மூன்று குழந்தைகள்

கதைகள்

பாக்கு நீரிணையைப் படகில் கடந்து சென்றபோது, இலங்கைக் கடற்படை சுட்டதில், திலகனின் இடது முழங்கையைப் பொத்துக்கொண்டு துப்பாக்கிச் சன்னம் வெளியேறியிருந்தது. இப்போது திலகன் அதே நீரிணையை விமானத்தில் கடந்து இலங்கைக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறான். இருபத்து மூன்று வயதில் சென்றவன், அய்ம்பத்தெட்டு வயதில் திரும்புகிறான். அவன் அய்ரோப்பாவில் வாழும் இந்த முப்பத்தைந்து வருட காலத்திலும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஒருபோதுமே தோன்றியதில்லை. இலங்கையில் நெருங்கிய சொந்த பந்தங்கள் என யாருமே அவனுக்குக் கிடையாது. எல்லோருமே அகதிகளாக வேறு நாடுகளுக்குச் சிதறிவிட்டார்கள். இலங்கையைக் குறித்த இனிய நினைவுகள் எனவும் அவனுக்கு எதுவுமே கிடையாது. எனவே, அவன் இந்தக் கோடைகால விடுமுறையையும் அய்ரோப்பாவின் ஏதோவொரு மலைக் கிராமத்தில் முகாம் அமைத்துத் தனது வெள்ளைக்கார மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கழித்துக்கொண்டிருக்கிறான். நாங்கள் இந்தச் சிறுகதைப் பிரதியின் முடிவைக் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே அவன் இப்போது இலங்கைக்கு வர வேண்டியுள்ளது.

திலகன் இலங்கைக்குச் செல்ல விரும்பாததற்கான காரணத்தை அவனது மனைவியிடம் சொல்லியிருக்கிறான். தூக்கத்தில் திலகன் வாய்விட்டுப் பிதற்றுவதை அவனது மனைவி அநேக தடவைகள் கேட்டிருக்கிறாள். முப்பத்தைந்து வருடங்களாக அவன் நாளாந்தம் காணும் துர்க் கனவுகள் எல்லாம் ஒன்றேயொன்றுதான். கனவில் அவன் திடீரென இலங்கையில் இருக்கிறான்! அவனால் அய்ரோப்பாவுக்குத் திரும்பி வர முடியவில்லை! சீருடை அணிந்த படையினர் அவனைத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள்!

இந்தத் துர்க் கனவுப் பிரச்சினையைச் சரி செய்வதற்காகச் சில தடவைகள் மனநல மருத்துவரிடம் சென்று திலகன் முயற்சி செய்திருக்கிறான். போரிலிருந்து தப்பிவரும் அகதிகளுக்கு இத்தகைய துர்க் கனவுகள் ஏற்படுவது சகஜமானது என்றே ஒவ்வொரு தடவையும் மருத்துவர் சொன்னார். அவர் வழங்கிய மாத்திரை, மருந்துகளால் இந்தத் துர்க் கனவுகளை ஒருபோதுமே ஒழிக்க முடியவில்லை. திலகனின் மனைவி அவனை மாற்று மருத்துவர் ஒருவரிடம் அழைத்துப் போனாள். கிழக்கு அய்ரோப்பியரான அந்த மருத்துவர் நீளமான தலைமுடி, தாடியுடன் பார்ப்பதற்குத் தோற்றத்தில் ரஸ்புடீன் போலவே இருந்தார். அவர் திலகனோடு நீண்ட நேரம் பேசிய பின்பாக ஓர் ஆலோசனையைத் தெரிவித்தார். ஒருமுறை திலகன் இலங்கைக்குச் சென்று வந்தால் அச்சம் தெளிந்து இந்தப் பிரச்சினை தீரும் என்றார். திரும்பி வரும் வழியெல்லாம் அந்த ரஸ்புடீனையும் தனது மனைவியையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே திலகன் காரை ஓட்டினான். அவன் ஒருபோதும் இலங்கைக்குத் திரும்பப் போவதில்லை.

ஒரு மணிநேரத்திற்கு முன்பாகச் சென்னையிலிருந்து கிளம்பிய விமானம் யாழ்ப்பாண விமான நிலையத்தின்மீது இறங்கி ஓடுபாதையில் நகர்ந்துகொண்டிருந்தது. பல ஏக்கர்களில் பரவி விரிந்து கிடக்கும் பலாலி இராணுவ முகாம்களுக்கு நடுவேயுள்ள விமானப்படைத் தளத்திலேயே அந்த மிகச் சிறிய விமான நிலையம் அமைந்திருக்கிறது. திலகன் விமானத்தின் ஜன்னல் வழியே அங்குமிங்கும் நோட்டமிட்டான், கீழே இராணுவத்தினரும் விமானப்படையினரும் எங்கும் நிறைந்திருந்தார்கள். சடாரெனக் கண்களை மூடிக்கொண்டான்.

விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரி திலகனிடம் கேள்விகள் கேட்கக்கூடும். இலங்கையை விட்டு ஏன் போனாய்? எப்படிப் போனாய்? சட்டப்படி வெளியேறினாயா? உன்னுடைய இலங்கை பாஸ்போர்ட் என்னவானது? இலங்கையில் இருந்தபோது என்ன செய்தாய்? முப்பத்தைந்து வருடங்களாக ஏன் இலங்கைக்குத் திரும்பி வரவில்லை? நீ எப்போதாவது இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளாயா? சிறையில் இருந்தாயா? இலங்கையில் உனக்கு யார் இருக்கிறார்கள்? எப்போது வெளிநாட்டுக் குடிமகன் ஆனாய்? என்றெல்லாம் கேள்விகள் இருக்கலாம். இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்களைச் சொல்வது என்றெல்லாம் திலகன் ஏற்கனவே திட்டமாக யோசித்து வைத்திருந்தான். தன்னுடைய பதில்களை ஒரு தாளில் எழுதிப் பல தடவைகள் சரிபார்த்துக்கொண்டான். சென்னை விமான நிலையத்திலிருந்தும் கடைசியாக ஒரு தடவை பதில்களைப் படித்து மனதினுள் பதிய வைத்துக்கொண்டு, விமானம் ஏறுவதற்கு முன்பாக அந்தத் தாளைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டான். அவன் தயார் செய்து வைத்திருந்த பதில்களில் முக்கால்வாசி பொய்யானவை. உண்மையான பதில்களைச் சொன்னால் அவனால் ஒருபோதுமே அய்ரோப்பாவுக்குத் திரும்ப முடியாது என்றே அவன் நினைத்தான்.

திலகனின் மனைவி சில இணையத்தளங்களை ஆராய்ந்து படித்துவிட்டு, சில விஷயங்களை அவனுக்குக் கற்பித்திருந்தாள். குடிவரவு அதிகாரிகளிடம் பேசும்போது சிரிப்பது, சிணுங்குவது, பகடி பேசுவது போன்றவை கூடாது. அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் சுருக்கமாகப் பதிலளிக்க வேண்டும். பதற்றம் கண்டிப்பாகக் கூடாது. தன்நம்பிக்கையுடன் பேச வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் உண்மையிலேயே அவர்களுக்கு முக்கியம் அல்ல. பதில்களைச் சொல்லும்போது வெளிப்படும் உடல்மொழியையே அவர்கள் கவனிக்கிறார்கள். அங்கேதான் அவர்கள் தேடும் பதில்கள் ஒளிந்துள்ளன.

விமானத்திலிருந்து இறங்கிப் பூமியில் கால் வைத்தபோது, சப்பாத்துக்குள்ளேயே அவனது பாதங்கள் கூசுவதைத் திலகன் உணர்ந்தான். கண்களை உயர்த்தியபோது, விமான நிலையத்தின்மீது பறந்துகொண்டிருந்த தேசியக் கொடி அவனது கண்களைக் கூசச் செய்தது. உணர்வு கெட்ட நிலையில்தான் அவன் குடிவரவு அதிகாரியின் முன்னால் வரிசையில் நின்றுகொண்டிருந்தான். இலங்கைக்கு வந்தே இருக்கக் கூடாது என்றுதான் அவனது மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ‘பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் அதிகாரியிடம் போ’ என்று அவனது அறிவு சொல்லியது.

அதிகாரி கன்னங்கரேலெனத் தாடி வைத்திருந்த நடுத்தர வயதானவன். அவனது கம்பீரமான தோற்றத்தையும் தோள்ப்பட்டையில் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டு அவன் அணிந்திருந்த பகட்டான சீருடையையும் பார்த்தபோது, திலகனுக்கு கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் தோற்றமே ஞாபகத்திற்கு வந்தது. அதிகாரியிடம் கடவுச்சீட்டைக் கொடுத்துவிட்டு, பதற்றத்தைத் தனக்குள் மறைத்து வைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அதிகாரி தனது உருண்டைக் கண்களால் திலகனைப் பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்து கடவுச்சீட்டைப் பரிசீலித்தான். தலையை நிமிர்த்தாமலேயே “திலகராஜா ஆறுமுகநாதன்” என்று திலகனின் முழுப் பெயரையும் தடங்கலில்லாமல் உச்சரித்தான். ‘ஆம்’ என்பது போலத் திலகன் தலையை மெதுவாக அசைத்தான். கடவுச்சீட்டில் முத்திரையை ‘சக்’ என ஒலியெழப் பொறித்துவிட்டு அதிகாரி கடவுச்சீட்டைத் திருப்பிக் கொடுத்தான். பதற்றத்தைக் காட்டாமலேயே கடவுச்சீட்டை எடுத்துக்கொண்டு, திலகன் அங்கிருந்து பொதிகள் பகுதியை நோக்கிச் சென்றான்.

விமான நிலையத்திற்கு வெளியே அம்புலி தொந்தி சரியும் தனது பெருத்த தேகத்துடனும் ஆடம்பரக் காருடன் திலகனுக்காகக் காத்திருந்தான். திலகனுக்கும் அம்புலிக்கும் முப்பத்தைந்து வருடகால நட்பு. இந்தியாவிலிருந்து ஒரே விமானத்தில் அய்ரோப்பாவுக்குச் சென்று அகதித் தஞ்சம் கோரியவர்கள். ஒரே அகதி முகாமில் இருந்தவர்கள். ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள். இப்போதும் ஒரே நகரத்தில் வசிப்பவர்கள்.

யுத்தம் நடந்த காலத்திலேயே அம்புலி இலங்கைக்கு வந்து போய்க்கொண்டிருந்தான். நல்லூர் திருவிழாவுக்குத் தவறாமல் குடும்பத்தோடு வந்து ஒருமாத காலம் தங்கிச் செல்வான். ஆள் கடுமையான உழைப்பாளி. பனி, குளிர் பாராமல் மூன்று வேலைகள் பார்த்து, ஒருநாளுக்கு மூன்று மணிநேரம் மட்டுமே அவன் தூங்கிய காலமும் ஒன்றிருந்தது. இப்போது சொந்தத் தொழில் நடத்துகிறான். யாழ்ப்பாண நகரத்திலிருந்து பதினைந்து கிலோமீற்றர்கள் தூரத்திலுள்ள அவனுடைய கடற்கரை ஊரில் ‘வெள்ளை மாளிகை’ போன்றதொரு மூன்று மாடி வீடு கட்டியிருக்கிறான். வீட்டின் முன்னே தாமரைத் தடாகமும், வீட்டின் பின்னே பெரியதொரு நீச்சல் குளமும் உள்ளன. அந்த வீட்டின் நிழற்படங்களையும் வீடியோப் படங்களையும் வாரம் தவறாமல் பேஸ்புக்கில் பதிவேற்றுவான். வாட்ஸப்பில் திலகனுக்கு அனுப்புவான்.

ஒருமுறை இலங்கைக்குக் குடும்பத்தோடு வந்து தன்னுடைய வீட்டில் தங்குமாறு அம்புலி அடிக்கடி திலகனை அழைத்துக்கொண்டேயிருந்தான். திலகனுக்கு மட்டுமல்லாமல் அவனது மனைவி, பிள்ளைகளுக்கும் கூட அய்ரோப்பாவுக்கு வெளியே செல்வதில் ஆர்வமில்லை. ஒவ்வொரு விடுமுறையையும் உயர்ந்த மலைச் சிகரங்களிலும் ஊசியிலைக் காடுகளிலும் கழிக்கவே அவர்கள் விரும்பினார்கள். ஆனால், இந்தமுறை அம்புலி சொன்ன ஒரு விஷயம் திலகனைக் கொஞ்சம் சலனப்பட வைத்தது.

“மச்சான்… இலங்கைக்கு வாறதெண்டா இப்பவே வந்திரு. அனுரா அய்யாட ஆட்சியில நாடு நல்லாயிருக்கு. இதைக் குழப்பத்தான் ரணிலும் நாமலும் ட்ரை பண்ணுறாங்கள். அனுராவ ஆரும் சுட்டுப் போடுவாங்களோ எண்டு எனக்கொரு பயமிருக்கு.”

“ஆர் சுடுவாங்கள்?”

“பாதாள உலக மாபியா சுடலாம், அமெரிக்கா சுடலாம், பண்டாரநாயக்காவச் சுட்டமாதிரி புத்த பிக்குக்கூடச் சுடலாம்… என்ன வேணுமெண்டாலும் நடக்கும். நீ சாகுறத்துக்குள்ள ஒருக்கா வந்து பிறந்த மண்ணைப் பார்த்திட்டு வா!”

அம்புலி இப்படித்தான் சளசளத்துக் கதைப்பான். நெஞ்சில் வஞ்சகம் சூது இல்லாமல் அவன் பேசினாலும், அதைக் கேட்கிறவர்களுக்குக் கண்டிப்பாக எரிச்சல் வரும். அவன் பகடி என நினைத்துப் பேசுவது மற்றவர்களுக்குக் கொதியைக் கிளப்பும். அவனைத் திட்டினாலும் அவனுக்கு உறைக்காது. பெரியதொரு சிரிப்புடன் திட்டை ஏற்றுக்கொள்வான். அடுத்த நொடியே அவன் பேசியதையும் அடுத்தவர் திட்டியதையும் மறந்துவிடுவான்.

திலகன் இலங்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தான். அவன் படித்த பாடசாலைதான் முதலில் ஞாபகத்திற்கு வந்தது. கிராமத்தின் வயல்வெளி, புகையிலைத் தோட்டங்கள், சிறிய மணற்குன்றுகள், கோயில்கள், கடல் எல்லாமே அவனது மூளையில் மங்கலாக அசைந்தன. அவன் மனைவியிடம் பேசியபோது, அவள் “அந்தக் கிழக்கு அய்ரோப்பிய மருத்துவரும் அதைத்தானே சொன்னார். போய்விட்டு வா” என்றாள். அடுத்தநாள் விடிகாலையில் அவனைக் கட்டியணைத்தவாறே “இந்த இரவு உனக்குத் துர்க் கனவு வரவில்லைப் பார்த்தாயா” என்று கிசுகிசுத்தாள்.

திலகன் அய்ரோப்பாவிலிருந்து சென்னை வழியாக யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் வந்திருந்தான். கிட்டத்தட்ட இருபது மணிநேரப் பயணம். நேர வித்தியாசம் வேறு. களைத்துப் போயிருந்தான். அம்புலி வெடிச் சிரிப்போடும் ஓயாத பேச்சோடும் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

விமான நிலையத்தில் தொடங்கி, அந்தக் கார் சென்ற பாதைகளிலெல்லாம் இராணுவத்தினர் நிறைந்திருந்தார்கள். பச்சை நிற வாகனங்களில் மட்டுமல்லாமல், முதுகில் துப்பாக்கியை மாட்டியவாறு சைக்கிள்களிலும் குறுமறுக்காகப் போய்க்கொண்டிருந்தார்கள். திலகனுக்குப் பதற்றமாகவே இருந்தது. இலங்கை இராணுவத்தில் மொத்தமாக இருபது படைப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் பதினாறு படைப்பிரிவுகள் தமிழ்ப் பகுதிகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. வன்னியில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு இராணுவத்தினன். யாழ்ப்பாணத்தில் பதினான்கு மனிதர்களுக்கு ஒரு இராணுவத்தினன். வீதியில் நின்ற இராணுவத்தினரோடு அம்புலி அவ்வப்போது தனக்குத் தெரிந்த சிங்களத்தில் ஏதேதோ பேசி இளித்துக்கொண்டே வந்தான். இராணுவத்தினரும் பதிலுக்கு இளித்தார்கள். இது திலகனுக்கு இன்னும் பதற்றத்தையும் எரிச்சலையும் கூட்டியது.

“சண்டை முடிஞ்சு பதினாறு வருசமாகியும் இன்னும் இவங்கள் திரும்பிப் போகேல்லையே…” என்று சொல்லிக்கொண்டே திலகன் களைப்போடு கண்களை மூடிக்கொண்டான்.

திலகனின் தொடையில் பலமாகத் தட்டிய அம்புலி “அப்பிடி இல்ல மச்சான்… ஆமி இருக்கிறதுதான் நல்லம். இல்லாட்டி யாழ்ப்பாணத்தில கள்ளரின்ர அட்டகாசம் தாங்க ஏலாது. என்ர வீட்டச் சுத்தி எட்டுக் கமெரா பூட்டி வைச்சிருக்கிறன். அப்பிடியும் கள்ளர் உள்ளிட்டு தேங்காய மாங்காயப் பிடுங்கிக்கொண்டு போறாங்கள்” என்றான்.

திலகன் இப்போது சினத்தால் கண்களை மூடிக்கொண்டான். அம்புலியின் வீட்டுக்கு வந்த பின்பும்கூட, பயணக் களைப்புத் தீரத் தூங்குவதற்குத் திலகனை அம்புலி விட்டானில்லை. “வா.. வா… வீட்டைப் பார்” எனத் திலகனை அழைத்துச் சென்று, மூன்று மாடிகளையும் அவற்றிலுள்ள ஒவ்வொரு அறையையும் ஒவ்வொரு பாத்ரூமையும் ஒவ்வொரு சமையலறையையும் சுற்றிக் காட்டிவிட்டே, திலகனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆடம்பர அறைக்குள் திலகனை அனுமதித்தான்.

திலகன் மாடியில் நின்று அந்த ஊரைப் பார்த்தான். ஊர் யுத்ததத்தால் சிதிலமடைந்து கிடந்தது. அந்தச் சிதிலங்களுக்கு நடுவே அங்கங்கே அம்புலியைப் போன்றவர்களின் வெள்ளை மாளிகைகள் தோன்றியிருந்தன.

அன்றிரவு தூக்கத்தில் திலகனுக்குத் துர்க் கனவுகள் வரவில்லை.

2

ஒரு வாரப் பயணத் திட்டத்திலேயே திலகன் இலங்கைக்கு வந்திருந்தான். முதல் இரண்டு நாட்கள் நல்லூர்த் திருவிழாவிலும், அம்புலி குடும்பத்தினரின் தடபுடலான உபசரிப்பிலுமே கழிந்தன. நல்லூர் திருவிழாவிலும் இராணுவத்தினர் சீருடையுடன் நின்றிருந்தார்கள். அம்புலியின் ஊரின் வாசலிலும் ஓர் இராணுவ முகாம் இருந்தது.

மூன்றாவது நாள் காலையில், திலகன் தன்னுடைய கிராமத்தைப் பார்த்துவிட்டு வருவதற்கு எண்ணினான். அம்புலியின் ஊரிலிருந்து ஏழெட்டுக் கிலோமீட்டர்கள் தூரத்தில் திலகனின் கிராமம் இருந்தது. அம்புலியின் குடும்பம் நல்லூர்த் திருவிழாவுக்குக் காரில் கிளம்பிச் சென்றதன் பின்பாக, அம்புலியின் சித்தப்பாவின் சைக்கிளை வாங்கிக்கொண்டு திலகன் தனது கிராமத்தை நோக்கிப் புறப்பட்டான்.

வழியில் இருந்த ஊர்களிலெல்லாம் இராணுவத்தினர் எதிர்ப்பட்டார்கள். வேலணை மத்திய மகா வித்தியாலயத்தைக் கடந்தபோது, சைக்கிளை ஒரு நிமிடம் நிறுத்தி வித்தியாலயத்தைத் தெருவிலிருந்தே பார்த்தான். அன்று பவுர்ணமி தினம் என்பதால் பாடசாலைக்கு விடுமுறை. திலகன் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை இங்கேதான் படித்தான். தனது கிராமத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்து பாடசாலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தான். அந்தப் பாடசாலையை இராணுவம் கைப்பற்றிய நாள் திலகனுக்கு ஞாபகமிருக்கிறது.

மீண்டும் சைக்கிளை மிதித்துக்கொண்டு தனது கிராமத்தை நோக்கிச் சென்றான். வழியில் ஒவ்வொரு கிலோமீட்டரிலும் ஒரு இராணுவச் சாவடியோ, கடற்படைச் சாவடியோ இருந்தது. இந்தப் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. பத்துக் கிராமங்கள் அந்த வலயத்தில் சீரழிந்து கிடக்கின்றன.

இவனுடைய சிறிய கிராமம் முழுவதுமாக அழிந்து கிடந்தது. இடிந்த வீடுகளும் காடு பற்றிக் கிடந்த நிலமுமாக அது இருந்தது. இவனது வீட்டையே இவனால் உடனே கண்டுபிடிக்க முடியாமல் கடந்து சென்று, பாழ்பட்டுக் கிடந்த பிள்ளையார் கோயிலைக் கண்டுவிட்டு, வந்த வழியாலேயே திரும்பிச் சென்று வீடு இருந்த இடத்தைக் கண்டு பிடித்தான். சடைத்து வளர்ந்திருந்த வடலிகளுக்கு நடுவே, ஒருகாலத்தில் வீடொன்று இருந்ததற்கான தடயங்களாக அத்திவாரக் கற்கள் சில காணப்பட்டன. இந்தக் கிராமம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, வீடுகளிலிருந்து கதவுகள், ஜன்னல்கள் படையினரால் கழற்றப்பட்டுக் கப்பலில் ஏற்றப்பட்டு, தெற்கே கொண்டு செல்லப்பட்டன. வீடுகள் இடிக்கப்பட்டுக் கற்கள் இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

கடற்கரையில் மட்டும் பத்துப் பதினைந்து சிறிய வீடுகளில் சனங்கள் இருந்தார்கள். அவர்களும் மீன் பிடிப்பதற்காகப் புதிதாக வந்து அங்கே குடியேறியவர்களே. திலகனுக்கு அவனுடைய சொந்தக் கிராமத்திலே, அவனுக்குத் தெரிந்த ஒருவரைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய வீட்டு நிலத்திலிருந்து நினைவாக எதையாவது எடுத்துச் செல்லத் திலகன் விரும்பினான். ஆனால், உண்மையிலேயே அப்படி எதுவுமே அங்கே இருக்கவில்லை.

சைக்கிளைத் திரும்பவும் மிதித்துக்கொண்டு அம்புலியின் ஊரை நோக்கித் திலகன் புறப்பட்டான். கிராமங்கள் என்ற பெயரில் இருக்கும் இந்த மயானங்களைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்தேனா என்று உதடுகளை இறுக மடித்தவாறு யோசித்துக்கொண்டே சைக்கிளை மிதித்தான். வரும்போது கால்களில் இருந்த பலம் இப்போது இல்லாமல் போயிருந்ததை உணர்ந்தான். சைக்கிளை மிதிப்பது சிரமமாகயிருந்தது. அய்ரோப்பாவின் மலைக் கிராமங்களில் செங்குத்தான பாதைகளிலேயே சர்வசாதாரணமாகச் சைக்கிள் ஓட்டும் திலகனுக்கு, பழகிய மண்ணும் சமவெளியும் களைப்பை எப்படி ஏற்படுத்துகின்றன என அவனுக்குப் புரியவேயில்லை. வயதின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுச் சைக்கிளை மெதுவாக மிதித்துக்கொண்டிருந்தான். சாட்டி மாதாங்கோயில் கிணற்றில் இப்போதும் சனங்கள் கயிற்றில் வாளி கட்டித் தண்ணீர் அள்ளிக்கொண்டு நின்றார்கள். வந்தததற்கு ஊர்த் தண்ணியையாவது ஒரு வாய் குடிப்போம் என நினைத்துக்கொண்டு, ஒருவரிடம் தண்ணீர் கேட்டுக் கைகளைக் குவித்துப் பருகினான்.

வங்களாவடியை நெருங்கியபோது, வயிற்றில் கொஞ்சம் பசி எடுத்தது. வீதியோரச் சிறிய தேநீர்க் கடையில் தேநீர் வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தான். யாழ்ப்பாணத்திலிருந்த வந்த ஒரு பஸ் வங்களாவடிச் சந்தியால் திரும்பிப் புங்குடுதீவை நோக்கிச் சென்றது. அந்த பஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்த திலகனின் மனத்தில் அந்த பஸ் போகும் பாதையும் தரைப்பாலமும் ஞாபகத்தில் வந்தபோது, அவை சந்திராவின் ஞாபகத்தையும் அவனுள் அழைத்து வந்தன. அடி மனதில் இறுகிக் கிடக்கும் நினைவுகளின் ஒரு நுனியை விரும்பித் தொட்டுவிட்டால், ஒட்டுமொத்த நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாகச் சடுதியிலேயே விரிந்துவிடுகின்றன. அந்த பஸ் போகும் பாதையில் இருக்கும் கொம்பனியடிச் சந்தியில்தான் அவரது வீடு இருப்பதாகச் சந்திரா சொல்லியிருந்தார்.

3

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாகத் திலகனும் அம்புலியும் அய்ரோப்பாவுக்கு அகதிகளாகச் சென்றபோது, முதலில் ஒரு மலையடிவாரச் சிறுநகரத்தில் அமைந்திருந்த அகதி முகாம் ஒன்றுக்கே அவர்கள் அனுப்பப்பட்டார்கள். கைவிடப்பட்டிருந்த ஒரு பசளைத் தொழிற்சாலையில் தற்காலிகமாக அறைகள் அமைக்கப்பட்டு, அது அகதி முகாமாக மாற்றப்பட்டிருந்தது. முகாமின் அமைப்புக் கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலையை ஒத்திருந்தது. அங்கிருந்த பன்னிரண்டு அறைகளிலும் அறைக்கு இருவராக அகதிகள் தங்க வைக்கப்பட்டார்கள். திலகனுக்கும் அம்புலிக்கும் ஒரே அறை கிடைத்தது.

பனி பொழிந்த குளிர் காலமொன்றில்தான் இருவரும் வந்திருந்தார்கள். அந்த அகதி முகாம் குளிரைத் தாங்குவதற்கு ஏற்றதல்ல. இருபத்து நான்கு மணிநேரமும் அறை கடுங்குளிராகவே இருந்தது. எப்போதாவது சூரிய வெளிச்சம் தோன்றினாலும் அது முகாமுக்குள் வரவே வராது. அந்த முகாமில் இருந்தவர்கள் அனைவருமே இலங்கைத் தமிழர்கள்தான். அந்தக் காலகட்டத்தில் இந்த நாட்டுக்குத் தமிழர்கள்தான் அதிகமாக அகதிகளாக வந்துகொண்டிருந்தார்கள். நாட்டில் பத்து அகதிக்கு எட்டு அகதித் தமிழர்கள்.

வேலை செய்வதற்கோ, அந்தச் சிறுநகரத்தை விட்டு வெளியேறவோ அகதிகளுக்கு அனுமதி கிடையாது. அகதி விண்ணப்பம் எற்றுக்கொள்ளப்பட்டு, அகதி விசா கிடைத்துவிட்டால் வேலை செய்யலாம். நாட்டில் விரும்பிய இடத்தில் குடியேறலாம். அய்ந்து வருட காலத்தில் குடியுரிமையும் கோரலாம். ஆனால், அகதி விசா எப்போது கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. சிலருக்கு ஒரே வருடத்தில் கிடைத்தது. சிலர் மூன்று வருட காலத்துக்கு மேலாகவும் அகதி முகாமில் விசாவுக்காகக் காத்திருந்தார்கள். சிலருக்கு ஆறு மாதங்களிலேயே அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறுமாறு கண்டிப்பான உத்தரவும் கிடைத்திருக்கிறது.

அகதிகளுடைய உணவுக்காக வாராந்திரம் சிறுதொகைப் பணம் வழங்கப்படும். அந்தப் பணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிச் சமைத்துக்கொள்ளலாம். முகாமில் சமையலறை, கழிவறை, குளியலறை எல்லாமே பொதுவாக ஆனால், சீர்கெட்டு இருந்தன. கிடைக்கப் போகும் விசாவுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டும், குளிரைப் பொறுத்துக்கொண்டும் இருக்க வேண்டியதுதான்.

அம்புலிக்கு இந்த அகதி வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள இயலாமல் இருந்தது. “நான் திரும்பி சிலோனுக்குப் போகப் போறன்…” என்று அவ்வப்போது முனகுவான். “ஏன் அங்க போய் ஆமியிட்ட சுடுபட்டுச் சாகப் போறியோ?” என்று திலகன் கேட்பான்.

அகதிகள் அந்த இருள் முகாமில் அடைந்து கிடைப்பதில்லை. காலையிலேயே முகாமிலிருந்து கிளம்பினால் இரவுதான் முகாமுக்குத் திரும்புவார்கள். பகலில் அந்தச் சிறுநகரம் முழுவதும் திசைக்கு ஒருவர் இருவராகச் சுற்றியலைந்து நகரத்திலுள்ள மக்களிடம் போய் வேலை கேட்பார்கள். எஞ்சிய நேரத்தை நகரச் சதுக்கத்திலோ, பூங்காக்களிலோ கழிப்பார்கள். அந்தச் சிறுநகரத்திற்குள் இந்த அகதிகள் மட்டுமே கறுப்பர்கள். நகர மக்களில் பலர் இந்த அகதிகளைக் காணும்போது சற்றே முறைக்கத் தவறுவதில்ல. தங்களுடைய அமைதியான வாழ்வும் கலாசாரமும் இந்தப் புதியவர்களால் அழிந்துபோகின்றன என்ற தேவையில்லாத மனக்குறை அவர்களுக்கு. அகதிகளைப் பரிதாபமாகப் பார்ப்பவர்களும் சிலர் இருந்தார்கள். அகதிகளுக்குச் சட்டத்தை மீறி வேலை கொடுக்கவும் அங்கே ஆட்களிருந்தார்கள். ஏதாவது சில நாட்கள் தோட்ட வேலையோ, உணவகங்களில் தற்காலிக வேலையோ கிடைக்கும்.

ஒருநாள் மாலையில், நகர மையத்திலுள்ள சுப்பர் மார்க்கட்டில் திலகனும் அம்புலியும் சமையல் பொருட்களை ஒன்றுக்கு நான்கு தடவைகள் விலையைத் திரும்பத் திரும்பப் பார்த்தவாறே எடுத்துக்கொண்டிருந்தபோது, குழந்தைகள் தமிழில் பேசும் குரல்கள் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். ஒரு தாயும் அவரது மூன்று குழந்தைகளும் அங்கே இருந்தார்கள். அந்தத் தாயின் பெயர் சந்திரா.

அம்புலி தன் வழக்கப்படியே அந்தத் தாயிடம் போய் “சிலோனில நீங்கள் எவ்விடம்? இஞ்ச வந்து கன காலமோ? விசா கிடைச்சிட்டுதே? களவா வேலை எங்கேயும் எடுக்கேலுமே?” எனப் பேசத் தொடங்கிவிட்டான். சந்திராவும் சிரித்த முகமாகக் கலகலத்துப் பேசக் கூடியவர்தான். அகதி முகாமில் இருக்கும் பையன்கள் என்ற இரக்க உணர்வும் அக்கறையும் சந்திராவின் பேச்சில் இருந்தன. அந்த இரக்கத்தை ஒரு சொட்டுக்கூட விடாமல் கறக்க அம்புலி முயற்சித்துக்கொண்டிருந்தான். தன்னுடைய கணவர் தில்லையம்பலம் ஒரு முதியோர் இல்லத்தில் வேலை செய்வதாகவும், அவரிடம் கேட்டால் வேலை எதுவும் கிடைக்கலாம் என்றும் சந்திரா சொன்னார். அம்புலி அவர்களது வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டான்.

சந்திராவும் அவரது கணவர் தில்லையம்பலமும் ஆறு வருடங்களுக்கு முன்பு இந்தச் சிறுநகரத்திற்கு அகதிகளாக வந்தவர்கள். அவர்களுக்கு அகதி விசா கிடைத்திருந்தது. அவர்களது மூன்று குழந்தைகளில் முதலாவது குழந்தையான மாதுமை இலங்கையில் பிறந்தவள். அவளுக்குப் பத்து வயது. மற்றைய இரண்டு குழந்தைகளும் இங்கேயே பிறந்தவர்கள். இந்திரஜித்துக்கு அய்ந்து வயது, அபராஜித்துக்கு நான்கு வயது. நகரத்திற்கு ஒதுக்குப்புறமாக அவர்களது வீடு இருந்தது. ஒரு சிறிய தெருவில் தனித்திருந்த இரண்டு தொடர் வீடுகளில் ஒன்றில் அவர்கள் குடியிருந்தார்கள். மற்றைய வீடு ஆட்களில்லாமல் கைவிடப்பட்டிருந்தது. அவர்களது வீட்டுக்கு முன்பு ஒரு சிறிய பூங்கா இருந்தது.

அந்தச் சிறுநகரத்திற்குப் புதிதாக வரும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வதில் தில்லையம்பலம் பின் நிற்பதில்லை. முதியோர் இல்லத்தில் வேலை செய்ததால், அவருக்கு இந்த நாட்டின் மொழியும் சரளமாகப் பேச வந்தது. மருத்துவமனைக்கு அல்லது ஏதாவது அரச அலுவலகங்களுக்கு அகதிகள் போவதென்றால், மொழிபெயர்ப்பாளராகத் தில்லையம்பலமும் கூடவே போவார். திலகனின் முழங்கையில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த இடத்தில் அவ்வப்போது குடைச்சலான வலி ஏற்படும். தில்லையம்பலம்தான் மருத்துவமனைக்குத் திலகனை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது, மூன்று நாட்கள் திலகன் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. ஒருநாள் சந்திரா மதிய உணவுடன் வந்து திலகனைப் பார்த்தார்.

இப்படித் தொடங்கிய பழக்கத்தினால் திலகன் அடிக்கடி தில்லையம்பலத்தின் வீட்டுக்குப் போகத் தொடங்கினான். தில்லையம்பலத்திற்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் அதிகாலையில் வேலை ஆரம்பிக்கும், மூன்று நாட்கள் மாலையில் வேலை ஆரம்பிக்கும். அவர் வீட்டில் இல்லாதபோதும் திலகன் அங்கே போய்வந்தான். அவர்களின் மூன்று குழந்தைகளும் திலகனோடு அன்பாக இருந்தார்கள். திலகனும் அதைத் திருப்பிக்கொடுத்தான். மூன்று குழந்தைகளையும் வீட்டுக்கு முன்னாலிருந்த பூங்காவுக்கு அழைத்துச்சென்று விளையாடுவான்.

ஒருநாள், தில்லையம்பலத்தின் வீட்டிலே பேசிக்கொண்டிருக்கும்போது, ஊரிலிருக்கும் சந்திராவின் வீடு குறித்துப் பேச்சு வந்தது.

“உங்கிட வீடு வேலணையில எவ்விடத்தில அக்கா?” என்று திலகன் கேட்டான்.

“பஸ் கொம்பனியடி உமக்குத் தெரியுமே?”

“தெரியும் அக்கா! வேலணை சென்றலில படிக்கேக்க அந்த இடமெல்லாம் நான் சுத்தித் திரிஞ்ச இடம்தானே.”

“கொம்பனியடி முடக்கில் வரிசைக்கு மூண்டு கடைகள் இருக்கெல்லோ. அதுக்கு நேர் முன்னால எங்கிட வீடு” என்றார் சந்திரா.

4

சந்திராவுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள், திடகாத்திரமான தேகமும் அருமையான குணநலன்களும் இனிமையான பேச்சும் கொண்ட கணவர் இருக்கிறார், சந்திரா தன்னைவிடப் பத்து வயது பெரியவர் என்பதெல்லாம் திலகனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. வெறிபிடித்தவன் போலத்தான் அவன் சந்திராவைக் காதலிக்கத் தொடங்கினான். அவனுடைய மனம் முழுவதும் சந்திராதான் நிறைந்திருந்தார். ஒரு பெண் தெய்வத்தை உருவேறித் தொழுவதைப் போலத்தான் அவன் சந்திராவைக் காதலித்தான். அவனின் துர்க் கனவுகள் அறுபடும்போது, அங்கே சந்திராவின் கரிய குதிரை முகத்தைத்தான் அவன் பார்த்தான்.

அந்த முகம் சற்றே முக்கோண வடிவமானது. உயரமான தோற்றமுள்ள அவர் நீளமான தலைமுடியை அழுத்தமாக வாரிப் பிடரியில் கூட்டிக் கட்டியிருப்பார். நெற்றியில் சுட்டி போலத்தான் சிவப்புப் பொட்டிடுவார். அவர் கைகளை வீசி, நிமிர்ந்து நடக்கும்போது, நகரச் சதுக்கத்திலே இருக்கும் மழைத் தேவதையின் சிலை, பீடத்திலிருந்து இறங்கி நடந்து செல்வது போலத்தான் திலகனுக்குத் தோன்றும்.

தன்னுடைய காதலைச் சந்திராவிடம் தெரிவிப்பது சாத்தியமே இல்லை என்று திலகனுக்கே தெரிந்தது. ஆனால், சந்திராவைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை. முகாமில் இருக்கும் மற்றைய தமிழ்ப் பையன்களுடன் சேர்ந்து வெளியே போவது, நகர மையத்திலே சுற்றித் திரிவது, முகாமுக்கு முன்னாலுள்ள சிறிய மைதானத்தில் மாலைவேளைகளில் கரப்பந்தாட்டம் ஆடுவது, இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் பற்றியும் அரசியல் நிலவரங்களைப் பற்றியும் மற்றைய தமிழர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, இரவிலே முகாமிலுள்ளவர்கள் குடித்துவிட்டுச் சினிமாப் பாடல்களைப் பாடும்போது, அதிலே அவனும் கலந்துகொள்வது போன்ற எல்லாவற்றிலிருந்தும் திலகன் விலகியிருக்கத் தொடங்கினான். அம்புலியோடு பேசுவது கூடக் குறைந்துபோனது. சந்திராவை நினைப்பதைத் தவிர வேறெதிலும் அவனின் மனம் செல்லவில்லை.

சந்திராவின் மீதான பித்துநிலை கட்டற்றுப் பெருகிக்கொண்டேயிருக்க; நிதானம், வெட்கம், மான அவமானம் இதையெல்லாம் துறந்த நிலைக்குத்தான் திலகன் போய்க்கொண்டிருந்தான். இந்த உலகத்தின் ஆதி ஆணும் பெண்ணுமாகத் தானும் சந்திராவும் இருந்திருக்கக் கூடாதா என ஏங்கினான். திலகனில் ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை அம்புலி கவனிக்கத்தான் செய்தான்.

“என்ன திலகன்… ஏதும் பிரச்சினையா? ஒண்டும் கதைக்கப் பேசுறாய் இல்ல. என்னோட ஏதும் மனவருத்தமா?” என்று அம்புலி கேட்டான்.

“இல்லையடா… உனக்குத் தெரியும்தானே எனக்கு நித்திரையில கனவு வந்து குழப்புறது. இப்ப கொஞ்சம் கூடுது” என்று திலகன் சொல்லிச் சமாளித்துவைத்தான்.

திலகன் சில நாட்களில் சந்திராவின் வீட்டுக்கு முன்னாலுள்ள பூங்காவுக்குச் சென்று, அங்கே செடிகளின் மறைவில் கல் இருக்கையில் இருந்தவாறே சந்திராவின் வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு முகாமுக்குத் திரும்பி வருவான். அப்படியொரு நாள் திரும்பி வரும்போது, எதிரே வீதியில் சந்திரா மூன்று குழந்தைகளுடன் வந்துகொண்டிருந்தார். இவனைக் கண்டதும் நீளமான தன்னுடைய கண்களை இன்னும் நீளமாக்கி “என்ன திலகன் இந்தப் பக்கமே இப்ப நீர் வாறேல்லையே… எங்கேயோ உமக்கு வேலை கிடைச்சிட்டுதோ எண்டு யோசிச்சனான்” என்றார். தேநீர் அருந்த வருமாறு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அது இரண்டு அறைகளும், சமையலறையும், ஒரு சிறிய வரவேற்பறையும் கொண்ட பழைய காலத்து வீடு. வரவேற்பறை முழுவதும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் தரையில் பரவிக்கிடந்தன. வரவேற்பறையில் ஒரு பெரிய கண்ணாடி ஜன்னல் இருந்தது. அந்தக் கண்ணாடி வழியே திலகன் வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். வீட்டைச் சுற்றி வளர்ந்திருந்த புற்கள் ஜன்னல் உயரத்திற்கு நின்றன. சமையலறையிலிருந்து கையில் தேநீர் கோப்பையோடு வந்த சந்திரா “இருமன்..” என்று சொல்லிவிட்டு, அவனிடம் தேநீர்க் கோப்பையைக் கொடுத்தார். திலகன் நாற்காலியில் உட்கார்ந்தவாறே சுற்றுமுற்றும் பார்த்தான்.

“அண்ணன் இல்லையா அக்கா?”

“அவருக்கு இண்டைக்குப் பின்னேர வேலை. வீட்டுக்கு வரப் பத்து மணியாகும்.”

மூன்று குழந்தைகளும் சமையலறைக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். திலகன் நிமிர்ந்து சந்திராவைப் பார்த்தான். சந்திரா ஒரு பெருவெளிச்சம் போன்று அவனை மூடிக்கொண்டிருந்தார். திலகனுடைய கண்களில் நீர் கொப்பளித்து வழிந்தது. உதடுகளை இறுக மூடியவாறு விம்மத் தொடங்கினான். பதறிப்போன சந்திரா மெல்லத் திலகனுக்கு அருகே வந்து குனிந்து அவனது கண்களைப் பார்த்து “என்ன ராசா? என்ன நடந்தது? ஊரில இருந்து ஏதும் செய்தி வந்ததே?” என்று கேட்டார். சந்திராவின் மூச்சுக் காற்றுத் திலகனின் முகத்தில் பட்டது. அப்போது, திலகன் எல்லாவிதமாகவும் கண்ணாடிப் பொம்மை போன்று வெடித்துச் சிதறி, அவனது நாவிலிருந்து வார்த்தை உருண்டது.

5

அம்புலி தோட்ட வேலைக்குப் போய்விட்டு, இரவு தனியாக முகாமுக்குத் திரும்பி வரும்போது, சில வெள்ளைக்கார இளைஞர்கள் முகாமுக்குச் சில மீற்றர்கள் தூரத்தில் வைத்தே அம்புலியைக் கடுமையாகத் தாக்கி அவனது மண்டையை உடைத்துவிட்டார்கள். தன்னைத் தாக்கியவர்கள் மொட்டைத் தலையர்கள், அவர்களது கைகள் முழுவதும் பச்சை குத்தப்பட்டிருந்தது, விரைவிலேயே அந்த அகதி முகாமைக் கொளுத்திவிடப் போவதாக அவர்கள் சொன்னார்கள் என்று காவல்துறையினரிடம் அம்புலி வாக்குமூலம் அளித்தான்.

அந்தச் சிறுநகரத்தில் சில மாதங்களாகவே அகதிகளுக்கு எதிரான நாஸி இயக்கத்தவர்களின் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. நகர மையத்தில் வைத்தும் இரண்டு அகதிகள் முன்பு தாக்கப்பட்டிருந்தார்கள். நகரத்தின் சில இடங்களில் << தமிழர்களே வெளியேறுங்கள் >> எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளான அகதிகளிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றதே தவிர, தாக்கியவர்கள் கைது செய்யப்படவோ, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவோ இல்லை.

ஒருமுறை அகதிகள் முகாமின் மதிற்சுவரில் கறுப்பு வர்ணத்தால் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

<< அழுக்குத் தமிழர்களுக்கு எச்சரிக்கை! இது உங்களது நிலமல்ல! உடனே வெளியேறுங்கள் >>

இதற்குப் பின்பு, திலகன் இரவில் வேலை முடிந்து வீதியில் தனியே நடந்து வரும்போது, மிகுந்த எச்சரிக்கையோடுதான் வருவான். திலகனுக்கு ஒரு சிறிய மலிவுவிலை தங்குவிடுதியில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேலை கிடைத்திருந்தது. சீனக் கிழவி ஒருவர் அந்தத் தங்குவிடுதியை நடத்திக்கொண்டிருந்தார். மலை ஏற்றத்திற்கு வரும் உல்லாசப் பயணிகள் அங்கே தங்கினார்கள். ஆனாலும், அந்த விடுதியில் எப்போதும் ஒன்றிரண்டு அறைகள் காலியாகவே இருக்கும். அந்த அறையொன்றில்தான் தன்னுடைய இருபத்து மூன்று வருட வாழ்வில், ஒரு பெண்ணின் முழு நிர்வாணத்தைத் திலகன் முதன்முறையாகப் பார்த்தான். அது சந்திராவின் நிர்வாணம்.

இரண்டு தடவைகள் அங்கே சந்திரா வந்திருக்கிறார். பின்பு, அவை விபத்துகள் போல நிகழ்ந்துவிட்டன என்று சொல்லிவிட்டு, அங்கே வருவதில்லை. சந்திராவும் தன்னை ஆழமாக நேசிக்கிறார் என்று திலகனுக்குப் புரிந்தது. ஆனாலும், இதைத் தொடர முடியாது என்பது சந்திராவுக்கு மட்டுமல்லத் திலகனுக்கும் புரிந்தேயிருந்தது. “தயவு செய்து வீட்டுக்கு வராதேயும்” என்று சந்திரா சொல்லிவிட்டார். திலகனும் போகவே இல்லை. நிராகரிப்பு வைராக்கியத்தையும் கொண்டுவரும்.

இந்த நாட்களில்தான், திலகனின் அகதி விண்ணப்பம் மீளாய்விலும் நிராகரிக்கப்பட்டு, அவன் ஒரு மாதத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென உத்தரவுக் கடிதம் வந்தது. சீனக் கிழவிதான் அந்தக் கடிதத்தைப் படித்துத் திலகனுக்கு விளங்கப்படுத்திவிட்டுப் பெருமூச்செறிந்தார். வெளியேறித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் சரியாக ஒரு மாதத்தில் காவல்துறை கண்ட இடத்தில் திலகனைக் கைது செய்து, கைவிலங்கோடு இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடும். இந்த நிராகரிப்பைப் பெரியதொரு அவமானமாகத்தான் திலகன் உணர்ந்தான். நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவு கிடைத்ததைத் திலகன் யாரிடமும் சொல்லவில்லை. அவனுடைய துர்க் கனவுகள் பெருக்கிக்கொண்டே வந்தது போலவே அவனுக்குள் வைராக்கியமும் பெருகிக்கொண்டிருந்தது. எல்லாவற்றாலும் நிராகரிப்பு! எல்லோராலும் நிராகரிப்பு!

நாடு கடத்தப்பட்டுக் கைவிலங்கோடு இலங்கையில் போய் இறங்குவதற்குத் திலகன் தயாரில்லை. இந்த நாட்டைவிட்டு வெளியேறி, இன்னொரு அய்ரோப்பிய நாட்டுக்குள் நுழைந்து அங்கே அகதித் தஞ்சம் கோருவது என்று திலகன் முற்றெடுத்தான். அதைக் கூடிய விரைவிலேயே செய்ய வேண்டும். ஏனெனில், நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு கிடைக்கப்பெற்ற அகதியின் நடமாட்டத்தைக் காவல்துறையினர் அவ்வப்போது கண்காணித்தவாறே இருப்பார்கள். உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இறுதி நாள் நெருங்க நெருங்க அகதியின்மீது தீவிரமான கண்காணிப்பு விழுந்துவிடும். தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்ட அகதிகளும் இருக்கிறார்கள். அவர்கள் கைகளில் விலங்கிடப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

அந்தக் கண்காணிப்பு வளையத்தைத் தந்திரமாக உடைத்துக்கொண்டு, காரில் ஏற்றிச் சென்று எல்லையைக் கடந்து, விரும்பிய நாட்டில் இறக்கிவிட ஆட்கள் இருந்தார்கள். அப்படியான ஆட்கள் சீனக் கிழவியின் விடுதிக்கு வந்து தங்கிச் செல்வது திலகனுக்குத் தெரியும். அவர்கள் அநேகமாக அல்பேனியர்களாக இருப்பார்கள். அவ்வாறான ஒருவனுடன் திலகன் பேசினான்.

எல்லையைக் கடக்க நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள் ஏதோவொரு பண்டிகைத் தினம் என்பதால் எல்லைகளில் அதிகம் சோதனைகள் இருக்காதாம். திலகனை எல்லையைக் கடந்து அழைத்துச் செல்லும் அல்பேனியன் குறிப்பிட்ட நாளன்று சீனக் கிழவியின் தங்குவிடுதிக்கு இரவு பத்து மணிக்கு காரோடு வருவான்.

புறப்படும் நாளன்று காலையிலேயே, கடைசியாக ஒருமுறை சந்திராவைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் திலகனுக்குத் தோன்றிவிட்டது. நேரமாக நேரமாக அந்த எண்ணம் அவனுக்குள் பெருகி அவனை அலைக்கழிக்க ஆரம்பித்துவிட்டது. இரவு ஏழு மணிக்கு தங்குவிடுதியிலிருந்து சந்திரா வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்தான்.

“அண்ணன் வீட்ட இருக்கிறாரே?”

“இண்டைக்குப் பின்னேர வேலை. பத்து மணிக்குத்தான் வீட்ட வருவார்…”

“பிள்ளையள்?”

“அவையள் இஞ்சதான் ஹோலில இருந்து விளையாடிக்கொண்டிருக்கினம். ஏன் கேட்கிறீர்?”

“நான் கடைசியா உங்கள ஒரேயொருக்கா, ஒரேயொரு நிமிசம் பார்க்க ஆசைப்படுறன். உங்கிட வீட்டுக்கு முன்னால இருக்கிற பார்க்கில இன்னும் பத்து நிமிசத்தில இருப்பன்.” தொலைபேசியைத் திலகன் வைத்துவிட்டான். வைராக்கியம்!

தங்குவிடுதியிலிருந்து நடந்தால் பத்து நிமிடங்களுக்குள் சந்திராவின் வீட்டுக்கு முன்னாலுள்ள பூங்காவுக்குப் போய்விடலாம். வழியில்தான் சந்திராவின் மூன்று குழந்தைகளும் படிக்கும் பாடாசாலை இருந்தது. அந்தப் பாடசாலையைக் கடந்ததும் வரும் சிறிய கடைக்கு முன்பாக ஒரு கார் நின்றிருந்தது. வீதியில் வேறு எந்த நடமாட்டமும் இல்லை. வீதி விளக்குகளின் மங்கலான ஒளியில் அந்தப் பாதை சாரைப் பாம்பு போல வளைந்துகொண்டிருந்தது.

பூங்காவுக்குள் நுழைந்து, எப்போதும் அமரும் கல் இருக்கையில் திலகன் அமர்ந்துகொண்டான். அங்கிருந்து சந்திராவின் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தான். வீட்டின் வரவேற்பறையில் மட்டும் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. பூங்காவில் ஒரு மின்விளக்கு உயரமான கம்பத்தில் எரிந்துகொண்டிருந்தாலும், பூங்கா முக்கால்வாசி இருளிலேயே இருந்தது. அந்த இருளுக்குள் சந்திரா கைகளை வீசி வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தார்.

“சொல்லும் திலகன்! ஏன் இப்படிச் செய்யிறீர்? பிள்ளையளத் தனிய விட்டுப்போட்டு, கடையில பால்பெட்டி வாங்கிக்கொண்டு வாறன் எண்டு சொல்லிப்போட்டு வந்திருக்கிறன்…”

“நான் இன்னும் கொஞ்ச நேரத்தில நாட்டைவிட்டுப் போகப் போறன்.”

சந்திரா சட்டெனக் கல் இருக்கையில் திலகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவனின் இடது உள்ளங்கையைப் பிடித்துக்கொண்டார்.

“கடவுளே! ஏன்?”

திலகன் தனது வலது உள்ளங்கையைச் சந்திராவின் கைக்குக் மேல் வைத்தான். அப்போது, வீதியில் வேகமாக வந்த ஒரு வண்டி சந்திராவின் வீட்டுக்கு முன்னால் நின்றது.

“என்ன வந்து வீட்டுக்கு முன்னுக்கு நிக்குது?” என்றவாறே சந்திரா கல் இருக்கையிலிருந்து எழுந்தபோது, சந்திரா வீட்டிலிருந்து பெரிய வெளிச்சம் தோன்றியது. அந்த வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் ஓடிவந்து காருக்குள் ஏறுவது தெரிந்தது. கார் வேகமாக அங்கிருந்து உறுமிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது.

“அய்யோ என்ர பிள்ளையள்” என்று கத்தியவாறே சந்திரா வீட்டை நோக்கி ஓடினார். அவர் வீட்டை நெருங்கும்போது, மூத்த குழந்தை மாதுமை கதவைத் திறந்துகொண்டு வீதிக்கு ஓடி வந்தாள். அவளைத் துரத்திக்கொண்டு நெருப்பு வந்து வாசலில் நின்றது. சந்திரா அந்த நெருப்பை நோக்கி ஓடியபோது, திலகன் சந்திராவை இறுகப் பிடித்துப் பின்னாலே இழுத்துக்கொண்டு வந்தான். நெருப்பு முன்னே வந்துகொண்டிருந்தது. மாதுமை தாயின் கால்களைப் பற்றிக்கொண்டாள்.

வரவேற்பறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து, உள்ளே ஏராளமான பெற்றோலை ஊற்றிவிட்டுத் தீ வைத்திருக்கிறார்கள். தீ எழுந்ததும் மாதுமை வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடி வந்திருக்கிறாள். வரவேற்பறையில் விளையாடிக்கொண்டிருந்த அய்ந்து வயது இந்திரஜித்தும் நான்கு வயது அபராஜித்தும் முற்றாக எரிந்து சாம்பலாகிவிட்டார்கள்.

இந்தத் தீ அந்தச் சிறுநகரத்தை மட்டுமல்லாமல், நாட்டையே உலுக்கிவிட்டது. காவல்துறை மிகத் துரிதமாகச் செயற்பட்டு, தீ வைத்தவர்களைக் கண்டுபிடித்துவிட்டது. அகதிகளுக்கு எதிரான நாஸிக் குழு ஒன்றே தீ வைத்திருக்கிறது. தீ வைப்பை நேரில் கண்ட சாட்சியாகத் திலகனும் வழக்கில் சேர்க்கப்பட்டான். இதனால், அவனின் மீதான நாடு கடத்தல் உத்தரவும் இரத்துச் செய்யப்பட்டது.

தில்லையம்பலமும் சந்திராவும் வழக்கு விஷயத்தில் காவல்துறையோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்தார்கள். யாராலும் சமாதானம் சொல்லி அவர்களைத் தடுக்க முடியவில்லை. எங்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரேயொரு குழந்தையையாவது காப்பற்ற வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.

அவர்களது வீடிருந்த இடத்தில் நீண்ட நாட்களாகச் சாம்பல் மேடு இருந்தது. பின்பு, அங்கேயொரு நினைவுக் கல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லில் இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்தது:

<< இந்தக் குழந்தைகளுக்குத் தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது >>

6

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, என்னவோ ஒரு பேச்சில், பஸ் கொம்பனியடியில் தங்களது வீடு இருப்பதாகச் சந்திரா சொல்லியிருந்தார். இப்போதும் அங்கே வீடு இருக்குமா? இருந்தாலும் அவர்கள் இருப்பார்களா? எதற்கும் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று யோசித்தவாறே திலகன் சைக்கிளை மிதித்தான்.

வீதியோரங்களிலிருந்த பல வீடுகள் இடிந்தும் பாழடைந்தும் கிடக்கின்றன. பஸ் கொம்பனியடி முடக்கில் வரிசையாக இருந்த மூன்று கடைகளிலும் மொட்டைச் சுவர்கள் மட்டுமே இருந்தன. அந்தச் சுவர்களுக்கு எதிரிலிருந்த வீடும் அப்படித்தான் மொட்டையாக நின்றது. ஆனால், அங்கே தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியில் சில உடுப்புகள் காய்ந்துகொண்டிருந்தன. வளவு முழுவதும் நிறைந்திருந்த தென்னைகள் காய்த்திருந்தன. ஆள் புழக்கமுள்ள இடமாகத்தான் தெரிந்தது, எதற்கும் போய்ப் பார்த்துவிடுவோம் என நினைத்தவாறே சைக்கிளை வீதியோரமாக நிறுத்திவிட்டு, அந்த வளவுக்குள் நுழைந்து “வீட்டுக்காரர்… வீட்டுக்காரர்” என்று திலகன் கூப்பிட்டான்.

“ஆர்?” என்று ஒரு குரல் கேட்டது. மொட்டைச் சுவர்களுக்கு நடுவேயிருந்து ஒரு பெண் கைகளை வீசி நடந்து வந்தார். பெருவெளிச்சம் வருகிறது. அது சந்திராதான்.

“சந்திரா அக்கா… என்னைத் தெரியுதா?”

சந்திராவின் நீளக் கண்கள் சுருங்கி விரிந்து, எதிரில் முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் நிற்பவனைப் பார்த்தன. சந்திரா வெற்றிலைக் கறை படிந்திருந்த தனது பற்களை ஒருமுறை நாவால் துழாவிக்கொண்டார். நரைத்துப் போயிருந்த அவரது தலைமுடியை எலி வால் போன்று முடிச்சிட்டிருந்தார். முழங்கால்களைத் தொட்டுக்கொண்டிருந்த சிவப்புநிறக் கவுன் அழுக்காக இருந்தது. கால்களும் கைகளும் பனங்கிழங்குகள் போலக் குச்சியாக இருந்தன.

“அக்கா… நான் திலகன்.”

“அய்யோ என்ர ராசா… நீயாப்பு?” என்றவாறே சந்திரா தனது வலது கையால் திலகனின் தோளை அணைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டார். அப்போது அவரிடமிருந்து எழுந்த சத்தம் ஒரு பறவை கத்துவது போலிருந்தது.

மொட்டைச் சுவர்களுக்குப் பின்னால், ஒரு அறை மட்டுமே உள்ள வீடு கட்டுமான வேலை முழுமையடையாமல் அரைகுறையாக இருந்தது. தகரக் கூரை போட்டிருந்தார்கள். முற்றத்தில் இருந்த அடுப்பில் சிறிய மண்பானையில் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

திலகனின் கையைப் பிடித்து அந்த வீட்டுக்குள் சந்திரா அழைத்துச் சென்று, அங்கேயிருந்த ஒரேயொரு ப்ளாஸ்டிக் நாற்காலியில் அவனை உட்கார வைத்தார். அறை மூலையில் இருந்த இரும்புக் கட்டிலில் தில்லையம்பலம் உட்கார்ந்திருந்தார்.

“இஞ்சேரப்பா… திலகன் வந்திருக்கிறார். வெளியில எங்களோட இருந்தவர்” என்று உரத்த குரலில் சொன்னார் சந்திரா.

“வாங்கோ” என்றவாறே தலையசைத்த தில்லையம்பலம் “எனக்கு ஞாபகமில்ல” என்றார்.

“அவருக்கு எல்லாம் மறந்துபோகுது திலகன். நடக்கவும் ஏலாது. சீனி வருத்தம். நீர் எப்பிடிப் பார்த்த தில்லையம்பலம் அண்ணன்! இரும்பன் மாதிரி இருந்தவர். வயதும் வருத்தமும் ஆளை உருக்கிப் போட்டுது. இப்ப எனக்கே அறுவத்தொம்பது வயசெண்டால், அவருக்கு ஆறைக் கூட்டினால் எழுவத்தைஞ்சு. இரும்… தேத்தண்ணி போடுறன்…”

“வேண்டாம் அக்கா… இப்பதான் இதில வங்களாவடியில குடிச்சிற்று வாறன்.”

திலகனுக்கு அருகே சந்திரா தரையில் அமர்ந்துகொண்டார். அந்த வீட்டுக்குள் அரை வெளிச்சமே இருந்தது. சந்திரா தலையை நிமிர்த்தித் திலகனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“மாதுமை இப்ப வளர்ந்திருப்பாளே?” என்று திலகன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, இதுவொரு முட்டாள்தனமான கேள்வி என்பது திலகனுக்குப் புரிந்தது. சந்திரா குடும்பம் இலங்கைக்குத் திரும்பும்போதே, மாதுமைக்குப் பத்து வயது என்றால், இப்போது மாதுமைக்கு நாற்பத்தைந்து வயது.

சந்திரா, திலகனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு சொன்னார்:

“இல்ல… அவள் வளரவே இல்ல.”

சந்திரா தலையைத் திரும்பித் தில்லையம்பலத்திடம் “மாதுமையைப் பற்றிக் கேட்கிறார்” என்றார்.

தில்லையம்பலம் கட்டிலில் சற்று நகர்ந்து, தலையணையின் அடியிலிருந்து ஒரு மஞ்சள் நிறத் தேவாரப் புத்தகத்தை எடுத்தார். பின்பு, ஒரு சிறிய டோர்ச் லைட்டை எடுத்தார். திலகனைப் பார்த்து “வாங்கோ” என்றார். திலகன் எழுந்து அவரருகே சென்றதும் புத்தகத்திற்குள்ளிருந்து ஒரு பத்திரிகை நறுக்கை எடுத்துத் திலகனின் கையில் கொடுத்தார். அதை வாங்கித் திலகன் பார்த்தபோது, அந்தப் பத்திரிகை நறுக்கின்மீது தில்லையம்பலம் டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.

அந்தச் சிறு வெளிச்சத்தில் விடுதலைப் புலிகளின் சீருடையில் மாதுமை இருந்தாள். ‘ஜெயசிக்குறு’ சண்டையில் இறந்திருக்கிறாள். அப்போது அவளுக்குப் பதினைந்து வயது.

“நாங்கள் இலங்கைக்குத் திரும்பி வராமல் இருந்திருந்தால் என்ர பிள்ள சாகாமல் இருந்திருப்பாள்” என்றார் சந்திரா.

‘இறந்தும் இருக்கலாம்’ என்று திலகன் நினைத்துக்கொண்டான்.

‘காலம்’ இதழில் (ஜனவரி 2026) வெளியாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *