கற்பூரப் பறவையின் கதைகள்

அறிவித்தல்கள் கட்டுரைகள்

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

“நான் எனது ஒன்பதாவது வயதில் UZI என்ற எனது முதலாவது துப்பாக்கியை ஏந்தி ஆயுதப் போராளியானேன், கொலைகாரியானேன்.போர்க்களங்களில் நாங்கள் எப்போதும் முன்வரிசையில் பலிக்கடாக்களாக அனுப்பப்பட்டோம். என்னையொத்த வயதுடைய -ஆகக் குறைந்த வயது ஆறு- போராளிகளின் மத்தியில் ஒரு போட்டி மனோபாவமே வந்துவிட்டது. மிகவும் கெட்டித்தனமாகக் கொலை செய்பவர்கள், கைதிகளாக பிடிபட்டவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்யத் தெரிந்தவர்கள் பாராட்டப்பட்டார்கள். பயந்து பின்வாங்கியவர்கள் பரிகசிக்கப்பட்டார்கள்.எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை, எங்கள் பொறுப்பாளர்கள், உயரதிகாரிகள் எங்கள் தோள் தொட்டு பாராட்டுவதற்காக அவர்கள் எங்களைப் பார்த்துப் புன்னகைப்பதற்காக மேலும் மேலும் கொடியமுறைகளில் கொலைகளைச் செய்தோம்.எங்கள் அம்மாக்களை எங்களிடமிருந்து பிரித்துக்கொண்டு, கனமான துப்பாக்கிகளை அவர்கள் எங்களுக்குக் கொடுத்தார்கள். எங்கள் துப்பாக்கிகள் தொலைக்கப்படுவதிலும் பார்க்க எங்கள் மரணங்களே விரும்பப்பட்டன. நாங்களும் துப்பாக்கிகளும் ஓருயிர் ஈருடலானோம். இரவுகளில் நானும் சக குழந்தைப் போராளிகளும் எங்களது உயர் அதிகாரிகளால் வன் புணர்சிக்குள்ளாக்கப்பட்டோம். அவர்கள் எங்களுக்கு ஆயுதங்கள் வழங்கினார்கள், அவர்களது போரை எங்கள் மேற் திணித்தார்கள், அவர்கள் எங்களுக்கு கொலைசெய்ய, சித்திரவதை செய்யப் பழக்கினார்கள், எங்களைத் தங்கள் படுக்கைகளாக்கினார்கள்” என்கிறார் சைனா.

சைனா கெய்ரெற்ஸி 1995ல் NRAயிலிருந்து தப்பித்து மூன்று கிழமைகள் நீண்ட பஸ் பயணத்தில் கென்யா- தன்சானியா- ஸாம்பியா- சிம்பாவே ஊடாகத் தென்னாபிரிக்காவில் தஞ்சம் புகுந்தார். நான்கு வருடங்கள் தென்னாபிரிக்காவில் கழிந்தன. இக் காலகட்டத்தில் சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினரால் பின் தொடரப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆறு மாதகாலம் இரகசிய இடமொன்றில் அடைக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளானார். அங்கிருந்தும் தப்பித்த சைனா நீண்ட போராட்டங்களின் பின், 1999 ம் ஆண்டு உடலும் மனமும் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் அய்க்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையத்தால் டென்மார்க்குக்கு அழைத்து வரப்பட்டார்

***
குழந்தைப்போராளி வாழ்க்கையை எழுதத் தொடங்கிய சூழலை சைனா இப்படிக் குறிப்பிடுகிறார்:

“டென்மார்க்குக்கு வந்த ஆரம்ப காலங்களில், ஏன் நீண்ட காலங்களாக ‘No’ என்னும் சொல்லை நான் சொல்வதேயில்லை. எங்கே நான் ‘இல்லை’, ‘மாட்டேன்’ என்று சொன்னால் முன்னர் போல மீண்டும் தண்டனைக்குள்ளாக்கப் படுவேனோ என்று பயந்ததினால் ‘Yes Sir’ என்றே எப்போதும் சொல்லி வந்தேன். எனது நீண்ட கொடிய இறந்த காலங்களிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. கண்களை மூடினால் கொலைகள், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட அந்த மனிதர்களின் உயிர்ப் பிச்சை கேட்கும் கண்கள், என்னை வதைத்துக் கொண்டேயிருந்தன.எப்பொழுதும் பயந்தவளாக, பயங்கரக் கனவுகளிலிருந்து விழித்தெழுந்தவளாக எனது இறந்த காலங்களிலிருந்து விலக இயலாமல் மிகவும் சிரமப்பட்டேன்.எனது மனநல மருத்துவர், சிகிச்சையின் ஒரு பகுதியாக ‘உனக்கு உண்டான வலிகளை, உனது உணர்வுகளை, உன் அச்சங்களை, உன் மன ஓட்டங்களையெல்லாம் எழுது’ என்று கேட்டுக் கொண்டதன் பெயரில்- சிகிச்சைக்காக- நான் எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு முறை எழுதும் போதும் என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடும். என் கண்ணீர்த்துளிகள் பட்டுத் தெறிக்காத சொற்களேயில்லை. 150 பக்கங்கள் எழுதிய நிலையில் எழுதியவற்றை என் மருத்துவரிடம் காட்டினேன். அவர் ‘நீ Auto Biography எழுதிக் கொண்டிருக்கிறாய்’ என்றார்.”

***
இன்று உலகம் முழுவதும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைப் போராளிகள் யுத்தமுனைகளில் தள்ளப்பட்டும் பாலியல் வதைகளுக்குள்ளாக்கப்பட்டும் இயல்பான குழந்தைத்தனங்கள் சிதைக்கப்பட்டும், ஏன்? எதற்கு? யாருக்கு? என்று தெரியாமலேயே சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். குழந்தைப் போராளிகளின் வரலாற்று மௌனத்தை இந்தத் தன்வரலாறு நூல் மூலம் சைனா கெய்ரெற்ஸி உடைத்திருக்கிறார். 2002ல் டொச் மொழியில் வெளியிடப்பட்ட இந்நூல் தொடர்ந்து ஆங்கிலம்,டெனிஸ், ஸ்பானிஷ், டச், செக், பிரெஞ்சு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. Miramax நிறுவனம் இந்நூலைத் திரைப்படமாகவும் தயாரித்து வருகிறது.

இந்நூலை ‘டொச்’ மொழியிலிருந்து தமிழிற்கு குழந்தைப்போராளி’ என்ற தலைப்பில் தேவா மொழியாக்கம் செய்திருக்கிறார். விரைவில் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வரவிருக்கும் இந்நூலிலிருந்து ஒரு அத்தியாயம் கீழே வருகிறது:

கற்பூரப் பறவையின் கதைகள்-satiyakadatasi

ல வாலிப வயதுப் போராளிகளால் நாங்கள் போரில் வெற்றி பெறுவோமென நம்பமுடியவில்லை. தங்களது தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணிப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்களின் முறை வருவதற்காகச் சாவு காத்துக்கொண்டிருப்பதும் அவர்களிற்குத் தெரியும். சாவின் நிழல் அவர்களின் தலைகள் மீது கவிந்திருந்தன. அவர்களில் பலர் NRAயிலிருந்து தப்பியோடுவதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். குழந்தைப் போராளிகளின் கதையோ வேறு மாதிரியானது. எங்களால் அப்போது நாங்கள் எதிர்கொண்டிருந்த ஆபத்துகளின் பரிமாணங்களைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. தவிரவும் குழந்தைப் போராளிகளின் விசுவாசம் எல்லையற்றது. இறுதி வெற்றி குறித்து அவர்கள் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்களுக்கு NRAயை விட்டால் போக்கிடமுமில்லை. போர் முனைகளில் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பற்றிப் பெரியவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது. அவர்கள் களங்களில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே தங்களது முழுச் சக்தியையும் செலவழித்தார்கள். எதிரிக்குப் பதில் சொல்வதற்குக் குழந்தைப் போராளிகள் நாங்களே களங்களின் முன் வரிசையில் நிறுத்தப்பட்டடோம்.

***
சில நாட்கள் கழித்து நானும் இன்னும் ஐந்து தோழர்களும் ஐந்தாவது விசேட படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டோம். ஐந்தாவது விசேட படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான ஸ்டீபன் கசாக்கா என்னுடன் வந்திருந்த இரண்டு தோழர்களைத் தனது மெய்ப்பாதுகாப்பாளார் அணிக்குத் தேர்வு செய்தார். தலைவர்களும், தளபதிகளும், உயரதிகாரிகளும், தங்கள் மெய்ப் பாதுகாப்பாளர்களாகப் பெரும்பாலும் குழந்தைப் போராளிகளையே தேர்ந்தெடுப்பார்கள். குழந்தைப் போராளிகள் கேள்விகளைக் கேட்பதில்லை. நல்லது கெட்டதைப் பகுத்துணர முடியாத, மூளைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தைகள் நூற்றுக்கு இருநூறு வீதம் விசுவாசத்தைக் காட்டுவார்கள்.

குழந்தைப் போராளிகள் எல்லாவித அட்டூழியங்களிலும் பங்கெடுத்துக் கொள்வார்கள். பல குழந்தைகளிற்குக் கொலையும் சித்திரவதையும் மிகப் பிடித்தமான வேலைகள். கொலைகளாலும் சித்திரவதைகளாலும் தங்களது தளபதிகளின் நன்மதிப்பைக் குழந்தைகளால் சீக்கிரமே பெற்றுவிட முடியும். போர்க் கைதிகளையும் உளவாளிகள், துரோகிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களையும் குரூரமாகச் சித்திரவதை செய்தும், புதை குழிகளுக்கு அனுப்பியும் ஒரேநாளில் இராணுவப் படிநிலைகளை ஒரே தாவாகத் தாவி உயரே சென்று விடக் குழந்தைகளால் முடியும். போர்க் கைதிகளுக்கு நாங்கள் இழைக்கும் உச்சபட்சச் சித்திரவதைகள் எதிர் காலத்தில் எங்கள் உளவியலை எவ்வாறு பாதிக்கப்போகின்றன என்பதை அறியாத குழந்தைகளாக நாங்களிருந்தோம். அந்தக் கொடூரம் வாழ்நாள் முழுவதும் எங்களை வதைத்துக்கொண்டேயிருக்கும்.

நாங்கள் தலைவரின் பெயரால் அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வகை தொகையின்றி அட்டூழியங்களைச் செய்தோம். பதிலுக்கு அவர் எங்கள் மீதேறிச் சவாரி விட்டார். நாங்கள் தலைவரால் சாவதற்கென்றே வளர்க்கப்பட்டோம். நாங்கள் கற்பூரத்தால் வார்க்கப்பட்ட பறவைகள். எங்களைப் போன்ற சபிக்கப்பட்ட குழந்தைகளிடம் இயல்பான மன வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா?

வெளிப் பார்வைக்கு நாங்கள் குழந்தைகள். ஆனால் எங்களின் மறுபக்கமோ முற்றிலும் வேறுபட்டது. எந்த மானுட விழுமியங்களிற்குள்ளும் அடங்காத குழந்தைகள் நாங்கள். எப்போது எங்கு பற்றும்? எந்தத் திசையில் திரும்பும்? எனக் கணிக்க முடியாத காட்டுத் தீ போல நாங்கள் நெருப்பெடுத்து நின்றோம். எங்களிடம் மிக அடிப்படை உணர்வுகளான பசி, தாகம், குளிர், வெப்பம் ஆகியவற்றைத் தவிர மற்றெல்லா உணர்வுகளும் மரத்துப் போயிருந்தன. நாங்கள் இயந்திரங்களைப் போலத் தலைமையின் கட்டளைகளைக் கேள்விகளேயில்லாது நிறைவேற்றிக்கொண்டிருந்தோம். சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்ட, மரத்துப் போன நிலையிலிருந்து நாங்கள் இம்மியளவேனும் விடுபடுவதாகத் தளபதி கருதுவாரானால் நாங்கள் உடனடியாகப் போர்முனைக்குச் சாவதற்காக அனுப்பப்படுவோம். ஏனெனில் நாங்களில்லாவிட்டால் தளபதியின் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் சாட்சிகளும் இல்லை.

எங்களில் பலர் இப்படிப் போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டு அழிந்து போனார்கள். எங்களது தலைவருக்கும் தளபதிகளுக்கும் அடிமட்டப் போராளிகளைப் பற்றி உண்மையிலேயே அக்கறையுண்டா? அல்லது நாங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் இவர்களுக்குக் கவலையில்லையா? என்ற கேள்விக்கான பதிலை நான் தேடிக்கொண்டேயிருந்தேன். தலைமைப் பொறுப்புக்களிலிருந்தவர்களில் ஏறத்தாழ எல்லோருமே அதீத சுயநலப் பிராணிகளாகயிருந்தனர்;. தங்களுடைய தனிப்பட்ட நலன்களைத் தவிர வேறொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறையில்லை. நாட்டின் அதிகார மையத்தை விரைந்து கைப்பற்றிக் கொள்வதும் அதன் மூலம் கொழுத்த பணக்காரர்களாகி விடுவதுமே அவர்களின் ஒரே கொள்கையாயிருந்தது. அவர்களின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொண்டிருந்த போராளிக் குழந்தைகளுக்கு அவர்களது இதயத்தில் எந்த இடமுமில்லை.

எங்களின் மேதகு தலைவர் யோவேரி முசேவெனியின் இதயத்தில் கூட எங்களுக்கிடமில்லை. எந்தச் சர்வாதிகாரிக்கு எதிராகப் போரிட்டாரோ அந்தச் சர்வாதிகாரியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சர்வாதிகாரியாக எதிர்காலத்தில் யோவேரி முசேவெனி மாறுவார் என்பதை அன்று நான் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை.

13 thoughts on “கற்பூரப் பறவையின் கதைகள்

  1. தங்களை விட உயரமான துப்பாக்கியின் சுமையில் அமிழ்ந்து கொண்டு இளமை காயடிக்கப்பட்ட இந்த குழந்தைகள் வளர்ந்தவர்களின் சுயனலத்திற்கு போராட்டம் விடுதலை என்ற பேரில் எவ்வாறு களப்பலியாகிறார்கள் என்பதற்கு இந்த் குழந்தையின் வாக்கு மூலம் ஒரு சாட்சி. குழந்தைகளின் மனங்களில் எவ்வாறு குரூரம் விதைக்கப்படுகிறது.நல்லது கெட்டது தெரியாத இந்த குழந்தைகள் எவ்வாறு வயது வந்தவர்களின் சுயனலத்தை திருப்தி படுத்த தங்களை தயார்பண்ணுகின்றார்கள் என்பது பற்றி இச் சாட்சியம் பேசுகிறது. சமூக உணர்வுள்ள அனவரும் படிக்க வேஎண்டிய கைநூல் இது.

  2. I first time saw satiyakadatasi. very nice & good. especialy karpoora paravaiyin kathai is good work. 8 to 16 years boys & girls affected by the power person worldwide. This is the most immpartant work & good traslation. I will espect book format soon from karuppu pradigal.

  3. என்னதான் நல்லநோக்கமாக இருந்தாலும் அபிப்பிராயம் சொல்வது ஆசிரியா;களுக்கு பிடிக்காது என்பதை மீண்டும் ஒருமுறை உணா;ந்துகொண்டேன்.

  4. அனைத்து விவாதங்களிலும் பங்கு கொள்ளும் பலர் கற்பூர பறவையின் கதைகேட்டு வாய் மூடி மெளனமாயிருப்பதன் தாற்பரியம் என்னவோ.

  5. //**அனைத்து விவாதங்களிலும் பங்கு கொள்ளும் பலர் கற்பூர பறவையின் கதைகேட்டு வாய் மூடி மெளனமாயிருப்பதன் தாற்பரியம் என்னவோ.**//

    கிருஷாந்தி, சாரதாம்பாள், ஃபாதர்.பஸ்டியன்ன், வங்காலையில் தூக்கிலிடப்பட்ட குழந்தைகள் போன்றவர்களின் கதைகளையும் ஆங்கிலத்தில் எழுதி மொழிபெயர்த்து யுனெஸ்கோ பரிசுக்கு அனுப்பலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ????

  6. கற்பூர பறவையின் கதை ஒத்த குழந்தைகள் இங்கும் உள்ளன… நிச்சயமாக நம்பலாம்..நிச்சயமாக நம்பலாம்..

    எச்.றிஸ்வான்> காவத்தமுனை

  7. துப்பாக்கி முனையில் வாழும் குழந்தை போராளிகள் ஒவ்வாருவருக்கு பின்னாலும் உள்ள கற்பூரப் பறவையின் கதையையும் படித்தால்……………

  8. இதை விடவும் மோசமானநிலமை வன்னியில்நடக்குது.

  9. hi my self suryaprakash koli residing in banglore .iam reseaching on hindu caste system all over world working for betterment of schedule tribes,creative castes(backward castes),dalits and downtroddens my organization name is himpa (schedule tribes,creative castes(backward castes),dalits and downtroddens )our organization wants help indian orgin people all over world.we have no awareness or little awareness about srilankan tamils i read your book gorilla iwas pained learning our peoples condition .atrocities commited by sinnalas and ltte on our peopleis disgusting himpa is with you in pain and happiness what we can do please write .

  10. i read ur novel “m”it showed the complicated nature of elm people.I keep surfing this net.

  11. உங்கள் வலைதளம் அருமை.
    மலையக மக்களின் துன்ப தையும் செல்லுங்கள்…

    மாரி மகேந்திரன்

  12. ‘குழந்தைப்போராளியை’ குழந்தைப்போராளிகளாய் இருந்தவரகள் வாசித்தோம்.எனதுநாட்டிலும் இதைவிட ஏராளமான குழந்தைப்போராளிகள் வாழ்கின்றனர்;கைகளும் கால்களும் இல்லாத நிலையில்.இதை யார் எழுதுவார்?எனது நாடு இலங்கை அல்லது தமிழீழம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *