ஆறாங்குழி

கதைகள்

ரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன்.

நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் பெரிய மீன்பிடிக் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பலோடு சமுத்திரத்திற்குள் இறங்கினால், ஒரு வாரம் முழுவதும் சமுத்திரத்திற்குள்ளேயே இருந்து, தொன் கணக்கில் மீன்களை வாரிக்கொண்டுதான் கரைக்குத் திரும்புவோம். கடுமையான உடலுழைப்பு என்பதால், அறுபதாவது வயதை நெருங்கிக்கொண்டிருந்தாலும் என்னுடைய தேகம் கட்டுக்குலையாமல் இன்னும் இரும்பாகவேயிருக்கிறது. கடலில் இருந்து கரையேறிய உடனேயே நேராக சாராயக் கடைக்கும், பின்பு தாசி விடுதிக்கும் போய்விடுகிறேன். கண்பார்வையில் ஒரு குறையுமில்லை. ஒரு சிப்பம் வரிச்சூரைக் கருவாட்டைப் பச்சையாகவே சப்பித் தின்னுமளவுக்குப் பற்களும் வலுவாகவேயுள்ளன. கடலில் இருந்தால் சுறாக்களுக்கு நடுவாக நீந்துகிறேன். கரையில் இருக்கும் நாட்களில் இப்போதும் பத்துக் கிலோமீற்றர்கள் தூரம் ஓடுகிறேன். எங்களது கப்பலின் தலைமை மாலுமி “குரங்குக்கு நூறு வயதானாலும் நிலத்தில் நடந்து போகாதாம்” என்பார்.

இப்போது கூட, இவற்றையெல்லாம் நான் உங்களிடம் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி என்னுள் எழாமலில்லை. இன்றைய காலை வரையிலும் நான் வாயைத் திறப்பதாகவேயில்லை. ஆனால், என்னுடைய முன்னாள் சகாவான லான்ஸ் கோப்ரல் வீரசிங்க தன்னுடைய வாயால் என்னுடைய வாயை அவிழ்த்துவிட்டிருக்கிறான். உண்மையில் நான் இப்போது தெளிவற்ற மனநிலையில் இருக்கிறேன். என்னுடைய மனம் ஆற்றாமையாலும், ஆத்திரத்தாலும் கொந்தளிக்கிறது. முப்பத்து மூன்று வருடங்களுக்கு முந்தைய இரவின் மீது, இப்போது சிறு வெளிச்சத்தைக் கொளுத்திக் காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

அன்றைய இரவு, கொழும்பு நகரத்தின் வடபகுதியிலிருந்த முகத்துவாரம் ‘ரொக் ஹவுஸ்’ இராணுவ முகாமில் நான் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்புதான், நான் இரண்டாவது நிலை லெப்டினன்டாகத் தரம் உயர்த்தப்பட்டு, ரொக் ஹவுஸ் முகாம் கட்டளை அதிகாரியின் நம்பிக்கைக்குரிய வீரனாக மாறியிருந்தேன். இடப்பட்ட கட்டளையை சிறு எச்சமோ, தடயமோ வைக்காமல் கச்சிதமாகச் செய்து முடிப்பவன் என்ற கீர்த்தி எனக்கு இராணுவ வட்டாரங்களிலிருந்தது. உயர் அதிகாரிகளுக்கு என்மீது துளியளவும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால், நான் உத்தரவுகளை முழுமையாக நிறைவேற்றுபவனாகவும், ஈவு இரக்கமற்றவனாகவும் கடூழியம் செய்தேன். என்னுடைய முரட்டுக் குணம் அதிகாரிக்குப் பிடித்திருந்தது. ‘முட்டும் மாடுதான் உழவுக்கு நல்லது’ என்பது அவரது கொள்கையாக இருக்க வேண்டும். என்னுடைய மனதிலோ வேறாரு எண்ணம் கொஞ்ச நாட்களாகவே ஓடிக்கொண்டிருந்தது.

உறக்கத்திலிருந்த என்னுடைய காதுக்குள் “யக்கடயா… யக்கடயா” என்றழைக்கும் குரல் கேட்டது. கண்களை விழித்துப் பார்த்தபோது “உடனடியாகத் தன்னை வந்து பார்க்குமாறு கட்டளை அதிகாரி அழைக்கிறார்” என்று என்னை எழுப்பிய சிப்பாய் துமிந்த சொன்னான். நான் அவசர அவசரமாக எழுந்து முகத்தைக் கழுவிவிட்டு, சீருடையை அணிந்தேன். உத்தரவு கிடைத்த இரண்டாவது நிமிடத்தில் கட்டளை அதிகாரியின் முன்னே நின்றிருந்தேன்.

அலுவலகத்திற்குள் கட்டளை அதிகாரி புகை பிடித்தவாறே நின்றுகொண்டிருந்தார். உள்ளே நுழைந்த என்னைப் புதிதாகப் பார்ப்பது போல, மேலும் கீழுமாகப் பார்த்தார். மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்த அவரது கண்கள் என்னுடைய முகத்தையே சில விநாடிகள் உற்றுப் பார்த்தன. ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது அல்லது நிகழப்போகிறது என்று எனக்கு அப்போதே புரிந்துவிட்டது.

“யக்கடயா! உன்னுடைய ரிவோல்வரை எடுத்து இங்கே வை” எனச் சொல்லிக்கொண்டே மேசையின் இழுப்பறையை அதிகாரி திறந்தார். விபரீதம் உறுதி என்றே என்னுடைய மனம் சொல்லிற்று. யோசிப்பதற்கு அவகாசம் இல்லை. சுழற் துப்பாக்கியை இடுப்புப்பட்டியில் பிணைக்கப்பட்டிருந்த கோல்ஸரிலிருந்து உருவியெடுத்து இழுப்பறைக்குள் வைத்தேன். அதிகாரி இழுப்பறையை மூடிப் பூட்டி, சாவியை எடுத்துத் தனது காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டே “என்னுடன் வா!” எனச் சொல்லிவிட்டு, முன்னே நடந்தார். நான் அவரைத் தொடர்ந்தேன்.

முகாமின் முன்னால் நின்றிருந்த பச்சை வண்ண பஜீரோ ஜீப் வண்டியில் ஏறிய அதிகாரி சாரதி இருக்கையில் உட்கார்ந்துகொண்டே, என்னை அவரருகே உட்காரச் சொன்னார். இப்படி ஒருபோதும் நடந்ததேயில்லை. நான் கட்டளை அதிகாரியோடு பயணிக்கும் போதெல்லாம், இந்த வண்டியை இராணுவச் சாரதியான பெர்னாண்டோ ஓட்ட, அதிகாரி முன்னிருக்கையில் அமர்ந்திருப்பார். நான் அவருக்குப் நேர் பின்னே உட்கார்ந்திருப்பேன்.

பஜீரோ வண்டி மாதம்பிட்டிய சந்திவரை சென்று, அங்கிருந்து தெற்கு நோக்கித் திரும்பி வேகமாக ஓடத் தொடங்கியது. மாதம்பிட்டியிலிருந்து எங்களைப் பின்தொடர்ந்து இன்னொரு இராணுவ வண்டி வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். அப்போது நேரம் அதிகாலை ஒரு மணியை நெருங்கியிருந்தது. தெருவில் வேறெந்த வாகனங்களும் கிடையாது. வண்டியைச் செலுத்தியவாறே, ஒற்றைக் கையால் இலாவகமாக சிகரெட்டைக் கொளுத்திக்கொண்ட அதிகாரி என்னிடம் கேட்டார்:

“யக்கடயா… உனக்கு கேர்ள் ஃபிரண்ட் உண்டா?”

இதைக் கேட்டதும் நான் இருக்கையிலிருந்து நழுவி விழாதது ஆச்சரியம்தான். என்ன தான் இரும்பு உடம்பும், அடங்காத முரட்டுக் குணமும் கொண்டவர்களாகயிருந்தாலும், உயிர்ப் பயம் ஏற்பட்டால் செத்த சவமாகிவிடுகிறார்கள் என்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

சென்ற வாரத்தில், மட்டக்குழி பாதாளக் குழுவின் தலைவனான மெவினய்யாவை இராணுவம் கடத்திவந்த போது, அவனைச் சித்திரவதை செய்யும் பொறுப்பைக் கட்டளை அதிகாரி என்னிடமே கொடுத்திருந்தார். என்னுடைய நுணுக்கமான சித்திரவதைக் கலையில் அவருக்கு முழு நம்பிக்கையிருந்தது. நூற்றைம்பது கிலோ எடையுள்ள மெவினய்யா முதலில் உயிருக்குப் பயமில்லாதவன் போலத்தான் பாவனை செய்தான். போலியான வீரத்தைத் தன்னுடைய உருளை முகத்தில் ஒட்டி வைத்திருந்தான். நான் என்னுடைய கைகளால் அதை முகத் தோலோடு சேர்த்து உரித்தெடுத்தேன். நான் அவனது தூண் போன்ற வலது கையைப் பிடித்து, என்னுடைய காலை மடக்கி உயர்த்தி, அவனுடைய மணிக்கட்டு எலும்பை என்னுடைய தொடையில் அடித்து முறித்த போது, அவன் இடது கையால் என்னுடைய காலைப் பற்றிக்கொண்டு, நாய் போல ஊளையிட்டுக் கதறத் தொடங்கிவிட்டான்.

“எனக்கு கேர்ள் ஃபிரண்ட் இல்லை சேர்” என்றேன். அதிகாரி என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, வண்டியைக் கண்மண் தெரியாத வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தார். நான் சொன்னதை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதை அவரது முகத்திலிருந்து என்னால் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது.

அக்காலத்தில் ஜே.வி.பி. இயக்கம் இலங்கை அரசுக்கு எதிராகத் தன்னுடைய இரண்டாவது ஆயுதப் புரட்சியைத் தீவிரமாக நடத்திக்கொண்டிருந்தது. இராணுவத்திலிருந்த என்னைப் போன்ற பல இளைஞர்களும் அந்த இயக்கத்தால் கவரப்பட்டிருந்தோம். ஏனெனில், அந்த இயக்கம் சொல்வதிலும் பல உண்மைகள் இருக்கத்தானே செய்தன.

உதாரணமாக, ஜனாதிபதி ரணசிங்கே பிரேமதாஸ அப்போது தமிழ்ப் புலிகளுடன் தேன்நிலவு அனுபவித்துக்கொண்டிருந்தார். புலிப் பிரதிநிதிகளை அழைத்து வந்து, கொழும்பின் உயர்ரக நட்சத்திர விடுதிகளில் தங்கவைத்துப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். இந்தியப் படைகளை எதிர்த்து வன்னிக் காட்டுக்குள் யுத்தம் செய்துகொண்டிருந்த தமிழ்ப் புலிகளுக்கு ஆயுதங்களையும், பணத்தையும், சீமெந்தையும் ஜனாதிபதி அனுப்பிக்கொண்டிருந்தார்.

முன்பாக, பத்து வருடங்களாக நாங்கள் புலிகளுடன் நடத்திய யுத்தத்தில், இராணுவம் நூற்றுக்கணக்கான வீரர்களையும் அதிகாரிகளையும் இழந்திருந்தது. அதையெல்லாம் மறந்துவிட்டு ஜனாதிபதி புலிகளுடன் உறவாடிக்கொண்டிருந்தது இராணுவத்திற்குள் மிகப் பெரிய அதிருப்தியையும் குழப்பத்தையும் உருவாக்கியிருந்தது. இந்த விஷயத்தைக் கையிலெடுத்த ஜே.வி.பி. இயக்கம் இராணுவத்திற்குள் தீவிரப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டிருந்தது. உண்மையிலேயே ஜே.வி.பி. இயக்கம் இராணுவத்திற்குள் ஆழமாக ஊடுருவிவிட்டது. இராணுவத்திற்குள் ஒருபகுதியினர் ஜே.வி.பிக்கு ஆதரவான மனநிலையில் இரகசியமாக உறைந்திருந்தார்கள். புரட்சி அதனுடைய உச்சத்தைத் தொடும் போது, இராணுவத்தின் ஒரு பகுதி வெளிப்படையாகவே ஜே.வி.பியுடன் இணைந்துவிடும். பல்வேறு நாட்டுப் புரட்சிகளின் போதும் இதுவே நடந்தது என்றுதான் சார்ஜன்ட் அத்தநாயக்க என்னிடம் சொல்லியிருந்தான். அவன் மூலமாகத் தான் நானும் ஜே.வி.பி. அனுதாபியாக மாறத் தொடங்கியிருந்தேன்.

தலைமறைவாக இருந்தவாறே புரட்சியை வழிநடத்திக்கொண்டிருக்கும் ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீரவை, நான் என்னுடைய மாணவப் பருவத்தில் நேரிலேயே பார்த்திருக்கிறேன். 1982-ல் எங்களுடைய மலைநகரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசினார். எப்போதும் போலவே அன்றைக்கும் எங்களது மலையில் மழை தூற்றிக்கொண்டிருந்தது. நடு மேடையில் நின்று, மழையில் நனைந்தபடியே ரோஹண விஜேவீர பேசினார். அவருடைய குரல் அவரது அடி வயிற்றிலிருந்து எழுந்து வந்தது.

பொப் மார்லி என்றொரு பாட்டுக்காரன் உண்டல்லவா! கிட்டத்தட்ட அவனையொத்த வசீகரமான முகவெட்டு ரோஹண விஜேவீரவுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், மிக மெலிந்த தோற்றமுள்ளவர். அவர் தலையில் அணிந்திருந்த சிறு நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருந்த சிவப்புநிறக் குல்லாவுக்கு கீழாக, நீளமான அடர்சுருள் தலைமுடி மழையில் கலைந்து அவரது தோள்களில் வழிந்தது. கவர்ச்சிகரமான தாடி வைத்திருந்தார். தடித்த மூக்குக் கண்ணாடிக்குள் அவரது கண்கள் ஒளியை உமிழ்ந்தன. அவருடைய கொந்தளிப்பான பேச்சில் மக்கள் கட்டுண்டு கிடந்தார்கள் என்பது உண்மையே. அழுத்தம் திருத்தமான சொற்களுக்கு நடுவே மூச்சுக் காற்றை ஆழமாக உள்ளிளுத்து, அடுத்த சொல்லை நீண்ட மூச்சோடு வெளியேற்றினார். கையில் எந்தக் குறிப்புகளுமில்லாமலேயே மூன்று – நான்கு மணிநேரங்கள் கூட அவர் தொடர்ச்சியாக உரையாற்றுவார் எனச் சொல்வார்கள். மக்களுக்கு உணவின்மை, வேலையின்மை, விலைவாசி, அமைச்சர்களின் ஊழல், இந்தியப் பெரு முதலாளிகளின் ஆக்கிரமிப்பு, அரசு அதிகாரிகளின் ஆணவம், காவல்துறையின் அடக்குமுறை இவற்றைக் குறித்துத்தான் அவர் பேசினார். தனக்கு வாக்களிக்குமாறு ஒரு தடவை கூட அவர் கேட்கவில்லை. அந்தத் தேர்தலில் அவருக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்தது. ஒருவேளை அவர் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருந்தால், நான் இராணுவத்திற்கு வராமல் கூடப் போயிருக்கலாம் அல்லவா! பீட்ரூட் விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு மலையிலேயே இருந்திருப்பேன்.

இப்போது எங்களது பஜீரோ வண்டி ‘தெமட்டக்கொட’ புகையிரத நிலையத்தைக் கடந்து முன்னேறிக்கொண்டிருந்தது. கட்டளை அதிகாரி விடாமல் சிகரெட்டுகளைப் புகைத்தவாறே வண்டியை விரட்டிக்கொண்டிருந்தார். இவர் இந்த நள்ளிரவில் என்னை எங்கே அழைத்துப் போகிறார்? என்னுடைய துப்பாக்கியை எதற்காக என்னிடமிருந்து வாங்கி வைத்துக்கொண்டார்? நான் கடத்தப்படுகிறேனா? சார்ஜன்ட் அத்தநாயக்க காணாமற்போன நாளிலிருந்தே என்னிடம் ஓர் அச்சம் இருந்துகொண்டேயிருந்தது.

சார்ஜன்ட் அத்தநாயக்கவுக்கும் ஜே.வி.பி அமைப்புக்கும் தொடர்பிருப்பதை இராணுவ உயர் அதிகாரிகள் எப்படியோ மோப்பம் பிடித்திருக்க வேண்டும். சார்ஜன்ட் அத்தநாயக்கவைப் போலவே இராணுவத்திலிருந்து இன்னும் சிலர் காணாமற்போயிருந்தார்கள். அவர்கள் இராணுவத்தை விட்டு ஓடித் தலைமறைவாகிவிட்டார்கள் என்றொரு கதையை அரசாங்கம் கிளப்பிவிட்டிருந்தது. ஓடியவர்கள் ஜே.வி.பியில் இணைந்திருக்கலாம் எனச் சிலர் சொன்னார்கள். நான் இரண்டையுமே நம்பவில்லை. எங்களது ரொக் ஹவுஸ் முகாமிலேயே என்னைத் தவிர இன்னும் சில இராணுவ வீரர்கள் ஜே.வி.பி. அனுதாபிகளாக இருந்தார்கள். காணாமற்போனவர்கள் ஜே.வி.பியில் இணைந்திருந்தால் எங்களுக்குத் தகவல் கசிந்திருக்கும். தவிரவும் ரோஹண விஜேவீர தன்னுடைய ஆதரவாளர்களை இராணுவத்திலிருந்து வெளியேறச் சொல்லவில்லை. தகுந்த தருணத்திற்காகக் காத்திருக்குமாறே சொல்லியிருந்தார். அந்தச் சந்தர்ப்பம் சீக்கிரமே வந்துவிடும் என்றுதான் நான் நம்பியிருந்தேன். அதற்குள் நான் கட்டளை அதிகாரியிடம் மாட்டிக்கொண்டேனா? சார்ஜன்ட் அத்தநாயக்க என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டானா?

நிச்சயமாகவே ஜே.வி.பி. தனது இலக்கை அதிவிரைவாகவே அடைந்துவிடும். இப்போதே தென்னிலங்கையிலும், வடமத்திய மாகாணத்திலும், மலைநாட்டிலும் பல கிராமங்கள் அவர்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் ஜே.வி.பியில் இணைந்தவாறேயிருக்கிறார்கள். கொழும்பில் ஜே.வி.பி. பெரியளவு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தாலும், அவர்களது சொற்கள் நகரத்தின் மீது தீயாகப் படர்ந்திருக்கிறது. இந்தியப் பொருட்களைக் கடைகளில் விற்கக்கூடாது, இந்தியத் திரைப்படங்களைத் தியேட்டர்களில் காண்பிக்கக்கூடாது என்ற அவர்களது ஒரேயொரு எச்சரிக்கைத் துண்டுபிரசுரத்திற்குத் தலைநகரமே பணிந்து கிடக்கிறது.

ஜே.வி.பியை ஒருபுறத்திலும், தமிழ்ப் புலிகளை மறுபுறத்திலும் சமாளிக்க முடியாமல் தான் அரசாங்கம் புலிகளுடன் ஒரு தேன்நிலவை அமைத்துக்கொண்டு, ஜே.வி.பியை வேட்டையாடுவதில் முழுக் கவனத்தையும் குவித்துள்ளது. இதைக் கட்டளை அதிகாரியே ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். இப்போது கூட ஒரே தாவலில் இந்த அதிகாரியை மடக்கி, அவரது துப்பாக்கியாலேயே அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, என்னால் தப்பித்துச் செல்ல முடியும். ஆனாலும், நான் சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டும். ஒருவேளை இவருக்கு என்மீது சந்தேகம் இல்லாமல் கூட இருக்கலாம். எதற்கும் பரிசீலித்துப் பார்த்துவிடுவதே நல்லது எனத் துணிந்துவிட்டேன்.

“சேர்…எனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கிறாளா என்று கேட்டீர்களே…?”

“இருக்கிறாளா என்ன?”

“உண்மையாகவே இல்லை சேர்..”

“கேர்ள் ஃபிரண்ட் வைத்திருக்கும் இந்தக் கால இளைஞர்களால் இரகசியத்தைக் காப்பாற்ற முடிவதில்லை யக்கடயா!”

நான் சற்றுத் தளர்வாக உட்கார்ந்தேன். இவருக்கு என்மீது சந்தேகமில்லை. ஒரே விநாடியில் நான் உற்சாகமாகிவிட்டேன். ஏதோ முக்கியமான வேலையாகத்தான் இவர் என்னை அழைத்துப் போகிறார். இவர் எதிர்பார்ப்பதை விடவும் கச்சிதமாக நான் அந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும். இவரிடம் அளவுக்கு அதிகமான விசுவாசத்தைக் கொட்ட வேண்டும். புரட்சி வெற்றியடையும் தறுவாயில் நானே இவரைக் கொல்லக்கூடும். எனக்குத்தான் அந்த உரிமையுண்டு. அதுவரை பொறுத்திருப்பதே புத்தி.

பஜீரோ வண்டி பொரளை நகரத்திற்குள் நுழைந்த போது, நாங்கள் வெலிகடைச் சிறைச்சாலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்றுதான் நினைத்துக்கொண்டேன். அங்கே ஏராளமான தமிழ்க் கைதிகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவனின் கையையோ காலையோ நான் உடைக்க வேண்டியிருக்கலாம். கழுத்தைத் திருகி முறிக்கச் சொன்னாலும் கச்சிதமாகச் செய்துவிட வேண்டியதுதான்.

ஆனால், எங்களது வண்டி வெலிகடைச் சிறையையும் கடந்து சென்றது. பின்னால் வந்த இராணுவ வண்டியோ திடீரென இருளுக்குள் மறைந்துவிட்டது. கட்டளை அதிகாரி எங்களது வண்டியின் வேகத்தைக் குறைத்துக்கொண்டார். சில நிமிடங்களிலேயே ரோயல் கோல்ஃப் மைதானத்திற்குள் வண்டி நுழைந்தது. இப்போது எனக்கு மறுபடியும் சந்தேகம் வரக் காரணமிருந்தது. அந்த மைதானத்தின் முகப்பு வாசலில் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, கைகளில் டோர்ச் லைட்டுகளுடன் சில இராணுவ வீரர்கள் நின்றிருந்தார்கள். அவர்களைக் கடந்து சென்ற பஜீரோ வண்டி மைதானத்தின் ஓரமாக ஓடிச் சென்று, ஒரு சிறிய குழியின் முன்னால் நின்றது. இந்த கோல்ஃப் மைதானத்தில் பந்து விழும் பதினெட்டுக் குழிகள் உள்ளன. இது ஆறாவது குழி.

என்னைக் கீழே இறங்குமாறு கட்டளை அதிகாரி சொல்லிவிட்டு, அவர் வாகனத்தின் உள்ளேயே இருந்துகொண்டார். வாகனத்தின் விளக்குகள் அணைந்ததும் ஆளையாள் தெரியாத கச இருள் எங்களைச் சூழ்ந்தது. என்னைச் சுட்டுக் கொல்லப்போகிறார்கள் என்றே எனக்குத் தோன்றியது. கிளைக்குக் கிளை தாவும் பறவை நனைந்துதான் சாகும். இப்படியே ஓடித் தப்பிவிடலாமா என்று நான் இருளுக்குள் அங்குமிங்கும் பார்த்த போது, என்னை நோக்கி டோர்ச் லைட் வெளிச்சம் வந்து, என்னுடைய முகத்தில் வட்டம் போட்டது.

கையில் டோர்ச் லைட்டை வைத்திருந்த கட்டளை அதிகாரி “யக்கடயா இப்படி வா!” என்று கூப்பிட, நான் வாகனத்தைச் சுற்றிக்கொண்டு அவரருகே சென்றேன். அதிகாரி குரலைத் தாழ்த்தியவாறே என்னிடம் சொன்னார்:

“இப்போது ஒருவனை இங்கே கொண்டுவருவார்கள். அவனுடைய உயிர் போகாமல், நீ அவனுடைய ஒவ்வொரு எலும்பையும் சிதைக்க வேண்டும். அவன் வேதனையைப் பூரணமாக அனுபவிக்க வேண்டும். நீ அவனுக்கு இந்த மைதானத்திலேயே நரகத்தைக் காட்டிவிடு!”

“அவனைப் பேச வைத்து உண்மையைக் கறக்க வேண்டுமா சேர்?”

“வேண்டியதில்லை. நீ அவனது பற்களைப் பிடுங்கிவிடு. இந்த மைதானத்திற்குள் அவன் எவ்வளவு சத்தம் போட்டாலும் யாருக்கும் கேட்கப் போவதில்லை. உன்னுடைய கையில் அவனைப் பதினைந்து நிமிடங்களுக்கு ஒப்படைக்கிறோம். அவனை எண்ணெய் அடிக்கப்பட்ட ஓணானைப் போல அடக்கி எங்களிடம் திருப்பிக்கொடு!”

டோர்ச் லைட்டை என்னுடைய கையில் கொடுத்துவிட்டு, பஜீரோ வண்டியைக் கிளப்பிக்கொண்டு கட்டளை அதிகாரி புறப்படும் போதே, வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு இன்னொரு வண்டி மைதானத்திற்குள் நுழைந்தது. இரண்டு வண்டிகளும் அருகருகாகச் சந்தித்துக்கொண்ட போது, ஒரேயொரு நிமிடம் இரண்டு வண்டிகளும் நிறுத்தப்பட்டுப் புறப்பட்டன.

என்னருகே வந்து நின்றதும் ஒரு பச்சை வண்ண பஜீரோ வண்டி தான். உள்ளேயிருந்து துப்பாக்கிகளுடன் குதித்த ஆறு அதிரடிப்படை வீரர்கள் ஆறாங்குழியைச் சுற்றிப் பெரிய வட்டமாக நின்றுகொண்டார்கள். இப்போது நான் அந்த வட்டத்திற்குள் இருந்தேன். வண்டியின் விளக்குகள் அணைக்கப்பட்டதும், அதற்குள்ளிருந்து இன்னும் மூன்று இராணுவ வீரர்கள் இறங்கினார்கள். இவர்களையும் நான் முன்பின் பார்த்ததில்லை. எல்லோருமே இளைஞர்கள்தான். எல்லோருடைய கைகளிலும் ஆளுக்கொரு டோர்ச் லைட் இருந்தது. அவற்றின் வெளிச்சத்தில், அவர்கள் வண்டியின் பின்னிருக்கையிலிருந்து ஒரு மனிதனைக் கீழே இறக்கினார்கள்.

அந்த மனிதனின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருந்தன. அந்த மனிதனுக்கு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயதிற்குள் இருக்கலாம். சதைப்பிடிப்பான உடல்வாகு. தலைமுடியை இராணுவத்தினர் போல ஒட்ட வெட்டியிருந்தான். முகம் முழுமையாகச் சவரம் செய்யப்பட்டிருந்தது. அந்த முகம் ஒரு நாட்டுப்புறச் சிங்கள முகம் எனப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. கறுப்பு நிறத்தில் நீளக் காற்சட்டையும், தூய வெள்ளையில் முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். கால்களிலே கறுப்புச் சப்பாத்துகளிருந்தன. கண்டிப்பாக இவனொரு சிறைவாசியாக இருக்க முடியாது. ஒன்றில் இராணுவத்திற்குள் இருந்த உளவாளியாக இருக்க வேண்டும் அல்லது பாதாளக் குழுவைச் சேர்ந்த மாஃபியாவாக இருக்க வேண்டும்.

அவனைக் கொண்டுவந்த மூன்று இராணுவ வீரர்களும் அவனை என்முன்னே விட்டுவிட்டுச் சற்று ஒதுங்கியே நின்றார்கள். மூவரும் அவர்களுக்குள் கூடப் பேசிக்கொள்ளவில்லை. என்னைப் போலவே இவர்களும் வெவ்வேறு முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அந்த மூன்று பேரையும் என்னோடு வைத்துப் பார்த்தால் எருமையோடு சேர்ந்த பசுமாடுகள் போலயிருந்தார்கள். எக்கேடும் கெட்டுப் போகட்டும்! என்னுடைய கட்டளை அதிகாரி எனக்குப் பதினைந்து நிமிடங்களே கொடுத்திருக்கிறார். நான் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்க முடியாது.

நான் அந்த மனிதனுக்கு அருகே சென்று, அவனது உள்ளங்கையைப் பிடித்து, அதில் டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சி, ஆயுதப் பயிற்சி பெற்றதற்கான அடையாளங்கள் உள்ளனவா என்று சோதனை செய்தேன். அப்போது அந்த மனிதன் கேட்டான்:

“என்னுடைய உள்ளங்கையில் மரணத்தைக் குறிக்கும் ரேகைகள் தெரிகின்றனவா?” அவனுடைய குரல் மிக மென்மையாகவும் நிதானமாகவுமிருந்தது.

என்னவொரு அவமரியாதையான கேலிப் பேச்சு! எல்லாப் பாதாளக் குழுச் சண்டியர்களைப் போலவும் இவனும் உயிர்ப் பயம் அற்றவன் போலக் காட்டிக்கொள்ள எத்தனிக்கிறான் என்று நினைத்துக்கொண்டே, இரும்பு உலக்கை போன்ற என்னுடைய கையால் அவனுடைய வாயில் ஓங்கிக் குத்தினேன். நான் கையைத் திருப்பி எடுத்த போது, அந்த முகத்தில் வாய் இருந்த இடத்தில் ஓர் இரத்தக் குழாய்தான் இருந்தது. அதிலிருந்து பீறிட்ட இரத்தம் என்னுடைய முழங்கைவரை பாய்ந்திருந்தது. எப்படியும் பத்துப் பற்களாவது கழன்றிருக்கும். அவன் ஏதோ சொல்ல முயன்றான். ஆனால், முனகலைத் தவிர வேறெதுவும் வெளியே வரவில்லை. அவனுடைய பற்கள் பதிந்து, அவனது நாக்கு பாம்பு நாக்குப் போல இரண்டாகப் பிளந்திருக்கும்.

இரத்த வாசனையை உணர்ந்ததும் எனக்கு வெறி அதிகரித்துவிட்டது. மற்றைய மூன்று இராணு வீரர்களையும் பார்த்து “வாருங்கள்! நொறுக்குங்கள் இவனை” என்று சத்தமிட்டேன். என்னுடைய வெறி, காய்ச்சலைப் போல அவர்களையும் தொற்றியிருக்க வேண்டும். அவர்களும் அந்த மனிதனைத் தாக்கத் தொடங்கினார்கள். “குண்டியால் கொழுப்பு வடியும் இந்த முதலை யார்?” என்று நான் என்னுடைய சகாக்களிடம் கேட்டேன். “தெரியவில்லை… அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை” என்று ஒருவன் பதிலளித்தான்.

நாங்கள் அந்த மனிதனை அவ்வளவு அடித்தும் அவன் மயங்காதது என்னுடைய வெறியை எக்கச்சக்கமாக் கூட்டியது. அவனிடமிருந்து வரும் முனகல் சத்தம் கடைசிவரை நிற்கவேயில்லை. நண்டின் கிண்ணிகளை முறிப்பதைப் போல, நாங்கள் அவனுடைய இருபது விரல்களையும் முறித்துப் போட்டோம். அவனுடைய உடம்பிலிருந்த அத்தனை எலும்புகளையும் சுள்ளிகளை உடைப்பது போல உடைத்தோம். அவனுடைய கைவிரல் நகங்களை நான் என்னுடைய விரல்களாலேயே பிய்த்துப் போட்டேன். என்மீது இரத்தம் தெறிக்கத் தெறிக்க என்னுடைய வெறியும் கூடிக்கொண்டே போனது. நான் அவனுடைய காற்சட்டையை உள்ளாடையோடு சேர்த்துக் கீழிறக்கிவிட்டு, அவனுடைய இரண்டு விதைகளையும் என்னுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்து நசுக்கினேன். அவை அழுகிய ரம்புட்டான் பழங்களைப் போல கூழாகிப் போயின. ஆனால், அவனுடைய முனகல் மட்டும் நிற்பதாகயில்லை. அவன் தன்னுடைய உயிரோடு சேர்த்துக் குரலையும் பிடித்து வைத்திருக்கிறான்.

சரியாகப் பதினைந்து நிமிடங்கள் முடிந்தபோது, இரண்டு வாகனங்கள் வெளிச்சத்தைக் கக்கியவாறே உள்ளே வந்தன. வாகனங்களின் வெளிச்சத்தில் அந்த மனிதன் மல்லாக்கப் படுத்திருந்தான். பச்சை இரத்தத்தில் தோய்ந்து அவனது உடைகள் மினுங்கிக்கொண்டிருந்தன. வாகனங்களிலிருந்து மேஜர் தரத்திலுள்ள ஓர் அதிகாரியோடு இன்னும் பல அதிகாரிகள் இறங்கினார்கள். அந்த மனிதனை நிற்க வைக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. என்னுடன் இருந்த இராணுவ வீர்கள் இருவரும் அந்த மனிதனின் கமுக்கட்டுகளுக்குக் கீழாகத் தங்களது கைகளைக் கொடுத்து, அவனது தோளோடு சேர்த்துப் பற்றிப்பிடித்து அவனைத் தூக்கி நிறுத்தி வைத்திருந்தார்கள். அவனது கால்கள் இடுப்போடு ஒடிந்து பூமியிலிருந்து ஓரங்குல உயரத்தில் தொங்கின. அப்போது அந்த மனிதனின் வலது கை அசைந்து, முழங்கால்கள் வரை இறங்கியிருந்த அவனது காற்சட்டையை மேலிழுக்க முயன்றது. ஆனால், அவனால் முடியவில்லை.

பத்து வெளிச்ச வட்டங்கள் அந்த மனிதனின் மீதிருந்தன. அவனின் கண்கட்டை அவிழ்க்குமாறு மேஜர் உத்தரவிட்டார். நான்தான் அவனது கண்களின் மீது கட்டப்பட்டிருந்த கறுப்புத் துணியை விலக்கினேன். அந்த மனிதனின் மூடிக் கிடந்த கண்கள் மெதுவாகத் திறந்துகொண்டன. மேஜர் தன்னுடைய கையிலிருந்த டோர்ச் லைட்டைத் தனது முகத்தை நோக்கித் திருப்பினார். மேஜரின் முகம் அந்த மனிதனது முகத்திற்கு நேரே இருந்தது. அது எப்படி நிகழ்ந்தது என எனக்கு இன்னும் புரியவேயில்லை. அந்த மனிதனது பிளந்த நாவு எப்படி ஒட்டிக்கொண்டது? அவன் ஒரு குழந்தை பேசுவதைப் போல, நிதானமாக மேஜரிடம் சொன்னான்:

“கடைசியாக நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துவிட்டோம்.”

“அய்யோ… இந்த மனிதன் பேசுவதை நிறுத்தவே மாட்டானா” என்று புலம்பியபடியே மேஜர் தனக்கு அருகிலிருந்த ஒல்லியான இராணுவ அதிகாரியைப் பார்த்தார். அந்த ஒல்லியானவன் நொடிப்பொழுதில் தன்னுடைய இடுப்புப் பட்டியிலிருந்து கத்தியை உருவினான். அப்போது மேஜரின் கையிலிருந்த வெளிச்ச வட்டம் இரத்தில் தோய்ந்திருந்த மனிதனின் இடுப்புக்குக் கீழே இறங்கியது. ஒரே நொடியில் அந்த மனிதனின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு, இரத்தத்தில் ஊறியிருந்த அவனது வாய்க்குள் அது திணிக்கப்பட்டது. மேஜர் தன்னுடைய பிஸ்டலை அவனுடைய வலதுபுற மார்பில் வைத்து நிதானமாகச் சுட்டார். அந்த மனிதனின் உடல் ஒருதடவை உலுங்கிப் போய் நின்றது. அவனது முனகல் அலைந்துபோய் ஆறாங்குழியை நிரப்பிற்று.

ஆறாங்குழியைச் சுற்றியுள்ள தடயங்களை அகற்றவும் சுத்திகரிக்கவுமான பொறுப்பு இரண்டு இராணுவ வீரர்களிடம் மேஜரால் கொடுக்கப்பட்டதும், நாங்கள் அந்த மனிதனது உடலை பஜீரோ வண்டியின் பின்புறத்தில் திணித்துக்கொண்டு புறப்பட்டோம். சில நிமிடங்களிலேயே எங்களுடைய வாகனத் தொடரணி பொரளை மயானத்திற்குள் நுழைந்து சென்றது.

என்னை முகாமிலிருந்து அழைத்து வந்திருந்த கட்டளை அதிகாரியின் வாகனம் ஏற்கனவே மயானத்தில் நின்றிருந்தது. கூரை மட்டுமேயிருந்த தகன மண்டபத்தின் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதும், நாங்கள் அந்த மனிதனது உடலை வண்டியிலிருந்து இறக்கி சீமெந்து நிலத்தில் கிடத்தினோம். அந்த நிலத்தில் அவனைச் சுற்றி இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. அவனது வாயில் திணிக்கப்பட்டிருந்த ஆண்குறியிலிருந்து கருமையாக இரத்தம் வெளியாகி அவனது கடைவாய்களில் கோடாக வழிந்தது. உணர்கொம்பும் சிவப்பு நிற இறக்கைகளும் கொண்ட வண்ணத்துப்பூச்சி போன்று அந்த மனிதன் கிடந்தான்.

தகன மண்டபத்தின் எல்லா விளக்குகளும் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஆனால், எரிவாயு உலையின் வாசல் இரும்புக் கதவால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் இருபது பேர்வரை நின்றிருந்தோம். அங்கே லான்ஸ் கோப்ரல் வீரசிங்கவைப் பார்த்தேன். அவனது தோளில் எப்போதுமிருக்கும் பெட்டி இப்போதும் தொங்கியது. உள்ளே வீடியோப் படப்பிடிப்புக் கருவிகளை வைத்திருப்பான். அவனும் என்னைப் போலவே ஜே.வி.பி. அனுதாபி என்று சொல்வதைவிட, அவனை ஜே.வி.பியின் தீவிர விசுவாசி எனச் சொல்வதே சரியானது. சார்ஜன்ட் அத்தநாயக்கவுடன் சில தடவைகள் எங்களது முகாமுக்கு வந்து போயிருக்கிறான்.

தகன மண்டபத்தில் பணியாற்றும் கிழவனை அப்போதுதான் எங்கிருந்தோ பிடித்துவந்தார்கள். இத்தனை இராணுவ வீரர்களைக் கண்டதுமே அவனது தூக்கம் ஓடிப் போயிருக்கும். வந்த கிழவன் தரையில் கிடந்த உடலைக் கண்டதும், கீழே குனிந்து அந்த உடலை உற்றுப் பார்த்தான். பின்பு நிமிர்ந்து நின்று சொன்னான்:

“இந்தத் தகனமேடை என்னுடைய பொறுப்பில் இருக்கிறது. என்னுடைய கடமையை நான் சரிவரச் செய்ய வேண்டும். குப்பையை எரிப்பது போல ஒரு மனிதனை எரித்துவிட முடியாது.”

“அடே… புழுத்த கிழட்டுக் குரங்கே! நீயுமா பேசுகிறாய்” என்றவாறே ஓர் அதிகாரி தன்னுடைய பிஸ்டலைக் கிழவனின் தலையில் வைத்தார். அதற்குப் பின்பு அந்தக் கிழவன் எதுவுமே பேசவில்லை. இடுப்பிலிருந்த சாவியை எடுத்து அதிகாரியின் கையில் கொடுத்தான். எரிவாயு உலையை எப்படி இயக்குவது என்பதையும் விளக்கிச் சொல்லிவிட்டுத் தரையில் உட்கார்ந்துகொண்டான். அவனது கண்கள் அந்த எரிவாயு உலையின் மீதேயிருந்தன.

உத்தரவு கிடைத்தும், நானும் இன்னொருவனுமாக வண்ணத்துப்பூச்சி போலக் கிடந்த உடலின் கால்களைப் பிடித்துக் கொறகொறவென எரிவாயு உலை வரைக்கும் இழுத்துச் சென்றோம். பின்பு அந்த உடலைத் தூக்கி, பாண் சுடும் போறணையின் வாயைப் போலவேயிருந்த எரிவாயு உலையின் வாசலுக்குள் வீசினோம். என்னுடன் கூட இருந்த நடுக்கம் பிடித்தவன் நோண்டி வேலை செய்துவிட்டான். உடல் இலக்குத் தப்பி வாசற் சுவரில் மோதி வெளியே விழுந்தது. அதனது வாயிலிருந்த ஆண்குறி மட்டும் தெறித்து உலை வாய்க்குள் போய்விட்டது. “நாய்களே! உங்களால் ஒரு வேலையையும் சரியாகச் செய்ய முடியாதா?” என்றொரு சத்தம் எழுந்தது. அது என்னுடைய கட்டளை அதிகாரியின் குரல். நான் ரோஷம் தலைக்கேற என்னருகில் நின்றவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, என்னுடைய இரண்டு கைகளாலும் அந்த உடலை வாரித் தூக்கினேன். அப்போது என் கைகளிலிருந்த அந்த மனிதனின் வாயிலிருந்து சத்தமான முணுமுணுப்பு எழுந்தது. அந்த இரவில் அங்கிருந்த அனைவருக்குமே அந்தச் சத்தம் கேட்டது.

எனக்கு அருகே வந்து, அந்த மனிதனின் முகத்தை உற்றுப் பார்த்த தலைமைத் தளபதி “இவன் பேசுவதை நிறுத்தவே போவதில்லை” என்று கிட்டத்தட்டப் புலம்பினார். நான் அந்த மனிதனை உலையின் வாய்க்குள் நிதானமாகத் திணித்தேன்.

உடல் முழுவதுமாக எரிந்து, கைப்பிடி சாம்பலாகும் வரை நாங்கள் சிலர் அங்கேயே நின்றிருந்தோம். எனக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. லான்ஸ் கோப்ரல் வீரசிங்கவிடம் சென்று ‘சிகரெட் இருக்கிறதா’ எனக் கேட்டுச் சைகை செய்தேன். அவன் முன்னே செல்ல, நான் அவனைத் தொடர்ந்தேன். சற்றுத் தூரத்தில் நின்றிருந்த பெரிய மரத்தின் மறைவில் நாங்கள் ஒதுங்கியதும், தன்னுடைய தோளில் தொங்கிய வீடியோப் பெட்டியின் பக்கவாட்டிலிருந்த சிறிய பைக்குள்ளிருந்து வீரசிங்க சிகரெட்டுகளையும் லைட்டரையும் எடுத்தான்.

இருவரும் அமைதியாகப் புகைத்துக்கொண்டிருக்கும் போது, வீரசிங்க தலையை உயர்த்தி மேலே பார்த்தவாறே மெதுவாக என்னிடம் கிசுகிசுத்தான்:

“தோழர் ரோஹணவுக்கு இப்படி நிகழும் என நான் எதிர்பார்க்கவேயில்லை…”

“என்ன சொன்னாய் வீரசிங்க… யார்?”

“இப்போது நீ நெருப்புக்குள் திணித்த தோழர் ரோஹண விஜேவீரவைப் பற்றித்தான் சொல்கிறேன்.”

நான் மரத்திலிருந்து விலகி, தகன மண்டபத்தைப் பார்த்தேன். கூரையிலிருந்து அடர் புகை எழுந்துகொண்டிருந்தது.

“நீ உண்மையைத்தான் பேசுகிறாயா வீரசிங்க?”

“யக்கடயா… இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, திம்பிரிகஸ்ஸயா இராணுவக் கூட்டுச் செயற்பாடு மையத்தில் வைத்துத் தோழர் ரோஹணவின் இறுதியுரையை நான்தான் வீடியோவில் பதிவு செய்தேன்.”

அப்போது, என்னுடைய மூளையில் சுரந்த உணர்ச்சிகளை என்னவென்று என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஒரு கனத்த முனகலொன்று என்னிடமிருந்து வெளிப்பட்டதோடு எல்லாம் முடிந்து போயிற்று.

வீரசிங்க இன்னும் இரண்டு சிகரெட்டுகளை எடுத்து, ஒன்றை எனக்கும் கொடுத்துவிட்டுச் சொன்னான்:

“நான் அந்த மையத்தின் மாடியிலிருந்த, மூன்று கதவுகளுள்ள பெரியதொரு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட போது, நாற்காலியில் நிமிர்ந்தும், இலேசான திகைப்போடும் உட்கார்ந்திருந்த மனிதரைச் சூழவரப் பதினைந்து இராணுவ அதிகாரிகள் நின்றிருந்தார்கள். அப்போதுதான் இராணுவப் பொலிஸின் புகைப்படப் பிடிப்பாளர் இந்திரானந்த டி சில்வா தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் மெதுவாக ‘யாரிந்த மனிதர்?’ என்று கேட்டேன். அதற்கு இந்திரானந்த இப்படிச் சொன்னார்:

‘இங்கே கீழ்த்தளத்திலுள்ள அறையொன்றில் எச்.பி. ஹேரத் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். அவரையும் நான் புகைப்படங்கள் எடுத்தேன். அப்போது ஹேரத் என்னிடம் முணுமுணுப்பாக, இவர்கள் உண்மையிலேயே தோழர் ரோஹணவைப் பிடித்துவிட்டார்களா? என்று கேட்டார். ஹேரத் பாதி இறந்துவிட்டார். அவரது முகம் வீங்கி, உடல் நீலம் பாரித்துள்ளது.’

யக்கடயா! சத்தியமாகச் சொல்கிறேன்… இந்திரானந்த இதைச் சொல்லும் போது, நான் முதலில் நம்பவேயில்லை. என்னுடைய அதிகாரி நாற்காலியில் உட்கார்ந்திருந்த மனிதரிடம் சென்று ‘விஜேவீர…இன்னும் சில நிமிடங்களில் வீடியோக் கமெரா தயாராகிவிடும்’ என்று ஆங்கிலத்தில் சொன்னார். அப்போது ரோஹண விஜேவீர அமைதியாக, சிங்களத்திலேயே அந்த அதிகாரியிடம் கேட்டார்:

‘உங்களுக்கு ரஷ்ய மொழி தெரியுமா?’

அதிகாரி இல்லையெனத் தலையசைத்துக் கோணலாக இளிக்கவே ‘என்னுடைய இரண்டாவது மொழி ரஷ்யன்’ எனச் சொல்லிவிட்டு, தன்னுடைய ரஷ்யா வாழ்க்கை, அங்கே லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்தது என்றெல்லாம் ரோஹண பேசிக்கொண்டே போனார். நான் படப்பிடிப்புக்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தாலும், காதுகளை அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த உரையாடல்களின் மீதே குவித்திருந்தேன். உண்மையில் ரோஹண மட்டும்தான் அங்கே பேசிக்கொண்டிருந்தார். தன்னுடைய கொம்யூனிஸ்ட் கட்சி அனுபவம், ஜே.வி.பியை ஆரம்பித்த சூழல், முதலாவது புரட்சியின் போது கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணக் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தது என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார். அப்போது அறைக்குள் நுழைந்த பொலிஸ் ஜெனரல் வாத்துப் போல நடந்து வந்து ரோஹணவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, திடீரென ரோஹணவின் பிடரியைப் பற்றிப் பின்னோக்கி இழுத்தார். தன்னுடைய முகத்தை அண்ணாந்து பொலிஸ் ஜெனரலின் முகத்தைப் பார்த்த ரோஹண விஜேவீர ‘இப்படி அற்பமாக நடந்துகொள்ளக் கூடியவர் உங்களைப் போன்ற ஒருவராகத்தான் இருப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்’ என்றார். பொலிஸ் ஜெனரலின் முகம் நாய் மூஞ்சியாகிவிட்டது. நாயை அரசனாக்கினாலும் அது குரைக்காமல் இருக்காது யக்கடயா… இதற்குள் நான் ரோஹணவின் தலைக்குப் பின்னால் திரையைக் கட்டியும், அவருக்கு முன்னாலொரு சிறிய மேசையை வைத்தும், விளக்குகளைப் பொருத்தியும் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துத் தயாராகிவிட்டேன். நான் தோழர் ரோஹணவுக்கு முன்னால் கமெராவோடு வந்தபோது, அவர் ‘நான் குறைந்தது இரண்டு மணிநேரங்கள் பேச வேண்டியிருக்கும். தொடர்ச்சியாகப் பதிவு செய்ய முடியுமல்லவா?’ என்று என்னிடம் கேட்டார்.

ஆனால், அது அப்படி நடக்கவில்லை. பொலிஸ் ஜெனரல் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத் துண்டை எடுத்து ரோஹணவின் முன்னால் மேசையில் வைத்துவிட்டு, அதில் எழுதப்பட்டிருப்பதை மட்டுமே வீடியோக் கமெராவின் முன்னால் பேச வேண்டும் என்றார். ரோஹண அந்தத் தாளைத் தொட்டுக்கூடப் பார்க்காமல், கசப்பான புன்னகையுடன் அமைதியாக இருந்தார். அவரருகே சென்ற இராணுவத் தலைமைத் தளபதி ‘விஜேவீர! உங்களது மனைவியும், அய்ந்து குழந்தைகளும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இந்தத் துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஆறு வரிகளையும் பேசப் போவதில்லை என்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களது மனைவி சித்திராங்கனியின் வயிற்றிலிருக்கும் ஆறாவது குழந்தையும் சேர்த்தே சுட்டுக் கொல்லப்படும்’ என்றார். அப்போது ரோஹண என்னை மட்டுமே பார்த்தார். அவர் தன்னுடைய வாழ்நாளில் ஆற்றிய உரைகளில் மிகச் சிறியது அதுதான். எல்லாவிதத்திலும்!”

நான் தகன மேடையை நோக்கி நடந்தபோது, எரிவாயு உலை தணிந்திருந்தது. என்னால் எதையும் சிந்திக்க முடியாதவாறு எனது மண்டை தகித்துப் புகைந்துகொண்டிருந்தது. அதிகாலையில் முகாம் திரும்பி, குளித்துவிட்டுப் படுத்தவன் பிற்பகலில் தான் கண்விழித்தேன். படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனம் ஏவாமல், மாலை நான்கு மணிவரை கட்டிலிலேயே படுத்திருந்தேன். தலைநகரத்திலிருந்து வெளிவரும் தினப் பத்திரிகைகள் மாலையில் சிறப்புத் தாள்களை வெளியிட்டிருந்தன. என்னுடைய கைக்குக் கிடைத்த ‘திவயின’ பத்திரிகையில் அரைப் பக்கத்திற்கு ரோஹண விஜேவீரவின் புகைப்படம் இருந்தது. கீழே இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை இவ்வாறு வெளியாகியிருந்தது:

நேற்று, 12.11.1989 பிற்பகலில், கண்டி மாவட்டத்தில், உலப்பெனே தேயிலைத் தோட்டத்து வீட்டில் மறைந்திருந்த ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர விஷேட பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, உடனடியாகவே மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைகளுக்கு ரோஹண விஜேவீர முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார். அவராகவே முன்வந்து வீடியோ மூலமாக ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, படையினரிடம் சரணடையுமாறு ஜே.வி.பி. உறுப்பினர்களை ரோஹண விஜேவீர கேட்டுக்கொண்டார். பின்பு, கொழும்பிலுள்ள ஜே.வி.பியின் மறைவிடத்தைக் காட்டிக்கொடுப்பதற்காக அவர் படையினரை அழைத்துச் சென்றார். அந்த மறைவிடத்தில் ஒளிந்திருந்த ஜே.வி.பியின் பொலிட்பீரோ உறுப்பினர் எச்.பி. ஹேரத் படையினரிடம் சரணடைவது போன்று நாடகமாடியபடியே, திடீரெனத் துப்பாக்கியை எடுத்து ரோஹண விஜேவீரவைச் சுட்டுக் கொன்றார். படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது, எச்.பி. ஹேரத் கொல்லப்பட்டார். அவசரநிலைச் சட்ட விதிகளின்படி இரு உடல்களும் உடனடியாகவே படையினரால் உரிய முறையில் தகனம் செய்யப்பட்டன.

அந்தப் பத்திரிகைத் தாளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். இப்போது என் முன்னால் இரு அபாயங்கள் இருப்பதை நான் உணர்ந்தேன். நான் ஜே.வி.பிக்கு அனுதாபியாக இருந்தது இராணுவத்தில் சிலருக்காவது தெரியும். அவர்களில் யாராவது ஒருவர் கொடுக்கும் தகவலின் மூலம் நான் கைதுசெய்யப்பட்டுக் காணாமலாக்கப்படலாம். எரிவாயு உலைகளை எப்படி இயக்குவது என்பதை இப்போது அதிகாரிகள் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

இன்னொருபுறத்திலும் எனது உயிருக்கு ஆபத்து உண்டு. நான் ரோஹண விஜேவீரவை அரைகுறை உயிரோடு உலைக்குள் திணித்ததை, ஜே.வி.பி. விசுவாசியான லான்ஸ் கோப்ரல் வீரசிங்க பார்த்திருக்கிறான். அவன் மூலமாக இந்தச் செய்தி ஜே.வி.பிக்குச் சென்றால், அவர்கள் நிச்சயமாக என்னைப் பழிதீர்ப்பார்கள். ஜே.வி.பியின் சாதாரண உறுப்பினரான மனம்பேரி கொலைக்குப் பழிதீர்ப்பதற்காகப் பதினேழு வருடங்கள் காத்திருந்து, இராணுவத் தொண்டர் படையைச் சேர்ந்த ரத்நாயக்கவைக் கொன்றவர்கள் அவர்கள். பள்ளத்தை நோக்கித்தான் தண்ணீர் ஓடிவரும். பெரிய மனிதர்கள் செய்யும் தவறுகள் கடைசியில் சிறிய மனிதர்கள் மீதே சுமத்தப்படும். நான் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்தேன். எல்லா வித்தைகளிலும் பெரிய வித்தை தன்னைக் காப்பாற்றிக்கொள்வதுதான்.

எனது அடையாளங்களை அழித்துக்கொண்டு வாழும் இந்த முப்பத்து மூன்று வருடங்களில், அப்படியொன்றும் பெரிய துன்பத்தையெல்லாம் நான் அனுபவித்துவிடவில்லை. இந்த வாழ்க்கை முறைக்கு இணக்கமாகிவிட்டேன். இலங்கையிலிருக்கும் என்னுடைய இளைய சகோதரியிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆரம்பத்தில் சில தடவைகள் என்னைத் தேடி யார் யாரோ வீட்டுக்கு வந்தார்களாம். இப்போது அப்படி எதுவுமில்லை. எல்லோருமே என்னை மறந்துவிட்டார்கள். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு மறுபடியும் ஞாபகமூட்ட லான்ஸ் கோப்ரல் வீரசிங்க முயற்சிக்கிறான் போலிருக்கிறது.

அன்றைய இரவின் இரகசியம், அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இருவராலேயே நீண்ட பல வருடங்கள் கழித்து வெளியே கசியவிடப்பட்டது. முதலில் அரைகுறையாக வாயைத் திறந்தவர் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கே. அவர் எழுதிய ‘ஒரு படைவீரனின் கதை’ என்ற நூலில் அன்றைய இரவைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, தனக்கும் ரோஹண விஜேவீரவின் கொலைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நழுவிவிடுகிறார். தன்னுடைய சேவைக்காக ரண விக்ரம பதக்கம், ரண சூர பதக்கம், உத்தம சேவா பதக்கம் எனப் பல விருதுகளை வாங்கித்தான் சரத் முனசிங்கே இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்பு நாடாளுமன்ற உறுப்பினராகி, துணைச் சபாநாயகர் பதவிவரை உயர்ந்தார். இரண்டாவதாக வாயைத் திறந்தது இராணுவப் பொலிஸ் பிரிவிலிருந்த இந்திரானந்த டி சில்வா. அவரும் தனக்கு ஒருபகுதி உண்மைதான் தெரியும் எனச் சொல்லி நல்லபிள்ளைக்கு நடித்திருக்கிறார். அவருக்கு ஜே.வி.பி. சார்பாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்போது லான்ஸ் கோப்ரல் வீரசிங்க ஓர் இணையத்தளத்திற்கு வழங்கியிருக்கும் நேர்காணலில், ரோஹண விஜேவீரவின் கொலைக்குத் தான் நேரடிச் சாட்சியமென்றும், அந்தப் படுகொலையில் பங்குபற்றிய அனைவரின் பெயர்களையும் தான் விரைவிலேயே முழுமையாக வெளியிடப் போவதாகவும் சொல்லியுள்ளான். முப்பத்து மூன்று வருடங்களாக மூடி வைத்திருந்த அவனுடைய வாயை இப்போது அகலத் திறப்பதால் என்ன நன்மை விளையப் போகிறது என நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்! ஒருவேளை அவனுக்கும் ஏதாவது ஒரு கட்சியில் பதவி கிடைக்கலாம். எப்படியோ தொலையட்டும்!

ஆனால், லான்ஸ் கோப்ரல் வீரசிங்கவிடம் நான் சொன்னதாக ஒரு தகவலைத் தெரிவித்துவிடுங்கள். என்னுடைய பெயர் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை, ‘யக்கடயா’ எனச் சொன்னால் வீரசிங்க புரிந்துகொள்வான். அது என்னவென்றால், அவன் என்னுடைய பெயரை எங்காவது வெளிப்படுத்தினால், நான் இலங்கைக்குச் சென்று, அவனது தலையைத் திருகி, அவனை நிச்சயமாகவே கொன்றுவிடுவேன்.

எனக்கு இப்போது நேரமாகிறது. நான் கடலுக்குள் செல்ல வேண்டும். பூமிக்குத் திரும்ப நாட்களாகும்.

3 thoughts on “ஆறாங்குழி

  1. மூமினில் படித்த நினைவு மன்டோவுக்குப் பிறகு ஷோபாவுக்குதான் நான் அஞ்சுவேன்

  2. எல்லா வித்தைகளிலும் பெரிய வித்தை தன்னை காத்துக்கொள்ளல் மட்டுமே என்பது யக்கடயா மட்டும் இல்லை , நெருக்கடி நேரங்களில் மனித இனம் கொள்ளும் வேட்கை. உலகின் அனைத்து இராணுவமும் கண்மூடித்தனமானது, காட்டுமிராண்டிதனமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *