தூங்கும் பனிநீரே

கட்டுரைகள்

தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பது நேர விரயமே என எனக்கு நானே நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டாலும் அது நிறுத்திவிட முடியாத கெட்ட பழக்கமாகவே என்னைத் தொடர்கிறது. தமிழ்த் திரையெங்கும் குவிந்துகிடக்கும் வண்ண வண்ணப் பிரமாண்டக் குப்பைகளிடையே ‘தூங்கும் பனிநீரே’ என்ற குடியானவனின் பாடலைப் போலவோ, கு. அழகிரிசாமியின் ஒரு சிறுகதையைப் போலவோ, பஷீரின் ஒரு நாவலைப் போலவோ, சீனத்துச் சினிமாவான ‘ரூகெதரை’ப் போலவோ எளிமையும் உண்மையும் அழகியலும் கொண்ட ஒரு தமிழ்ப்படத்தைக் கண்டெடுத்துவிட மாட்டேனா என்ற நப்பாசையே தொடர்ந்தும் என்னைத் தமிழ்ச் சினிமாவைப் பார்க்க வைக்கிறது. இது பெரியார் சொன்னதுபோல மலத்தில் அரிசி பொறுக்கும் முயற்சிதான். பத்து வருடங்களிற்கு ஒருமுறை அப்படி ஓர் அரிசி கிடைத்தும் விடுகிறது. அண்மையில் எனக்கு இரண்டு நெல்மணிகள் கிடைத்தன.

‘இனி அவன்’  திரைப்படத்தை இயக்கியவரான அசோக ஹந்தகம ஒரு சிங்களவராக இருந்தபோதும், திரைப்படம் தமிழ் மொழியில் தமிழ் நிலத்தையும் தமிழ் வாழ்வையும் பேசிய படம். போருக்குப் பின்னான தமிழர்களின் இருப்பையும் இன்மையையும் பேசிய படம். அரங்கில் திரைப்படம் தொடங்கியதிலிருந்து அது எனக்குக் கடுமையான கேள்விகளையும் சந்தேகங்களையும் அரசியல்ரீதியாக எழுப்பிக்கொண்டேயிருந்தது. படத்தை எடுத்தது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இயக்குநர் என்பதால் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவனுக்கு இயல்பாகவே இருக்கக் கூடிய விழிப்புடனேயே அரங்கில் இருந்தேன். ஆனால் படம் முடியும் முன்பாகவே எனது கேள்விகளிற்கு படம் தெளிவான விடைகளை அளித்துவிட்டது. யாழ்ப்பாணத்தைக் களமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ஓர் இராணுவத்தினனைக் கூடக் காணமுடியவில்லையே என்ற கேள்வி எனக்கும் முதலிலிருந்தது. ஆனால் படம் முடிந்தபோது படத்தின் ஒவ்வொரு சட்டகத்திற்குள்ளும் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பதை நான் உணர்ந்தேன். தணிக்கை விதிகள் கேவலம் சட்ட வல்லுனர்களால் உருவாக்கப்படுபவை, ஓர் அசல் கலைஞனால் தனது நுட்பமான சித்துகள் மூலம் அந்த விதிகளை நொறுக்கிப் போட முடியும்.

இலங்கையின் இனமுரண்களையும் யுத்தத்தின் பாடுகளையும் எந்தத் தமிழ் இயக்குநரைக்காட்டிலும் சிங்கள இயக்குநர்களே சினிமாவில் திருத்தமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் கடுமையாக ஒடுக்கப்படும் இலங்கைச் சூழலில் கிட்டத்தட்ட இவை இந்த இயக்குநர்களின்  தற்கொலை முயற்சிகள்தான்.

படம் முடிந்ததன் பின்னாகக் கலந்துரையாடல் தொடங்கியது. இயக்குநர் அசோக ஹந்தகம அரங்கில் திரளாயிருந்த பார்வையாளர்களின் முன்னே சிறிய உருவத்துடனும் தீர்க்கமான பார்வையுடனும் நின்றுகொண்டிருந்தார். “ஆபத்துகளை மேற்கொள்ளாமலும் சுயதியாகத்தைச் செய்யாமலும் கலை என்பதைச் சிந்தித்துப் பார்க்கவே முடியாது, சுதந்திரமும் கற்பனையின் துணிச்சலும் நடைமுறையிலேயே சாதிக்கப்பட வேண்டும்” என்ற போரிஸ் பாஸ்டர்நாக்கின் சொற்களின் பருண்மை வடிவாக அசோக ஹந்தகம அங்கிருந்தார்.

அவர் நிகழ்த்திய உரையில் “இந்தப் படத்தை எடுத்தது ஒரு சிங்களவர் என்பதால் தமிழர்கள் இதைச் சிங்களப்படம் என நிராகரிக்கிறார்கள், படம் தமிழில் எடுக்கப்பட்டதால் சிங்களவர்கள் தமிழ்ப் படமென நிராகரிக்கிறார்கள்” என்றார். அவர் அவ்வாறு சொல்லிச் சொன்ன வாய் மூடுவதற்கு முன்பே நான் இருக்கையிலிருந்து எழுந்துசென்று  அசோக ஹந்தகமவின் கைகளைப் பற்றி முத்தமிட்டேன். மிகுந்த மனவெழுச்சியுடன்  அப்போதிருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை மாலையில் இதே மனவெழுச்சியை லெனின் எம். சிவத்தின் ‘ஒரு  துவக்கும் ஒரு மோதிரமும்’ திரைப்படம் மீண்டும் என்னில் கிளர்த்திற்று.

‘ஒரு  துவக்கும் ஒரு மோதிரமும்’ திரைப்படத்தின் களம் கனடா. கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்து அகதிகள், ஒரு சூடான் நாட்டு அகதி, இரு கனடிய காவற்துறைப் புலனாய்வாளர்கள் ஆகியோர்  கதைமாந்தர்கள். நாயகன், நாயகி என யாருமில்லை. வித்தியாசம் வித்தியாசமான, ஆனால் ஒன்றோடு ஒன்று ஊடும்பாவுமாகச் செல்லும் ஆறு தனிக்கதைகளை ஒரு கணையாழியும் ஒரு துப்பாக்கியும் ஒரு மையத்தில் இணைக்கின்றன. அந்த மையம் போரின் தழும்பாயிருக்கிறது.

இந்தப் படத்தை எதார்த்தப் பாணியில் உருவாக்கப்பட்ட படமாகச் சொல்ல முடியாது. படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் தனித்துவமானவையல்ல. அவை வகைமாதிரிப் பாத்திரங்களாகவே பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காட்சிகளை அமைத்த விதமும் எதார்த்தப் பாணியிலானதல்ல. ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு உருவகம். ஒவ்வொரு சட்டகமும் குறியீடுகளால் நிரப்பப்பட்டவை. சற்றுக் கவனம் தவறியிருந்தாலும் திரையில் நிகழ்த்தப்பட்ட ஒரு நவீன நாடகம்போல படம் வீழ்ந்திருக்கும்.

இந்தக் கதையைத் திரைப்படப் பிரதியாக எழுதுவது சாமான்ய காரியமில்லை. மிகச் சிக்கல்களும் முடிச்சுகளும் கொண்ட கதை. கடுமையான உழைப்பினால் வெறும் பதின்நான்கே நாட்களிற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். கமெராவுக்கு முன்னால் அய்ம்பதிற்கும் மேற்பட்ட நடிகர்கள். கமெராவுக்குப் பின்னால் நாற்பது உழைப்பாளிகள். இந்தியாவில் நடைபெறும் கதைக் காட்சியை கனடாவிலேயே படம்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். படம்பிடிக்கப்படும்போதே வசனங்களும் நேரடியாக ஒலிப்பதிவாகின்றன. கனடாவின் தெந்தெட்டுக் காலநிலை. தொழில்முறை நடிகர்கள் யாருமில்லை. ஓரிரு நடிகர்களைத் தவிர மற்றவர்களிற்கு இதுதான் முதற்படம். இந்தப் பாடுகள் எல்லாம் அப்படியே சிந்தாமல் சிதறாமல் களத்தில் சேகரிக்கப்பட்டு திரையில் ரசவாதம் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு பனிமொட்டு தனது இதழ்களை ஓசையில்லாமல் ஒவ்வொன்றாக மெல்ல விரித்து கடைசியில் மலராவதுபோல படம் முழுமை பெற்றிருக்கிறது. எளிமையின் அழகு. துல்லியமான அரசியல் சினிமா!

பொதுவாகப் புகலிடத்தில் உருவாக்கப்படும் தமிழ் திரைப்படங்களும் குறும்படங்களும், ஈழத்தில் புலிகள் உருவாக்கிய படங்களைக்காட்டிலும் பிரச்சாரத்திலும் தேசியவாத உணர்சிக் கொந்தளிப்பிலும் சற்று அதிகமாகவே மூழ்கிவிடுவன. அவ்வளவும் அரசியல் விடலைத்தனமும் கலைப் போலியும் மட்டுமே. இத்தகைய காலக்கொடுமைப் படங்களிற்கும் ‘ஒரு  துவக்கும் ஒரு மோதிரமும்’ படத்திற்கும் வெகுதூரம்.

யுத்தம் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் வலிகளையும் வடுக்களையும் மிகை உணர்சியின் வழியே அல்லாமல் அகப் பார்வையின் வழியே துன்பியலின் அழகியலோடு படம் சொல்லிச் செல்கிறது. ஈழத் தமிழர்களின் இழப்புக்களையும் துயர்களையும் அது உரத்த பிரச்சாரகர்கள் வழியே அல்லாமல் சாதாரணமானவர்களின் ஆன்மாக்கள் வழியாக நம்மிடம் கையளிக்கின்றது. ஈழத் தமிழர்களின் துயரையும் ஓர் ஆபிரிக்க யுத்த சாட்சியின் துயரையும் ஒரே புள்ளியில் இணைத்து உலகம் தழுவிய அகதிகளின் துயராகப் படம் விரிகிறது.

புலம் பெயர்ந்த அகதிகளின் வாழ்வைச் சொல்கிறோம் என ஏராளம் படங்கள் வந்துவிட்டன. அவை  மது ஒழிப்பு, ரவுடியிஸ ஒழிப்பு, தமிழ் கலாசாரக் காவல் என மோசமான முறையில் எடுக்கப்பட்ட ஆவணப்படங்களாக எஞ்சின, அல்லது ‘புலிவால்’ படங்களாகக் கந்தறுந்தன. இவற்றிற்கு வெளியே இதய சுத்தியுடன் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை கடுமையான கலை வறுமையால் செத்தே பிறந்தன. 1996ல் அருந்ததியின் இயக்கத்தில் வெளியான ‘முகம்’ திரைப்படம் மட்டுமே சினிமாவுக்கேயான அழகியலோடு அகதிகளின் ஆன்மாக்களைப் பேசவைத்தது.  ‘முகம்’ எண்பதுகளில் புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறையைப் பற்றிப் பேசியது. லெனின் எம்.சிவம் இரண்டாயிரம்களில் வாழும் முதல் அகதித் தலைமுறை குறித்தும், இரண்டாவது தலைமுறை குறித்தும் பேசியிருக்கிறார். அருந்ததியின் ‘முகம்’ வெளியானபோது அத்திரைப்படம் குறித்து எழுத்தாளர் மு.புஷ்பராஜன் “ஓரடி, பெரும் பாய்ச்சல்” என எழுதினார். புலம் பெயர்ந்த தமிழ்ச் சினிமா மறு அடியை வைத்துப் பாய்வதற்கு நாங்கள் பதினேழு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1980-களின் நடுப்பகுதியில் தமிழகத்தில் ஈழ விடுதலை இயக்கங்களின் பயிற்சி முகாம்கள் பரவலாக இருந்தன. அந்த முகாம்களில் உள்ளியக்க மோதல்களில் மனித விழுமியங்களுக்கு ஒவ்வாத முறையில் சித்திரவதைகளும் படுகொலைகளும் ஏராளமாக நடந்தன. போராட்டத்திற்கு எனச் சென்ற பல இளைஞர்கள் வெறும் சந்தேகங்களின் பேரிலே அடித்தே கொல்லப்பட்டார்கள். அந்தச் சந்தர்ப்பத்திலிருந்துதான் ‘ஒரு  துவக்கும் ஒரு மோதிரமும்’ படத்தின் கதை ஆரம்பமாகிறது.

படத்தில் குறிப்பிடப்படுவது எந்த ஈழவிடுதலை இயக்கம் என்ற குறிப்புகளை இயக்குநர் கொடுக்காவிட்டால் கூட அந்தப் படுகொலை இயக்கம் ‘புளொட்’  இயக்கமே என்று ஒரு பார்வையாளர் இயல்பாகவே முடிவுக்கு வருவார். கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் புளொட் இயக்கத்தின் உட்படுகொலைகளையும் சித்திரவதைகளையும் ஒவ்வொரு ஈழத் தமிழரின் நெஞ்சிலும் ஆழமாகப் பதித்துவிட்டிருப்பதால் பார்வையாளர் இயல்பாகவே இந்த முடிவை எடுத்துவிடுகிறார். சித்திரவதைக்குப் பொறுப்பானவனுக்கு படத்தில் கொடுக்கப்படும் ‘இரும்பன்’ என்ற பெயர் புளொட்டில் புகழ்பெற்ற ‘டம்மிங்’ கந்தசாமியின் செல்லப்பெயரான ‘சங்கிலி’ என்ற பெயரோடு பொருந்தியும் போய்விடுகிறது.

தமிழகப் பயிற்சி முகாம்களில் இத்தகைய உட்படுகொலைகளை புளொட் மட்டுமல்லாமல் புலிகளும் டெலோவும் கூடப் பெருமளவு செய்திருக்கிறார்கள். எண்பதுகளை ஞாபகத்தில் வைத்திருப்பவர்கள் புலிகளின் கொலைவாகனமான பச்சை வள்ளத்தையும், கொல்லப்பட்ட சுமன், ரூபன், பல்லவன் முதலிய போராளிகளையும், டெலோவுக்குள் ஏற்பட்ட ரமேஸ் – சுதன் பிரச்சினையையும் கொலைகளையும் மறந்திருக்கமாட்டார்கள். இத்தகைய உட்படுகொலைகளை  EROS, TELA , TEA போன்ற இயக்கங்களும் சிறிதளவு செய்திருக்கின்றன. அவை சிறிய இயக்கங்கள் என்பதால் அவர்களால் முடிந்தது அவ்வளவுதான். ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் இந்தியப் பயிற்சி முகாம்களில் இவ்வாறு கொலைகள் நடந்ததாகப் பதிவுகள் இல்லாதபோதும் அந்த இயக்கத்திற்குள்ளும் போராளிகள் மீது தலைமை சந்தேகக் கண் வைத்திருத்ததென்றும் போராளிகள் உளவு பார்க்கப்பட்டனர் என்றும் ‘வானத்தைப் பிளந்த கதை’ நூலில் செழியன் பதிவு செய்திருக்கிறார்.

இந்த இரத்தப்பழி வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும், திரும்பத் திரும்ப அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. படத்தில் குறிப்பிடப்படும் இயக்கத்தை டெலோ இயக்கமாகவோ புலிகள் இயக்கமாகவோ கூட ஒருவர் கருதிக்கொள்ள வாய்ப்புகளுள்ளன. ஆனால் இயக்குனர்  அந்த இயக்கம் புலிகள் இயக்கம் அல்ல என்பதை திரைக்கதைக்குத் தேவையே இல்லாத மேலதிகமான ஓர் ஒட்டு வசனம் மூலம் பார்வையாளர்களிற்கு உணர்த்தி விடுகிறார். அந்த இயக்கத்திலிருந்து தப்பியோடத் திட்டமிட்ட போராளிகள்  விசாரணை செய்யப்படும்போது விசாரணைக்கு உள்ளாகும் போராளி, அங்கிருந்து தப்பி புலிகள் இயக்கத்தின் முகாமிற்கு ஓடத் திட்டமிட்டிருந்ததாகக் கூறுகிறான்.

இந்த உபரி வசனம் படத்தில் சேர்க்கப்பட்டிருக்காவிட்டால்  இந்தப்படம் மிகப் பெரிய எதிர்ப்புகளை புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடம் சந்தித்திருக்கும். அவர்கள் கலைக்கு இவ்வாறு தாறுமாறாக மரியாதை செய்யப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். இன்றும் கூடப் புகலிடத்தில் ஏராளமான கலாசார அமைப்புகளையும் கலை அமைப்புகளையும் ஊடகங்களையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் படத்தைத் திரையிடுவதில் சிக்கல்களும் ஏற்பட்டிருக்கும். எனினும் இதை இயக்குனரின் சமரசப் புள்ளியாக் குறித்துக்காட்டுவதும் முழுமையாகச் சரியாகாது. ஏனெனில் புளொட் இயக்கத்தில் அவ்வாறு கொலைகள் நிகழ்ந்தன. அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்களிலிருந்து போராளிகள் தப்பியோடிப் புலிகள் இயக்கத்திற்குச் சென்றிருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மையே. ஒவ்வொரு இயக்கங்களிலும் இது நடந்திருக்கின்றது. புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த நிலைத் தலைவர்களில் ஒருவரான ராகவன் இயக்கத்திலிருந்து இரகசியமாக வெளியேறி உறங்குவதற்கு நேராகச் சென்ற இடம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் சூளைமேடு அலுவலகம்.

திரையிடலுக்குப் பின்னான பார்வையாளர்களுடனான சந்திப்பொன்றில் ‘சனல் 4’ தயாரித்து வெளியிட்ட ‘கொலைநிலம்’ ஆவணப்படமே இந்தப் படத்தை எடுப்பதற்குத் தனக்கு அகத்தூண்டலை அளித்ததாக லெனின் குறிப்பிட்டிருந்தார். கலையைக் காப்பாற்றுகிறேன், புலம்பெயர்ந்த சினிமாவை வளர்க்கிறேன் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருப்பவர்களிடையே இத்தகைய அரசியற் கடப்பாட்டு உணர்வுடன் இயங்கும் லெனின் எம். சிவத்தின் இருப்பு நமக்கு உற்சாகமளிக்கிறது. இந்த வகையிலும் இவர் ஒருவரே புகலிடச் சினிமாவில் அருந்ததியின் தொடர்ச்சி.

இதுவரை தமிழ்ச் சினிமா கண்டிராத இரு பொருட்கள் இந்தப் படத்தில் பேசப்படுவதைக் குறித்துக்கொள்வோம்.ஒருபாலுறவாளர்களான இரு தமிழ் இளைஞர்களின் காதல், வெளி அழுத்தங்களால் கலைக்கப்படுவதையும் அதன் துயரையும் படம் அழுத்தமாகப் பதிவாக்கியிருக்கிறது. ஆறு கதைகளில் இது ஒரு கதை என்றபோதிலும் படம் முழுவதும் அந்தத் துயரை இயக்குனர் அணையாமல் வைத்திருக்கிறார்.

ஓர் ஆபிரிக்க அகதிக்கும் ஈழத் தமிழச்சிக்குமான காதலை மிகச் சில காட்சிகளிற்குள்ளேயே உணர்வுபூர்வமாகவும் காதலின் பரிசுத்தத்தோடும் படம் சித்திரிக்கிறது. படம் அவர்கள் இருவரது இணைவுடனேயே முடிகிறது. ஆபிரிக்கர்களுக்கு தமிழ்ப் பெண்களைச் சேர்த்துவைத்து லெனின் எம்.சிவம் தமிழ் கலாசாரத்தை அழிப்பதாக திரையிடலுக்குப் பின்னான கலந்துரையாடலில் காரசாரமான வாதம் வைக்கப்பட்டதையெல்லாம் என்ன சொல்வது! இன்றைய தேதிக்கு இந்த உலகத்திலேயே அதிகளவு ஆட்களைக் கொண்ட சாதி அகதிச் சாதிதான், நாம் அதன் மக்கள் என்கிறது படம்.

ஒரு படத்தில் ஒருவர் அல்லது இருவர் சிறப்பாக நடிப்பார்கள். இந்தப் படத்தில் அத்தனை நடிகர்களுமே மிகச் சிறப்பாகத் தங்களது கதாபாத்திரங்களை உருவகித்துள்ளார்கள். குறிப்பாக சூடான் அகதியின் பாத்திரத்தை நடித்த ஆர்தர் சிமியோனும்,தேனுகாவும்,மதிவாசனும் தங்களது பாத்திரங்களின் உச்சபட்ச சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். ‘ஞானம்’ என்ற பாத்திரத்தை நடித்திருக்கும் பாஸ்கரின் ஆற்றுகை தனித்துவமானது. பாஸ்கரின் இயந்திரத்தனமான நடிப்பையும் எரிச்சலூட்டும் மன்மதத்தனங்களையும் நான் சில படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு ஆடுகளத்தில் வ.ஐ.ச. ஜெயபாலனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் போன்றது. இந்தப் பாத்திரத்தை பாஸ்கரைத் தவிர வேறுயாராலும் இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. பாஸ்கரின் வசன உச்சரிப்பு வேறு எவருடையதை விடவும் திரையில் இயல்பான ஈழத்தமிழ் பேச்சொலியைக் கொண்டது.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பாக இந்தப் படம் தமிழகத்துச் சினிமாக்களின் பாதிப்பிலிருந்து முழுவதுமாக விடுபட்டிருப்பதைச் சொல்ல முடியும். ஈழத்துத் திரைப்பட முயற்சிகளின் கலைத்துவச் சறுக்கல்களிற்கு அவை தமிழகச் சினிமாக்களைப் பிரதிசெய்ய முயன்றமையே முதன்மையான காரணம். வெறுமனே பேச்சு வழக்கை மட்டும் மாற்றிக்கொண்டால் (அதைக் கூடச் செவ்வனே செய்வதில்லை) அது ஈழத்துச் சினிமாவாக அல்லது புலம் பெயர் சினிமாவாக மாறிவிடும் என நினைக்கிறார்கள். அல்லது போரைக் குறித்துப் படம் எடுத்தாலே அது ஈழத்துச் சினிமாவுக்கான தகுதியைப் பெற்றுவிடுகிறது என நினைத்துவிடுகிறார்கள். மாறாக இந்தப்படம் உரையாடல், காட்சி, எடுத்துரைப்பு, நடிப்பு என எல்லாத் தளங்களிலும் தன்னைச் சுயாதீனமாக நிறுத்தியுள்ளது.

தொண்ணூறாயிரம் கனடிய டொலர்கள் (50 இலட்சம் இந்திய ரூபாய்கள்) என்ற மிகக் சிறிய பட்ஜெட்டில் கச்சிதமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ‘ஷங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா’, ‘மொன்ரியல் உலக திரைப்பட விழா’ உட்பட இன்னும் மூன்று சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றிருக்கிறது. சிறுபத்திரிகை விமர்சகர்கள் ஒருமித்த குரலில் படத்தைக் கொண்டாடுகிறார்கள் . இவை எதையும்விட திரை அரங்கிற்குள் முகந்தெரியாத ஒருவன் சிந்திச் சென்ற, இன்னும் உலர்ந்து விடாமலிருக்கும் ஒருதுளி உண்மைக் கண்ணீரே லெனின் எம். சிவத்தின் பேறாகிறது.

இந்தப் படத்தை இலங்கையில் வெளியிட இலங்கை அரசு அனுமதிக்கப்போவதில்லை. சரியான விளம்பரங்களோடு திரையிடப்பட்டால் இந்தப்படம் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடக்கூடும். ஆனால் அதற்கு முன்பாக இந்தியத் தணிக்கைத் துறையுடனும் சினிமாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வியாபாரிகளுடனும் படத்தைத் திரையிடுவதற்காகப் பெரும் தர்மயுத்தத்தை நிகழ்த்தவேண்டியிருக்கும். அதற்கான வலு இந்த எளிமையான திரைப்படத்திடம் இல்லை என்றே நினைக்கிறேன்.

நூறாண்டுகளை நெருங்கும் தமிழ்ச் சினிமாவின் முதன்மையான பத்துத் திரைப்படங்ளைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் ‘ஒரு  துவக்கும் ஒரு மோதிரமும்’ திரைச்சித்திரத்திற்கு இடமுண்டு. காலம் அந்த மரியாதையை இத்திரைப்படத்திற்குக் கண்டிப்பாக வழங்கும்.

வணிக நோக்குக் கருதியோ அல்லது அரசியல் நிர்ப்பந்தங்களாலோ லெனின் எம். சிவம் தனது கலை வெளிப்பாட்டில் சமரசம் செய்துகொண்டால் அவரின் கால்களிற்குக் கீழே புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் செங்கம்பளம் நிரந்தரமாக விரிக்கப்பட்டிருக்கும். அந்தச் சமரசத்திற்கு அவர் தயாராக இல்லாவிட்டால் கல்லிலும் முள்ளிலும்தான் கால்பதித்து அவர் நடக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்தக் கடுமையான பாதையின் முடிவில் சர்வதேசச் சினிமாவின் கதவுகள் அவருக்காக அகலத் திறந்து கிடக்கின்றன.

6 thoughts on “தூங்கும் பனிநீரே

  1. ini avan,paarthen sirantha padam,ungal katturaiyai vaasittha pin lenin udaya padatthai parka thudikkiren….vaazthaukkal.

  2. Some facts cannot be denied for ever. I have not seen the above said films, any way can understand the contents.

  3. இரு படங்களையும் இன்னமும் பார்கவில்லை – உங்கள் விமர்சனத்தை பார்த்தபின் உடனே பார்க்கவேண்டும்போல் உள்ளது – பார்ப்பேன்.

  4. இனி அவன் திரைப்படம் நான் இன்னமும் பார்க்கவில்லை. காரணம் அந்த படம் இனடனமும் கனடாவிற்கு வரவில்லை, வருமோ என்பதும் தெரியாது. ஆனால் ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் பிறிமியர் காட்சியில் சென்ற ஆண்டு பார்த்தேன். உண்மையில் மிகச்சிறந்த படம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தம் இல்லை. அதே வேளை இந்தப்படத்திற்கு கனடாவில் ரொரண்டோ மக்கள் கொடுத்த ஆதரவு மறக்கமுடியாததும் கூட.இந்தப்படத்தில் திறமையாக எல்லோரும் நடித்தாகவும், பின் ஒரு சிலரை பெயர் சொல்லியும் எழுதிய்ள்ளீர்கள்்என்னுடைய நோக்கில் ஓர் இனக்காலில் தன் காதனின் இழப்பின் வேதனையையும், தன் காதலனின் இழப்புக்கு காரணம் தன் தந்தையெ என்பதை அறிந்த அவருடனே, ஏன் யானும் பேசாமல் பசும் சந்தர்ப்பம் வந்்தவேளை தன் உண்ர்வுகளை அற்புதமாக வெளிககாட்டியிருந்த ஆதியின் கதா பாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருந்தர் அந்த இளைஞர்.

    தங்களின் விமர்சம் சார்ந்து ஒரு விடையம் மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன். என்னவெனில் புளொட், புலிகள் மட்டுமல்லாது ஈழப்புரட்சி அமைப்ப மற்றும் Tela, Tea போன்ற இயக்கங்களும் கொலைகள் செய்ததகவும் EPRLF மட்டும் கொலைகள் செய்தாக பதிவுகள் இல்லையென்பது ஏற்றகாள்ள முடியாதது. ஈழப்புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்த சென்ற EPRLF ஈழப்புரட்சி அமைப்பி் தோழர்களை செய்த கொலைகள் சார்ந்து தாங்கள் அறிந்திராமை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறத. சேரன் போன்ற சந்தர்ப்பவாதிகளை எப்படி உங்களால் நம்ப முடிகிறது என்பதும் வேடிக்கையாக உள்ளளது.

  5. நன்று!

    //ஒரு தமிழ்ப்படத்தை கண்டெடுத்துவிட மாட்டேனா என்ற நப்பாசையே தொடர்ந்தும் என்னை தமிழ்ச் சினிமாவைப் பார்க்க வைக்கிறது.//

    நானும் அப்படியெண்ணித்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    இந்த திரைப்படவிமரிசனம் அந்த படத்தை பார்க்கவேண்டுமென்னும் ஆவலை தூண்டுகிறது. படம் தமிழ்நாட்டில் வெளியாகுமானால் பார்க்கவேண்டும்!

    சிறந்த விமரிசனத்தை தந்தமைக்கு தங்களுக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *