லெற்றிஷியா இபானெஸ் (Léticia Ibanez) தமிழ் – பிரெஞ்சு இலக்கிய மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் மற்றும் ஆசிரியர். மெளனியின் சிறுகதைகளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். பெருமாள் முருகன், இமையம் மற்றும் என்னுடைய நாவல்களைத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழியாக்கியவர். 12.07.2026 அன்று பிரான்ஸில் நிகழ்ந்த வெள்ளிவீதி இலக்கியக் கூடுகை அமர்வில், நான் லெற்றிஷியா இபானெஸ் அவர்களுடன் ‘இலக்கியத்தில் தமிழ் – பிரெஞ்சு மொழியாக்கச் சாத்தியங்களும் சவால்களும்’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலை நிகழ்த்தினேன். அந்த உரையாடலின் எழுத்து வடிவம் இது.
– ஷோபாசக்தி
***
உங்களுக்குத் தமிழ் இலக்கியம் மீதான ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது?
தமிழ் இலக்கியத்தின் மீது எனக்குள்ள ஆர்வம், பொதுவாக இலக்கியத்தின் மீதுள்ள என் ஆர்வத்திலிருந்தே தொடங்கியது. நான் பிரெஞ்சு இலக்கியமும் தத்துவமும் படித்தேன்.
அதன் பின், நான் பேச்சுத் தமிழை முதலில் கற்கத் தொடங்கினேன். தமிழில் வாசிக்கத் தொடங்கியபோது, இயல்பாகவே சமகாலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஏனெனில் இருபதாம் நூற்றாண்டு உரைநடை இலக்கியம், பேச்சுத் தமிழுக்கு ஓரளவுக்கு நெருக்கமாக உள்ளது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சிறந்த தமிழ் இலக்கிய அறிஞரான François Gros அவர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களாகக் கருதிய புதுமைப்பித்தன், மெளனி, லா. ச. ராமாமிருதம் ஆகியோரின் படைப்புகளை எனக்குப் பரிந்துரை செய்ததின் பேரில் அவற்றைத்தான் நான் முதலில் வாசித்தேன்.
பின்னர், தமிழ் சிறுபத்திரிகை இயக்கத்தில் மெளனியின் இடம் குறித்து ஒரு முனைவர் பட்ட ஆய்வைக்கூட நடத்தினேன்.
என் இலக்கிய ஆர்வம் மேலும் விரிவடைந்தது ஷோபாசக்தியால்தான். சமூகரீதியாக வேறுபட்ட பின்னணிகளைச் சேர்ந்த, மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளை அவரால்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஷோபாவின் படைப்புகள் வழியாகத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு குரல்களை அறிந்துகொண்டேன்; அதனால் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய என் பார்வையும் கொஞ்சம் மாறியது.
முதல் தமிழ் -பிரெஞ்சு மொழிபெயர்ப்பைச் செய்ய உங்களைத் தூண்டிய காரணங்கள் எவை?
என்னைப் பொறுத்தவரை, ஒரு படைப்புக்குள் ஆழமாகச் சென்று, அதை முழுமையாக அனுபவித்து, இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம்தான் என்னை மொழிபெயர்ப்பின் பக்கம் இட்டுச் சென்றது.
மெளனியின் அழகியல் பற்றிய என் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தபோதுதான் முழுமையான பிரதிகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். பி. எச். டி-யின் முதல் இரண்டு ஆண்டுகளில், மௌனி எழுதிய பதினாறு சிறுகதைகளை மொழிபெயர்த்தேன். இந்த வேலையின் மூலம் மௌனியின் படைப்புலகத்தைக் கொஞ்சம் ஆழமாக அறிந்துகொள்ளவும், அது எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது.
அந்தக் காலத்தில் நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக வருவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. பதிப்புலகைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. பதிப்பாளர்களுக்கும் பல்கலைக்கழக உலகிற்கும் இடையே தொடர்புகள் இருப்பதும் எனக்குத் தெரியவே தெரியாது. எனவே, என் ஆய்வுப் பணியைப் பற்றிக் கேள்விப்பட்ட சில பதிப்பாளர்கள் என்னைத் தொடர்புகொண்டு படைப்புகளை மொழிபெயர்க்க அழைத்தபோது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சரி, இது நான் எதிர்பாராத வாய்ப்பு, செய்துதான் பாப்போம் என்று ஒத்துக்கொண்டேன்.
பிரெஞ்சுப் பதிப்பாளர்கள் ஒரு தமிழ் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நூலைப் பதிப்பிப்பதற்கு என்னென்ன காரணங்களால் முன் வருகிறார்கள்?
எந்த நூலை வெளியிடுவது என முடிவு செய்வது ஒவ்வொரு பதிப்பகத்தின் பதிப்புத் திட்டத்தையும் இலக்கியக் கண்ணோட்டத்தையும் பொறுத்தது.
முதலாவது காரணம், ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றில் முக்கியமான இடம் பெறும் ஒரு படைப்பை பிரெஞ்சு வாசகர்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற விருப்பமாக இருக்கலாம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பைவிட இன்று பிரெஞ்சுப் பதிப்பாளர்கள் தென்னாசிய இலக்கியங்களின் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். உதாரணமாக, சென்ற வருடம் ‘Gallimard’ பதிப்பகம், பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலை தனது உலக இலக்கிய வரிசையில் (Du monde entier) வெளியிட்டது. இந்தியாவின் இலக்கிய மற்றும் அரசியல் வரலாற்றில் இடம் பெறும் ஒரு முக்கியமான படைப்பு என்பதால்தான் Gallimard அதை பிரெஞ்சில் வெளியிட முடிவு செய்தது. அதேபோல், தென்னாசிய மொழிகளில் எழுதப்பட்ட நவீன செவ்வியல் படைப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் ‘Des Jonquères’ பதிப்பகம், சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’யை பிரெஞ்சில் 2028-ல் வெளிவிட உள்ளது.
இரண்டாவது காரணம் அரசியல் கருத்துகளைச் சார்ந்ததாக இருக்கலாம். ஐரோப்பாவில் இன்னும் பரவலாக அறியப்படாத குரல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற விருப்பமும் சில பதிப்பாளர்களிடம் இருக்கிறது. பெண்ணிய இலக்கியத்தையும் மத்திய கிழக்கு இலக்கியங்களையும் சிறப்பாக வெளியிட்டுவரும் ‘Emmanuelle Colas’ பதிப்பகம், சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலின் பதிப்புரிமையை வாங்கியுள்ளது. ராவுத்தர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சுதந்திர வேட்கையைப் பிரெஞ்சு வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே ‘Emmanuelle Colas’ பதிப்பகம் அந்த நூலைத் தேர்ந்தெடுத்துள்ளது. அத்துடன், சல்மாவின் குரல் தமிழ் போன்ற இன்னும் அதிகம் மொழிபெயர்க்கப்படாத ஒரு மொழியிலிருந்து வருகிறது என்பதும் அந்த நூலின் அரசியல் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்றே நினைக்கிறேன்.
என்னை மிகவும் கவரும் மூன்றாவது காரணம், வாசகருக்கு ஒரு புதிய அழகியல் அனுபவத்தை அளிக்க வேண்டும் என்ற விருப்பம். வாசகர் இதுவரை அறிந்திராத ஒரு கற்பனை உலகத்தின் கதவைத் திறந்து வைக்க வேண்டும் என்ற நோக்கம். இதற்கு ‘Zulma’ பதிப்பகம் ஒரு சிறந்த உதாரணமாகும். அந்தப் பதிப்பகத்தின் அடையாளமே தனித்துவமான இலக்கியக் குரல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். அதனால்தான் ஷோபாசக்தியின் மூன்று நூல்களை அவர்கள் வெளியிட்டார்கள். அவை வடிவத்தில் புதுமையானவை என்பதற்காக மட்டுமல்ல, இலங்கையிலும் புலம்பெயர் சமூகங்களிலும் வாழும் தமிழர்களின் உலகத்தைப் பிரெஞ்சு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும்தான்.
உண்மையில், இந்தக் காரணங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரு நல்ல நூல் அதன் இலக்கியத் தரத்திற்காகவும், அது உலகைப் பற்றிச் சொல்லும் புதிய பார்வைக்காகவும், வாசகருக்கு வழங்கும் அழகியல் அனுபவத்திற்காகவும் ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ஒரு பிரெஞ்சுப் பதிப்பாளர் ஒரு தமிழ் நூலின் பதிப்புரிமையை வாங்க முடிவு செய்வது எப்படி?
இன்றைய சூழலில், ஒரு தமிழ் நூல் ஒரு பிரெஞ்சுப் பதிப்பாளரிடம் சென்று சேருவதற்கு இரண்டு முக்கியமான வழிகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.
முதல் வழிதான் மிகவும் பொதுவானது. அதாவது, அந்தத் தமிழ் நூல் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். ஆங்கில மொழிபெயர்ப்பே அந்த நூலுக்கு உலகப் பதிப்புலகில் பயணம் செய்யும் ஒரு கடவுச்சீட்டு போன்றதாக அமைகிறது. ஆங்கிலத்தில் வெளிவந்து, ஆங்கில பத்திரிகைகளில் பதிவுகள் பெற்று, சில சமயங்களில் இலக்கிய விருதுகளுக்குத் தேர்வாகிய பிறகு, அந்த நூல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகிறது. பெரும்பாலும், பிரெஞ்சுப் பதிப்பாளர்கள் அந்த நூலை முதலில் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமே அறிந்து, பின்னர் அதன் பதிப்புரிமையை வாங்க முடிவு செய்கிறார்கள்.
இந்த முதல் வழியில், தமிழ் பதிப்பாளர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. அவர்கள் Frankfurt, Paris, Jaipur போன்ற சர்வதேசப் புத்தகக் கண்காட்சிகளில் தொடர்ந்து பங்கேற்று, தங்களுடைய நூல்களை வெளிநாட்டு பதிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்துகிறார்கள்; புதிய தொடர்புகளை உருவாக்குகிறார்கள்; தமிழ் எழுத்தாளர்களை சர்வதேசப் பதிப்புலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த முயற்சியில் ‘காலச்சுவடு’ கண்ணன் முன்னோடியான பங்கை வகித்தவர். இன்று அந்தப் பாதையை ‘Zero Degree’ பதிப்பகத்தின் காயத்ரி ராமசுப்பிரமணியம்,’Two Shores Press’ பதிப்பகத்தின் ஆனந்த் தட்சிணாமூர்த்தி போன்ற பதிப்பாளர்களும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.
கொஞ்சம் அரிதான இன்னொரு வழியும் இருக்கிறது. தமிழ் எழுத்தாளருக்கும் பிரெஞ்சுப் பதிப்பாளருக்கும் இடையே ஏற்கனவே ஒரு வலுவான அறிமுகம் உருவாகியிருந்து, அந்த எழுத்தாளரின் இலக்கிய மதிப்பை பதிப்பாளர் ஏற்கனவே அறிந்திருந்தால், அந்தத் தமிழ் எழுத்தாளரது அடுத்த படைப்பும் தன்னுடைய பதிப்பகத்தின் இலக்கியக் கண்ணோட்டத்துடன் பொருந்தும் என்பதைப் பதிப்பாளர் நம்புவார்.
இதற்கு ‘Zulma’ பதிப்பகம் ஒரு நல்ல உதாரணமாகும். ‘இச்சா’ மற்றும் ‘ஸலாம் அலைக்’ ஆகிய இரு நாவல்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவருவதற்கு முன்பே ‘Zulma’ பதிப்பகம் பிரெஞ்சில் வெளியிட்டுள்ளது. பதிப்பகத்தின் இயக்குநரான Laure Leroy அவர்கள், ஷோபாசக்தியின் படைப்புகளின் இலக்கிய மதிப்பை ஏற்கனவே அறிந்திருந்தார். இலங்கைக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் நகரும் ஷோபா எழுதிய நாவல்கள், பிரெஞ்சு வாசகர்களுக்கு முற்றிலும் புதிய வாசிப்பு அனுபவத்தை அளிக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், இன்று ஒரு தமிழ் நூல் பிரான்ஸை அடைவதற்கு இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. ஒன்று, ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கும் சர்வதேசத் தெரிவுநிலையும் சர்வதேச புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் பதிப்பாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும். மற்றொன்று, ஓர் எழுத்தாளருக்கும் அவரது பிரெஞ்சுப் பதிப்பாளருக்கும் இடையே உருவாகியிருக்கும் பரஸ்பர நம்பிக்கை.
எனக்குத் தெரிந்தவரையில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி இந்த நிலையை இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றவில்லை.
ஒரு நூலைப் பதிப்பிப்பது குறித்து மொழிபெயர்ப்பாளருக்கும் பிரெஞ்சுப் பதிப்பகத்திற்குமான உறவு எந்தப் புள்ளியில் தொடங்குகிறது? அது எப்படிச் செயற்படுகிறது?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பிரெஞ்சுப் பதிப்பாளர் தமிழ் நூலின் பதிப்புரிமையை வாங்கிய பிறகுதான் மொழிபெயர்ப்பாளரை அணுகுவார். பொதுவாக, ஏற்கனவே மொழிபெயர்ப்பில் நல்ல பெயர் பெற்ற ஒருவரையோ, குறைந்தபட்சம் பெயர் தெரிந்த ஒருவரையோ மொழிபெயர்ப்பாளராகத் தேர்ந்தெடுப்பார். சில நேரங்களில், அந்த மொழிபெயர்ப்பாளரை எழுத்தாளரோ, தமிழ் பதிப்பாளரோ பரிந்துரைத்திருப்பார்கள்.
ஆனால், இன்னொரு வழியும் இருக்கிறது. சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மொழிபெயர்ப்பாளரே பதிப்பாளரை அணுகுவார். அந்த மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே செய்த மொழிபெயர்ப்புகள் மூலமாகவோ, அவரது பல்கலைக்கழக ஆய்வுகள் மூலமாகவோ அறியப்பட்டவராக இருந்தால்தான், பொதுவாக ஒரு பதிப்பாளர் அத்தகைய முன்மொழிவைப் போதிய கவனடெடுத்துப் பரிசீலிப்பார்.
பிரெஞ்சு பதிப்புத் துறையில் ‘எடிட்டிங்’ எப்படிச் செயற்படுகிறது. ‘எடிட்டர்’ எனப்படும் பதிப்பாசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளரான உங்களுக்கும் இடையில் எழும் கருத்து வேறுபாடுகளை எப்படிக் கையாள்கிறீர்கள்?
அது பெரும்பாலும் பதிப்பகத்தைப் பொறுத்தது. ‘Gallimard’ போன்ற பெரிய பதிப்பகங்களில், மொழிபெயர்ப்பை முதலில் ஒரு பதிப்பாசிரியர் வாசிப்பார். அதன் பிறகு, இரண்டு அல்லது மூன்று தொழில்முறை மெய்ப்புப் பார்வையாளர்கள் அதை மீண்டும் வாசிப்பார்கள். சிறிய பதிப்பகங்களில், இந்த முழு வேலையையும் பெரும்பாலும் பதிப்பாசிரியர்களே மேற்கொள்வார்கள். உதாரணமாக, ‘Zulma’ பதிப்பகத்தில் என் மொழிபெயர்ப்புகளைப் பதிப்பாசிரியரான Laure Leroy மற்றும் அவரது சக ஆசிரியர்களில் ஒருவர் வாசித்துத் திருத்துவார்கள்.
ஆனால், மொழிபெயர்ப்புகளை முறையாக மறுபரிசீலனை செய்யாத பதிப்பகங்களும் உள்ளன. சில பதிப்பகங்கள், proofreader-களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டாம் என்பதற்காக, இந்தப் பணியை மாணவர்களிடம் ஒப்படைப்பார்கள்.
என்னைப் பொறுத்தவரை, எனக்குப் பெரும்பாலும் நல்ல அனுபவங்களே கிடைத்துள்ளன. proofreader-களின் திருத்தங்கள் பெரும்பாலும் சிறிய விவரங்களைக் குறித்தவையாகவே இருந்தன; மொழிபெயர்ப்பின் ஒட்டுமொத்த நடையையோ அணுகுமுறையையோ அவை மாற்ற முயலவில்லை. அதனால் கருத்து வேறுபாடுகளும் மிகவும் அரிதாகவே ஏற்பட்டன.
குறிப்பாக, Laure Leroy உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் நான் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நாவலுடன் வாழ்ந்த பிறகு, மொழிபெயர்ப்பாளருக்கே அந்த நாவலைத் தெளிவான பார்வையில் பார்க்க முடியாமல் போய்விடும். ஆனால் Laure Leroy பதிப்பாசிரியராக, மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை முற்றிலும் புதிய பார்வையுடன் அணுகுவார். அதோடு, தனது வாசகர்களைப் பற்றி அவருக்கு மிகத் துல்லியமான புரிதல் உண்டு. தென்னாசியாவைப் பற்றி அதிகம் அறியாதவர்களாக இருந்தாலும் ஆர்வமுள்ள பிரெஞ்சு வாசகர்கள் எதை இயல்பாகப் புரிந்துகொள்வார்கள், எது அவர்களுக்குப் புரியாமல் போகும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
அவர் ஏதாவது மாற்றத்தை முன்வைத்தால், அது பெரும்பாலும் மிகவும் நல்ல யோசனையாகவே இருக்கும். அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். ஒருவேளை அவர் பரிந்துரை செய்யும் மாற்றம் மூலப் பிரதியிலிருந்து சற்றே அதிகமாக விலகிவிட்டதாக எனக்குத் தோன்றினால், நாங்கள் அதைப் பற்றி விவாதிப்போம். பின்னர், மூலப்பிரதிக்கு விசுவாசமாக இருப்பதற்கும் இலக்கு மொழியான பிரெஞ்சில் இயல்பாக ஒலிப்பதற்கும் இடையில் ஒரு நல்ல சமநிலையைத் தரும் சமரசமான வழியை இருவரும் சேர்ந்து கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்.
உதாரணமாக, ‘ஸலாம் அலைக்’ நாவலின் இறுதிப் பாகத்தில், நந்தன் தனது மகனின் இறப்புச் சான்றிதழைப் பெறத் தனது முன்னாள் மனைவியின் வீட்டுக்குச் செல்கிறான். அவள் அவனை வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்கிறாள். அதற்கு நந்தன், « என்ன சமைக்கப் போகிறாய் ? பிள்ளைக் கறியா ? » என்று கேட்கிறான்.
முதலில், « பிள்ளைக் கறி » என்ற சொல்லை curry d’enfant என்று நான் அப்படியே மொழிபெயர்த்திருந்தேன். ஆனால், பிரெஞ்சு வாசகர்களுக்கு குறிப்பைப் புரிந்துகொள்ள முடியாது என்று பதிப்பாசிரியர் Laure Leroy எனக்குச் சுட்டிக்காட்டினார். சிறுத்தொண்டரின் கதையை விளக்க ஒரு அடிக்குறிப்பு சேர்க்கலாமா என்று அவர் யோசித்தார். நான் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அடிக்குறிப்புகள் ஓர் இலக்கியப் படைப்புக்கு தேவையற்ற பாடப்புத்தகத் தன்மையைத் தரும் என்று நினைக்கிறேன். பதிப்பாசிரியரும் முடிந்தவரை அடிக்குறிப்பிடுவதைத் தவிர்க்கவே விரும்பினார்.
அதனால் இருவரும் சேர்ந்து வேறு ஒரு வழியைப் பற்றி யோசித்தோம். இறுதியில், « நம் மகனை ஏற்கனவே கொன்றுவிட்டாய். இப்போது அவனைத் துண்டு துண்டாக வெட்டிக் கறி சமைத்துப் பரிமாறப் போகிறாயா? » என்று மொழிபெயர்த்தோம். இங்கே மூல உரையின் சொற்சிக்கனம் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லைத்தான். ஆனால், நந்தன் தனது முன்னாள் மனைவியிடம் சுமத்தும் குற்றச்சாட்டு பிரெஞ்சு வாசகருக்கு மிகவும் தெளிவாகிறது.
மொழிபெயர்ப்பில் நாம் மேற்கொள்ள வேண்டிய சமரசங்களுக்கு இதுவொரு உதாரணம்.
நீங்கள் மொழிபெயர்க்கும் பிரதிகளை எப்படித் தேர்வு செய்வீர்கள்?
நான் பெரும்பாலும் பதிப்பகங்களின் அழைப்புகளின் பேரில்தான் மொழிபெயர்ப்புப் பணிகளை ஏற்றுக்கொள்வேன். ஒரு மொழிபெயர்ப்பை ஏற்க என்னைத் தூண்டும் காரணங்கள் பல இருக்கலாம். ஒரு படைப்பின் அழகியல் தரம் என்னைக் கவரலாம். நான் அதன் ஆசிரியரை ஒரு தனிநபராக ஆழ்ந்து மதிக்கலாம். சில சமயங்களில், அரசியல் காரணங்களால் அந்தப் படைப்பு பிரெஞ்சிலும் வெளிவருவது முக்கியம் என்று நான் நினைக்கலாம். இந்த மூன்று காரணங்களும் ஒன்றாக இணையும்போது, என்னைவிட மகிழ்ச்சியுள்ளவள் வேறு யாரும் இருக்க முடியாது.
கடந்த சில ஆண்டுகளில், நானாகவே மொழிபெயர்க்க விரும்பிய ஒரு குறிப்பிட்ட படைப்பை அறிமுகப்படுத்துவதற்காக பதிப்பாளர்களை அணுகுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால், 2028-ல், எனக்கு மீண்டும் நேரம் கிடைக்கும்போது சி.புஷ்பராணியின் ஈழப் போராட்ட நினைவு குறிப்புகளான ‘அகாலம்’ நூலை மொழிபெயர்க்க விரும்புகிறேன். இந்த அரிய சாட்சியத்தைப் பிரெஞ்சு வாசகர்களிடம் கொண்டுசெல்லத் தயாராகவிருக்கும் ஒரு பதிப்பாளரை நான் கண்டுபிடிப்பேன் என்று நம்புகிறேன்.
தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் முதன்மைச் சிக்கல்கள் எவை?
முதல் பார்வைக்கு, தமிழ் பண்பாட்டுக்கே உரிய கூறுகளை மொழிபெயர்ப்பதுதான் மிகப் பெரிய சவால் என்று தோன்றலாம். ஆனால், உரைநடைப் படைப்புகளை மொழிபெயர்க்கும்போது, தேவையான இடங்களில் சிறு விளக்கம் சேர்த்தோ, வேறு விதமாகச் சொல்லியோ, மொழிபெயர்ப்பை நீண்ட விளக்கங்களால் சுமையேற்றாமல் அவற்றை வாசகர்களுக்குப் புரியவைக்க முடியும்.
உண்மையிலேயே, மொழிபெயர்ப்பின் மிகப் பெரிய சவால் வாக்கிய அமைப்பில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். பிரெஞ்சு வாக்கியங்கள் செயலை மையமாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. அதற்கு மாறாக, தமிழ் வாக்கியம் அந்தச் செயல் நிகழும் சூழலுக்கும், அந்தச் செயலை நோக்கி நகரும் நிகழ்வுகளின் தொடர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒருவகையில், பிரெஞ்சும் தமிழும் உலகைப் பார்க்கும் விதத்திலேயே வேறுபடுகின்றன.
நீண்ட தமிழ் வாக்கியங்களை அப்படியே தொடர்ந்து மொழிபெயர்த்தால், பிரெஞ்சு போன்ற மொழியில் அவை மிகவும் இயல்பற்றதாகத் தோன்றும். எனவே, மொழிபெயர்ப்பாளரின் பணி, இலக்கு மொழியில் இயல்பாகத் தோன்றும் வாக்கியங்களை உருவாக்குவதோடு, தமிழ் வாக்கிய அமைப்பின் வழியாக வெளிப்படும் உலகப் பார்வையையும் அழித்துவிடாமல் காப்பாற்றுவதுதான். அப்படிப்பட்ட சமநிலையைக் கண்டுபிடிப்பதே மொழிபெயர்ப்பாளரின் இலட்சியம். அந்தச் சமநிலையை எவ்வாறு உருவாக்குவது என்பது ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் அணுகுமுறையைப் பொறுத்தும் மாறுபடும்.
என்னைப் பொறுத்தவரை, அந்தச் சமநிலை, இலக்கு மொழியை நோக்கிச் சற்றே சாய்கிறது. ஏனென்றால், மொழிபெயர்க்கப்பட்ட நூலை வாசகர்கள் ஓர் ஆவணமாக வாசிக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்புவதில்லை. அது தமிழில் எப்படி ஓர் இலக்கியப் படைப்பாக வாசிக்கப்படுகிறதோ, அதேபோன்று பிரெஞ்சிலும் ஓர் இலக்கியப் படைப்பாகவே வாசிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஒரு அய்ரோப்பியராக நீங்கள் தமிழ் வாழ்வையும் கலாசாரத்தையும் தமிழ் இலக்கியங்களுக்கு ஊடாக எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?
தென்னாசியாவிலிருந்து வரும் நூல்களையோ, தென்னாசியாவைப் பற்றிய நூல்களையோ நான் அடிக்கடி வாசிப்பதால், என் தனிப்பட்ட கருத்து பிரெஞ்சு பொது வாசகர்களின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாது என்றே நினைக்கிறேன்.
அதற்குப் பதிலாக, தமிழ் இலக்கியத்தின் வழியாக முதன்முறையாகத் தமிழ் பண்பாட்டை அறிந்துகொள்ளும் ஒரு பிரெஞ்சு வாசகர் என்ன மாதிரியான பிம்பத்தை உருவாக்கிக்கொள்வார் என்று சிந்திப்போம்.
இன்று தமிழ் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நூல்களாகப் புத்தகக் கடைகளிலோ இணையத்திலோ எவை கிடைக்கின்றன என்று பார்ப்போம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான நூல்கள்: புதுமைப்பித்தன் முதல் வேல. ராமமூர்த்தி வரை எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளை உள்ளடக்கிய ‘நாகலிங்க மரம்’ தொகுப்பு, பாமாவின் ‘சங்கதி’, அம்பையின் ஐந்து சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு, இமையத்தின் ‘பெத்தவன்’, பெருமாள் முருகனின் ‘பூக்குழி’, ‘மாதொருபாகன்’ மற்றும் சில உதிரிச் சிறுகதைகள், மேலும் ஷோபாசக்தியின் ‘Friday et Friday’ சிறுகதைத் தொகுப்பு, இச்சா, ‘ஸலாம் அலைக்’ ஆகிய நூல்களும் இன்று பிரெஞ்சில் கிடைக்கின்றன.
இந்த நூல்களின் ஆசிரியர்கள் பெரும்பாலும் முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள். சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் இவர்கள் தங்கள் படைப்புகளில் முக்கியமாகக் கவனப்படுத்துகிறார்கள். பிரெஞ்சு வாசகர்கள் இந்த நூல்களின் வழியாக இரண்டு அம்சங்களை முதன்மையாகக் கவனிப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். ஒன்று, தமிழ் சமூகத்தில் நிலவும் சமூக உறவுகளின் கடுமை. மற்றொன்று, விளிம்புநிலை மக்களின் வாழ்விலிருந்து எழும் வலிமையான குரல்கள். பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ் எழுத்தாளர்கள், சல்மான் ருஷ்டி அல்லது அருந்ததி ராய் போன்ற பெருநகர நடுத்தர அல்லது உயர்வர்க்கப் பின்னணியைச் சேர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து இந்த வகையில் வேறுபடுகிறார்கள்.
தமிழ் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பிரெஞ்சு வாசகர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனக் கருதுகிறீர்கள்?
ஷோபாசக்தி மற்றும் பெருமாள் முருகன் ஆகியோரின் நாவல்கள் குறித்துப் பிரெஞ்சு ஊடகங்களில் வெளியான மதிப்புரைகள், இலக்கிய நிகழ்வுகளில் வாசகர்களுடன் நான் கலந்துகொண்ட உரையாடல்கள், மேலும் ‘Babelio’ இணையத்தளத்தில் வாசகர்கள் பதிவிட்ட கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பார்த்தால், தமிழ் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு பிரெஞ்சு வாசகர்கள் அளிக்கும் வரவேற்பு மொத்தத்தில் மிகவும் நல்லதாகவே இருக்கிறது என்றே நான் கூறுவேன்.
அதிகமாக அறியப்படாத மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வாங்கி வாசிப்பவர்கள், பொதுவாக புதிய இலக்கிய உலகங்களை அறிந்துகொள்ள விரும்பும் ஆர்வமிக்க வாசகர்களாக இருப்பார்கள். தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் அவர்களுடைய அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகின்றன என்று சொல்ல முடியும்.
ஆனால், சில வாசகர்கள் தாங்கள் வாசித்த தமிழ் நாவல்களில் தமிழ் கலாசாரத்தில் இடப் பெயர்கள் எப்படி அமையும், சமூக உறவுகளும் நம்பிக்கைகளும் சடங்குகளும் எப்படி இயங்கும் என்பதைப் புரிந்துகொள்வதில் சில நேரங்களில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இருப்பினும், வாசிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பிலேயே ஏற்கனவே கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பிரெஞ்சு வாசகர்களுக்குப் புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருக்கும் என்று நாங்கள் கருதிய சில இடப்பெயர்களையும் சில குறிப்புகளையும் பதிப்பாசிரியரும் நானும் கலந்துரையாடி நீக்கியுள்ளோம்.
வாசகர்களின் இந்தப் பதிவு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது, தமிழ் உலகம் இன்னும் பிரான்ஸில் பரவலாக அறியப்படவில்லை; அதனால், இந்தப் படைப்புகளுக்குள் இயல்பாக நுழைவதற்குத் தேவையான பண்பாட்டு அறிமுகம் பெரும்பாலான பிரெஞ்சு வாசகர்களிடம் இன்னும் உருவாகவில்லை.
உதாரணத்திற்கு, நியூயார்க் நகரத்திற்குச் சென்றதில்லையென்றாலும், அந்த நகரத்தைப் பின்னணியாகக் கொண்ட ஏதாவது ஒரு நாவலைப் பிரெஞ்சு வாசகர்களால் எளிதாக வாசிக்க முடியும். ஏனெனில் புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றின் மூலம் அந்த நகரத்தை அவர்கள் ஏற்கனவே நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாணம், கொங்கு நாடு, அல்லது சென்னை போன்ற இடங்கள் அவர்களுக்கு பெரும்பாலும் முற்றிலும் புதியவையாகவே இருக்கின்றன.
இந்த நிலைமை மெல்ல மெல்ல மாறும். மேலும் மேலும் தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் எழுத்தாளர்கள் உலகளவில் அதிகமாக அறியப்படும்போது, பிரெஞ்சு வாசகர்களும் இந்தப் பண்பாட்டு உலகத்துடன் படிப்படியாகப் பரிச்சயமடைவார்கள். அப்போது அடுத்தடுத்து வெளியாகும் தமிழ் நாவல்களை அவர்கள் இன்னும் இயல்பாக வாசிக்க முடியும்.
தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கும், தற்காலப் பிரெஞ்சு இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமை என்ன?
இவ்வளவு செழுமையான இரண்டு மொழிகளுடைய தற்கால இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்போதும் எளிதான விஷயம் அல்ல. இருந்தாலும், அவற்றுக்கிடையிலான சில ஒற்றுமைகளைச் சொல்ல வேண்டுமென்றால், அவை பெரும்பாலும் ஒரே மாதிரியான முக்கியமான கேள்விகளைக் கையாள்கின்றன என்று சொல்வேன். அரசியல் வன்முறை, காலனித்துவத்தின் விளைவுகள், குடும்ப அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அவற்றில் அடங்கும். நிச்சயமாக, இவை அனைத்தும் வெவ்வேறு பண்பாட்டுச் சூழல்களில் வெளிப்படுகின்றன.
தமிழ் மற்றும் பிரெஞ்சு இலக்கியங்களுக்கிடையிலான மிகப் பெரிய வேறுபாடு, அவற்றை உருவாக்கிய வரலாற்று அனுபவங்களில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். வரலாற்றின் பெரிய துயரங்கள் இலக்கியத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நமக்கெல்லாம் தெரியும். இன்று தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு பகுதி புலம்பெயர் சமூகங்களில் எழுதப்படுகிறது. அதற்கான வரலாற்றுக் காரணங்கள் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இதற்கு மாறாக, பிரெஞ்சு இலக்கியத்தில் புலம்பெயர் எழுத்துகள் இருந்தாலும், அவை தற்காலத் தமிழ் இலக்கியத்தில் இருப்பதைப் போல அவ்வளவு முக்கியமான இடத்தைப் பெறவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரான்ஸ் ஒப்பீட்டளவில் பெரிய வரலாற்றுத் துயரங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான், தற்காலப் பிரெஞ்சு இலக்கியத்தின் பெரும்பகுதி தனிமனித அனுபவத்தையே மையமாகக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. சுயசரிதைகள், குடும்ப வரலாற்றை மையமாகக் கொண்ட கதைகள், சுயபுனைவுகள் போன்றவை அதற்கு உதாரணங்கள். இந்த மிகுந்த அகமுகத் தன்மை கொண்ட இலக்கியம் சில வாசகர்களுக்கும் சில பதிப்பாளர்களுக்கும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், உலகமும் வரலாறும் இன்னும் வலுவாக உணரப்படும் படைப்புகளை அவர்கள் ஏக்கத்துடன் தேடத் தொடங்குகிறார்கள். குறிப்பாக, தெற்காசிய இலக்கியங்கள் அவர்களது ஏக்கத்தை நிறைவேற்றுகின்றன.
Jean paul sartre, Albert Camus, Jacques Derrida போன்ற சென்ற நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியவாதிகளும் சிந்தனையாளர்களும் தமிழில் நன்கு அறியப்பட்டவர்கள். இன்று தமிழ் வாசகர்கள் கவனம் குவித்துப் படிக்க வேண்டிய இலக்கியவாதிகள் மற்றும் சிந்தனையாளளர்களாக நீங்கள் யார் யாரைப் பரிந்துரைப்பீர்கள்?
மானிடவியல் துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இருபதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு சிந்தனையாளர்களின் நூல்கள் இன்னும் அதிகமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
முதலில் Pierre Bourdieu என்ற பெயரைச் சொல்ல வேண்டும். 1990-களில் வெ. ஸ்ரீராம் அவர்கள் Pierre Bourdieu அவர்களின் தொலைக்காட்சியைப் பற்றிய ‘Sur la télévision’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். எதிர்காலத்தில் அவரது மற்ற நூல்களும் தமிழில் வெளிவர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். குறிப்பாக, ‘La Distinction’ மொழிபெயர்க்கப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அதுவே Pierre Bourdieu-வின் மிகவும் புகழ்பெற்ற நூலாகும். நமக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் என்று தோன்றுபவை கூட, நாம் பிறந்த சமூக வர்க்கத்துடனோ அல்லது நாம் சேர விரும்பும் சமூக வர்க்கத்துடனோ நெருங்கிய தொடர்புடையவை என்பதை அந்த நூல் விளக்குகிறது.
அடுத்து Paul Ricoeur. அவரது நினைவு, வரலாறு, மறதி (La Mémoire, l’Histoire, l’Oubli )என்ற நூலைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு சமூகம் எவ்வாறு சமநிலையான நினைவுணர்வை உருவாக்க முடியும் என்பதைக் குறித்து இந்த நூல் ஆழமாகச் சிந்திக்கிறது. அதாவது, மறதியிலும் விழாமல், கடந்த காலத்தின் மீதான அளவுக்கு மீறிய பற்றுதலிலும் சிக்காமல், வரலாற்றை அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தாமலும் இருக்க வேண்டிய வழியை அது ஆராய்கிறது.
தத்துவ நூல்களை வெளியிட விருப்பமுள்ள ஒரு தமிழ் பதிப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் கிடைத்தால், René Gira அவர்களின் வன்முறையும் புனிதமும் (La Violence et le Sacré) என்ற நூலை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும். இயேசுவின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த பதற்றங்களையும் வன்முறையையும் ஒரு பலிகடாவை உருவாக்கி அதன் மீது சுமத்துவதன் மூலம் சமூகங்கள் எவ்வாறு தங்களை அமைதிப்படுத்திக்கொள்கின்றன என்பதை René Girard இந்த நூலில் விளக்குகிறார்.