பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
March 10th, 2011 | : கட்டுரைகள் | Comments (1)

தூற்று . கொம் – பகுதி 4

கீற்று இணையத்தளத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளிற்கு ஷோபாசக்தி பதிலே சொல்வதில்லை, அவ்வாறு பதில் சொன்னாலும் கேள்விகளைத் திசை திருப்பிவிடுகிறார், எனவே என் கேள்விக்கு என்ன பதில்?” எனச் சிலிர்த்து நிற்கிறார் கீற்று ஆசிரியர் ரமேஷ். அவருடைய சிலிர்ப்பு வெறும் அவதூறுப் பிழைப்பு என்பதை இங்கே விளக்குவதற்குத் தோழர்கள் என்னை அனுமதிக்க வேண்டும். தவிரவும் எனது தோழமைகள் குறித்தும் அவதூறுகளால் பின்னப்பட்ட சில பல கேள்விகளைக் கேட்டு அதற்கும் பதில் எங்கே எனக் கேட்டு அண்ணாமலையாகத் தொடை தூக்குகிறார் ரமேஷ்.

என்னோடு சேர்த்து கீற்றுவின் சேறடிப்புகளிற்கு உள்ளான தோழர்கள் எல்லோருமே கீற்றின் அவதூறுகளிற்குப் பதில் சொல்லிக்கொண்டிருப்பது வீணாய்ப்போன வேலை என்றும் அவ்வாறு பதில்களைச் சொல்வது கீற்றுவை மேலும் மேலும் அவதூறுகளை உற்பத்திச் செய்யவே ஊக்குவிக்கும் எனவும் பதில்களைச் சொன்னாலும் கீற்று சலிக்காமல் புதுப் புது அவதூறுகளை உற்பத்திசெய்து பரப்பிக்கொண்டேயிருக்கும் எனவும் கருதுகிறார்கள். எனவே அவர்கள் கீற்றுவின் அவதூறுகளிற்குப் பதில் அளிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தங்களிற்கு உருப்படியான வேறு வேலைகள் இருக்கின்றன எனச் சொல்லும் அவர்கள், கருமமே கண்ணாயிருந்து கீற்றுவின் அவதூறுகளிற்கு வரிசையாகப் பதில்களை எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம்அவதூறுகளிற்குப் பதில் எழுதுவதை நிறுத்துமாறு பூரண அறிவுரைகளைச் சொல்லிக் களைத்து, எனது காந்தீயப் புன்னகையில் கடுப்பாகி உனக்குச் சூடு, சுரணையே இல்லையா எனக் கேட்கவேறு செய்கிறார்கள்.

உள்ளதைச் சொன்னால் என்ன! என்னிடம் அன்பு, நட்பு, காதல் போன்ற உணர்வுகள் எல்லாம் எவ்வாறு அளவுக்கதிகமாகவே இருக்கின்றவோ அதற்கு நேரெதிராகச் சூடு, சுரணையெல்லாம் என்னிடம் மிக அரிதாகவே உள்ளன. போதாததற்கு இப்போது காந்தியார் குறித்த நூல்களை நான் தீவிரமாகப் படித்துக்கொண்டிருப்பதால் காந்தியாரைப் போலவே எந்தத் தரப்புகளையும் ஒதுக்கிவைக்காமல் எல்லாத் தரப்புகளுடனும் உரையாடுவதற்கு என்னைத் தயார் செய்ய நான் முயன்றுகொண்டுள்ளேன். அதற்காக அவதூறுகளுடனும் அடிமுட்டாள்தனத்துடனுமா நீ உரையாடுவாய்?’ என நீங்கள் என்னைக் கேட்கக்கூடும். பெரியாரை அடியொற்றிச் சொல்வதென்றால், காந்தியார் மகாத்மா! அவருக்கு உரையாட அம்பேத்கரும் ஜின்னாவும் கிடைத்தார்கள், நான் வெறும் ஆத்மா எனக்குக் கீற்றுவும் யமுனா ராஜேந்திரனும்தான் கிடைக்கிறார்கள். அதற்கு நானா பழி!

சரி அப்படி கீற்று என்னதான் என்னிடம் கேள்விகளைக் கேட்டது, எந்தக் கேள்விகளிற்குப் பதில் சொல்ல முடியாமல் நான் திக்குமுக்காடிப் போய்விடுகிறேன்? தேசிய சுயநிர்ணயம் குறித்தும் ஆசியப் பொருளுற்பத்தி முறைமை குறித்தும் அமைப்பியல் குறித்தும் காஃப்கா குறித்துமா கீற்று என்னிடம் கேள்விகளை வைத்தது! உனக்குக் குடிப்பதற்குப் பணம் எங்கிருந்து வருகிறது, எவ்வாறு பயணம் செய்கிறாய், யாருக்குப் பணம் கொடுத்தாய், கருணாவிடம் காசு வாங்குகிறாயா, கையைப் பிடிச்சு இழுத்தியா? இந்த லெவல்தானே கீற்றுவின் கேள்விகள். இந்தக் கேள்விகளிற்குப் பொதுவாகவே வேறு யாருமென்றால் ‘ FUCK OFF’ என ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு வேறுவேலை பார்க்கப் போய்விடுவார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. மிகப் பொறுப்பாக எனது விளக்கத்தை எழுதிக் கீற்றுவிற்கு அனுப்பிவைத்தேன். அங்கே பின்னூட்டப் பகுதியில் பதில் பிரசுரமுமாயிற்று. ஆனால் அவர்களிற்குத் தேவையானவை பதில்கள்களோ உண்மைகளோ அல்ல. அவர்கள் அவதூறுகளால் மட்டுமே அரசியல் செய்பவர்கள். எனவே அவர்கள் மீண்டும் கூக்குரலிடுகிறார்கள்:ஷோபாசக்தி பதில் சொல்வதில்லை!

இந்த இடத்தில் நீங்கள் ஒரு தகவல் தொழில் நுட்பத் தகவலையும் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழில் அண்ணளாவாக அய்நூறு இணையத்தளங்கள் இயங்குகின்றன. வலைப்பதிவுகள் அய்யாயிரத்திற்கும் அதிகம். பேஸ்புக்கில் எனக்கு இரண்டாயிரம் தொடர்புகள். ட்விட்ரிலும் சிலநூறு தொடர்புகள். இவைகளிலிருந்து கேள்விக் கணைகள் என்னை நோக்கி இடைவிடாமல் பறந்துகொண்டேயிருக்கினறன. நானும் சின்ன ஆள், பெரிய ஆள் என முகம் பார்க்காமல் பதில்களைச் சொல்லியவாறேயிருக்கிறேன். ஒட்டுமொத்தக்குமுதம் வரலாற்றில் அரசு சொன்ன மொத்தப் பதில்களையும் விட நான் இணையத்தில் சொன்ன பதில்கள் அதிகமானவை. இதை இங்கே நகைச்சுவைக்காக அல்லாமல் மகிழ்ச்சி ததும்பவே பதிவு செய்கிறேன்.

இதில் என்னவொரு நடைமுறைப் பிரச்சினையெனில் ஒரே கேள்வியைப் பத்துப்பேர்கள் கேட்பார்கள். சில பேருக்கு சொந்தமாகக் கேள்விகள் கேட்கக் கூடத் தெரியாது எனச் சொன்னால் நம்புவீர்களா! ஆனாலும் அவர்களிற்கும் கேள்விகளை எழுப்ப ஆசை. அவர்கள், இன்னொருவர் ஏற்கனவே இன்னொரு தளத்தில் எழுப்பிய கேள்வியைக் கட் செய்து தங்களது இணையத்திலோ வலைப்பதிவிலோ முகப்புத்தகத்திலோ பேஸ்ட் செய்துவிட்டு எங்கே பதிலெனக் கேட்டு இறுமாந்திருப்பார்கள். மூலக்கேள்விக்கு நான் பதிலளித்து மூன்று வருடங்களாகி விட்டன என்பது கூடப் பாவம் அவர்களிற்குத் தெரிந்திருக்காது.

கீற்றுவும் அதைச் செய்வதுண்டு. கீற்றில் மினர்வா எழுப்பிய கேள்விகள், ரமேஷ் எழுப்பிவரும் கேள்விகளில் பல அவ்வகையான கட் அன்ட் பேஸ்ட் வெற்று வேட்டுகளே. எனக்கு மட்டும் கட் அன்ட் பேஸ்ட் செய்யத் தெரியாதா என்ன. நானும் முன்னமே அளித்த பதில்களை கட் அன்ட் பேஸ்ட் செய்து தட்டிவிடுவேன். ஆனாலும் அவர்கள் என்ன சொல்கிறார்கள்: ஷோபாசக்தி பதிலே சொல்வதில்லை!!

முன்பு, வசைகளிற்குப் பதில் சொல்வதில்லை என ஒரு பாஸிசக் கொள்கையை வைத்திருந்தேன். காந்தியார் எனது கண்களைத் திறந்ததன் பின்பு வசைகளிற்கும் சீரிய பொறுப்புணர்வுடன் பதிலளிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனாலும் குமுதம் அரசுவிற்கு ஒரு அலுவலகம் இருக்கிறது, ஆளம்புகள் துணையிருக்கிறது. அவரால் எல்லாக் கேள்விகளிற்கும் பதிலளித்துவிட முடியும். அதற்குச் சம்பளமும் உண்டு. ஆனால் நான் தனியாள். எனவே திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகளை நான் தவிர்த்துத்தானே ஆக வேண்டியிருக்கிறது. அந்தத் தவிர்ப்புக் கூட வேறு வேலைகளைச் செய்வதற்காக அல்ல. புதிய கேள்விகளிற்குப் பதிலளிப்பதற்கான நேரத்தைத் தேடிக்கொள்வதற்காகவே என்னிடம் திரும்பத் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகளிற்கு சிலவேளைகளில் என்னால் பதில் அளிக்க முடியாமல் போய்விடுகிறது. அது எனக்கு உண்மையிலேயே வருத்தம்தான். ஏனெனில் காந்தியார் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகளிற்குக் கூடப் பொறுமையாகப் பதிலளித்துப் புன்னகைப்பதுண்டாம். அவர் மகாத்மா!

கீற்றுவில் எப்போதுமே கையைப் பிடிச்சு இழுத்தியா வகைக் கேள்விகளே வருவதில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். யமுனா ராஜேந்திரன், பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் அவ்வப்போது நம்மைக் குறிவைத்து ஸெமி அரசியல் கட்டுரைகள் எழுதுவதுண்டு. தவிரவும் அவர்கள் பதில் சொல்லுங்கள் எனத் தொடை தட்டுவதும் கிடையாது. ஆனாலும் நமக்குக் கடமையென்று ஒன்றிருக்கிறதல்லவா. நான் அவர்களிற்கு உடனுக்குடனேயே க்ளீனாகப் பதில் தெரிவித்துவிடும் வழக்கமுள்ளவன். பதிலைக் கீற்றுவில் எழுதுவது கிடையாதே தவிர எனது வலைப்பதிவுக் கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் அவர்களது கட்டுரைகளிற்கான எதிர்வினையை நான் தவறாமல் பதிவு செய்தே வந்திருக்கிறேன்.

ஓர் எடுத்துக்காட்டிற்காக கீற்றுவில் யமுனா ராஜேந்திரன் எழுதிய புலி (எதிர்ப்பு) ஆட்டம்அரசன் அம்மணமாகத்தான் வருகிறார் என்ற கட்டுரைக்கு நான் எழுதியிருந்த பதில் கட்டுரையின் சுருக்க வடிவத்தைக் கீழே பார்க்கிறீர்களா தோழர்களே:

****

தோழர் .மார்க்ஸ் இதுவரை எத்தனையோ உண்மை அறியும் குழுக்களிற்குத் தலைமை தாங்கிச் சென்று ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் சந்திக்காத அவதூறுகளை அவர் அண்மையில் வெளிப்படுத்திய ஓர் உண்மையால் அவர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அவர் தனது அண்மைய நூலொன்றின் முன்னுரையில் யமுனா ராஜேந்திரன் மூடத்தனமானவர் என்ற உண்மையை வெளியிட்டுள்ளதாலேயே புதிய அவதூறுகளை அவர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இவ்வளவிற்கும் இந்த உண்மையை . மார்க்ஸ்தான் முதன் முதலில் கண்டுபிடித்துள்ளார் என்று நாம் கருதினால் அது வரலாற்று வழு. ஏற்கனவே பேராசிரியர்கள் சிவசேகரம், நுஃமான், தோழர் எஸ்.வி.ராஜதுரை போன்ற பல அறிஞர்கள் கண்டெடுத்துத் தங்கள் எழுத்துகளில் நிறுவிக்காட்டிய உண்மையொன்றையே . மார்க்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார் என்று மட்டுமே நாம் சொல்லிக்கொள்ளலாம். இந்த உண்மையை .மார்க்ஸ் எழுதியதால் கீற்று இணையத்தளத்தில் யமுனா ராஜேந்திரன், .மார்க்ஸை இலக்கு வைத்து அரசன் அம்மணமாக வருகிறான் என்று ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

யமுனா ராஜேந்திரனுடன் வாதிடுவது, கருத்துப் போர் புரிவதெல்லாம் மிகவும் துன்பமானது. அந்தத் துன்பத்தை தந்தை பெரியாரின் சொற்களில் நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது என்று விளக்கலாம். ஒவ்வொரு தடவையும் பதினைந்து வருடங்களிற்கு முன்பே பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட கேள்விகளோடு மறுபடியும் மறுபடியும் யமுனா வருவார். பத்து வருடங்களுக்கு முன்னமே அவரின் பதில்களின் குளறுபடிகளை நாம் மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டியிருந்தபோதும் அதே பதில்களுடனும் வருவார். கேள்வியும் ரீமிக்ஸ், பதிலும் ரீமிக்ஸ். ஆனால் உயிர்மை, கீற்று, தேசம், இனியொரு என்று புதுப் புதுத் தியேட்டர்கள்.

யமுனாவின் இந்த மாயப் போரின் கடைசி அட்டாக் தான் அந்தக் கீற்றுக் கட்டுரை. .மார்க்ஸை இலக்கு வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் வழமைபோலவே என்னையும், சுகன், ஆதவன் தீட்சண்யா, பௌசர், சுகுணா திவாகர் போன்ற தோழர்களையும் இணைத்தே அவர் பழித்திருக்கிறார். இம்முறை தோழர். எஸ்.வி. ராஜதுரையையும் தனது அவதூறு வளையத்திற்குள் கொண்டுவர யமுனா முயற்சித்துள்ளார். “எஸ்.வி.ஆருடையதும் .மார்க்ஸினதும் தற்போதைய ஈழம் குறித்த அரசியல் பார்வைகள் தமிழ்த் துவேஷ சிங்கள இனவாத மார்க்ஸியர்களின் பார்வையை ஒத்ததுஎன்கிறார் யமுனா. இவர்களது மனித உரிமைப் பிரகடனங்கள் ஈழத்தைப் பொறுத்தவரை பசப்பலானவை என்றும் சொல்கிறார் யமுனா.

கடந்த வருடம் திருவனந்தபுரத்தில்புலம்பெயர்ந்த இலங்கையர்களிற்கான சர்வதேச ஒன்றியம்’ (அய்.என்.எஸ்.டி ) நடத்திய கருத்தரங்கில் எஸ்.வி.ஆர். கலந்து கொண்டதே யமுனாவின் குற்றச்சாட்டின் அடிப்படை. நான் அறிந்தளவிற்கு அய்.என். எஸ்.டி. குறித்து முதலில் சொல்லிவிடுகிறேன்: புலம் பெயர்ந்த இலங்கையர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து செயற்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் சுனந்த தேசப்பிரிய, சனத் பாலசூரிய, மஞ்சுள வெடிவர்த்தன, எழுபதுகளில் ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினராயிருந்த ரஞ்சித், .சுசீந்திரன், உயிர்நிழல் லஷ்மி, சரிநிகர் சரவணன், சிவராசன், கிருஷ்ணா போன்றவர்கள் இந்த அமைப்பை வழிநடத்திச் செல்பவர்களில் முதன்மையானவர்கள். கறாரான அரசியல் வேலைத்திட்டங்கள் இவர்களிடம் இல்லாத போதும் இலங்கையில் அனைத்து மக்களிற்குமான சனநாயக உரிமைகளும் ஊடகச் சுதந்திரமும் உறுதி செய்யப்படவேண்டும் என்ற முன்னோக்கில் இவர்கள் சர்வதேச நாடுகளில் கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். அரசின் மனித உரிமை மீறல்களை பகிரங்கப்படுத்தி அறிக்கைகளையும் பிரசுரங்களையும் வெளியிடுகிறார்கள். ( இலங்கை அரசால் கடத்தப்பட்டு காணமாற் செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரகீத் எலியனாகொடயின் துணைவியார் சந்தியா எலியனாகொடயை அய்ரோப்பாவிற்கு அழைத்துவந்து இலங்கை அரசின் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குறையை அம்பலமாக்கி பல கருத்தரங்குகளை நடத்தியவர்களும் இவர்களே) குறிப்பாக இவர்கள் மகிந்த ராஜபக்ஷவின் அரசைக் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருப்பவர்கள். சனல் 4ல் வெளியாகிய இலங்கை அரசபடைகளின் படுகொலைகள் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டவர்கள் அய்.என்.எஸ்.டி என்றே இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது. குறிப்பாக தோழர் ரஞ்சித்தை அரசு குற்றஞ்சாட்டியது. இதனால் இவர்கள் முன்பு புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் இப்போது அய்க்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். தங்களது அமைப்பிற்கு அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்பவர்கள்.

இந்த அமைப்பினர்தான் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்சிங்களமுஸ்லிம் அரசியற் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து திருவனந்தபுரத்தில் இலங்கை அரசியல் பிரச்சினைப்பாடுகள் குறித்த கருத்தரங்கொன்றை நடத்தினார்கள். இவர்கள் நடத்திய இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியதால் எஸ்.வி.ஆர். தமிழ் துவேஷியாகவும் சிங்கள இனவாதத்தன்மையுடையவராகவும் மாறிவிடுவாரா? இப்படிச் சொல்வதற்கு எஸ்.வி.ஆரின் எழுத்துகளிலிருந்தோ பேச்சுகளிலிருந்தோ ஏதாவது ஆதாரம் காட்ட யமுனா தயாரா? மூடனுக்கும் புரியக் கூடியவகையில் நான் திரும்பவும் நிதானமாகக் கேட்கிறேன்: சிங்கள இனவாதத்திற்கு ஆதரவான பேச்சையோ தமிழ் மக்களிற்கு எதிரான துவேஷப் பேச்சையோ எஸ்.வி.ஆர் எங்காவது பேசியுள்ளாரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்தத் தீராத பழியை யமுனா, எஸ்.வி.ஆர். மீது சுமத்துகிறார். எஸ்.வி.ஆரின் மனித உரிமை கோரிய பேச்சுகள் பசப்பலென்று யமுனா எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறார்? கட்டுரையில் ஒரேயொரு மேற்கோளைத் தன்னும், ஒரேயொரு ஆதாரத்தைக் கூட யமுனா எழுதவில்லையே. ஏனிந்த அவதூறுப் பிழைப்பு?

உயிர் எழுத்து இதழில் ரஞ்சித்தைக் குறித்து மனித உரிமைக் காவலர் என்று பச்சைப் பொய்யை எழுதியுள்ளார் எஸ்.வி.ஆர் என்று அடுத்த விசக் கத்தியைச் சொருகுகிறார் யமுனா. யமுனாவுக்கு ரஞ்சித்தைக் குறித்து எதுவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ரஞ்சித் ஜே.வி.பியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவர். 1971 கிளர்ச்சியை நடத்திய தலைவர்களில் ஒருவர். ரோகண விஜேவீர சிறைப்பட்டு யாழ் டச்சுக்கோட்டையில் அடைக்கப்பட்டிருந்தபோது ரோகணவை மீட்க ஜே.வி.பியினர் கோட்டையின் மீது நடத்திய தாக்குதலைத் தலைமைதாங்கி வந்தவர்களில் ஒருவர். தோல்வியில் முடிந்த அந்தச் சிறையுடைப்பு நடவடிக்கையில் கைதாகி ஊறாத்துறைக் கடற்கோட்டையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டவர். 1977ல் விடுதலையாகி ஜெர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர். தனது போராட்ட அனுபவங்களை ஏப்ரல் கண்ணீர் என்ற நூலாக எழுதி வெளியிட்டவர். ஜே.வி.பி.மீது விமர்சனங்களை வைத்து அந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்.அந்த முன்னாள் ஜே.வி.பி தோழர் இன்று இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களை சர்வதேசமெங்கும் பரப்புரை செய்வதில் ஓய்வொழிச்சலற்ற மனிதவுரிமைப் போராளி.

தோழர் ரஞ்சித் இலங்கை அரசிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார் என்பது மாவீரன் யமுனாவின் குற்ச்சாட்டு. இலங்கையிலிருந்த ரஞ்சித்தின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கை அரசால் குறிவைக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கும் அந்த ஒளிநாடாவுக்கும் தொடர்பில்லை என ரஞ்சித் இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். வீரியம் பெரிதல்ல காரியமே பெரிது என்பதைக் களப்போராளிகள் புரிந்துகொள்வார்கள். சிங்களத்திலேயே எனக்குப் பிடிக்காத வார்த்தைசமாவெயன்என்று ரஞ்சித் சொல்ல இதுவொன்றும் ரமணா திரைப்படமல்ல, ரத்தமும் சதையுமான உயிர்களும் வாழ்க்கையும். ரஞ்சித்தை மனிதவுரிமைப் போராளி இல்லையென்று நிறுவுவதன் மூலம் யமுனா என்ன சாதிக்க நினைக்கிறார். ரஞ்சித்தின் குடும்பம் இலங்கை அரசிடம் சிக்கிச் சீரழிய வேண்டுமென்றா யமுனா கருதுகிறார்.

இனி .மார்க்ஸிடம் வருவோம். தமிழகத்தில் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளின் அரசியலையும் மனிதவுரிமை மீறல்களையும் விமர்சிக்கத் தயங்கிய காலத்திலேயே புலிகளை விமர்சித்து எழுந்த மிகச் சில குரல்களில் .மார்க்ஸுடைய குரல் முதன்மையானதும் வலுவானதும். இதனாலேயே அவர்மீது இலங்கை அரசின் ஆதரவாளர் என்று தமிழ்த் தேசியவாதிகள் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறதே அல்லாமல் .மார்க்ஸின் எழுத்துகளிலிருந்து ஒரு சொல்லைத் தன்னும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ இந்திய அரசுக்கு ஆதராவாகவோ இவர்களால் காட்ட முடிவதில்லை. புலிகளை எவ்வளவுக்கு விமர்சித்தாரோ அதைவிடப் பன்மடங்கு இந்தியஇலங்கை அரசுகளை ஈழப் பிரச்சினையில் மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைகளிலும் எதிர்த்து நிற்பவர் அவர். எழுத்தோடு நின்றுவிடாமல் இடையறாத அரசியற் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருப்பவர். அவரையெல்லாம் தமிழ் துவேஷியென்றும் சிங்கள இனவாதத்தைப் பேசுகிறவரென்றும் பசப்பலாக மனித உரிமைகள் குறித்துப் பேசுபவரென்றும் யமுனா எழுதுவதற்கு எதாவது பொருளிருக்கிறதா? யோக்கியமிருக்கிறதா?

.மார்க்ஸ் ஒன்றும் விமர்சிக்கப்படக் கூடாதவரல்ல. ஆனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் வெறுமனே காழ்ப்புணர்வுடன் யமுனா பழிப்பும் நெளிப்பும் மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் யாரால்தான் என்ன செய்ய முடியும். இந்த பழிப்புக்கெல்லாம் எப்படிப் பதில் சொல்வது? இந்தப் புளிப்புக்கெல்லாம் மூடத்தனம் என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறென்ன பதிலிருக்கிறது?

யமுனா சில மாதங்களிற்கு முன்பு உயிரோசையில் எழுதிய விடுதலைப் புலிகளின் சாதி: .மார்க்ஸ், ரவிக்குமார், ஷோபாசக்திஎன்ற கட்டுரையிலும் இதே கரைச்சல்தான். பலதடவைகள் நானே பல்வேறு இடங்களில் பதில் சொல்லித் தீர்த்த, விளக்கம் சொல்லி வெறுத்துப்போன கேள்விகளையும் பிரச்சினைகளையும் அப்படி ஒரு விவாதமே எக்காலத்திலும் எங்கேயும் நடவாதது போன்ற பாவனையுடன் அந்தஉயிரோசைக் கட்டுரையில் யமுனா எழுதியிருப்பார். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்திலிருந்து இசுலாமியர்களைப் புலிகள் கட்டிய துணியுடன் விரட்டியடித்ததற்குக் காரணத்தைச் சில இஸ்லாமியர்கள் இராணுவத்திற்கு உளவு சொன்ன கதையில் ஆரம்பித்திருக்கிறார் யமுனா. நடந்தது இனச் சுத்திகரிப்பே தவிர வேறல்ல என்பது எங்களது கருத்து. அந்த வெளியேற்றம் புலிகள் இந்துமத நோக்கிலிருந்து நடத்தியதல்ல என்கிறார் யமுனா. தமிழ்த் தேசியத்திற்கும் இந்துமதத்திற்கும் உள்ள உறவுகள் குறித்து மறுபடியும் நாமொருமுறை விளக்க வேண்டிவரும். புலிகள் இயக்கத்திற்குள் சாதி பார்ப்பதில்லை என்பார் யமுனா. அது எங்களிற்கும் தெரியும் எங்களின் விமர்சனமெல்லாம் புலிகள் சாதியொழிப்பை வீரியமாக முன்னெடுக்கவில்லை என்பதும் சாதியொழிப்புப் போராட்ட அமைப்புகளைத் தடைசெய்தார்கள் என்பதுமே என்போம் நாம். அதிபர் இராசதுரையின் கொலையை சாதியப் படுகொலையாகப் பார்க்கக் கூடாது என்பார் யமுனா. அதிபரின் கொலை வெறுமனே சனநாயக மறுப்பு மட்டுமல்ல அங்கே கொல்லப்பட்டது ஒரு தலித் அறிவுஜீவியும் போராளியும் என்போம் நாம். மறுபடியும் இரண்டுமாதம் கழித்து இதே பிரச்சினைகளை வேறு இணையத்தளத்தில் வேறு தலைப்பில் எழுதுவார் யமுனா. தலைப்பிலும் பெரிய மாறுதல்கள் இருக்காது. இந்தக்கட்டுரையில்.மார்க்ஸ், ஷோபாசக்திஎன்றிருந்தால் அடுத்த கட்டுரையில் ஷோபாசக்தி, .மார்க்ஸ் என்றிருக்கும்.

இந்த எல்லாத் துன்பங்களையும் சகித்துக்கொண்டாலும் கீற்று இணையத்தளத்தில் யமுனா தன்னைநானொன்றும் விடுதலைப் புலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லைஎன்று சொல்வதைத்தான் நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. புலிகளின் வீழ்ச்சி உறுதியாகத் தெரியும்வரைக்கும் யமுனா எங்கே எப்போது புலிகளை விமர்சித்தார்? புலிகளின் வீழ்ச்சி உறுதியானவுடன் தவித்த முயல் அடிக்கும் தந்திரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பட்டும்படாமலும் அவர் இப்போது புலிகளை விமர்சிக்கிறாரே தவிர விடுதலைப் புலிகளின் எழுச்சிக்காலத்தில் அவர்கள் ஈழத்திலும் புகலிடத்திலும் வகைதொகையற்ற மனித உரிமை மீறல்களையும் கொலைகளையும் நடத்தியபோது அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? அவர் அப்போது புலிகளின் பத்திரிகையானஈழமுரசுவிலும் புலிகளின் வானொலியான IBCயிலும் கூலிக்குப் பொறுக்கிக்கொண்டிருந்தார்.

சபாலிங்கம் படுகொலை, அதிபர் இராசதுரை படுகொலை, வெருகல் படுகொலைகள் போன்ற எண்ணற்ற கொலைகள் நடந்த போதெல்லாம் யமுனாவின் விமர்சனக் குரல் எங்கே போயிருந்தது? பள்ளிவாசல் படுகொலைகள் குறித்து யமுனா எங்கே தன் விமர்சனத்தையோ கண்டனத்தையோ வைத்திருக்கிறார்? புலம் பெயர் தேசங்களிலே மாற்றுக் கருத்தாளர்கள் புலிகளால் வதைக்கப்பட்டபோது யமுனாவின் விமர்சனக் குரல் எங்கே ஒளிந்திருந்தது? அப்போது அது வாரம் 500 பிராங்குகளிற்கு புலிகளின்ஈழமுரசுபத்திரிகையில் அடகு வைக்கப்பட்டிருந்ததுதானே உண்மை. புலிகள் கம்யூனிஸ்டுகளை, தலித் தலைவர்களை, தொழிற்சங்கவாதிகளை, எழுத்தாளர்களைக் கொல்வதிலும் கட்டாயப் பிள்ளை பிடிப்பிலும் மும்மூரமாக இருந்தபோது யமுனா ராஜேந்திரனின் விமர்சனக் குரல் எங்கே போயிருந்தது. அந்தக் குரல் அப்போது புலிகளிள் IBC வானொலியில் குழைந்துகொண்டிருந்தது. இதுதானே உண்மை! இதுதானே யமுனா ராஜேந்திரன் புலிகளை விமர்சனத்துடன் ஆதரித்த இலட்சணம். பொறுக்கும் வரை புலிகளிடம் பொறுக்கிவிட்டு எல்லாம் முடிந்தவுடன் வெளியே வந்துபுலிகள் மீதும் எனக்கு விமர்சனமிருக்கிறதுஎன்று சொல்வதைத்தான் பசப்பலான மனிதவுரிமைப் பேச்சு என்பது.

நான் விடுதலைப் புலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை என்று யமுனா சொல்வதின் மறுவளமான அர்த்தம் அவர் விமர்சனபூர்வமான புலிகளின் ஆதரவாளர் என்பதுதானே! அவரே சொல்லிக்கொள்ளும் அவருடைய மார்க்ஸியப் பகுப்பாய்வு முறைமையில் எதற்காக அவர் புலிகளை ஆதரிக்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும். அவர்களின் ஒட்டுமொத்த சனநாயக மறுப்பிற்காகவா, அவர்கள் இஸ்லாமிய இனச் சுத்திகரிப்புச் செய்ததாலா, சிங்கள அப்பாவி மக்களைக் கொன்றதாலா, அவர்கள் புகலிடங்களில் இந்துக் கோயில்களைக் கட்டியதாலா, அவர்கள் சிறுவர்களை கட்டாயமாகப் படையில் சேர்த்ததாலா, அவர்கள் ராஜினிகோவிந்தன்செல்வி போன்றவர்களைக் கொன்றதாலா, கம்யூனிஸ்ட் அமைப்புகளை ஈழத்தில் தடை செய்ததாலா, இல்லை இறுதியில் மூன்று இலட்சம் மக்களை மனிதத் தடுப்பரண்களாகக் கட்டாயமாக நிறுத்தி வைத்ததாலா அல்லது இவை எல்லாவற்றுக்காகவுமா எதற்காக எந்தப் புள்ளியில் யமுனா புலிகளை விமர்சனத்துடன் ஆதரிக்கிறார் என்பதை அவர் விளக்கி வைக்க வேண்டும்.

யமுனா ராஜேந்திரன் பொதுவாகவே இவ்வாறான தனது அவதூறுக் கட்டுரைகளின் முடிவில் ஒரு வழக்கமான முடிவுரையை வழங்குவதுண்டு. ஷோபாசக்தி பேசும் எதிர்ப்பு அரசியலும் விளிம்புநிலை அரசியலும் போலியானவை, ஷோபாசக்தியின் அடையாளத்தைத் தக்க வைப்பதற்கே அவர் தனது போலி அரசியலை உபயோகப்படுத்துகிறார் என்பதாக அந்த முடிவுரை அமையும். கட்டுரைக்குத் தக்கவாறு அவ்வப்போது என்னுடன் இணைத்து சுகனோ, தலித் மேம்பாட்டு முன்னணியினரோ யமுனாவால் வசைபாடப்படுவார்கள். அதை அண்மைய கீற்று மற்றும்உயிரோசைக்கட்டுரைகளிலும் அவர் செய்திருக்கிறார்.

எங்களுடைய ஈழப் போராட்டம் குறித்த பார்வையும் எழுத்தும் செயற்பாடுகளும் போதாமைகளைக் கொண்டிருக்கலாம். நாங்கள் ஈழப் போராட்டத்தில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பாத்தியதை கோரும் தைரியமும் எங்களிற்குக் கிடையாது. நாங்கள் தொட்டது எதுவுமே துலங்காதது மட்டுமல்ல அவை காலப்போக்கில் பாஸிச அதிகார மையங்களாகவும் மாறியிருந்த நிலையில் நாங்கள் ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்திலிருந்து விலகிச் சென்றோம். ஈழப் போராட்டத்திற்காக அந்த இந்தத் தியாகங்களைச் செய்தோம் என்று நாங்கள் எந்த உரிமையையோ அனுதாபத்தையோ கோருவதுமில்லை. ஆனால் ஈழப் போராட்டத்தையோ ஈழப் போரில் விழுந்த கொலைகளையோ யுத்தத்தால் அகதிகளாகச் சிதறிச் சென்ற மக்களையோ நானோ எனது தோழர்களோ எங்களது சுய இலாபத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது.

ஆனால் நீங்கள் எப்படி யமுனா? ஈழத்தில் யுத்தத்தால் கொல்லப்பட்ட மக்களின் பெயராலும் அகதிகளாக உலகெங்கும் அலையும் ஈழத்து ஏதிலிகளின் பெயராலும் உங்கள் இருப்பைக் காப்பாற்றியவரல்லாவா நீங்கள். ஈழத்தையே இன்றுவரை நீங்கள் கண்ணால் கண்டிராதபோதும் ஈழத்திலிருந்து துன்பமும் துயரமும் அடைந்தேன் என்று பொய்யுரைத்து அந்த யுத்தத்தையும் இரத்தத்தையும் கண்ணீரையும் சாட்சிகளாக்கி நோகாமல்ஈழத்து அகதிஎன்று கள்ள சேர்ட்டிபிகட் முடித்து இலண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றவரல்லவா நீங்கள்! நீங்களா எங்களைப் பார்த்துப் போலிகள் என்றும் இருப்புக்காக அலைபவர்களென்றும் தூற்றுவது? நீங்களா எங்களைப் பார்த்து புலி எதிர்ப்பு அரசியலால் பிழைப்பவர்கள் என்று எழுதுவது? உங்களிற்கு கடுகளவேனும் மனச்சாட்சியிருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள். எப்போதும் போலவே தொடர்ந்து விவாதிப்பேன். அந்தத் துன்பியல் அனுபவத்திற்கு நான் தயாராகவேயிருக்கிறேன். (: http://www.shobasakthi.com/shobasakthi/?p=574)

****

நல்லவேளையாக அந்தத் துன்பியல் அனுபவத்தை யமுனா ராஜேந்திரன் இன்றுவரை எனக்குத் தரவேயில்லை. எனினும் அவர் வெவ்வேறு இடங்களில் தனது மாயப் போரைத் தொடர்ந்தும் நடத்திக்கொண்டிருக்கிறார் என்பது வேறுகதை. கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கக் கோரிய அறிக்கையை கீற்று ஆசிரியருடன் இணைந்து ஒருங்கமைத்தவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன் என்பதும், கீற்றில்தமிழ்த் துவேஷ சிங்கள இனவாத மார்க்ஸியர்களின் பார்வையைக் கொண்டவர் என யமுனாவால் சேறடிக்கப்பட்ட தோழர். எஸ்.வி.ராஜதுரை அந்த அறிக்கையில் முதலாவது ஆளாகக் கையொப்பமிட்டிருப்பதும் ஒரு முரண்நகை. (உண்மையில் அந்த அறிக்கையில் முதலாவது ஆளாகக் கையெழுத்திட்டிருந்தவர் கோவை ஞானியே. எனினும் ஞானி எழுத்தாளர் மாநாடு குறித்த தனது கருத்தைப் பின்பு மாற்றிக்கொண்டு மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்ததால், இரண்டாவது ஆளாகக் கையெழுத்திட்டிருந்த எஸ்.வி.ஆரையே கையழுத்திட்ட முதலாவது ஆளாகப் புரமோட் செய்திருக்கிறேன். தவறெனில் பெரியவர்கள் மன்னிக்க.)

யமுனாவோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்புகளுடனும் எண்ணற்ற விவாதங்களை நான் கடந்த காலங்களில் செய்திருப்பதைத் தோழர்கள் அறிவீர்கள். குறிப்பாக ஈழப் பிரச்சினையில் முற்றிலும் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட தோழர்.தியாகுவும் நானும் செய்த நீண்ட உரையாடலை வடலி பதிப்பகம் கொலைநிலம் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளது. எல்லாத் தரப்புகளுடனும் உரையாடலுக்கு நான் எப்போதும் தயாராகவேயிருக்கிறேன். “விவாதங்களும், சர்ச்சைகளும் உண்மையான போராளிகளுக்கு கிடைத்த வாய்ப்புக்களாகும். இவற்றின் மூலமாக அவர்கள் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் கற்றுக்கொள்ளவும், பலரை வென்றெடுக்வும் முடிகிறது என ரகுமான் ஜான் மாஸ்டர் சொல்வதை நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன்.

ஷோபா கேள்விகளிற்குப் பதிலளிக்கவோ விவாதங்களிற்கோ தயாரில்லை எனக் கீற்று ரமேஷ் பொய்யாகக் குமுறுவதும் தொடை தூக்கிச் சிலிர்ப்பதும் அவரது அவதூறு அரசியலின் அருவருக்கத்தக்க இன்னொரு பரிமாணமேயன்றி வேறொன்றுமில்லை. நாய் மின்கம்பத்தின் ஓரத்தில் சிறுநீர் கழிக்கும்போது எப்போதும் ஒரு காலைத் தூக்கியவாறே சிறுநீர் கழிக்கும். தான் சிறுநீர் விடும் பெருவிசையில் மின்கம்பம் ஆடிப்போய் சாய்ந்தாலும் சாயக்கூடும் என்ற எண்ணத்திலேயே அது தன்மீது சாய்ந்து விழும் மின்கம்பத்தை தாங்கிப் பிடிப்பதற்காகத் தனது காலைத் தூக்கி தயார்நிலையில் வைத்திருக்குமாம். எனினும் நாயின் சிறுநீரில் மின்கம்பம் ஒருபோதும் சரியவே போவதில்லை. இந்தக் கதையில் வரும் மின்கம்பம் எனக்கான உவமையல்ல. அது உண்மைக்கும் நேர்மைக்குமான உவமையே.

பிரபாகரன் பாசிஸ்ட், ரோகண புரட்சியாளன்ஷோபாசக்தி என்று கீற்று இணையத்தளத்தில் அறிஞர் நடராசனார் எழுதிய அறியாமையும் அவதூறும் கலந்த கட்டுரையின் வண்டவாளத்தை அடுத்த பகுதியில் தண்டவாளம் ஏற்றிவிடலாம் தோழர்களே!

VN:F [1.9.4_1102]
Rating: 7.9/10 (9 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +6 (from 14 votes)
தூற்று . கொம் - பகுதி 4, 7.9 out of 10 based on 9 ratings
1 comment to தூற்று . கொம் – பகுதி 4
 • karuna

  //நாய் மின்கம்பத்தின் ஓரத்தில் சிறுநீர் கழிக்கும்போது எப்போதும் ஒரு காலைத் தூக்கியவாறே சிறுநீர் கழிக்கும். தான் சிறுநீர் விடும் பெருவிசையில் மின்கம்பம் ஆடிப்போய் சாய்ந்தாலும் சாயக்கூடும் என்ற எண்ணத்திலேயே அது தன்மீது சாய்ந்து விழும் மின்கம்பத்தை தாங்கிப் பிடிப்பதற்காகத் தனது காலைத் தூக்கி தயார்நிலையில் வைத்திருக்குமாம்.//
  இது உண்மையில் அறிவியல் விளக்கமா? அல்லது நகைச்சுவைக்காக எழுதப்பட்டதா?

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner