ஷோபாசக்தியின் கதைகளைக் குறித்த அவதானிப்பு
1.
சிதைக்கவே முடியாது என்னையும் என்னுடைய ஆன்மாவையும். அழிக்கும்தோறும் உயிர்ப்பேன். உயிர்ப்பே எனது விதி. நான் என்பது, நான் மட்டுமல்ல, என்னுடைய சனங்களின் துயரம். என்னுடைய சனங்கள் சிந்திய கண்ணீர்த் துளியினதும் ரத்தத்தினதும் ஆறாச் சூடு. நானென்பது, இழைக்கப்பட்ட அநீதியின் சாட்சி. நானென்பது, தேசாந்திரியாக அலையும் கதியற்ற அகதியின் முகம். நானென்பது சிலுவையேற்றம். நானென்பது உயிர்த்தெழுதல். நானென்பது அணையாத ஒளி. நானென்பது பெருமுழக்கம்.
ஷோபாசக்தியின் கதைகளைப் படிக்கும்போது எழுகின்ற உணர்வே இது. இதில் உள்ள துயரம் நம்மைக் கலங்க வைக்கிறது. இதில் எழும் வலிமை, நம்மை எழுச்சி கொள்ளச் செய்கிறது. காலத்துக்கும் அழிக்க முடியாத உண்மையின், கொதிக்கும் சொற்களோடு ஒரு சொற்கலைஞர் நம்முன்னே நிற்கிறார்.
“என் அரசியலில் இருந்தே எனது கதைகள் பிறக்கின்றன” என்ற ஷோபாசக்தியின் வெளிப்படையான பிரகடனத்திலிருந்தே அவருடைய புனைவுலகத்தையும் இலக்கிய நிலைப்பாட்டையும் வேண்டும். அப்படியென்றால் ‘ஷோபாசக்கியின் கதைகள்’ முற்று முழுதாக அரசியல் ரீதியானவை – அரசியலை அடிப்படையாகக் கொண்டவை – என நேரடியாகவே வரையறுத்துக் கொள்ளலாம். இதையும் அவரே சொல்லி விடுகிறார்:
“இன்றைய உலகச் சூழலில், ஓவ்வொரு தனிமனிதரின் மீதான அரசு இயந்திரத்தின் நெருக்கமான கண்காணிப்புக்குள், பெரு நிறுவனங்களின் அதிகார வலைக்குள் என்னைப் போன்ற தனிமனிதனால் கண்டபடியெல்லாம் கவிழ்த்துப்போட முடியாது. நானும் எண்ணற்ற சமரசங்களுடன்தான் வாழ்க்கையை ஓட்டியபடியிருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்னால் கவிழ்த்துப் போட முடியாதவற்றை எனது கற்பனைகளில் உருவாகும் சிறுகதைகள், நாவல்களின் மூலமாக என்னால் கவிழ்த்துப்போட முடியும். மனித உயிரிக்கு வாய்த்த ஆற்றல்களிலெல்லாம் ஆகச் சிறந்த ஆற்றல் கற்பனையே என்றுதான் நான் கருதுகிறேன். ஈழ யுத்தத்திற்குள் வாழ்ந்தவர்களோடும் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களோடும் சேர்ந்திருப்பது ஒரு மனிதனாக எனது அறம். அவர்களைக் குறித்து எழுதுவது ஓர் எழுத்தாளனாக எனது கடமை.”
இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது, நம்முடைய துயர நிலையும் அதற்கான காரணமும் பளிச்சென உறைக்கிறது. இதைப் புரிந்தாலும் நாமெல்லாம் தனித்து எதையும் செய்ய முடியாது என்ற உண்மையை, கையறு நிலையை ஷோபாசக்தியைப் போலவே நாமும் உணர்கிறோம். குறைந்த பட்சமாக, யுத்தத்திற்குள் வாழ்ந்தவராக, அந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருப்பதே குறைந்தபட்சமான ஆறுதல் என்றே நானும் உணர்கிறேன். இப்படி எண்ணும்போது துயரம் மேலிடும் முகம் மனதில் தோன்றுகிறது. இப்படியொரு முகமல்ல. கோடானு கோடி முகங்கள் இன்றைய உலகில் உண்டு. சக்கையாக்கப்படும் மனிதர்களுடைய முகங்களாக அவை வெளிறிப்போயுள்ளன. ஆனால், ஷோபாசக்தி, ஒரு புனைவெழுத்தாளராக இருப்பதால், நிஜவாழ்க்கையில் செய்ய முடியாததை, புனைவெழுத்தில் செய்றார் என்பதால் நியாயக்குரலின் வெம்மையோடு சுடரும் ஒளி முகமாக நம்முன் நிற்கிறார்.
இடதுசாரியம் (ட்ரொஸ்கிஸ்ட்), தமிழ்த் தேசியம், பெரியாரியம், திராவிடம் என்பவற்றின் சாரத்தைக் கொண்டது ஷோபாசக்தியின் அரசியல். ஷோபாசக்தி முன்வைக்கும் அரசியலைக் குறித்து ஏற்பும் மறுப்புமாக விவாதங்களுக்கான இடம் உண்டு. அது எவ்வாறானது என்பது ஒரு கேள்வி. இரண்டாவது, தன்னுடைய அரசியலை அவர் எப்படி – என்னவிதமாக இலக்கியத்தில் முன்வைக்கிறார்? அது எப்படி இலக்கியமாகிறது, கலையாகிறது? அதனுடைய இலக்கியத் தகுதி பெறுமானம் என்ன? என்பது இன்னொரு கேள்வி.
ஷோபாசக்தியின் அரசியல் மேற்சொன்னவற்றின் அடிப்படையிலானது என்பதைத் தொகுத்து ‘ஒடுக்குமுறைகளுக்கு’ எதிரானது என வரையறுத்துக் கொள்ளலாம். கவனிக்கவும்: ‘ஒடுக்குமுறைகளுக்கு’ எதிரானது என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தத்தை. இதைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். அப்படியென்றால், அதனுடைய மறுபக்கம் விடுதலைக்கானது என்றாகிறது. அதாவது சமவேளையில் ‘ஒடுக்குமுறைக்கு எதிரானதாகவும் விடுதலைக்கு ஊக்கமளிப்பதாகவும்’ என இரு நிலையில் வலுவுள்ள கருவியாக.
‘விடுதலைக்கு ஊக்கமளிப்பது’ என்பதை உடனடியாக நீங்கள் விடுதலையின் பெயரில் உள்ள அமைப்புகள், இயக்கங்கள் போன்றவற்றுடன் சம்பந்தப்படுத்திக் கற்பனை செய்துவிடக் கூடாது. விடுதலையின் பெயரில் மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துகின்ற – விடுதலைக்கு எதிரான அமைப்புகள், இயக்கங்களையே அவர் கதைகளில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விடுதலையின் பெயரில் இயங்கும் அமைப்புகள், இயக்கங்கள், ஆட்கள் (தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்] வேறு; விடுதலைக்கான கருத்தியலும் அதற்கான செயற்பாட்டு முறைமைகளும் வேறு. இங்கே தூக்கலாக உணர்த்தப்படுவது, மக்களிடம் அதிகாரம் செலுத்த விளையும் அமைப்புகள், இயக்கங்கள் போன்றவற்றையும் அவற்றின் அதிகார நிலையையும் கேள்விக்குள்ளாக்குவதே ஷோபாசக்தியின் எழுத்தியக்கம் என்பதாகும். குறிப்பாக, ஈழ விடுதலையை முன்னெடுப்பதாகத் தம்மை அடையாளப்படுத்திய இயக்கங்கள் செய்த, செய்து வரும் மக்கள் விரோத – அரசியல் விரோதச் செயல்களைக் கடுந்தொனியில் விமர்சிக்கிறார் ஷோபாசக்தி. சமநிலையில் மக்களுடைய குரலையும் வாழ்வையும் பிரதிபலிப்பதில் கவனம் கொள்கிறார். அவரால் எழுதப்பட்ட ‘காயா’ என்ற கதையில் ஷோபாசக்தியே இதைப் பற்றிக் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம்: “என்னுடைய கதைகளில் என் கிராமத்து மனிதர்களைத்தான் சற்று மாறிச்சாறிப் பதிவு செய்கிறேன்.”
ஒரு பாத்திரத்தின் கூற்றாக இவ்வாறு சொல்லப்பட்டாலும், இதுதான் ஷோபாசக்தியினுடைய கதைகளின் தொனிப்பாகும். மக்கள் எதிர்கொள்ளும் பாடுகள், அவர்களுடைய பிரச்சினைகள், அவர்களுடைய வாழ்க்கை, அவர்களுடைய உளநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் நோக்கை – நிலைப்பாட்டை – இலக்கியப் பிரதிகளாக்கிக் கொள்கிறார் ஷோபா. இந்த அரசியல் இலங்கையின் சிங்கள இனவாத ஆட்சி, தமிழ் பேசும் சமூகத்தினரின் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை, இன அழிப்பு போன்றவற்றையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஜனநாயக மறுப்பையும் சாரமாகக் கொண்டது. இதனால் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியில் புலம்பெயர் தேசங்களிலும் சனங்கள் (அகதிகளும் சாதாரண மக்களும்) படுகின்ற நெருக்கடிகளையும் அவலத்தையும் சாரப்படுத்திய எழுத்து ஷோபாவினுடையது.
1980-களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியாக உருவாகியிருந்த ஷோபாசக்தி, 1990-களில் அந்த இயக்கத்தை விட்டு முற்றாகவே வெளியேறி விடுகிறார். வெளியேறியது மட்டுமல்ல, அந்த அமைப்பைக் கடுமையான முறையில் இலக்கியப் படைப்புகளின் வழியாகவும் தன்னுடைய பிற கலைச் செயற்பாடுகளிலும் விமர்சனம் செய்கின்றவராகவும் மாறுகிறார். இருந்தாலும் தன்னைப் ‘போராளி’ என்ற நிலையிலிருந்து மாற்றிக்கொள்ளவில்லை. 1980-களில் புலிகள் இயக்கத்தில் அவர் சேர்ந்தபோதிருந்த சூழலும் அன்றைய அறிவும் அனுபவமும் வேறு. 1990-களில் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பிறகு ஏற்பட்ட அரசியல் உறவுகளும் அவற்றினால் ஏற்பட்ட அனுபவங்களும் அவற்றின் மூலமாக உருவாகிய அறிவு நிலையும் வேறு. பின்னாளில் விரிந்த தளத்திலான ஒரு சர்வதேசப் பார்வையும் பன்முகச் சிந்தனையும் ஷோபாசக்தியிடம்
உருவாகிறது. இது அவரை ‘ஆயுதந்தாங்கிய ஈழப் போராளி’ என்ற நிலையிலிருந்து எழுத்தை ஆயுதமாகக் கொண்ட இலக்கியப் போராளியாக ஆக்குகிறது. இதை அவர் பல நேர்காணல்களிலும் விளக்கியிருக்கிறார். மட்டுமல்ல, இது அவருடைய எழுத்துகளிலும் கருத்துகளிலும் துலக்கமாகப் பிரதிபலிக்கிறது. ஏன் அவருடைய வாழ்க்கையிலும் கூடத்தான்.
படைப்பாளிகளிடத்தில் இத்தகைய வளர்ச்சி நிலை ஏற்படுவது இயல்பு. அது நிகழ வேண்டும். அதுவே பரிணாமமும் பரிமாணமுமாகும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று நன்னூல் சொல்கிறது. இதன் மூலமாகப் படைப்புச் செழுமையும் புதுமையும் நிகமும். வளர்ச்சியின் அடிப்படை இதுவல்லவா! எழுத்தாளர்கள் தேங்கிய குளமாகவோ குட்டையாகவோ இருக்கக் கூடாது. எல்லாக் கரைகளையும் தழுவியோடும் பேராறாக, பெருகிச் செல்லும் நதியாக இருக்க வேண்டும். ஆனால், பலரும் இந்த நிலைமாற்றத்தையும் வளர்ச்சியையும் பன்முகத்தன்மையையும் மறுதலிப்பதும் உண்டு. அவர்கள் வளராத மரமாக அப்படியே காலத்திலும் தமக்குள்ளும் உறைந்து விடுவர்.
ஈழப்படைப்பாளிகளில் பலர் தாங்கள் வரித்துக் கொண்ட நிலைப்பாட்டிற்குள் (சூத்திரத்திற்குள்) உறைந்து போவதுண்டு. அக – புறத் தீண்டல்கள் அவர்களுக்குள் எதையும் நிகழ்த்துவதில்லைப் போலும். எத்தகைய விமர்சனங்களையும் ஏற்க விரும்பாமல், தமதுநிலைப்பாட்டில் அப்படியே நிற்பது அறமென்றும் அதுவே அழகென்றும் கருதிக் கொள்கிறார்கள். இதனால் தம்மை அறியாமலே அவர்கள் உட்குவின்றனர். தாம் விரும்புகின்ற – நம்புகின்ற கொள்கையின் அல்லது அரசியலின் அல்லது அமைப்பின் அல்லது தரப்பின் மீதான பற்று அப்படி அவர்களை ஆக்கி விடுகிறது. அதுவொரு மோக நிலையின் வெளிப்பாடாகும். இப்படி ஒன்றுக்குள் உட்குவிந்து விடாமல் தன்னை வெளிவிரித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டவர் ஷோபாசக்தி என்பதால்தான் தன்னை ஒரு ‘மாற்று நிலைப் போராளி’யாகச் ஷோபாசக்தியினால் உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. இது தொடர்பாகப் பலரிடம் பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருக்கலாம். அதையெல்லாம் கடந்தும் ஷோபாசக்தி, அநீதிக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கலகக்காரனாக, எதிர்ப்புக் குரலுக்குரியவராகவே இருக்கிறார். குறிப்பாக மக்களின் துயர்நிலை நின்று எழுதி, அந்தத் துயரத்தைத் தீர்ப்பதற்கான நீதிக்குரிய சாட்சியாளராக, விடுதலை விரும்பியாக.
சனங்களின் பாடுகளை மையப்படுத்தி எழுதும் பலர் உள்ளனர். அவர்கள் எந்த அதிகாரத் தரப்புகளோடும் மோதலுக்குப் போவதுமில்லை. அவற்றை நேரடியாகவும் கடுமையாகவும் விமர்சிப்பதுமில்லை. சனங்களின் துயரையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்துவதோடு தங்களுடைய ‘உயர்ந்த – மகத்தான’ பணியைச் சிரமம் இல்லாமல் முடித்துக் கொள்கிறார்கள். அதற்கும் ஒரு வகையான இலக்கியப் பெறுமானம் உண்டுதான். ஆனால், அது அந்தத் துயரத்துக்கும் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் காரணமான பின்னணிகளையும் அந்தப் பின்னணிகளில் இயங்கும் அதிகாரத் தரப்புகளையும் கண்டு கொள்ளாமல் விடுவதனால், பாதி நிலைப் பெறுமானத்தோடு அடங்கிவிடுகின்றன. அத்தகைய இலக்கியப் பிரதிகளிலிருந்தும் அவற்றை உருவாக்கும் எழுத்தாளர்களிடமிருந்தும் ஷோபாசக்தியின் எழுத்துகளும் ஷோபாசக்தியும் வேறுபடுவது, சனங்களைப் பாடாய்ப்படுத்தும் அரசியலையும் அந்த அரசியலை மேற்கொள்ளும் அதிகாரத் தரப்புகளையும் ஈவிரக்கமின்றித் தாக்குவதாலும் நேர்நின்று விமர்சிப்பதினாலுமாகும். போராளிக்குரிய ஓர்மமும் பொறுப்புணர்வும் அவரிடமுள்ளதால்தான் இப்படி அவரால் இயங்க முடிகிறது. என்பதால்தான் ஷோபாசக்கியைக் குறித்தும் அவருடைய எழுத்துகளைக் குறித்தும் நாம் கவனித்துப் பேச வேண்டியுள்ளது. அதற்காக ஷோபாசக்தியின் கதைகளை வெறுமனே ‘ஒடுக்குமுறைக்கு எதிரான எழுத்து, விடுதலைக்கான பரப்புரை இலக்கியம்’ என்று எளிமையாக எளிமைப்படுத்திச் சொல்லிச் செல்ல முடியாது. அதைப் போல அதனுடைய அரசியற் தன்மைகளைப் பற்றி விமர்சிக்காமல் தவிர்க்கவும் முடியாது.
ஈழத் தமிழ்ச் சூழலில் இன ஒடுக்குமுறையை எதிர்த்து விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பலர் உள்ளனர். அவர்கள் சாதிய ஒடுக்குமுறை, பெண் ஓடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, பிரதேசரீதியான வேறுபடுத்தல் போன்றவற்றுக்கு ஆதரவானவர்களாக இருக்கிறார்கள். அல்லது அவற்றைப் பொருட்படுத்தாதோராக உள்ளனர். அதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டே அல்ல. அவர்கள் தமக்கு இசைவான – வாய்ப்பான அரசியலை மட்டும் வசதியாகத் தெரிவு செய்துகொள்கிறார்கள் (Choosing only the politics that suits them). எடுத்துக்காட்டாக, தமிழ்த் தேசிய (விடுதலைப் புலிகளின் ஆதரவு) அரசியலை வலியுறுத்தும் எழுத்தாளர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றித் தாழ்வுநிலையான அல்லது விரோத அபிப்பிராயமே உண்டு. சிங்கள இனவாதத்தைப் பட்டியலிடும் படைப்பாளிகளால் சாதியப் பின்நிலைப்படுத்தல்களைப் பற்றி ஒரு சொல் எழுதவோ பேசவோ முடிவதில்லை.
ஷோபாசக்தி அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கிறார். விளிம்பு நிலை மக்களையும் கவனப்படுத்துகிறார். இதனால்தான் ஷோபாசக்கியின் அரசியல் ‘அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது’ என்று அழுத்தம் கொடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. கூடவே, அது ஜனநாயகத் தளத்தைப் பலப்படுத்தி விரிவாக்கம் செய்வதுமாகும் என்பதால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்பட்ட அனைத்து ஜனநாயக மறுப்புகளுக்கும் எதிரான கடுமையான விமர்சனமாகவும் எதிர்ப்புக் குரலாகவும் அவருடைய புனைவுகள் உள்ளன. இதற்காக ஷோபாசக்தி ஒரு காலம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். கடுமையான அவதூறுகளால் தூற்றப்பட்டிருக்கிறார். இதைக் குறித்து ஷோபாசக்தியின் வார்த்தைகளே ஒரு சாட்சியமாகும்: “படைப்புக்கு வெளியே சென்று எழுதியவனின் மீது அவதூறுகளை அள்ளிக்கொட்டும் சல்லிப் பயல்கள் நிரம்பிய உலகமிது என்பதால் கவலை ஏதுமில்லை. அவற்றை மயிரெனவும் பொருட்படுத்த வேண்டியதுமில்லை. எத்தனையோ அடக்குமுறைகளையும் எழுத்துச் சுதந்திர மறுப்புகளையும் மிரட்டல்களையும் நிராகரிப்புகளையும் நேரடி உடல்ரீதியான தாக்குதல்களையும் எதிர்கொண்டும் பணியாமல் எழுதிக்கொண்டிருப்பவன் நான். இந்தத் தொடர்ச்சியான எழுத்துப் போரை இலக்கிய அரிப்புகளால் சுரண்டிக் கூடப் பார்க்க முடியாது!”
ஆகவே, இதையிட்டெல்லாம் ஷோபாசக்தி கவலைப்படவுமில்லை, தன்னுடைய எழுத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை. பதிலாக மேலும் மேலும் தன்னையும் தன்னுடைய எழுத்தையும் தீவிரப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். நியாயமான எந்த எழுத்தாளராலும் அப்படித்தான் தொழிற்பட முடியும். தன்னுடைய அகத்தில் உயிர்கொண்டெரியும் உண்மையின் சுடரையே அவரால் ஏற்றக் கூடியதாக இருக்கும். மந்தைத்தனமான புறச்சூழலில், மிக இலகுவாக நிகழ்ந்து விடக்கூடிய ஆதரவு அலைகளில் தன்னுடைய படகைச் செலுத்திப் பலியிட முடியாது. அது இலக்கிய வரலாற்றில் தற்கொலைக்குச் சமம். அப்படியான தற்கொலையாளர்களும் உள்ளனர். ஆனால், அறவுணர்ச்சியுள்ள எந்த எழுத்தாளராலும் அப்படிச் செய்வதற்கு ஒருபோதுமே முடியாது. எழுத்தாளர் நெளிவு சுழிவுகளோடு அலையும் அரசியல்வாதியோ வணிகரோ அல்ல.
எழுத்தாளராக இருப்பது என்பதே ஒருவகையில் மறுத்தோடியாக இருப்பதுதான். ஆனால், அப்படி மறுத்தோடிகளாக இருப்போர் வரவரக் குறைந்துகொண்டிருக்கின்ற ஒரு நிலையே வளர்ச்சியடைகிறது. அப்படியென்றால் இது லாபங்களை நோக்கிச் சரியும் மினுக்க வாழ்வின் பிசாசாட்டமாகும். ஷோபாசக்தி இதற்கு வெளியே சிலுவையில் ஏற்றப்படுவோனாக, தானே விரும்பி ஏறும் தேவனாக இருக்கிறார்.
எந்த நிலையிலும் தன்னைச் சரிந்து விடாமல் வைத்துக்கொள்ளும் விதமாக இருப்பது படைப்பாளியின் உயரிய அறமாகும். இதைத்தான் ஷோபாசக்தி சொல்கிறாரெனக் கண்டோம். அதைக் குறித்துப் பார்க்கலாம்.
2.
அரச பயங்கரவாதத்தையும், அரசு மேற்கொள்ளும் ஐனநாயக மீறல்களையும், சர்வதேச ஆதிக்கச் சக்திகளின் மேலாதிக்க விளைவுகளையும் கடுமையாக எதிர்க்கும் ஒரு பரந்த எதிர்ப்பு வடிவத்தில் ஷோபாசக்தியின் புனைவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இது அவருடைய படைப்புகளின் இன்னொரு விரிவாகும். இன்னொரு தளத்தில் அய்ரோப்பிய நாடுகளில் காணப்படும் நிறவேற்றுமை, உலகெங்கும் அகதிகள் (தமிழ் அகதிகள் மட்டுமல்ல) எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அவர்களுடைய உளநிலை, மேற்கற்தேய அரசுகளின் அணுகுமுறை போன்றவற்றையும் ஆழமாகக் கவனப்படுத்துகிறார். முக்கியமாக மேற்குலகில் கறுப்பினத்தவர்களின் நிலை, மாற்றுப் பாலினத்தோர், விளிம்பு நிலை மனிதர்கள் போன்றோரின் வாழ்க்கை மற்றும் தற்போது உருவாகியிருக்கும் முஸ்லிம்கள்மீதான நெருக்கடி என்று விரிந்த பரப்பு இது.
இதற்கு அவருடைய விரிந்த அரசியற் பார்வையே – பல்வேறு தரப்புகளோடும் அவர் கொள்ளும் தொடர்ச்சியான உரையாடல்களும் மாற்றங்களைக் குறித்த அவதானிப்புமே காரணமாகும்.
புனைவுகளில் மட்டுமல்ல, ஷோபாசக்தியின் நேர்காணல்கள், கட்டுரைகள், சினிமாத்துறைப் பங்களிப்புகள், பங்கேற்புகள், நாடகம் போன்றவையும் இத்தகைய அரசியல் உள்ளடக்கத்தை அல்லது வெளிப்பாட்டைக் கொண்டவையே. அதற்காக அவையெல்லாம் அரசியல் பரப்புரைப் பிரதிகளோ வெற்று எதிர்ப்புக் குரல்களோ அல்ல. சமூகப் பிரக்ஞை உடைய தீர்க்கமான கலைஞரின் எதிர்வினைகள், சாட்சியங்கள், கேள்விகள், மறுப்புகள், பிரகடனங்கள், துயரொலிகள், கேலிகள் எல்லாம் இணைந்த கலை வெளிப்பாடுகளாகும்.
“என்னுடைய கதைகள் எல்லாமே சற்று நீளமான அரசியற் துண்டுப் பிரசுரங்கள்தான்” என்று ஷோபாசக்தி பிரகடனம் செய்தாலும், அவை அப்படி இல்லை. பதிலாக அவை வெற்றியடைந்த மிகச் சிறந்த கலை வெளிப்பாடுகள் என்பதே வாசகத் தீர்மானம். விமர்சகர்களுடைய நிலைப்பாடும் அதுவே. உலக இலக்கிய வரிசையில் வைக்கக் கூடியவை ஷோபாசக்தியினுடைய புனைகதைகள் என்பதைத் தயக்கமின்றிச் சொல்ல முடியும். கதையை உருவாக்கும் முறையில், கதை சொல்வதில், வாசகர்களுடன் நேரடியாகவே உரையாடுவதைப் போன்ற தன்மையைக் கட்டமைப்பதில் (அத்தகைய உணர்வை ஏற்படுத்துவதில்) வரலாற்றுப் பாத்திரங்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் புனைவாக்குவதில் எல்லாம் கற்றுக்கொள்வதற்கு (பயில்வதற்கு) ஷோபாசக்தியின் எழுத்துகளில் நிறையவுண்டு. முக்கியமாக, தன்னுடைய அரசியல் நோக்கைக் கலையாக்குவதில். மகத்தான எழுத்தாளர்களிடம் இத்தகைய சிறப்பம்சங்கள் இருப்பதுண்டு. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, அன்டன் செக்கோவ், துர்கனேவ், கார்க்கி, அலெக்சாண்டர் புஷ்கின் போன்ற ரஷ்யப் படைப்பாளிகள் தொடக்கம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள்வரையில் அனைவரிடத்திலும் இந்தச் சிறப்பிருக்கிறது.
இந்தச் சிறப்புத்தன்மையினால் ‘வரட்டு அரசியல் பிரதிகள்’ என்று தட்டிச்செல்ல முடியாத அளவுக்கு, அசாத்தியமான புனைவுத் தொழில் நுட்பத்தின் வழியாக அவற்றை வெற்றிகரமான கலையாக்கி விடுகிறார் ஷோபாசக்தி. கதையைப் படிக்கத் தொடங்கும்போதே சட்டெனத் தீவிரமடையும் ஒருவகையான எழுத்து முறைமை ஷோபாசக்கியினுடையது.
உயிரில் தீப்பிடிப்பதைப் போன்ற விடயங்களைத் தேர்வு செய்வது இதற்கொரு காரணமாக இருக்கலாம். வரலாற்றுக் குறிப்புகள், மெய்விவரச் சித்திரிப்புகள், அறிக்கைகள், தலைவர்கள், அறிஞர்கள், அரசுகள், அமைப்புகளுடைய கூற்றுகள், மக்களுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கதைகளில் சிறப்பாகப் பொருத்தி விடுதறோர்.
எந்தப் பொருளையும் கலைநுட்பத்துடன் ஆக்கும்போது அது வியப்பையும் ஈர்ப்பையும் ஒருங்கிணைத்துக் கவனம் பெற வைக்கும். தேங்காய்ச் சிரட்டையில் எளிமையாகச் செய்யப்படுகின்ற ஒரு பொருள்கூட, அதில் உள்ள கலை நுட்பத்தினால், கலைப்பொருளாக மாறிப் பெறுமதியடைகிறது. தாளில் வரையப்படுகின்ற – சுவரில் தீட்டப்படுகின்ற ஓவியங்கள் எல்லாம் அவற்றின் நுட்ப வெளிப்பாட்டினால் கலையாகின்றன. இங்கேதான் ஷோபாசக்தி என்ற கலைஞரின் திறனை நாம் பார்க்க முடியும். நாம் சந்தித்த, அறிந்த சம்பவங்களும் மனிதர்களும் இடங்களும் வேறொன்றாக – வியப்பளிப்பனவாக மாறும் – மாற்றப்படும் வித்தை இது. அந்த நாட்களின் வண்ணமே மாறி விடுகிறது. இப்படி இவற்றைப் பொருத்தும்போது அது சடத்தனமாக இருந்து விடாமல், உயிருள்ள உயரிய கலைப்பொருட்களாக மாறி விடுகின்றன. பலவகையான பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் Collage போல கதைகள் உண்டு. Collage – Technique of artistic creation. ‘ரம்ழான்’, ‘Cross Fire’ போன்றவை இதற்கு உதாரணம். இதற்கு அவரிமுள்ள படைப்புத்திறனும் புத்தாக்க விருப்புமே காரணமாகும். கூடவே, அவற்றைச் சொல்லும் விதத்தினாலும் (மொழிதலினாலும்) வாசிப்போரைத் தீவிரப்படுத்தி விடுகிறார். புதிதான மொழிதலையும் புதிய வடிவங்களையும் ஒவ்வொரு கதையிலும் அவர் பரீட்சித்துப் பார்ப்பது ஈர்ப்புக்கு இன்னொரு காரணம். ‘எலிவேட்டை’, ‘அந்திக் கிறிஸ்து’ எனப் பல கதைகள்…
ஆகவே ஷோபாசக்கியிடமுள்ள கதையாக்கத் திறன் (Creativity – Storytelling skills), கலை நுட்பம் (Artistic technique) படைப்புச் செழுமை (creative richness), மொழியின் உச்சமான சாத்தியங்களைப் பயன்படுத்திப் புனைவை நிகழ்த்திக் காட்டுதல் (and performing fiction using the highest possibilities of language) போன்றன கதைகளை வலிமையுடையனவாக மாற்றுகின்றன. இந்த ஆற்றலினால், இந்தக் காரணங்களினால் பலரும் அறிந்த சம்பவங்கள் கூட அவருடைய புனைவுத்திறனால் மிகச் சிறந்த கதைகளாகி, கலையாக வெற்றியடைகின்றன. இதனால்தான் இலக்கியத்தில் அரசியலின் இடம் (செல்வாக்கு) குறித்து எதிர்மறையாக விமர்சிப்பவர்களும் ஷோபாசக்தியின் புனைவுகளைக் குறித்து உயர்ந்த மதிப்புடனே பேசுகின்றனர். இப்படித் தன்னுடைய புனைவாற்றிலினால் தன்னையும் தன்னுடைய கதைகளையும் நிராகரிக்க முடியாத அளவுக்கு நிறுவிவிடுகிறார் ஷோபா. இதன் வழியே தன்னுடைய அரசியலையும் வெற்றிகரமாக வாசக மனதிலும் வரலாற்றிலும் நிலைப்படுத்திக்கொள்கிறார்.
ஷோபாசக்தி பயன்படுத்தும் அல்லது மேற்கொள்ளும் கதைத் தொழில் நுட்பம் அவருடைய புனைவுகளை அழகியலாக்கி, கலைப்பெறுமானத்தை ஏற்றி வெற்றியடையச் செய்கிறது எனக் கண்டோம். அவர் புனைவுகளில் முன்வைக்கின்ற அரசியலை, அரசியல் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும் அவருடைய முதன்மையான வாசகர்களாக இருப்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். இதுதான் அவர் எதிர்பார்த்ததும், பெற்ற வெற்றியுமாகும்.
எழுத்தாளரின் நோக்கானது அவருக்குரிய சிறப்புப் பரப்பொன்றை இலக்காகக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தாளரிடத்திலும் இது இருக்கும். அவர்களுடைய தனித்தன்மைகளில் இந்த அம்சம் ஒன்றாகும். ஆனால், இது ஆளுக்காள், ஆளுமைக்கு ஆளுமை வேறுபடும். சிலரிடம் இது உச்சச் சிறப்பைக் கொண்டமைவதுண்டு. அவர்கள் தம்முடைய உள்ளத்தில் கொண்டிருக்கும் மானுட நேசிப்பையும் அதற்கான அறத்தையும் தம்முடைய எழுத்திலோ கலைப் படைப்பிலோ வெளிப்படுத்துவர். அல்லது அது அவற்றில் வெளிப்படும். அது அவர்களுடைய அகத்தின் ஒளியை இருளுள்ள பிராந்தியத்தில் பரப்புவதாகும். இருளின் அடர்த்தியில் நிகழ்வனவற்றையும் புலப்படச் செய்தல் – உணரச் செய்தல் இலக்கியத்தின் பண்பாகும். இதை ஷோபாசக்தி கவனத்தில் கொண்டிருக்கிறார்.
ஆகவே புனைவின் (கதைகளின்) வழியே விருப்பத்துக்குரியவற்றையும் விருப்பமற்றவற்றையும் என எல்லாவற்றையும் வரலாற்றில் நிலைபெறச் செய்துவிடுகிறார் ஷோபாசக்தி. இது ஒரு முக்கியமான விடயம். இதை வெளியார் எவ்வளவுக்குப் புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஈழத் தமிழர்கள் அதிகமாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதிலும் இந்தக் கதைகளோடு இணைந்த வாழ்வைக் கொண்டவர்களுக்கு இன்னும் கூடுதலான அதிர்வை இந்தக் கதைகள் உருவாக்கக் கூடியது.
1958-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இன வன்முறையைப் பற்றிய சேதியை ‘கப்டன்’ கதையில் உள்ள பொன்ராசா என்ற பாத்திரத்தோடு இணைத்துச் சொல்லிவிடுகிறார் ஷோபா. இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த, நடத்தப்பட்ட ஏராளம் வரலாற்றுச் சேதிகளும் சம்பவங்களும் சொல்லப்படுகின்றன. இரத்தமும் கண்ணீரும் அதிகமாகச் சிந்தப்பட்ட மிகக் கடினமான காலத்தின் எழுத்துச் சாட்சியங்கள் இவை என்பதால், இவற்றை அறிந்தோருக்கு, இவற்றோடு வாழ்ந்தோருக்கு இவற்றின் கனதி புரியும். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்திலும் சரி, அதற்குப் பிறகு இப்பொழுது இவற்றை மீளப் படிக்கும்போதும் சரி, ஒவ்வொரு கதையும் பல்வேறு பாதைகளால் நம்மை அந்தக் காலத்துக்கும் களத்துக்கும் கொண்டு செல்கின்றன. அந்தப் பாதைகள் வாழ்வில் மறக்க முடியாத பலநூறு நினைவுக் கற்களைக் கொண்டவை. அவை வெறும் நினைவுக் கற்களல்ல; உயிரை வாட்டிய வாதைகளைக் கொண்ட உயிர்க்கற்கள். அதிலும் இந்தக் கதைகளைத் தனித்தனியாக வாசித்தபோது ஏற்பட்டதையும் விட, முழுக் கதைகளையும் வாசிக்கும்போது ஏற்படுகின்ற பதைப்பு உச்சமானது. உளச்சுமை கூடியது. நாம் சந்தித்துக் கடக்க முடியாமற் கடந்த கொலைகளும் அழிவும் அவமானங்களும் துக்கமும் அலைச்சலும் நெருக்கடிகளும் கதியற்ற வாழ்வுமாக இருந்ததொரு கொடுங்காலத்தை மீள எழுப்பிக்கொள்கின்றன. அப்படி அந்தக் காலம் உயிர்ப்பாக எழும்போது, அது எப்படி நமக்கு முன்னும் நமக்குள்ளும் கொடும் பாம்பாக எழுந்தாடியிருக்கிறது என்ற பதைப்பும் அவமானமும் துக்கமும் கையறு நிலையுமான உணர்வு ஏற்படுகிறது. மறுநிலையில் அது வேறு விதமாகவும் தொழிற்படுகிறது. மக்களின்மீது அதிகார சக்திகளால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் கொடுமையை, அநீதியை, உலக மனச்சாட்சியின்மீது (அப்படியொன்று இருந்தால் அதன்மீது] வைத்து, நீதியைக் கோரும் பீடமாக வானுயர உயர்த்துகிறது.
3.
ஷோபாசக்தியின் கதைகளை மேலும் புரிந்து கொள்வதற்கு அவற்றின் பின்னணிச் சூழலையும் வரலாற்றையும் அறிந்திருப்பது நல்லது. இந்தக் கதைகளே அந்தச் சூழலையும் அதற்குரிய வரலாற்றையும் திறந்து காட்டுகின்றனதான். இருந்தாலும் குறித்த பின்னணியைத் தெரிந்தால், அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது கூடுதலாகப் புரியும்.
இலங்கை அரசு, இன ஒதுக்கலையும் ஒடுக்குமுறையையும் ஆட்சி முறையாகக் கொண்டது. 1948-க்குப் பிறகான சுதந்திர இலங்கையின் ஆட்சி வரலாறு இதுவே. (இலங்கையின் அரசியலமைப்பே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது; சிங்கள பெளத்தத்துக்கு முன்நிலை அளித்து, ஏனைய இனச் சமூகங்களைப் பின் தள்ளுவதாகும்). அந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் சாதாரணமானவை அல்ல. மிகக் கொடூரமானவை; பாரதூரமானவை. அதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டத்தை அது ரத்தம் சிந்தச் சிந்தக் கொடூரமாக ஒடுக்கியது. இதனால் பல ஆயிரம் மக்கள் கொலையுண்டனர். பாதிக்கப்பட்ட மக்களோ லட்சக்கணக்கில். பல லட்சம் மக்கள் உலகமெங்கும் அகதிகளாகச் சிதறினர். இவற்றுக்கான நீதி விசாரணைகளும் நீதி வழங்கல்களும் உள்நாட்டில் அரசினாலும் நிகழவில்லை; சர்வதேசரீதியாகவும் ஏற்படவில்லை. ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து நீதிக்கான குரல்கள் எழுந்து கொண்டேயுள்ளன. எதிர்காலத்தில் கூட இந்த மக்களுடைய குரல்களுக்கான மதிப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிகூட இல்லை.
சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை போன்ற பேரமைப்புகள் எல்லாம் சம்பிரதாயபூர்வமாக அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும், பிரேரணைகளை நிறைவேற்றும் சிறுமையைச் செய்யும் அளவுக்குத் தேய்ந்து விட்டன. ஷோபாசக்தியின் எள்ளலான மொழியில் சொல்வதென்றால், இலங்கையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் செய்யப்படுகின்ற (சர்வதேச சமூகத்தை நோக்கிய] அழுது வடியும் பிரேரணைகளுக்கும் கீழான அளவில்தான் இவற்றின் தீர்மானங்களும் பிரேரணைகளும் உள்ளன. சிரித்து விடாதீர்கள். இதுதான் உண்மை. இந்த நிலையில், ஒரு பொறுப்புள்ள கலைஞராகவும் அறச் சீற்றமுள்ள மனிதராகவும் தன்னுடைய புனைவுகளினூடாக அதிகாரத் தரப்புகள் மேற்கொண்ட மக்கள் விரோதச் செயல்களின் நீதியின்மையை வரலாற்றில் நிலைபெறச் செய்துவிடுகிறார் ஷோபாசக்தி. இந்த உலகம் இப்படித்தான் மோசமானதாக உள்ளது என்கிறார். இதை இந்தக் கதைகளைப் படிக்கும்போது தெளிவாக நாமும் உணர்ந்து விடுகிறோம்.
மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும் சிறப்புக்குமாக மனித குலம் பல்லாயிரம் கண்டுபிடிப்புகளையும் பல கோடி உற்பத்திகளையும் செய்து கொண்டேயிருக்கிறது. தத்துவம், அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டங்கள், நிர்வாகங்கள் என்றெல்லாம் ஏராளமான ஏற்பாடுகள் உண்டு. இவையெல்லாம் இருந்தும் என்ன! கண்முன்னே ஒடுக்குமுறையும் அரசியல் பழிதீர்த்தலும் சுரண்டலும் புறக்கணிப்பும் கொலையும் இன அழிப்பும் ஆக்கிரமிப்பும அகதியாக்குதலும் என்றுதானே உலகம் உள்ளது. இந்த வார்த்தைகளை எழுதிக்கொண்டிருக்கும் போது ‘காஸா’வில் அழும் குழந்தைகளின் குரலும், விம்மும் அன்னையரின் விசும்பலும் கேட்கிறது. அங்கே கையறு நிலைக்குள்ளான தந்தையரின் கண்ணீரும் கொல்லப்பட்டவர்களின் இரத்தமும் கண்ணில் தெரிகிறது. இந்த நிலையில் உலகம் உய்வதும் மனித குலம் தழைத்தோங்குவதும் எப்படி?
ஷோபாசக்தி என்ற கலைஞரால் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அவர் எழுதுகிறார். அவரால் இயலக்கூடிய வழியில், அவருக்குத் தெரிந்த மொழியில். கதைகள்… கதைகள்… கதைகளாக… ‘காணாமற்போனவர்’, ‘கண்டி வீரன்’, ‘மிக உள்ளக விசாரணை’,’அந்திக் கிறிஸ்து’, ‘பல்லிராஜா’, ‘ஆறாங்குழி’ எனப் பல பத்துக் கதைகளில் இதைச் செய்திருக்கிறார்.
ஷோபாசக்தியின் இந்தப் பழியுரை (பழிப்புரை) காலம் முழுவதுக்கும் அழியாதிருக்கும். ஆட்சித் தரப்பின், அதிகார அமைப்புகளின் முகத்திரைகளைக் கிழித்திருக்கும். பாதிக்கப்பட்டோரின் ஆன்மாவாகக் காலத்தில் ஒளிரும். போர் முடிந்திருக்கலாம். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கடந்திருக்கலாம். இழைக்கப்பட்ட அநீதிக்கு (நீதி மறுப்புக்கு] எத்தகைய தண்டனையும் தீர்வும் கிடைக்காமல் இருக்கலாம். இதைக் குறித்து உலகத்துக்கு எந்த அக்கறையும் இல்லாதிருக்கலாம். ஆனால், அதையெல்லாம் எதிர்க்கும் – கேள்வி கேட்கும் தீர்க்கமுடைய குரலாக இருந்து, ஒரு ஓயாத சாட்சியாக எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறார் ஷோபாசக்தி. இங்கே தீர்க்கமுடைய குரல் என்று ஷோபாசக்கியைச் சிறப்பாகக் குறிப்பிடுவதற்குக் காரணம், திரட்டப்படும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகளையும் விட ஷோபாசக்தியின் கதைகள் (புனைவுகள்) வழியாக நிறுவப்படும் உண்மையும் அநீதிச் சித்திரங்களும் வலுவானவை; கூருள்ளவை; உயிர்ப்பானவை. இதுதான் கலையின் வெற்றியும் சாதனையுமாகும். இந்தக் கதைகள் இப்பொழுது வெவ்வேறு மொழிகளினூடாகப் பிற சமூகங்களில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன. அப்படிப் பிற சமூகங்களில் பயணிக்கும்போது, அவை பெறுகின்ற இடமும் அவற்றின் குரலுக்குக் கிடைக்கின்ற மதிப்பும் அவை உருவாக்கும் அரசியல் விழிப்பும் தூண்டலும் அநீதியாளர்களுக்கு எதிரான இன்னொரு போர்முனையாகும்.
4.
நிகழ்வுகளைக் கதையின் வழியாக நிலைபெறச் செய்தலில் ஷோபாசக்தி சிறப்பானவர் (Shobhasakthi excels at making events come alive through storytelling). இன்னொரு வகையாகச் சொன்னால், கதைசொல்லல் மூலம் முடிந்துபோன நிகழ்வுகளை உயிர்ப்பிப்பதில் ஷோபாசக்தி சிறந்து விளங்குகிறார் (Bringing past events to life through stories). என்பதால் ஷோபாசக்திக்கு வரலாற்றில் தனிச் சிறப்பிடம் உண்டு. அவருடைய கதைகளில் வரும் ஒவ்வொரு சம்பவங்களும் அழிக்கவே முடியாத வகையில் நிலைபெறுகின்றன. ‘மாதா’, ‘F இயக்கம்’, ‘Cross Fire’, ‘ஆறாங்குழி’ என ஒவ்வொரு கதையிலும் வரும் சம்பவங்கள்… யாழ்ப்பாண இடப்பெயர்வு, அமைச்சர் மகேஸ்வரன் கொலை, மண்டைத்தீவுக் கொலைகள்… எனப் பல சம்பவங்கள்…
“போர் முடிந்து விட்டது. இனி வருவது அமைதிக்கான காலம்; அபிவிருத்தி யுகம்…” என்று அரசும் அதனுடைய ஆதரவாளர்களும் வெள்ளை போர்த்தலாம். நிகழ்ந்தவற்றை நீதியினாலும் கருணையினாலும் அன்பினாலும் அரவணைப்பினாலும் தணிக்க முடியுமே தவிர, அதிகாரத்தினாலும் தந்திரங்களினாலும் அல்ல என்பதே ஷோபாசக்கியின் நிலைப்பாடு. வாசகர்களாகிய உங்களுடைய நிலைப்பாடும் அதுவாகவே இருக்கும். ஏனென்றால், எதையும் நீங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாது. அவை அப்படிக் கடந்து செல்லக் கூடியவையும் அல்ல என்பதே அவருடைய தீர்மானம். இதை மனதிற்கொண்டே அவற்றையெல்லாம் உயிர்ப்பிக்கிறார் ஷோபாசக்தி. இலங்கை அரசின் முன்பாக மட்டுமல்ல, அனைத்துக் குற்றவாளிகளின் முன்பும் இதைச் சொல்லி நிமிர்கிறார். இதுதான் கலைஞன் ஒருவனின் அழகும் சிறப்பும் முக்கியத்துவமுமாகும்.
எனவே, ஷோபாசக்தியின் புனைவுகள், நிகழ்வுகளை அடிப்படையாக அல்லது ஆதாரமாகக் கொண்டவை என்று வகுத்துக் கொள்ளலாம். ‘பல்லிராஜா’, ‘அந்திக் கிறிஸ்து’, ‘ஆறாங்குழி’, ‘வர்ணகலா’ போன்ற பல கதைகள் இந்த வகை. பல சம்பவங்களைக் கதைகளுக்குள் இணைத்துக் கொள்வது இன்னொரு வகை. ‘குண்டு டயானா’ இதற்கு உதாரணம். இன்னொன்று, தானாகவே நிகழ்வுகளைப் புனைந்து கொள்வது. ‘மரச்சிற்பம்’, ‘கச்சாமி’ போன்ற கதைகள் அப்படியானவை. ஆனால், எல்லாவற்றிலும் வாசிப்போர் எந்த வேறுபாடுகளையும் காண முடியாது. கதை உருவாக்கத்தையும் கதைக் கட்டமைப்பையும் (Story creation and story structure) ஷோபாசக்தி அப்படிச் செம்மையாகச் செய்துவிடுகிறார்.
-தொடரும்…
(‘அம்ருதா’ டிசம்பர் 2025 இதழில் வெளியானது)
ஷோபாசக்தி கதைகள் (1997 – 2024)
வெளியீடு: கருப்புப் பிரதிகள்,
தொலைபேசி: +91 94442 72500. மின்னஞ்சல்: [email protected]