தேவன் கடையைச் சுத்தம் செய்து மஞ்சள் தண்ணீர் தெளித்தான். பின்பு, முதலாளியின் அழுக்குத் துணிகளைத் துவைத்துப் போட்டான். சாயங்காலமும் விடியற்காலமும் ஆகி முதலாம் நாள் ஆயிற்று.
பின்பு, தேவன் முதலாளிக்கு ஒடியல் கூழ் குடிக்க ஆர்வம் உண்டான காரணத்தால் சந்தைக்குச் சென்று கலவாய் மீன் வாங்கிக் கூழ் காய்ச்சினான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாளாயிற்று.
பின்பு, தேவன் மலையாகக் கிடந்த புகையிலைக் குவியலுக்குள் புகுந்து அடசல், சச்சு, தரவளி பிரித்தான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாளாயிற்று.
பின்பு,தேவன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முதலாளி விருந்து வைத்த காரணத்தால் மாட்டிறைச்சியும் ஈரப்பலாக்காயும் சாராயமும் படைத்து, பொறுப்பதிகாரியின் வாந்தியை அள்ளிப் போட்டான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாளாயிற்று.
பின்பு, தேவன் நாட்டாமைகள் மூட்டைகள் இறக்க ‘குச்சி பிடித்து’ கணக்குப் பண்ணினான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி அய்ந்தாம் நாளாயிற்று.
பின்பு, தேவன் ‘பஜாருக்கு’ நிலுவைக்குப் போய் வந்தான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாளாயிற்று.
ஏழாம் நாள் காலையிலும் தேவன் எழுந்து கடையின் முன்புறம் மேசைகட்டி இரத்தச் சிவப்பு ‘றம்புட்டான்’ பழங்களை அடுக்கிவைத்து அடிவயிற்றால் குரல் எடுத்துக் கத்தினான்…
“லாபாய் லாபாய் மல்வான லாபாய், கிலோ ருப்பியல் பாலுவாய், லாபாய் லாபாய் மல்வான லாபாய்…”
இவன் கடுமையா யோசிச்சான். இவன் பிரான்ஸிலயிருந்து சிலோனுக்கு வந்த ஒரு கிழமையா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். தேவன்ர பொழுது இந்த மாதிரித்தான் ‘ரண்’ பண்ணுது. இந்தப் பொடியன் எப்ப படுக்கிறான், எப்ப எழும்பிறான் எண்டு இவனால கண்டுபிடிக்க ஏலாமக் கிடந்தது. இவ்வளத்துக்கும் இவன்ர கட்டிலுக்குக் கீழதான் படுத்து எழும்பிறான் எண்டு கேள்வி. என்ன மிஞ்சி மிஞ்சிப் போனாலும் பொடியனுக்கு பன்ரெண்டு, பதின்மூண்டு வயசுதான் இருக்கும்.
இந்த வயசிலதான் இவனும் ‘மலிபன்’ விசுக்கோத்துப் பெட்டிக்குள்ள உடுப்புகளை அடுக்கிக்கட்டி இடக்கையாலும், தேப்பன்காரன்ர கையை வலக்கையாலும் பிடிச்சுக்கொண்டு ‘யாழ்தேவி’ ஏறி ஒரு செக்கல் பொழுதில அஞ்சிலாம்படிச் சந்தியில இறங்கினான். இப்ப தேவன் ஒரு கிலோ பதினைஞ்சு ரூபாய் எண்டு விக்கிற றம்புட்டான் பழத்தை, ஒரு கிலோ மூண்டு ரூபாய் எண்டு கத்தி வித்தான். தீபாவளிக்கு அம்மாவுக்குச் சீலையும் அய்யாவுக்கு எட்டு முழவேட்டியும் தங்கச்சிமாருக்குச் சட்டைத் துணியும் வாங்கிக்கொண்டு யாழ்தேவியைப் பிடிச்சு ஊருக்குப் போவான்.
இவன் ஊருக்கு வந்திற்றான் எண்டு கேள்விப்பட்ட கையோட இவனைத் தேடி சகாயராசன் வந்திடுவான். கொழும்புக் கதைகளைக் கிண்டிக் கேப்பான். இவன் பஜார் நிலவரங்களையும் வெள்ளைத் துண்டு வியாபாரங்களையும் சொல்லச் சொல்ல கண்ரெண்டையும் நெத்திக்குள்ள சொருகிக்கொண்டு கவனமா கேப்பான். பப்பாவிட்ட சொல்லி சின்னக் கடைக்குள்ள இருக்கிற ‘சகாயம் ஸ்டோரை’ கொழும்புப் பக்கம் தூக்கிக்கொண்டு போகவேணும் எண்டும், தான் யாவாரத்தை ‘டெவலப்’ செய்வன் எண்டும் சொல்லுவான்.
யாழ்தேவியும் ஓடாமல் போன ஒருநாள் கொழும்பு பத்தி எரிஞ்சுது. இவன் தப்பினன் பிழைச்சன் எண்டு கட்டின சாரத்தோடு ஊருக்குப் போனான். காணியைப் பூமிய வித்துச் சுட்டு, ஈபிள் ரவருக்குக் கீழே போய்க் குந்தினான்.
சகாயராசன் சாதிச்சுப் போட்டான். கொழும்பிலயிருந்து ஒரு அய்ம்பது கிலோமீற்றர் தூரத்தில கடற்கரையை அண்டின ஒரு சின்ன ரவுனில ‘சகாயம் அண்ட் கோ’ நிமிர்ந்து நிக்குது. நாட்டுப்பக்கத்து யாவாரிகள் வந்து மூட்டை மூட்டையாய் அரிசியும் கிழங்கும் அள்ளிக்கொண்டு போயினம். சில்லறை யாவாரமும் அமளியாய் நடக்குது. கடைக்குப் பின்னுக்கு சகாயராசனும் அவன்ர எடுபிடி தேவனும் தங்கிற வடிவான ஒரு வீடு. ராச சீவியம். வாற ஆவணியில ஆரோ எஸ்.பி-யின்ர மகளச் செய்யப்போறானாம்.
“லாபாய், லாபாய்… மல்வான கிலோ ருப்பியல் பாலுவாய்…” தேவன் ‘தம்’ கட்டிக் கத்திக் கொண்டிருந்தான். இவன் மெள்ள நடந்து போய் தேவனுக்குப் பக்கத்தில நிண்டான். தேவன் இவனை அண்ணாந்து பார்த்துச் சிரிச்சுப் போட்டுக் கேட்டான், “அண்ணை எப்ப பிரான்ஸுக்குத் திரும்பிப் பயணம் போறியள்?” இவன் பரிதாபமாய் சிரிச்சுக்கொண்டு கடைக்கு கொஞ்சம் தள்ளி கடற்கரை ‘சைற்றா’ தகரங்களாலயும் காட்போட் பெட்டிகளாலயும் இணக்கின கொட்டில்கள சும்மா பிராக்குப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்பதான் அவள் வந்தாள். முழங்கால் முட்டப் பாவாடையும் மேலுக்கு ரீ சேட்டும் போட்டிருந்தாள். வயது பத்துப் பதினொண்டுதான் இருக்கும். தேவனுக்குக் கிட்ட வந்து கண் ரெண்டையும் சுருக்கிச் சிரிச்சாள்.
“தேவன் எனக்கு ஒரு றம்புட்டான் பழம் தருமா?” தேவன் இவன நிமிர்ந்து பார்த்தான். இவன் ரெண்டு பழம் பிடுங்கி அவளின்ர சின்னக் கையில குடுத்தான். ஒரு செக்கன் யோசிச்சவள் வேண்டிக்கொண்டு திரும்பவும் கண் ரெண்டையும் சுருக்கிச் சிரிச்சாள், “தேவன்… இந்தப் புதிய ஆளு யாரு?”
“ஏய் சுவர்ணமாலி… இவர் பிரான்ஸில் இருக்கிறவர், முதலாளியின் கூட்டாளி.”
சுவர்ணமாலி இரண்டு செக்கன் யோசிச்சுப் போட்டு சொன்னாள்… “பித்தான் சலோப்”
இவன் ஏங்கி விறைச்சுப் போனான். மடுமாதாவே! நம்மள திருப்பி அனுப்பேக்க கூட வலு மரியாதையா ‘மிஸியூ… நீங்கள் வந்து உங்கட அகதி விண்ணப்பம் ஜெனிவா சட்டத்தின் கீழ் இன்ன இன்ன காரணங்களால நிராகரிக்கப்பட்ட பிறகும், நாங்கள் உங்களை நாட்டை விட்டு வெளிக்கிடச் சொன்ன பிறகும், இதுகள ஒரு சொட்டும் கணக்கில எடுக்காம அடாத்தா பதின்மூண்டு வரியம் பிரான்ஸில இருந்திருக்கிறியள். ஆனபடியால், இன்ன இன்ன சட்டங்களுக்குக் கீழ நாங்கள் உங்களை நாடு கடத்துறம்’ எண்டு சொல்லி ‘ரெஸ்பெக்டா’ கூட்டிக்கொண்டு வந்து பிளேனில ஏத்தி விட்டவங்கள். இத்தின தூரம் கடந்து வந்தால், வந்த இடத்தில இவள் பாவி படுதூசணத்தால கேளாக் கேள்வி கேட்கிறாள். இவளுக்கு எப்பிடி பிரெஞ்சு தெரியும்? எப்பிடித் தெரியும்? விசாரிப்பம் எண்டால், அவள் சொன்ன வேகத்திலேயே ஓடிப்போய் ஒரு தகரக் கொட்டிலுக்க உள்ளிட்டிட்டாள்.
கடைக்குள்ள இருந்து வெளிய வந்த சகாயராசன் இவன்ர தோளில கையைப் போட்டான். “மச்சி உள்ளுக்க வா தேத்தண்ணி குடிப்பம்” எண்டு உள்ளுக்குள்ள கூட்டிப் போனான். கஷியர் எழும்பி நிக்க சகாயராசன் அதில இருந்தான். இவன் சகாயராசனுக்கு முன்னுக்கு ஒரு ஸ்ரூலை இழுத்துப் போட்டிட்டு இருந்தான். “அப்ப மச்சி எப்ப பயணம்?” இவன் ஓடி முழிசினான். ‘இனித் திரும்பி பிரான்ஸுக்குப் போக ஏலாது’ எண்டு சொல்ல யோசிச்சான். ஆனால், இவனுக்கு உண்மையா வெக்கமாக் கிடந்தது. “இல்ல மச்சி… உழைச்சுக் களைச்சுப் போனன். இஞ்சயே எதாவது தொழில் செய்யலாம் எண்டு யோசிக்கிறன்.”
“ஹொந்தாய்… எவ்வளவு வைச்சிருக்கிறாய்?”
மசிர்தான் கிடக்குது எண்டு இவன் மனசுக்குள்ள நொந்து போனான். உண்மையைச் சொல்லுவம். இனிப் பிரான்ஸுக்குப் போக விருப்பமில்லை எண்டு சொல்லுவம். குளிரும் பனியும் வெறுத்துப் போச்சு எண்டு சொல்லுவம். அலாமும் மெற்றோவும் அலுத்துப் போச்சு எண்டு சொல்லுவம். ஜவல் பட்டு உடம்பெல்லாம் பத்தி எரியுதெண்டு சொல்லுவம். எனக்கொரு வேலை தா! கஞ்சியோ கூழோ குடிச்சுக் கொண்டு வன்னியில இருக்கிற அம்மாவுக்கு மாசம் அறுநூறோ எழுநூறோ அனுப்பிக்கொள்ளுறன் எண்டு சொல்லுவம்…
“முதலாளி எப்படிச் சுகம்?”
இவன் மெள்ள நிமிர்ந்து பார்த்தான். சுவர்ணமாலியும் ஒரு மனிசியும் நிக்கினம். சகாயராசன் உற்சாகப்பட்டான். “ஏய் என்ன பேபிநோனா இப்ப எங்களை எல்லாம் மறந்து போனாயா?”
“இல்லை முதலாளி… பத்து நாளாய் சுகமில்லை. அது தான் இந்தப் பக்கம் வரவில்லை.”
“சரி சரி இப்ப என்ன?”
பேபிநோனா சாடையாக வெட்கப்பட்டாள்.
“முதலாளி எனக்கு நூறு ரூபாய்க்குக் கொஞ்சச் சாமான்கள் கடன் தருவீர்களா?”
“பேபிநோனாவுக்கு இல்லையென்று சொல்வேனா?” எண்டு சகாயராசன் கண்ணைச் சிமிட்டினான்.
“ஏன் நோனா, மகன் காசு அனுப்புவதில்லையா?”
பேபி நோனா முகம் இறுகிப் போய் இரகசியம் பேசினாள்.
“காமினி இராணுவப் பயிற்சி முகாமிலிருந்து தப்பி ஓடிவிட்டானாம்.”
“ஏன்?”
“தெரியவில்லை. ஆனால், அவன் இன்னும் இங்கு வரவில்லை…”
சகாயராசன் கடவாயில் சிரிச்சுக் கொண்டு கேட்டான், “சுவர்ணமாலி சம்பாதிக்கிறாள்தானே?”
“இல்லை முதலாளி, அவள் இப்போது கெஸ்ட் ஹவுஸுக்குப் போவதில்லை. அவளின் அண்ணனுக்கு விருப்பமில்லை. எனக்கும் விருப்பமில்லை. நேற்றுக்கூட முதியான்சே புரோக்கர் வந்து ‘அமெரிக்கா சல்லிப் பார்ட்டி ஒன்று இருக்கிறது, காலையில் வந்து விடுவாள்’ என்றான். நான் சுவர்ணமாலியை அனுப்பவில்லை.”
“பிறகு… பிறகு?” சகாயராசன் ரென்சன் ஆனான்.
“அன்னலட்சுமியின் மகளைக் கூட்டிப் போனான்.”
இவனுக்கு எல்லாம் மெல்ல மெல்ல விளங்குது. இந்தப் பிஞ்சு பிரெஞ்சு சொல்லுற காரணம் விளங்குது. இந்தப் பிஞ்சு தூசணம் பேசுற காரியம் விளங்குது. அய்யோ உத்தரிய மாதாவே எண்டு கத்திக் குழறலாம் போல கிடந்தது. மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க சகாயராசனிட்ட உண்மையைச் சொல்லுவமா எண்டு இவன் யோசிச்சான். சகாயராசன் ரசிச்சு சாப்பிட்டு முடியக் கதைப்பம் எண்டு இவன் யோசிச்சான். திடீரெண்டு சாப்பாட்டுக் கோப்பை தேவன்ர மூஞ்சிக்குப் பறந்தது.
“நாய்வீட்டு நாயே… எத்தின நாள் சொல்லிப் போட்டன் சோத்துக்க மயிர் விழாமல் சமையெண்டு பரதேசி நாயே!”
எட்டித் தேவனைப் பிடிச்ச சகாயராசன் சளார் பளார் எண்டு முகத்துக்கு அடிச்சான். சுவரோட சாத்தி வைச்சு முழங்காலால தேவன்ர நெஞ்சில குத்தினான். விறுவிறு எண்டு வெளியில போனான். தேவன் அப்படியே சுவரோட சரிஞ்சு நெஞ்சைப் பொத்திக்கொண்டு விழுந்தான். கண் ரெண்டாலையும் ஓடுது. பல்லைக் கடிச்சுக் கொண்டு “என்ர எம்மா… என்ர அம்மா” எண்டு அனுங்கினான். இவனுக்கு சகாயராசனைப் பிடிச்சுக் கொல்லவேணும் போல கிடக்கு. இந்தப் பச்சைப் பாலகனைப் போட்டு இப்பிடி வதைக்கிறான். இவன் போய்த் தேவனைத் தூக்கி இருக்க வைச்சான். தேவன் விக்கி விக்கி அழுகிறான்.
என்ன செய்ய, என்ன சொல்ல..? எப்படி இவனைத் தேத்துறது எண்டு இவன் யோசிச்சான். மெள்ள தேவன்ர கையைப் பிடிச்சு “அழாதையப்பு… வேலையெண்டா இப்பிடித்தான்” எண்டான். தேவன் அழுகையை நிப்பாட்டி இவனை உத்துப் பார்த்தான். “பிரான்சிலயும் இப்பிடி கன்னம் கன்னமா அடிப்பாங்களா…?”
“இல்ல, இன்னும் அந்தளவுக்கு வரயில்ல…”
“வந்து மூண்டு வரியமாகுது. சம்பளம் எண்டு ஒரு சதமும் தாறாரில்ல. கேட்டா ஊருக்குப் போகேக்க தாறன் எண்டுறார். அய்டெண்ரி காட்டும் எடுத்துத் தாறாரில்ல. அய்டெண்ரிகாட் இல்லாம எப்பிடி ஊருக்குப் போறது? என்ர அம்மா, என்ர அம்மா” எண்டு அழுதவன் திடீரெண்டு இவனைக் கேட்டான், “என்னையும் பிரான்ஸுக்கு கூட்டிட்டுப் போறியளா?”
இவன் சும்மா தலையைத் தலையை ஆட்டினான். அது ஓமெண்ட மாதிரியும் கிடக்குது, இல்லையெண்ட மாதிரியும் இருக்குது.
பின்னேரக் கைக்கு தேவனுக்குக் காய்ச்சல் பிடிச்சிற்று. கொஞ்சம் வேளைக்கு வீட்டுக்கு வந்திற்றான். கட்டிலில படுத்துக் கிடந்து குழம்பிக் கொண்டிருந்த இவனைப் பார்த்து இசக்கமில்லாமல் சிரிச்சுப் போட்டுப் பாயை எடுத்துப் போட்டுப் படுத்திட்டான்.
“தேவன் நித்திரையா…?”
“இல்லை அண்ணன்…”
“உன்ர அப்பா அம்மா எங்க?”
“போன வரியம் கொடிகாமத்தில இருந்தவையளாம். இப்ப எங்கையெண்டு தெரியாது.”
கதவு தட்டிக் கேட்குது. தேவன் போய்த் திறந்தான். சகாயராசன் நிண்டான். “என்ன மச்சி படுத்திற்றியா? சரி சரி படு. நானும் படுக்கப் போறன். விடிய வேளைக்கு எழும்ப வேணும்” எண்டு சொல்லிப் போட்டு தேவனைப் பார்த்தான். தேவன் கையை நெஞ்சுக்குக் குறுக்கால கட்டி காய்ச்சலில நடுங்கிக்கொண்டிருந்தான். சகாயராசன் ஒரு சிரிப்புச் சிரிச்சான். “சிவாஜி கணேசன் தோத்தான்” எண்டு சொல்லிப் போட்டு தன்ர ரூமுக்குப் போய்ற்றான். தேவன் லைற்றை நூத்துப் போட்டுப் போய்ப் படுத்தான். இவனுக்கு நித்திரை வரயில்ல. சகாயம் சரியா மாறிப் போனான் எண்டு யோசிச்சுக் கொண்டு மெல்லக் கண்ணயர்ர நேரத்தில வெளிப்பக்கத்துக் கதவு தட்டிக் கேட்குது.
ஆர் அது?
ஆராயிருக்கும், பொலிஸோ? அடையாள அட்டை கூட இல்லை. டிப்போர்ட் பண்ணேக்க தந்த துண்டுதான் கிடக்குது. அதை வைச்சு நாக்கு வழிக்கிறதே! இவனுக்கு மிளகாய்ச் சாக்கு, நகக்கண் ஊசி, ரயர் எல்லாம் மண்டைக்குள்ள பிளாக் அண்ட் வைற்றில ஓடுது. சீ! இருக்காது. சகாயத்துக்குத்தான் பொலிஸில பயங்கரச் செல்வாக்கு இருக்குதாமே. இவன் தேவனைத் தட்டி எழுப்பினான். ரெண்டு பேரும் விறாந்தைக்கு வர, சகாயராசனும் கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தான். தேவனைக் கதவைத் திறக்கச் சொன்னான்.
வெளியில பேபிநோனாவும் சுவர்ணமாலியும் இன்னொரு ஆளும் நிக்கினம். அந்த ஆள் அரிசிச் சாக்கால தலையைப் போர்த்திருந்தான். “ஏய் பேபிநோனா சனியனே… என்ன இந்த நேரத்தில?” சகாயராசன் எரிஞ்சு விழுந்தான்.
“முதலாளி தயவுசெய்து சத்தம் போடாதீர்கள். உள்ளே வரவா?” பேபிநோனா கெஞ்ச, சகாயராசன் தலையில அடிச்சுக்கொண்டு போய்க் கதிரையில இருந்து ஒரு சிகரெட்டை மூட்டினான். இவனும் சகாயராசனிட்ட ஒரு சிகரெட் கேட்டு வாங்கி மூட்டினான். இதுக்குள்ள அதுகள் மூண்டுபேரும் வீட்டுக்குள்ள உள்ளிட்டுப் போட்டுதுகள். அந்த ஆள் முகத்தில மூடியிருந்த சாக்கைக் கழட்டினான். “ஓ… காமினி! நீ எப்போது இங்கு வந்தாய்?” சகாயராசன் மூஞ்சியைத் தூக்கி வைச்சுக் கொண்டு கேட்டான்.
“முதலாளி மன்னிக்க வேண்டும்… மகன் இங்கு வந்து அய்ந்து நாட்களாகிவிட்டன. வீட்டில்தான் ஒளிந்திருந்தான். பக்கத்து ரவுணில் ‘எலிவேட்டை’ நடக்கிறதாம். அவர்கள் என் மகனைத் தேடி இன்றிரவு இங்கும் வரலாம். முதலாளி தயவுசெய்து இவனை இன்றிரவு மட்டும் உங்கள் கடைக்குள் ஒளித்து வையுங்கள். ஆர்மியோடு பொலிஸும் வருகிறார்களாம். அவர்கள் உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். தயவு செய்யுங்கள் முதலாளி.”
“முடியாது. எனக்கு இது வீண் பிரச்சினை”
“முதலாளி அப்படிச் சொல்லக் கூடாது. சேகுவேரா குழப்பம் நடந்தபோது என்ன நடந்தது தெரியும்தானே? கையில் அகப்பட்ட மனிதர்களையெல்லாம் அடித்து விசாரிப்பார்கள். தோட்டம் முழுவதும் தேடக்கூடும். தோட்டத்தில் யார் வீட்டிலும் ஒளித்து வைக்க முடியாது. பொலிஸ் உங்களின் கூட்டாளிகள்தானே. இங்கு வரமாட்டார்கள்.”
பேபிநோனா கைகளை விரிச்சுக் கெஞ்சுறாள். தூரத்தில வாகனங்கள் உறுமிக்கொண்டு போகும் சத்தமும் ஒத்த வெடியும் கேட்குது. சகாயராசன் கண்ணை மூடிக் கொண்டு யோசிச்சான். கண் திறந்து காமினியைப் பார்த்தான். அந்த பதினெட்டு வயசு முழு ஆம்பிளை அழுதுகொண்டிருந்தான். பேபிநோனாவைப் பார்த்தான். மேலே தேவமாதா சுருவத்துக்குப் போட்டிருந்த நீல கலர் லைட் சரிஞ்சு போய் சுவர்ணமாலியின்ர முகத்தில ‘ஸ்பொட்’ பண்ணுது. சுவர்ணமாலியையே உத்துப் பார்த்துக்கொண்டு சகாயராசன் சொன்னான், “சரி… இந்த இரவு மட்டும் காமினி இங்கு ஒளிந்திருக்கட்டும். காலையில் கடை திறக்க முன்பே போய்விடவேண்டும்.” சகாயராசன் இப்ப தமிழுக்கு மாறினான்.
“தேவன்… காமினியைக் கொண்டுபோய் ஸ்டோர் ரூமுக்குள்ள வைச்சுப் பூட்டிப்போட்டு வா. மச்சி நீயும் ஒருக்கா கூடப் போய்ற்று வா.”
இவன் சரியெண்டு தலையை ஆட்டினான். காமினி திரும்பவும் சாக்குக்குள்ள தலையை விட்டான். தேவனும் இவனும் அக்கம் பக்கம் பார்த்து காமினியைக் கூட்டிக்கொண்டு இருட்டுக்க இறங்கிச்சினம். வீட்டிலிருந்து கடை ஒரு இருவது முப்பது கவடுதான். இவன் மெல்ல காமினியிட்ட ‘ரோக்’ போட்டான். “காமினி ஏன் ஆர்மிக்குப் போனது?”
“எனக்கு ஒரு கட்டுமரம் சொந்தத்தில் தேவைப்பட்டது” காமினி மூக்கை உறுஞ்சி அழுற சத்தம் கேக்குது. இவன் அதுக்குப் பிறகு ஒண்டும் கேக்கயில்ல. ஆளைக் கொண்டுபோய் ஸ்டோர் ரூமுக்குள்ள பூட்டி வைச்சிட்டு இவனும் தேவனும் திரும்பி வந்திச்சினம். வீட்டை நெருங்க உள்ளுக்க பேபிநோனா அழுது கேக்குது. இவன் உள்ள போகயில்ல. வாசல்படியில இருந்து இருட்டையே முறைச்சுப் பார்த்துக்கொண்டு இருந்தான். தேவனும் இவனுக்குப் பக்கத்தில குந்தினான்.
இப்ப வாசல்கதவைத் திறந்துகொண்டு பேபிநோனா வெளியில ஒத்தையா வந்தாள். இவையளோட ஒண்டும் பறையாம மெதுவா நடந்தவள். திடீரெண்டு வாசல் முத்தத்தில குந்தியிருந்து மெள்ள விசும்பினாள். அப்பிடியே நிலத்தில குப்புற விழுந்து கிடந்து அழுகிறாள். இவன் நடுங்குற கையால மெள்ள கதவை நீக்கி உள்ளுக்குப் பார்த்தான்.
சகாயராசனுக்குள்ள சுவர்ணமாலி நசிஞ்சு போய்க் கிடக்க, அப்பிடியே அவள சுவரோட சேர்த்து நசிச்சுக் கொண்டு ‘ரூம்’ கதவைத் திறந்து அவள இழுத்துக்கொண்டு போறான்.
இவனுக்கு இரண்டு பக்கத்து நெஞ்சிலேயும் நெருப்பு பத்தி உசரத்துக்கு எழும்பி எரியுது. கை காலெல்லாம் விறைச்சுப் போகுது. எழுத்துக் கூட்டி மெள்ளச் சொன்னான், “நான் எப்பிடியாவது பிரான்ஸுக்குப் போயிட வேணும்.”
“போய் என்னையும் கூப்பிடுவீங்களா?”
“ஓம்… கட்டாயம்”
தேவன் இருட்டுக்க ரெண்டு கண்ணும் மின்னச் சொன்னான், “நான் வந்து உழைச்சு சுவர்ணமாலியைக் கூப்பிடுவன்.”
(அம்மா -1997)