இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்

கட்டுரைகள்

I do not agree with a word that you say, but I will defend to the death your right.
-Voltaire

மிழ்’ கதைமலரில் யதார்த்தனின் கதை இடம்பெற்றது, ‘இமிழ்’ விமர்சனக் கூட்டத்தில் எழுத்தாளர் கிரிசாந் கலந்துகொள்வது ஆகியவை குறித்து முகநூலில் மதுரன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு நான் அளித்தல் பதில் இங்கே:

இலக்கியச் சந்திப்பில் என் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தேன். இங்கே இன்னும் சற்று விரிவாக:

1. யதார்த்தன் மீதான குற்றச்சாட்டுகள் பெப்ரவரி கடைசியில்தான் முகநூல் பதிவர்களால் வைக்கப்படுகின்றன. அதற்கு முன்பே தொகுப்புப் பணிகள் நிறைவேறிவிட்டன.

2. மார்ச் 6-ம் தேதி, ‘இமிழ்’ தொகுப்பின் அட்டைப்படம் 51வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தொகுப்பாசிரியர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. அட்டையில் 25 எழுத்தாளர்களின் பெயர்களும் அச்சிடப்பட்டிருக்கின்றன (யதார்த்தனின் பெயர் உட்பட). குழு உறுப்பினர்கள் யாருமே எழுத்தாளர்கள் தேர்வு குறித்து எந்த ஆட்சேபத்தையும் அப்போது தொகுப்பாசிரியர்களுக்கோ அல்லது பொதுவெளியிலோ தெரிவிக்கவில்லை.

3. இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து மார்ச் 21ம் தேதியன்று, ‘இமிழ்’ குறித்த பொது அறிவித்தல் எழுத்தாளர்களின் பெயர்கள் உட்பட சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டன. தொகுப்பில் யதார்த்தன் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறித்து அப்போதும் இலக்கியச் சந்திப்புக் குழு உறுப்பினர்கள் யாருமே கருத்தோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. குழுவுக்கு வெளியேயும் வேறு யாராவது (நீங்கள் உட்பட) எங்காவது எதிர்ப்புத் தெரிவித்ததாக எனக்குத் தெரியவில்லை.

4.இலக்கியச் சந்திப்புக்கு 6 நாட்கள் முன்னதாக மார்ச் 24ம் தேதியன்று, 51வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்தவர்களில் ஒருவரான விஜி, இமிழில் யதார்த்தனின் கதை வெளியிடப்படுவதற்கான கண்டனத்தை ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் வெளியிட்டார். அதாவது மார்ச் ஆறாம் தேதியன்றே எழுத்தாளர்களின் தேர்வு குறித்த விபரம் இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தும், மார்ச் 21ம் தேதியே விஜியின் எதிர்ப்பு முதன்முதலாக ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் பதிவு செய்யப்படுகிறது.

5. அடுத்தநாளே தொகுப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு விளக்கமளித்தோம். பதிப்புப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன என்பதை அவர்களும் அறிந்திருந்தார்கள். எனவே விஜி உட்பட குழுவிலிருந்த எல்லோருமே எங்களது விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

6. இலக்கியச் சந்திப்பில் இமிழை வெளியிட்டு வைத்துவிட்டு ‘இந்தத் தொகுப்பு உருவாக்கம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று பதிப்பாசிரியரான நானும் பொறுப்பாசிரியரான பிரசாத்தும் அறிவித்தோம். கேள்விகளும் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்குக்கூட நாங்கள் பதிலளிக்காமல் நழுவிச் செல்லவில்லை. அவை முகநூலில் நேரலையாக ஒளிபரப்பாகின.

7. ‘நூல் அச்சுக்குப் போவதற்கு முன்பாகவே யதார்த்தன் மீதான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்தால், தொகுப்பிலிருந்து யதார்த்தனின் கதையை நீக்கியிருப்பீர்களா?’ என்றொரு கேள்வி எங்களை நோக்கி கௌரி என்ற தோழரால் முன்வைக்கப்பட்டது. ‘யதார்த்தனது கதையைத் தொகுப்பிலிருந்து நீக்குவதா /சேர்ப்பதா என்ற முடிவை இலக்கியச் சந்திப்புக் குழுதான் எடுக்க முடியும்’ என்று பதிலளித்தோம்.
ஏனெனில், தொகுப்பில் இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த எழுத்தாளரைச் சேர்ப்பது என்று முடிவெடுக்கும் உரிமையை மட்டுமே தொகுப்பாசிரியர்களுக்கு ஒருங்கிணைப்புக்குழு வழங்கியிருந்தது. ஓர் எழுத்தாளர் மீதான குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பதால், அவரது கதையை நிராகரிக்கலாமா வேண்டாமா என்பது ஒருங்கிணைப்புக் குழு கூடி முடிவெடுக்க வேண்டிய ஆழமான – நுட்பமான பிரச்சினை.

ஏதாவது ஒரு விடயத்தில் குழுவிற்குள் ஒரேயொருவர் எதிர்ப்புத் தெரிவித்தால் கூட அந்த விடயம் குறித்த நீண்ட விவாதங்களுக்குப் பின்பு ஒருமனதாக முடிவு எட்டப்படுவதே 51வது இலக்கியச் சந்திப்பின் பொதுப்பண்பாக இருந்தது. இலக்கியச் சந்திப்பு முடிந்த பின்பும்கூட இந்தக் கூட்டுச் செயற்பாட்டையும், சனநாயகப் பண்பையும் நாங்கள் கடைப்பிடித்தோம். இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ விற்பனையால் கிடைத்த பணத்தை எவ்வாறு கையாள்வது? இலங்கையில் ‘இமிழ்’ வெளியீடுகளை நடத்தும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது? போன்ற எல்லா விடயங்களும் ஒருங்கிணைப்புக் குழுவால் விவாதிக்கப்பட்டு முடிவுகள் ஒருமனதாகவே எட்டப்பட்டன. 51வது இலக்கியச் சந்திப்புக் குறித்த எல்லாப் பணிகளும் நிறைவேறியதால், ஏப்ரல் 6-ம் தேதி ஒருங்கிணைப்புக் குழுவின் இறுதிக் கூட்டம் நிகழ்ந்து, இனிதே 51வது இலக்கியச் சந்திப்புக் குழு கலைக்கப்பட்டது.

8. தோழர் கௌரியின் இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது நான் இவ்வாறு சொன்னேன். நேரலையில் உள்ளது. விரும்பியவர்கள் ‘செக்’ செய்து கொள்ளலாம்:

“இதுவே எனது தனிப்பட்ட தொகுப்பாக இருந்தால், நானே முடிவெடுத்திருப்பேன். யதார்த்தன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டிருந்தால் தொகுப்பில் அவரது கதையை நிச்சயமாகச் சேர்த்திருக்கமாட்டேன்.”

9.இலங்கையில் நிகழவிருக்கும் இமிழ் விமர்சனக் கூட்டங்களில் என் தலையீடோ ஆலோசனையோ ஏதுமில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்துகொண்டு யாழ்ப்பாணத்தில் பினாமி வைத்து இலக்கியம் செய்யும் துர்ப்பாக்கியம் எனக்கு இன்னும் நிகழவில்லை. யாழ்ப்பாண வெளியீட்டுக் கூட்டத்தின் அனைத்து அம்சங்களையும் முடிவு செய்பவர்கள் அங்குள்ள ஏற்பாட்டுக் குழுவே.

10.கிரிசாந் அந்தக் கட்டுரைகளை எழுதியிருப்பதால் அவரை இலக்கியச் சபைசந்தியில் சேர்க்கக்கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு நிச்சயமாகவே கிடையாது. ஒருவர் எழுதிய கட்டுரையில் எதிர்க் கருத்துகள் / மறுப்புகள் இருந்தால் அதை எழுதியே எதிர்கொள்ள வேண்டுமே தவிர சமூகப் புறக்கணிப்பு என்பது சரியான வழியாகாது என்பதே எனது நிலைப்பாடு. வால்டேயரை உங்களுக்கு மறுபடியும் நினைவுபடுத்த வேண்டியிருக்காது என்றே எண்ணுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *