இமிழ் : எழுத்தாளர்கள் தேர்வும் தொகுப்பும்

கட்டுரைகள்

51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலரான ‘இமிழ்’ குறித்தும், தொகுப்பில் எழுதியிருக்கும் எழுத்தாளர்களைக் குறித்தும் மார்ச் 21-ம் தேதி, சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, தொகுப்புக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்த முறைமை குறித்துக் கேள்விகளும் விமர்சனங்களும் முகநூலில் பரவலாக வைக்கப்பட்டன. மலருக்கான கதைகளைக் கோரி ஏன் ‘பொது அறிவித்தல்’ கொடுக்கவில்லை என்பதும் அடிக்கடி எழுப்பப்பட்ட கேள்வியாக இருந்தது.

தொகுப்பில் இடம்பெற்ற இருபத்தைந்து எழுத்தாளர்களையும் தேர்வு செய்தவர்கள் என்ற முறையில் தர்மு பிரசாத்தும் நானும், பத்தொன்பது உறுப்பினர்களைக் கொண்ட 51-வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எங்களது விளக்கத்தை மார்ச் 25-ம் தேதியன்று எழுத்து மூலம் அறியக்கொடுத்தோம். அது பின்வருமாறு:

‘இமிழ்’ தொகுப்புக் குறித்து; தொகுப்பின் பொறுப்பாசிரியர் தர்மு பிரசாத்தும், பதிப்பாசிரியர் ஷோபாசக்தியும் 51வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவுக்குச் சில விளக்கங்களை அறியத் தருவதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.

‘இமிழ்’ குறித்து சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகள் குறித்து நாங்கள் இலக்கியச் சந்திப்பில் பொதுவில் விளக்கமளிப்போம். எனினும் அதற்கு முன்பாகவே ஒருங்கிணைப்பு குழுவுக்குத் தனிப்பட விளக்கமளிக்க விரும்புகிறோம்.

‘இமிழ்’ தொகுப்பானது இன்றைய ஈழ – புலம்பெயர் சிறுகதைப் போக்கைச் சொல்லும் ஒரு தொகுப்பு. எனவே, இன்றைக்குத் தொடர்ச்சியாகச் சிறுகதைப் பரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் 43 எழுத்தாளர்களைத் தொடர்புகொண்டு கதைகள் கேட்டோம். இன்றைக்குச் சிறுகதைப் பரப்பில் இயங்கும் ஓர் எழுத்தாளரைக் கூட நாங்கள் தவற விடவில்லை. 25 கதைகளை மட்டும் (400 பக்கங்கள்) நம்மால் தொகுக்க முடியும் என்பதால் இந்த வரையறையை வைத்துக்கொண்டோம். இதனாலேயே நாங்கள் பொதுவில் அறிவித்தல் கொடுக்கவில்லை.

ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததைப் போலவே, இந்தக் கேள்விகளுக்கு இலக்கியச் சந்திப்பில் நானும், தர்மு பிரசாத்தும் மிக விரிவாகவே பதிலளித்திருந்தோம். ‘இமிழ்’ குறித்து இலக்கியச் சந்திப்பில் புதிதாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தோம். இவையெல்லாம் நேரலையாக முகநூலில் ஒளிபரப்பாகின. இந்த நேரலை இப்போதும் என் முகநூலிலும், வேறு பலரின் முகநூல்களிலும் காணக் கிடைக்கின்றது.

நிற்க; எதிர்வரும் 04.05.2024 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழவிருக்கும் ‘இமிழ்’ விமர்சனக் கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டதிலிருந்து திரும்பவும் இதே கேள்விகளை நமது தோழமைகளான பபி ரவீந்திரன், வடகோவை வரதராஜன், த.மலர்ச்செல்வன் ஆகியோர் எழுப்பியிருக்கிறார்கள். இலக்கியச் சந்திப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தையும், பதில்களையும் நேரலையில் கவனிப்பதற்கு இந்தத் தோழர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன். எனவே இந்தத் தோழர்களுக்காக மறுபடியும் விளக்கத்தைக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன். இம்முறை இன்னும் விரிவாகவே சொல்லிவிடுகிறேன்.

51-வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் 09.12.2023 அன்று பாரிஸில் நிகழ்ந்தது. அந்தக் கூட்டத்திலே, இலக்கியச் சந்திப்புச் சார்பாக ஒரு சிறுகதை மலரை வெளியிடுவதென ஒருங்கிணைப்புக் குழுவால் தீர்மானிக்கப்பட்டது. சிறுகதை மலரின் பொறுப்பாசிரியராக தர்மு பிரசாத்தும், பதிப்பாசிரியராக நானும் செயற்படுவது என்றும் அந்தக் கூட்டத்திலேயே ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதாவது, இருவரைக் கொண்ட ஆசிரியர் குழு. தொகுப்புக்கான கதைகளைத் தேர்வு செய்வது, வடிவமைப்பது, தொகுப்புரை எழுதுவது, அச்சாக்கம் ஆகியவை எங்களது பொறுப்பிலே விடப்பட்டன. இலக்கிய எழுத்து – பதிப்பு ஆகியவற்றில் நாங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதாலும், அதன் வழியே நாங்கள் பெற்றுக்கொண்ட நீண்ட அனுபவத்தாலுமே இந்தப் பொறுப்பு எங்களிடம் ஒருங்கிணைப்புக் குழுவால் ஒப்படைக்கப்பட்டது. ‘இமிழ்’ தொகுப்புப் பணிகளில் ஒருங்கிணைப்புக் குழு எந்தத் தலையீடோ இடையீடோ செய்யாமல் எங்களைச் சுயாதீனமாக இயங்க அனுமதித்தது.

இலக்கியச் சந்திப்பின் தொகுப்பொன்றில் ஆசிரியர் குழு சுயாதீனமாக இயங்குவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. 41-வது இலக்கியச் சந்திப்பு மலரான ‘குவர்னிகா’வின் ஆசிரியர் குழுவும் இவ்வாறே சுயாதீனமாக இயங்கியே மலரை வெளியிட்டது. ‘குவர்னிகா’ ஆசிரியர் குழுவில் கருணாகரன், பானுபாரதி, ம. நவீன், தமயந்தி ஆகியோர் என்னுடன் ஆசிரியர் குழுவில் இருந்தனர். அய்வர் கொண்ட இந்த ஆசிரியர் குழுவே ‘குவர்னிகா’ மலரில் இடம் பெறவேண்டிய ஆக்கங்களைத் தீர்மானித்தது. குவர்னிகா மலருக்கு கிட்டத்தட்ட 1500 பக்கங்களில் படைப்புகள் வந்தன. அவற்றில் பாதியளவை மட்டுமே தேர்வு செய்து 808 பக்கங்களில் தொகுப்பை வெளியிட்டோம்.

1997-ம் வருடம் பாரிஸில் நிகழ்ந்த 23-வது இலக்கியச் சந்திப்பிலிருந்து இன்றுவரை இலக்கியச் சந்திப்புத் தொடரில் நான் ஈடுபாட்டோடு கலந்துகொள்கிறேன். இந்த 27 வருட காலத்தில், 27 இலக்கியச் சந்திப்புகள் நடந்திருக்கின்றன. இந்தக் கால இடைவெளியில் நான்கு இலக்கியச் சந்திப்புகளில் மட்டுமே மலர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இனியும் சூல் கொள் (1997), இருள்வெளி ( 1998), குவர்னிகா (2013), இமிழ் (2024) ஆகியவையே அந்த மலர்கள். இந்த நான்கு மலர்களிலுமே நான் எழுதியிருக்கிறேன். இந்த நான்கு மலர்களிலும் ‘குவர்னிகா’வைத் தவிர வேறு எந்த இலக்கியச் சந்திப்பு மலருக்கும் ஆக்கங்களைக் கேட்டு ‘பொது அறிவித்தல்’ கொடுக்கப்பட்டதில்லை. ‘இனியும் சூல் கொள்’ தொகுப்பைப் பொறுத்தவரை, ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்த எம்.ஆர்.ஸ்டாலின் என்னைத் தொடர்புகொண்டு சிறுகதை கேட்டார். ‘இருள்வெளி’ மலருக்காக அதன் தொகுப்பாசிரியர் சுகன் என்னிடம் நேரில் சிறுகதை கேட்டார். இதேவழியில்தான் ஏனைய எழுத்தாளர்களிடமும் நேரிலோ, தொலைபேசி வழியாகவே, கடிதம் மூலமோ அணுகிப் படைப்புகள் பெறப்பட்டன.

‘இமிழ்’ தொகுப்புக்கான கதைகளைக் கோரி ‘பொது அறிவித்தல்’ கொடுக்க வேண்டியதில்லை என இமிழ் ஆசிரியர் குழு தீர்மானித்தது. ஏனெனில் மூன்று மாதகால அவகாசத்திற்குள் ‘குவர்னிகா’ போன்றதொரு ‘மெகா’ தொகுப்பை வெளியிடுவது சாத்தியமில்லை. நாங்கள் ‘இமிழ்’ தொகுப்புக்கான வேலைகளை ஆரம்பித்த அதே காலப்பகுதியில்தான் ‘வளர்’ என்ற இதழ் ஒரு சிறுகதைப் போட்டியை பொதுவில் அறிவித்திருந்தது. இலங்கையிலிருந்து மட்டும் 871 சிறுகதைகள் எழுதி அனுப்பப்பட்டிருப்பதாக அந்த இதழின் சார்பில் ‘ஓசை’ மனோ முகநூலில் அறிவித்திருக்கிறார். 871 என்ற தொகையில் கால்வாசி அளவான கதைகள் இமிழுக்கு அனுப்பப்பட்டால் கூட அதை எதிர்கொள்ள எங்களிடம் வளமில்லை. அதிகபட்சம் 400 பக்கங்களில் 25 சிறுகதைகளை மட்டுமே தொகுக்கக்கூடிய வளமும் அவகாசமுமே எங்களிடமிருந்தன. (‘இனியும் சூல் கொள்’, ‘இருள்வெளி’ ஆகிய தொகுப்புகள் இமிழ் தொகுப்பைக் காட்டிலும் குறைவான பக்கங்களுடனேயே வெளியாகியிருந்தன).

சரி… தொகுப்பில் வெளியான இந்த இருபத்தைந்து கதைகளைத் தேர்வு செய்தற்கான அளவுகோல் என்ன? பொறிமுறை என்ன?

நாங்கள் 43 எழுத்தாளர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் சிறுகதைகளைக் கோரினோம். 43 பேர்களிடம் சிறுகதைகள் கேட்டால், அதிகபட்சமாக 20 -25 கதைகள் கிடைக்கும் என்பது இலக்கிய வட்டாரங்களில் நிலவும் அனுபவக் கணக்கு. இந்த 43 எழுத்தாளர்களும் எந்த அடிப்படையில், எந்த அளவுகோலால் ‘இமிழ்’ ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்பட்டார்கள்? இதற்கான பதிலை ‘இமிழ்’ தொகுப்புரையில் சொல்லியாகிவிட்டது, அந்தத் தொகுப்புரையை இலக்கியச் சந்திப்புக்கு அய்ந்து நாட்களுக்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டாகிவிட்டது, இலக்கியச் சந்திப்பிலும் நேரில் சொல்லியாகிவிட்டது. ஆனாலும், பதிலை முகநூலிலும் சொல்லியாக வேண்டும் என்று எதிர்பார்க்கும் தோழமைகளுக்காக மீண்டும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

ஈழத்தின் சிறுகதை மரபானது நூற்றைம்பது கால வரலாற்றைக் கொண்டது. அது ஈழகேசரிக் காலம், மறுமலர்ச்சிக் காலம், முற்போக்கு எழுத்தாளர் சங்கக் காலம், புத்தெழுச்சிக்காலம், தேசியவாத எழுச்சிக்காலம், போர்க்கால இலக்கியக் காலம், புலம் பெயர் இலக்கியத்தின் தொடக்ககாலம் ஆகியவற்றைக் கடந்து இப்போது பின் யுத்தகாலத்திற்குள் நுழைந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இந்தக் காலம், யுத்தம் குறித்த வடுக்களையும் நினைவுகளையும் மீட்டிப் பார்க்கும் காலமாக இருக்கிறது. யுத்தத்தைப் பற்றிப் பேசுவதும், படைப்புகளில் சித்திரிப்பதும் கூட அந்தக் கொடுமையான யுத்தத்திலிருந்து வெளிவருவதற்கான எத்தனங்களே. யுத்தத்தின் கொடூரத்தை தலைமுறைகளுக்கும் நினைவூட்டிக்கொண்டிருப்பதற்கான ஏற்பாடும் கூட. அத்துடன், இன்றைய ஈழ – புலம்பெயர் இலக்கியத்தில் பன்முகத்தன்மையோடு வெளிப்படும் நிலமும் பண்பாடும் பழங்குடித் தொன்மங்களும் வீறானவை. அதுவே ஈழ – புலம்பெயர் இலக்கியம் சமகாலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கும் தனித்துவமான பங்களிப்பு. எனவே, இந்த அம்சங்களின் திரட்சியே இன்றைக்கு ஈழத்துச் சிறுகதைப் போக்கின் முதன்மைச் செல்நெறியாகத் துலங்குகிறது என்பதுவே எங்களது மதிப்பீடு.

இந்தச் செல்நெறியைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுப்பதே எங்களது நோக்கமாகயிருந்தது. அதேவேளையில் அந்த எழுத்தாளர்கள் இன்றைக்குத் தொடர்ச்சியாகப் புனைகதைப் பரப்புக்குள் இயங்குபவர்களாகவும், நவீன சிறுகதையின் எழுத்து நுட்பங்களை உள்வாங்கி எழுதித் தேர்ந்த சிறுகதையாளர்களாக ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்களாவும் இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். எனினும், இந்த அம்சங்கள் ஓர் எழுத்தாளருக்கு வாய்த்திருந்தாலும், இலக்கியச் சந்திப்பு எப்போதுமே உயர்த்திப் பிடிக்கும் சனநாயக மரபுக்கு நேரெதிராகக் கொலைகளைக் கொண்டாடி அவர் போர்ப்பரணி எழுதுபவராகவும் இனச் சுத்திகரிப்பையும் இனப்படுகொலைகளையும் ஆதரித்து நச்சு இலக்கியம் எழுதுபவராகவும் இருந்தால் அவரை விலக்கி வைத்துக்கொண்டோம்.

இந்த மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே எங்களால் 43 எழுத்தாளர்களைத் தேர்வு செய்யக் கூடியதாக இருந்தது. மிகச் சிறிய ஈழத்து இலக்கியப் பரப்பில் 43 எழுத்தாளர்கள் இருப்பது உண்மையிலேயே நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் முன்னெப்போதும் இவ்வளவு தொகையில் தேர்ந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருந்ததில்லை, தொடர்ச்சியாக இயங்கியதில்லை என்றே நான் கருதுகிறேன்.

எங்களது மதிப்பீடுகளுக்குள் பொருந்திவரும் ஒரேயொரு எழுத்தாளரைக் கூட நாங்கள் தவறவிடவில்லை. மூத்த எழுத்தாளர் கலாமோகனில் தொடங்கி இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் வரை தொடர்புகொண்டு கதைகளைக் கோரினோம். உலகின் ஒருமுனையில் இருக்கும் மெலிஞ்சிமுத்தனிலிருந்து தொடங்கி மறுமுனையில் இருக்கும் பிரமிளா பிரதீபன் வரை சுற்றிவந்து கதைகளைக் கோரினோம். கதைகளை அனுப்புவதற்கான கால எல்லையாக ஜனவரி 31-ம் தேதியை நிர்ணயித்திருந்தோம். அந்தத் தேதிக்குள் போதிய கதைகள் எங்களுக்குக் கிடைக்காததால், கால எல்லையை மேலும் சில தினங்கள் நீடித்தோம். 25 கதைகள் கிட்டியதும் அத்தோடு நிறுத்திக்கொண்டோம்.

எந்த மதிப்பீட்டின் அல்லது அளவுகோலின் அடிப்படையில் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்தோம் என்பதை விளக்கிவிட்டேன். ஆனால், ஒருவர் எங்களுடைய மதிப்பீட்டில் அதிருப்தியுற்று அல்லது எதிர்த்து வேறொரு இலக்கிய மதிப்பீட்டை முன்வைக்கலாம். அதை எங்களால் புரிந்துகொள்ள முடியும்.
ஏனெனில், இலக்கியத்தை அளவிடுவதற்குப் பொதுவான – எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொருவருடைய வாசகத் தன்னிலையைப் பொறுத்தும் மதிப்பீடுகள் நிச்சயமாகவே வேறுபடும். அவருடைய சமூகப் பின்னணி, பாலினம், அரசியல் பார்வை போன்ற பல்வேறு காரணிகள் மதிப்பீடுகளை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்தும். ‘இமிழ்’ தொகுப்பைப் பொறுத்தவரை நானும் தர்மு பிரசாத்தும் உரையாடி, விவாதித்து ஒரு மதிப்பீட்டு முறையையும் அளவுகோலையும் உருவாக்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் எழுத்தாளர்களைத் தேர்வு செய்தோம். இதைச் செய்வதற்கான அனுபவத்தையும் பார்வையையும் தர்மு பிரசாத்தின் பத்து வருடகால இலக்கிய எழுத்துகளும் ‘ஆக்காட்டி’ இதழை நடத்தும் அனுபவமும் அவருக்கு வழங்கியிருப்பதாகவும், என்னுடைய முப்பது வருடகால இலக்கிய வாழ்க்கையும் ஏற்கனவே மூன்று தொகுப்புகளுக்கும் மூன்று நூல்களுக்கும் பதிப்பாசிரியராக இருந்த அனுபவமும் எனக்கு வழங்கியிருப்பதாகவும் நான் கருதுகிறேன். ‘அப்படியெல்லாம் ஒரு இழவுமில்லை’ என்று ஒருவர் சொல்வாரானால், அதையும் அமைதியாகச் செவிமடுத்து அவருக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புவேன்.

மறுகா, மல்லிகை, காலச்சுவடு, நிறப்பிரிகை போன்ற இதழ்களானாலும் சரி, இடதுசாரிக் கட்சிகளின் இலக்கிய இதழ்களானாலும் சரி, ‘கறுப்பு’, ‘கிழக்கும் மேற்கும்’ போன்ற இலக்கியத் தொகுப்புகளானாலும் சரி, இவற்றுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினரின் தேர்வின் அடிப்படையிலேயே படைப்புகள் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன அல்லது நிராகரிக்கப்படுகின்றன. அப்படியானால் இந்த ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவிடமிருக்கும் தேர்வுக்கான அளவுகோல் என்ன? நிச்சயமாகவே யாரிடமும் உலகப் பொதுவான ஓர் அளவுகோல் கிடையாது. எடுத்துக்காட்டாக, ‘காலச்சுவடு’ ஆசிரியர் குழுவினதும் ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவினதும் இலக்கிய மதிப்பீடுகள் வேறுவேறானவை. பலசமயங்களில் அவை நேரெதிராக இருந்திருக்கின்றன. அதே போன்று ‘இமிழ்’ தொகுப்பைப் பொறுத்தவரை ஆசிரியர் குழு உருவாக்கிக்கொண்ட இலக்கிய அளவுகோலின் அடிப்படையிலேயே எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த அளவுகோலை உபயோகிக்கும் சுயாதீனத்தை ஆசிரியர் குழுவுக்கு 51-வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழு ஒருமனதாக வழங்கியிருந்தது. அதனாலேயே ‘இமிழ்’ காரியம் இந்த வகையாக நிறைவேறிற்று.

இன்னொரு இலக்கியச் சந்திப்பில், இன்னொரு இலக்கிய மலரோடு உங்களை மீண்டும் சந்திக்கிறேன் தோழர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *