தூற்று .கொம் – பகுதி 3

கட்டுரைகள்

டந்த ஜனவரி 2011ல் கொழும்பில் நடந்து முடிந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை ‘கீற்று இணையத்தளம்’ எவ்விதம் எதிர்கொண்டது  எனக் கேட்டால், அது கடைந்தெடுத்த பொய்களாலும் திட்டமிட்ட அவதூறுகளாலுமே எதிர்கொண்டது என்பதைத் தவிர வேறு மரியாதையான பதிலொன்றைச் சொல்வதற்கு கீற்று எனக்கு வாய்ப்பு வழங்கவேயில்லை.

மாநாட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாநாட்டிற்கான தயாரிப்புப் பணிகள் லெ. முருகபூபதியினதும் ‘ஞானம்’ சிற்றிதழின் ஆசிரியர் ஞானசேகரனது தலைமையிலும் தொடக்கப்பட்டன. மாநாடு நிகழ்வுகள் குறித்துத் திட்டமிடுவதற்காக 2010 ஜனவரியில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் கொழும்பில் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பிற நகரங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாநாட்டிற்காக மூத்த இலக்கியவாதிகள் டொமினிக் ஜீவா, அந்தனி ஜீவா போன்ற பலர் கடுமையாக உழைப்பைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இந்தச் செய்திகள் எல்லாம் இலங்கையின் நாளிதழ்களிலும் தமிழகச் சிறுபத்திரிகைகள் சிலவற்றிலும் வெளியாகின. குறிப்பாக மூத்த எழுத்தாளர் எஸ்.பொவின் வழிகாட்டிலில் இயங்கிய ‘யுகமாயினி’ இதழிற் கூடச் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில்தான் எட்டு மாதங்கள் கழித்து  மதிப்புக்குரிய மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. கீற்றில் (07 ஓகஸ்ட் 2010) மாநாடு குறித்த அவதூறுகளையும் மோசமான எதிர்வுகூறலையும் கக்கி அவதூறு  அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தார். அதைச் ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்ட கீற்று இணையத்தளம் பின்வந்த நாட்களில் எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராகக் கோழைத்தனமான ஓர் அவதூறு யுத்தத்தை நடத்தியது. மாநாட்டை அவதூறு செய்து புனையப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் அறிக்கைகளும் கீற்றில் தொடர்ச்சியாக வெளியாகின.

மாநாட்டை நிராகரிக்கக் கோரி நூறுவரையான தமிழகத்து எழுத்தாளர்களும், முப்பது புலம்பெயர்ந்த எழுத்தாளர்களும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். கூட்டறிக்கையை ஒருங்கிணைத்தவர்களாக அய்ந்தாறு பெயர்கள் அந்த அறிக்கையில் காணப்பட்டன. அந்தப் பெயர்களில் ஒன்றாகக் கீற்று ஆசிரியரின் பெயரும் இருந்தது. ஆக, ‘பல்வேறு கருத்துகளிற்கும் களம் அமைத்துக் கொடுப்பதே தனது பணி’ எனச் சொல்லிக்கொண்டிருந்த கீற்று ரமேஷ், எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக நேரடியாகவே களமிறங்கினார். அவதூறு என்ற மோசமான ஆயுதம் அவரின் கைகளில் பளபளத்துக்கொண்டிருந்தது. அந்த ஆயுதத்தைத் தீட்டிக்கொண்டேயிருக்கும் சாணைக்கல்லாகக் கீற்று இணையம் கிடந்தது.

கீற்றில் எழுத்தாளர் மாநாடு குறித்து முன்வைக்கப்பட்ட ‘கருத்து’களின் சாரத்தை இரண்டாக வகுத்துக்கொள்வோம். முதலாவது வகை: அப்பட்டமான அவதூறுகள். இரண்டாவதுவகை: அரசியல்ரீதியான எதிர்ப்புகளும் எதிர்வுகூறல்களும். முதலாவது வகையை முதலில் பரிசீலிக்கலாம்.

எஸ்.பொவின் அவதூறுகளின் சாரத்தை அவருடைய வார்த்தைகளிலேயே  இங்கு  தொகுத்துக்கொள்ளலாம்:

(1) 1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்கில் குடியேறினார்கள். அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்களோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது.

(2) சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது

(3) இலங்கையின் முக்கியமான வருவாய், சுற்றுலாப் பயணிகளின் மூலமே கிடைக்கின்றது. சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டினால் இந்தச் சுற்றுலா வருவாய் பெரிதும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. தடித்த சிங்கள அரசு இந்த இழப்புகளைச் சந்திக்கக் கூடாது என்கிற அவசரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பது போல தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பிலே நடத்தப்படுகிறது என்று எழும் சந்தேகமும் நியாயமானதே.

(4) இலங்கையில் வெளிவரும் தினசரிகள் இராஜபக்சே புகழ்பாடுவதினால் மட்டுமே உயிர் வாழ்வதாகவும் நான் அறிகின்றேன். ஏன் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை? புகழ் ஆசையா, பதவி ஆசையா, அன்றேல் தனக்கு ஒரு மனித முகம் அருள வேண்டுமென்று ராஜபக்சே கொடுத்துள்ள லஞ்சத்தின் மீதுள்ள ஆசையா?

எஸ்.பொவின் பழியுரைகளை இன்னும் சுருக்கமாகத் தொகுத்தால் “ஈ.பி.ஆர்.எல்.எவ்  –  புளொட் போன்ற இயக்கங்களின் முன்னாள் மார்க்சியப் போராளிகள் இந்திய அரசுக்கு எதிராகவும் சீனத்திற்கு ஆதரவாகவும் செயற்படும் இலங்கை அரசிற்கு உறுதுணையாகவும், முருகபூபதி வகையறாக்கள் இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனும் ராஜபக்சவிடம் இலஞ்சம் பெற்று இந்த மாநாட்டை நடத்துகிறார்கள்” என்று வரும்.

எஸ்.பொவின் இந்தக் கூற்றுகளிற்கும் சந்தேகங்களிற்கும் அடிப்படையென்ன? அதெல்லாம் கேட்கக் கூடாது. கேட்டால்  இனத் துரோகிகளாக்கப்படுவோம் ஈழத் தமிழர்களின் எதிரிகளென ‘கீற்று’ச் சிலுவையில் அவதூறு ஆணிகளால் அறையப்படலாம். ஆனாலும்  இதற்கெல்லாம் அஞ்சினால் வேலைக்காகுமா! எனவே நாம் உரத்துக்கேட்போம்.

இந்த ஈ.பி.ஆர். எல்.எவ்  – புளொட் போன்ற சந்தேகங்ககளையும் ராஜபக்சவிடம் இலஞ்சம் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகளையும் எவராலாவது இன்றுவரை நிரூபணம் செய்ய முடிந்ததா! அது குறித்துக் கீற்றுத்தான் கவலைப்பட்டதா? “இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது” என்ற எஸ்.பொவின் சொல்லாடல் நமக்குச் சொல்ல வருவது என்ன? அது குறித்து  என்னுடைய கருத்து இவ்வாறிருக்கிறது:

மாநாட்டை ஒருங்கிணைத்தவர்களில் அநேகர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முக்கியமானவர்களாயிருந்தவர்கள். லெ.முருகபூபதி, டொமினிக் ஜீவா, கா.சிவத்தம்பி, அந்தனி ஜீவா போன்றவர்கள் அத்தகையவர்களே. எஸ்.பொவிற்கோ கைலாசபதி காலத்துக் கறள் இன்னும் மனதில் கனன்றவாறேயுள்ளது. அவரின் இன்றுவரையான அனைத்து எழுத்துகளிலும் இந்தக் ‘கறள்’ படிந்தேயுள்ளது. எஸ்.பொவுடைய ‘நற்போக்கு’ நியாயங்கள் அவருடையதாகயிருக்கட்டும். வரலாறு அதற்கும் காதுகொடுக்கும். ஆனால் முற்போக்கை எதிர்கொள்ள நற்போக்கைக் கைவிட்டு நரிப்போக்காக எழுத்தாளர் மாநாடு குறித்து எஸ்.பொ. தொடக்கிவைத்த அவதூறுப் புராணம் அவரின் வீறார்ந்த இலக்கியச் செல்நெறியின் கடை மாணாக்கியனாகிய எனக்குத் தீராத வருத்தத்தைத் தருவது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மீதான எஸ்.பொவின் வரலாற்றுக் காழ்ப்பு முதன்மையாயிருந்தாலும் அவர் கடந்த சில பத்து வருடங்களாகப் பேசிவரும் குழப்பமான ‘தமிழ்த்துவம்’ குத்துமதிப்பான ‘தமிழ்த் தேசியம்’ போன்றவையும் அவரின் இந்த அவதூறுப் புராணத்திற்குப் பங்களிப்பைச் செய்துள்ளன. இலங்கை அரசியலை புலிகள் x இலங்கை அரசு என்று கறுப்பு வெள்ளையாகக் கண்ணை  மூடிக்கொண்டு மதிப்பிட்ட அவரது கடிவாளப் பார்வை மற்றவைகளின் இருப்பையும் முக்கியத்துவத்தையும் மறுதலிப்பது. அந்த மறுப்பிலிருந்து உருவாகியதுதான் மாநாட்டிற்கும் ஈ.பி.ஆர்.எல். எவ் – புளொட்டுக்கும் அவர் கொடுத்த ‘லிங்க்’.

“சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது.”  இங்கே எஸ்.பொவின் வாய் முத்துகளின் நடுவே சிதறிக் கிடக்கும் இராசதந்திரம் எதுவென மூளையைப் போட்டு எவ்வளவு கசக்கினாலும் எனக்குப் பிடிபடவே மாட்டேன் என்கிறது. எஸ்.பொவின் இந்திய அரசு விசுவாசம் என்பதா? ராஜபக்ச இந்திய விரோதப் போக்குள்ளவர் என்றால் சோனியா காந்தி குலுங்கிச் சிரிக்காரா? இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என ராஜபக்ச சொன்னதை எஸ்.பொ.அறியமாட்டாரா? ஆத்திரக்காரருக்கு மட்டுல்ல அவதூறாளர்களிற்கும் புத்தி மட்டு.

சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்க தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துமளவிற்கா ராஜபக்ச அப்பாவி! இந்த மாநாடு குறித்து சி.என்.என்னிலும், அல் ஜசீராவிலும் லைவ் ஷோவா நடக்கயிருந்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து மேற்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் கனடாவிலிருந்தும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்காகக் கொழும்பில் போய் இறங்கும் ஈழத் தமிழர்களை விடவா எழுத்தாளர் மாநாடு சுற்றுலாத்துறைக்கு அனுகூலமாயிருக்கப்போகிறது. எழுத்தாளர் மாநாட்டைப் பார்த்தவுடன் கொழும்பிலுள்ள தூதரகங்கள் எல்லாம்  இலங்கைக்கு டூரிஸ்டுகளை அனுப்பிவைக்கச் சொல்லி தங்களது நாடுகளிற்கு தந்தி அடிப்பார்களாக்கும். மறுபுறத்தில், கற்பனைத் திறன் இன்னும் எஸ்.பொவைக் கைவிட்டுவிடவில்லை என  நாம் இரகசியமாக மகிழ வேண்டிய விடயமிது. “அப்படியானால் ஆடியில் கொழும்பில் நடக்கும் வேல்விழாவையும், ஆவணியில் நல்லூரில் நடக்கும் தேர்த் திருவிழாவையும் பார்த்து இலங்கை நிலைமைகள் குறித்து உலகம் மதிப்பீடு செய்யாதா” என முருகபூபதி கேட்ட கேள்வி சற்றே அப்பாவித்தனமானது எனினும் அது நேர்மையான கேள்வியே.

எஸ்.பொவைத் தொடர்ந்து லப்பா சிப்பா சித்தாந்தவாதிகளெல்லாம் கீற்று இணையத்தின் முகப்பிலே கண்டபடி அவதூறு வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள். “எச்சரிக்கை : இனப்படுகொலை ஆதரவாளர்களின் கொழும்பு மாநாடு”, “இலங்கை அரசின் வலைப்பின்னலுள் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு” என வாய்க்கு வந்தமாதிரியெல்லாம்   எழுதினார்கள். அவர்களின் எழுத்துகளிற்கான ஆதாரம், அடிப்படை என்றெல்லாம் கேட்கவே கூடாது.  பிரசுரிக்கும் கீற்றும் கேட்காது. மாநாட்டு அமைப்பாளருக்கு மார்புவலி அதிகரித்ததுதான் மிச்சம். அவர் அதைக் குறிப்பிட்டு, கீற்றுவின் மீதும் எஸ்.பொவின் மீதும் நீதிமன்றில்அவதூறு வழக்குத் தொடுத்து மானநட்டம் கேட்கப் போகிறேன் என்று அறிவித்தார். கீற்றுவா தளும்பும்? அது அவதூறுகளின் நிறைகுடமாயிற்றே. அது அவதூறுகளின் வேகத்தை மேலும் அதிகரித்தது. சில திரைப்படக்காரர்களும் சில பத்திரிகையாளர்களும் கூட்டாக வெளியிட்ட ஓர் அறிக்கையையும் அது பிரசுரித்தது. அந்த அறிக்கை சுற்றி வளைத்தெல்லாம் பேசவில்லை. அது ஒரே போடாக ‘மாநாட்டை எழுத்தாளர்கள் என்ற முகமூடிகளிற்குப் பின்னால் இலங்கை அரசே நடத்துகிறது’ என்றது. ஆதாரமற்ற அவதூறு அறிக்கைளைத் தொடர்ந்து வெளியிடுவது சனநாயச் செயற்பாடா அல்லது கவனமாகத் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு இணைய அத்துமீறலா என்றெல்லாம் யாரும் கேட்டுவிட முடியாது. கேட்டால் கீற்று இணையத்தளம் “நாங்கள் எதுவாயிருந்தாலும் பிரசுரிப்போம், அடிப்படைவாதத்தை மட்டுமே தவிர்க்கிறோம்” என்று கோட்பாடுத் திரி கொழுத்துவார்கள். எனினும் ‘அவதூறு அடிப்படைவாதம்’ என்றொரு அடிப்படைவாதத்தைக் கீற்று இணைய உலகில் வளர்த்து வருவதைச் சுட்டிக்காட்ட நாம் கடப்பாடுடையவர்களாவோம்.

மாநாடு குறித்து முன்வைக்கப்பட்ட அவதூறுகள், விமர்சனங்கள் குறித்தெல்லாம் நான் மாநாட்டின் அமைப்பாளர் லெ. முருகபூபதியிடம் ஒரு நீண்ட நேர்காணலை நிகழ்த்தினேன். ‘தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி’ என்ற தலைப்பில் அந்த நேர்காணல் ஒக்டோபர் 12ம் நாள் ‘லும்பினி’ இணையத்தில் வெளியாகியது. இப்போது நூலாகவும் கிடைக்கிறது.  கீற்றில் முன்வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் முருகபூபதி கடுமையாக மறுத்தார். விமர்சனங்களிற்குப் பொறுமையாகப் பதிலளித்தார். அரசியல் கருத்து வேறுபாடுகளிற்கு அப்பால் சர்வதேசத் தமிழ் இலக்கியவாதிகள் இந்த மாநாட்டில் ஒன்றிணைத்து இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே நேர்காணலில் அவரது மையக் கருத்தாயிருந்தது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு மாநாடு நிகழ்வது இன்றைய சூழலில் மிக முக்கியமானதே எனக் கருதினேன். கடந்த முப்பது வருடங்களாகத் துப்பாக்கியால் மட்டுமே உரையாடக் கற்பிக்கப்பட்டுவந்த ஒரு சமூகத்தில் பல்வேறு தரப்பினருக்குமிடையேயான உரையாடல்களும் விவாதங்களும் தொடக்கி வைக்கப்படுவதற்கான ஒரு சிறுபுள்ளியாகவேனும் இந்த மாநாடு அமையும் எனக்  கருதினேன். நாட்டின் மற்றைய இனங்களோடு பகை மறப்புச் செய்வது மட்டுமல்லாமல் ஈழத் தமிழர்களிற்குள் இருக்கும் பல்வேறு தரப்புகளிடையேயும் பகை மறப்புக்கானச் செயற்பாடுகளை அவசரமாகத் தொடக்க வேண்டியுள்ளதல்லவா. அந்தச் செயற்பாட்டிற்கும் இந்த மாநாடு  பனையளவில்லாவிட்டாலும் தினையளாவது  கருத்தியல்ரீதியாகப் பங்களிப்புச் செய்யக்கூடும் எனக் கருதினேன். ஆனால் கீற்று இணையத்தளத்தினது சிந்திக்கும் முறையே திகிலாயிருந்தது. அது மாநாட்டிற்குச் செல்பவர்களிற்கு இலங்கை அரசு இலவச விமானப் பயணச்சீட்டு வழங்கி, அவர்களை விருத்தோம்பி, சுற்றுலாவுக்கு வேறு அழைத்துச் சென்று, குளிப்பாட்டி அனுப்பும் என்றொரு வதந்தியும் வலையுலகம் ஏற வழிசெய்தது. இவ்வதந்தி வலை வழியாகக் ‘குமுதம் ரிப்போர்டர்’ வரை சென்றது. லெ. முருகபூபதி மறுபடியும் குமுதத்திற்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதவேண்டியிருந்தது.

அவதூறுகள் ஒரு வகையெனில் மாநாட்டின் மீதான அரசியல்ரீதியான எதிர்ப்புகளும் எதிர்வுகூறல்களும் இரண்டாவது வகையெனச் சொல்லியிருந்தேன். எனது வாசிப்புக்குக் கிடைத்தவரை மாநாடை நிராகரிக்கக் கோரிய ‘சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் கூட்டறிக்கை’ மட்டுமே அவ்வாறான அரசியல் பண்பைக் கொண்டிருந்தது. தொடர்ந்து மாநாட்டிற்கு வரவேற்புத் தெரிவித்து நாங்கள் இலங்கையிலும் புகலிடத் தேசங்களில் வாழும் எழுத்தாளர்கள் /கலைஞர்கள் / சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுபது பேர்கள் இணைந்து ஒரு  கூட்டறிக்கையை வெளியிட்டோம். அந்த அறிக்கை  மாநாட்டை நிராகரிக்கக் கோரிய அறிக்கை மீதான தனது எதிர்வினையையும்  கொண்டிருந்தது. அந்த அறிக்கை  இது :

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்!

இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் – முஸ்லிம் – மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து – அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம்.

அயல்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனைப் பரிமாறலை சாத்தியப்படுத்துவதோடு அவர்கள் எதிர்காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கியப் பணிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் எனக் கருதுகிறோம்.

மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 முன்னோக்குகளும் மிகச் சரியானவை எனவும் அவை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நன்மைகளைச் சாதிக்கவல்லவை என்றும் கருதுகிறோம்.

இந்த மாநாடு இலங்கை அரசால் நடத்தப்படவில்லை என மாநாட்டு அமைப்பாளர்கள் பலதடவைகள் ஊடகங்களில் உறுதிமொழிகளை அளித்துள்ளார்கள். இம்மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்குமான தொடர்புகள் இதுவரை எவராலும் நிரூபணம் செய்யப்படவில்லை. மாநாடு மீது இவ்வாறு ஆதாரமில்லாத அவதூறுகளைச் சுமத்திய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையையும் ‘குமுதம் ரிப்போர்டர்’ இதழையும் ‘புதிய ஜனநாயகம்’ இதழையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.

இந்த மாநாட்டை நிராகரிக்கக்கோரி “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்” என்ற பெயரால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை நாங்கள் முற்று முழுவதுமாக நிராகரிக்கிறோம். இந்த மாநாட்டை இலங்கை அரசு பயன்படுத்திக்கொளளக் கூடும் என்ற ஊகமே அவர்களது அறிக்கையின் மையம். இந்த ஊக அரசியல் மலிவானது. ஊகத்தை முன்னிறுத்தியே ஒரு ஆக்கபூர்வமான மாநாட்டை அவர்கள் நிராகரிக்கக் கோருவது அநீதியானது. மாநாடு அரசு சார்பாக மாறாதவரை ஊகத்தின் அடிப்படையில் அதை நிராகரிக்கக் கோருவது நியாயமற்றது எனக் கருதுகிறோம்.

இன்று இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அரசால் கடுமையாக அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாநாடு தேவையா என எழுப்பப்படும் எதிர்ப்புகளையும் நாம் நிராகரிக்கிறோம். இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.

கடந்த முப்பது வருட யுத்தத்தில் இலங்கை அரசு செய்த அனைத்துக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியும் இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக இலங்கையில் எந்த நிகழ்வுகளையுமே நடத்தக் கூடாது எனச் சொல்லப்படும் கருத்துகளை நாங்கள் மறுக்கிறோம். குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை நோக்கி நடத்தப்படும் மாநாட்டை நடத்தக்கூடாது எனச் சட்டாம்பிள்ளைத்தனம் செய்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலங்கையில் மாநாடு நடத்துவது எமது பிறப்புரிமை. முப்பது வருடகால யுத்தத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்களிடமிருந்து இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இன்னபிற ஆயுதக் குழுக்களாலும் பறிக்கப்பட்ட கருத்து – எழுத்து உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நெடிய போராட்டம் எம்முன்னே உள்ளது. அந்த நெடிய பாதையில் இவ்வாறான ஒரு மாநாடு நடைபெறுவது ஒரு முன்னேற்றகரமான புள்ளியென்றே கருதுகிறோம்.

இலங்கையின் எல்லாச் சமூகத்தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்புநிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த மாநாட்டிற்குப் புலமைசார் பங்களிப்பையும் தார்மீக ஆதரவையும் வழங்குமாறு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

– 28.12.2010.

* * *

மாநாடு 500வரையான பங்கேற்பாளர்களோடு நடந்து முடிந்தது. கீற்றுவின் மொழியில் சொன்னால் 500 துரோகிகளும் இனப்படுகொலை ஆதரவாளர்களும் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்கள். மாநாட்டில் கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான், சித்திரலேகா, அம்மன்கிளி முழுகதாஸ், சபா. ஜெயராசா, மௌனகுரு, சிவலிங்கராஜா, சண்முகதாஸ், துரை. மனோகரன் போன்ற பல கல்வியாளர்களும் டொமினிக் ஜீவா, தெணியான், தெளிவத்தை ஜோசப், திக்குவலை கமால், செங்கை ஆழியான், சோ.பத்மநாதன், கல்வயல் குமாராசாமி, கே.எஸ். சிவகுமாரன் போன்ற ஏராளமான  படைப்பாளிககளும்  மடுளகிரியே  விஜேரத்னா போன்ற சகோதர மொழிப் படைப்பாளிகளும் தமிழகத்திலிருந்து தோப்பில் முகமது மீரான், கு. சின்னப்பபாரதி, அருண்மொழி உள்பட நாற்பத்தைந்து பேராளர்களும் புகலிடத்திலிருந்து கணிசமான பேராளர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். மாநாட்டு நிகழ்வுகள் கூடியவரை எல்லா சமூக – இலக்கியத் தரப்புகளையும் கூடியவரை கவனத்தில் எடுத்தே அமைக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்: http://xa.yimg.com/kq/groups/4081048/1195188045/name/Program

இலங்கையில் சுதந்திரமாகப் பேசத் தடையுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக நாம் பேசாமலே இருந்துவிட முடியுமா! சாத்தியமான வழிகளிலெல்லாம், சாத்தியமான அளவிலெல்லாம் பேச முயன்றுகொண்டேதானிருக்க வேண்டும். இந்த மாநாட்டால் இலங்கை அரசுமீதான போர்க்குற்ற விசாரணை பாதிக்கப்படுகிறது எனச் சொல்லும் அரசியல் மேதைகள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை ஒன்று நடக்குமானால், விசாரணையை நடத்தவிருப்பவர்களிடம் ஏற்கனவே  இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் குறித்த ஆவணங்கள் போதுமான அளவு முறையாக உள்ளன. இங்கே யுத்தக் குற்ற ஆதாரங்களும் ஆவணங்களும் அல்லப் பிரச்சினை. ராஜபக்ச வல்லாதிக்கவாதிகளோடு இணங்கி நடக்கும்வரை அவர்கள் அந்த விசாரணையைச் செய்யவே போவதில்லை என்பதுவே பிரச்சினை. எழுத்தாளார் மாநாட்டால் எல்லாம் விசாரணை ஒருபோதும் பாதிக்கப்படப்  போவதில்லை. ‘எலி கடித்து வானம் அறுவது’ சோலைக்கிளியின் கவிதைகளில் மட்டுமே சாத்தியம்.

மாநாட்டில் அரசியல் பேசக் கூடாது என அமைப்பாளர் ஞானசேகரன் சொன்னாரென ஒரு விமர்சனமுண்டு. மு.மயூரனுக்கும், த. அகிலனுக்கும் வழங்கிய நேர்காணலில் அவர் அவ்வாறு சொன்னது மாநாட்டில் குழுநிலை அரசியல் மோதல்கள் இருக்கக்கூடாது என்பதையே. அதை நேர்காணலின் அடுத்த கேள்விக்கான பதிலிலேயே ஞானசேகரன் தெளிவுபடுத்திவிடுகிறார்: “கலவரங்கள் நிகழ்ந்தன, அதற்கு இனவாதம் காரணம். இது வெளிப்படையான உண்மை. அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை. அதைப் பேசத்தான் இந்த மாநாடே. ஆனால் அவதூறுகளைப் பேச, தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை” என்கிறார் ஞானசேகரன். இதிலென்ன குழப்பமுள்ளது. இதுதான் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாடு. அவர்கள் இந்த மாநாட்டை வழமையான அரசியல் மேடையாக மாற்றத் தயாரில்லை. அவர்கள் முப்பது வருடங்களாகப் பட்டுக் களைத்தவர்கள். இன்றைய சூழலில் இலங்கையில் இவ்வாறு ஒரு மாநாட்டை நடத்துவது என்பது தண்ணீருக்குள்ளால் நெருப்புக் கொண்டுபோகும் வேலை. சிங்கள அரசியல்வாதிகளை விடுங்கள், தமிழ் அரசியல்வாதிகளே வாய்ப்புக் கிடைத்தால் போதுமான அளவு குழப்பம் விளைவிக்கவே தயாராயிருக்கிறார்கள். மாநாட்டு அமைப்பாளர்களின் இந்த நிலைப்பாட்டில் நாம் உடன்படுவதும் உடன்படாததும் வேறுவிடயம். அதற்காக மாநாட்டை நடத்தவே கூடாது எனறு நாட்டாமை செய்வது பொறுப்பற்ற செயல்.

‘நிறுத்து ஷோபா! மாநாட்டில் இனப்படுகொலையைக் கண்டித்து நிகழ்ச்சி ஏதுமில்லையே’ என இந்த இடத்தில் தோழர்கள் யாராவது கேட்கக் கூடும்.  ‘இல்லைத்தான் தோழர்.. எனினும் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் இலங்கையில் மாநாட்டைச் சிரமப்பட்டு நடத்துபவர்களிற்கே மாநாடு நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் உரிமையுமுண்டு ‘ என்பதே அந்தக் கேள்விக்கான என்னுடைய தாழ்மையான பதில். இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு மாநாடு நடத்துவதானால் நீங்கள் போய் நடத்த வேண்டியதுதானே என நான் பதிலுக்குக் கேட்டவே மாட்டேன். அவ்வாறு நான் கேட்டால் ‘இலங்கையில் அதற்குச் சுதந்திரம் கிடையாதே’ என்ற பதிலே எனக்குக் கிடைக்கும். உண்மைதான், இலங்கை அரசால் சிங்களப் பத்திரிகையாளர்களே கொல்லப்படுவதையும் தப்பியவர்கள் வெளிநாடுகளிற்கு அகதிகளாக வருவதையும் நானுமறிவேன். பட்டுப்போன பூமியில் வேரும் விழுதுமாய் தெய்வச் செயலாய் திடீரெனப் பெரும் விருட்சம் தோன்றாது. முளைவிடுவது அற்பத் துளிரெனெனினும் அதைக் காப்பதல்லவா நம் கடமை. அறம்பாடுவதும், அவதூறு எழுதுவதும் எதைத்தான் சாதிக்க வல்லவை. இனங்களுக்குள் இலக்கியத்தளத்திலாவது இந்த மாநாடு ஒரு உரையாடலை நடத்திவைக்கட்டுமே. எதிர்காலப் பகைமறப்புக்கு இந்த மாநாடும் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையட்டும். முப்பது வருட யுத்தத்திற்குப் பின்பு ஏற்பட்டிருந்த இந்த வாய்ப்பபை நாங்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்!

மாநாட்டில் சில தரப்புகளிற்கு உரிய இடம் வழங்கப்படவில்லை, தீவிர இலக்கியம் நோக்கிய கவனக் குவிப்பு போதாது,  மரபு என்ற பெயரில் மூடத்தனங்கள், மாநாட்டில் கம்பவாரிதியாரின் அரற்றல்கள் போன்ற விமர்சனங்கள் கணக்கிலெடுக்கப்பட வேண்டியவையும் எதிர்வரும் காலங்களில் சரி செய்யப்பட வேண்டியவையுமே. எல்லாப் பெரிய நிகழ்வுகளிலும் இவ்வாறான விடுபடல்களும் நமது அரசியல்சரிகளிற்கு எதிரான செயற்பாடுகளும் இருக்கவே செய்கின்றன. இவற்றை தொடர்ந்த விமர்சன கலாசாரத்தால் நாம் நேர்செய்ய முற்படுவோம். ஆனால் இத்தகைய தனி நிகழ்வுகளை முன்வைத்து ஒட்டுமொத்த மாநாட்டையும் சேறடிக்கும் பேச்சுகள் விடலைத்தனமானவை மட்டுமே.

இன அழிப்பு நடந்த இலங்கையில் இலக்கிய மாநாடுகளோ வேறெந்த மக்கள் நிகழ்ச்சிகளோ நடைபெறக் கூடாது எனவும் அங்கே சாவின் ஓலமும்  வாதைகளின் குரலும் போரும் அழிவுமே எப்போதும் இருக்கவேண்டுமெனவும் அந்தச் சாவுகளிலேயே தங்களது அரசியலைக் கட்டியெழுப்பலாம் என்ற எண்ணத்தோடிருப்பவர்களிடமும் நாம் பதிலுக்கு வ.ஐ.ச. ஜெயபாலனின் அழியாத வரிகளை  மறுபடியும் சொல்வோம்: நாம் வாழவே எழுந்தோம், சாவை உதைத்து மூக்கும் முழியுமாய் வாழவே எழுந்தோம்!

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு  நடந்து முடிந்து இன்றோடு சரியாக இரு மாதங்களாகின்றன. மாநாட்டின் மீதான கீற்றுவின் ‘குற்றச்சாட்டு’களின் வீரியத்தை அளவிட இந்த இருமாத இடைவெளி போதுமல்லவா தோழர்களே! மாநாட்டிற்கு செலவிடப்பட்ட 20 000 அமெரிக்க டொலர்கள் தொகை இலக்கிய ஆர்வலர்களான தனிநபர்களிடமிருந்தே திரட்டப்பட்டுள்ளதாக மாநாட்டுக் குழு அறிவித்துள்ளது. ராஜபக்சே பணம் கொடுத்தார் என்றவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமா இல்லையா?

இலங்கை அரசு விமானப் பயணத்தையும்,  தங்குமிடத்தையும், சுற்றுலாவையும் இலவசமாக வழங்குகிறது என்று சொன்னவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபணம் செய்ய வேண்டுமா இல்லையா?

சற்று யோசித்துப் பாருங்கள். இன்று தமிழகத்தில் ஒரு சிறு புத்தக வெளியீட்டு விழாவை நடத்துவதென்றால் கூட அந்த மேடைகள் அரசியல்வாதிகளால் நிரம்பியிருப்பதைக் காண நேரிடுகிறது. செம்மொழி மாநாடு தி.மு.க தலைவரின் குடும்ப விழா போலவே நடந்து முடிந்தது. ஆனால் இலங்கையின் இவ்வளவு பதற்றமான சூழலிலும் மாநாட்டு அமைப்பாளர்கள் எந்தவொரு தமிழ் – சிங்கள அரசியல் கட்சிக்காரர்களையும் மாநாட்டில் அண்டவே விடவில்லையே. மாநாட்டிற்குப் பார்வையாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா ஆகிய இருவர் மட்டுமே வந்து சென்றதாக அறிகிறேன். எஸ்.பொவின் ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்டுக்கதை என்னவானது? இனப்படுகொலை ஆதரவாளர்களின் மாநாடு என்ற கூக்குரல் என்னவானது? அரசே நேரடியாக மாநாட்டை நடத்துகிறது எனச் சொன்ன பொய்யர்கள் தமது வாயைப் பெட்ரோலால் கொப்பளிக்க வேண்டாமா!

இப்போது கீற்று ‘தோல்வியில் முடிந்த கொழும்பு எழுத்தாளர் மாநாடு’ என்றொரு கட்டுரையை லேட்டஸ்டாகப் பிரசுரித்துள்ளது. சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு குறித்து  கீற்று  அவதூற்றில் ஆரம்பித்து அவதூற்றிலேயே கச்சிதமாக முடித்துவைத்துள்ளது. கீற்றுவின் அவதூறுகளால் பாதிக்கப்பட, மனவுளைச்சல் அடைந்த மாநாட்டு ஏற்பாடாளர்களிற்கும், பங்கேற்பாளர்களிற்கும் கீற்றுவின் பதிலென்ன? அது  வருத்தப்படுவதாகவோ அல்லது நீண்ட மவுனமாகவோ இருக்காது.  கண்டிப்பாக அந்தப் பதில் இன்னொரு புதிய அவதூறாகவேயிருக்கும்.!

கீற்றுத்தளத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளிற்கு ஷோபாசக்தி பதிலே சொல்வதில்லை எனக் கொக்கரிக்கிறாரே கீற்று ரமேஷ்! அந்த கொக்கரிப்பு உண்மையா இல்லை வக்கிரமா என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம் தோழர்களே.

2 thoughts on “தூற்று .கொம் – பகுதி 3

  1. //அவதூறுகள் ஒரு வகையெனில் மாநாட்டின் மீதான அரசியல்ரீதியான எதிர்ப்புகளும் எதிர்வுகூறல்களும் இரண்டாவது வகையெனச் சொல்லியிருந்தேன். எனது வாசிப்புக்குக் கிடைத்தவரை மாநாடை நிராகரிக்கக் கோரிய ‘சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் கூட்டறிக்கை’ மட்டுமே அவ்வாறான அரசியல் பண்பைக் கொண்டிருந்தது. தொடர்ந்து மாநாட்டிற்கு வரவேற்புத் தெரிவித்து நாங்கள் இலங்கையிலும் புகலிடத் தேசங்களில் வாழும் எழுத்தாளர்கள் /கலைஞர்கள் / சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுபது பேர்கள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டோம். அந்த அறிக்கை மாநாட்டை நிராகரிக்கக் கோரிய அறிக்கை மீதான தனது எதிர்வினையையும் கொண்டிருந்தது//
    இரண்டு தவறுகளை இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது தோழர்.
    1. மாநாட்டு எதிர்ப்பு அறிக்கை அரசியற்பண்பு கொண்டிருந்தது என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் பதில் அறிக்கையில் அங்கு வைக்கப்பட்ட அரசியலுக்கு மறுப்பு அரசியல் விளக்கம் எதுவுமில்லை.
    1. மீண்டும் 70 பேர்கள் என்கிறீர்கள். திரும்பவும் அனுமதி கேட்டா அவர்களுக்காக கதைக்கிறீர்கள். கையெழுத்தை எடுக்கசொல்லி சொன்னதையும் சேர்க்க வேண்டாமா?

    மாநாட்டு எதிர்ப்பு அறிக்கை எழுப்பிய அரசியல் பற்றி இன்றுவரை ஒழுங்கான பதில் இல்லை. தெட்டத்தெளிவாக அந்த அறிக்கை எழுப்பும் அரசியற்கேள்விகளுக்;கு இனியாவது பதில் எழுதுங்கள்.

  2. உங்கள் சிந்தனைப் பரிமாறலும்,இலக்கியப் பணியை முன்னெடுக்கும் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *