நூல் அறிமுகம்

கட்டுரைகள்

ஈழம்: இன்றெமக்கு வேண்டியது சமாதானமே

ஷோபாசக்தி: அ.மார்க்ஸ்
வெளியீடு: பயணி

லங்கை இராணுவம் கிளிநொச்சி எல்லைக்குள் காலடி எடுத்து வைத்து சுமார் 4 மாதங்களாகப் போகின்றன. பன்னாட்டு அரசு சாரா அமைப்புக்கள், ஐ.நா. நிறுவனங்கள் எல்லாம் போர்ப் பகுதியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டும் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகப் போகின்றன. வேறெப்போதுமில்லாத அளவிற்குப் புதிய புதிய விதிகளை இயற்றி இலங்கை ஊடகங்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் படுமோசமாகச் சீரழிந்துள்ளது எனச் சென்றமாதம் இங்கு வந்து போன ‘பன்னாட்டுப் பத்திரிகைச் சுதந்திரத் தூதுக்குழு’ அறிவித்துள்ளது. ‘சன்டே டைம்ஸ்’ இதழாசிரியர் ஜே.எஸ்.திசநாயகம், ‘ஈகுவாலிடி பிரஸ்’சின் பி. ஜஸிகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி முதலானோர் இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை இன்று முழுக்க முழுக்க ஒரு ‘தேசியப் பாதுகாப்பு அரசாக’ (National Security State) ஆகியுள்ளது. செப்டம்பர் 11க்குப் பின் இன்று உலகெங்கிலும் தேசியப் பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு (Public Safety) என்பன சிவில் உரிமைகள், மனித உரிமைகளுக்கு எதிராக நிறுத்தப்படுகின்றன. மனித குலம் வரலாறு பூராவும் போராட்டங்களினூடாகவும், அனுபவங்களின் மூலமாகவும் உருவாக்கியிருந்த அனைத்து மதிப்பீடுகளும், நெறிமுறைகளும், உரிமைகளும் இன்று தேசியப் பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயர்களால் நசுக்கி நாசமாக்கப்படுகின்றன. உலகெங்கிலும் காணப்படும் இந்தப் பொதுப்போக்கை உச்ச பட்சமாகவும், அதிகபட்சச் சாதுரியத்துடனும் தனக்குச் சாதகமாகக் கையாளுகிறது மஹிந்த ராஜபக்சேவின் பாசிச அரசு. “பயங்கர வாதிகளைக் கட்டோடு ஒழிப்பதற்கான இறுதிப் போர்” என அது சொல்லாடுகையில் இதே சொல்லாடல்களைத் தன் ஆக்ரமிப்புகளை நியாயப் படுத்துவதற்காகப் பயன்படுத்தி வரும் எந்த அரசுதான் அதைக் கண்டிக்க முன் வரும்? முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இன்று விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்திருப்பதை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

நெருக்கடி நிலைப் பிரகடனம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றினூடாக அரசியல் சட்ட ஆளுகை (Constitutional Governance) ஒரு அப்பட்டமான கேலிக் கூத்தாகியிருப்பதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய ஸ்ரீலங்கா. அரசியல் அங்கு இன்று இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே இன்று அங்கு பாதுகாப்புத்துறைச் செயலரும் கூட. இன்னொரு பக்கம் அவர் இராஜபக்சேயின் சகோதரரும் கூட. இராணுவத் தளபதி பொன்சேகா இன்று ஒரு அரசியல்வாதியைப் போலப் பேசுவதன் பின்னணி இதுதான். அவருக்காக அரசுதான் இறங்கி வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் மீது நட வடிக்கை எடுக்க அரசுக்குத் துப்பில்லை.

சில மாதங்களுக்கு முன் கனடா நாட்டு இதழொன்றிக்குப் பேட்டியளிக்கும்போது அவர், “பெரும்பான்மைச் சிங்களவர்களின் தேசம் ஸ்ரீலங்கா. சிறுபான்மையினர் அநியாயமான கோரிக்கைகளை வைக்கக்கூடாது” எனச் சொன்னதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அரசியல் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதுபோல இன்று அங்கே சிவில், இராணுவம் என்கிற வேலைப் பிரிவினை எல்லாம் காலாவதியாகிவிட்டது. சென்ற செப்டம்பர் – அக்டோபரில் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் சிங்களரல்லாதவர்களை அரசு பட்டியலிடுவதற்காக மேற்கொள்ளப் பட்ட அப்பட்டமான இனவாரிக் கணக்கீட்டிற்கு (Racial Profiling) ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் ஒப்புதலளித்த கொடுமையும் அங்கு நடந்தது.

சிங்களர், தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் எனப் பலதரப்பட்டவர்களும் ஒரு சேர வாழும் ஒரு பன்மைச் சமூகமே இலங்கை என இன்று அங்கு யாரும் வாதிடக் கூடிய சூழலும் கூட இல்லாமற் போனதுதான் மிகப் பெரிய கொடுமை. இவற்றைப் பேசி வந்த, பேசவேண்டிய இடதுசாரிகளும்கூட இன்று அங்கு வாய் மூடிக் கிடக்க வேண்டிய நிலை. வார்த்தைகளுக்கு வாய்ப்பற்ற நாடாகிவிட்டதா ஸ்ரீலங்கா? உரையாடல்கள் இனி அங்கு சாத்தியமே இல்லையா?

நீண்டகால யுத்தம் அங்கே பிரச்சினைகளைச் சிக்கலுக்குள் சிக்கலாய், இடியப்பச் சிக்கலாய் ஆக்கிவிட்டது. காஷ்மீராகட்டும், இலங்கை ஆகட்டும் இன்று யாரொருவரும் ஒற்றை வரியில் தீர்வைச் சொல்லி விட இயலாது.

“மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள்” (UTHAR-J) என்கிற அமைப்பின் சமீபத்திய அறிக்கையைப் படிக்கும்போது நெஞ்சு பதறுகிறது. புலிகளால் கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் பெண் குழந்தைப் போராளிகள் போரின் வெம்மையையும், குண்டுகளின் இரைச்சலையும் தாள இயலாமல் யாரையும் கொல்வதைக் காட்டிலும் தாங்கள் மரிப்பது மேல் என ‘சயனைட்’ குப்பிகளைக் கடித்துச் சாகிற கொடுமையை எப்படித் தாங்குவது? “மற்றவர்களைக் கொல்லும் வலியிலிருந்து இந்தக் குழந்தைகளை சர்வேசுவரனின் பெருங்கருணை கரை சேர்த்திருக்கிறது” எனக் கூறி அவர்களது சவப் பெட்டிகளின் மேல் சிலுவைக் குறியிடும் பாதிரிமார்களைப் பற்றியும் அந்த அறிக்கை பேசுகிறது.

குண்டு மழை பொழிந்தவண்ணம் வெறியுடன் முன்னேறி வரும் சிங்கள இராணுவம் ஒரு புறம், நான்கு பிள்ளைகள் இருந்தால் இரண்டு, இரண்டிருந்தால் ஒன்று என வற்புறுத்தி இழுத்துச் செல்லும் விடுதலைப் புலிகள் இன்னொரு புறம். அனுப்ப மறுப்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளை எழுதினால் வாசிப்பவர்களின் நெஞ்சம் இன்னும் பதறும். எனவே நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தச் சூழலில்தான் இன்று மூன்று லட்சம் ஈழத் தமிழர்கள், உள் நாட்டிலேயே இடம் பெயர்க்கப்பட்டவர்கள் இன்று சிவில் உரிமைகள், தம் இன்றைய இடங்களை விட்டு நகரும் உரிமை என எதுவுமின்றி பற்றாக்குறையான வாழ்வாதாரங்களுடன் புழுக்களைப் போல வெற்று வாழ்க்கை (Bare life), குறைந்தபட்ச உயிர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர்.துன்பக் கேணியில் உழலும் இந்தத் தமிழர்கள்தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நவரசங்களும் பெருகி வழியும் ஒரு நாடக மேடையாக இன்று தமிழக அரசியற் களம் ஆகியிருக்கிறது. இதில் ஒரு ‘ரசத்தை’ மட்டுமே வைத்து அடையாளப்படுத்தியதுதான் பொன்சேகா செய்த தவறு.

இந்த நாடக மேடையில் அரங்கேற்றப்பட்ட ஒரு சில காட்சிகளை நினைத்துப் பாருங்கள். அந்த ராஜினாமா நாடகம் நினைவிருக்கிறதா? அந்தக் காட்சியின் நாயகர் கருணாநிதி. கனிமொழி முதல் தயாநிதிமாறன் வரை கடுதாசிகளைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு ஊடகங்களில் மின்னவில்லையா? அவர் விதித்த காலகெடுவுக்குள் என்ன நடந்தது? என்ன நடந்ததைப் பார்த்து அந்தக் காகிதங்களெல்லாம் கிழித்துக் காற்றில் வீசப்பட்டன. கருணாநிதிக்குத் தீவிரம் போதாதென்று சாடும் இராமதாஸ் எங்கு போனார்? மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமலேயே மத்திய அரசைக் கண்டிக்கும் தளுக்கும் சாதுரியமும் எப்படி வந்தது மருத்துவர் அய்யாவுக்கு?

நமது திரைப்படத் துறையினரின் வீர சாகசங்கள் பற்றி நான் அதிகம் சொல்லப் போவதில்லை. பிரச்சினையை இவர்களைக் காட்டிலும் எளிமையாகப் புரிந்து கொள்ள யாருக்கும் இயலாது. இவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களல்ல பா.செயப்பிரகாசம் போன்ற எழுத்தாளர்கள். பதின்மூன்று ஆண்டுகாலமாக இடம்பெயர்ந்து ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் புலிகளைப் போட்டி போட்டுக் கொண்டு நேசிக்கிறார்களாம். ஜார்ஜ் புஷ்சின் கண்களை உற்றுப் பார்த்து அதில் காதலைக் கண்டுபிடித்த மன்மோகன் சிங்க இவர்களிடம் தோற்றுப் போவார். சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி ஒன்றின்படி இயக்குனர் அமீர் புலிகளுக்கு ஆதரவான இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்துச் சென்று முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் ‘அறியாமையைப்’ போக்கி வருகிறாராம். அமீர் ஒன்றும் தெரியாத அப்பாவியா இல்லை தமிழக முஸ்லிம் தலைவர்களை அவர் அப்பாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

வங்க தேசத்தை உதாரணம் காட்டி ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்வதிலுள்ள காலவழுவமைதி குறித்து உள்ளே ஷோபா நறுக்கெனத் தைத்துள்ளதைக் காணுங்கள். ஆகா, பிரச்சினைகள் தான் நம்மவர்கள் நம்புவதுபோல இவ்வளவு எளிமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நான் வியந்த நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது.

சமீபத்தில் நடைபெற்ற மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குக் பின் படப்பிடிப்பிற்காகச் சென்னை வந்திருந்தார் ராக்கி சாவந்த் என்கிற ‘கவர்ச்சி’ நடிகை. பேட்டியினூடே ‘சீரியஸான’ ஒரு பிரச்சினையை எழுப்பினார் ‘டெக்கான் க்ரானிகல்’ நிருபர். பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றிய கேள்விதான் அது. ராக்கி சொன்னார்: “சிம்பிள்! ஒரு ஏகே 47 துப்பாக்கியுடன் என்னை தாஜ் ஓட்டலில் ஹெலிகாப்டர் மூலம் இறக்கி விட்டிருந்தால் ஒவ்வொரு பயங்கரவாதியின் முன்பும் போய் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பேன். பயங்கரவாதி என் கவர்ச்சியில் மயங்கும் நேரத்தில் நான் அவரைச் சுட்டு விடுவேன்”. ராக்கி நகைச்சுவையாகத்தான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். நம்மவர்கள் நகைச்சுவையாக அல்ல சீரியஸாகத்தான் பேசுகிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலை வைத்துப் பார்க்கக் கூடியவர்கள் என்றொரு நம்பிக்கை உண்டு. அதுவும் கூட இன்று ஆட்டம் காணத் தொடங்கியுளள்து. தா.பாண்டியன் போன்ற மூத்த அரசியல் தலைவருக்கும் கூட எத்தனை அவசரம் பாருங்கள். ஒரு அகதிக்கு அளிக்கப்பட்ட ஒரு வெளியேற்ற ஆணையைச் சரியாகப் படித்துக் கூடப் பார்க்காமல் ஈழ அகதிகளை வெளியேற்றச் சதி என அறிக்கை விட்டு கருணாநிதியிடம் குட்டுப்பட்டதை என்னென்பது. அந்த ஒருவரையும் கூட வெளியேற்றலாகாது என மனித உரிமை அடிப்படையில் போராடுவது என்பது வேறு. இப்படியான ஒரு அரசியலாக்குவது வேறு இல்லையா?

திராவிட இயக்கத்தை ஒரு காலத்தில் திண்ணைத் தூங்கிப் பேர்வழிகள் என முற்றாக நிராகரித்த தவறுக்கு ஈடு செய்யவோ என்னவோ நமது ‘ஸ்ட்ரக்சுரலிஸ்ட்’ தமிழவன் சொல்வது போல ‘Primordial Sentiment’ களை எழுப்புவதில் நமது தமிழ்த் தேசிய வாதிகளை எல்லாம் ‘பீட்’ பண்ணிவிடுகிறார் தா.பா. இலங்கைத் தளபதி பொன்சேகாவின் திமிர்த்தனமான பேச்சிற்கு அவரளித்த எதிர்ச் சவாலைப் பாருங்கள்:

“… பொன்சேகா தமிழ்நாட்டுத் தலைவர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கிறார். இமயம் சென்று கனக விஜயனின் தலையிலேயே கல் சுமக்க வைத்து, சேரன் செங்குட்டுவன் அழைத்து வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்தக் கனக விஜயர்களின் ஆணவ சொற்கள் தான் இன்று பொன்சேகா வாயில் வெளிப்பட்டுள்ளது.” (ஜனசக்தி, டிச 9, 2008)

இத்தகைய ‘ஆதிமன நிலை’யின் அடிப்படையில் இ.பொ.க. வையும் மார்க்சிஸ்ட் கட்சியையும் பிரித்துக்காட்டி பின்னதைச் சாடுகிறார் தமிழவன். Primordial Sentiment ன் பெருமிதங்களைப் பேசி மகிழும் அவர் அதன் உச்ச கட்டமாக ஹெய்டெகர், நீட்ஷே ஆகியோரிடம் இருந்த பாசிசக் கூறுகளைச் சுட்டிக்காட்டி அப்படியான அறிஞர் பெருமக்கள் தமிழ் வம்சத்தில் தோன்றவில்லையே என உச்சுக் கொட்டும்போது தமிழவனின் வழக்கமான இலக்கிய அளவுகோல் அரசியல் தளத்திற்கு வரும்போது எவ்வளவு அபத்தமாகவும் ஆபத்தாகவும் இருக்கிறது என்பது விளங்கிவிடுகிறது. போகட்டும்.

பழ. நெடுமாறன் சமீபத்தில் பேசியிருந்த பேச்சொன்றும் எனக்கு வியப்பை அளிக்காத போதும் அதிர்ச்சியை அளித்தது.

“ஐரோப்பாவில் கொசாவோ பிரச்சினை வந்தபோது அந்த மக்கள் முழுக்க முழுக்க கிறித்தவர்களாக இருந்ததால் உடனடியாக ஐரோப்பிய நாடுகள் தலையிட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவி செய்தார்கள். இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலோர் இந்துக்களாக இருக்கிறார்கள். சிங்களவர்களில் பெரும்பாலோர் புத்தமதத்தினராக இருக்கிறார்கள். இலங்கைப் பிரச்சினைக்கு இனம் மட்டுமல்ல மதமும் ஒரு காரணம். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 2000 இந்துக் கோயில்கள் குண்டு வீச்சில் நாசமாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள அந்த மக்களை இந்துக்களாகப் பார்க்காமல் அவர்களைத் தமிழர்களாகப் பார்த்து இந்திய அரசு ஒதுக்குகிறது”

இது அவர் திருச்சியில் ஆற்றிய உரை (டிச 09, 2008). மலேசியத் தமிழர்களில் பிரச்சினையையும் கூட அவர்கள் இன்று ஒரு இந்துப் பிரச்சினையாக முன் வைப்பதையும் அதற்கு நெடுமாறன் போன்றவர்களின் ஆதரவு இருப்பதையும் நாம் காண வேண்டும். ஈழத் தமிழர்களை இந்துக்களாக அடையாளப்படுத்தி இந்துத்துவ அமைப்புகள் ‘உதவி’களைச் செய்ய முன் வந்தபோது நெடுமாறன் அவர்கள் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. விடுதலைப் புலி ஆதரவாளர்களில் தொல்.திருமாவளவன் ஒருவரே இந்துத்துவவாதிகளின் அச்செயலைக் கண்டித்தார்.

அடையாள அரசியலில் உள்ளார்ந்து நெளியும் ஆபத்துகள் குறித்த ஆழ்ந்த சிந்தனை இன்று தேவைப்படுகிறது. நெடுமாறனின் தர்க்கத்தின்படி பார்த்தால் ஈழத்தில் அகதிகளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை யார் காப்பாற்றுவது?

புலிகளின் பிரச்சினையைத் தமிழர்களின் பிரச்சினையாக முன்வைத்து நடத்தப்படும் இந்த அரசியலைக் காட்டிலும் தமிழர்கள் இன்று சந்தித்து வரும் பிரச்சினைகளை வெறுமனே புலிகளின் பிரச்சினையாக முன்வைத்துச் செயல்படும் காங்கிரஸ் கட்சியினர், சுப்பிரமணிய சுவாமி, சோ, இந்து ராம் வகையறாக்கள் இன்னும் ஆபத்தானவர்களாக உள்ளனர். இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கச் செயற்பாடுகள் குறித்தோ, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் விருப்புகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்திற்குப் பல்வேறு வழிகளில் இந்திய அரசு உதவி செய்வது குறித்தோ இவர்கள் வாய் திறப்பதில்லை. யுத்தத்தின் கொடுங்கரங்களில் சிக்குண்டு அன்றாடம் நசுக்கிப் பிழியப்படும் அந்த மூன்று லட்சம் மக்கள் குறித்த இரக்கத்தை இவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது தான் அபத்தம்.

இந்த இரு போக்குகளில் ஏதொன்றிலும் இணைத்துக்கொள்ள இயலாத ஒரு குரலைத்தான் இந்த வெளியீட்டில் நீங்கள் கேட்கிறீர்கள். 1983 ஐ ஒரு எல்லைக் கல்லாக வைத்துப் பார்த்தால் இன்று கால் நூற்றாண்டு ஓடிவிட்டது. உலகம் மட்டும் மாறிவிடவில்லை. தமிழ் பேசும் சமூகங்களின் மனநிலையும், கருத்துகளும், மதிப்பீடுகளும், எதிர்பார்ப்புகளும் கூட இந்த 25 ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டன. பிரச்சினையை வெறுமனே புலிகள் x இலங்கை அரசு என்பதாகப் பார்க்காமல் இந்த மாறியுள்ள மனநிலைகளையும், எதிர்பார்ப்புகளையும் கணக்கில் கொண்டு தான் ஒரு அரசியல் தீர்வை நாம் யோசிக்க முடியும்.

தமிழகத்தில் இன்று மேலெழுந்துள்ள போர் நிறுத்தக் கோரிக்கையை யாரும் மறுக்க இயலாது. போர் நிறுத்தத்திற்குப் பின் என்ன என்கிற கேள்வியையும் நாம் கூடவே எழுப்பியாக வேண்டும். ராஜபக்சே சொல்லிக் கொண்டிருப்பது போல கிழக்கில் ஏற்படுத்தியது போல அவரசக் கோலமாக வடக்கிலும் ஒரு ‘தேர்தலை’ நடத்தினால் பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. இன்றைய தேவை ஒரு நீண்ட உரையாடல். ஆயுதங்களைச் சற்றே ஓய்வெடுக்க வைத்துவிட்டுத் தமிழ்பேசும் சகல பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு நீண்ட உரையாடல் இன்று தேவை. வெற்றிக் களிப்புடன் கூடிய இலங்கை அரசு அல்லது விரிவாக்க நோக்கம் கொண்ட இந்திய அரசு அல்லது எள்ளளவும் பிறருக்கு இடம் கொடுத்து பழக்கப்பட்டிராத புலிகளின் மேலாண்மையின் கீழ் நடக்கும் உரையாடலாக அமையாமல் இதைச் சாத்தியமாக்கும் வழிமுறைகள் என்ன என நாம் யோசிக்க வேண்டும். தலித்கள், முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தினர் எனச் சகல தரப்பினருடனும் சமமாக உரையாடப் புலிகள் முன் வருவார்களா? அத்தகைய அழுத்தத்தைப் புலிகளுக்கு அளிக்கும் நேர்மையும் நெஞ்சுறுதியும் நம் புலி ஆதரவாளர்களுக்கு உண்டா? காஷ்மீர் விடுதலைப் போராட்ட அரசியலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களை புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். போராளிக் குழுக்களின் வேண்டுகோளையும் மீறி போரில் களைத்துப் போன மக்கள் பெரிய அளவில் தேர்தலில் பங்கேற்றதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்தக் கேள்விகளோடு ஷோபா சக்தியின் கருத்துக்களை உங்கள் முன் வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு அரசியல் விமர்சகர் கட்டுரை எழுதுவதற்கும் ஒரு புனைவு எழுத்தாளர் அரசியல் கட்டுரை எழுதுவதற்கும் வித்தியாசமுண்டு. என்ன வித்தியாசம் என அறிய ஷோபாவின் அரசியல் கட்டுரைகளைப் படிப்போம்.

– அ.மார்க்ஸ்
டிச 16, 2008

பிரதிகளுக்கு:
பயணி வெளியீட்டகம்
6/11, 4வது குறுக்குத் தெரு
எல்லையம்மன் காலனி, தேனாம்பேட்டை
சென்னை 86
தொலைபேசி: 00 91 9445124576