லஷ்மி மணிவண்ணனுக்கு ஷோபா..

கட்டுரைகள்

‘ஷோபாசக்திக்கு லஷ்மி மணிவண்ணன்’ என மணிவண்ணனுடைய ஒரு முகப்புத்தகப் பதிவை ஜெயமோகன் தனது தளத்தில் பதிவேற்றியுள்ளார். முகப்புத்தகத்தில் மணிவண்ணனின் பதிவுக்கு உடனடியாகவே பதில் அளித்திருந்தேன். அதையும் சேர்த்து ஜெயமோகன் பதிவேற்றியிருந்தாரெனில் முழுமையாக இருந்திருக்கும். என்னிடம் மட்டும் வலைத்தளம் இல்லையா என்ன..என்னுடைய பதிலை நான் இங்கு மறுபதிவு செய்துவிடுகிறேன்:

லக்கியத்தில் மதிப்பீடுகளின் அவசியத்தை ஓர் எழுத்தாளர் உணராமல் இருக்கமுடியாது. ஆனால் நிர்ப்பந்திக்கப்படும் விதிகளும் சட்டகங்களும் தடைக்கற்கள். அந்த விதிகள் மார்க்ஸியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன தேசியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அழகியல் அல்லது ரசனை சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அவைகள் மீறிச்செல்லப்பட வேண்டியவை .அதைத்தான் என் பதிவில் சொன்னேன். சுருக்கமாக “இலக்கியத்திற்கு விதிகள் இல்லை“.

நிற்க, என் புத்தகங்கள் எதற்குமே இதுவரை நான் முன்னுரை வாங்கவில்லை. இனியும் வாங்கமாட்டேன். ஆனால் கலைஞர் உயிருடன் இருக்கும்போதே என் தமிழாசான் அவரெனக் கூறி என் புத்தகமொன்றை அவருக்குச் சமர்ப்பித்தேன். அவ்வளவுதான் என்னால் அவருக்குச் செய்ய முடிந்த மாண்பு.

கலைஞருக்கும் ஈழத்துக்கும் உள்ள உறவுகள் குறித்து விரிவாகக் கட்டுரைகள் எல்லாம் எழுதினேனே. அவற்றிலொன்று முரசொலியில் கூட மறுபிரசுரமானது. இதை அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகச் செய்வதில்லை. திராவிட இயக்கம் மீதான என் வரலாற்றுரீதியான புரிதலோடு செய்வது அது.

நான் எழுதவந்த நாள் முதல் தமிழகத்தில் என் கூட்டுச்செயற்பாடுகள், உறவுகள், தோழமைகள் எல்லாமே பெரியாரியர்களுடன்தானே. இருபது வருடங்களாக என் புத்தகங்களை வெளியிடும் சிறுபதிப்பகமான கருப்புப் பிரதிகள் மிகத் தெளிவான திராவிட இயக்க அடையாளமும் செயற்பாடுகளும் கொண்டதால்தானே அப் பதிப்பகத்துடனிருக்கிறேன்.

மார்க்சிய இலக்கியம், திராவிட இலக்கியம், அவ்வளவு ஏன் லங்காராணி, புதியதோர் உலகம் போன்ற தேசியவாத இலக்கியங்களிற்குக்கூட வரலாற்றுப் பங்களிப்பும் முக்கியத்துவமும் இருக்கிறது என்பது என் நம்பிக்கை. அவை இலட்சியவாத நோக்கில் படைக்கப்பட்ட பரப்புரை இலக்கியங்கள்தான். ஆனால் நான் அவற்றின் வழியாகத்தான் உருவாகினேன். என் இளமைக்கால அரசியல் விழிப்பு அங்கிருந்து தொடங்கியதுதான்.

2 thoughts on “லஷ்மி மணிவண்ணனுக்கு ஷோபா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *