தமிழ் நவீனத்துவ இலக்கியம், “தேசிய நீரோட்டம்”, திராவிட இயக்கம்

தோழமைப் பிரதிகள் ராஜன் குறை

ராஜன் குறை

யிர் எழுத்து ஆகஸ்ட்இதழில் வெளியான கண்ணனின் “உலக மொழிகளில் தமிழ்ப் படைப்புகள்” என்ற கட்டுரையை முன்னிட்டு சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவரது ஆதங்கங்களும், அக்கறைகளும் எனக்கு உடன்பாடானவையே. தமிழ் படைப்பிலக்கிய சாதனைகள் உலகில் அறியப்படவேண்டும் என்பதில் எனக்கும் ஆர்வமும், அதற்காக என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. மேலும் கண்ணன் படைப்பின் தரம், மொழிபெயர்ப்பின் தரம், பதிப்பின் தரம் என்ற அளவில் அல்லாமல் சமூக வரலாற்று பின்னணியில் ஏன் தமிழிலக்கியத்தை உலக அரங்கிற்கு கொண்டுபோகும் முயற்சிகள் அதிகம் நடைபெறுவதில்லை, இதுவரை நடக்கவில்லை என்று விசாரணையில் இறங்குவதும் வரவேற்கத்தக்கதுதான். அவர் கட்டுரை சில புதிய சிந்தனைகளையும் அதேசமயம் – எந்த தீவிர பரிசீலனைக்கும் உள்ளாகாத சிறுபத்திரிகை “மூட” நம்பிக்கைகளை மீண்டும் உச்சரிப்பதாகவும் உள்ளது. இரண்டும் சேரும்போது அவர் கட்டுரையின் சில மெளனங்கள் வியப்பளிக்கின்றன.

கண்ணன் கூறுவதில் இரண்டு புதிய கோணத்திலான சுட்டிகளைப் பார்க்கிறேன்

  • கடலான் கல்சர் போன்று திராவிட கலாசாரமும் தனித்துவமிக்கதாக உலக அரங்கில் வெளிப்பட முடியும் என்கிறார். குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் அமைந்ததற்குக் கூட இப்படி ஒரு சிந்தனை காரணியாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. (ஆனால் அங்கே எந்த கலாசார ஆய்வும் நடைபெறவில்லை என்று தமிழவன் எழுதுகிறார்.) திராவிட கலாசாரத்தை இந்தியத் தேசத்திற்குட்பட்ட தனித்துவமான கலாசாரமாக பார்ப்பது கால்டுவெல் மரபின் பயன்மிகு விளைவாக இருக்க முடியும். இது கலாசார மானுடவியல் ஆய்வுகளை சிறப்பாக ஓப்பீட்டுப்பிரக்ஞையுடன் செய்ய உதவக்கூடும். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அரசியல் முதிற்சி ஏற்பட்ட பின் “திராவிட நாடு” என்ற கருத்தாக்கம் இவ்வகையில் பரிணமிப்பது பொருத்தமானது, அவசியமானது என கருதப்படுவது இயல்பே.
  • தமிழுணர்வாளர்கள் அரசு நிறுவனங்களிலும், துறைகளிலும், IFS போன்ற அதிகாரிகள் வர்க்கத்திலும் போதிய இடம் பெற வேண்டும் என்கிறார். இதற்காக இந்தி படிக்கத் தயங்கக் கூடாது என்கிறார். இதில் தமிழர்களிடமிருந்து தமிழுணர்வாளர்களை அவர் வேறுபடுத்துவது முக்கியமானது. இதில் தமிழுணர்வு என்பதை ஆக்கபூர்வமான கலாசார சக்தியாக பார்க்கிறார்.

ஆனால், இத்தகு புதிய சிந்தனைகளை பழைய பல்லவிகளுடன் சேர்த்துவிடுகிறார். திராவிட இயக்கமே தமிழ் “கலாசார” பின்னடைவுக்குக் காரணம் என்பது தமிழ் சிறுபத்திரிகை உலகின் பிரதான மூட நம்பிக்கையாகும். பிற திராவிட இயக்க எதிரிகளின் உள்ளீடற்ற கூற்றுகளையும் பயன்படுத்துகிறார். உதாரணமாக “தேசிய நீரோட்டம்” என்ற கருத்து. நானறிந்தவரையில் இக்கருத்து சோ ராமசாமியின் அரசியல் காமெடிகளில் ஒன்று.

என்னுடைய கோணத்தில் இந்தப்பிரச்சினை குறித்த சிந்தனைகளை சுருக்கமாக மூன்று பகுதிகளில் பிரித்துத் தர விரும்புகிறேன். முதல் பகுதி நவீன காலத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் இருக்கும் உலகுதழுவிய முரண்பாடு குறித்தது. இது பின்வரும் இரண்டு பகுதிகளுக்கும் அடிப்படையானது. இரண்டாவது பகுதி தமிழக கலாசார வரலாறு பற்றியது. அதில் திராவிட இயக்கங்களின் பங்கினை குறித்த சிறுபத்திரிகை பொதுப்புத்தியின் தவறான புரிதல் மறுதலிக்கப்படுகிறது. மூன்றாவது பகுதியில் நவீனத்துவ இலக்கியம் நிறுவன ரீதியாகவும், பொதுமன்றத்திலும் அதிகம் அங்கீகரிக்கப்படும் சமூகங்களையும், குறைவாக அங்கீகரிக்கப்படும் சமூகங்களையும் எப்படி புரிந்து கொள்ளலாம் என்பதற்கு ஆய்வுச்சட்டக அளவில் மாற்று சாத்தியங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நவீன காலமும் கலை இலக்கிய நவீனத்துவமும்

நவீன காலத்திற்கும் கலை இலக்கிய நவீனத்திற்கும் உள்ள தீவிர முரண்பாடுகளை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வசதி கருதி நவீன காலத்தின் துவக்கப்புள்ளி 1492 என்று வைத்துக்கொள்ளலாம். சரியாகச் சொன்னால் நவீன காலத்தை காகமோனா (CACOMONA) காலம் என்று சொல்ல வேண்டும். கா-CAPITALISM-முதலீட்டியம்; க-COLONIALISM-காலனீயம்; மோ-MODERNITY-நவீனம்; னா-NATIONALISM-தேசீயம். இவையெல்லாம் ஒரே நேரத்தில் தோன்றவில்லை ஆனாலும் ஒன்றோடொன்று நுட்பமாகப் பிணைந்தவை. விரிவஞ்சி காகமோனா வரலாற்றை இங்கு தவிர்க்கிறேன். சத்தியக் கடதாசி வலைத்தளத்தில் சில விஷயங்களை கோடிட்டு காட்டியுள்ளேன். இந்த காகமோனா நவீன காலப் பிரக்ஞை தனிநபர்,குடியுரிமை,வரலாற்று வாதம், மானுட வாதம் இவற்றால் ஆனது. சுருக்கமாக இதை குடியுரிமைப் பிரக்ஞை என்று அழைக்கலாம். இதற்கு எதிர்வினையாக காலம்காலமாக மனிதனின் ஆன்மீக வேட்கையினை வெளிப்படுத்திவந்த இலக்கியம், புதிய வடிவங்கள் கொண்டு விமர்சன மொழியையும், அதிருப்தியையும், இருப்புசார்ந்த தத்துவப்பார்வைகளையும் வெளியிடத் தொடங்கியது. இதை அதிருப்தி பிரக்ஞை என்று கூறலாம். குடியுரிமைப்பிரக்ஞையும் அதிருப்தி பிரக்ஞையும் கொள்ளும் முரண்பாடே இரண்டின் வெளிப்பாடுகளையும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கச் செய்கிறது * . நவீனத்துவ இலக்கியத்தின் அதிருப்தியினை நவீன காலம் அங்கீகாரம் என்ற ஆயுத்தால் சந்திக்கிறது. இரண்டுக்கும் இடையிலான சமரச வெளியிலேயே புத்தகச் சந்தைகளும், பரிசுகளும், பொன்னாடைகளும், மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்களும், ராயல்டிகளும், கமிஷன்களும் இயங்குகின்றன. அவை மட்டுமல்ல. கல்விப்புலமும் கூட, குறிப்பாக மேற்குலகில், அதே சமரசவெளியில் இயங்குகிறது. கோக கோலா நடத்தும் பல்கலைக்கழகத்தில் முதலீட்டிய எதிர்ப்பு சிந்தனையாளர்கள் பணிபுரிகிறார்கள். இந்த முரண் இன்றியமையாதது. ஒரு நல்ல பதிப்பகம் இந்த சமரசக் கோட்டில் கட்டப்படும் கயிற்றிலேயே நடக்கிறது. ஒருபுறம் சரிந்தால் சந்தை, வாணிப நோக்கு, மறுபுறம் சரிந்தால் அதிருப்தி, நட்டம்.

மக்கள் திரள்களை பொறுத்தவரை அவர்கள் குடியுரிமை பிரக்ஞையினை அடைந்தால்தான் அதன் உப விளைவான மற்றும் எதிர் முனையான அதிருப்தி பிரக்ஞையினை புரிந்துகொள்ள முடியும். எனவேதான் நவீனத்துவ இலக்கியம் வெகுஜன இலக்கியமாவது கடினம். குடியுரிமை பிரக்ஞை கொண்டவர்களிலும் நூற்றில் ஒருவரே அதிருப்தி பிரக்ஞை கொள்ளக்கூடும். காரணம் அது மிக அசெளகரியமானது. எந்த பிரக்ஞையும் இல்லாமல் வாழ்வது வசதியானது என்பதால்தான் சிந்தனையை முற்றிலும் தவிர்த்த ஒரு நுகர்வுச் சமூகம் உலகெங்கும் உருவாகியுள்ளது. நவீன அறிவைக் கொண்ட, அபூர்வமாக அதை விமர்சிக்கும் விழைவு கொண்ட ஏழை, மத்திய தர வர்க்க வாசகர்களின் குறுகிய வட்டம் நவீனத்துவ இலக்கியத்தின் உண்மையான வாசகர்களானாலும் அவர்களால் இதனை பொருளாதார ரீதியாக ஆதரிக்க முடியாது. இச்சூழலில், முதலாளி, குட்டி-முதலாளி வர்க்கங்களைச் சார்ந்தவர்களே நவீனத்துவ கலை இலக்கிய போஷகர்களானார்கள். ஏனென்றால் வரலாற்றில் வளர்ச்சி என்பது விமர்சனம் சார்ந்தது என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள். அதன் காரணமாகவே மேலோட்டமாகவேனும் இவ்விதமான அதிருப்தி எழுத்திற்கான ஆதரவை கொடுக்கவேண்டும் என்பது பொது மன்றத்தின் விதியானது. ஆனால் பல சமயங்களில் கலைஞர்களும், எழுத்தாளர்களும் புறக்கணிப்பையும், கண்டனங்களையும் எதிர்கொண்டு போராடியே அங்கீகாரத்தை பெறவேண்டும் என்ற நிலையே இருந்தது. ஏனென்றால் ஆதரவு தரும் வர்க்கத்தின் பிரக்ஞையும், இலக்கியத்தின் பிரக்ஞையும் என்றும் முரண்பட்டேயிருந்தது – அப்படித்தான் இருக்கவும் முடியும். ஏனென்றால் எந்த தத்துவ, ஆன்மீக மனோபாவத்தை மறந்து முதலீட்டிய நவீனம் இயங்குகிறதோ அதை முன்னிறுத்துவதையே பணியாகக் கொண்டது இலக்கியம். உதாரணமாக ஈராக் போரை அறிவிக்க பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த பிறகு, அந்த அரங்கத்திலிருந்த பிக்காஸோவின் குவர்னிகா சுவர் ஒவிய பிரதியை அவசரமாகத் திரை போட்டு மறைக்க வேண்டியிருந்தது.
தமிழக சமூக வரலாற்றின் கூறுகள்

முதலில் தமிழகத்தில் கலாசார பின்னடைவு என்று எதுவும் கிடையாது. உலகின் கலாசாரங்கள் எல்லாமே சம பரிமாணங்கள் கொண்டவைதான். எல்லா சமூகங்களையும் போலவே ஆரோக்கியமான கூறுகளையும், பலவீனங்களையும் கொண்டது தமிழ் சமூகம். ஆனால் சிறுபத்திரிகையாளர்களுக்கு நவீனத்துவ இலக்கியத்தை மையப்படுத்தி வங்காளம், கேரளம், கர்நாடகா ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஏதோ தமிழகம் பின் தங்கி இருப்பது போல் தோன்றுகிறது. இது எதனால் என்று பார்ப்போம்.

உலகெங்கும் முதலாளி, குட்டி முதலாளி வர்க்கங்களே நவீனத்துவ கலை, இலக்கிய வடிவங்களுக்கு போஷகர்களாக இருந்தார்கள். இவர்களுடன் வீழ்ச்சியடைந்த பிரபுத்துவக் குடும்ப வாரிசுகளும் சேர்ந்து கொண்டார்கள். வெகுஜன கலை இலக்கிய வடிவங்கள் தேக்கம் கண்டன, அல்லது வர்த்தக நலன்களுடன் இணைந்து புதிய ஊடக வெளிகளை உண்டாக்கின. உழைக்கும் வர்க்கம், புதிய தொழிலாளி வர்க்கம் குடியுரிமை பிரக்ஞை சார்ந்த வெளிப்பாடுகளையே விரும்பின, அவையே அவற்றிற்கு தேவைப்பட்டன. இதன் காரணமாகவே திராவிட இயக்கம் மட்டுமல்ல, எந்த அரசியல் இயக்கமும் புதுமைப்பித்தனை ஓரளவுக்கு மேல் போற்ற முடியாது. புதுமைப்பித்தனின் வாடாமல்லி சிறுகதையின் நுட்பத்தை எந்த சீர்திருத்தவாதியால் அங்கீகரிக்க முடியும்? தனிப்பட்ட முறையில் உணர்ந்தாலும் மேடையில் பேசுவதில் உள்ள சிக்கல்தான் குடியுரிமை பிரக்ஞைக்கும், அதிருப்தி பிரக்ஞைக்கும் உள்ள வேறுபாடு. மேடையில் பேச பாரதிதாசனின் “கோரிக்கையற்று கிடைக்குதன்னே வேரில் பழுத்த பலா”-தான் உதவும். அது தவறுமல்ல. ஏனென்றால் சமூக இயக்கத்திற்கு குடியுரிமைப்பிரக்ஞையும் தேவைதான். அதுவும் இல்லையென்றால் முதலீட்டியம் சமூகத்தை முற்றிலும் சீரழித்து விடும் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உலகில் உண்டு. எனவே தி.க., தி.மு.க.தான் நவீனத்துவ இலக்கியத்திற்கு எதிரிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாம் நண்பர்கள் என்று நினைத்துக்கொள்ள முடியாது. பிரச்சினை என்னவென்றால் தி.மு.க. அதன் ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக கலை, இலக்கியத்தை பயன்படுத்தியதுதான். அதனால்தான் சிறுபத்திரிகைக்காரர்கள் ஏதோ தங்கள் சொத்தை அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டது போல நினைக்கிறார்கள். இது உலகுதழுவிய நிலையின் ஓரங்கம் என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு சமூகம் எந்த அளவு குடியுரிமைப்பிரக்ஞையிலும், முதலீட்டிய நவீன வளர்ச்சியிலும் முதிர்கிறதோ அதைப்பொறுத்துதான் அதிருப்தி பிரக்ஞைக்குக் கிடைக்கும் அங்கீகாரமிருக்கும் என்று யோசித்துப்பார்க்கலாம். உதாரணமாக பிரான்சில் அறிவுஜீவிகள், கலைஞர்களைப்பற்றி பரவலாக மக்கள் அறிந்திருப்பார்கள் என்று ஓர் கருத்து இருக்கிறது (அவர்களைப் படிப்பார்கள் என்று அல்ல; அறிந்திருப்பார்கள் என்று). இது இயல்புதானே? பிரான்சின் குடியுரிமைப்பிரக்ஞை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே புரட்சி வெடிக்கக் காரணமானதல்லாவா? ஏன், அதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நவீன தனிநபர் என்ற விபரீத வஸ்துவை தத்துவத் தளத்தில் உற்பத்தி செய்த தேகார்த்தே பிரெஞ்சுக்காரர்தானே? அதே சமயம், அதிருப்தி பிரக்ஞைக்காரர்களின் வெகுஜனப் பரிச்சியத்தை வைத்து பிரான்ஸை தெய்வத்திருநாடாக எண்ணும் சிறுபிள்ளைத்தனம் சிறுபத்திரிகையுலகில் உண்டு. ஆதிக்கவெறியும், சுரண்டலும், நிறவெறியும், ஆணாதிக்கமும், பல்வேறு பாசிசிப்போக்குகளும் பொங்கி வழியும் ஒரு நாடும்தான் பிரான்ஸ். அதன் வெகுஜன இதழ் ஒன்று ஃபூக்கோ, லக்கான், தெரிதா, லெவி ஸ்ட்ராஸ் ஆகியோரை இலைகளை உடுத்திய ஆதிவாசிகளாக சித்திரித்து அட்டைப்படம் போட்டது – பாராட்டாக அல்ல, இழிவு படுத்துவதாக எண்ணி.

தமிழகத்தில் முதலில் நவீன குடியுரிமை பிரக்ஞை அடைந்த சமூகப்பகுதிகள், உருவான முதலாளி, குட்டி முதலாளி வர்க்கங்கள் தப்பித்தவறியும் நவீனத்துவ இலக்கியத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. தமிழகத்தின் தனிப்பெரும் ஊடக நிறுவனமான இந்து நாளிதழ் குடும்பம் இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு சின்ன அக்கறையாவது காட்டிய தருணங்களுண்டா? மயிலாப்பூரில் மாளிகை கட்டிய பார்ப்பன வழக்கறிஞர்களும், காரைக்குடியில் மாளிகைகள் கட்டிய நகரத்தாரும் அதிருப்தி பிரக்ஞையால் என்றாவது தீண்டப்பட்டார்களா? க.நா.சுவை வீட்டுக்கழைக்காதீர்கள் என்று விகடன் வாசனையும், குமுதம் பார்த்தசாரதியையும் பெரியாரா தடுத்தார்? இன்று நடத்தும் தீராநதியை அன்றே செல்லப்பாவை வைத்து நடத்தியிருக்கலாமே? தமிழகத்தில் நவீனத்துவ கலை, இலக்கிய பின்னடைவு என்று ஒன்று இருந்தால் அதற்கு ஒரு முக்கிய காரணம் பார்ப்பனர்களின் ததியோன்னப் பிரக்ஞை (தயிர் சாதப் பிரக்ஞை) என்பதைச் சொல்லவேண்டும். ஏனென்றால் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவர்களே ஊடக வெளியிலும், பொது மன்றத்திலும் செல்வாக்காக இருந்தார்கள். அதிருப்தி பிரக்ஞையை வெளிப்படுத்திய பார்ப்பன எழுத்தாளர்களையும் கூட ஆபத்தான கிருமிகளனெவே நினைத்தார்கள். செல்லமாக “கிறுக்கு” “பித்துக்குளி” “உதவாக்கரை” என்று அழைத்தார்கள். தங்கள் வீட்டுப்பிள்ளைகள் எதையாவது படிக்கப்போய் அவர்களுக்கும் கிறுக்குப் பிடிக்கப் போகிறது என்று பாடப்புத்தகத்தைத் தவிர எதையும் படிக்கக் கூடாது என்று திட்டம் செய்தார்கள். எந்தப்பிரக்ஞையும் இல்லாத வக்கீல்களையும், மருத்துவர்களையும், பொறியியல் வல்லுனர்களையும், I.A.S. அதிகாரிகளையும் எந்திரங்களாக உருவாக்கினார்கள். கல்கி கிருஷ்ணமூர்த்தியையே பெரும் கலகக்காரர் என்று சொல்லத்தக்கதாகவே இவர்கள் வாழ்க்கை இருந்தது என்றால் யோசித்துப்பாருங்கள். இன்னொரு பிரிவினர் ஐரோப்பிய தாசர்கள். அதிருப்தி பிரக்ஞையையும் ஆங்கிலத்தில்தான் படிப்பார்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஆல்பர்டோ மொராவியா, ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று ஆங்கிலத்தில் பிளந்துகட்டும்போது லா.ச.ராமாமிர்தம் என்று சொன்னால் ஏளனமாகப் பார்ப்பார்கள். வாரா, கல்கியால் சாடப்பட்ட இப்பிரிவு, என்னுடைய தலைமுறை வரை தொடர்ந்தது. இப்போதுமிருக்கலாம். நான் I.I.T, R.E.C பக்கம் வெகுநாட்களாகப் போகாததால் “டாமில்ல மார்கேஸ் மாதிரி எழுதராளாமே? ஹவ் இஸ் இட் பாஸ்ஸிபில்?” என்று கேட்கும் யுவனையோ, யுவதியையோ சந்திக்கவில்லை. பார்ப்பனர்களை உதாரணமாகச் சொன்னாலும் பிற ஆதிக்க சாதியினரும் இவர்களுக்குச் சளைத்தவர்களில்லை.

இது இப்படி இருக்க திராவிட இயக்கம் தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தைப் பிரித்தது, அதனால்தான் நவீனத்துவ இலக்கியம் வீணாய்ப்போயிற்று என்றால் என்ன பொருள்? இந்த தேசிய நீரோட்டம் எங்கே எப்போது ஓடியது என்று கண்ணனால் விளக்க முடியுமா? பிராந்தியக் கட்சிகளைக் கண்டால் பிரிவினை என்று மனப்பிராந்தி கொண்ட சோ ராமசாமியின் மாய்மாலப் புலம்பலே இந்த தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகம் பிரிந்த கதை. சோவிற்கு கூட்டாட்சி தத்துவம் என்றால் என்னவென்று புரியாது. இருந்தாலும் இந்த தேசிய நீரோட்டம் என்னவாக இருக்க முடியும் என்று நாம் கற்பனை செய்வோம். தேசமெங்கும் விரவியுள்ள வெகுமக்கள் பண்பாட்டுக் கூறுகளாக இருக்குமோ? அவர்களது கலை இலக்கிய வடிவங்கள், கதைகள், வழிபாட்டு முறைகளோ? அப்படியென்று கொண்டால், திராவிட இயக்கம் அவற்றை ஒன்றும் செய்யவில்லை. தெருக்கூத்தோ, நரசிம்மக் கூத்தோ நடக்கக்கூடாது என்று யாரும் தடை செய்யவில்லை. வட நாட்டில் அல்லாவையும், யேசுவையும் வணங்குவதால் தமிழகத்தில் வணங்கக் கூடாது என்று சொல்லவில்லை.

சரி, அரசியல் வரலாற்றுப் போக்காக இருக்குமோ? அப்படியென்றால் தமிழரல்லாத பல்வேறு அரசியல் சித்தாந்தவாதிகளுடன் திராவிட இயக்கத்திற்கு நெருங்கிய தொடர்பு இருந்ததே? பகத்சிங்கை தமிழில் சுயமரியாதை இயக்கம் வெளியிட்டபோது வேறு எத்தனை இந்திய மொழிகளில் அது வெளிவந்திருக்கும்? நாற்பதுகளின் இறுதியில் தமிழகம் வந்த எம்.என்.ராய் தி.க.வின் செயல்பாடுகளைப் பார்த்து வியந்து போக, பெரியாரும் அண்ணாவும் அவரை தமிழகத்திலேயே தங்கி பணியாற்றும்படி அழைத்தார்களே? அண்ணாவின் முக்கிய நாடகமே “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்”தானே? அதை வங்க வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்காரின் நூலிலிருந்துதானே உருவாக்கினார்? இன்னும் எத்தனையோ சொல்லலாம். தனி நூல்தான் எழுத வேண்டும்.

புதிதாக உருவான ஊடக வெளியை எடுத்துக் கொள்வோம். திராவிட இயக்கப் பத்திரிகைகள், குறிப்பாக அண்ணாவின் திராவிட நாடு, இந்தியாவின் பிற பகுதிகளை பற்றி மட்டுமல்லாது, உலகெங்கிலும் நிகழும் மாற்றங்களைப்பற்றி தொடர்ந்து எழுதி வந்தன. இதில் உள்முகமாகத் திரும்பினார்கள் என்ற கூற்றுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? வேமன்னாவைப்பற்றி பேசினார்கள். ராஜாராம் மோகன்ராயைப் பற்றிப்பேசினார்கள். நாரயண குருவைப்பற்றி பேசினார்கள். மாக்ஸிம் கார்க்கியைப் பற்றி பேசினார்கள். ரூஸோ என்றும், லெனின் என்றும், ஸ்டாலின் என்றும் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தார்கள். இதில் எங்கே இருக்கிறது உள்முகத் திரும்பல்? முதலில் திராவிட இயக்க இதழ்களைப் படித்துப் பார்த்தால் தெரியும். நல்லவேளையாக பெரியார் திடலிலும், அறிவாலயத்திலும் சில இதழ்த் தொகுப்புகள் இருக்கின்றன. நல்ல கட்டுரைகளை தொகுத்து காலச்சுவடு நூலாகக் கூட வெளியிடலாம். அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திராவிட நாடு இதழ்த் தொகுப்பு ஒன்றை கொண்டுவரலாம்.

ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது. அது இந்தி மொழி படிப்பது. இந்தி மொழியை படிக்கக்கூடாது என்று தமிழகத்தில் யாரும் தடுக்கப் படவில்லை. இந்தி பிரச்சார சபையின் புள்ளி விவரங்களை கோரிப் பார்த்தால் தெரியும். ஒவ்வொரு சிற்றூரிலும் காலையிலும், மாலையிலும் இந்தி வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களை கணக்கெடுத்துப் பார்ப்போம். கட்டாயக் கல்வியாக பள்ளிகளில் இந்தி பயிற்றுவிப்பதுதான் எதிர்க்கப் பட்டது. இதிலும் ஒன்று சொல்லவேண்டும். கட்டாய இந்தி எதிர்ப்பை திராவிட இயக்கம் உருவாக்கவில்லை. கட்டாய இந்தி எதிர்ப்புதான் திராவிட இயக்கம் வலுப்பெற, வலிமை மிகு அரசியல் சக்தியாக மாறக் காரணம். மக்கள் ஏன் இந்தியை எதிர்த்திருப்பார்கள் என்பது குறித்த அரசியல் வரலாற்றுச் சிந்தனைக்கு எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் “Brahmin & Non-Brahmin: The Genealogies of Tamil Political Present” நூல் புதிய விளக்கமளிக்கிறது. அதன்பின் அதையொத்த கருத்தியல் சிந்தனைக்கு Ernesto Laclau வின் “Populist Reason” என்ற சமீபத்திய நூலை படித்துப் பார்க்கலாம். வேறொரு சந்தர்ப்பத்தில் இது குறித்துத் தனியாக எழுதுவேன். ஆனால் தேசத்தைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஊடக மொழியான இந்தியைப் படிக்காததனால் ஒரு பிரதேசம் தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்துவிடும் என்றால் எவ்வளவு பலவீனமான நீரோட்டமது? இன்றைக்குகூட தி.மு.க அரசே பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப்பாடமாக்கினால் அந்தக் கட்சியே காணாமல் போய்விடும். இது மொழி வெறியல்ல. அதுதான் மக்களின் குடியுரிமைப் பிரக்ஞை.

இந்தி படிப்பதற்கும் தமிழ் நவீனத்துவ இலக்கியத்தை உலக அரங்கிற்கு கொண்டுசெல்வதற்கும் என்ன தொடர்பு? தமிழ் படைப்புகளை பிற மொழிகளில் மொழியாக்கம் செய்ய நல்ல பண வசதி கொண்ட பதிப்பகங்கள் வேண்டும். ஒரு நூலை மொழிபெயர்க்க ஒரு லட்சம் சன்மானம் என்றால், (ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்) ஆங்கிலப்பேராசிரியர்களோ, பிறரோ அதற்கு விருப்பத்துடன் முன்வருவார்கள். அடிப்படையில் இதெல்லாம் முதலீடு தொடர்புடைய விஷயம். ஆனால் அங்கீகாரம் என்பது விலை கொடுத்து வாங்குவதல்ல. அது அந்த படைப்பின் வீர்யத்தை பொருத்தது. தமிழில் ஆற்றல் மிக்கதாயிருக்கும் படைப்பு வேறு மொழியில், கலாசார சூழலில் அவ்விதமிருக்கும் என்று சொல்ல முடியாது. ஐரோப்பிய நாடுகளை மறந்துவிட்டு இந்திய மொழிகளிலிருந்து சீன, ஜப்பானிய, அரேபிய மொழிகளுக்கு படைப்புகளை கொண்டு செல்வது இன்னமும் பொருத்தமாயிருக்கலாம். இதற்கெல்லாம் தமிழ்ப்பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கவேண்டிய தேவையில்லை. தேசிய நீரோட்டப் புலம்பலும் தேவையில்லை.

வங்காளம், கன்னடம், மலையாளம் என்று பேசும் சிறுபத்திரிகைக்காரர்கள் ஏன் தெலுங்கு, ஒரியா, குஜராத்தி என்று பேசுவதில்லை? முதலமைச்சர் அஞ்சையாவை ராஜீவ் காந்தி அறையும் வரை தேசிய நீரோட்டத்துடன் சென்ற ஆந்திரப்பிரதேசம் நவீன தெலுங்கு இலக்கியத்தை எவ்வளவு தூரம் உலக அரங்கிற்கு கொண்டு சென்றது? அங்கெல்லாம் இந்தி படிக்கிறார்களே? அதைவிட முக்கியமான கேள்வி நவீன இந்தி இலக்கியம் எந்த அளவு உலகின் கவனத்தைப் பெற்றுள்ளது என்பது. கண்ணன் இதைப்பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். தர்மவீர் பாரதியை உலக இலக்கிய அரங்கம் அறிந்திருக்கிறதா? சல்மான் ருஷ்டிக்கு அப்படி ஒருவர் எழுதுகிறார் என்று தெரியுமா? நவீன இந்தி இலக்கியம் வங்காள இலக்கியம் அளவிற்கு உலகில் அறியப்படவில்லையென்றால் அதற்கு இந்தி இலக்கியவாதிகள் இந்தி படிக்காதது காரணமாயிருக்க முடியாது.

நிறுவனங்களும், வலைப்பின்னலும்

நிகழ்வுகள் எல்லாமே வரலாற்றுப் போக்கால் நிர்ணயிக்கப் பட்டவையல்ல. அதில் தற்செயலின் பங்கும் முக்கியமானது. பொதுவாக குடியுரிமைப் பிரக்ஞையின் வளர்ச்சியே வரலாறாக உருவகம் கொள்ளும். அதிருப்தி பிரக்ஞை அவ்வப்போது குறுக்கே பாய்ந்து செல்லும் மின்னல் போன்றது. அதை புரிந்து கொள்ள வரலாறு என்பதை விட நுண்-வரலாறு (micro-history), வம்சாவழியியல் (genealogy) போன்றவற்றுடன் சமூக வலைப்பின்னல் போன்ற கருத்தாக்கங்களையும் பயன்படுத்த வேண்டும். ஒரு கல்லூரி, ஒரு பேராசிரியர், அவரது இரண்டு தலைமுறை மாணவர்கள் போதும் ஒரு இலக்கியப்போக்கை கவனப்படுத்துவதற்கு. அவர்களது வலைப்பின்னல் தொடர்பு எந்த அளவு செல்வாக்கமிக்க சமூகத்திலும் அதிகார வர்க்கத்துள்ளும் ஊடுறுவுகிறது என்பதைப் பொறுத்துதான் நிறுவனங்களின் அங்கீகாரமும் அமையும். சாகித்ய அகாடெமியின் தலைவராவதற்கு எல்லாத் தகுதிகளும் உடையவர்தான் இந்திரா பார்தசாரதி. டில்லியிலும், வார்ஸாவிலும் பணி புரிந்தார். அவரது வலைப்பின்னல் அவரை பாண்டிச்சேரிக்கு கொண்டுவந்தது. ஒருவேளை அகாடெமிக்கு கொண்டுசென்றிருக்கலாம். சிவசங்கரி, மாலன், ஜெயகாந்தன் முதலானோர் அக்னி என்ற அமைப்பு துவங்கி இந்தி படிக்கவேண்டும் என்று பிரசாரம் செய்தார்கள். சிவசங்கரி ராஜீவ் காந்தியுடன் பரிச்சயம் கொண்டிருந்தார். அவர்கூட சாகித்ய அகாடெமிக்கு தலைவராகியிருக்கலாம். சச்சிதானந்தன், அனந்தமூர்த்தி போன்ற கெட்டிக்கார தமிழ் இலக்கியவாதி ஆங்கிலப் பேராசிரியர்கள் ஏன் உருவாகவில்லை என்பதற்கு சமூக வரலாற்றுக் காரணங்களை கண்டுபிடிப்பது கடினம். இது ஒரு தற்செயலான வலைப்பின்னல் பிரச்சினையாக இருக்கலாம். நகுலன் கூட ஆங்கிலப் பேராசிரியர்தான். ஆனால் நிறுவனங்களில் பணியாற்றும் மனநிலை கொண்டவரல்ல என்று நினைக்கிறேன். இன்னொரு ஆங்கிலப்பேராசிரியரான சிறுபத்திரிகைக்காரர் ஒருவர் இருக்கிறார். அவர் குடத்திலிட்ட விளக்காக வாழ விரும்பும் காந்தியவாதி. கெட்டிக்காரராக இருந்திருந்தால் எத்தனையோ பதவிகளைப்பார்த்திருக்கலாம். இதற்கெல்லாம் வரலாற்றுக் காரணங்களைத் தேட முடியாது.

தமிழ் நவீனத்துவ இலக்கியவாதிகள் தத்துவத்தையும், வரலாற்றையும் சரியாகப் புரிந்துகொண்டால் தங்கள் இயங்கு தளமும் திராவிட இயக்கத்தின் இயங்கு தளமும் முற்றிலும் வேறானவை என்பதை உணரலாம். உலகின் பிற குடியுரிமைப் பிரக்ஞை அரசியல் இயக்கங்களைவிட தி.மு.க அதிருப்திப் பிரக்ஞையுடன் விரோதம் கொள்ளாதது. பாரதி-பாரதிதாசன் வம்சாவழிகள் என்று பார்த்தால் நெருக்கத்தின் சாத்தியம் புரியும். ஆனால் காந்தீயத்தையும், கம்யூனிஸத்தையுமே அரசியல் தத்துவங்கள் என்று நினைக்கும் சிறுபத்திரிகை மனநிலை, திராவிட இயக்கம் தமிழகத்தின் வரலாற்று சக்தி என்பதையும், அது இங்கு ஓர் ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்தியது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறது. அவர்கள் விளைவித்த குடியுரிமைப்பிரக்ஞை வாயிலாகவே பலர் அதிருப்திப்பிரக்ஞையை நோக்கி நகர்ந்து நவீன இலக்கிய தளத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதையெல்லாம் புரிந்துகொள்ளும்போதுதான் புதிய தெளிவுகளும், சிந்தனையும் பிறக்கும். திராவிட இயக்கத்தின் மேல் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும், காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் என்ன நடந்தது என்று இணைத்துப் பார்த்தால் இது தேசிய நீரோட்டப் பிரச்சினையல்ல என எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

கசடதபறவின் இரண்டாவது இதழில் ஜரதுஷ்டிரன் என்பவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அரசு நிறுவனங்களைத் தாக்கி முந்தைய இதழில் வந்திருந்த கட்டுரை தேவையற்றது என்ற அவர், ஜரதுஷ்டிரன் பார்வை பட்டதிலேயே வித்தைக்காரனின் கயிறு அறுந்து விழுந்தது; நமது படைப்புகளின் தீவிரமே போலித்தனத்தை அம்பலப்படுத்தவேண்டுமே தவிர கூச்சலிடக்கூடாது என்றார். அவரது “ஹமார்பாரி, துமார்பாரி, நோக்சல்பாரி” “ஹரி ஓம் தத் சத்” போன்ற கவிதைகள் அதிருப்திப் பிரக்ஞைக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்கள். அவரைப்பற்றிய தகவல்கள் தெரிந்தால் ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் என்று விருப்பம்.

*இந்த வகைப்பாட்டை சுசி தாருவின் கட்டுரை ஒன்றிலிருந்து வசதி கருதி எடுத்தாள்கிறேன். சரோஜ் பதக் என்ற குஜராத்தி எழுத்தாளரின் சிறுகதை மற்றும் வாழ்வை உதாரணித்து எழுதிய முக்கியமான கட்டுரை அது. பார்க்க: Susie Tharu, Citizenship and its Discontents in “A Question of Silence? The Sexual Economies of Modern India”, Ed.Mary E.John & Janaki Nair, Kali for Women, Calcutta,1998.

(உயிர் எழுத்து பத்திரிகை அக்டோபர் 2009 இதழில் வெளியானது)