வல்லிய காணூடகத்தை கலையாகப் பார்க்காமல் வேவாரமாகப் பார்க்கிறார்கள்

கட்டுரைகள்

நேர்காணல்மு. ஹரிகிருஷ்ணன்

அதாகப்பட்டது பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரைப் பண்படுத்தக் கூடியதுமான இசையைப் போலவே மனதுக்குள் ஊடுருவிப் பேசுகின்ற இந்த சூத்திரதாரியை நான் மூன்றாம் ஜாமமொன்றில் காண நேரிட்டது.

கொங்குச் சீமையின் சிறு கிராமமாம் ஏர்வாடியில் நடந்த கூத்துக் கலைவிழாவுக்குச் சென்றிருந்தேன். சுத்துப்பட்டுக் கிராமத்து மக்கள் , நாட்டார் கலை உபாசகர்கள், பிறகு நாஞ்சில் நாடன், பொதியவெற்பன், செ.ரவீந்திரன் என மூத்த எழுத்தாளிகளிலிருந்து லீனா மணிமேகலை, சந்திரா, இசையென இளவட்டங்கள்வரை; சிறுகோயிலின் முன்னிருந்த பொட்டலில் மங்கலான குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் கூடியிருந்தார்கள். விடிய விடியக் கூத்தும் கட்டப் பொம்மலாட்டமும் கூத்துக் கலைஞர்களை மதிப்புச் செய்தலும் என நிகழ்ந்த அந்த இரவை இயற்றியவர் ஹரிகிருஷ்ணன். அந்த இரவில் என்னிடம் உருவாகிய கேள்விகளைக் கேட்பதற்கு இப்போதுதான் தருணம் வாய்த்திருக்கிறது,

ஒரு அசல் கலைஞனுக்குப் பேரனாகவும், ஒரு அசல் இரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, என்னை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதைவிடக் கூத்துக் கலைஞன் என்று சொல்லிக்கொள்வதே மிகு உவப்பாக இருக்கிறதுஎனத் தன்னை அறிவித்துக்கொள்ளும் ஹரிகிருஷ்ணன்மணல்வீடுசிற்றிதழின் ஆசிரியர். தமிழின் தனித்துவமான சிறுகதையாளரும் கூட.  ‘மயில் ராவணன்’,  ‘நாயீவாயிச்சீலைஎனச் சிறுகதைத் தொகுப்புகளும்அருங்கூத்துதொகை நூல்எனும் கூத்து கலைஞர்களின் வாழ்வியற் பதிவும் வெளியாகியுள்ளன. ‘விதைத்தவசம்இவர் உருவாக்கிய ஆவணப்படம்.

தற்போது ஜிண்டால் இரும்பாலையில் தொழிலாளியாகப் பணியாற்றும் ஹரிகிருஷ்ணன் நாட்டார் கலைகளுக்கானகளரிமையத்தை உருவாக்கி இயக்கிவருகிறார். ‘காலம்இதழுக்கான இந்நேர்காணல் மின்னஞ்சல்வழியே நடந்து முடிந்தது.

ஷோபாசக்தி

************

தோற்றுப்போன கூத்துக் கலைஞன் ஒருவனுக்கும் கூத்தின் உபாசகி ஒருத்திக்கும் மகனாக நான் முப்பத்தொன்பது வருசத்துக்கு முன்னால் பெரியகுனிச்சி கிராமத்தில் பிறந்தேன். இப்போதைய வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகாமையில் இருக்கிறது இந்தக் கிராமம் . உழவும் நெசவும் பிரதானமான தொழிலாக கொண்ட பாட்டன் துரைசாமி சாயப்பட்டறையில் ஒற்றைக்கண் இழந்து அந்தகன் ஆகும் பரியந்தம், அடுக்கத்தூர் கொட்டாவூர் கண்ணையன் ஜமாவில் மெயின் ஸ்திரி பார்ட் போட்டுக் கூத்தாடிக்கொண்டிருந்தாராம். பிறகு அப்பன் முனிரத்தினம், பகவான் வேடதாரி.

அம்மா உண்ணாமலையை மணம் முடிக்க அப்பன் பஞ்சனம்பட்டி நிலக்கிழார் முனுசாமியிடம் பெண் கேட்டுப்போக அவர், கூத்தாடிக்குப் பெண் தரமாட்டேன் என்று முகத்தில் காறித்துப்பாத குறையாக விரட்டிவிட்டாராம். முன்னே வைத்த காலை பின்னே வைக்காத எங்கப்பன் ஆயீக்காக கூத்தை விட்டொழித்து பொதுப்பணித்துறையில் பரிசாரகனாகி கர்ம வீரர் காமராசருக்கு ஓமலூர் ஜோடுகுளியில் உள்ள பயணியர் மாளிகையில் கஞ்சி காய்ச்சி ஊத்தப் போய்விட கூத்து எங்கள் குடும்பத்திலிருந்து விடை பெற்றுக்கொண்டுவிட்டது.

எண்ணம் ஈடேறி பிள்ளைகள் ஏழு பிறந்தன, என் தந்தை ஊருக்கு பெரிய மனிதர் ஆனார். எழுபத்தியொன்பது திருப்பத்தூர் இந்து முஸ்லிம் கலவரத்தின் போது இஸ்லாம் சகோதரர்களுக்கு ஆதரவாக அவர் நின்ற காரணத்தால் பங்காளிகள் எங்கள் வீட்டிற்கு தீ வைக்க வெறுங்கை வெறும் கால்களோடு இப்போதுள்ள ஏர்வாடிக்கு அகதியாக வந்து சேர்ந்தோம் . பசிக்குப் பனம்பழம், பன்னகீரை கடைசல் தான் எந்நேரமும் ஆனம். அன்னாடம் காய்ச்சிப் பிழைப்பு. பள்ளிக்கு போவதை விடஎன் அண்ணனிடம் உதை வாங்கினாலும் சரிசுத்துப்பட்டில் நடக்கும் கூத்துக்கு ஓடி விடுவதே எனக்கு விருப்பமானதாக இருந்தது . கூத்தாடிக்குப் பெண் தரமாட்டேன் என்று சொன்ன தாய்வழிப் பாட்டனுக்கு மகளின் கூத்துப்பித்து தெரியாமல் போனது துரதிர்ஷ்டம். இன்றைக்கும் என் அம்மா பத்து மைல் விஸ்தீரணத்தில் எங்கு கூத்து என்றாலும் துப்பட்டி சகிதமாகக் கிளம்பிவிடும் .

கூத்துக் கலைஞரான அப்பாவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்டதென்ன?

மரபு கலைக்கூறுகள் , அவற்றின் நுட்ப திட்பங்கள், நிகழ்த்துபாங்கைக் குறித்த அறிவு இவையேதும் என் தந்தை வழி எனக்குக் கிட்டவில்லை . வாழ்க்கைப் பகடையில் அவர் தான் வம்பாய் தொலைத்த கலை அவரை விடாமல் பற்றி வருத்தியது. சமயங்களில் கூத்தில் எடுத்த வீடியோ பதிவுகளை வலையேற்ற நான் சரிபார்க்கும் பொருட்டு கணினித் திரையில் இயக்க மத்தள இசைக்குத் தாளாது தாளிட்ட கதவிற்கு பின் அவர் உடல் தள்ளாமையோடு போடும் அடவின் த்வனி கேட்டு வேதனைப்பட்டிருக்கிறேன் .

இறுதியாக இயக்குனர் வசந்தபாலனுக்காக களரி நடாத்தியஅரவான் களப்பலி கூத்தில் கிருஷ்ணர் வேடம் போட விருப்பப்பட்டார். சினிமாக்காரன் முன்பு கூத்தாடவேண்டாம் என்று மறுத்து விட்டேன் . ஆசை நிறைவேறாமல் போய் சேர்ந்தது அவர் கட்டை. ஒன்றின்பால் இயல்பாய் நமக்கிருக்கும் ஈடுபாட்டையையும் திறமையையும் எதற்காகவும் யாருக்காகவும் அடகு வைக்கலாகாது என்கிற வைராக்கியத்தை தோற்றுப்போன கலைஞனான அவரின் வாழ்வியலிலிருந்து நான் பெற்றேன்.

இன்றைக்கு தமிழகத்தில் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் போன்றவை இன்னும் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்கள் எவை?

அரங்கக் கலைகள் யாவும் பார்வையாளன் என்று சொல்லப்படுகின்ற ரசிகனை பங்காளியாகக் கொண்டவை. ரசனை என்பதும் சின்ன விலைச் சமாச்சாரமில்லை.கவுண்டன் , செட்டி, முதலியாரென்று கரை மேல் நின்று வேலை சொல்பவர்கள், சோக்காளிகள் , நோட்டு எண்ணுபவர்கள் , காசுபணத்தை மட்டும் பெரிதாக நினைப்பவர்களிற்கு ஆட்டம், பாட்டம் எல்லாம் தொண்டைக்கு கீழே போனால் நரகல் என்பதுபோல் போழுதோட்டும் சங்கதி.

நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி புழுதி மண்ணை தின்கின்றானே பறையனும், சக்கிலியனும், குறவனும், அவன்தான் பத்தாயிரம்பதினைந்தாயிரம் என்று காசைக் காசாகப் பார்க்காமல் செலவழித்துக் கூத்து விடுகின்றவன். அவனும் இந்த மண்ணும்தான் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் போன்றவை இன்னும் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் அவன்தான்.

கண்ணுக்கு வெளிச்சமாக வேடங்கட்டி தாளம் , காலம் , சுதியோடு பாட்டுப்பாடி, ஆட்டமாடி புத்திக்கு உறைக்கிற கதை சொல்வதுதான் கூத்து . கூத்தும் கொட்டும் கொண்டாட்டமும் ஒடுக்கப்பட்டவர்களிடம்தான் வீர்யமாக , உயிரோட்டத்தோடு சீவித்திருக்கிறது. மீளமுடியாத வறுமையில் உழன்றபோதும் அவற்றை ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்போடும் கைக்கொண்டிருப்போரும் அவர்களே ! ஆக இக்கலைகள் வேடிக்கை பார்க்கும் பண்ணாடிமார்களுக்கு பாத்தியப்பட்டவை அல்ல. மாறாக அவை பறையன் , சக்கிலி , குறவன், தொம்பன் இவர்களுடைய கலை . இங்கே இந்தச் சாதியினரோடு வன்னியர்களும் , வண்ணார்களும் கூத்தாடுகிறார்கள். ஆனால் தான் என்று பறந்தாடும் கூத்தாடி என்றாலும் அவன் பின்னால் பக்க இசையான முகவீணை, மிருதங்கம் வாசிக்க மேல்சொன்ன சாதிக்காரன் இல்லாமல் கூத்தே ஆட முடியாது .

இக்கலைகள் பெரும்பாலும் இதிகாசங்கள், புராணங்கள் சார்ந்து மதக்கறையுடன்தானே விளங்குகின்றன, இக்கலைவடிவங்களின் கருத்தியல் உள்ளடக்கத்தைச் சமகாலத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம் எனக் கருதுகிறீர்களா? அய்யா ஓம் முத்துமாரி போன்றவர்கள் அதைச் செய்கிறார்களல்லவா?

மனிதனிடம் இருக்கும் அழுக்குகளும் , அவனை உள்ளடக்கிய சமூகத்தில் பட்டிருக்கும் கறைகளும் தாமே அவன் திட்டித்த மதங்களிலும் புராண இதிகாசங்களிலும் மண்டிக் கிடக்கும்.

மூளைக்காரர்களாகிய நாம் நினைப்பது போன்று நாட்டார் நிகழ்த்து கலைகளும் சரி அவற்றின் சூத்திரதாரிகளும் சரி எந்த மத போதனைகளையும் பிரச்சாரங்களையும் செய்வதில்லை. மாறாக அதிலேதும் பட்டுக்கொள்ளாமல் திரும்பத் திரும்ப நிகழ்த்துவதினால் அவற்றின் மூலம் நாமடையும் மனக்கேடுகளை பகடி செய்கிறார்கள் என்கிறேன் நான்.

இக்கலைவடிவங்களை சமகாலத்துக்கு ஏற்றவாறு கருத்தியல் உள்ளடக்கத்தில் வடிவமைப்பது நிகழ்த்துவோனை மாத்திரம் பொறுப்பாளியாக்கி செய்யும் காரியமல்ல. படியளக்கப்பட்ட கர்த்தாக்கள் மனது வைக்கவேண்டும், மற்றும் பனுவல், நெறியாளுகை சமாச்சாரமெல்லாம் கைநாட்டும் எம் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் அப்பாலானது . ஓம் முத்துமாரி அய்யா அவர்களுக்கு தோழர்கள் கை கொடுத்தார்கள், இங்கு பேசுகிறார்கள், அவ்வளவே.

பனுவல், நெறியாளுகை சமாச்சாரமெல்லாம் கைநாட்டும் கலைஞர்களிற்கு அப்பாலானது என்கிறீர்கள்..ஏன் அப்பாலானது? வாய்மொழிக் கலைகளும் கிராமியக் கூத்து வாத்தியார்களும் செழித்த நிலமல்லவா இது?

படித்த மூளைக்காரர்களாகிய நாம் அர்த்தங்கொள்ளும்படிக்கு பனுவல், நெறியாளுகை சமாச்சாரமெல்லாம் கைநாட்டும் கலைஞர்களிற்கு அப்பாலானது எனபது நடப்பு உண்மை. ஆனால் அவர்கள் ஆற்றுகையில் தானாய் சமைந்த, எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை மாற்றத்திற்கு இசைவாய் தகவமைத்துக்கொள்ளும் பனுவலும் நெறியாளுகையும் புழக்கத்தில் உண்டு . அவர்கள் பாவிக்கும் இசையும் அவ்வழிப்பட்டதே. அத்திவாரம் இல்லாத கட்டடம் இல்லை இது. உறுதி மிக்கதன் கட்டுமானம் அறிந்தும் அறியாத சிவமணிகளாகிய நம்மால் உணரமுடியாது. எழுத்தோர் படைப்புக்கலையென்பார் தம்மை இன்ன கன்டென்ட் , இன்ன சப்ஜெக்டில் ஆர்டிகல் படைக்க இருக்க வேண்டுமெனக் கோரிவிட்டால் அதன் பின் நம் உயிர் தப்பி பிழைப்பது உசிதமில்லை. படைப்புச் சுதந்திரம் தன் சூலாயுதத்தால் நம்மை சூழ்ந்து சிறையிடும்.

மேக்பெத் நாடகத்தை கூத்தாக நிகழ்த்தும் தேட்டமும் , தேவையும் நமக்கிருக்கலாம் தப்பில்லை. இதை அம்மாபேட்டை கணேசனோ , எகபுரம் சுப்ருவோ விரும்பவேண்டுமல்லவா? ஒரு கால் அவர்கள் மறுத்தால் அவர்களது திறமை குறித்த நமது மதிப்பீடு என்னவாக இருக்கும்? அந்நேர கற்பனைகள் , தொடர் நிகழ்த்துதல் வழி அரங்கக்கலைகளில் ஓர் நிகழ்வு செம்மையாக்கம் பெறுகிறது . ஆசைக்கு ஈசல் பிடிக்க போய் அரைப்பண்டத்தைக் கரையான் தின்ற கதையாகி விடக்கூடாது. விட்டு விடுங்கள்நாட்டார் கலைகள் அதன் போக்கில் இருக்கட்டும் .

நீங்கள் உருவாக்கியிருக்கும்களரி அமைப்புக் குறித்து?

தொன்மைக்கலையான கூத்து நிலைபெற்று நிற்க வேண்டுமெனில் அதன் நிகழ்த்துனர்களின் வாழ்வியல் பொருளாதார மேம்பாடுடையதாகவும் கலைஞர்களின் உளப்பாங்கு இடுக்குகள் சிணுக்கங்களற்றதாகவும் இருக்கவேண்டுமென்பதை தெளிந்து அதன் வழி அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்கும் பொருட்டும் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றின் ஆதார படிவம் மாறாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு கையளிக்கும் பொருட்டும் கடந்த இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு ஜனவரி மாதம் களரி தொடங்கப்பட்டது. இரண்டாயிரத்து பத்து மார்ச் மாதம், பதிவு எண்– 310|2010 என அரசுப் பதிவும் செய்தாகிவிட்டது. குறுகிய காலதிற்குள்ளேயே களரியின் செயற்பாடுகள் பலவாயிருக்கின்றன,

முதற்கட்டமாக கொங்கு மண்டல கலைவடிவங்களான கூத்து, பாவைக்கூத்து, கட்ட பொம்மலாட்டம் ஆகியனவற்றை கலைநுகர்வு பரப்பில் கவனப்படுத்தும்படியாக சங்கீத நாடக அகாதமி சார்பில்களரி சென்னை, டில்லி, கௌகாத்தி உட்பட பிற மாநிலங்களில் மற்றும் தமிழகமெங்கும் நிகழ்வுகளை நடத்தியது.

சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக் கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்தது.

கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில்அருங்கூத்து என்றதோர் தொகைநூற்பிரதியையும், ‘விதைத்தவசம் என்றதோர் ஆவணப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெறகளரி களப்பணி ஆற்றியிருக்கிறது.

கலைஞர் பெருமக்களை உத்வேகப்படுத்தும் கடப்பாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக விழா எடுத்துப் பாராட்டுக்களோடு பரிசுத்தொகைகள் வழங்கிக் கௌரவித்திருக்கிறது

பெண் பொம்மலாட்டக் கலைஞர் பெரிய சீரகாப்பாடி சரோஜா முத்துலட்சமி அவர்கள் குறித்த ஆவணப்படத்தையும் தயாரித்துள்ளோம்.

பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரை மனிதனாக பண்படுத்துவதுமான இசையாகப்பட்டது கூத்தில் இடைவெளியை இட்டு நிரப்புவதற்கும், ஒட்டுப் போடுவதற்கும், கதை கட்டங்களை நிகழ்வுக்கோர்வையை, தளர்த்தி முறுக்குவதற்கும், வேடதாரிகள் பேசுகின்ற வசனங்களை அடிக்கோடிட்டு பார்வையாளர் இதயத்தில் அழுந்த பதிப்பதற்குமானதன்று! அது அம்பலக்கலையின் உயிர்த்தளம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் முகவீணை, மிருதங்கம், ஹார்மோனியம் முதலிய பக்க இசைக்கலையில் விற்பன்னரான கூத்திசை மேதை அம்மாபேட்டை செல்லப்பன் அவர்களை குறித்த ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளோம்.

ஆதியில் புழக்கத்தில் இருந்து தற்பொழுது அருகிவிட்ட கூத்துப் பனுவல்களைச் சேகரித்துப் பிரதியாக்கம் செய்யும் முயற்சியில்சபையலங்காரம், ‘உடாங்கனையின் கனவு நிலை முதலிய பிரதிகளின் அச்சாக்கப் பணிகளைச் செய்துவருகிறோம்.

வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாக களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வட்டம் , மூங்கில் கோம்பை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வனப்பண்ணையில் நிகழ்த்தவிருக்கிறது

கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு. மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு எதிரான போர்க்குணங்களையும், கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக்கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம் உடல், பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றின் தொன்மம் மாறாது பாரம்பர்யம் வழுவாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது. மேற்சொன்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்களரி தொல்கலைகள்கலைஞர்கள் மேம்பாட்டு மையம்கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளியை சேலம்மாவட்டம் ஏர்வாடியில் தொடங்கவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப்பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தகைய பாரிய வேலைத்திட்டத்திற்கு அரசு எந்தவகையிலாவது உதவுகிறதா?

வேலைத்திட்டம் எதுவென்றபோதிலும் எண்ணத்தை செயலாக மாற்றும் முன் அதற்கு வேண்டிய நிதியில் மூன்றில் இரண்டு பங்கு கைப்பணத்தை எடுத்து வைத்த பிறகே காரியம் தொடங்குகின்றேன். இயலாத அரும்பெரும் செயற்பாடுகளுக்கு என் ஆப்த நண்பர்களும் , கலை ஆர்வலர்களும் உதவுகிறார்களே அன்றி அரசோ , அதைபோன்ற நிறுவனங்களோ இதுவரை உதவவில்லை .

ஃபோர்ட் பவுண்டேசன் போன்ற நிறுவனங்கள் நாட்டார் கலைகளிற்காக நிதியை அள்ளிவிடுவதாக ஒரு பேச்சுள்ளதே?

உயர் சாதி நெல்லுக்கு பாயும் நீர் கேவலம் இந்த புல்லுக்கு பொசியுமா ? அமிர்தம் தேவர்களுக்கே!

இயல்இசைநாடக மன்றம் நாட்டுப்புறக் கலைஞர்களைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகச் சில காலத்திற்கு முன்பு கடுமையாக விமர்சித்திருந்தீர்கள், இப்போதும் அந்தப் புறக்கணிப்புத் தொடர்கிறதா?

ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியாக இருந்தாலும் தன் அனுதாபிகளுக்காகத் தான் வாரியங்களை உற்பவனம் செய்கின்றன. வாக்களித்த சனங்களின் வாழ்வு மேம்பாடு கருதி அவை ஒருபோதும் செயற்படுவதில்லை . இயல்இசைநாடக மன்ற பொறுப்பாளிகளாக பீடமேறும் சினிமாக்காரர்கள் தொல்கலைகள் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாதாவர்கள். அருமை தெரியாதவர்களிடம் போனால் நம் பெருமை குலைவதில் ஆச்சரியம் ஏதுமில்லை

கூத்துக் கலைஞர்களை தமிழ்ச் சினிமா ஓரளவாவது உள்வாங்கிக்கொண்டுள்ளதா?

மூன்று வருடங்களுக்கு முன்போர் சமயம் ,

வசந்தபாலன் என்கிறதோர் திரை ஆகிருதி மகாபாரத அரவான் பாத்திரவார்ப்பின் தொன்மம் அறிய வேண்டி , கூத்துப் பார்க்கத் தன் சேனா சைன்யங்கள், பரிவாரங்கள் புடை சூழ எங்கள் சிற்றூருக்குக் களமிறங்கினார். அன்செட்டிப்பட்டி துரைசாமி , அம்மாபேட்டை கணேசன் , உள்ளிட்ட கூத்து ஆளுமைகளை ஒருங்கிணைத்துஅரவான் கடபலி கூத்து ஏற்பாடு செய்திருந்தேன் . குறித்த நேரத்தில் சம்பிரதாய பூசனைகள் முடித்து களரி கூட்டி நிகழ்வு துவங்கியது.

அதுதொட்டு விடிகிற வரை, ஹார்மோனியத்தை நிறுத்தி தரு பாடச் சொன்னது , ஜால்ராகைதாளத்தைப் போடாமல் மிருதங்கம் வாசிக்கப் பணித்தது , சபையில் ஆடிய கலைஞனைக் கைசொடுக்கிக் கூப்பிட்டு தன் காலடியில் ஆட ஏவியது , பலியாக போகிற காட்சியில் அரவான் வேடதாரி வன மிருகங்களிடம் கடைசி விடைபெற்றுக்கொள்ள உக்கிரமாகப் பாட்டு எடுக்க அந்நேரம் இவர் முகவீணை கலைஞரை அழைத்து , அருகமர்த்தி, உங்க முகவீணையில் இருக்கும் இந்த ஏழு துளைகளில் மட்டும்தான் காத்து வருகிறதா இல்ல எல்லா முகவீணையிலும் அந்த மாதிரி காத்து வருகிறதா என்ற தனது ஐயத்தை நிவர்த்திக்க முரண்டுபிடித்தது என முற்போக்கு இயக்குனரின் நெறியாளுகையின் தீவிரத்தில் சிக்கிக் கூத்தின் ரத்த அழுத்தம் அபாய அலகுகளைத் தாண்டி எகிற , பொறுமை முற்றிலும் இழந்த நான் வசந்தபாலனைபோடா வெளியே என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளும் நிலைமைக்கு போக , விருந்தாடியை அவமதிக்கலாகாது என நண்பர் மூர்த்தி எனைத் தடுத்தாட்கொண்டார்.

வல்லிய காணூடகத்தை கலையாகப் பார்க்காமல் , வேவாரமாக பார்க்கும் மேல்மேச்சல்காரர்கள் மலிந்த தமிழ் சினிமா உலகு, ஒரு மோஸ்தருக்காகத்தான் கூத்து முதலான நிகழ்த்துகலைகளையும், கலைஞர்களையும் பயன்படுத்த விழைகிறதே அன்றி , அதைக் கனம் பண்ணுகிற நோக்கோ , முனைப்போ கிஞ்சித்தும் கிடையாது .

பல்கலைக்கழகங்களின் நிகழ்த்துகலைத் துறைகள் , அவற்றினது பேராசிரியர்கள் நாட்டார் கலைகள் மற்றும் கலைஞர்களிற்கான வளர்ச்சியில் தரும் ஒத்துழைப்பு திருப்தியானதா? அவர்களுடனான களரியின் உறவு எப்படியிருக்கிறது ?

புதுவை பல்கலைக் கழக ஸ்கூல் ஆப் பெர்போர்மிங் ஆர்ட்ஸ் துறை தலைவராகக் காரியமாற்றிய பேராசான் அய்யா திரு . கருஞ்சுழி ஆறுமுகம் அவர்கள் மதுரை வீரன் கூத்துப் பார்க்க வேண்டுமெனக் கோர, நான் எடப்பாடி நல்லதங்கையூரில் வடிவேல் வாத்தியாரின் ஜமாமதுரை வீரன் கூத்தாடும் தகவலைச் சொல்லி வரச்சொல்லியிருந்தேன். அவர் எனக்குத் தெரியாமல் வந்ததோடு அந்தக் கூத்தை வீடியோ பதிவும் எடுத்துக்கொண்டுவிட்டார் . அதே கையோடு வடிவேல் வாத்தியாரை மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க என்று கூட்டிச் சென்று அரையும் குறையுமாக தான் பயின்று மேலைத் தேயம் ஒன்றில் அவர் மதுரை வீரன் வேடந்தரித்து கூத்து ஆடியிருக்கிறார் . ஓர் கூத்து குடும்பத்தை சேர்ந்த தான் போய் அறிவு கொள்ளை அடிக்கத் தகுமா ? இப்படிதான் நான்போய் வெளிநாட்டில் கூத்தாட போகிறேன் , எனக்கு மதுரை வீரன் கூத்தின் அரிச் சுவடி கூடத் தெரியாது . உங்களிடம் அதை பயின்றுதான் ஆட வேன்டும் என்று சொல்கிற குறைந்த பட்ச நேர்மையாவது வேண்டாமா ?

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தோற்பாவைக் கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களைக் குறித்தவிதைத்தவசம்என்றதோர் ஆவணப்படத்தை இரண்டு வருடங்களாகத் திரையிடுவதாகச் சதாய்கிறார்கள் ….இன்னும் கைகூடவில்லை! வாழ்க அதன் துறைத் தலைவர்! வளருக அவர் செயலூக்கம்!

சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்த காலத்தில் முத்துகந்தன் என்பவர் தனது நெறியாளருக்காக சுமார் முப்பது கூத்து கலைஞர்களின் நேர்காணலைஅவரிடம் இருந்ததும் மொத்தம் முப்பது கேள்விகள்தாம்தொகுத்து எடுத்துச் சென்றார் . இன்று கருணா பிரசாத்தின்போதி வெளியீட்டில் புத்தகமாக்கி விற்றுவரும் நெறியாளர் கோ .பழனி அய்யா அவர்களுக்கு செவ்வி தந்த கூத்து வாத்தியார்களுக்கு ஒரு பிரதி தரவேண்டும் என்ற மரியாதையை யார் கற்று தருவது !

வருடத்திற்கு வருடம் தவறாமல் ஆறு வருடங்களாக வளாகங்களுக்கு நான் அனுப்பும் மக்கள் கலை இலக்கிய விழா அழைப்பிதழை மதித்து பேருக்கென்று ஒரு மாணவனைக் கூட இந்தப் பேராசான்கள் நிகழ்வுகளுக்கு அனுப்பியதில்லை .

பல்கலைக்கழக வளாகங்களில் வருடம் தவறாது இந்திய அளவிலான நாட்டுப்புற வியலாளர்களின் கூடுகை ஒன்றை நடத்துகிறார்கள் . மறந்தும் கூட கலைஞர்களை பேராசான்கள் அழைப்பதில்லை. ஏனோ தெரியவில்லை மாணவர்கள்கலைஞர்கள் சந்திப்பை முறை பிறழ்ந்த உறவாகக் கருதி அவ்வளவு பிடிவாதமாகத் தவிர்க்கிறார்கள். இதற்கான காரணம் கண்டு சொல்வது ஆர் ?

பனை மரத்து நிழலும் சரி, பங்காளி உறவும் சரி என்றொரு பழமொழி உண்டு. இப்படிதான் இருக்கிறது எங்கள் உறவு .

நவீன நாடக இயக்கங்கள் கூத்துக் கலைக்கு ஒரு மறுமலர்ச்சியை அளிக்க முயல்கின்றனவா? புரிசை தம்பிரான் போன்றவர்களிற்கு அவர்கள் புதிய களங்களை அமைத்துக் கொடுத்தார்களல்லவா?

இல்லை. அவற்றிலிருந்து கூத்து முதலான நிகழ்த்து கலைகள் விடை பெற்றுக்கொண்டுவிட்டன . அவர்கள் அமைத்துக்கொடுத்த களத்தில் கழுதை புரண்டுக்கொண்டிருக்கிறது .

கூத்துப் பட்டறை போன்ற நிறுவனங்கள் வணிகச் சினிமாக்களிற்கு நடிகர்களைத் தயாரித்தளிக்கும் பட்டறைகளாக மாறியிருக்கின்றன என்றொரு விமர்சனம் உண்டல்லவா?

ஆம்முற்றிலும் உண்மை. வெறும் நிறுவனங்களாக ஆவது மாத்திரம் மனிதனின் ஆகப் பெரிய குறிகோளாக ஆன பின் அவனும் அவனது தேட்டங்களும் சுயம் திரிந்து இந்நிலையை அடைவது தவிர்க்க முடியாதது,

பார்ப்பனிய நிறுவனங்கள் மற்றும் பார்ப்பனிய கலாசார மையங்கள் கூத்துக் கலையை எவ்வாறு அணுகின? அணுகுகின்றன? வரலாற்றுரீதியாக விளக்குவீர்களா?

சோழியன் குடுமி கிடக்கட்டும் பார்ப்பாரக் குடுமி சும்மா ஆடுமா! அவர்கள் கருணை கடாட்சத்தால் அன்றி இக்கலைகள் உய்ய வழியேது என்ற பேருக்கு மாத்திரம்தான்ஒரு இரட்சக மனோபாவத்தில்அன்றுதொட்டு இன்று வரை சேவை ஆற்றுவது போன்றவொரு பாசாங்கில் காரியம் பார்த்தார்களே , பார்க்கிறார்களே ஒழிய நெஞ்சில் இருப்பது ஓரவஞ்சனை. அப்படி இல்லை என்றால் பறை அடித்த மேடையில் நான் குந்திப் பாடமாட்டேன் என்று ஒரு மாமி சூளுரைத்து சபை இறங்கிப் போவாளா?சென்னை லலித் கலா அகாதமியின் கலாச்சார பரிவர்த்தனை நிகழ்வொன்றில் கர்நாடக யட்சகானம் ஆடிய அய்யர் திரு. சிவப்ரகாஷ் அவர்கள் எங்களோடு ஓர் ஒப்பனை அறையை பகிர்ந்துகொள்ள பால் மாறிப் பிணங்கியதில் நாங்கள் ஒரு மதியம் முழுக்க சிற்றுந்து ஒன்றில் புழுங்கிச் செத்தோம் .

தமிழ் நவீன இலக்கியத்தில் கூத்துக்கலை குறித்த பதிவுகளுண்டா? சிறுபத்திரிகைகளின் ஆதரவு கூத்துக்கலைக்கு எவ்வளவு இருக்கிறது?

எனக்குத் தெரிந்தவரை யாத்ராவில் வந்த வெங்கட் சாமிநாதனின் மற்றும் செ . ரவீந்திரனின் கட்டுரைகள், அகரம் வெளியீடாக வந்த .முத்துசாமியின் அன்று பூட்டிய வண்டி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு மணல்வீட்டில் வந்த அருங்கூத்து தொகை நூற்பிரதி ஆகியன இலக்கியத் தளத்தில் கூத்துக் குறித்துப் பதிவுகளைச் செய்திருக்கின்றன.

இவற்றை விலக்கிப் பார்த்தால் பெரும்பான்மையான சிறுபத்திரிகைக் காரர்கள் போதைக்கு ஊறுகாயாகத்தான் கூத்துக்கலையைப் பாவிக்கிறார்கள். அவர்கள் ஆதரவு வெறும் தேங்காய் மூடிக் கச்சேரிதான் .

கூத்துக் கலையில் ஈடுபடும் பெண்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்களா ? அவர்களது நிலை எப்படியிருக்கிறது?

ரெகார்டு டான்ஸ் ஆடும் பெண்ணை நானூறு பேர்கள் பார்த்திருக்க நட்ட நடு அரங்கத்தில்லக்ஸ் சோப் கொடுத்து நிர்வாணமாக நீராடப் பணிக்கிறான் காசு கொடுக்கும் பன்னாடி . இப்படி கலைதொழிலில்எந்த கலையாக இருக்கட்டும்ஈடுப்படும் பெண்களுக்கு புறக்கணிப்பை மட்டுமல்ல வாழ்நாளில் மறக்க ஒண்ணாத அவமதிப்புக்களை நமது சமூகம் பரிசளிப்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .

ஆனால் கொங்குசீமை நிகழ்த்து வெளியில் கூத்தாடும் பெண்கள் அந்த அவக்கேட்டிற்க்கு ஆளாவதில்லை. இல்லையென்றால் நான்கு தலைமுறையாக கந்தாயீ, பூவாயி, பவுணாம்பா, லட்சுமி போன்ற கலைஞர்கள் தனித்து ஜமா வைத்துக் கூத்தாடியிருக்க முடியாது. இன்றளவில் கூத்தாடும் சத்தியவதி, கந்தம்மாள் ஆகியோர்களுக்கு இந்த மனக் குறைகள் இல்லை .

திருநங்கைகள் கூத்தில் பங்குபெறுவதுண்டா?

ஆம், கூத்தில் திருநங்கைகள் பங்குபற்றி சிறந்து விளங்கி வருகிறார்கள். தெருக்கூத்தில் திருநங்கைகளைப் பங்கேற்க வைப்பதில் முன்னோடியானவர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியார் அவர்களே! அவரது ஜமாவில் பங்கு பற்றிய ரேகா அவர்களைத் தொடர்ந்து ஒக்கிலிப்பட்டி சாமியாருடன் இயங்கிய அபிராமி, புவியரசி, ஆகியோருடன் கனகு அவர்களும் சுப்ரு வாத்தியாரிடம் கடந்த பத்தாண்டு காலங்களாக வேடங்களிட்டு ஆடி வருகிறார். ஒப்பு நோக்கும்போது திருநங்கையருக்கு ஆடவர் பெண்டிரைக்காட்டிலும் விஞ்சிய கலைத்தேட்டமும், நுகர்வும், உற்றுநோக்கி உள்வாங்கும் திறனும் இருப்பதை உணரலாம். மண்டோதரி, அதி வர்ணமாலை, துரோபதை, ஏலக்கன்னி போன்ற பெருங்கொண்ட கதைமாதர்களாக தோன்றும் கனகு தானதுவாகி பாத்திரத்தைக் கனம் பண்ணுவதோடு அவையைத் தனது பல்வேறு கோட்டுச் சித்திரங்கள், பண்பட்ட ஒயிலாக்கம் வழி நிரப்பித்தருகிறார்

வெளிநாட்டு ஆய்வாளர்கள் அடிக்கடி தமிழகம் வருவதும் கூத்தைக் குறித்து ஆய்வதும் போவதுமாக இருக்கிறார்களே, அதனால் அவரகளிற்கு நன்மையுண்டு.. கூத்துக்கு நன்மையுண்டா?

கூத்துப் பார்க்க வருபவனாவது நோட்டு குத்துவான்ஒரு துண்டு பீடி, வெற்றிலை சருகு கிடைக்கும். இந்த மாப்பிள்ளைகள் வலிக்குதாவலிக்குதா என்று ஓசியில் கொண்டி மாட்டுபர்கள்.

இன்றைக்குக் கூத்துக் கலைஞர்களின் தொழில் எப்படியிருக்கிறது, கூத்து அதையாடும் கலைஞர்களிற்கு சோறுபோடும் நிலையிருக்கிறதா?

கொங்கு மண்டலத்தில் கூத்து சடங்கு சார்ந்த ஒரு நிகழ்வாக இருப்பதால் மக்களிடம் பரந்துப்பட்ட ஆதரவைப் பெற்றுள்ளது. மார்கழி முதல் ஆடி வரை கூத்துக்கு இங்கே நிறைந்த சீஸன் . ஒவ்வொரு கலைஞனும் வருடத்திற்கு 150 முதல் 200 இரவுகள் கூத்தாடுகின்றான் . அவனது வருட வருமானம் சராசரியாக ஒன்றரை லட்சம், அவன் பத்து பேருக்குச் சோறு போடுவான் .கூத்து அவன் பரம்பரைக்கும் சோறு போடும் .

தமிழகத்தில் இளையவர்களிடையே கூத்துக்குப் பார்வையாளர்கள் உண்டா? இல்லாதவிடத்து கூத்துக் கலையின் நசிவு தவிர்க்க முடியாததுதானே? காலமாற்றத்தில் ஒட்டி கூத்துக் காலப்போக்கில் செத்துவிடுமல்லவா?

உங்கள் பிரதிகளை எத்தனை பேர் வாசிக்கிறார்கள் ? வாசகர்களுக்கு வயது பாகுபாடு உண்டா? இலக்கியம் செத்துவிடுமா?

நாளுக்கு இருநூறு பார்வையாளர்கள், ஆண்டுக்கு இருநூறு நிகழ்வுகள். கலைஞனும் கலை நுகர்வோனும் சலிக்காது சந்திக்கும் இந்த மக்கள் அரங்கக் கலைகள் சாகாதவை!

***

காலம் -மார்ச் 2014 இதழில் வெளியானது

1 thought on “வல்லிய காணூடகத்தை கலையாகப் பார்க்காமல் வேவாரமாகப் பார்க்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *