சோதனை

தோழமைப் பிரதிகள்

சோதனை

பரன்

“இதுக்கெல்லாம் பேமிற் தரேலாது.” மேலதிக அரசாங்க அதிபர் நாதன் சர்வசாதாரணமாகச் சொன்னார்.

“அப்படியெண்டால் நாங்கள் என்ன செய்யிறது. இதுவரைக்கும் அஞ்சு பிள்ளையளையும் மூண்டு ரீச்சர்மாரையும் கடிச்சுப்போட்டுது” அதிபர் நல்லையா கோபமாகப் பேசினார்.

“குரங்கு கடிக்குதெண்டால் உடனே அதைச் சுட வேண்டுமெண்டு யார் சொன்னது? அதைக் கலைக்கிறதுக்கு எத்தனை வழி இருக்கு!” ஏ.ஜீ.ஏ திருப்பிக் கெட்டார்.

“வேற வழி இல்லை. எத்தனை தரம் கலைச்சாச்சு என்ர அலுவலக பைல் எத்தனையக் கிழிச்சுப்போட்டுது. பள்ளிக்கூட மரங்களுக்குக் கீழ ஒரு பிள்ளையளும் போகேலாது. கிட்டப் போனால் வெருட்டுது. அடிச்சால் பாய்ஞ்சு கடிக்குது! ஒவ்வொரு நாளும் பிள்ளையளை ஆசுப்பத்திரிக்குக் கொண்டுபோறதுதான் வேலை! ஏற்ப்பு வலி வந்தால் தேப்பன் தாய்க்கு நானே மறுமொழி சொல்லுறது?” நல்லையா மாஸ்ரர் கொதித்தார்.

“சரி…. சரி….! சுடுறதுதான் வழியெண்டால்… பின்னே ஏன் என்னட்டை வந்தனீங்கள்? பொலீசுக்குப் போய் சொல்லிறது தானே!” ஏ.ஜீ.ஏ திருப்பிக் கேட்டார்.

“அவைதானே சேர் சொல்லுகினம். உங்கடை பேமிற் இல்லாமல் தங்களால சுடேலாதாம்!” மாஸ்ரரும் விடுகிற பாடாயில்லை.

ஏ.ஜீ.ஏக்குப் கோபம் வந்தது! தலைக்கு மேல வேலை கிடக்கு! இந்த மாஸ்ரர்….!
இருந்தாலும் நல்லையா மாஸ்ரர் ஊரில நல்ல பிரசித்தம்…. அவரைக் கோபிக்க முடியாது! மகாவித்தியாலயம் இண்டைக்கு இவ்வளவு பெயர் எடுத்ததுக்கும், ஏ எல் இல நல்ல ரிசல்ட் கிடைக்கிறதுக்கும் நல்லையா மாஸ்ரர்தான் காரணம் என்பது ஊருக்கே தெரியும். மாஸ்ரர் கறார்ப் பேர்வழி.. எடுத்த காரியம் முடிக்காமல் விடமாட்டார்!… அதுவும் ஏ.ஜீ.ஏ நாதனுக்குத் தெரிந்ததுதான்.

“சரி மாஸ்ரர், நாளைக்கு வாருங்கோ. நீங்கள் சொல்லுறது சட்டப்படி சரிதான்! எண்டாலும் பிராணிவதைத் தடுப்புச் சங்கம்… அது, இது எண்டெல்லாம் பிரச்சினை வரலாம். நான் ஏதாவது வழி தேடிப்பிடிக்கிறேன்.” நாதன் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“சேர்… நாளைக்கும் வருவன் நல்ல முடிவாச் சொல்லுங்கோ!” வேகங் குறையாமலே மாஸ்ரர் போனார்.

சேர்.. மாஸ்ரர் நல்ல மனுசன்! தேவை இல்லாமல் பிரச்சினை கொண்டுவர மாட்டார். ஆனால்… பிரச்சினை தீருமட்டும் விடவும் மாட்டார்!” ஏ.ஓ. கந்தசாமி சிரித்தபடி சொன்னார்.

*

“ஐயோ சேர்!….. அந்த விசர்க்குரங்கு, எக்சாம் பேப்பர்க் கட்டைப் பிடுங்கிக் கொண்டு ஓடுது!”…. நிர்மலா ரீச்சர் பதறியடித்தபடி அதிபரின் அறைக்குள் ஓடிவந்தா.

“ஏ எல் சோதனை நடக்குது! இவங்கள் கண்டறியாத இன்விஜிலேட்டர்மார்!…குரங்கு காணாத ஊரிலே இருந்து வந்தவங்கள்! விசர்க்குரங்கு என்னவெல்லாம் செய்யும் எண்டு தெரியாதவங்கள்!.. இப்ப என்ன செய்யிறது?” பதட்டத்துடன் வெளியே வந்தார், நல்லையா மாஸ்ரர்.

“மாஸ்ரர்! குரங்கு கிணத்தடியில் பேப்பர் பக்கற்றைப் போட்டிட்டு ஓடிட்டது. நான் கலைச்சுக் கொண்டுபோய் ஒருமாதிரி எடுத்திட்டன்….” மூச்சு வாங்கியபடி சீவ் இன்விஜிலேட்டார் குணரத்தினம் வந்தார்.

குணரத்தினம் கல்வி அலுவலகத்தில் உதவிப் பணிப்பாளராக இருப்பவர். வெளியூர்க்காரர்! பயந்த சுபாவம்! பிள்ளைகளை விட, அவர்தான் கலவரப்பட்டு நிற்பது மாஸ்ரருக்கு விளங்கியது.

“ரீச்சர்! ஸ்கவுட் மாஸ்ரரிட்டைச் சொல்லி, ஒரு அஞ்சு பொடியளை கெற்றப்போல் வைச்சுக் கொண்டு நிக்கச் சொல்லுங்கோ!….. குரங்கைக் கண்டால் தூரத்தில் வைத்தே அடிக்கச் சொல்லுங்கோ, வாங்கோ,குணரத்தினம்! எக்சாம் ஹோலுக்குப் போவம்” என்று மாஸ்ரர் புறப்பட்டார்.

ஹோலில் பிள்ளைகள் எல்லாம் சிரித்துக் கொண்டு நின்றார்கள். குணரத்தினம் ஓடின ஓட்டத்தைப் பார்த்ததில் அவர்களுக்கு வேடிக்கை!

“இளவட்டங்கள், பயம் தெரியாது…. எல்லாத்துக்கும் சிரிப்புத்தான்!” ….மாஸ்ரர் தனக்குள் நினைத்துக் கொண்டார். ஸ்கவுட் மாஸ்ரரின் கெற்றப்போல் படையணியின் புண்ணியத்தில் அன்றைய சோதனை பிரச்சினையில்லாமல் முடிந்தது. “இன்னும் மூன்று நாள் சோதனை இருக்கு எப்படி ஒப்பேத்தப் போறனோ?” …மாஸ்ரர் பெருமூச்சு விட்டார். குணரத்தினம் நல்லாப் பயந்துபோயிருந்தார். “ஏதும் பிரச்சினை வந்தால் இன்குவாரி அது, இது என்று…! ஏதோ, இன்றைய பாட்டுக்குத் தப்பியாச்சு” என்று நினைத்துக் கொண்டார்.

*

ஏ.ஜீ.ஏ நாதன், மாஸ்ரரின் அலுவலகத்தில் இருந்தபோது, தேவராஜ் பதட்டமாக உள்ளே வந்தார்.

“என்ன விஷயம்? பொலிஸ் ஜீப்பும் ஆமி ஜீப்பும் நிக்குது. பொடியள் யாரையும் பிடிக்க வந்தவங்களோ?” பாடசாலை அபிவிருத்திச் சபைத் தலைவர் ஆனபடியால் நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவர்தான் இடிதாங்கி!

“எல்லோரும் துவக்கோட நிக்கிறாங்கள் எண்டு சனம் பயப்பிடுது……. ஆரையும் பிடிக்கப் போறாங்களோ என்று பயப்பிடுகினம்.. அதுதான் நான்…!” முடிக்காமலே விட்டார் தேவராஜ்.

மாஸ்ரர் யன்னலால் எட்டிப் பார்த்தார். உண்மைதான! பள்ளிக்கூட மைதானம் முழுவதும் சனம் கூடிநின்றது.

“அட! சனம் வேறமாதிரி விளங்கிப் போட்டுது. இவங்கள் குரங்கு சுடவந்தவங்கள்!” ஏ. ஜி.ஏ நாதன் விளங்கப்படுத்தினார்.

“வாருங்கோ! முதலில போய்ச் சனத்தை அனுப்புவோம். இண்டைக்கும் சோதனை நடக்குது. பிள்ளையளைக் குழப்பக் கூடாது!” என்றபடி மாஸ்ரர் எழும்பினார். ஏ. ஜி.ஏயும் தேவராஜாவும் பின்னால் போனார்கள்.

மாஸ்ரரும் ஏ. ஜி.ஏயும் விளங்கப்படுத்தின பிறகு சனநெரிசல் குறைந்தது. மீதிச்சனம் வேடிக்கை பார்க்க, இரண்டு மூன்று பேர் துவக்கும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி அலைந்தார்கள். அவர்களுக்கு வால் பிடித்தபடி சின்னப்பொடியளின் கூட்டம் ஒன்றும் திரிந்தது. சோதனை தொடங்க நேரம் இருந்தபடியால் அந்தப்பிள்ளைகளும் விடுப்புப் பார்த்தன.

“காலமை ஏழு மணியிலிருந்து திரிகிறாங்கள், குரங்கைத்தான் காணேல்லை!” யாரோ சொன்னார்கள். “சோதனை நேரம் சுடவேண்டாம் பிள்ளையள் குழம்பிப்போம். பின்னேரமும் குரங்கு வரும்!” குரங்கின் ரைம்ரேபிள் தெரிந்த மாஸ்ரர் ஏ. ஜி.ஏ க்குச் சொன்னார்.. ஏ. ஜி.ஏ சொல்ல பொலிசும் விளங்கிக் கொண்டது. மூன்று பேரைத் துவக்குடன் விட்டுவிட்டு ஜீப்புகள் இரண்டும் திரும்பிப் போயின. ‘இப்போதைக்குச் சுடாங்களாம்” என்றபடி சனமும் கலைந்து போனது.

அந்த மூன்று பேரும் துவக்குடன் பள்ளிக்கூடம் முழுக்கத் தேடினார்கள். வேலியைக் கடந்து, மரஙகள் சடைத்திருந்த காணிப்பகுதிக்கும் போய்வந்தார்கள். பொடிசுகளும் கூடவே திரிந்தன. குரங்கின் சிலமனே இல்லை! மத்தியானம் ஜீப்பில் சாப்பாடு வந்தது. சாப்பிட்ட பின்பு கொஞ்சம் உட்கார்ந்தார்கள். ‘சென்றி”யில் கூட இப்படி அலுப்பில்லை’ என்பது அவர்களது முகத்தில் தெரிந்தது.

*

பின்னேரம் குரங்கின் தலை தெரிந்தது. எல்லோரும் உசாராகினார்கள்.

‘இப்ப சுட வேண்டாம்! சோதனை முடிய வேணும்!” மூன்று பேரில் தலைவன் போல இருந்தவன் சொன்னான். ‘சத்தம் போடாதையுங்கோ! குரங்கு ஓடிவிடும்!” என்று பொடிசுகளையும் அதட்டினான். அதுகளும் சும்மா இருந்தன.
குரங்குக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். மாமரத்தில் ஏறிக் கொப்புகளை உலுக்கியபடி அங்குமிங்கும் ஓடியது. ‘கீறீச்சு கீறீச்சு”சென்று கத்தியது. மாங்காயைப் பிடுங்கி வீசியது. மற்றப்படி மயான அமைதி! இன்றைக்கு அதைச் சீண்ட எவருமில்லை! என்ன நினைத்ததோ, குரங்கு பழையபடி வேலியைக் கடந்து மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் போனது.
அங்கிருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய்கள் கீழே விழுந்து சிதறின. குரங்குக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். எல்லோரும் சத்தமின்றி அமைதியாக இருந்தார்கள். சோதனை முடிந்து வந்த பிள்ளளைகளும் போகாமல் குரங்கை எதிர்பார்த்து நின்றன.

தலைவன் மணிக்கூட்டைப் பார்த்துவிட்டு கையைக் காட்ட, மூன்று பேருமாக குரங்கு போனபக்கம் போனார்கள். என்ன ஆச்சரியம்! அவர்களைப் போகவிட்டுக் குரங்கு எட்டிப் பார்த்தது. மெதுவாக மாமரத்தில் இருந்து இறங்கி வந்து சனத்தை விரட்டியது ‘குரங்கு… குரங்கு..” என்று பொடிசுகள் கத்த, ‘வீர்’ரென்று கல்லொன்று பறந்து போய் குரங்கின் முன் விழுந்தது. குரங்கு கத்தியபடி மிரண்டு ஓட, மூன்று பேரும் துவக்குடன் ஓடினார்கள். பொடிசுகளும் பின்னால் ஓடின!

“டேய்! பின்னுக்குப் போகாதையுங்கோடா! குண்டு கிண்டு பட்டிடும்!” ஏஓ கந்தசாமி பொடியன்களைக் கலைத்தார். ‘ஒப்பரேசன் குரங்கு’ மேற்ப்பார்வைக்கு அவரை விட்டு விட்டு ஏ. ஜி.ஏ தனது அலுவலகத்துக்குப் போய்விட்டார்.

பழையபடி எல்லாம் அமைதியாக இருந்தது! தீடீரென்று, மரத்தின் மேலிருந்து ஏதோ ‘பொத்’தென்று விழுந்தது. கூட்டம் ஓடிக்கலைந்தது…., திரும்ப ஓடி வந்து பார்த்தது… குரங்குதான்!! இரத்த வெள்ளத்தில் கிடந்தது. முகம் சிதைந்து போய்க் கிடந்தது.

திரும்பவும் சனம் பயந்து போய் ஓடியது. தலைவன் வந்து பார்த்து விட்டு ‘ஓகே’ என்றான். மூன்று பேரும் வெளியில் நின்ற ஜீப்பில் ஏறிப் போனார்கள்.

“அப்பாடி! ஒரு மாதிரிக் குரங்குப் பிரச்சினை தீர்ந்தது!” நிர்மலா ரீச்சர் நிம்மதிப் பெருமூச்சு விட்டா.

“ஒரு வெடிச்சத்தம் கூட இல்லை! ஆனால் முகம் சிதறிப் போய்க் கிடக்கு… எப்படி?” என்றபடி ஏஓ கந்தசாமி கிட்ட வந்தார்.

‘அவங்கள் அப்படித்தான் சுடுறவங்கள்! உதென்ன புதுசே!” ……… என்றபடி நல்லையா மாஸ்ரர் தன் அலுவலகத்தை நோக்கி நடந்தார்.
**
நன்றி : ஞானம் – மே 2006

soothani

5 thoughts on “சோதனை

  1. பரன்!
    உங்களுக்கு இதுவரையில ஒர கொமன்ற்ம் கிடைக்கவில்லையெண்டத முதலாவது கொம்ற்.
    பரவாயில்லை.
    நகைச்சவையோட்டமும் நம்பிக்கைதரும் எழுத்தும் உங்களுடையது. குரங்க பாடசாலை என்று நீங்கள் ஓடித்திரிந்தபோது உற்சாகமாக நுனிக்கதிரையில் இருந்து வாசிக்கத்தூண்டியது. ஆனால் கடைசியில் ஏமாற்றி விட்டீர்கள்.
    நீங்கள் ஏதாவது உருவகப்படுத்தியிருந்தால் அதைப்பற்றி கொஞ்சம் வெளிப்படையாகவே கதையுங்கோ. வேற பேரிலை விளக்கம்தந்தாலும் பரவாயில்லை.

    கதைக்கிறது உங்களுக்கும கதைக்கம் நல்லது.

  2. தயவு செய்து இந்த பரன் நான் என எண்ணிவிட வேண்டாம். ஏற்கனவே நட்புடன் தோழமையுடன் உங்களோடு கருத்தாடலில் ஈடுபட்டு வரும் இந்த பரன் அல்ல சோதனை என்ற பதிவுக்குரியவன்.

  3. உங்களுக்கு என்ன பெயர்?…

    சர்மா….

    இல்லை உங்களுக்கு என்ன பெயர்?..

    சர்மா

    இந்த பதிவு நியாயபூர்மான கேள்வியை எழுப்பி நிற்கிறது!

    வேதம் புதிது படத்தில் ஒரு காட்சிப்பதிவு…

    சிறுவன் ஒருவனை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக்கடக்க நடக்கின்றார் பாலுத்தேவர் என்ற பாத்திரம் ஏற்ற சத்தியராஐ;..

    பாலுத்தேவர் தத்துவம் நிறைய பேசிய படியே நடக்கின்றார்.

    சிறுவனுக்கு சமூகம் பற்றி உபதேசம் செய்தபடி ஆற்றில் நடக்கின்றார்…. சாதியம் குறித்து பாலுத்தேவர் ஏதோ பேசிக்கொண்டிருக்க…

    தோளில் இருந்த சிறுவன் பாலுத்தேவரை பார்த்து

    உங்களுக்கு என்ன பெயரர்?…… என்கிறான்.

    பாலுத்தேவர் என்கிறார் அவர்.

    சரி… பாலு என்பது உங்கடை பெயர்…. உங்கடை பெயருக்கு பின்னாலை இருக்கின்ற தேவர் என்பது என்ன?…

    நடையை சற்று நிறுத்துகிறார் பாலுத்தேவர். சிறுவன் பாலுத்தேவரின் கன்னங்களில் பல முறை அறைவது போல் ஒரு கற்பனை காட்சிப்படுத்தப்படுகின்றது…..

    அந்த ஞாபகம் இங்கு வருகின்றது…….

    நன்றி…. அளவானவர்கள் எவராயினும் அணிந்து கொள்ளலாம்.

  4. மிகத்தெளிவான கதை, சொல்லப்பட்ட உத்தியாலும் ,நடையாலும் மிளிர்கிறது.

Comments are closed.