்களா? அந்தக் கட்சி ‘சமத்துவப் பெரியார்’ என்ற விருதினைக் கலைஞருக்கு வழங்கியதை அறிவீர்களா? எந்தவகையில் ரவிக்குமார் தலித் தனித்துவ அரசியலுக்கான எடுத்துக்காட்டாகவும் அ. மார்க்ஸ் அதைத் தட்டிப் பறிப்பவராகவும் உங்களுக்குத் தெரிகிறார். தயவு செய்து விளக்குங்கள்.

புலம் பெயர் சூழலில் தலித் அல்லாதவர்கள் தங்களைத் தலித்துகளுடைய பிரதிநிதிகளாகக் கூறுகிறார்களா? யாரைய்யா அந்த அயோக்கியன். சொல்லுங்கள் டிசே! ஊக அரசியலோ, கிசுகிசு வேலையோ செய்யாதீர்கள் ஆதாரத்துடன் பேசுங்கள்.

நான் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யில் சாதாரண உறுப்பினனாகக் கூட இருந்ததில்லை. முன்னணியினர் தலித் மாநாடுகள் நடத்தும்போது நான் அவர்களுடன் கூடவே இருந்துள்ளேன். ஆனால் மாநாட்டில் ஒரு கட்டுரை வாசிக்க இடமளிக்குமாறு கூட நான் அவர்களைக் கேட்டதுமில்லை,  வாசித்ததுமில்லை.

ஆனால் ‘தலித் மாநாடு’ குறித்து வதந்திகளை ஊடகங்கள் கிளப்பியபோது அந்த ஊடகங்களை எதிர்த்து விடாப்பிடியாக எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் நீங்கள் அறியாததல்ல. அல்லது தலித் அரசியல் குறித்த எனது கட்டுரைகளையும் தொகுப்புகளையும் எதிர்வினைகளையும் நீங்கள் வாசிக்காதவருமல்ல. ஆனால் எந்தக் கட்டத்திலும் என்னை தலித் அரசியலின் பிரதிநிதியாக நான்  முன்னிறுத்தியதில்லை. ஆகவே நீங்கள் வேறு யாரையோ குறித்தே இந்தக் கேள்வியை எழுப்புவதாகவே நான் ஊகிக்கிறேன். அந்த  ஊடுருவி யாரென நீங்கள் அடையாளம் காட்டினால் நமக்குக் களையெடுக்க வசதியாயிருக்கும்.

அவ்வாறு யாரையும் நீங்கள் அடையாளம் காட்டாதபட்சத்தில் வெறுமனே வம்புக்கே இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்பியிருப்பதாக நான் அய்யமுறுவது நியாயம்தானே டிசே.

உங்களது கேள்விக்கு ஒரு சொல்லாடலை முத்தாய்ப்பாகக் கூறிவைக்க விரும்புகிறேன். “சாதியொழிப்பு அரசியலில் ஒரு தலித் அல்லாதவருடைய பங்களிப்பு என்பது சாதியொழிப்புக் களங்களில் முன்நிற்பதும் தலித்திய அரசியலில் பிரதிநிதித்துவம் என்று வரும்போது பின்வாங்குவதுமாகவே இருக்கவேண்டும்”. இந்தச் சொல்லாடலை நான் அன்றைய ரவிக்குமாரிடம் இருந்து பெற்றேன் என்பது பின்குறிப்பு.

  • 2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?

அடையாள அரசியலையே நிராகரிக்கிறேன் என்றெல்லாம் நான் பொத்தாம் பொதுவாகக் கூறியதில்லை. இதையெல்லாம் எங்கிருந்து கண்டுபிடிக்கிறீர்கள் டிசே! ஆச்சரியமாயிருக்கிறது.

சுருக்கமாக இப்படி விளக்கலாம். தமிழ்த் தேசியம் என்று வரும்போது அங்கே தொழிற்படும் ‘தமிழர்’ என்ற பொது அடையாளத்தை நான் நிராகரிப்பேன். தமிழ்த் தேசிய இனத்திற்குள் இருக்கும் சாதி / பால்நிலை / வர்க்கம் / பிராந்தியம் போன்ற வித்தியாசம் வித்தியாசமான பல்வேறு ஒடுக்கப்படும் அடையாளங்களிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பேன். இதையே  ‘நாமெல்லோரும் இலங்கையர்’ என்ற அடையாளத்தைச் சிங்கள இனவாதம் முன்னிறுத்தும் போது இலங்கை என்ற அடையாளத்தை மறுத்து ஒடுக்கப்படும் எனது தமிழன் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவேன். இங்கே நான் என்மீது திணிக்கப்படும் இலங்கையன் என்ற அடையாளத்தைப் புறக்கணிப்பேன். இதையே அய்ரோப்பாவில் அய்ரோப்பியர்களின் வெள்ளைத்திமிர் முன்னே எனது இலங்கையன், வெள்ளைக் காலனியத்தால் வஞ்சிக்கப்பட்டவன் என்ற அடையாளத்தை உயர்த்திப்பிடிப்பேன்.

அரசியல் கோட்பாடுகளிற்காக மனிதர்கள் உருவாக்கப்பட்டதில்லை. மனிதர்களுக்காகவே அரசியற் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பான பண்பாட்டு – அரசியல் சூழல்களிற்கு ஏற்ப கோட்பாடுகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும், மாறவேண்டும். மாறாதபட்சத்தில் அதற்குப் பெயர் கோட்பாடு அல்ல. அதனது பெயர் வரட்டுவாதம்.

எனவே அடையாள மறுப்பு அரசியலுக்கான தேவை இருப்பதைப் போலவே அடையாள அரசியலுக்கான தேவையும் உண்டு. ஒருவர் எந்த அரசியலைத் தூக்கிப் பிடிப்பதென்பது குறிப்பான அரசியல் – பண்பாட்டு சூழலைப் பொறுத்து வேறுபடும். வேறுபட வேண்டும்.

  • 3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.

பெரியார் 1930 கள் தொடக்கம் தனது இறுதிக்காலம் வரை தமிழ்த் தேசிய விடுதலையை அவ்வப்போது முன்னிலைப்படுத்தியிருக்கிறார் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடில்லை. பெரியாருடைய தமிழ்த் தேசியம் தமிழர்களோடு சேர்த்து மொழிச் சிறுபான்மையினரையும் மதவழிச் சிறுபான்மையினரையும் உள்வாங்கிய தமிழ்த் தேசியம். அது இசுலாமியர்களையும் தெலுங்கர்கள், கன்னடர்கள்,  மலையாளிகள் போன்ற சிறுபான்மையினரையும் உள்வாங்கிய தமிழ்த் தேசியம். பார்பனர்களைக் கூட அவர் தமிழகத்தை விட்டு வெளியேற்றப் போவதாகச் சொல்லவில்லை. அவர் பார்ப்பனர்களை அதிகாரத்திலிருந்து வீழ்த்த வேண்டும் என்றுதான் சொன்னார்.

ஆனால் ஈழத்தில் புலிகளால் கட்டப்பட்ட தமிழ்த் தேசியம் அவ்வகையானதா? அது இஸ்லாமியர்களைக் கட்டிய துணியோடு கொள்ளையிட்டு விரட்டிய தேசியமல்லவா. தமது சொந்த இனத்தின் கலைஞர்களையும் கம்யூனிஸ்டுகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் கொன்றழித்த தேசியமல்லவா. அப்பாவிச் சிங்கள மக்களை கொன்றுகுவித்த தேசியமல்லவா அது.  சாதி ஒழிவதற்கு சாதியின் மூலவேரான இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்றார் பெரியார். மாறாகப் புலிகள் புதிதாக இந்துக் கோயில்களைக் கட்டினார்கள்.

தேசியம், பாஸிசம், சோசலிசம் எல்லாமே வெறும் சொற்கள். அந்த சொற்களின் கீழ் நடத்தப்படும் அரசியல் நடவடிக்கைகள்தான் அந்த சொற்களுக்கான பெறுமதியைக் கொடுக்கின்றன. தேசியம் என்ற கருத்தாடல் தமிழகத்திலும் பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் ஒரேமாதிரியாகத் செயற்படுவதில்லை. அவை  வெவ்வேறு வகையான செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. அந்தச் செயற்பாடுகளே நமது ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் காரணமாகின்றன.

அதுசரி டிசே, அது என்ன கேள்வியின் ஆரம்பத்தில் ‘பெரியாரின் தாசனாகத் தம்பட்டம் அடிக்கிறேன்’ என்ற விசனம். ஏன் உங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து உங்கள் காதுகளில் தம்பட்டம் அடித்தேனா. ஏன் உங்களிற்கு இவ்வளவு காரணமற்ற வெறுப்பு.  வெறுப்பு என் மீதா பெரியார் மீதா? எனினும் பெரியாரின் மாணவன் என நான் சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையே

  • 4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?

டிசே, பெருங்கதையாடல் என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திலிருந்து அல்லாமல் பெருங்கதையாடல் என்றால் ஷோபாசக்திக்கு என்னவென்று தெரியுமா அல்லது ஷோபாவுக்குத் தெரியாது என நிறுவும் எத்தனத்துடன் கேட்கப்பட்ட சுத்துமாத்துக் கேள்வியே இந்தக் கேள்வி என  நான் கருதுகிறேன்.

ஒரு விடயத்தின் பல்வேறு  தரப்புகளை நிராகரித்து விடயத்தை சாராம்சம்படுத்தி அணுகி அதற்கு ஒரு உறுதியான தீர்வையும் அந்தத் தீர்வே அந்த விடயத்தில் தொடர்புள்ள அனைத்து  தரப்புகளிற்கும் மொத்தமான தீர்வு என இலட்சியவாத நோக்கில் சொல்லப்படும் ஒரு கதையாடலையே பெருங்கதையாடல் என நான் புரிந்துகொள்கிறேன்.

ஈழத்துச் சூழலில் இதை விளங்கப்படுத்தினால், வடக்குக் கிழக்கில் அல்லது தமிழீழம் என வரையறுக்கப்பட்ட பரப்பில் தமிழ் பேசும் மக்களிடையே உள்ள ஒடுக்கப்பட்ட சாதியினர், பெண்கள், இசுலாமியர்கள், இந்திய வம்சாவழியினர், ஒடுக்கப்படும் கிழக்கு மக்கள் போன்ற வித்தியாசங்களை மறுதலித்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒடுக்கிக்கொண்டிருப்பவர்களையும் தமிழர்கள் என்ற பெயரில் சாராம்சப்படுத்துவதையும் இந்த எல்லாப் பிரிவினருடைய வித்தியாசம் வித்தியாசமான பிரச்சினைகளிற்கும் தமிழீழமே தீர்வென ஒரு மொத்தத்துவத் தீர்வை முன்வைப்பதையும் தமிழீழப் பெருங்கதையாடல் எனச் சொல்லலாம்.

இந்து மதம் என எடுத்துக்கொண்டால் ஒன்றுக்கொன்று வித்தியாசமான பல்வேறு சிறிய, பெரிய பண்பாட்டு அல்லது வழிபாட்டு மரபுகளின் தொகுப்பே இன்றைய இந்துமதம். இன்று பால்தாக்கரேயும் பா.ஜ.கவும் முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலைப் இந்துத்துவப் பெருங்கதையாடல் எனச் சொல்லலாம்.

  • 5. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?

ஈழத்திற்கான தனிநாட்டுக் கோரிக்கையை நான் ஒருபோதும் போகிற போக்கில் நிராகரித்ததில்லை. இன்றைய உலகச் சூழலில் தனிநாட்டுக்கான சாத்தியம் இல்லை என்பதுதான் எனது கருத்து. ஈழப் புலத்தில் இனியொரு ஆயுதம் தாங்கிய போராட்டம் நிகழ்வதையும் நான் விரும்பவில்லை. ஏனெனில் யுத்தம் அவ்வளவு பெரிய பாதிப்பை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளது. ஆனால் தங்களது அரசியலைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் ஈழத்தில் வாழும் மக்களே. அவர்கள் தமிழ் ஈழமே தீர்வென்றும் ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென்றும் முடிவெடுத்தால் அதைத் தடுக்க நான் யார், அதற்கு எனக்கென்ன சக்தியுள்ளது.

ஈழத்தில் நடந்த அகமுரண்களைச் சொல்லி நான் விடுதலையை நிராகரிக்கவில்லை. விடுதலைப் புலிகளையே நிராகரித்தேன். விடுதலை வேறு புலிகள் வேறா என்றொருவர் கேட்கலாம். ஆம் என்பதே எனது உறுதியான பதில்.

புலிகள் ஈழவிடுதலையைப் பெற்றுத் தருவார்கள் என நான் கடந்த இருபது வருடங்களாக எந்த நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ‘புலிகள் தங்களது பாஸிசத்தால் ஈழப் போராட்டத்தின் வரலாறைத் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்’ என ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலுக்கு எழுதிய மதிப்புரையில் கசப்புடன் குறிப்பிட்டேன்.

நான் மறுத்தது புலிகளின் பாஸிச அரசியலையே தவிர தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை அரசியலை அல்ல.

அதுசரி டிசே, இடையிலே தமிழகத்திற்கான விடுதலையை நிராகரிக்கிறேன் என்றொரு குற்றச்சாட்டை ஏன் என்மீது வீசுகிறீர்கள். நான் எப்போது அப்படிச் சொன்னேன். அவர்கள் இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே. ஆரம்பிக்காத ஒன்றை நான் எங்கேபோய் நிராகரிப்பது. ஏன் இந்த அவசர எதிர்வு கூறலும் அதை வைத்து என்மீதான விமர்சனமும். இதைத்தான் ஆடறுக்க முதல் புடுக்கறுக்க நிற்பது என ஊரில் சொல்வார்கள். ஒருவேளை சீமான், மணியரசன் போன்றவர்களின் எழுச்சி உரைகளால் கவரப்பட்டு தமிழகத்தில் தனிநாட்டுக்கான போராட்டம் வெடித்துவிட்டதாகக் கருதுகிறீர்களோ. அவ்வாறு கருதுவது உங்களது உரிமை. ஆனால் ஊகத்தின் அடிப்படையில் எல்லாம் என்னை நோக்கி நீங்கள் கேள்விக்கு மேலே கேள்விகளாக அடுக்குவது கொடுமை.  நான் சொல்லாததையெல்லாம் சொன்னேனென்று நீங்கள் பட்டியலிடுவது கயமை.

  • 6. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

இதெல்லாம் ஒரு கேள்வியா டிசே! இவ்வாறான சாரமற்ற சொல்லாடல்களைக் கேள்விகளாகக் கோர்த்த நீங்கள் கோமாளியா? இல்லை வேலைமெனக்கெட்டுப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நான் கோமாளியா?

காஷ்மீரில் அகமுரண்கள் உள்ளன. எங்குதான் அவை இல்லை. கியூபாவில் இல்லையா. எல்லாவிடத்திலும் உள்ளன.  அந்த அகமுரண்களை தீர்ப்பதற்கான செயற்பாடுகளில் இறங்குமாறு கேட்பதும் உயிர்ப் பலிகள் நிகழ்கையில் அந்தத் தவறுகளைக் களையுமாறு குரல்கொடுப்பதும் அதற்குக் காரணமானவர்களை நிராகரிப்பதும் காஷ்மீரத்து மக்களின் விடுதலைக் குரலோடு நாமும் இணைந்து நிற்பதும்தானே நமது கடமை. இதெல்லாம் மிகவும் அடிப்படை அறம் சார்ந்த விடயங்கள் அல்லவா. இதிற் கூடவா உங்களுக்குச் சந்தேகம் டிசே.

‘துரோக’ அமைப்புகள் என்றொரு சொல்லாடலை உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள். இந்தச் சொல்லாடலால் ஈழத்து அரயசிலையும் மக்களையும் சிதைத்தது போதும்.  தயவு செய்து அதைக் காஷ்மீர்வரை கடத்திச் செல்லாதீர்கள்.

தோழமையுடன் கடைசியாக ஒரு வார்த்தை டிசே! உங்களது கேள்விகளின் நோக்கம் என்னை ஈழமக்களின் விடுதலைக்கு எதிரானவனாக வலிந்து சித்திரிப்பதும்  என்னையொரு முட்டாளாகச் சித்திரிப்பதுவுமே என்று எனக்கு நன்றாகவே புரிகின்றது. உங்களது இரண்டாவது நோக்கம் வேண்டுமானால் ஒருவேளை நிறைவேறலாம். ஆனால் உங்களது முதலாவது நோக்கம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. உங்களால் மட்டுமல்ல யாராலும் அதைச் செய்துவிட முடியாது. ஏனெனில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தத்துவாசிரியர்கள், அரசியல்வாதிகள், போராளிகள் என யாரையும்விட வெகுசனங்கள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பது எனது அனுபவம். ஏனெனில் அவர்கள் அவர்களது வதைகளிலிருந்தும் பாடுகளிலிருந்தும் உண்மைகளைக் கண்டடைகிறார்கள். அந்த உண்மையின் வெளிச்சத்தில் அவர்கள் எங்கள் ஒவ்வொருவரதும் எழுத்துகளையும் செயற்பாடுகளையும் பரிசீலித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

2 thoughts on “டிசே தமிழனின் கேள்விகள்

  1. “அரசியல் கோட்பாடுகளிற்காக மனிதர்கள் உருவாக்கப்பட்டதில்லை. மனிதர்களுக்காகவே அரசியற் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பான பண்பாட்டு – அரசியல் சூழல்களிற்கு ஏற்ப கோட்பாடுகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும், மாறவேண்டும். மாறாதபட்சத்தில் அதற்குப் பெயர் கோட்பாடு அல்ல. அதனது பெயர் வரட்டுவாதம்.”

    “தேசியம், பாஸிசம், சோசலிசம் எல்லாமே வெறும் சொற்கள். அந்த சொற்களின் கீழ் நடத்தப்படும் அரசியல் நடவடிக்கைகள்தான் அந்த சொற்களுக்கான பெறுமதியைக் கொடுக்கின்றன. தேசியம் என்ற கருத்தாடல் தமிழகத்திலும் பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் ஒரேமாதிரியாகத் செயற்படுவதில்லை. அவை வெவ்வேறு வகையான செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. அந்தச் செயற்பாடுகளே நமது ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் காரணமாகின்றன.”

    “எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தத்துவாசிரியர்கள், அரசியல்வாதிகள், போராளிகள் என யாரையும்விட வெகுசனங்கள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பது எனது அனுபவம். ஏனெனில் அவர்கள் அவர்களது வதைகளிலிருந்தும் பாடுகளிலிருந்தும் உண்மைகளைக் கண்டடைகிறார்கள். அந்த உண்மையின் வெளிச்சத்தில் அவர்கள் எங்கள் ஒவ்வொருவரதும் எழுத்துகளையும் செயற்பாடுகளையும் பரிசீலித்துக்கொண்டேயிருக்கிறார்கள்”

    என்னுடைய அனுபவத்திலும் இந்த உண்மைகளைக் கண்டுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *