காலச்சுவடு ஆசிரியரிடம் சில கேள்விகள்

கட்டுரைகள்

‘எதுவரை’ இணையத்தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் பதிலளிப்பார் என அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே கீழ்க்கண்ட கேள்விகளை ‘எதுவரை’ இணையத்தளத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளேன். பதிலளிக்கவிருக்கும் ‘காலச்சுவடு’ ஆசிரியருக்கும் பதில்களை வெளியிடவிருக்கும் ‘எதுவரை’ இணையத்தளத்திற்கும் முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • 1. கடந்த மார்ச் மாதம் லண்டனில் நீங்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், உங்களது ‘சுவடி’ நிறுவனம் ‘பிராமின் டுடே’ பத்திரிகையை தயாரித்துக் கொடுப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது ‘பிராமின் டுடே’ க்கும் உங்களது நிறுவனத்திற்கும் இடையே உள்ளது வணிக உறவு  மட்டுமே’ எனக் கூறியிருந்தீர்கள். பச்சையாக சாதிவெறியையும் இனவெறியையும் பிரச்சாரம் செய்யும் அந்தப் பத்திரிகையை நீங்கள் தயாரித்துக் கொடுப்பது எந்தவிதத்தில் சரியானது? வணிக நோக்குக்கு முன்னால் சமூகக் கரிசனை என்று உங்களுக்கு எதுவும் கிடையாதா? சாதி வெறிப் பத்திரிகையைத் தயாரித்துக் கொடுத்து காசு பெறுமளவிற்கு கீழான வணிக நோக்கில்  நீங்கள் இயங்குபவர் எனில் பொதுவெளியில் கருத்துகளை உரைப்பதற்கான உங்களது தகுதிதான் என்ன?
  • 2. தமிழகத்தில் வாரிசு அரசியலை அறிமுகப்படுத்தியது தி.மு.க. எனில் இலக்கியத்தில் வாரிசு உரிமையைக் கடைப்பிடிக்கும் ஒரேயொரு பத்திரிகை ‘காலச்சுவடு’ எனச் சொல்லலாமா? காலச்சுவடு உங்களது குடும்பப் பத்திரிகை என்ற ஒரேயொரு காரணம்தான் உங்களையும் ஓர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக்கியிருக்கிறது என்ற விமர்சனம் குறித்து?
  • 3. “புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் காலச்சுவடு ஈடுபடுவதில்லை என்பதே காலச்வடின் நிலைப்பாடு” என்று அன்றைய கூட்டத்தில் சொல்லியிருந்தீர்கள். புலிகளை ஆதரிக்க எந்தக் காரணமும் கிடையாதுதான். அதே வேளையில்  பல்லாயிரம் படுகொலைகளையும் அளவற்ற அராஜகங்களையும் செய்த புலிகளை  எதிர்க்காமலிருந்ததில் பெருமைப்பட என்னயிருக்கிறது?
  • 4. சாதிப் பட்டங்களை பெயர்களோடு சேர்த்துப் போடுவதைத் திராவிட இயக்கம் ஒழித்துப் பல பத்து ஆண்டுகளாகிவிட்டன. இருப்பினும் எனக்குத் தெரிந்த அளவில் தமிழில் இரு பத்திரிகைகள் இன்றும் ஆசிரியரின் பெயரிலும் ஆலோசகரின் பெயரிலும்  சாதிப் பட்டங்களை ஏந்தி வருகின்றன. அந்த இரண்டு பத்திரிகைகளையுமே உங்களது சுவடி நிறுவனமே தயாரிக்கின்றது. அந்தப் பத்திரிகைகள் முறையே பிராமின் டுடேயும் காலச்சுவடும் ஆகும். நீங்கள் ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கும் பத்திரிகையின் ஒவ்வொரு இதழும் தனது முதல் பக்கத்தில் சாதிப் பெயரைச் சுமந்து வருவதையிட்டு உங்களுக்குச் சுயவிமர்சனம் ஏதுமுண்டா?
  • 5. பார்ப்பனர்களைப் ‘பிராமணர்கள்’ என்று நீங்கள் எழுதுவது குறித்து உங்களுக்கு சுயவிமர்சனங்கள் ஏதுமுண்டா? பெரியார் ஈவெரா “அவன் பிராமணன் என்றால் நாம் யார்? அந்த முறையில் நம்மைக் குறிப்பிடும் சொல் ‘சூத்திரன்’ என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? ‘பார்ப்பனர்’ என்கிற தமிழ்ச் சொல்லே இருக்கும்போது, ஒருவரைப் ‘பிராமணன்’ என்கிற சொல்லால் குறிப்பிட்டால் நமக்கு மானம் இல்லை, அறிவு இல்லை; மனித உணர்ச்சி இல்லை” எனச் சொல்லியிருப்பதை நீங்கள் படித்ததுண்டா? ‘இஸ்லாமியத் தலித்துகள்’ என்று நீங்கள் எழுதும் சொல்லாடலின் பின் மறைந்திருக்கும் அரசியல் என்ன? “இஸ்லாத்தில் தலித்துகளுக்குக் கிடைத்த சமத்துவம் பற்றிய கண்ணனின் மனக்குமைச்சல் ‘இஸ்லாமிய தலித்துகள்’ என்ற சொல்லாடல் மூலம் வெளிப்படுகின்றது” என்ற சாளை பஷீரின் விமர்சனத்திற்கு உங்களது பதிலென்ன?
  • 6.பாபர் மசூதி இடிக்கப்படுவதை நியாயப்படுத்தி காலச்சுவடு கட்டுரையை வெளியிட்டதை இப்போதும் சரி என்றா சொல்கிறீர்கள்? ‘கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அந்தக் கட்டுரையை வெளியிட்டோம்’ என நீங்கள் சொன்ன கருத்தில் மாற்றம் ஏதுமில்லை எனில் காடுவெட்டி குரு போல ஒருவர் ‘வன்னியரை மணம் செய்தால் வெட்டுவேன்’ என ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தால் அதையும் கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் வெளியிடுவீர்களா?
  • 7.காலச்சுவடின் புரவலரான ‘கிருஷ்ணா ஸ்வீட்’ நிறுவனம் பார்ப்பனர்களிற்கான தனிச் சுடுகாடை கோவையில் அமைத்ததற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியது உங்களுக்குத் தெரியுமா? இப்போதும் ‘கிருஷ்ணா ஸ்வீட்’ நிறுவனம் உங்களது புரவலர்கள்தானா?
  • 8. சங்கரமடம் சீரழிகிறதே என வருத்தப்பட்டு மடத்தைக் காப்பாற்ற காலச்சுவடு தலையங்கத்தில் அடியார்களுக்கு போராட்ட அழைப்பு விடுத்தது போல, மதுரை ஆதீனத்தை நித்தியானாந்தாவிடம் கைமாற்றிக் கொடுத்த பரபரப்புச் சம்பவத்திலும் சைவ அடியார்களை நோக்கி போராட்டத்துக்கு அழைப்புவிடும் எண்ணம் காலச்சுவடுக்கு உண்டா?
  • 9.அணுசக்தி உடன்படிக்கையை முழுவதுமாக ஆதரித்து மாநிலங்களவையில் கனிமொழி ஆற்றிய உரையை முழுமையாக நீங்கள் காலச்சுவடில் வெளியிட்டதற்கான உண்மையான நோக்கம் என்ன? அதன்முலம் ஊழல் திமுக அரசிடமிருந்து காலச்சுவடுக்கு கிடைத்த  சலுகைகள் என்ன? இல்லையெனில் கனிமொழியின் உரையை நீங்கள் ஏன் வெளியிட வேண்டும்? இவ்வாறான மாநிலங்களவை உரைகளை ‘காலச்சுவடு’ அதற்கு முன்போ பின்போ வெளியிட்டதில்லையே? கனிமொழியோடு பகை ஏற்பட்டதன் பின்பாக, “கனிமொழியை அம்பலப்படுத்தவே அதை வெளியிட்டோம்” என நீங்கள் எழுதியதை நம்புமளவிற்கு தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் வாசகர்களும் அடி முட்டாள்களாக இருக்கிறார்கள் என்றா நம்புகிறீர்கள்?
  • 10.லண்டன் கூட்டத்தில் நீங்கள் வாசித்த கட்டுரையில், அனுராதபுரத்தில் 1985ல் புலிகள் செய்த கொலைகளால் நீங்கள் அதிர்ச்சியுற்றீர்கள் என்றும் அதன்பின்பு உங்களது அறையில் ஒட்டப்பட்டிருந்த பிரபாகரனது படம் கிழிந்து தொங்கியபோது அதை மறுபடியும் ஒட்டாமலேயே விட்டுவிட்டீர்கள் என்றும் 1990 -91ல் முஸ்லீம்களிற்கு புலிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளை 3 வருடங்கள் கழித்து நீங்கள் முழுமையாக அறிந்தபோது புலிகளுடன் உங்களுக்கிருந்த கொஞ்சநஞ்ச மானசீக உறவும் அற்றுப்போனது என்றும் அன்றிலிருந்து நீங்கள் புலிகள் மீது நம்பிக்கை இழந்தீர்கள் என்றெல்லாம் சொன்னீர்கள். இந்தச் செய்திகளையெல்லாம் மே 2009ற்கு பின்பாக அதுவும் தமிழகத்திற்கு வெளியே ஒரு கூட்டத்தில்தான்  பேசவேண்டும் என அப்போதே முடிவு செய்திருந்தீர்களா?  இல்லையெனில் புலிகள் மீதான உங்களது இத்தகைய விமர்சனங்களை மே 2009ற்கு முன்பாக உங்களால் ஏன் பொதுவெளியில் வைக்க முடியவில்லை?

– ஷோபாசக்தி
பிரான்ஸ்
14.05.2012

7 thoughts on “காலச்சுவடு ஆசிரியரிடம் சில கேள்விகள்

  1. கேள்விகளின் வீச்சு நெற்றிப்பொட்டில் அடித்தாற்போலிருக்கிறது. ஆனால், பதில்கள் கிடைக்குமா?

  2. கண்ணன் ! பதில்சொல்வார் என்றா நினைக்கிரீர்கள்?

  3. வாசிக்கப் போகும் கண்ணனுக்கு கண் மங்கலாகி தல சுத்தத்தான் போகுது..
    முன்கூட்டியே கண்ணனுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்…

  4. இதைப் போல எத்தைனை கேள்விகளைப் பார்த்தாச்சு? போங்க தம்பி, போங்க… நீங்க ரொம்ப சின்னப்பிள்ள… உங்களுக்கான பதிலோடு கண்ணன் அண்ணன் குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும் வாங்கிக் கொடுப்பாரு… கொண்டு போய் வீட்ல வச்சு விளையாடுங்க…

    பார்ப்பனீயம் இதற்கும் நிச்சயம் பதில் சொல்லும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *