வேர்ச்சொல் – விடுதலை சிகப்பி – வெந்து தணிந்தது காடு

கட்டுரைகள்

சென்னையில், கடந்த மாத இறுதியில் ‘நீலம் பண்பாட்டு மையம்’ ஒருங்கிணைத்த வேர்ச்சொல்- தலித் இலக்கியக் கூடுகை நிகழ்வில் ‘ஈழத் தலித் இலக்கியம்’ குறித்த அமர்வில் தோழர்கள் மு.நித்தியானந்தன், தொ. பத்திநாதன் ஆகியோரோடு நானும் உரையாற்றினேன்.

நேரப் பற்றாக்குறை காரணமாக, என்னுடைய உரை முழுமையுறவில்லை என்றே உணர்கிறேன். எனினும் கிடைத்த நேரத்திற்குள், ஈழத்தில் கடந்த அய்ம்பது வருடங்களில் சாதியம் எவ்வாறு தந்திரமாக – விடுதலைப் போராட்ட காலத்தையும் கடந்து – இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை விளக்க முற்பட்டேன். ஏனெனில், ஈழ விடுதலைப் போராட்டம் சாதியத்தை ஒழித்துவிட்டது எனத் தமிழகத்தில் பல்வேறு தரப்புகளால் நிகழ்த்தப்பட்ட போலிப் பரப்புரையை எதிர்கொண்டு உண்மையை அறிவிக்க வேண்டியிருந்தது.

1966-ல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னெடுத்த ஆலய நுழைவுப் போராட்டத்தின் போது, வெள்ளாள – பார்ப்பன சாதிய வெறியர்கள் எவ்வாறு தந்திரமாக நடந்துகொண்டார்கள், வட இலங்கையில் தீண்டாமை கிடையவே கிடையாது எனப் பொய் அறிக்கைகளை வெளியிட்டார்கள் என்பதில் தொடங்கி, 2003-ல் யாழ் பொது நூலகத் திறப்பு விழா விஷயத்தில், அப்போதைய யாழ் நகரபிதா செல்லன் கந்தையா எவ்வாறு சாதியத்தால் வஞ்சிக்கப்பட்டுப் பதவி துறக்க நேரிட்டது என்பதுவரை நான் விளக்கினேன். மேயர் விஷயத்திலும் அறிவார்ந்த சாதிப்பற்றாளர்கள் ஒரு தந்திரத்தைச் சில வருடங்களுக்கு முன்னே நடத்திக்காட்டினார்கள். முதுமையால் தளர்ந்து போயிருக்கும் செல்லன் கந்தையாவை ஏதோ ஒரு முட்டுச்சந்துக்குள் மடக்கி, இரண்டு நிமிட வீடியோப் பதிவில் அவரது வாயைப் பிடுங்கியிருக்கிறார்கள். அந்த வீடியோவை எடுத்தது யார்? கேள்வி கேட்டது யார் என்பதெல்லாம் இதுவரை யாருக்குமே தெரியாது. அதுவொரு அநாமதேய வீடியோத் துண்டு. ஆனால், எப்படியோ நூலகத் திறப்பு விழாவில் சாதியம் ஒரு காரணியாகச் செயற்படவில்லை என்பது போன்ற தொனி வருமாறு அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதுவரை தமிழ் – ஆங்கிலப் பத்திரிகைகளிலும், பொது நிகழ்வுகளிலும் செல்லன் கந்தையா சொன்னதை அவர் வாயாலேயே மறுப்பது போல ஒரு வெள்ளாள வித்தைகாட்டி, அதைச் சமூக வலைத்தளங்கள் எங்கும் பரப்பிக் கொக்கரித்தார்கள். யாழ் நூலகத் திறப்பு விழா தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணம் சாதியமே என்ற உண்மையை முதன்முதலில் வெளிக்கொணர்ந்த ‘புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி’ப் பத்திரிகையான ‘புதிய பூமி’ பொய்ப் பத்திரிகை ஆக்கப்பட்டது. இந்தச் சாதியச் சதிச் செயலை முனைவர் சுதர்சன் செல்லத்துரை முறியடித்தார். அவர் முன்னாள் மேயரை ஒருமணிநேரத்திற்கு மேலாக நிதானமாக வீடியோவில் நேர்காணல் செய்து, யாழ் நூலகத் திறப்பு விழாவில் செயற்பட்ட சாதியச் சதி குறித்த உண்மையை, நம் மனம் பதைபதைக்குமாறு சான்றுகளுடன், காட்சிகளுடன் வெளியே கொண்டுவந்தார். இதையும் வேர்ச்சொல் நிகழ்வில் விரிவாகக் குறிப்பிட்டு, சாதியம் இலக்கியப் போர்வையிலும், ஆய்வுப் போர்வையிலும் எப்படியெல்லாம் செயற்படுகிறது எனச் சொன்னேன். சாதிய ஒழிப்புத் தளத்தில் ஈழத்து தலித் அரசியலும், இந்திய தலித் அரசியலும் சாத்தியமான வழிகளிலெல்லாம் இணைந்து நின்று கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொன்னேன்.

எனக்கு முன்னதாக உரை நிகழ்த்திய தோழர் பத்திநாதன் கூறிய கருத்தொன்றை நான் மறுத்துப் பேசவும் நேரிட்டது. அவர் தனது உரையில் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தை இரு வகைகளாகச் சுட்டிக்காட்டினார். மேற்கு நாடுகளுக்கும் கனடாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்படும் இலக்கியம் தமிழ்த் தேசியவாத – ஆதிக்க சாதி இலக்கியமாகவுமுள்ளது. மாறாக, இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்படும் இலக்கியம் தமிழ்த் தேசியவாதத்திற்கு வெளியே உள்ளது என்றார். இதை நான் மறுத்துப் பேசினேன். என் மறுப்புக்கு அதே மேடையில் அவரும் மறுப்பாக, முன்பு சொன்னதையே மறுபடியும் அழுத்திச் சொன்னார். ஆனால், அவர் சொல்வது சரியற்றது. மேற்கு நாடுகளிலும் தமிழ்த் தேசியவாத இலக்கியத்தை எழுதும் தமிழ்நதி, அ.இரவி போன்றவர்களுண்டு. அதேவேளையில், தேசியவாத மறுப்பு என்கிற கருத்துருவாக்கதிலும், தலித் விடுதலை அரசியலிலும் மேற்கு நாடுகளின் புலம் பெயர் சிறு பத்திரிகைகளும், இலக்கிய அமைப்புகளும், இலக்கியச் சந்திப்புத் தொடர்களும் ஆற்றிய பங்கு அளப்பெரியது. அழுத்திச் சொன்னால், ஈழத் தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, இந்தக் கருத்துருவாக்கங்களே இத்தகைய புலம்பெயர் சிறு பத்திரிகைகளிலும், இலக்கியச் சந்திப்புத் தொடர்களிலும் பேசிப் பேசி விவாதிக்கப்பட்டு உருவாகி நிலைபெற்றவையே.

இன்னொருபுறத்தில், தமிழகத்திலுள்ள புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர்களிடையே இருந்தும் இனவாதம் கொப்பளிக்கும் தமிழ்த் தேசியவாத எழுத்துகளும் சைவப் பெருமிதக் கூச்சல்களும் எழுந்துகொண்டிருக்கின்றன. வாசு.முருகவேல், அகரமுதல்வன் போன்றவர்கள் இந்தப் போக்குகளுக்கான வகைமாதிரி எடுத்துக்காட்டுகள். மேற்குப் புலம் பெயர்ந்த இலக்கியம் ‘தமிழ்த் தேசியவாத இலக்கியம் அல்லது மேட்டுக்குடி இலக்கியமே’ எனப் பொத்தாம் பொதுவாக மதிப்பிடுது மேற்கிலுள்ள அகதிகளின் நிலையையோ, அங்குள்ள இலக்கிய வரலாற்றுப் போக்கையோ சரியாக அறியப்படாமல் சொல்வதாகும். தமிழகத்திலுள்ள அகதிகளின் வாழ்வியல் நிலையோடு ஒப்பிடும்போது, மேற்கிலுள்ள அகதிகளின் வாழ்நிலை மேம்பட்டுள்ளது என்பது உண்மை எனினும், மேற்கிலும் நிறவாதத்தை எதிர்கொண்டும், விளிம்புநிலையிலும், வதிவிட அனுமதியின்றியும், நாடு கடத்தலை எதிர்நோக்கியும் வாழும் ஒருதொகை ஈழத்து அகதிகளுண்டு. இது குறித்து ஏராளமான இலக்கியப் பிரதிகளை மேற்குப் புலம்பெயர் இலக்கியம் உருவாக்கித் தமிழ் இலக்கியத்திற்கு அளித்துள்ளது. இத்தகைய பிரதிகளையெல்லாம் தமிழ்த் தேசியவாதப் பிரதிகள் எனப் பத்திநாதன் கற்பிக்க நினைப்பது சரியற்றது.

தோழர் பத்திநாதனுடைய அண்மைக்கால முகநூல் பதிவுகளைப் பார்வையிடும்போது, அவரது அதிருப்தியின் வேரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவிலிருக்கும் ஈழ அகதிகளின் இலக்கியம் மேற்குப் புலம் பெயர் இலக்கியவாதிகளால் புறக்கணிக்கப்படுகிறது என்றவாறான கோபம் அவரிடமிருக்கிறது. ஓர் இலக்கியப்போக்கை அல்லது இலக்கியவாதியை எந்தவிதமான ஏற்புகளாலோ அங்கீகாரத்தாலோ மட்டுமே வரலாற்றில் நிறுவிவிட முடியாது. இலக்கியத்தை எழுதி எழுதித்தான் அவற்றை நிறுவித் தமக்கான இடத்தை இலக்கியத்தில் உருவாக்க முடியும். அந்தப் பணியில் முனைப்புக் காட்டுவதை விடுத்து, மேற்குக்குப் புலம் பெயர்ந்த அகதிகளைச் சாடுவதில் பயனில்லை. தமிழகத்திலிருந்து எழுதுவதில் பல்வேறு சமூக, சட்டச் சிக்கல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு, இன்றைக்குத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் பத்திநாதன், விஜிதரன், சுகன்யா ஞானசூரி போன்றவர்கள் வீறாக எழுதி எழுதித்தான் தமிழகப் புலம்பெயர் இலக்கியத்தை காலவெளியில் நிலை நிறுத்த வேண்டும். நல்லதொரு இலக்கியத்தை எந்த சக்திகளாலும் நீண்ட நாட்களுக்கு இருட்டடிப்புச் செய்துவிட முடியாது என்பதுவே இலக்கிய வரலாற்றுத் தடமாகும்.

இந்த வேர்ச்சொல் நிகழ்வில்தான், தோழர் விடுதலை சிகப்பி ‘மலக்குழி மரணம்’ கவிதையை வாசித்தார். செயற்கைத்தனமான இருண்மையோ, அரூபமோ அற்று மிகவும் நேரடியாகப் பேசும் அரசியல் கவிதையது. இத்தகைய கவிதைப் போக்குக்கு நம்முடைய ஈழத்துச் சுபத்திரன் முதற்கொண்டு பாலஸ்தீனத்தின் மஹ்முட் தர்வீஷ் வரை கவிதையில் ஏராளம் முன்னோடிகளுண்டு. விடுதலை சிகப்பியின் அந்தக் கவிதை ‘நல்ல கவிதை இல்லை’ எனக் கவிஞர் இசை எழுதியிருந்தார். கவிஞர் இசை ‘சிவாஜி கணேசனின் முத்தங்கள்’, ‘வருக என் வாணிஸ்ரீ’ என்றெல்லாம் இலக்கியக் கிறக்கக் கவிதைகள் எழுதக் கூடியவர். தன்னுடைய நூலொன்றைப் பாடகி நித்யஸ்ரீக்குச் சமர்ப்பிக்குமளவுக்கு லலித கலைகளில் ஆழ்ந்தவர். அவருக்கு விடுதலைச் சிகப்பியின் ‘மலக்குழி மரணம்’ பிடிக்காது போனது ஆச்சரியமில்லை. ஒருவேளை ராமனுக்குக் குறியீடாகக் கமல்ஹாசனையும் சீதைக்குக் குறியீடாக ஸ்ரீதேவியையும் வைத்துச் சுற்றிச் சுண்ணாம்படித்து விடுதலை சிகப்பி அந்தக் கவிதையை எழுதியிருந்தால் அதை நல்ல கவிதையென இசை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும்.

தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி தந்தை கே. டானியலின் எழுத்துகளையே ‘நல்ல இலக்கியமில்லை’ எனச் சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் தலித் இலக்கியம் உருவாகி வந்த ஆரம்ப காலத்தில் சுந்தர ராமசாமி, கோவை ஞானி போன்றவர்கள் எவ்வாறு அதை நிராகரித்தார்கள் என்பதை வேர்ச்சொல் நிகழ்வில் தோழர் யாக்கன் விரிவாகப் பேசியிருந்தார். அங்கு திரையிடப்பட்ட ‘கடவுளுக்கு முன் பிறந்தவன்’ ஆவணப் படத்தில் கவிஞர் இந்திரனும் பேசியிருக்கிறார்.

மலக்குழி மரணம் செத்த சவக் கவிதையல்ல. அது உயிர்ப்புள்ள, செயலுள்ள கவிதை. அதனால்தான் இந்துக் கடவுளாரை அவமதித்ததாகக் கூறி, கவிதைமீது இந்து அடிப்படைவாத அமைப்புகளின் புகாரால் அய்ந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. கவிதை எழுதியதற்காக விடுதலைச் சிகப்பி ‘முன்ஜாமீன்’ பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் தலித் அரசியலாளர்கள், கம்யூனிஸ்டுகள், திராவிட இயக்கத்தவர்கள் என வேறுபாடுகளற்று ஒட்டுமொத்தத் தமிழ்ப் படைப்புலகமும் விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக நிற்கிறது என்பது ஈழத்தவர்களான நமக்கு முக்கிய செய்தியாகிறது. நயம் கவிதையை நாடும் கவிஞர் இசையைப் போன்றவர்கள் கூட கருத்துரிமைக்கு ஆதரவாகக் குரல்களை எழுப்பியுள்ளார்கள். இந்த ஒட்டுமொத்தக் குரல்கள் அரசு இயந்திரத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் நிச்சயமாக அழுத்தத்தை உருவாக்கியே தீரும்.

தமிழகத்தில் ஒரு படைப்பாளியின் கருத்துரிமைக்கு ஆதரவாக ஒட்டுமொத்தப் படைப்புலகமும் திரண்டு நிற்கிறது எனில், புலம் பெயர் தமிழ்ச் சூழலில் என்ன நடக்கிறது? இயக்குனர் மதிசுதாவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை முன்வைத்துத் தடை, தணிக்கை என்றெல்லாம் ஈழத்துத் திரைத்துறை அமைப்புகளே கிளம்பியிருக்கினறன.

இயக்குனர் மதிசுதாவோடு எனக்கு எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. அவர் பேசக்கூடிய தமிழ்த் தேசியவாத அரசியலில் எனக்குத் துளியளவு உடன்பாடும் கிடையாது. ஆனால், அவர் நீண்டகாலமாகவே ஈழத் திரைப்படத் துறைக்குள் துடிப்பாகச் செயற்படுகிறார் என்பது தெரியும். போராட்டத்தால் முப்பதாண்டு காலமாக மிகப் பெரும் துயரைச் சுமக்கும் குடும்பப் பின்னணியுடையவர் என்பதும் எனக்குத் தெரியும்.

கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி, அவர் உருவாக்கிய சமீபத்திய முழுநீளத் திரைப்படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்குத் தலைப்பு உட்படத் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்கள் உருவாகி வந்தன என்பதையும், படத்திற்கு இலங்கை அரசிடம் தணிக்கைச் சான்றிதழ் பெற்றுத் திரையிடுவதற்குக் கூட அவர் இறுதிவரை பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதையும் நான் சமூக வலைத்தளங்கள் வழியே அறிந்துள்ளேன். ஈழத்தின் பல பகுதிகளிலும் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிலாந்தன் போன்ற கலை விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், சமயத் தலைவர்கள் திரைப்படத்தைக் குறித்து மிகவும் சாதகமான மதிப்புரைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கருத்துச் சுதந்திரத்தை தூக்கிப்போட்டு மிதிப்பதில் உலகளவில் புகழ்பெற்ற இலங்கையிலேயே தடைகளைத் தாண்டி, இந்தத் திரைப்படத்தை வெற்றிகரமாகக் காண்பித்த மதிசுதாவுக்குச் சோதனை கருத்துரிமைக்குப் பெயர் பெற்ற பிரான்ஸிலேதான் உருவாகியிருக்கிறது.

எதிர்வரும் 20-ம் தேதி பிரான்ஸிலே ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை திரையிடுவதற்காக ஏற்பாடுகள் நடைபெறும் இத்தருணத்தில் படத்திற்குத் தணிக்கை, தடை என்றெல்லாம் அமைப்புகளும் சக கலைஞர்களும் கிளம்பியிருக்கின்றனர். இவ்வளவுக்கும் பிரான்ஸ் திரைப்படத்திற்கான தணிக்கை முறையைப் பின்பற்றாத நாடு. எந்த வயதினருக்கு உகந்தது எனச் தரச் சான்றிதழ் மட்டுமே அரசிடமிருந்து பெற வேண்டும்.

இதைக் குறித்து எழுந்த விவாதங்களில், புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துள் ஒரு தணிக்கை செய்யும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து மிகப் பலமாக ‘நோர்வே தமிழ்த் திரைப்படவிழா’ இயக்குனரான வசீகரன் போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. நோர்வேயில் என்ன சட்டமென்று தெரியவில்லை. ஆனால், பிரான்ஸில் இப்படியொரு நிழல் அரசாங்கம் நடத்த முற்பட்டால், சில வருடங்கள் சிறையில் புல்லுப் பிடுங்க வேண்டியிருக்கும்.

அப்படி என்னதான் அந்தப் படத்தில் பிரச்சினையாம்? மூன்று பிரச்சினைகளை முதன்மைப் பிரச்சினைகளாகச் சொல்கிறார்கள் இந்தத் தணிக்கை ஆதரவாளர்கள். 1. தமிழ்க் குடும்பமொன்று புத்தரை வழிபடுவது, 2. படத்தில் வரும் பாத்திரம் சயனைட் குப்பியைக் கடிக்கும் போது அது வேலை செய்யாமற் போவது, 3. ‘வெற்றியோ தோல்வியோ போரை நிறுத்துங்கள்’ எனப் படத்தின் முதன்மைப் பாத்திரம் சொல்வது.

‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதற்கு இந்த மூன்று காரணங்களே அடிப்படையாம். இந்தத் தணிக்கை முனைவோருக்கு படைப்புச் சுதந்திரம், திரைப்பட ஊடகம் குறித்த அறிவுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுகூடக் கிஞ்சித்தும் கிடையாது போலிருக்கிறது.

1. ஈழத்தில் இந்துக்களில் பலர் வேளாங்கண்ணியையும் புத்தரையும் வழிபடுவதுண்டு. பவுத்தர்களில் பலர் கணபதியையும் கண்ணகியையும் வழிபடுவதுண்டு. யாழ்ப்பாணத்தில் ஓடும் லொறிகளுக்குள் ஒரு பார்வை பார்த்தாலே, அங்கே புத்தர் உட்பட எல்லாக் கடவுளர்களது படங்களும் வரிசையாக இருப்பதைக் காண முடியும். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் கூட, யாழ்ப்பாணம் தமிழ்ப் பவுத்தம் செழித்த பகுதியல்லவா. சில பத்து வருடங்களுக்கு முன்பு கூட அங்கே பவுத்த பாடசாலைகள் இருந்தன. வைரமுத்து அவர்களது தலைமையில் பவுத்த சங்கம் இயங்கியது. எனவே தமிழ்க் குடும்பம் ஒன்று பதுங்குகுழிக்குள் புத்தரை வழிபடுவது சாத்தியமானதே. இதைத் தவிர கலை சார்ந்த வேறொரு காரணத்திற்காகக் கூட மதிசுதா அங்கே புத்தரைக் குறியீடாக வைத்திருக்கலாம். முதலில் எங்களை அந்தப் படத்தைப் பார்க்க விடுங்கள். குறியீடு குறித்தெல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம்.

2. சயனைட் குப்பி வேலை செய்யாதது போல் காண்பிப்பது தமிழ்த் தேசியத்துக்கு எதிரானதாம். அய்யா தணிக்கைத் தம்புரான்களே, தமிழ்த் தேசியவாதப் பெருமை என்ன சயனைட் குப்பிக்குள்ளா உள்ளது? போராட்ட வரலாற்றில் பல புலிப் போராளிகள் சயனைட் அருந்தியும், விஷம் சரியாக வேலை செய்யாததால் மரணமடையாமல் பிழைத்துக்கொண்டது உங்களுக்குத் தெரியாதா? புலிகளின் தளபதிகள் குமரப்பா- புலேந்திரனுடன் மொத்தமாகக் கைது செய்யப்பட்டவர்கள் பதினேழு போராளிகள். பலாலி இராணுவ முகாமில் இந்தப் பதினேழு போராளிகளும் சயனைட் அருந்தினாலும், சயனைட் சரியாக வேலை செய்யாததால் அய்ந்து போராளிகள் உயிர் பிழைத்தார்கள். நாளைக்கு இந்தச் சம்பவத்தைத் திரைப்படமாக எடுத்தால்கூட நீங்கள் தடையெனக் குதிக்கக் கூடும்.

3.”வெற்றியோ தோல்வியோ சண்டையை நிறுத்துங்கள்” எனப் படத்தில் வரும் பாட்டி சொல்வதுதான் மிக முக்கியமாகத் தணிக்கையாளர்களைத் தொந்தரவு செய்கிறதாம். அது பாட்டியின் வார்த்தையோ, இயக்குனர் மதிசுதாவின் வார்த்தையோ கிடையாது. உண்மையில் அது விடுதலைப் புலிகளின் வார்த்தை. 2009 மே மாதம், பதினைந்தாம் தேதி அவர்கள் சர்வதேசத்தை நோக்கி வெளியிட்ட அறிக்கையில் “நாங்கள் ஆயுதங்களை மவுனிக்கிறோம்” என்று அறிவித்ததின் பொருள்தான் என்ன? வெற்றியோ தோல்வியோ சண்டையை நிறுத்துகிறோம் என்பதுதானே. இந்த அறிக்கையின் பின்பு புலிகளின் தலைமை, விரும்பியவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு வீடுகளுக்குச் செல்லுங்கள் அல்லது இராணுவத்திடம் சரணடையுங்கள் என்று போராளிகளிடம் சொன்னது குறித்துப் பல சான்றாராப் பதிவுகள் உண்டல்லவா. உண்மையைச் சொன்னால் தணிக்கையா?

இந்த விவாதங்களில் பங்கெடுத்த பிரேம் கதிர், விஜிதன் சொக்கா இருவரும் தடை, தணிக்கை என்பதற்கு எதிரான நிலைப்பாடு எடுத்தது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் கூட ‘இலக்கியப் பிரதிகளில் போராட்டத்தையும் தமிழ்த் தேசியத்தையும் விமர்சித்து எழுதுவதைக் கண்டுகொள்ளாத நாங்கள் திரைப்படத்தை மட்டும் ஏன் தணிக்கை செய்ய வேண்டும்?’ என அவர்கள் கேட்டது சரியான கேள்வியல்ல என்றே நினைக்கிறேன். ஏனெனில் புலிகளின் காலத்தில் மட்டுமல்லாமல், அவர்களின் காலத்திற்குப் பின்பும் இத்தகைய தணிக்கை, தடை, தாக்குதல் சவால்களைப் புலம் பெயர் இலக்கியம் சந்தித்தே எழுந்து நிற்கிறது.

எத்தனையோ நூல் வெளியீடுகள் இங்கே புலிகளாலும், தமிழ்த் தேசியவாதிகளாலும் அடாவடி செய்து குழப்பப்பட்டிருக்கின்றன. சிறுபத்திரிகை இலக்கியவாதிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பாரிஸில் ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகைத் தோழர்கள் புலிகளால் தாக்கப்பட்டு, பத்திரிகைகள் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. கனடாவில் ‘தேடகம்’ நூலகமே எரியூட்டப்பட்டிருக்கிறது. ஆசியா பதிப்பகத்தை உருவாக்கிய சனநாயகப் போராளியான சபாலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். ‘சரிநிகர்’, ‘தினமுரசு’ போன்ற பத்திரிகைகளுக்கு பிரான்ஸில் புலிகளால் தடைவிதிக்கப்பட்டது. இவ்வாறு ஏராளமான கருத்துரிமை மறுப்புச் சம்பவங்களுண்டு. இதை மீறியும்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம்.

நம்முடைய திரைப்படங்களுக்கு நாமே தடை விதிப்பது இது முதற்தடவையல்ல. புதியவனின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தைத் திரையிட இவ்வாறு பல எதிர்ப்புகள் எழுந்தன. யாழ்ப்பாணத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவிருந்த ஜூட் இரட்ணத்தின் ஆவணப்படமான ‘Demons in Paradise’ விழாவில் காண்பிக்கப்படாமல் தடைசெய்யப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வட்டாரங்களே இந்தத் தடைவிதிப்பில் முன்நின்றன. இயக்குனர் கேசவராஜன் ‘படத்தைத் திரையிட்டால் யாழ்ப்பாணத்தில் இதுவே கடைசித் திரைப்படவிழா’ என எச்சரிக்கைப் பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத் திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழுவில் அனோமா ராஜகருணா, கவிஞர் சேரன், திரைப்பட இயக்குனர் சுமதி சிவமோகன் போன்றோர் இருந்தும் கூட இந்தத் தடை நிகழ்ந்தேறியது. இவ்வளவுக்கும் அந்த ஆவணப்படம் ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் தொடக்க விழாத் திரைப்படமாகக் காண்பிக்கப்பட்ட படம். Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. தொடர்ந்து பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் படம் காண்பிக்கப்பட்டது. பிரான்ஸில் திரையரங்குகளிலும் பல்கலைக்கழகங்களிலும் திரையிடப்பட்டது; இது குறித்து ‘இப்போ இல்லாட்டி எப்போ’ என்றொரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.

ஈழத் தமிழ்ச் சமூகம் பல வருடங்களாகவே இலங்கை அரசாலும், தமிழ்த் தேசியவாதிகளாலும் கருத்துச் சுதந்திர மறுப்புக்குள் வாழ்கிறது. இதற்கு எதிராகப் போராடி உயிர் துறந்த ராஜினி திரணகம, செல்வி, நிமலராஜன், எஸ்போஸ் போன்றவர்களின் இரத்தத்தால் நனைந்ததே ஈழ மண். இது நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும். படைப்பாளியின் சுதந்திரத்திற்கு வானமே எல்லை. குறிப்பாக, மேற்கு நாடுகளில் வாழ்ந்து, சனநாயகச் சலுகைகளைப் பூரணமாக அனுபவித்துக்கொண்டிருக்கும் வசீகரன் போன்றவர்கள் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பு வெளியான பின்பாக, அதைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள். அதைவிடுத்து தணிக்கை, தடை எனக் கொடூரமாக நடந்துகொள்ளாதீர்கள். ஒர் இலக்கியப் பிரதியையோ, திரைப்படத்தையோ மதிப்பீடு செய்து அதை வெளியிடுவதா இல்லையா எனக் கட்டளையிடுவதெல்லாம் படைப்புச் சுதந்திரத்திற்கு முற்று முழுதாகவே எதிரானது. அத்தகைய அதிகாரம் அரசு -இயக்கங்கள் – புரட்சிகர அமைப்புகள் போன்ற எவரிடமுமே இருக்கக் கூடாது. கலைஞர்களுக்கு அரசியல்வாதிகள் கட்டளையிடக் கூடாது.

இது வெறுமனே கலைஞர்களுக்கும் அதிகார மையங்களுக்கும் இடையேயான பிரச்சினையல்ல. இங்கே படைப்பாளியின் கருத்துரிமை மட்டும் பாதிக்கப்படவில்லை. பார்வையாளர்களின், வாசகர்களின் சுதந்திரமும் சேர்ந்தே அதிகார மையங்களால் பறிக்கப்படுகின்றன. அதனால்தான் ‘சொல்வதற்கான உரிமை காப்பாற்றப்படும் போதே, கேட்பதற்கான உரிமையும் காப்பாற்றப்படுகிறது’ என்றார் நமது பொப் மார்லி.

1 thought on “வேர்ச்சொல் – விடுதலை சிகப்பி – வெந்து தணிந்தது காடு

  1. மிகச் சரியான கண்ணோட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *