பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
January 29th, 2014 | : கதைகள் | Comments (30)

தங்கரேகை

புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தம் எனச் சொல்லி ஆரம்பித்தான் கதைசொல்லி.

புனிதவதியைத் தேடி வந்திருந்த விடுதலைப் புலிகள் சொன்னது அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை. எனினும் வந்திருந்த இருவரையும் பார்த்துவாருங்கள்என்பதுபோலத் தலையாட்டிச் சிரித்தவாறே அவர்களை வரவேற்றுவிட்டு, முற்றத்தில் இருந்த இரண்டு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் காட்டி வந்தவர்களை உட்காரச் சொன்னார் புனிதவதி. வந்தவர்கள் புனிதவதி ரீச்சரை உட்காருமாறு சொல்ல, எதுவும் பேசாமல் புனிதவதி தலையை ஆட்டிவிட்டு முற்றத்து மண்ணில் மெல்ல உட்கார்ந்துகொண்டார். புலிகள் நாற்காலியில் உட்காரத் தயங்கி நின்றார்கள். அவர்களில் ஒருவன் புனிதவதியை நாற்காலியில் உட்காருமாறு கையைக் காட்டி மறுபடியும் சொன்னான். அவனது சைகையை ஓரளவு புரிந்துகொண்ட புனிதவதிபரவாயில்லை நான் பணிய இருக்கிறேன், அதுதான் எனக்கு வசதிஎன்று சொல்லியவாறே இரு கால்களையும் முற்றத்து மணலில் நீட்டிக்கொண்டார். பித்த வெடிப்பால் அவரது பாதங்களில் தோல் தாறுமாறாக உரிந்திருந்தது.

யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. இராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடுவே எல்லைக் கோடுகள் அடிக்கடி நகர்ந்துகொண்டிருந்தன. வடக்கும் தெற்குமாக மாறி மாறி நகர்ந்துகொண்டிருந்த எல்லைகளில் இப்போது வடக்குப் பக்கத்திலிருக்கும் கடைசிக் கிராமம் இதுதான். இந்தக் கிராமத்திற்கு அப்பால் ஓங்கிய வன்னிக்காடும் காட்டிற்குள் கைவிடப்பட்ட சிறு குடியிருப்புகளும் மட்டுமே கிடந்தன. அந்தக் காட்டில் புலிகள் காவலரண்களை அமைத்து எல்லையைக் காவல் செய்தார்கள். அந்த எல்லைக்கு அப்பால் சூன்யப் பிரதேசமிருந்தது. அதற்கும் அப்பால் இராணுவத்தின் எல்லைக்கோடும் காவலரண்களும், அங்கிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் வவுனியா நகரமுமிருந்தன.

இரண்டு எல்லைக்கோடுகளிலிருந்தும் எதிரிகளின் பகுதிகளை நோக்கி எப்போதும் துப்பாக்கிச் சூடுகளும் அவ்வப்போது எறிகணை வீச்சுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அங்கே வெடிக்கும் குண்டுகளின் ஓசை இங்கே கிராமத்தில் கேட்கும். அந்தச் சத்தங்களால்தான் புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் மந்தமாகிவிட்டன என அவரது ஒன்றுவிட்ட தம்பி வேலும் மயிலும் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் புனிவதிக்கு முப்பது வயதுக்கு முன்பாகவே காதுகள் மந்தமாகிவிட்டன. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஓய்வு பெறும்வரை அவர் அந்தக் கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் பணியாற்றியிருந்தார்.

புலிகள் வீடு வீடாகச் சென்று போராட்டத்திற்குப் பங்களிப்பாக தங்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். முதலில் தன்மையாகத்தான் கேட்பார்கள். தங்கம் பெயராது எனத் தெரிந்தால் பேச்சு வன்மையாகும். அதற்கும் பலனில்லாவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கும். புலிகளின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்வது கிட்டத்தட்ட முடியாத காரியம். இந்தக் கதைசொல்லியால் கற்பனையில் கூட அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

புலிகள் ஒரு படிவத்தை நிரப்பித் தருமாறு புனிதவதி ரீச்சரிடம் கொடுத்தார்கள். புனிதவதிக்கு அதைப் படிக்க மூக்குக் கண்ணாடி தேவைப்பட்டது. அவர் மீண்டும் சிரமப்பட்டுக் கைகளை மணலில் ஊன்றி எழுந்து தனது குடிசை வீட்டிற்குள் மெதுவாக நடந்துசென்று மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து மறுபடியும் மணலில் உட்கார்ந்து படிவத்தையும் பேனாவையும் எடுத்து மடியில் வைத்துக்கொண்டார்.

அந்தப் படிவம் நிரப்புவதற்கு எளிதானதுதான். பெயர், வயது, உறவுகள், முகவரி என்று கேள்விகளிருந்தன. அதைக் கடகடவென்று புனிதவதி நிரப்பினார். வயது அறுபத்தொன்பது, விதவை, ஒரே மகன் பிரான்ஸில் இருக்கிறான், அவனது முகவரி தெரியாது என்ற விபரங்களை நிரப்பிய புனிதவதி படிவத்தில் கடைசியாக இருந்த கேள்வியானகொடுக்கும் தங்கத்தின் அளவுஎன்ற கேள்விக்கு நேரேபொருந்தாதுஎன எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு, “தம்பிமார் தேத்தண்ணீர் குடிக்கிறீர்களா.. சீனி இல்லை, தோடம்பழ இனிப்புத்தான் இருக்கிறதுஎன்றார்.

வந்திருந்தவர்களும் களைத்துத்தானிருந்தார்கள். அவர்களிற்கும் ஒரு தேநீர் தேவைப்பட்டது. சற்றுத் தயங்கிஅதற்கென்ன குடிக்கலாம் அம்மாஎன்றொருவன் மெதுவாகச் சொன்னான். அது புனிதவதியின் காதில் விழாததால் அவர் மணலிலேயே உட்கார்ந்திருந்தார். அவர்கள் போவதற்காக அவர் காத்திருந்தார். அவர் பஸ் பிடித்து பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருந்தது. இன்று அவருக்குத் தலைமை மருத்துவரோடு சந்திப்பு இருக்கின்றது.

படிவத்தில் புனிதவதி ரீச்சர்பொருந்தாதுஎன எழுதியிருந்தது வந்திருந்தவர்களைக் குழப்பிவிட்டது. அதற்கு என்ன அர்த்தம் எனத் தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தார்கள். புனிதவதியோ ஏதும் பேசாமல் வந்திருந்தவர்களின் முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது ஒருவன்அம்மா நீங்கள் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்யத்தானே வேண்டும்என்றான். புனிதவதி மெதுவாகத் தலையாட்டிச் சிரித்தார். எதுவும் சொல்லவில்லை.

வந்ததிலிருந்தே புனிதவதி தேவைக்கு அதிகமாகச் சத்தம்போட்டுப் பேசிக்கொண்டிருப்பதையும் அவரது கண்கள் தங்களது முகங்களையே இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருப்பதையும் அப்போதுதான் ஒருவன் உணர்ந்துகொண்டான். பொதுவாக காது மந்தமானவர்கள் தான் இப்படி நடந்துகொள்வார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அவன் நாற்காலியிருந்து எழுந்து புனிதவதி ரீச்சருக்கு அருகே வந்து உரத்து , ஆனால் பணிவாகச் சொன்னான்: “அம்மா நீங்கள் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்யத்தானே வேண்டும் ..”

இப்போது புனிதவதிக்கு அவனது கேள்வி விளங்கியது. அவர் சத்தமாக அவனுக்குப் பதில் சொன்னார்: “இந்த வயதில் என்னால் பயிற்சிக்கு வரமுடியாது தம்பி

கிழவி நக்கல் பண்ணுகிறது என வந்திருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும். எனினும் பொறுமையாகவே அவர்கள் தொடர்ந்தும் பேசினார்கள்.

உங்களைப் பயிற்சிக்கு வரச்சொல்லிக் கேட்டவில்லை அம்மா. பவுண் சேர்க்க வந்திருக்கிறோம்.”

என்னிடம் எங்கே தம்பி பவுண் இருக்கிறது.. இதோ காதில் கிடப்பது கூட ரோல்கோல்ட் தான்.”

இதைப் போல எத்தனை வீடுகளையும் எத்தனை கிழவிகளையும் புலிகள் பார்த்திருப்பார்கள். எனவே அவர்கள் இன்னும் பொறுமையை இழக்காமலேயேயிருந்தார்கள்

உங்களது குடும்பம் இதுவரை போராட்டத்திற்கு எந்தப் பங்களிப்புமே வழங்கவில்லை. இது கடைசிச் சண்டை , நீங்கள் கட்டாயம் பவுண் தரத்தான் வேண்டும் அம்மா.”

தம்பி கடைசிச் சண்டை என்றால் அது கடைசியில்தான் வர வேண்டும். நீங்கள் முதலிலிருந்தே கடைசிச் சண்டையென்றே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..ஆனால் என்னிடம் பவுண் இல்லை.”

கிழவி அழுத்தக்காரி என்பது வந்திருந்தவர்களிற்கு விளங்கிவிட்டது. இப்போது அவர்களது முகத்தில் புன்னகை மறைந்து விநோதமான ஒரு பாவம் எழுந்தது. அவர்களது கண்கள் வெறித்துப் பார்க்கத் தொடங்கின. அவர்களது குரல்கள் இருமடங்காக உயர்ந்தன.

நாங்கள் உங்களுக்காகத்தானே சண்டைபிடித்துச் சாகிறோம். நாங்கள் சாவது உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறதா? நாங்கள் சயனைட் சாப்பிடுவது ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக உங்களுக்குத் தெரிகிறதா? எல்லையைக் காப்பாற்றுவதில் எத்தனை இளம் குருத்துகள் வீரச் சாவடைந்துவிட்டார்கள். சாகப் போகிற வயதிலே பவுணை வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?”

புனிதவதி ரீச்சரின் காதுகளில் உள்ள பிரச்சினை என்னவென்றால் சாதாரணமாகப் பேசினாலும் அவருக்கு விளங்காது, குரலை அதி உச்சமாக உயர்த்திப் பேசினாலும் அவருக்குக் கேட்காது. இரண்டுக்கும் நடுவில் தெந்தெட்டாகப் பேசினால்தான் அவருக்கு விளங்கும். அவரது தம்பி வேலும் மயிலுக்கும் மட்டும்தான் அப்படி நுணுக்கமாக புனிதவதிக்கு கேட்கக்கூடிய வகையில் பேசத் தெரியும்.

வந்திருந்தவர்கள் ஏதோ இரைகிறார்கள் என்பது மட்டும் புனிதவதிக்குத் தெரிந்தது. அது தனக்கு விளங்காததும் நல்லதே என்பது போலிருந்தது அவரது முகபாவம். அவரது தடித்த உதடுகள் இலேசாகப் புன்னகைத்துக்கொண்டேயிருந்தன.

இந்தச் சிரிப்பு வந்திருந்தவர்களை மேலும் சினமூட்டக் கூடியதே. தங்களைக் கிழவி அலட்சியப்படுத்துகிறார் என்பது அவர்களிற்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால் இதுபோல எத்தனை அலட்சியங்களை அவர்கள் கதறக் கதற உடைத்துப்போட்டிருப்பார்கள். வந்திருந்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார்கள்.

மற்றவனும் எழுந்து அந்தப் படிவத்தோடு வந்து புனிதவதிக்கு அருகில் குந்திக்கொண்டான். அவன் குனிந்தபோது அவனது சயனைட் மாலை புனிதவதியின் முகத்துக்கு நேரே ஆடியது. அவன் இப்போது தனது முகத்தில் கடுமையுமில்லாத இனிமையுமில்லாத ஆனால் உறுதியான பாவனையை வரவழைத்துக்கொண்டான். அவன் படிவத்தை புனிதவதியின் முன்னே நீட்டி, பிரான்ஸிலிருக்கும் அவரது மகனின் முகவரியை எழுதச் சொன்னான். அது அவருக்குத் தெளிவாகக் கேட்டது. மகன் குறித்து யாராவது முணுமுணுத்தால் கூட அவருக்குத் தெளிவாகக் கேட்டுவிடுகிறது. செவிப்புலன் வைத்தியர் கூட ஒருமுறை, புனிதவதி ரீச்சருக்கு காதுகள் நன்றாகத்தானிருக்கின்றன, அவரது மனதில்தான் ஏதோ பிரச்சினை எனச் சொல்லியிருந்தார்.

எனக்கு மகனின் முகவரி தெரியாதுஎன்றார் புனிதவதி. வந்திருந்தவன் தனது கையிலிருந்த படிவத்தைத் தரையில் வீசியடித்தான். அது புனிதவதியின் கால்களுக்கிடையே விழுந்தது. புனிதவதி அதையெடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டார். ‘சரஸ்வதிஎன அவரது தடித்த உதடுகள் முணுமுணுத்தன. அந்தப் படிவத்தை மறுபடியும் அவர் பார்த்தார். மகனின் முகவரி உண்மையாகவே அவருக்குத் தெரியாதிருந்தது.

புனிதவதியின் மகன் அமுதனுக்கு ஒரு வயதாக இருக்கும்போதே புனிதவதியின் கணவர் இறந்துபோயிருந்தார். மெக்கானிக்காக வேலை செய்த அவர் பெருங் குடிகாரர். நித்தமும் போதையில் வந்து புனிதவதியை மாடு போல அடிப்பார். புருசன் செவிட்டில் அடித்து அடித்துத்தான் தனது காதுகள் மந்தமாகிவிட்டன எனப் புனிதவதி நினைத்துக்கொண்டிருக்கிறார்.

கிடைத்த சொற்ப சம்பளத்தில்தான் அமுதனை புனிதவதி படிக்கவைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வரை அனுப்பிவைத்தார். படிப்பு முடிந்ததும் மகனை நாட்டில் வைத்திருக்க புனிதவதி விரும்பவில்லை. இருந்த சிறிய கல்வீட்டையும் காணியையும் தனது தம்பி வேலும் மயிலுவுக்கும் விற்றுவிட்டுத்தான் அமுதனை அவர் பிரான்ஸுக்கு அனுப்பிவைத்தார். இப்போது அவர் வேலும் மயிலும் கொடுத்த சிறிய காணித்துண்டொன்றில் குடிசை போட்டு வாழ்கிறார். ஓய்வூதியப் பணம் வருவதால் ராங்கியான சீவியம்தான். யாரிடமும் எதையும் புனிதவதி எதிர்ப்பார்ப்பதில்லை. வெளிநாட்டிலிருந்த மகனிடம் கூட தனக்குப் பணம் அனுப்பக்கூடாது எனச் சொல்லியிருந்தார்.

அமுதன் பிரான்ஸுக்குப் போன புதிதில் சற்றுச் சிரமப்பட்டான், ஆனாலும் மொழியைப் படித்துச் சீக்கிரமாகவே அவன் முன்னேறிவிட்டான் என்று கேள்விப்பட்டது புனிதவதிக்கு பெரிய நிம்மதி. அவனுக்கு மனைவியை மல்லாவியில் கண்டுபிடித்து அந்தப் பெண்ணை கொழும்புவரை அழைத்துப் போய் புனிதவதிதான் விமானம் ஏற்றிவிட்டார். வேலும் மயிலும் புனிதவதியுடன் உதவிக்குப் போயிருந்தான்.

அமுதன் பிரான்ஸிலே தொலைபேசி அட்டைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவருவதாகக் கடிதம் வந்தது. நிறுவனத்திற்கு புனிதவதியின் பெயரைத்தான் வைத்திருந்தானாம். திடீரென அவனுடனான தொடர்புகள் அறுந்துபோயின. கடந்த அய்ந்து வருடங்களாக அவனது குடும்பம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. வேலும் மயிலும் வவுனியாவுக்குப் போயிருந்தபோது பிரான்ஸில் இருக்கும் சொந்தக்காரன் ஒருவனை தொலைபேசியில் அழைத்துஅமுதன் இருக்கும் இடம் தெரியுமா ?” எனக் கேட்டான். மறுமுனையில்தெரிந்தால் நான் போய் அவனை வெட்டியிருப்பேனேஎன்று பதில் சொல்லிவிட்டுத்தான்நீங்கள் யார் கதைக்கிறதுஎன்ற கேள்வி வந்தது.

அமுதன் சீட்டுப் பிடிக்கும் தொழிலும் செய்திருக்கிறான். பாரிஸிலே அவனுக்குபவுண்சீட்டு அமுதன்என்றுதான் பெயர். காசுக்குப் பதிலாக மாதந்தோறும் தங்கம் கட்டும் இந்தச் சீட்டு பிரான்ஸிலே தமிழர்களிடையே பிரபலம். கடைசியில் கிட்டத்தட்ட ஆயிரம் பவுண்களோடு அமுதன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டானாம் என்ற செய்தியோடு வேலும் மயிலும் கிராமத்திற்குத் திரும்பினான். அவன் புனிதவதியிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது அவர் அமைதியாக, தனக்குக் காதுகளில் கடுமையான இரைச்சலாகயிருக்கிறது என்றார்.

அந்தப் படிவத்தை புனிதவதியிடமிருந்து திரும்பவும் வாங்கியவன் எழுந்து நின்றான். குரலை உயர்த்திபெற்ற தாய்க்குப் பிள்ளையின் முகவரி தெரியாதா?” எனக் கேட்டான்.

புனிதவதி அவனது கண்களைப் பார்த்தவாறேஇல்லைஎனத் தலையசைத்தார்.

இப்போது அவனின் கண்களிலே சிரிப்புக் கொப்பளித்தது. “உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் உங்களது மகனை எந்த நாட்டிலிருந்தாலும் கண்டுபிடிப்பதற்கான கட்டமைப்புகள் எங்களிடம் உள்ளன. நாங்கள் அவரிடம் பங்களிப்பைப் பெற்றுக்கொள்கிறோம். இருபத்தைந்து வருடங்களாக பங்களிப்புச் செய்யாமல் அவர் இருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு யூரோ என்று கணக்குப் போட்டாலும் 9125 யூரோக்கள் வருகின்றன. நாங்கள் அவரிடம் வாங்கிக்கொள்கிறோம், நன்றி அம்மாஎன்று சொல்லிவிட்டு அவர்கள் படலையைப் பார்த்து நடக்கத் தொடங்கினார்கள்.

புனிதவதி ஒரு நிமிடம் மவுனமாகயிருந்தார். பின்பு அவர் சத்தம் போட்டு அவர்களை அழைத்தார். எதிர்பார்த்திருந்ததுதான் இது என்ற தோரணையில் அவர்கள் மெதுநடைபோட்டுத் திரும்பி வந்தார்கள்.

புனிதவதி மெதுவாக எழுந்து குடிசைக்குள் சென்று திரும்பிவரும்போது கையில் தங்கச் சங்கிலி ஒன்றோடு வந்தார். வந்திருந்தவர்களில் சிவந்த நிறத்துடனும் ஒல்லியான உடல்வாகுடனும் மீசையில்லாத முகத்திலே வட்ட வடிவிலானான மூக்குக்கண்ணாடி அணிருந்திருந்தவனுமான பதினேழு அல்லது பதினெட்டு வயதுகள் மதிக்கத்தக்கவனைப் பார்த்து புனிதவதி அவனது பெயரைக் கேட்டார். அவன் தனது அடையாள அட்டையை எடுத்துக் காட்டினான். அவனது பெயர்கல்கிஎன்றிருந்தது.

புனிதவதி ரீச்சர் அவனின் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டுதம்பி உங்களுக்கு பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயர்என்றார். அவன் உணர்ச்சியற்ற முகத்தோடு நின்றிருந்தான்.

இது நான்கு பவுண் சங்கிலி, என்னுடைய செத்த வீட்டுச் செலவுக்காக நான் பொத்திப் பொத்தி வைத்திருந்தது. நான் செத்துப்போனால் எனக்குச் சடங்கு செய்து எரிக்கவேண்டியது உன்னுடைய பொறுப்பு கல்கிஎன்று சொல்லிவிட்டு புனிதவதி ரீச்சர் அந்த நான்கு பவுண் சங்கிலியை கல்கியின் கையில் வைத்தார்.

ஒருகணம் வாங்கும் கையினது தயக்கத்தை புனிதவதி உணர்ந்துகொண்டார். “நீங்கள் தமிழீழத்தைப் பார்த்துவிட்டுத்தான் சாவீர்கள் அம்மாஎனக் கல்கி புன்னகைத்தான். பின்புஉங்களது கையாலே தேநீர் குடித்துவிட்டுத்தான் போவோம்எனச் சொல்லிவிட்டு நாற்காலிகளில் இருவரும் அமர்ந்துகொண்டார்கள்.

அவர்கள் கைகளில் தோடம்பழ இனிப்பை வைத்து நக்கிக்கொண்டே தேநீர் குடித்துக்கொண்டிருக்கையில் பின்பக்கத்து வேலியை ஒரே தாவாகத் தாவிக்கொண்டு வேலும் மயிலும் அங்கே வந்தான். நேற்று வேலும் மயிலுவின் மனைவியைச் சந்தையில் வைத்து மடக்கியவர்கள் அவளிடம் மூன்று பவுண்கள் பெறுவதாகக் கையெழுத்து வாங்கியிருந்தார்கள். அதைக் கொடுப்பதற்கு தவணை கேட்கலாம் என வேலும் மயிலும் யோசித்துக்கொண்டே மணலில் குந்திக்கொண்டு ஒரு குறை பீடியைப் பற்றவைத்தான். அவனைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த புனிதவதி கல்கியைக் காட்டி உரத்த குரலில்இந்தத் தம்பி என்னுடைய செத்தவீட்டை நடத்துவதற்குப் பொறுப்பெடுத்திருக்கிறார்.. வேலும் மயிலும் உனக்கு இனிப் பொறுப்பில்லைஎன்றார்.

தலைமை மருத்துவர் வருவதற்கு மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. புனிதவதியும் வேலும் மயிலுவும் ஆஸ்பத்திரி விறாந்தையிலேயே குந்தியிருந்தார்கள். மிதிவெடியில் சிக்கிக் கால் சிதைந்துபோயிருந்த சீருடை அணிந்திருந்த ஒருவனை புலிகள் தூக்கிக்கொண்டு ஓடிவருவதை புனிதவதி பார்த்தார். அவர் கண்களை மூடிக்கொண்டார். அவரது தடித்த உதடுகள்அம்மாளாச்சிஎன முணுமுணுத்தன.

புனிதவதிக்கு வயிற்றில் கட்டி இருப்பது உறுதியாகிவிட்டதென்றும் அதை உடனடியாக அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் தலைமை மருத்துவர் சொன்னார். சிக்கலான அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்வதற்கு இங்கு வசதியில்லை என்றும் கொழும்புக்குப் போய்த்தான் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் அவர் சொன்னார்.

திரும்பிவரும்போது வேலும் மயிலுவிடம் புனிதவதிநான் செத்துக்கொண்டிருக்கின்றேனாஎனக் கேட்டார். அவன் ஒரு பெருமூச்சை மட்டும் வெளியிட்டான். அறுவைச் சிகிச்சைக்கு நான்கு இலட்சம் ரூபாய்கள்வரை செலவாகலாம் எனத் தலைமை வைத்தியர் சொல்லியிருந்தார். வீட்டுக்கு வந்ததும் முற்றத்து மணலில் சக்கப்பணிய இருந்துகொண்டு கால்களை நீட்டியவாறே புனிதவதி ரீச்சர் சொன்னார்: ” நான் இப்படியே செத்துப் போகிறேன்..எனது செத்தவீட்டுச் சடங்கை இயக்கம் செய்து முடிக்கும்

வேலும் மயிலும் கடுமையாக யோசித்தான். வவுனியா நகருக்குப் போய் பிரான்ஸுக்கு தெரிந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்படியாவது மருமகன் அமுதனைக் கண்டுபிடித்து, தாயார் கடுமையான நோய்வாய்ப்பட்டிருப்பதைத் தெரிவித்து அவனைக் கொழும்புக்கு வரச் சொல்வதென்றும் வர முடியாவிட்டால் நான்கு இலட்சம் ரூபாய்களாவது அனுப்பிவைக்கும்படி கேட்பதென்றும் அவன் முடிவெடுத்தான். ஆனால் அதிலும் ஒரு பெரிய சிக்கல் இருந்தது.

எல்லைக் கோட்டைத் தாண்டி வவுனியா நகருக்குப் போவதென்றால் புலிகளிடம்பாஸ்பெறவேண்டும். யாராவது ஒருவரைப் புலிகளிடம் பிணையாக வைத்துவிட்டுத்தான்பாஸ்பெற வேண்டியிருக்கும். வேலும் மயிலுவுக்குபாஸ்கிடைக்கும் எனச் சொல்வதற்கில்லை. ஏனெனில் அவன் புலிகளுக்குக் கொடுப்பதாக உறுதியளித்திருந்த மூன்று பவுண்களை இன்னும் செலுத்தவில்லை. தவிரவும் வேறுயாரையும் தனக்குப் பணயமாக வைப்பதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

வேலும் மயிலுக்கு வன்னிக் காடுகள் தண்ணிபட்டபாடு. எனவே அவன் இரகசியமாக எல்லைக்கோட்டைக் கடப்பதென்று முடிவெடுத்தான். என்னதான் அவன் அசல் வன்னியான் என்றாலும் ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டிருக்கும் எல்லைக்கோடுகள் அவனைக் குழப்பிவிடக் கூடியவையே. வேலும் மயிலுவின் நெருங்கிய கூட்டாளி பரமேஸ்வரன் இந்த விசயத்தில் தேர்ச்சியானவன். அவன் இரகசியமாக எல்லைக் கோடுகளைக் கடந்து ஆட்களைக் கூட்டிச்செல்பவன். இந்த வியாபாரத்தில் அவன் கொஞ்சம் செழிப்பாக இருந்தான். புலிகள் பவுண் சேர்த்தபோது அவன் அய்ந்து பவுண்களைக் கொடுத்திருந்தான். இந்தப் பரதேசியிடம் அய்ந்து பவுண்கள் இருந்தது புலிகளை உறுத்தியிருக்க வேண்டும். இந்தக் கதை நடந்து முடிந்த சிலநாட்களிலேயே அவனைப் புலிகள் பொறிவைத்துப் பிடித்துவிட்டார்கள் என்றான் கதைசொல்லி.

பரமேஸ்வரன் எல்லைக்கோடு நிலவரத்தையும் அது எப்படியெல்லாம் மாறும் என்பதையும் வேலும் மயிலுவுக்கு மணலில் படம் வரைந்துகாட்டி விளக்கியதன் பின்பாக, வவுனியா புறப்படுவதை தனது மனைவிக்கு மட்டும் சொல்லிவிட்டு உடுத்த உடுப்புடன் வேலும் மயிலும் தெற்கே புறப்பட்டான். உடைகளைக் கைகளில் வைத்திருந்து புலிகளிடம் மாட்டிக்கொண்டால் நேரடியாகபங்கருக்குத்தான் அனுப்பப்படுவான். வெறும் கையுடன் மாட்டிக்கொண்டாலும் கூட ஏதாவது தகுந்த காரணம் சொல்லியாக வேண்டும். அந்தக் காரணத்தை இப்போதே யோசித்து வைத்திருந்தாலும் பிரயோசனமில்லை. எந்த இடத்தில், இரவிலா பகலிலா, எத்தனை மணிக்கு பிடிபடுகிறான் என்பதைப் பொறுத்து அப்போதுதான் உடனடியாகக் காரணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிரான்ஸ் தொலைபேசி இலக்கங்கள் மூன்றை மனப்பாடம் செய்துகொண்டான்.

பரமேஸ்வரன் சொன்னது சரியாகவே இருந்தது. வேலும் மயிலும் தொம்பன் குளத்திற்கு வந்து சேரும்போது தொம்பன் குளத்திலிருந்து இரண்டாவது கட்டை தொலைவில் எல்லைக்கோடு வடக்குதெற்கிலிருந்து விலகி கிழக்குமேற்காக ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மாறியிருக்கும் எனப் பரமேஸ்வரன் கணித்துச் சொல்லியிருந்தான். மாறாக, அந்த எல்லைக்கோடு தெற்கு நோக்கி முன்னகரும் என அந்த நேரத்தில் தராகி சிவராம் தலைகீழாகக் கணித்து எழுதியிருந்ததும் இந்தக் கதைசொல்லிக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு கிழக்கு எல்லைக்கோட்டில் புலிகளது காவல் நிலைகள். மேற்கே அதேயளவு நீளத்திற்கு ஆர்மிக்காரர்களது காவல் நிலைகள். இடையில் அய்நூறு மீற்றர்கள் சூன்யப் பிரதேசம். இரவு இந்தச் சூன்யப் பிரதேசத்திற்குள் நுழைந்து வேலும் மயிலும் தெற்கு நோக்கி ஓடவேண்டும். அடர்ந்த காடு அவனுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. காட்டிற்குள் நுழைந்துவிட்டால் அவன் காடாகவே மாறிவிடுவான் என அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். தான் பிறந்து தவழ்ந்த வன்னிக்காடு தன்னைக் கைவிடாது என அவன் மனதார நம்பினான்.

பரமேஸ்வரன், எல்லையைக் கடப்பதில் ஒரு நுட்பமான அறிவுரையை வேலும் மயிலுவுக்கும் வழங்கியிருந்தான். ஒருபோதும் இரு எல்லைக் கோடுகளுக்கும் மத்தியாகச் செல்லக்கூடாது. நடுவாகச் சென்றால் இரு தரப்பினது நோக்கு எல்லைக்குள்ளும் நாமிருப்போம். இருதரப்புத் துப்பாக்கிச் சூட்டையும் சந்திக்க நேரிடும். ஏதாவது ஒரு பக்கமாக ஒண்டிச் சென்றால் மற்றைய தரப்பினது பார்வையிலிருந்தும் துப்பாக்கிச் சூட்டிலிருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம். இந்த வழியில் அய்ம்பது விழுக்காடுகள்ஆபத்துக் குறைவு. எனவே புலிகளது பக்கத்தைத் தவிர்த்து இராணுவத்தின் பக்கத்தாலேயே செல்லுமாறு பரமேஸ்வரன் அறிவுரை சொல்லியிருந்தான். ஆர்மிக்காரன் கண்டுகொண்டு சுட்டாலும் இலக்குத் தவற வாய்ப்பிருக்கிறது. ஆனால் புலிகளது பக்கத்தால் சென்றால் அவர்கள் இலக்குத் தவறாமல் சுட்டுச் சாய்ப்பார்கள் என்பது பரமேஸ்வரனின் அனுபவ அறிவு.

அன்றிரவு எல்லைக் கோடுகளில் ஒரு சிறிய துப்பாக்கிச் சத்தம் கூடக் கேட்டிருக்கவில்லை. காட்டின் மைந்தனைக் காடு கைவிடவில்லை. விடிவதற்கு முன்பாகவே இரண்டு எல்லைக்கோடுகளையும் வேலும் மயிலும் தாண்டி விட்டான். காலைச் சாப்பாட்டிற்கு வவுனியா நகருக்குப் போய்விடலாம்.

இராணுவத்தின் எல்லைக்கோட்டுக்கு இரண்டு கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த முதற்கிராமத்தின் பிள்ளையார் கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளி முகத்தைக் கழுவிவிட்டு விநாயகனை மனதாரக் கும்பிட்டுவிட்டு நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொண்டு கோயில் வாசற்படிக்கட்டில் களைப்புத்தீர வேலும் மயிலும் உட்கார்ந்துகொண்டான். அந்தக் கோயிலுக்கு வெகுதூரத்திலேயே வீடுகளிருந்தன. கோயில் சுற்றுவட்டாரத்திலே ஆள் நடமாட்டமேயில்லை. கோயிலின் சிறுமண்டபத்திற்குள் இரண்டு ஆடுகள் படுத்திருந்தன. பிரான்ஸுக்குப் பேசவேண்டிய தொலைபேசி இலக்கங்களை ஒருமுறை வாய்விட்டுச் சொல்லிச் சரிபார்த்துக்கொண்டான். மருமகனிடம் பணம் கேட்கும் போது இரண்டு பவுண்களிற்கான பணத்தையும் சேர்த்துக் கேட்டுப் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தான். புலிகளிற்கு தருவதாக ஒப்புக்கொண்ட மூன்று பவுண்களில் இரண்டு பவுண்களைக் கொடுத்தாற் கூடக் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

அப்போது கோயிலுக்குப் பின்புறமிருந்து தோன்றிய ஓர் உயரமான மனிதன் விறைப்பாக நடந்து வந்து இவனுக்கு அருகில் அமர்ந்துகொண்டான். அந்த மனிதனுக்கு இருபது வயதுகள் இருக்கலாம். ஆள் கிட்டத்தட்ட ஆறரை அடிகள் உயரம் இருப்பான் என வேலும் மயிலுவுக்கும் தோன்றியது. இவ்வளவு உயரமான மனிதனை வேலும் மயிலும் தனது வாழ்நாளில் கண்டதில்லை. அந்த மனிதன் அணிந்திருந்த கறுப்புநிற நீளக் காற்சட்டை அவனது முழங்கால்களிற்கு சற்றுக் கீழேவரைதான் அவனது கால்களை மறைத்திருந்தது. அவனது நீளமான கால்கள் ஒரு முழத்திற்குச் சேறால் பூசப்பட்டிருந்தன. அவன் தலையில் முண்டாசு கட்டியிருந்தான். அவனது உடல் வற்றிப்போயிருந்தது. முகம் வீங்கிக்கிடந்தது. தன்னையே வேலும் மயிலும் கவனிப்பதை உணர்ந்த அந்த மனிதன் சற்றுத் திரும்பி உட்கார்ந்த போது வேலும் மயிலும் அந்த மனிதனின் முதுகில் வரிவரியாக இரத்தம் கட்டியிருப்பதைப் பார்த்தான். யாரோ அவனைத் தாறுமாறாகச் சவுக்காலோ தடியாலோ இரக்கமில்லாமல் அடித்திருக்கிறார்கள். முதுகில் திட்டுத் திட்டாய் இரத்தம் காய்ந்திருந்தது.

வேலும் மயிலுவுக்கு அந்த மனிதனிடம் இரக்கம் பிறந்தாலும் எதுவும் பேசாமல் எழுந்து நின்றான். யாரும் யாரிடமும் இரக்கம் காட்டத்தக்கதான நிலையில் நாட்டு நிலவரம் இல்லை. ஒருவர் மீது மற்றொருவருக்குச் சந்தேகம் மட்டுமே நிலவிய காலமது என்றான் கதைசொல்லி.

வேலும் மயிலும் மறுபடியும் பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அப்போது அந்த முதுகில் அடிபட்ட காயங்களுடைய, கால்களில் சேறு பூசியிருந்த மனிதன் தனது முழங்கால்களில் தலையைச் சாய்த்து மெதுவாக அழுதுகொண்டிருந்தான். அந்த மனிதனின் பெயர் பமு. வவுனியா நகரத்திற்குச் சற்றுத் தொலைவிலுள்ள சிறியதொரு சிங்களக் கிராமமான மைத்ரிபுரவைச் சேர்ந்தவன் அவன்.

அவனை அவனது கிராமத்தில்மோடயாபமு என்று அழைப்பார்கள். அவன் பிறவியிலேயே புத்தி மழுங்கியவனாக இருந்தான். அதனாலே அவன் பாடசாலைக்குச் சென்றதில்லை. நண்டும் சிண்டுமாக ஏழு பிள்ளைகளிருந்த அந்த விறகுவெட்டியின் குடிசையிலே பமு வேண்டாத பிள்ளையாகவே இருந்தான். அவன் யானை மாதிரி தீனி தின்னக்கூடியவன். மாடு மாதிரி வேலை செய்யக் கூடியவன். ஆனால் அவனால் திருத்தமாக ஒரு வேலையைச் செய்ய முடிவதில்லை. அரை மணிநேரத்தில் செய்து முடிக்கக் கூடிய வேலையை ஒருநாள் முழுவதும் உடலில் வியர்வை ஆறாக ஓட ஓடச் செய்வான். அப்படியும் அந்தவேலை திருத்தமாக இருக்காது. பமுவை அவனது தீராத வயிற்றுப் பசி துரத்திக்கொண்டேயிருந்தது. காடுகள் அவனுக்குப் பழக்கமானவை. அவன் தின்று தீர்த்ததால் காடே வெறுமையாகாப் போயிற்று என்று விறகுவெட்டியான அவனது தந்தை சலிப்புடன் சொல்லிக்கொள்வதுண்டு.

பமு காலையில் எழுந்ததும் வேலை கேட்டபடியே கிராமம் முழுவதையும் சுற்றிவருவான். அன்றைய காலை உணவு கிடைத்தால் போதுமென்றிருக்கும். மதியம் இன்னொரு வீட்டில் வேலை கேட்பான். இரவு கையில் விளக்குடன் குளத்தில் நண்டு பிடிக்கப் போய்விடுவான். அவன் மீன்களையும் நண்டுகளையும் சமைக்காமல் பச்சையாக உண்பதற்குப் பழகியிருந்தான்.

சில நாட்களுக்கு முன்புவரை, கிராமத்தில் கோப்ரல் கமகே கட்டிக்கொண்டிருந்த மாடி வீட்டில் அவனுக்குத் தொடர்ச்சியாக வேலை கிடைத்துக்கொண்டிருந்தது. கோப்ரலின் மனைவி பமுவுக்குச் சலித்துக்கொள்ளாமல் பாற்சோறிட்டாள். புதுமனைப் புகுவிழாவின்போது பமுவுக்கு புதிய கறுப்புநிற நீளக்காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் கிடைத்தன. அந்த நீளக் காற்சட்டை அவனது முழங்கால்களுக்கு சற்று கீழே வரையான பகுதியையே மறைத்தது.

கோப்ரல் கமகே அமைதியான, நகைச்சுவை உணர்வுடைய மனிதர். வடக்கு யுத்தமுனையில் அவர் படுகாயமடைந்து பிழைத்து வந்திருந்தார். அவரது கால்கள் இரண்டும் முழங்கால்களுக்குக் கீழே நீக்கப்பட்டிருந்தன. கோப்ரல் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து எப்போதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பார். அவருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணப் பணத்தோடு அவரது மனைவியின் நகைகளை விற்றுத் திரட்டிய பணத்தையும் வைத்து இந்த அழகிய மாடிவீட்டை கோப்ரல் கட்டி முடித்திருக்கிறார்.

கோப்ரல் அன்று மாலையில் உற்சாகமான மனநிலையிலிருந்தார். வழக்கத்தைவிடச் சற்று அதிகமாகக் குடித்திருந்தார். அப்போதுதான் பமு அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டான்.

நீங்கள் ஒரு சாதாரண கோப்ரல். இவ்வளவு பெரிய வீட்டைக் கட்ட உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?”

கோப்ரல் ஒருமுறை உரக்கச் சிரித்துவிட்டுபமு உன்னிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன் யாரிடமும் சொல்லிவிட மாட்டாயேஎன்றார்.

பமு கோப்ரலின் தலையில் தனது கையை வைத்துயாரிடமும் சொல்ல மாட்டேன்என்று குரலைத் தாழ்த்திக்கொண்டான்.

அவனது உற்சாகம் கோப்ரலின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கவே அவர் தனது குரலை இன்னும் தாழ்த்திக்கொண்டேபுலிகள் தமிழர்களிடம் தங்கம் திரட்டுவது உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்.

பமு வியப்படைந்தவன்போல தனது கண்களை விரித்துதெரியாது கோப்ரல்என்றான்.

ஆமாம் பமு.. புலிகளிடம் இப்போது ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன. வெளிநாட்டிலிருந்து அவர்களிற்கு ஆயுதம் வரும் வழிகளையெல்லாம் நாங்கள் அடைத்துவிட்டோம்என்றார் கோப்ரல்.

பமு தலையை உற்சாகமாக ஆட்டிக்கொண்டான்.

கோப்ரல் மதுக்கிண்ணத்தை எடுத்து ஒரு மிடறு பருகிவிட்டுச் சொன்னார்: “இப்போது புலிகளிடம் துப்பாக்கிகள் இருந்தாலும் அவற்றிற்கான தோட்டாக்கள் அவர்களிடமில்லை. அவர்களே சொந்தமாகத் தோட்டாக்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். முதலில் செம்பிலிருந்தும் பிறகு ஈயத்திலிருநதும் பிறகு அலுமனியத்திலிருந்தும் பிறகு இரும்பிலிருந்தும் பிறகு வெள்ளியிலிருந்தும் அவர்கள் தோட்டாக்களை உற்பத்தி செய்தார்கள்.”

மெய்யாகவா! அது எப்படி உங்களிற்குத் தெரியும் கோப்ரல்?”

கோப்ரல் கெக்கடமிட்டுச் சிரித்துவிட்டுச் சொன்னார்: “அந்தத் தோட்டாக்களை அவர்கள் எங்களிடம்தானே அனுப்பி வைத்தார்கள்.”

அது உண்மைதான்என முணுமுணுத்தவாறே பமு தலையை ஆட்டிக்கொண்டான்.

கடைசியில் எல்லாவித உலோகங்களும் தீர்ந்துபோன நிலையில்தான் அவர்கள் மக்களிடம் தங்கம் சேர்க்கத் தொடங்கினார்கள். அந்தத் தங்கத்தை உருக்கி அவர்கள் துப்பாக்கிகளிற்கான தோட்டாக்களைச் செய்தார்கள். சண்டையின்போது அந்தத் தங்கத் தோட்டாக்களில் எட்டுத் தோட்டாக்கள் எனது கால்களிலே பாய்ந்து அங்கேயே இருந்துவிட்டன. அந்தத் தங்கத் தோட்டாக்களை விற்றுத்தான் இந்த வீட்டைக் கட்டினேன்என்று சொல்லிவிட்டு கோப்ரல் தனது முகத்தில் இரகசியமும் உறுதியும் கலந்த பாவனையை வரவழைத்துக்கொண்டார்.

அதுவா விசயம்எனச் சடுதியில் கூவிய பமு தனது நீண்ட மெல்லிய கைகளால் தனது வாயை முடியவாறே நிலத்தில் பொத்தென அமர்ந்துகொண்டான்.

அடுத்தநாள் காலையில், கிராமத்திலிருந்து பமு சொல்லாமற் கொள்ளாமற் காணாமற்போனான். இராணுவத்தில் சேருவதென்ற உறுதியான முடிவுடன் அவன் வவுனியா நகரத்திலிருந்த தலைமை இராணுவ அலுவலகத்திற்கு நேராகப் போனான். அங்கே காவலரணில் இருந்தவர்கள் இவனை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். “எதற்காக இராணுவத்தில் சேரப் போகிறாய்என்று ஒரு சிப்பாய் இவனைப் பார்த்துக் கேட்க பமு எதுவும் சொல்லாமல் நின்றிருந்தான். இரகசியத்தைக் காப்பதாக அவன் கோப்ரலின் தலையில் கை வைத்தல்லவா சத்தியம் செய்திருந்தான்.

இவன் சற்றுப் புத்தி மழுங்கியவன் என்பது காவலரணிலிருந்த சிப்பாய்களிற்கு விளங்கிவிட்டது. “உனக்கு மரம் ஏறத் தெரியுமா‘” என ஒரு சிப்பாய் கேட்க, தெரியும் என பமு தலையை ஆட்டினான்.

அதோ அந்தத் தென்னைமரத்தில் ஏறி நல்லதாக இளநீர் பறித்துப்போடு, உன் திறமையையும் பார்த்துவிடலாம்என்றான் சிப்பாய். “இதோஎன்று சொல்லிவிட்டு பமு தென்னைமரத்தை நோக்கி ஓடினான்.

தென்னைமரம் என்னவோ குட்டையானதுதான். பமுவைப்போல இரண்டு மடங்கு உயரம்தானிருக்கும். ஆனால் அதில் ஏறிப் பத்துக் காய்களைப் பறித்துவிட்டு இறங்குவத்கு பமுவுக்கு ஒருமணிநேரம் பிடித்தது. சிப்பாய்கள் இளநீர் குடித்து முடிந்ததும் வெற்று இளநீர் கோம்பைகளை பமுவை நோக்கி எறிந்தார்கள். பமு சிப்பாய்களை முறைத்துப் பார்த்தான். ஒரு சிப்பாய், “இங்கே ஆட்கள் தேவையில்லை , எல்லையில்தான் சண்டை நடக்கிறது அங்கே ஓடுஎனக் கூச்சலிட்டவாறே தனது கையிலிருந்த இளநீர் வெற்றுக் கோம்பையை பமுவை நோக்கி வீசினான். இலக்குத் தப்பால் கோம்பை பமுவின் முழுங்காலைத் தாக்கியது. பமு கூச்சலிட்டவாறே காலைப் பிடித்துக்கொண்டான். மேலும் கோம்பைகள் பமுவை நோக்கிவர, பமு காலை நொண்டியடித்தவாறே ஓடத் தொடங்கினான். ஒரு கோம்பை அவனது முதுகில் விழுந்தது. ஒரு கையால் காலைப் பிடித்தாவாறும் மறுகையால் முதுகைப் பிடித்தவாறும் ஒரு விநோதமான பிராணிபோல பமு துள்ளித் துள்ளி ஓடிக்கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே வீதியில் இராணுவப் பிரிவொன்று அணிநடை போட்டவாறே மிடுக்காக வந்துகொண்டிருந்தது.

அன்று மாலையில் எல்லையிலிருந்த இராணுவக் காவலரண் ஒன்றில் பமு உட்கார வைக்கப்பட்டிருந்தான். அவனது முன்னுக்குப் பின்னான பேச்சுகள் இராணுவத்தினருக்குச் சந்தேகங்களைக் கிளப்பியவாறேயிருந்தன. இராணுவத்தில் சேருவதற்கு எதற்கு எல்லைக்கு வரவேண்டும் என அவர்கள் கேட்டார்கள். தலைமை முகாமில் அப்படித்தான் சொன்னார்கள் என்றான் பமு. காவலரணிலிருந்து தலைமை முகாமுக்குத் தொடர்புகொண்டு கேட்ட இராணுத்தினருக்கு, பமுவை அடித்துத் துரத்துமாறு உத்தரவு கிடைத்தது. முதலில் அவனிடம் தன்மையாக எடுத்துச்சொல்லி அவனைத் திரும்பவும் கிராமத்திற்கே போய்விடுமாறுதான் இராணுத்தினர் சொன்னார்கள். ஆனால், கிராமத்திற்குச் திரும்பிச் செல்வதென்றால் இராணுவ வீரனாகத்தான் செல்வேன் என்று பமு சொல்லிவிட்டான். அந்த நேரம் பார்த்து புலிகளின் பக்கத்திலிருந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இராணுவச் சிப்பாய்கள் மணல்மூடைகளிற்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு பமுவின் கைகளையும் பக்கத்திற்கு ஒருவராகப் பிடித்து பமுவைக் கீழே இழுத்தார்கள். பமு நிமிர்ந்து நின்று தலையை ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்துக்கொண்டு தனது இரு கைகளையும் உதறிக்கொண்டான். இரண்டு சிப்பாய்களும் மூலைக்கு ஒருவராய் விழுந்தார்கள். பமு காவல் அரணிலிருந்து பாய்ந்து முன்னோக்கி ஓடினான். அடுத்த நூறு மீற்றர்கள் தூரத்தில் மரங்களிடையே பதுங்கியிருந்த இராணுவத்தினரிடம் பமு வசமாக மாட்டிக்கொண்டான்.

அன்று இரவு முழுவதும் அவர்கள் இராணுவக் காவலரணில் வைத்து பமுவை உருட்டி விளையாடினார்கள். ஒரு சிப்பாய் தனது இடுப்புப் பட்டியால் அது பிய்ந்துபோகும்வரை பமுவின் முதுகில் அடித்தான். காலையில் அவர்கள் பமுவை விரட்டி விட்டார்கள். பமு சட்டையைக் கைகளில் எடுத்தவாறு அழுதுகொண்டே போனான். அப்போது ஒரு சிப்பாய்ஏய் பமு! யாழ்ப்பாணத்தில் தான் இராணுவத்துக்கு ஆட்கள் தேவைஎன்றான். அதைக் கேட்டதும் பமுவின் அழுகை கொஞ்சம் குறைந்தது. அவனுக்குச் சற்று உற்சாகம் கூட ஏற்பட்டது. அவன் யோசித்தவாறே நடந்துகொண்டிருந்தான். இராணுவத்தில் எப்படியாவது சேர்ந்துவிடுவது என அவன் தனக்குள்ளேயே உறுதி எடுத்துக்கொண்டான். கையிலிருந்த சட்டையைத் தலையில் முண்டாசாகச் சுற்றிக்கொண்டான். கைகளை விறைப்பாக வைத்துக்கொண்டு ஒரு நிமிடம் நின்றான். பிறகு ஒரு காலை முன்னே வைத்துவமஎனச் சொன்னான். பிறகு அடுத்த காலை முன்னே வைத்துதக்குனஎன்றான். வமதக்குன, வமதக்குன, வமதக்குன எனச் சொல்லிக்கொண்டே அவன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். பிள்ளையார் கோயிலுக்கு வந்து சேரும்வரை அவன் தனது இராணுவ நடையை நிறுத்தவில்லை.

காலை பத்துமணிக்கு வவுனியா தொலைத்தொடர்பு நிலையமொன்றிலிருந்து பிரான்ஸுக்கு முதலாவது தொலைபேசி அழைப்பை வேலும் மயிலும் செய்தான். அவன் அழைத்துப் பேசிய மூவருக்குமே புனிதவதி ரீச்சரின் மகனைக் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால் மூவருமே அவனைத் திட்டினார்கள். புனிதவதி உயிருக்கு ஆபத்தான நோயிலிருக்கிறார் என வேலும் மயிலும் சொன்னபோதுசிவன் சொத்து மட்டுமல்ல ஊர்ச் சொத்தும் குலநாசம்என்று பிரான்ஸிலிருந்து பதில் கிடைத்தது.

இனி அழைப்பதற்கு இலக்கமுமில்லை, அழைக்கப் பணமும் இல்லை. வேலும் மயிலுவின் கையில் நூறு ரூபாய் சொச்சம் மட்டுமே எஞ்சியிருந்தது. மதியம் சைவக்கடையில் சாப்பிட்டுவிட்டு நேரத்தைப் போக்குவதற்காகத் திரைப்படம் பார்க்கப் போனான். அவன் கடைசியாகப் படம் பார்த்து இருபது வருடங்களிருக்கும். திரைப்படம் முடிந்ததும், இப்போது புறப்பட்டால் எட்டுமணியளவில் பிள்ளையார் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்துவிட முடியும் என வேலும் மயிலும் கணக்குப்போட்டான். பிள்ளையார் கோயிலில் கொஞ்சம் உறங்கிவிட்டு, நடுச் சாமத்தில் காட்டுக்குள் நுழைந்து எல்லைக் கோட்டைக் கடக்கலாம் என முடிவு செய்தான். இரவு சாப்பிடுவதற்காகசிந்தாமணி பேக்கரியில் ஒரு றாத்தல் பாணும் அருகிலிருந்த சிறிய கடையில் நான்கு பச்சை மிளகாய்களும் ஒரு பீடிக்கட்டும் வாங்கி ஒரு பையில் வைத்துக்கொண்டே வவுனியா நகரிலிருந்து அவன் புறப்பட்டான்.

பிள்ளையார் கோயிலில் யாரோ விளக்கேற்றி வைத்துவிட்டுப் போயிருப்பது தெரிந்தது. வேலும் மயிலும் கவனமாக சுற்றுப்புறத்தை நோட்டம்விட்டவாறே கோயிலுக்கு வந்தான். கோயிலின் சிறிய மண்டபத்தில், காலையில் பார்த்தவன் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருப்பது மங்கலாகத் தெரிந்தது. இப்போது அவன் அழவில்லை. சற்று நேரம் யோசித்துவிட்டு வேலும் மயிலும் எதிர்ப்புறச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். எதிரிலிருப்பவனின் கண்கள் மண்டபத்தின் நடுவாகத் தொங்கிக்கொண்டிருந்த விளக்கையே பார்த்துக் கொண்டிருப்பதையும் அவனது கால்கள் தாளகதியில் தரையைத் தட்டிக்கொண்டிருப்பதையும் வேலும் மயிலும் கவனித்தான்.

வேலும் மயிலுவுக்குப் பசி எடுத்தது. முதல் நாள் இரவு முழுவதும் தூங்காததால் சோர்வு கண்களை அமுக்கியது. வேலும் மயிலும் தான் சாய்ந்திருந்த சுவரிலிருந்து நகர்ந்து மண்டபத்தின் நடுவாக உட்கார்ந்துகொண்டான். அவனது தலைக்கு மேலே விளக்கின் சுடர் தங்கம் போல ஒளிர்ந்தது. அவன் எதிரிலிருந்தவனைதம்பிஎனக் கூப்பிட்டு தன்னருகே வருமாறு சைகை செய்தான். அந்த உயரமானவன் எழுந்திருக்காமல் கைகளையும் கால்களையும் அசைத்துக் குண்டியை நிலத்தில் தேய்த்தவாறே முன்னே நகர்ந்துவந்து வேலும் மயிலுவுக்கும் முன்னால் இருந்தான். பையிலிருந்த ஒரு றாத்தல் பாணை எடுத்து சரிபாதியாகப் பிய்த்து ஒரு துண்டை எதிரிலிருந்தவனிடம் கொடுத்த வேலும் மயிலும் பையைத் துளாவி நான்கு பச்சை மிளகாய்களையும் எடுத்து இரண்டு மிளகாய்களை அவனிடம் கொடுத்தான்.

இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளாமல் அமைதியாகச் சாப்பிட்டார்கள். உயரமானவன் பச்சை மிளகாயைக் கடிக்கும் போதெல்லாம் ஸ்.. ஸ்ஸ்.. எனச் சத்தம் எழுப்பினான். ‘பச்சை மிளகாய் சாப்பிட்டுப் பழக்கமில்லை போலஎன்று வேலும் மயிலும் நினைத்துக்கொண்டான். சாப்பிட்டு முடிந்ததும் வேலும் மயிலும் தனது சுவர் ஓரமாகப் போய் இருந்துகொண்டான். உயரமானவனும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே பின்நகர்ந்து தனது சுவர் ஓரமாக உட்கார்ந்துகொண்டான்.

வேலும் மயிலும் சுவர் ஓரமாகப் படுத்துக்கொண்டான். மற்றவனும் தனது சுவர் ஓரமாகப் படுத்துக்கொண்டான். நடுச் சாமத்தில் எழுந்திருந்து அங்கிருந்து போவது என்ற திட்டத்துடன் வேலும் மயிலும் கண்களை மூடிக்கொண்டான். சற்று நேரத்திலேயே மற்றவன் எழுப்பும் குறட்டைச் சத்தம் இவனுக்குக் கேட்டது. வேலும் மயிலும் நிம்மதியுடன் கால்களைத் தளர்வாக்கி ஆட்டிக்கொண்டான்.

நடுச் சாமத்துக்குச் சற்று முன்னதாகவே கண்விழித்த வேலும் மயிலும் எதிர்ச் சுவரைப் பார்த்தபோது அங்கே உறங்கிக்கொண்டிருந்த உயரமானவனைக் காணவில்லை. வேலும் மயிலும் இருளில் தட்டுத் தடுமாறிப் போய்க் கிணற்றில் தண்ணீர் அள்ளி முகத்தைக் கழுவிவிட்டு, கோயிலுக்குள் வந்து தொங்கிக்கொண்டிருந்த சங்குக்குள் கையைவிட்டு கை நிறைய விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து நின்றான். இருளுக்குக் கண்கள் பழகியதும் காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

காட்டுக்குள் நுழைந்து மரங்களோடு மரங்களாக வேலும் மயிலும் நடந்துகொண்டிருந்தான். ஏதோ ஒரு மாற்றத்தை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்ததெனினும் அதை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காடு வெளிச்சமாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஏதோ சரியில்லைதிரும்பிப் போய்விடலாமா என அவன் நினைத்தபோது எதிரிலிருந்த மரம் ஓசையில்லாமல் அவன் கழுத்தை நோக்கிப் பாரமான கத்தியை வீசியது. வேலும் மயிலுவின் தலை இரண்டடி தள்ளிப்போய் விழ அவனது முண்டம் அனிச்சையில் கைகளைக் குப்பியவாறே காட்டின் மடியில் வீழ்ந்தது. அன்று மாலை எல்லைக்கோடு மாறியிருந்ததை அறியாமலேயே வேலும் மயிலும் செத்துப் போனான்.

அடுத்தநாள் காலையில் புனிதவதி ரீச்சரின் வீட்டுப் பக்கமிருந்து புழுதியைக் கிழித்துக்கொண்டு வேகமாக கறுப்புநிறபிக்கப்வண்டி வந்தது. அந்த வண்டிக்குப் பின்பாக சில இளைஞர்கள் சைக்கிள்களிலும் சிறுவர்கள் வெறுங் கால்களுடன் ஓடியும் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வண்டியின் கூரை மீது, வட்ட வடிவத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த கல்கி இறுகிப்போன முகத்துடன் கால்களை அகலவிரித்துப் போட்டவாறு உட்கார்ந்திருந்தான். அந்த வண்டிக்குள் பிரேதம் இருந்தது.

சந்தையடியில் அந்த வண்டி நிறுத்தப்பட்டபோது, கல்கி கூரையிலிருந்து ஒரே தாவாகக் கீழே தாவி வண்டியின் பின்புறம் சென்று பிரேதத்தை முடியிருந்த படங்கை இழுத்து ஓரத்தில் போட்டான். சந்தையிலிருந்த சனங்கள் அந்த வண்டியைச் சூழ்ந்துகொண்டார்கள். சந்தையிலிருந்த வேலும் மயிலுவின் மனைவி சனங்கள் ஓடுவதைப் பார்த்தாள். அவர்கள்பிரேதம்எனக் கூச்சலிட்டபோது அவளது நெஞ்சு திடுக்குற்றது. அவள் போட்டது போட்டபடியிருக்க எழுந்து அந்த வண்டியை நோக்கி ஓடினாள். வண்டியின் அருகில் நின்றிருந்த கல்கி ,சனங்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் விட்டுக்கொண்டிருந்தான்.

வேலும் மயிலுவின் மனைவி அந்த வண்டிக்குள் எட்டிப் பார்த்தபோது பிரேதத்தைக் கண்டாள். இலங்கை இராணுத்தின் தொப்பியை அந்தப் பிரேதம் அணிந்திருந்தது. இலங்கை இராணுவத்தின் சீருடைச் சட்டையை அந்தப் பிரேதம் அணிந்திருந்தது. இலங்கை இராணுவத்தின் தடித்த இடுப்புப் பட்டியை அந்தப் பிரேதம் அணிந்திருந்தது. இலங்கை இராணுவத்தின் சீருடையான பச்சைநிற நீளக் காற்சட்டையை அந்தப் பிரேதம் அணிந்திருந்தது. அந்தப் பச்சைநிற நீளக் காற்சட்டை பிரேதத்தின் முழங்கால்களிற்கு சற்றுக் கீழேவரைதான் பிரேதத்தின் கால்களை மறைத்திருந்தது.

இவ்வாறாகசிந்தாமணி பேக்கரியில் வாங்கிய ஒரு றாத்தல் பாணில் அரை றாத்தல் பாண் தங்கரேகைக்கு அந்தப் பக்கம் இருந்தது, அரை றாத்தல் பாண் தங்கரேகைக்கு இந்தப் பக்கம் இருந்தது என்று சொல்லி முடித்தான் கதைசொல்லி.

‘உரையாடல்’ இலக்கிய இதழில் வெளியானது. (Jan – March 2014)

VN:F [1.9.4_1102]
Rating: 9.7/10 (20 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +22 (from 22 votes)
தங்கரேகை, 9.7 out of 10 based on 20 ratings
30 comments to தங்கரேகை
 • அற்புதம் ! வேறெந்த சொற்களுமே விரல்தாண்ட மறுக்கிறது !

  VA:F [1.9.4_1102]
  Rating: 5.0/5 (1 vote cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +2 (from 2 votes)
 • Ganesan

  அற்புதமான சிறுகதை.. வாழ்த்துக்கள்.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • மிகச் சிறந்த கதை. நோ மேன்ஸ் லேண்ட் பார்க்கையில் ஏற்பட்ட அதே உணர்வுகள். அற்புதம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • மண்ணின் மைந்தராய், மண்ணில் இருந்த (அன்னியர்களுக்கு கண்களுக்கு தெரிந்திராத) சோகங்களை மிக அழகுறச் சொல்லிவிட்டீர்கள் ஐயா. ஊர்ச்சொத்தும் குல நாசம் என்ற ப்ரான்ஸ் தேச அன்பர்கள் சொன்னதன் காரணம்தான் எனக்கு விளங்கவில்லை. மீள் வாசிப்பில் புரியுமா எனப் பார்க்கிறேன். சாரு சொன்னதைப் போல, இக் கதையெழுதிய கைகளுக்கு முத்தமிடலாம்தான் 🙂

  VA:F [1.9.4_1102]
  Rating: 5.0/5 (1 vote cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +2 (from 6 votes)
 • ramjiyahoo

  ஷோபா சக்தியின் தங்க ரேகை சிறுகதை நன்றாக இருந்தாலும், கெப்டன் அளவு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது . மேலும் அவர் சொல்ல முயலும் குறியீடுகள் என்ன
  1. பொது மக்களைக் கொலை செய்து விட்டு இலங்கை ராணுவ வீரரைக் கொலை காட்டுதலா
  2. புலிகள் தங்கத்தை மக்களிடம் இருந்து மிரட்டிப் பறிப்பர் என்பதா
  ஆனால் ராணுவத்தினரை விட புலிகள் குறி வல்லவர் என்ற இரட்டை மேளம் ஏன் .

  மச்சி சார் போன்றே ஷோபா சக்தியும், ஏழ்மைக் கதைகளே எழுதுவது ஏன்.
  இயக்குனர் ஷங்கர் போன்ற ஒரு பிரம்மாண்ட சிறுகதை எழுத்தாளர் தேவை . அராத்து கூட யன் முரளி, பவித்ரன் லெவல் தான்

  VA:F [1.9.4_1102]
  Rating: 4.4/5 (5 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +2 (from 6 votes)
 • ramjiyahoo

  ஷோபா சக்தியின் தங்க ரேகை சிறுகதை நன்றாக இருந்தாலும், கெப்டன் அளவு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது . மேலும் அவர் சொல்ல முயலும் குறியீடுகள் என்ன
  1. பொது மக்களைக் கொலை செய்து விட்டு இலங்கை ராணுவ வீரரைக் கொலை seidhom endru காட்டுதலா
  2. புலிகள் தங்கத்தை மக்களிடம் இருந்து மிரட்டிப் பறிப்பர் என்பதா
  ஆனால் ராணுவத்தினரை விட புலிகள் குறி பார்த்துச் சுடுவதில் வல்லவர் என்ற இரட்டை மேளம் ஏன் .

  மச்சி சார் போன்றே ஷோபா சக்தியும், ஏழ்மைக் கதைகளே எழுதுவது ஏன்.
  இயக்குனர் ஷங்கர் போன்ற ஒரு பிரம்மாண்ட சிறுகதை எழுத்தாளர் தமிழ் படைப்பு உலகத்திற்குத் தேவை . அராத்து கூட YN முரளி, மணி இரத்னம் லெவல் தான்

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • நீங்கள் ஒரு சிறந்த கதை சொல்லி சார்….ஐ லவ் யு…

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • அரு

  ன்நன்று.வன்னிக் காடுகளில் நானும் அலைந்து திரும்பயிருக்கிறேன் . அடர்ந்த காடு அவனுக்குத் தைரியத்தைக் கொடுத்தது போன்ற இடங்கள் அருமை.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • ramjiyahoo

  ஷோபா சக்தி கதை தங்க ரேகை எதனால் கப்டன் ஐத் தாண்ட வில்லை என்று எண்ணிக் கொண்டே இருந்தேன். வேலும் மயிலு வவுனியா செல்லும் வரை, மிக அற்புதமாக வர்ணனைகள் , பொருத்தமான வேகத்தில் கதை சென்று கொண்டு இருந்தது.
  வவுனியா அடைந்ததும் (கதை நீளம் ஆகி விட்டது என்று உணர்ந்து விட்டாரோ என்னவோ), மிக வேகமாகவும், அவசரமாகவும் திரும்பி வருதல் முடிந்து விட்டது .

  திருச் செந்தூருக்குப் பாத யாத்திரை செல்வோம் பாளையம் கோட்டையில் இருந்து , செல்லும் பொழுது மிக மெதுவாக & சுவாரஸ்யமாகப் போகும் பயணம் . பிரான்சு மூன்று அழைப்புகள் போலவே எங்களின் கடல் குளியலும் , முருகர் தரிசனமும் நிமிடங்களில் முடிந்து விடும் (அயர்ச்சி, நடை வலி காரணமாக), தரிசனம் முடிந்து வரும் போது பேருந்தில் , எனவே வரும் வழிப் பயணம் விரைவில் முடிந்து விடும், சுவாரஸ்யம் குறைந்து .

  இருந்தாலும், கண்டிப்பாக வாசிக்க வேண்டிய படைப்பு இது , வாழ்த்துகள். கப்டன் ஆரம்பம் முதல் இறுதி வரை அதே வேகம், அதுவும் பிரான்சு அவர் சென்றதும், படகுப் பயணம் எல்லாம் அதே வேகத்தில் இருக்கும்

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: -1 (from 1 vote)
 • ஶ்ரீதரன்

  இவ்வளவு ஆழமாக கூருணர்வுடன் பாராட்டுக்கள்

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • rahu

  வேலும் மயிலும் ஐ புலிகள் கொன்றிருந்தால் எதற்க்காக அந்த உடலை எடுத்து வர வேண்டும். அங்கேயே விட்டு வந்திருக்கலாம். அல்லது எரித்தோ அல்லது புதைத்தோ விட்டிருக்கலாம். அவர்கள் இராணுவ சீருடை அணிவித்து வந்து கொடுத்திருக்க வேண்டியதில்லை.

  வெறும் புலி எதிர்ப்பு நோக்கத்துக்காக எழுதப்பட கதை . அவ்வளவுதான்

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • surya

  extraordinary

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • surya

  வார்த்தைகள் மிக அழகாக பயன்படுதபட்டிருக்கின்றன. பல கட்டுரைகள் விளக்க முடியாத சில விசயங்களை புரிந்துகொள்ள முடிகிறது.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • சுஜய்

  அற்புதமான சிறுகதை. இரண்டு பேருக்குமே(வேலும் மயிலும் & பமு) தங்கம் வேண்டும் ஆனால் நோக்கம் வேறு, இரண்டு இனமும் போரிட்டு செத்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த இருவரும் பன்னை பகிர்ந்து உண்ணுகிறார்கள். இலங்கை இனப் பிரச்சினையை வேறு கோணத்தில் காட்டும் சிறுகதை.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • நண்பரின் அறிமுகம் மூலம் ஷோபாசக்தியின் எழுத்தை வாசிக்கிறேன். தொடர்ந்து வாசிக்கும்
  ஆர்வத்தை தூண்டிவிட்டது இந்த சிறுகதை.. தரமான ஆழ்ந்த அனுபவம் உள்ளடிங்கிய நேர்த்தியான படைப்பு…

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • selvam thondaimaan

  Arumai

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • nila

  Nice way of writing. But can’t get along with the content.

  VA:F [1.9.4_1102]
  Rating: 1.0/5 (1 vote cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • ஷோபா சக்தி இது தான் சிறுகதை,உள்ளத்தை தொட்டது.அற்புதம் எப்போதாவது தான் நிகழும் அது போன்றதொரு அற்புதம் இது.இனி அடிக்கடி நிகழட்டும்

  VA:F [1.9.4_1102]
  Rating: 5.0/5 (1 vote cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • ranjith

  ramji,
  how stupid?you compare a dumb ass like arathu as a writer here at shoba shakthi’s place,grow up you moron ,its a modern classic of short story on its kind,even a veteran writer like jeyamohan can’t give a finish like this.see its subtle dark humor. if you want to prove you as a master crit,yo fail,you are a faggot.get last from this place,you racist scoundrel.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • உங்கள் தளம் – இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…

  வாழ்த்துக்கள்…

  இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • ஷோபாசக்தி

  ‘தங்கரேகை’ கதை குறித்து நண்பர்கள், விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைச் சொல்வதை ஓரெழுத்து விடுபடாமல் கவனித்து வருகிறேன். ஒரு புனைவை எழுதியதன் பின்பாக அதுகுறித்து எந்த விவாதங்களிலும் கலந்துகொள்வதில்லை என்ற விதியை நான் எழுதவந்த நாளிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன். “எனது கதை சொல்லாத எதையும் நான் கதைக்கு வெளியே சொல்லிவிட முடியாது” என்ற ஜெயகாந்தனின் வாக்கு வழிகாட்டி. அனைவருடைய கருத்துகளிற்கும் மிக்க நன்றி. வாழ்க்கையில் நான் சந்திக்கும் கடைசி மனிதரும் எனக்கு ஆசானே.

  VN:F [1.9.4_1102]
  Rating: 4.2/5 (9 votes cast)
  VN:F [1.9.4_1102]
  Rating: +6 (from 6 votes)
 • Asha

  தங்க ரேகை நான் வாசித்த முதல் தமிழ் கதை. இதை வாசிக்கும் பொது உங்கள் எழுத்துகளை இன்னும் வாசிக்க வேண்டும் போல் உள்ளது. கடைசி வரை வேலும் மஜிலும் சக கூடாது என நினைத்தேன்…

  Amazing story Sir, First time i read a tamil story.. Thanks for you.. I got interest on your writings.. Send me more lings… and write more stories… Love your stories

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: +1 (from 1 vote)
 • nantraaka irunthathu kathai. vaazhththukkal.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • dheen

  அற்புதமான சிறுகதை. இதைப் படிக்கும் போது மண்டோ வின் “டோபாடெக்சிங்” கதை நியாபகம் வந்தது .

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • ஷோபா சக்தியின் புனைவுகள், விவரிப்புகளின் கூர்மை, அனாயசமாக வந்துபோகும் அங்கதம், எள்ளல் ஆகியவற்றின் ரசிகன் நான். இத்தனைக்கும் அவர் படைப்புகள் அனைத்தையும் நான் முழுமையாக வாசித்ததில்லை. இணையம் வழி வெளியான அவர் சில சிறுகதைகளை வாசித்ததில் உணர்ந்தது இது. அவரின் மிகப்பெரிய பலம், தான் சொல்லவந்ததை வாசிக்கிறவர் உணரக்கூடிய நம்பகத்தன்மையுடன் சொல்லுகிற திறம் பெற்றிருப்பது. அதனாலேயே அவரோடு உடன்படாதோர் அவரை இன்னமும் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர் கதைகள் எந்த முடிவையும் வாசகருக்கு வைப்பதில்லை. திடீர் திருப்பங்களில் முடிவதில்லை. ஒரு கதை சொல்லியின் போக்கில் முடியுமென நினைக்கும்போது நீண்டு, சாதாரண நிகழ்வொன்றிலோ விவரிப்பிலோ முடிந்துவிடுகிறது. இது அவரின் இன்னொரு பலம். இலங்கைத் தமிழ் எழுத்தின் முக்கியமான சாதனையாளர் வரிசையில் முன்னணியில் இருக்கிற ஷோபா சக்தியை விருது கொடுப்பவர்கள் யாரும் இதுவரை கண்டுகொண்டிருக்கிறார்களா? அவரின் சமீபத்திய தங்கரேகை கதையைப் படித்தபின் எழுந்த சில எண்ணங்கள் இவை. – PK Sivakumar

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • sutha

  கதை மிகவும் நன்றாக உள்ளது. புனிதவாதி அக்கா நல்ல கெட்டிக்காரி. நான் வாசிக்கவே 2 நாள் தேவை என்றால் இந்த கதையை எழுத எவளவு நாள் எடுத்த்திருக்கும். நன்றிகள்.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • Sureshkumar

  தூள்!

  //அரை றாத்தல் பாண் தங்கரேகைக்கு அந்தப் பக்கம் இருந்தது, அரை றாத்தல் பாண் தங்கரேகைக்கு இந்தப் பக்கம் இருந்தது //

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • Uthayan

  அற்புதமான சிறுகதை.வாழ்த்துக்கள் சக்தி அண்ணா

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • Selvendiran

  மனம் எதையோ உணர்ந்துவிட்டது. மெலிதான பதட்டம் இன்னும் இருக்கின்றது. நன்றி ஷோபாசக்தி நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்ததற்கு. நன்றி சாரு.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner