பஞ்சத்துக்குப் புலி

கட்டுரைகள்

கீற்று இணையத்தளம் தொடர்ச்சியாக நடத்திவரும் அவதூறுப் பரப்புரைகளுக்கு எதிரான விமர்சனத் தொகுப்பு நூல். ஒன்பது விரிவான கட்டுரைகளுடனும் கொற்றவையின்மார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச் சிந்தனையும் கட்டுரை உள்ளிட்டு நான்கு பின்னிணைப்புகளுடனும், ஆதவன் தீட்சண்யாவின் பின்னட்டைக் கவிதையுடனும் வெளியாகியிருக்கிறது. பக்கங்கள்: 160. விலை: இந்தியா ரூ 80. அய்ரோப்பா – 10 Euros. இலங்கைஇலவசம்.

நூலிலிருந்து:

வாய்ச்சொல் தலைச்சுமை என்று கிராமத்து எளிய மனிதர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவர் தனது சொற்களின் மீது எவ்வளவு கவனமாகவும் பொறுப்பாகவுமிருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் வெள்ளாந்தி மனிதர்களின் சொல்லாடலது. ஆனால் அவதூறாளர்களிற்கு சொற்கள் என்பது தலைச் சுமையன்று, சொற்கள் அவர்களுக்கு வெறுமனே தலையிலிருந்து உதிர்த்துவிடும் ரோமங்களே. இந்த ரோமங்களின் சேகரிப்புக் கிடங்குதான் இன்றைய கீற்று இணையத்தளம்.

அவதூறுகள், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்திற்கும் முன்னேறிச் செல்லும் விவாத நெறிகளுக்குமான பெரும் தடைக் கற்கள். அவதூறுகள், சனநாயக விழுமியத்தின் கண்களில் விழுந்த குறுணிகள். இன்றைய இணையச் சூழல் அறிவுத் தேடல்களுள்ளவர்களிற்கு எவ்வளவு நல்வாய்ப்போ அதேபோன்று கெடுவாய்ப்பாக அது அவதூறாளர்களிற்கும் வாய்ப்பாகிப் போனது. தமிழ்ச் சூழலில் நிதர்சனம்‘, தேசம் நெட் போன்ற வலதுசாரி வம்பளப்பு இணையங்களும் தமிழரங்கம் போன்ற இரண்டுங்கெட்டான் இணையங்களுமே அவதூறுக் கலாசாரத்தின் முன்னோடிகள் எனினும் ஓர் இடது அரசியல் (ம.க.இ.க) இணையத்தளமாக அறியப்படும் வினவு இணையத்தளமே அவதூறுக் கலாசாரத்தைப் புரட்சிகரச் சாயம் ஏற்றித் தூக்கி நிறுத்தியது. ஆதாரமற்ற அரசியல் அவதூறுகளைச் சொரிந்த அந்த இணையம் பின்னூட்டங்களிலும் அவதூறுத் தூள் கிளப்பிற்று. அநாமதேயப் பின்னூட்ட மன்னர்களின் அவதூறு எழுத்துகளால் வினவு சீரழிந்தது. வினவு இணையத்தளத்தின் நிரந்தரப் பின்னூட்டக்காரர்களாக ஏழரை, அர டிக்கட்டு, கலகம், கேள்விக்குறி போன்ற மூகமுடிகள் வலம் வந்தார்கள். தலைமறைவுப் போராட்டத்திலிருந்து தலைமறைவு அவதூறுகளிற்குப் புரட்சியாளர்கள் பாதை மாறியது வரலாற்றுக் கொடுமையன்றி வேறென்ன!

மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழகத்து அரசியல் சூழலில் தவிர்க்கவே முடியாத தரப்பு. அவர்களது நீண்ட அரசியல் வரலாற்றில் கருத்து மாறுபாடு உள்ளவர்கள் கூட அவர்களது எண்ணற்ற களப் போராட்டங்ளை மதிக்கவே செய்வார்கள். ம.க.இ.கவினரின் அரசியல் முன்னோக்கில் உடன்படாதவர்கள் கூட அவர்களது உழைப்பைக் கனம் செய்வார்கள். வினவு இணையத்தளமோ ம.க.இ.கவின் மானத்தை வாங்கியது. பாட்டாளி வர்க்கத்திற்கு கற்றுக் கொடுப்பதற்கு அவதூறுகளும் ஆபாசமும் வினவுவிற்குத் தேவைப்பட்டன. வினவுவிற்கு எதிர்வினையாக நான் வெவ்வேறு மூன்று கட்டுரைகளை எனது வலைப்பதிவிலே எழுதியிருக்கிறேன். ஓர் அவதூறை உண்மையென நிரூபணம் செய்வது அவதூறாளனிற்கு எவ்வாறு சாத்தியமில்லையோ அவ்வாறே அவதூறால் பாதிக்கப்பட்டவனுக்கும் தன்மேல் ஏவிவிடப்பட்ட அவதூறைப் பொய்யென நிரூபணம் செய்யச் சாத்தியங்கள் குறைவே. அவதூறுகளிள் அடிப்படைப் பலமே இதுதான். ஏனெனில் அவதூறுகள் காட்டிலே மூண்ட தீயல்ல. அவை காற்றிலே நசுக்கிவிடப்பட்ட குசு.

காலம் அவதூறாளனைத் தோல்வியுறச் செய்யும். ஆனால் அதற்குள் அவதூறுக்குள்ளானவன் தனது விலையைச் செலுத்தியிருப்பான். அவ்வாறான ஒரு நிகழ்வுதான் வினவு இணையத்தளம் செங்கடல் திரைப்படம் குறித்துக் கட்டியெழுப்பிய அவதூறு. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, வினவு இணையத்தளம் செங்கடல் திரைப்படம் தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவதற்குப் புலிகளே காரணம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தது. வினவு இணையத்தளம் உருவாக்கிய இந்த வதந்தி அடுத்த ஒரு வருடத்திற்கு திரைப்படத்தின் உருவாக்க வேலைகளில் சிறிதளவாது பாதிப்பை உண்டாக்காமலில்லை. ஊடகத்தளத்திலும் வினவுவின் இந்த வதந்தி குறிப்பிடத்தக்க பாதிப்பைச் செய்தது. செங்கடல் முடிவடைந்து மாநிலத் தணிக்கைக் குழுவால் முடக்கப்பட்டது. இந்திய அரசையும் இலங்கை அரசையும் கடுமையாக விமர்சிப்பதால் தணிக்கைச் சான்றிதழ் வழங்க முடியாது என மாநிலத் தணிக்கைக் குழு அனுமதி மறுத்தது. செங்கடல் திரைப்படம் சென்னையில் 3 சிறப்புக் காட்சிகளில் திரையிடப்பட்டது. வினவுவின் அவதூறுகளைத் திரைப்படம் முற்றாக முறியடித்துள்ளது. அதற்காக நாங்கள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும் நாங்கள் வினவுவின் அவதூறுக்கு விலை கொடுக்கத்தானே நேரிட்டது.

அவதூறுகளை நியாயப்படுத்த வினவு இணையத்தளத்திற்கு வர்க்கப் போராட்ட முழக்கமென்றால் அதுவே கீற்று இணையத்தளத்திற்கு ஈழப் போராட்ட முழக்கமானது. இந்த முழக்கத்தை முன் வைத்த கீற்றுவின் அருவருக்கத்தக்க அவதூற்று வாயில் விழுந்தவர்கள் எத்தனையெத்தனை பேர்! அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுசீந்திரன், எஸ்.வி.ராஜதுரை, லெ.முருகபூபதி, அகிலன் கதிர்காமர், லீனா மணிமேகலை, பௌஸர், ரஞ்சித் ஏக்கநாயக்க, சுகுணா திவாகர், தேவதாசன், கவின்மலர், ராகவன்… என நீண்ட பட்டியலது. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு (அய்.என்.எஸ்.டி), இலங்கை ஜனநாயகப் பேரவை (எஸ்.எல்.டி.எவ்) போன்றவையும் கீற்றுவின் வாயில் விழுந்தவையே.

இங்கே நான் பட்டியலிட்டிருக்கும் தனிநபர்கள் விமர்சிக்கப்படக் கூடாதவர்கள் கிடையாது. இங்கே பட்டியலிடப்பட்ட அமைப்புகளின் அரசியலை ஆராய்ந்து சொல்லவும் தடையேதும் கிடையாது. இவர்கள் இலங்கை அரசின் மீது மென்போக்குக் கொண்டவர்களாகவோ அல்லது அதனது ஆதரவாளர்களாகவோ இன்னும் சொன்னால் அதனது அடிவருடிகளாகவோ இருக்கிறார்கள் எனக் கீற்றுக் கருதும் பட்சத்தில் அவர்களை அம்பலப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதும் கீற்றுவின் முற்றுரிமை. ஆனால் அதைக் கீற்று செய்ய வேண்டியது

அரசியல் கருத்துகளாலும் ஆதாரபூர்வமான தகவல்களினாலுமே அல்லாமல் அவதூறுகளினால் அல்ல. அவதூறிற்குப் பெயர் அரசியற் போராட்டமோ, கருத்துச் சுதந்திரமோ கிடையாது. அவதூறிற்குப் பெயர் அவதூறு மட்டுமே. அவதூறுகளின் துணையுடன் எதிராளிகளைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதும், வெற்றி கொள்ள எண்ணுவதும் ஊடக நெறியல்ல. அது ஈனத்தனமான கோழைத்தனமாகும்.

ஈழப் போராட்டம் குறித்துக் கீற்றுவில் வெளியாகும் கட்டுரைகள் எவ்வித அடிப்படை அரசியல் அறிவும் வரலாற்று உணர்வும் இல்லாமல் எழுதப்படும் சொற்குப்பைகளே. மிகவும் இலகுவாகப் புலிகள் x துரோகிகள் என்ற இருமை எதிர்வுகளில் எழுதப்பட்ட மூடத்தனமான கட்டுரைகள் அவை. இலங்கை இனச் சமூகங்கள், பண்பாடு, இலங்கையின் பொருளாதார அமைப்பும் சிக்கல்களும், இலங்கையின் அரசியலைத் தீர்மானிப்பதில் பன்னாட்டு மூலதனங்களின் வகிபாகம், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் நேரடி மற்றும் அரூபத் தலையீடுகள், ஈழத்தின் சாதியமைப்பு, பிராந்திய வேறுபாடுகள், இந்தப் பண்பாட்டு வேறுபாடுகளிற்கும் அரசியலிற்குமான ஊடாட்டங்கள், முஸ்லீம்கள் மற்றும் மலையகத்தவர்களின் தனித்துவமான பிரச்சினைகள், தமிழ்ப் போராளி அமைப்புகளின் வலதுசாரித்தனம், ஆயுதப் போராட்ட அரசியலின் தார்மீக வீழ்ச்சி போன்ற எந்தப் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுக்காது வெறுமனே குறுகிய தமிழ்த் தேசிய உணர்வால் பொங்கிய தமிழ் கீற்று இணையத்தளத்தில் கட்டுரைகளாக மாற்றப்பட்டன. இந்தக் கட்டுரைகளின் அடிநாதமாக இருந்தவை வன்மத்தில் பிறந்த அவதூறுகளும் திரிப்புகளும் எளிய உணர்சிகரமான அரசியலும் மட்டுமே. ஈழப் போராட்டத்தை மையப்படுத்தி இராம நாராயணன் ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என மனதைக் கல்லாக்கிக்கொண்டு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கிராபிக்ஸில் சிங்கம் புலியெல்லாம் வருமல்லவா. அதைத்தான் எழுத்திலே கீற்று இணையத்தளம் செய்கிறது. அவ்வப்போது கிராபிக்ஸ் கூட உண்டு.

ஆயுதம் ஏந்திய ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சி இன்று நேற்று உறுதி செய்யப்பட்டதல்ல. சகோதர விடுதலை இயக்கங்களைப் புலிகள் தடைசெய்து, மாற்றுக் கருத்துக் குரல்களை முளையிலேயே கிள்ளி வீசிவிட்டு, போராட்டத்தின் மொத்தக் குத்தகைக்காரர்களாகத் தங்களை நிறுவிக்கொண்டு அப்பட்டமான வலதுசாரிப் பாஸிசப் பாதையைப் புலிகள் தேர்ந்தெடுத்தபோதே ஆயுதப் போராட்டத்தின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது.ஒரு போராட்டத்தின் வெற்றி தோல்வியைப் போராடுபவர்களின் படைபலத்தை வைத்து அளவிடுவதை விடப் போராட்டத்தின் தார்மீகப் பலத்தை வைத்து அளவிடுவதே சரியானதாக இருக்கும். ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அரசியல் சாணக்கியத்தனங்களை விட அரசியல் அறங்களே முக்கியமானவைகளாக இருக்கும். ஒரு போராட்டம் சர்வதேச அரசுகளிடம் எவ்வளவுதான் ஆதரவு பெற்றிருந்தாலும் தனது சொந்த மக்களிடம் அது ஆதரவைப் பெறத் தவறினால் போராட்டத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். புலிகள் பாஸிசத்தால் ஈழப் போராட்ட வரலாறைத் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் எழுதினேன் (ஈழப் போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும்). போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புறக்காரணிகள் எவ்வளவு முக்கியமாகயிருந்தனவோ அதைவிட முக்கியமானவை அகக் காரணிகள். இந்தத் தெளிவு இல்லாத பட்சத்தில் அல்லது அதைக் கண்டுகொள்ள மறுக்கும் பட்சத்தில் போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைச் சரியாக மதிப்பிட்டுவிட முடியாது. அவ்வாறான தட்டையான ஆய்வுகள் கட்டுரையாளனைப் புனைவிலும் பொய்யிலும் முட்டாள்தனத்திலுமே தஞ்சமடையச் செய்யும். இப்போது புகலிடத்தில் சேரமானும் வழுதியும் ஊடகங்களில் செய்வது இதைதான். கீற்றுவில் நடந்துகொண்டிருப்பதும் அதுதான். அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்த்தேயிராத புலிகளின் வீழ்ச்சியால் பொறி கலங்கிப்போன அவர்களின் கைகள் விசைப் பலகையில் விழுந்த பாட்டுக்குக் குறி சுடுகின்றன.

யுத்த மறுப்பைக் கோரியவர்கள், ஈழத்தில் சனநாயத்திற்காக விடாப்பிடியாகப் போரடியவர்கள், இலங்கை அரசினதும் சர்வதேச அரசுகளினதும் ஆதிக்கக் கரங்களை மட்டுமல்லாமல் புலிகளின் நெட்டூரங்களையும் எதிர்த்து நின்றவர்கள், இலக்கியப் பிரதிகளில் அதிகாரங்களிற்கு எதிரான குரலை ஒலித்தவர்கள், ஈழப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய முன்னாள் போராளிகள், மனிதவுரிமைகளிற்காகக் குரல் கொடுத்தவர்கள், தலித் விடுதலை அரசியலாளர்கள், இடதுசாரிகள், இலங்கை அரசின் பேரினவாதப் போக்கைச் சர்வதேச அளவில் பரப்புரை செய்பவர்கள், இலங்கையிலிருந்து தப்பிவந்த பத்திரிகையாளர்களை ஒன்றிணைத்து ஊடகச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எல்லோருமே கீற்று இணையத்தளத்திற்குத் துரோகிகளாகத் தெரியும் கொடுமையை என்ன சொல்ல. நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி ஒன்றைச் சொல்வதுண்டு: பரம்பரைப் புலிகளைக் கூடச் சகித்துக்கொள்ளலாம், ஆனால் பஞ்சத்துக்குப் புலியானவர்களோ அருவருப்பானவர்கள்.

ஈழப் போராட்டத் தலைமைகள் மீது நமக்கு உறுதியான விமர்சனங்களுண்டு. ஆனால் ஈழப் போராட்டத்திற்காகத் தமிழ் மக்களும் அனைத்துப் போராளி இயக்கங்களின் அடிமட்டத் தோழர்களும் கொடுத்த விலைகள் மறக்கவொண்ணாதவை. இரண்டு தலைமுறைகள் இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டன. கணக்கின்றி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எஞ்சியவை ஆன்மாவால் சிதைந்திருந்தன. புலம் பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான ஈழத்து இளைஞர்களின் முதன்மை உளவியல் பிரச்சினை துர்க் கனவுகள். யுத்தம் இஸ்லாமியர்களையும் சிங்களவர்களையும் கூட அழித்துப்போட்டது. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய தமிழகத்தின் திராவிடர் கழகம்‘, தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் கூட இழப்புகளைச் சந்திக்க நேரிட்டன. அமைப்புகள் சாராத உதிரியான தமிழகத்துத் தோழர்களும் ஈழப் போராட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். ஈழப் போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் சுய அர்ப்பணிப்புகளும் வீரஞ் செறிந்த தியாகங்களும் அரசியல் கருத்து வேறுபாடுகளிற்கு அப்பாலும் எக்காலத்திலும் நமது மதிப்பிற்குரியவை.

ஆனால் எந்தவொரு அரசியல் பொறுப்புணர்வோ அறமோ அற்று ஈழம் கொப்பளித்த இரத்தத்தை நக்கிச் சுவை காண்பவர்களும், ஈழத்தின் இரத்தமும் சதையுமான வலிகளைத் தேர்தல் அரசியலில் தங்களது வாக்குகளாக மாற்றிக்கொள்ள எத்தனிப்பவர்களும், ஈழத்தின் ஒவ்வொரு சாவையும் தங்களது இணையத்தின் ஹிட்ஸுகளாக மாற்றிக்கொள்ளத் துடிப்பவர்களும், அரசியல் அர்ப்பணிப்புகளின் பெயரால் அல்லாமல் வெறுக்கத்தக்க அவதூறுகளின் பெயரால் தங்களை நிறுவிக்கொள்ள முயல்பவர்களும் தவித்த முயல் அடிப்பவர்கள். இலங்கை அரசிற்கு எதிராக இவர்கள் எழுப்பும் குரல்கள் ஈழ மக்களின் மீதான நேசத்திலிருந்து பிறப்பனவல்ல. ஈழத்து மக்களிற்குப் புலிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் துரோகத்தையும் மறந்தும் உச்சரிக்க மறுக்கும் இந்தக் கேடுகெட்ட சந்தர்ப்பவாதிகளது அக்கறை வஞ்சிக்கப்பட்ட மக்களைக் குறித்ததல்ல. ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆக்கபூர்வமாகச் சிறு கருத்தைக் கூடக் கிள்ளிப் போடமல் அவதூறுகளை மட்டுமே அள்ளிச் சொரிந்து, எரியும் ஈழத்தவர்களின் உடலங்களின் வெளிச்சத்தில் தங்களை அடையாளம் போட்டுக் காட்ட முயற்சிக்கும் இவர்கள் வெறுமனே பஞ்சத்துக்குப் புலியானவர்கள். கீற்று இணையத்தளம் அந்த வகையினம்.

பிரதிகளிற்கு:

கருப்புப் பிரதிகள்

B55, Pappu masthan Darga, Lloyds Road, Chennai 600 005

பேச: 00 91 944427 2500

3 thoughts on “பஞ்சத்துக்குப் புலி

  1. சோபாசக்தி ‍சளையாத உங்களது எழுத்து, அரசியல் போராட்டத்திற்கு எமது ஆதரவு என்றும் உண்டு,

    அது சரி இலங்கை பேரினவாத அரசால் ஒடுக்கப்பட்ட தேசிய சிறுபான்மை இன மக்களின் உரிமைப் போராட்டத்தை பாசிச வழியில் முன்னெடுத்து, ஈற்றில் மக்களை கொன்றும், கொல்லக்கொடுத்தும் சரணாகதி அடைந்து தோல்வியுற்ற புலிகளின் அரசியல் பற்றி இவர்களால் சுயவிமர்சனமாவது செய்ய முடியவில்லையே , மற்றவர்கள் மீது அவதூறு செய்வதற்கு முன்பு.

    ஈழ போராட்ட அரசியலை அறிந்து கொள்ள,ஈழத்தின் மாற்று அரசியல் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர் யாவரும் சோபாசக்தியின் எழுத்துக்களை ஆழமாக படிப்பது அவசியம்.

  2. //பரம்பரைப் புலிகளைக் கூடச் சகித்துக்கொள்ளலாம், ஆனால் பஞ்சத்துக்குப் புலியானவர்களோ அருவருப்பானவர்கள்.// இவர்கள் நயவஞ்சகர்கள், கபடவேடதாரிகள், புலி ஆதரவு எனும் முகம் காட்டி மனதில் தங்களையும் புலியாகநினைத்துகொள்பவர்கள்.ஆபத்தானவர்களும் கூட.

  3. இலங்கை – இலவசம்//

    Riyas Qurana
    107 mavadi junctin
    akkaraipattu – 06
    sri lanka.

    இலவசம் என்றதும் எனக்கும் ஒன்று என்றது மனம்.
    எங்களைப்போல் பஞ்சத்தில அடிபட்டவர்கள் இப்படித்தான்
    ஆக்களிடம் கேட்டு காலப்புடிச்சிதான் வாசிக்கலாம்.
    தாறன் எண்டு சொல்லி பலர் ஏமாத்தியும் இருக்கினம்.
    என்ன செய்வது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *