அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள்

அ.மார்க்ஸ் கட்டுரைகள்

ழப் போராட்டப் பின்னணியில் இறையாண்மை (sovereignty) குறித்த பேச்சுக்கள் இன்று தமிழ்ச் சூழலில் தலைகாட்டியுள்ளன. 1970களில், வங்கப் பிரச்சினையில் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தான்) இந்தியா தலையிட்டு ‘வங்கதேசம்’ உருவாவதற்கு வழி வகுத்ததுபோல புலிகளுக்கு எதிரான ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் தலையிட்டு (புலிகளின் தலைமையில்) தனி ஈழம் பெற்றுத் தரவேண்டும் என்கிற கோரிக்கையை இங்கேயுள்ள புலி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தபோது அரசு தரப்பில் இறையாண்மை குறித்த கதையாடல் முன் வைக்கப்பட்டது. மற்றொரு நாட்டின் இறையாண்மையில் நாம் தலையிட இயலாது என்றது மத்திய அரசு. மாநில அரசின் குரலும் அத்துடன் இசைந்தது. வங்கப் பிரச்சினை நிகழ்ந்த காலம் வேறு, இன்றைய சூழல் வேறு என்றும் பதிலளிக்கப்பட்டது.


இந்திய அரசு இலங்கையில் நடைபெற்ற சமீபத்திய போரில் தலையிடாததற்கான காரணங்கள் பல.அவற்றைப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. அரசின் வாதத்தில் ஓரம்சம் மட்டும் நம் கவனத்திற்குரியது. ‘அரசு’ (state) மற்றும் ‘இறையாண்மை’ குறித்த நவீனத்துவக் (modernity) கருத்தாக்கங்கள் பெரிய அளவில் மாறியுள்ளதையும், இன்றைய நிலையைப் புரிந்துகொள்ள புதிய வரையறைகள் தேவை என்பதையும் இன்றைய அரசியல் – தத்துவச் சிந்தனையாளர்கள்
ஏற்றுக்கொண்டுள்ளனர். அன்டோனியோ நெக்ரியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிஷேல் ஹார்ட்டுடன் அவர் இணைந்து எழுதிய ‘EMPIRE’ (சாம்ராஜ்யம் / பேரரசு) என்னும் நூல் இவ்வகையில் முக்கியமானது. 1970க்குப் பிந்திய கால கட்டத்தில், குறிப்பாக உலகமயச் சூழலில், உலக அளவிலான மூலதன ஆதிக்கத்தின் கீழ் நாடுகளின் இறையாண்மை உட்செரிக்கப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நாடுகளின் இறையாண்மை ஒரு வகையில் சுருங்கிக்கொண்டே வரும்போது, இன்னொரு பக்கம் உலக அளவிலான ஒரு அதிகார வலைக்குள் அது கொண்டுவரப்படுகின்றது.

இறையாண்மையுள்ள அரசின் தோற்றத்தைத் தனி உடமையின் தோற்றத்தோடு இணைத்துச் சொல்வது மார்க்சீயர்களின் வழக்கம். ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாக அரசை அவர்கள் அணுகுவர். புராதன வடிவில் இறையாண்மையுள்ள அரசு என்கிற நிறுவனம் சுமார் 5 ஆயிரம் ஆண்டு காலமாக இருந்து வந்தபோதும் தேசிய அரசு, அரசின் இறையாண்மை என்கிற நவீன கருத்தாக்கங்கள் அறிவொளிக் காலத்துடன் உருவாயின. இன்றைய மேற்கத்திய அரசுகளையும், அவற்றின் வடிவில் உருவாக்கப்பட்ட பிற அரசுகளையும் பொதுவாக ‘வெஸ்ட்பாலிய அரசுகள்’ என்பர். பால்டிக் கடலை ஸ்வீடனின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தும், ரைன் நதியின் மேற்குக் கரையில் ஃப்ரான்ஸின் எல்லையை வரையறுத்தும் உருவான வெஸ்ட்பாலியா உடன்படிக்கை (1648) அரசின் இறையாண்மை குறித்த நவீனத்துவ வரையறை ஒன்றை உருவாக்கியது. மறுமலர்ச்சிக் கால சிந்தனையாளர்களை
ழீன்போடின், தாமஸ் ஹோப்ஸ் முதலானோரின் சிந்தனைகளின் அடிப்படையில் பகுத்தறிவு வாதம், எதார்த்த வாதம் ஆகிய நவீனத்துவ அணுகல் முறையினடியாக அரசின் இறையாண்மை கட்டமைக்கப்பட்டது.

தனது ஆட்சிப் பரப்பைச் சிதையாமல் வைத்துக் கொள்ளுதல் (territorial, integrity) எல்லையைப் பிறர் கடந்து வராமல் தடுத்தல் (border unviolability), பிற (மதம் முதலான) அனைத்து நிறுவனங்களுக்கும் மேலாக அரசின் உரிமைகள் அமைதல் ஆகியன இறையாண்மையின் அவசியக் கூறுகளாயின. உள்நாட்டில் உரிய சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துதல், சட்ட ஒழுங்கையும், பாது காப்பையும் நிலைநாட்டுதல், எல்லைகளைப் பாதுகாத்தல் என்பன அரசின் கடமைகள். புராதன அரசுகளிலும் கூட இத்தன்மைகள் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தபோதிலும் இத்தனை இறுக்கமாகவும், துல்லியமாகவும், பகுத்தறிவு பூர்வமாகவும் (instrumental), இறையாண்மை வரையறுக்கப்பட்டதில்லை. எடுத்துக்காட்டாக நிலப்பிரபுவத்துவ அரசுகளின் நாட்டு எல்லைகளைக் குறிப்பிடலாம். நிலப்பிரபுவத்துவ அரசுகளின் அதிகார மையங்களிலேயே செறிந்திருந்தது. மையத்திலிருந்து விலக விலக அங்குள்ள பிரதேசங்கள் ஒப்பீட்டளவில் சுயேச்சையாக விளங்கின. உறுதியான தேச எல்லை நிலையான படை, விரிந்த அதிகாரவர்க்கம், ஒழுங்கமைக்கப்பட்ட சிவில் சமூக வெளிகள் என நவீன அரசுகள் அதிகார இறுக்கம் பெற்றன.

நவீன அரசுகளின் பொதுத் தன்மைகளாக இவை இருந்தபோதும் இவ்வரசு வடிவங்களிலும், அரசு குறித்த அணுகல் முறைகளிலும் இவற்றுக்கிடையே வித்தியாசங்கள் இல்லாமலில்லை. மேற்கத்திய முதலாளிய அரசுகள் தம்மை ‘மக்கள் நல அரசுகள்’(welfare states) எனக் கூறிக் கொண்டன. மார்க்சீயர்கள் சோசலிச அரசுகள் பற்றிப் பேசினர். சோவியத் யூனியனும், அதன் செல்வாக்கில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த அரசுகள் சோசலிச அரசுகளாக முன்வைக்கப் பட்டன. இந்தக் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுமையாக வெஸ்ட்பாலியப் பொருளின் இறையாண்மையுடன் திகழாத போதும் அவற்றின் தேச எல்லைகள் முதலியன உறுதியாக வரையறுக்கப் பட்டிருந்தன.

ஓர் அரசின் இறையாண்மையுடன் கூடிய அதிகாரம் அதற்கு அளிக்கப்படும் சட்டப்பூர்வமான அங்கீ காரத்தின் மூலம் (legitimacy) உருவாகிறது. இந்த அதிகாரத்தின் பின்புலம் எதுவாக இருந்த போதிலும் மக்களின் ஆதரவு இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குடியரசாயின் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுதல், முடியரசாயின் வாரிசுரிமை என்கிற வடிவத்தில் உருவாகும் அரசுகளின் இருப்பு ஏதோ ஒரு வகையில் மக்களின் ஆதரவை நம்பியே உள்ளது. ‘All Governments rest on openion’ என மேடிசன் கூறுவதன் பொருள் இதுவே. இந்த ஆதரவை இழக்கும்போது தன் அதிகாரத்தைத் தக்கவைக்க அது வன்முறையை (violence) நாடுகிறது. சற்றுப் பின் இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

புராதன காலம் தொடங்கி நவீனத்துவம் வரை இறையாண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மேற்குறித்தவாறு அமைந்த போதும் இறையாண்மைக் கான ஏதேனும் ஒரு பொதுவான கூறை எல்லாக் காலங்களிலும் அடையாளம் காண இயலுமா? கார்ல் ஸ்மிட்டின் (1888-1985) இறையாண்மை குறித்த புகழ்பெற்ற வரையறை இக்கேள்விக்குப் பதிலாக அமைகிறது. “நெருக்கடி நிலையை அறிவிக்கும் உரிமையைப் பெற்றிருப்பதே இறையாண்மை” என்பதே ஸ்மிட்டின் அவ்வரையறை. இன்று நம்முடன் வாழும் முக்கிய சிந்தனையாளரான


ஜியார்ஜியோ அகம்பன் இதே அடிப்படையில் ‘இறையாண்மை’ ‘நெருக்கடி நிலை அரசு’ (State of Exception) முதலான கருத்தாக்கங்களை விரித்துரைக்கிறார். நெருக்கடி நிலை அறிவிப்பு என்பது (அரசியல்) சட்டரீதியாக மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை நிறுத்திவைக்கும் உரிமையை அரசு எடுத்துக் கொள்வதே. ‘அரசின் காரணங்களுக்காக’ (reason de estat) இது மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறுதல் போதுமானது. சாதாரணச் சட்டங்களின் அடிப்படையில் அரசாள இயலவில்லை எனக் கூறி அசாதாரண (exception) நிலையை, அதாவது நெருக்கடி நிலையை அறிவிக்கும் இந்த உரிமைதான் அரசின் உண்மையான இறையாண்மையாக இருந்துள்ளது. புராதன ரோமானியக் குடியரசிலேயே இவ்வாறு நெருக்கடி நிலை அறிவிக்கும் உரிமையை அரசு கொண்டிருந்தது என்கிறார் அகம்பன். ‘இயூஷியம்’ என அதற்குப் பெயர். ஆக, சொந்த மக்களின் மீது வரம்பற்ற அதிகாரத்தைச் செலுத்தக் கூடிய, மக்களின் மிக அடிப்படையான அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொள்கிற அரசுரிமையே இறையாண்மையின் நடைமுறை வடிவமாக இருந்து வந்துள்ளது. இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்தபோது (1975-78) குடிமக்களுக்கு உயிர் வாழும் உரிமை கிடையாது என அரசு வாதிட்டதும், அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதும் நினைவிற்குரியது.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பெற்ற அனுபவங்களினூடாக மக்கள்மீதான அரசுகளின் இறையாண்மை அத்துமீறுவதைக் கண் காணித்துத் தடுக்கும் பொருட்டு உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், ஹேக் உடன்பாடு, ஜெனிவா உடன்பாடு, பன்னாட்டு மனித உரிமை ஆணையம், பன்னாட்டு நீதிமன்றம் முதலியன உருவாக்கப் பட்டபோதிலும் இவை அனைத்தும் இவ்வுடன்பாடுகளை மீறும் நாடுகளின்மீது அதிகாரங்களைச் செலுத்த இயலாத அமைப்புகளாகவே இன்றளவும் உள்ளன. இந்த உடன்பாடுகள் பலவற்றில் கையெழுத்திடுவது ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு நிபந்தனையாக்கப் படவில்லை. கைழுத்திட்டபோதும் அவற்றை மீறு வதை அரசுகள் வழக்கமாகக் கொண்டுள்ளதை அறிவோம்.
II
அரசு மற்றும் இறையாண்மை குறித்த இந்த அடிப்படைப் புரிதல்களோடு இந்தக் கருத்தாக்கங் களில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்வோம்.
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகளாவிய நான்கு மாற்றங்கள் குறிப்பிடத்தக்கன. அவை.
(அ) இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த காலனிய நீக்கங்கள்: இந்தியா முதலான நாடுகள் நேரடியான காலனியப் பிடியிலிருந்து நழுவி சுதந்திர அரசுகளாயின. இதையொட்டி உலகளவில் தேச அரசுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 1946ல் 66 ஆக இருந்த உலக நாடுகளின் எண்ணிக்கை 1964ல் 122 ஆகியது.
(ஆ) 1984க்குப் பின் ஏற்பட்ட Balkanisation: சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தகர்வு, பெர்லின் சுவர் தகர்ப்பு ஆகியவற்றை ஒட்டி தேச எல்லைகள் மீள் வரைவு செய்யப்பட்டு ஏராளமான புதிய நாடுகள் உருவாயின. 1964இல் 122 ஆக இருந்த உலக நாடுளின் எண்ணிக்கை 1994ல் 187 ஆகியது.
(இ) 1990களில் தொடங்கி அதிவேகமாகச் செயற் படுத்தப்படும் உலகமய நடவடிக்கைகள்: இத்துடன் கூடிய உலக வர்த்தக ஒப்பந்தம் முதலியன உலகளாவிய பொருளாதாரம் (Global Economy) ஒன்றைக் கட்டமைத்து ‘தேசியப் பொருளாதாரம்’ (National Economy) என்பதைப் பொருளிழக்கச் செய்துள்ளன. இத்துடன் இணைந்த தகவல் தொடர்புப் பெருக்கம், மூலதன இயக்கம், பணிசார் உற்பத்தி (Service Production) ஆகியவற்றினூடாக அரசுகளின் இறையாண்மை பெரிய அளவில் குறுக்கப்பட்டது.
(ஈ) செப்டம்பர் 11, 2001க்குப் பின் உருவாக்கி மிக இறுக்கத்துடன் கடைபிடிக்கக் கூடிய தேசியப் பாதுகாப்பு (National Security) நடவடிக்கைகள் மற்றும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ (War on terror) என்கிற சொல்லாடல் விளைவித்துள்ள பாரதூரமான மாற்றங்கள்.

  • இவை குறித்துச் சுருக்கமாகக் காண்போம்.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய இரு துருவ உலகம், பனிப்போர்க் காலம் ஆகியவற்றினூடாக சர்வதேச அளவில் ஓர் உறுதிநிலை (stability) ஏற்பட்டிருந்தது. ‘உறுதிநிலை’ (stability) என்பதன் பொருள் உறுதிநிலை என்பது மட்டுமே. அமைதி அல்லது சுபிட்சம் முதலான கூடுதலான பொருள்களுடன் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. 1989க்குப் பிந்திய ஒரு துருவ உலகம் இந்தப் பன்னாட்டு அதிகார அமைப்பைத் (International Power System) தகர்த்தது. சுமார் நாற்பதாண்டு காலமாகக் கட்டமைக்கப்பட்டிருந்த சர்வதேச ஒழுங்கு சிதைந்து புதிய நாடுகள் உருவாயின. ஐ.நா. அவை உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 30 சதம் அதிகரித்தது.


    நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நிற்கவில்லை. பனிப்போர் முடிவை ஒட்டி சர்வதேச அளவில் ஆயுதச் சந்தை விரிவடைந்தது. ஏராளமான உள்நாட்டுப் போர்கள், ஆயுதப் போராட்டங்கள் உருவாயின. இவற்றினூடாகப் பொருளாதார வளர்ச்சியிலும் சட்ட ஒழுங்கு நிலையிலும் ‘தோற்றுப் போன நாடு’களின் (failed state) எண்ணிக்கையும் அதிகரித்தன என்கிறார் எரிக் ஹாப்ஸ்வாம். மிகப் பெரிய அளவில் படுகொலைகள், இன அழிப்புகள், இனத் தூய்மையாக்கச் செயற் பாடுகள் (ethnic cleansing) மேற்கொள்ளப்பட்டன. ருவாண்டா, சூடான், டிரான்ஸ் காகேசியா, மத்திய கிழக்கு, போஸ்னியா, தென் கிழக்கு ஆசியா முதலான பகுதிகள் இவ்வகையில் மிகப் பெரிய அழிவுகளுக்குள்ளாயின. ருவாண்டாவில் மட்டும் படுகொலை செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சம் பேர்.
    ஐ.நா. அவையின் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) 2005ஆம் ஆண்டு அறிக்கையின்படி இடம் பெயர்க்கப்பட்டிருந்த அகதிகளின் எண்ணிக்கை 20.8 மில்லியன் பேர்கள். இவர்கள் அனைவரும் மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தோர். இதே காலகட் டத்தில் வெளியிடப்பட்ட Church World Service என்கிற அமைப்பின் அறிக்கையின்படி (Statistic of uprooted people, Dec 2005) இடம்பெயர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 மில்லியன்.
    உள்நாட்டுக் கலவரங்கள், சிவில் யுத்தங்கள் தவிர மேற்சொன்னவாறு தோற்றுப் போனதாக அறிவிக்கப்பட்ட நாடுகளில் பயங்கரவாதத்திற் கெதிரான யுத்தம் என்ற பெயரில் சர்வதேச ஒப்புதலுடன் அன்னியத் தலையீடுகள் (External intervention) மேற்கொள்ளப்பட்டன. இரு முறை மேற்கொள்ளப் பட்ட ஈராக் போர், ஆப்கன் போர் முதலியன இந்த வகையில் குறிப்பிடத்தக்கன. உலகளவில் மேற்கு ஆசியா, மத்திய ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளே அன்னியத் தலையீட்டிற்கு இலக்காயின.


    III
    உலகமயம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து வேறுபல இடங்களில் விரிவாக எழுதியுள்ளேன். இங்கே அவற்றைத் தவிர்த்து ஒரு சில அம்சங்களை மட்டும் கவனத்தில் எடுப்போம். மூலதனம், தொழில் நுட்பம், உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்ட பரிமாற்றங்கள் அள விற்கு அதற்கு இணையாக மனித இயக்கத்தை மேலை நாடுகள் அனுமதிக்காத போதும் குறிப்பிட்ட அளவிற்கு அதுவும் அதிகரித்துள்ளது. இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஆண்டொன்றிற்கு விமானப் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 2600 மில்லியனாக இருந்தது. இன்று அது மேலும் அதிகரித்துள்ளது. 1998-2001 காலகட்டத்தில் மட்டும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் சென்று நின்றவர்களின் (immigrants) எண்ணிக்கை 3.6 மில்லியன். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நின்றவர்கள் 4.5 மில்லியன். உலகின் பெரு நகரங்கள் பலவும் பல்லினச் சமூகங்களின் வாழிடங்களாக மாறியுள்ளன.
    தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது வேர்களை முற்றாக அறுத்துக்கொள்ளாமல் சொந்த நாடுகளுடனான தொடர்புகளைப் பேணுவது இலகுவாகியுள்ளது. இன்று பிரான்ஸிலிருப்பவர்கள் உலகின் பல நாடுகளுக்கு Land lineதொலைபேசிகளில் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். எரிபொருள் விலை அதிகமானாலும் விமானப் பயணம் ஒப்பீட்டளவில் மலிவாகியுள்ளது. பணம் அனுப்புதல் மிக எளிதாகியுள்ளது. வட ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், மத்திய அமெரிக்கா, கரீபியன் முதலான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 முதல் 12 சதம் வரை இவ்வாறு வெளியில் நிற்பவர்கள் அனுப்பும் பணம் பங்கு வகிக்கிறது. ஜோர்டான், லெபானான் முதலான நாடுகளில் இது இன்னும் அதிகம்.


    இரட்டைக் குடியுரிமை (dual citizenships) அளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் (1996-2006) இரண்டு மடங்காகியுள்ளது. இந்தியா உட்பட 93 நாடுகள் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளன. தேசிய உணர்வு நிலையில் இவை ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைப் ‘பன்மைத் தேசிய நிலை’ (plural nationality), ‘தூர தேசிய தேசியம்’ (long distance nationalism) என்கிற கருத்தாக்கங்களால் குறிப்பிடப்படுகின்றன. பன்மைத் தேசிய உணர்வு குடிமக்களின் தேசிய உணர்வு சார்ந்த விசுவாசத்தைக் குறைத்துள்ளது.


    இன்னொரு பக்கம் இது போன்று வந்து நிற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவதன் விளைவாக ஆங்காங்கு உள்நாடு களில் உருவாகும் இனவெறுப்பும், இனவெறுப்பு சார்ந்த அமைப்புகளின் தோற்றமும் அமைகின்றன. இந்தியர்கள் மீதான ஆஸ்திரேலியர்களின் தாக்குதல் ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. இதனூடாக அங்கேயே வாழ நேர்ந்த புலம்பெயர்ந்தோர் அங்கே ஒட்டவும் இயலாமல், அதே நேரத்தில் ஒப்பீட்டளவிலான தமது சொகுசு வாழ்க்கையைத் துறக்கவும் இயலாமல் உளவியற் சிக்கலுக்குள்ளாகின்றனர். இதனால் ஏற்படும் மனச் சோர்வை ஈடுகட்ட ‘தூர தேசத் தேசியம்’ இவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைகிறது. தமது தாயகப் பற்றை நாட்டிக்கொள்ள தாயகங்களில் உருப்பெறும் வலதுசாரி அடையாள அரசியல் இயக்கங்களுக்குப் பெரிய அளவில் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கின்றனர். இவற்றில் பல பாசிச இயக்கங்களாக இருப்பது குறித்து இவர்களுக்குக் கவலையில்லை. ‘திண்ணை’ இணையதளம், ‘வார்த்தை’ இதழ் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இத்தகைய தூர தேசத் தேசிய மனநிலையைப் புரிந்துகொள்வது சிரமமல்ல.
    இப்படியான ஒரு வலதுசாரி பிம்பத்தைக் கட்டமைத்து விடாமல் தமது தூர தேசத் தேசியத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் மனிநிலையின் இன்னொரு வெளிப்பாடுதான் வெளிநாடுகளில் குடியேறியுள்ள நமது தமிழ் அறிவுஜீவிகள் பலர் இணைய தளங்களினூடாக திடீரென வெளிப்படுத்தி வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலை.


    IV
    உலக மயம், தேச அடையாளம், இனவெறுப்பு ஆகியவற்றிற்கு இடையேயான இயங்கியல் உறவுகளினூடாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. நெக்ரி சொல்வது போல உலக மூலதன ஆதிக்கத்தினூடாக இவை வெளிப்பாடு காண்கின்றன.
    விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம் இங்கே குறிப்பிடத்தக்கது. உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இதுகாறும் தேசிய அடையாளங்களுடனேயே நடைபெற்றன. ‘இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி’ என்பது போல. ஆனால் இன்று உருவாகியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தேசிய அடையாளத்தைத் தாண்டிய ஒன்றாக அமைவதும், இதற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருப்பதும் சிந்திக்கத்தக்கது. கார்ப்ப ரேட்கள் உருவாக்கும் இந்த அணியில் பன்னாட்டு ஆட்டக்காரர்கள் பங்கு பெறுகின்றனர். தேசிய அடையாளத்திற்கு அப்பாற்பட்டு பெரு நகர் சார்ந்த பெயர்களில் அடையாளப்படுத்தப்படுகிற இவ்வணிகளுக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய ரசிகர் கூட்டத்திடம் விளையாட்டு சார்ந்த பழைய தேசிய விசுவாசம் பெரிய அளவில் பலவீனமடைந்துள்ள நிலையைக் காணலாம். கிரிக்கெட்டுக்கு முன்னதாகக் கால்பந்தாட்டத்தில் இந்நிலை உருவாகிச் செயல்பட்டு வருகிறது. ஒரு கணக்கீட்டின்படி 1980க்குப் பின் ஐரோப்பிய அணிகளில் விளையாடிய ஆப்பிரிக்கக் கால்பந்தாட்டக்காரர்களின் எண்ணிக்கை 3 ஆயிரம்.
    விளையாட்டுத் துறையில் மட்டுமல்லாமல் இன்று பன்னாட்டளவில் உருவாகி வரும் இசை, திரைப்படம் முதலியவையும் மரபு சார்ந்த தேசிய விசுவாசத்தைப் பலவீனப்படுத்தியுள்ளன. மத, இன, மொழி அடையாளங்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வரும் வலதுசாரி பாசிச இயக்கங்களுக்கு இந்நிலை ஒரு சவாலாகவே அமைகிறது.


    V
    “செப்டம்பர் 11க்குப் பின் உலகம் மாறிவிட்டது” என்கிற புஷ்ஷின் குரல் மீது நமக்கு எத்தனை வெறுப்பு இருந்தபோதிலும் அதிலுள்ள சில உண்மைகளை, அவை எத்தனை அநீதியான போதிலும் நாம் கவனிக்கத் தவறலாகாது. தேசப் பாதுகாப்பு, பயங்கர வாதத்திற்கு எதிரான யுத்தம் என்பன இன்று உலக அரசியலின் பிரதான அம்சங்களாகிவிட்டன. இந்த அடிப்படையில் சென்ற நூற்றாண்டுப் போர் அனுபவங்களினூடாக உருவாக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் அடிப்படை யிலான பல உடன்பாடுகள் இன்று அறிவிக்கப்படாமலேயே காலாவதியாக்கப் பட்டுள்ளன. மிக அடிப்படை யான மனித உரிமைகள் பலவற்றையும் ரத்து செய்கிற தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் உலக நாடுகள் அனைத்திலும் இயற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி என்பவன் ‘டிக்’ ஒலி எழுப்பிக் கொண்டுள்ள ஒரு வெடிகுண்டு என்கிற சொல்லாடலினூடாக அடிப்படை மனித அறங்களை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு சித்திரவதைச் செய்வதைச் சட்டபூர்வ மாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதி வழங்கு நெறி முறையின் அடிப்படைகளாகக் கருதப்படுகிற,
    1) குற்றம் சுமத்தும் அரசே குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்புடையது,
    2) ஐயத்திற்கிடமற்ற முறையில் குற்றம் நிரூபிக்கப்படாதவரை குற்றம் சுமத்தப்பட்டவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும்,
    3) குற்றத்தில் சிக்க வைப்பதற்குரிய கேள்விகளுக்கான பதில்களை விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்டவர் சொல்லாமலிருக்கும் உரிமை,


    இம்மூன்றையும் ஒத்தி வைக்கும் நடைமுறைகள் இன்று மேற்கொள்ளப் படுகின்றன.
    எந்த ஒரு தேச அரசும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டித் தம் மக்கள்மீது இத்தகைய அடக்குமுறைகளைச் சட்டபூர்வமாகவும் உலக சம்மதத்துடனும் மேற்கொள்ளக்கூடிய நிலை இன்று உருவாகியுள்ளது. உரிமைகளுக்காகப் போராடும் எந்த ஒரு மக்கள் இயக்கத்தின் மீதும், உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்களுடன் பயங்கரவாத முத்திரையை ஒரு அரசு பதிக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக உள்ளது. இந்த அடிப்படையில் அது தன்னை வலுப்படுத்திக்கொள்ள நெருக்கடி நிலை அறிவிப்பைச் செய்வதும், பாதுகாப்புச் சட்டங்களை இயற்றுவதும், ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதும், படை பலத்தைப் பெருக்கிக் கொள்வதும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு மாறாகவும் சிவிலியன்களின் அழிவைப் பற்றிக் கவலை கொள்ளாமலும் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் நடத்துவதும் இன்று உலக ஒப்புதலுடன் மேற்கொள்ளக் கூடிய செயல்களாகிவிட்டன.
    பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த இயலாத நாடுகள் தோற்றுப்போனவையாக அறிவிக்கப்பட்டு அவற்றின் மீது வெளித் தலையீடு செய்வதும் இன்று நியாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் அடுத்த நாடு தலையிடக் கூடாது என்கிற வெஸ்ட்பாலிய இறையாண்மைக் கோட்பாடு இன்று இவ்வகையில் காலாவதியாகிவிட்டது. தோற்றுப்போன நாடாக இன்னும் அறிவிக்கப்படாத போதும் பாகிஸ்தான் மீது புஷ்ஷின் விமானங்கள் 18 முறை அத்துமீறி நுழைந்து குண்டுகளை வீசியது நினைவிருக்கக்கூடும். sovereignty என்பதற்குப் பதிலாக selective sovereignty என்றொரு கருத்தாக்கத்தை புஷ் தனது இறுதி ஆட்சிக் காலத்தில் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது எல்லா நாடுகளின் இறையாண்மையையும் அங்கீகரிக்கத் தேவையில்லை. தேர்வுசெய்யப்பட்ட நாடுகளின் இறையாண்மையை மட்டும் அங்கீகரித்தால் போதுமானது. தோற்றுப்போன நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை.


    அதேநேரத்தில் ஒரு நாடு தன்னைத் தோற்றுப் போகாத நாடாக வைத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளுக்கும் சர்வதேச ஒத்துழைப்பு உண்டு.
    தவிரவும் இன்று பேராயுதங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புப் பெருக்கம், உலகமயச் செயற்பாடுகள் ஆகியவற்றினூடாக ‘பயங்கரவாதமும்’ உலகமயமாகியுள்ளது. (எ.டு: அல் குவேதா). பயங்கரவாதம் எல்லை தாண்டுவதாக உள்ளது. எனவே பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமும் உலகளா வியதாக இருப்பது தவிர்க்க இயலாது என்றொரு தர்க்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பயங்கரவாதத்திற் கெதிரான யுத்தத்தில் நாடுகளுக்கிடையே பரஸ்பர உதவி, உளவுத் தகவல்கள் பகிர்வு, கூட்டு இராணுவப் பயிற்சி, ஆயுத உதவி, பாதுகாப்புக் கூட்டமைப்புக்களை உருவாக்குதல் என்பன இன்று முக்கியப் பங்கு வகிக்கின்றன.


    ஒரு இயக்கம் பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்படும்போது அதன் பின்னுள்ள அரசியல் நியாயங்கள் முற்றாகப் புறந்தள்ளப்படுகின்றன. இவ்வகையில் பயங்கரவாத முத்திரை இன்னொரு பக்கம் ஓர் அரசியல் நீக்கச் செயற்பாடாகவும் அமைகிறது. எல்லாவிதத் ‘தீவிரவாத’ மற்றும் ‘பயங்கரவாத’ நடைமுறைகள் மற்றும் இயக்கங்களுக்குப் பின்னுள்ள அரசியல் நியாயப்பாடுகள் முற்றாகப் புறந்தள்ளப்படுகின்றன.


    VI
    தொகுத்துக் கொள்வோம்: சமீபத்தில் ஏற்பட்டுள்ள இந்நான்கு மாற்றங்களின் பின்னணியில் அரசு, இறையாண்மை குறித்த வெஸ்ட்பாலிய வரையறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிப் பேசிக் கொண்டுள்ளோம். மூலதன இயக்கம், வணிக நியதிகள், குடிப் பெயர்வு (, மனித இயக்கம், கலாச்சார மாற்றங்கள், தகவல் தொடர்புப் பெருக்கம் முதலான உலகமயப் பொருளாதாரச் செயற்பாடுகளினூடாகத் தேச அரசின் இறையாண்மை குறுக்கப்பட்டுள்ளது. பெனடிக்ட் ஆன்டர்சன் சொன்னதுபோல 20ஆம் நூற்றாண்டின் அடிப்படை அடையாள ஆவணம் பிறப்புச் சான்றிதழ் என்றால் 21ஆம் நூற்றாண்டின் அடிப்படை ஆவணமாகக் கடவுச்சீட்டு (Passport) அமைகிறது.ஆனால் இந்த அம்சத்தை மிகைப்படுத்த தேச அரசுகளுக்கே இனி காலமில்லை. தேச எல்லைகளுக்கு இனி பொருளில்லை, அரசு உதிர்வது கம்யூனிசத்தால் சாத்தியமாகாமற் போயினும் உலக மயம் அதைச் சாதிக்கப் போகிறது எனக் கூறியவர்களின் ஆருடம் இன்றளவிற்கும் நிறைவேறவில்லை. உடனடி எதிர்காலத்திலும் அதற்குச் சாத்தியமில்லை. ஒரு பக்கம் இறையாண்மை பலவீனப்பட்டுக்கொண்டே போகும் நிலையில் இன்னொரு பக்கம் அரசுகள் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டும் உள்ளன. உலகமயச் சூழலில் சோசலிச அரசுகள் சாத்தியமில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், மக்கள் நல முதலாளிய அரசுகளும் (Wellfare state) இன்று சாத்தியமில்லை என்பதே நிலைமை. மக்கள் நலப் பணிகள் இன்றைய அரசுகளின் கடமையல்ல; தேசப் பொருளாதாரத்தை நிர்வகிப்பது கூட அரசின் முக்கியப் பணியல்ல. மாறாகச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, எவ்வகையிலும் தன்னை ஒரு தோற்றுப்போன நாடாக ஆக்கிக்கொள்ளாதிருப்பது ஆகியனவே அதன் பணி. அந்த வகையில் அது தனது எல்லைகளைப் பாதுகாத்துக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. சட்டம் ஒழுங்கு என்பதை வலுப்படுத்திக்கொள்ள அது எதையும் செய்யலாம். இராணுவத்தை வலுப்படுத்தலாம்; நவீனப்படுத்தலாம். நிதி ஒதுக்கீட்டில் பெரிய அளவை இத்திசையில் திருப்பிவிடலாம். எனவே தன்னாட்டு மக்களுக்கு எதிரான நிலையில் அரசுகள் மேலும் வலுவாகியுள்ளன.


    ஆக பிரச்சினை மிகவும் சிக்கலானது. புதிய சூழல்கள் வெறுமனே இறையாண்மையுள்ள அரசுகளைப் பலவீனப்படுத்திவிட்டது என்றோ, வெறுமனே வன்முறைக் கருவி என்கிற வகையில் அரசுகள் மேலும் பலம் அடைந்துவிட்டது என்று மட்டுமோ நாம் எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளக் கூடாது.
    வலுவான பெரு நாடுகளுக்கு இடையில் சிக்குண்ட சிறு நாடுகள் என்றைக்கும் முழு இறையாண்மையுடன் விளங்கியதில்லை. எனினும் மாறியுள்ள உலகச் சூழலில் சர்வதேச ஒப்புதலின்றி எந்த ஒரு வலுவான நாடும் தன்னருகேயுள்ள சிறிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்துவிட இயலாது என்பதற்கு சதாம் ஹூசேனின் குவைத் ஆக்கிரமிப்பு ஒரு எடுத்துக்காட்டு. சிறிய நாடுகள் மாறியுள்ள உலகச் சூழலைச் சரியாகக் கணக்கிலெடுத்துக் கொண்டு சர்வதேச அரசியல் களத்தில் காய்களைச் சரியாக நகர்த்தும் பட்சத்தில் அவை தன்னுடைய இறையாண்மையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இலங்கை ஓர் எடுத்துக்காட்டு. தான் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை’ நடத்துவதை சர்வதேசச் சமூகத்தின் முன் அது நிறுவிக் காட்டியது. இந்த முயற்சியில் ராஜபக்சேவுக்குப் பெரிய அளவில் விடுதலைப் புலிகள் ஒத்துழைத்தனர். 30 ஆண்டு கால யுத்தத்தில் இம்முறைதான் 36 நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடைவிதித்தன. புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தின் விளைவாகத் தடை விதிக்க மறுத்திருந்த கனடாவும், ஐரோப்பிய யூனியனும் லக்ஷ்மண் கதிர்காமரைப் புலிகள் கொன்றதற்குப் பின் தடை விதித்தன.


    தமிழ்நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகளின் பின்னணியில் தனிப் பெரும்பான்மை பலமற்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இலங்கை அரசுக்கு வெளிப்படையான இராணுவ உதவிகளைச் செய்ய முடியாமற் போனபோது அந்த இடத்தை சீனாவும் பாகிஸ்தானும் பூர்த்தி செய்தன. ஈரான் வட்டியின்றிக் கடன் கொடுத்தது. ஜப்பான் பிற உதவிகளைச் செய்தது. இவற்றிற்கு ஈடாக கடல் வளம், கடல் வழிப் பாதுகாப்பு ஆகிய நிலைகளில் ஒரு முக்கியமான புவியியல் நிலையில் அமைந்துள்ள இலங்கை தனது சந்தையை இந்நாடுகளுக்கும் திறந்துவிட்டது. ஆக, பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் ஒன்றை வெற்றி கண்ட களிப்போடு அது உலகின் முன் நிற்கிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சர்வதேச அளவில் கொடுத்த அழுத்தங்கள், நடத்திய இயக்கங்களின் விளைவாக அவ்வவ் நாட்டு அரசுகள் ரொம்பத் தாமதமாகவும், ரொம்ப மெலிதாகவும் மட்டுமே ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தன. சுமார் 3 லட்சம் தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப்புலிகள் நிறுத்தி வைத்திருந்த உண்மையை உலகின் முன் யாராலும் மறைக்க இயலவில்லை. இதன் விளைவாகவே ராஜபக்சே அரசு நடத்திய இனப்படுகொலை சர்வதேச அரசியலகராதியில் ‘இனப்படுகொலை’யாக இடம் பெற இயலாமலும் போனது. மக்கள் மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதனாலேயே ‘நியூரம்பர்க்’ மாதிரியிலான விசாரணை ஒன்றிற்கும் இன்று வழியில்லாமற்போயுள்ளன. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பகைமறப்புச் செயற்பாடுகள் ஒன்றே இன்று இலங்கையில் காரிய சாத்தியமாக உள்ளது.


    VII
    எனில், ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லையா என்கிற கேள்விக்குள் புகுமுன் தேசியக் கட்டமைப்பிற்குச் சமீப கால மாற்றங்களினூடாக ஏற்பட்டுள்ள இன்னொரு சவாலைக் காண்போம்.
    சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்பும், அதையொட்டி மார்க்சியக் கருத்தியலுக்கு ஏற்பட்ட பின்னடைவின் ஊடாகவும் இங்கே ‘வர்க்கப் போராட்டங்களின் காலம் முடிந்துவிட்டது’ முதலான குரல்கள் முதலாளிய அறிஞர்களால் எழுப்பப்பட்டன. வர்க்கங்கள் இருக்கும்வரை வர்க்க முரண்களும் அதன் விளைவான போராட்டங்களும் நிற்கப் போவதில்லை. எனினும் இந்த முரண்கள் வெளிப்படும் வடிவங்களில் சில மாற்றங்கள் இன்று ஏற்பட்டுள்ளன. இதுகாறும் ஒடுக்கப்பட்டிருந்த பல்வேறு அடையாளங்களும் இன்று விகசித்து வெளிப்படத் தொடங்கியுள்ளன. 1990 களில் இங்கு ஏற்பட்ட தலித் எழுச்சி, பிற்படுத்தப்பட்ட சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் உருவாக்கம் ஆகியவற்றை இந்தப் பின்னணியிலிருந்து காணலாம்.


    நேபாள அரசியல் இதற்கு இன்னொரு சான்று. அங்கே 12 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த மாவோயிஸ்டுகள் அங்கு புதிதாக உருவாகியிருந்த அடையாள உறுதியாக்கங் களைப் (identity affirmations) புரிந்து, உள்வாங்கி ஏற்றுக்கொண்டனர். அதற்கு ஏற்பத் தம் கட்சித் திட்டத்தையும் மாற்றியமைத்தனர். இருபதாண்டுகளுக்கு முன் அங்கே மாதேசி, ஜனஜாதி, தலித் முதலான அடையாள உருவாக்கங்கள் வலுவாகச் செயல்பட்டதில்லை. ஜனஜாதி, தலித் முதலான சொற்கள் நேபாளி மொழியிலில்லாதவை. முன்னது வங்க மொழிச் சொல். பின்னது மராத்தி. மாதேசி இந்திய வம்சாவளியினரைக் குறிப்பது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் சுமார் 9 மாவட்டங்களை மாவோயிஸ்டுகள் விடுதலைப் பிரதேசங்களாக அறிவித்தபோது ஒன்று தலித் தலைமையில் உருவாக்கப்பட்டது. மேலும் ஐந்திற்கு முற்குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப்படையில் தலைமைகள் உருவாக்கப்பட்டன. புரட்சியிலும் இட ஒதுக்கீடு என்கிற புதுமை அங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    அரசியல் சட்ட அவைக்கான தேர்தலில் பங்கேற்றபோதும் இந்த அடையாள உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒன்றை நாம் மறந்துவிடலாகாது. எந்த ஒரு தேசியமும் ஒரு படித்தானதல்ல. நாகர் இனத்தை எடுத்துக்கொண்டால் அதில் 16 மொழிகளைப் பேசுவோர் உள்ளனர். மணிப்பூரில் மெய்ட்டி இனம் ஆதிக்க நிலையில் உள்ளது. ஈழத்தில் மலையகத் தமிழர்களை விட்டுவிட்டாலும்கூட முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தில், தலித்துகள் தனித்த அடையாளங்களை வற்புறுத்துகின்றனர். மதம், இனம், மொழி என ஏதோ ஒரு பேரடையாளத்தின் மூலம் தேசியம் வரையறுக்கப்படும்போது பிற சிறிய அடையாளங்களின் மீதான வன்முறையாக அவை அமைந்துவிடுகின்றன. தேசியத்திற்குப் பாசிசத்திற்குமான எல்லைக்கோடு மிகவும் மெலிதானது. இந்த எல்லை தாண்டப்படும்போது சிற்றடையாளங்களின் மீதான வன்முறை இனச் சுத்தி கரிப்பு என்கிற எல்லையை எட்டுகிறது. 1990இல் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த 80 ஆயிரம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டது இதற்கொரு எடுத்துக்காட்டு.


    பல்வேறு உள் அடையாளங்களையும் ஏற்று, அவற்றுக்கான இடங்களை அளித்து, அவர்களின் கருத்தொருமிப்பைப் பெறாமல் இனி தேசியக் கட்டமைப்புகளும் அதனடிப்படையிலான இயக்கங்களும் சாத்தியமில்லை. பல்வேறு தேசிய இயக்கங்களில் ஏற்பட்டுள்ள இன்றைய தேக்கத்திற்கு இது ஒரு காரணம். தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாக வெளிப்பட்டுள்ள இந்த அடையாள விகசிப்பு கவனத்திற்குரிய ஒன்று. விடுதலைப்புலிகள் இதைக் கணக்கில் கொள்ளாததன் விளைவாகவே அவர்கள் இராணுவத் தோல்விக்கு முன்னதாகவே அரசியல் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

    VIII
    உப்சலா பல்கலைக்கழகம் 2001ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி அவ்வாண்டில் நடைமுறையிலிருந்த ஆயுதப் போராட்டங்கள் 31. அமெரிக்க அரசை எதிர்த்த அல்குவேதாவின் தாக்குதல் இதிலொன்று. ரத்தம் பெருக்கோடிய மிகப்பெரிய ஆயுதப் போராட்டங்களில் ஒன்று காஷ்மீர் விடுதலைப் போராட்டம். அப்புறம் இலங்கை, சூடான், கொலம்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சிவில் யுத்தங்கள், பர்மாவில் நடைபெற்ற கரேன் மோதல் முதலியன.


    ஆண்டொன்றுக்கு 25க்கும் மேற்பட்ட களச் சாவுகள் ஏற்படுகிற மோதல்களை ஆயுதப் போராட்டங்கள்( Armed conflicts )எனவும் இதுவே 1000ஐத் தாண்டும்போது அதை யுத்தம் எனவும் வரையறுத்துக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அடிப்படையில் இரண் டாம் உலகப் போருக்குப் பின் 225 ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் ஓராண்டில் ஏதேனும் ஒரு முறையேனும் இந்தப் பெரும் எண்ணிக்கையைத் தாண்டி களச் சாவுகள் நடந்துள்ளன.
    கொரிய யுத்தம், வியட்நாம் யுத்தம், ஈரான் – ஈராக் யுத்தம் போன்ற நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் (Inter state Wars) 20ஆம் நூற்றாண்டில் அதிக அளவில் நடைபெற்றன. 1980-1990 கால கட்டத்தில் ஆயுதப் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1990க்குப் பின் குறிப்பிடத்தக்க அளவிற்கு அவை குறையத் தொடங்கின. பனிப் போருக்குப் பிந்திய காலத்தில் (1954-2001) 115 ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் போராட்டங்கள் உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே செறிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவை 1) மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா (கொலம்பியா). 2) பால்கன் – மத்திய கிழக்கு – காகேசியா – செசன்யா, மாசிடோனியா – தென்கிழக்கு ஆசியா. 3) கிட்டத்தட்ட ஆப்பிரிக்கா முழுவதும். இவை அனைத்தும் பின்தங்கிய மூன்றாம் உலகப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிந்திய ஏராளமான புதிய நாடுகளின் தோற்றத்தை ஒட்டி ஆயுதப் போராட்டங்கள் உச்ச நிலையை எட்டிப் பின் தணியத் தொடங்கின.


    ஆயுதப் போராட்டங்களை நடத்துகிற சில அமைப்புகள் அவை பயங்கரவாதம் என்கிற எல்லையைத் தொட்டபோதும் அவற்றில் சில (ஹமாஸ், பலஸ்தீனிய விடுதலை இயக்கம் முதலியன) சர்வதேச ஒப்புதலுடன் கூடிய இலக்குகளை முன்வைத்து நடைபெற்றன. ஐ.நா. அவையின் 425வது தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி நடைபெற்றது லெபனான் ஆயுதப் போராட்டம். பலஸ்தீனிய விடுதலை இயக்கமும் கூட நிறைவேற்றப்பட்ட பல ஐ.நா. அவைத் தீர்மானங்களை முன் வைத்தே மேற்கொள்ளப்பட்டது. தவிரவும் ஆயுதப் போராட்டத்தை மட்டுமே வழிமுறையாகக் கொள்ளாமல் ஆயுதப் போராட்டம் – இன்டிஃபடா – பேச்சுவார்த்தை என்பதாக அது சூழலுக்குத்தக்க தன்னைத் தகவமைத்துக் கொண்டது.
    ஹமாஸ் மற்றும் இஸ்லாமியச் ஜிஹாத் இயக்கம் தற்கொலைத் தாக்குதலை ஒரு வழிமுறையாக அறிமுகப்படுத்தியது. இந்த வடிவத்தை அதன் உச்சக்கட்ட வடிவிற்குக் கொண்டுசென்றது விடுதலைப் புலிகள் இயக்கம். கரும்புலிகள் அணி எனத் தற்கொலைப் படை அணி ஒன்றையே அது உருவாக்கியது. இந்த ஆயுதப் போராட்டங்கள் பல அதன் எதிரி இலக்கை மட்டுமின்றி சக போராளி இயக்கங்களையும் கொன்று அழித்தன. ஹிஸ்புல்லா அமைப்பு 1985இல் போட்டி அமைப்பாகிய அமலின் 500 உறுப்பினர்களைக் கொன்று குவித்தது. விடுதலைப் புலிகள் சக போராளி இயக்கங்களுக்குத் தடை விதித்துக் கொன்றொழித்தக் கதையை நாம் அறிவோம். அரச இராணுவங்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிரிகள் தவிர அப்பாவி மக்களைக் கொல்வதற்கும், பணயக் கைதிகளாகப் பிடித்து வைப்பதற்கும், அவர்களைக் காப்பரண்களாக நிறுத்தி எதிரிகளின் குண்டுகளுக்கு இரையாக்குவதற்கும் அவை தயங்கியதில்லை. எந்த மக்களின் விடுதலைக்காக இந்த இயக்கங்கள் ஆயுதங்களை எடுத்தனவோ அந்த மக்களே உளவு சொன்னார்கள் எனவும், துரோகம் இழைத்தார்கள் எனவும் கொல்லப்பட்டனர். சொல்லப் போனால் ஆயுதப் போராட்டங்களினூடாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கியவர்களைக் காட்டிலும் (combatants) ஆயுதம் ஏந்தாத மக்களே (non combatants) அதிகம்.
    2001க்குப் பின் ஆயுதப் போராட்டங்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்திய அரசுகள் இவற்றை ஒடுக்க எல்லாவிதமான அறமற்ற செயல்பாடுகளிலும் இறங்கின. சட்ட விரோதமான கூலிப்படைகளை உருவாக்குதல் (எ.டு.: இந்திய அரசு நக்சல்பாரிகளை ஒடுக்க உருவாக்கியுள்ள சல்லா ஜூடும், நல்லமல்லா நாகம்… முதலியன), இவற்றிற்கு அரசின் ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்களையும், அரசு கஜானாவிலிருந்து ஊதியத்தையும் வழங்குவதோடு எந்த மக்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறதோ அந்த மக்களையே வைத்து அவர் களைக் கொல்வது, ஆயுதப் போராட்டங்களிலிருந்து வெளியே வந்த ஓடுகாலி களைக் (Renegades) கொலைகாரர்களாக மாற்றியது (எ.டு.: காஷ்மீர்) முதலியனவும் நடைபெறலாயின. மிகப்பெரிய அளவில் அம்மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர் (Internally Displaced) முன்பே குறிப்பிட்டதுபோல பயங்கரவாத முத்திரையைக் குத்தும்போது இந்த இயக்கங்கள் அனைத்தினது அடிப்படை அரசியல் நியாயங்களும் கவனத்திற்குத் தகுதியற்றதாகிவிடுகின்றன.


    அரசு சாரா அமைப்புகள், அதாவது ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது கடினமான காரியமல்ல. ஏராளமான ஆயுதத் தரகர்கள் மட்டுமின்றி ‘இண்டெர்நெட்டிலும்’ கூட ‘ஆர்டர்’ பண்ணி இன்று கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை (ஏ.கே. 47) வாங்க இயலும். மில்லியன் கணக்கில் இன்று சட்ட விரோத ஆயுதங்கள் புழக்கத்திலும் உள்ளன. இலங்கையில் மட்டும் போருக்குப்பின் இன்று 45 ஆயிரம் ஆயுதங்கள் சட்ட விரோதப் புழக்கத்தில் உள்ளன என்றொரு கணக்கீடு கூறுகிறது.
    வலுமிக்க இவ்வரசுகளையும் அவற்றின் நவீன ஆயுதங்களையும் எதிர்கொள்வதற்குத் தகுதி யுடையனவாக ஆயுதக் குழுக்கள் அமைந்தால்தான் அவை களத்தில் நிற்க இயலும். எனவே ஆயுதங் களை வாங்கிக் குவிக்க ஏராளமான நிதி அவர்களுக்குத் தேவை. போதை மருந்துக் கடத்தல்கள், எந்த மக்களின் விடுதலைக்காக நிற்கிறார்களோ அவர்களிடமிருந்தே ஏராளமாகக் கட்டாய நிதி வசூல் செய்தல், குழந்தைகளைக் கட்டாயமாக அவர்களிடமிருந்து பறித்தெடுத்துப் போராளி களாக்குதல், எதிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள எந்த மண்ணின் விடுதலைக்காக நிற்கிறார்களோ அந்த மண்ணையே கண்ணி வெடி வயல்களாக மாற்றுதல் என்பவை எல்லாம் தவிர்க்க இயலாததாகிவிடு கின்றன. சந்தேகப்படுபவர்களை அழித்தொழிப்பது என்கிற வகையில் சொந்த மக்களைக் கொன்று குவிப்பதில் இயக்கங்கள் தயக்கம் காட்டுவதில்லை. பெரு நாட்டின் ‘ஒளிரும் பாதை’யிலிருந்து நமக்குத் தெரிந்த பல ஆயுதப் போராட்டங்கள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.


    ஆயுதப் போராட்டக் களங்களில் முதற்பலி கருத்துரிமை. அரசும், குழுக்களும் மாற்றுக் கருத்துகளைக் கிள்ளி எறிவதில் ஒருவருக்கொருவர் சளைப்பதில்லை. எல்லாவிதமான அத்துமீறல்களைக் கொள்கையும் லட்சியமும் நியாயப்படுத்திவிடும். ‘ஒளிமயமான எதிர்காலம்’ ஒன்றைச் சுட்டிக்காட்டி மக்களின் நிகழ்காலம் அவர்களிடமிருந்து பறிக்கப்படு கின்றது. இறந்த கால அநீதிகள், எதிர்கால விடுதலை இரண்டிற்குமிடையில் நசுங்கிச் சிதைவது நிகழ்காலம். எதிர்கால விடுதலைக்கான போராட்டம் நிகழ்கால விடுதலைக்கெதிரான போராட்டமாக மாறி விடுகிறது. தெரிதா ஒரு முறை குறிப்பிட்டதுபோல “மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் மனித உரிமைகளுக் கெதிரானவை யாக மாறிவிடுகின்றன. கொள்கையும் லட்சியமும் அனைத்தையும் நியாயப்படுத்திவிடுகின்றன.”

    IX
    வன்முறை என்கிற வழிமுறை குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம். புரட்சி, நாட்டு விடுதலை, இனப் பாதுகாப்பு முதலான உன்னத லட்சியங்களுக்காகவே வன்முறை ஒரு வழிமுறையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆக வன்முறை என்பது ஓர் உன்னத லட்சியத்திற்கான கருவி (Instrument)மட்டுமே. தன்னைத் தானே நியாயப்படுத்திக்கொள்வதற்கு (Justification)அதனிடம் ஏதுமில்லை. தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்கு லட்சியம் / குறிக்கோள் (END) என்கிற தனக்கு அப்பாற்பட்ட ஒன்றையே அது நம்பியுள்ளது. ஆனால் இந்த உன்னத லட்சியம் / குறிக்கோள் என்பது அத்தனை தெளிவானதோ, நிச்சயமானதோ (Certain), உடனடியானதோ (Immediate) இல்லை. குறிக்கோள் உன்னதமானதாகவே இருந்தபோதிலும் அவற்றை எட்டுவது சாத்திய மாகாமலேயே போய்விடலாம் என்பதற்குச் சென்ற நூற்றாண்டுப் பொது வுடைமைப் புரட்சிகள் அனைத்தும் நம்முன் சான்றாக நிற்கின்றன. தவிரவும் ஒட்டுமொத்தமான இன, நாட்டு விடுதலை என்கிற தொலைதூர உன்னத லட்சியம் இன்றைய தனி மனித வாழ்விற்கு அளிப்பது என்ன? ஹன்னா ஆரென்ட் சொல்வது போல “இன்றைய தனி மனித வாழ்வின் ஒரே உறுதியான எதிர்காலம் மரணம் மட்டுமே. பொது லட்சியம், பொது எதிரிக்கான யுத்தம் என்ற நிச்சயமற்ற பொதுமைப்படுத்தல்கள் மூலம் இன்றைய தனிமனித வாழ்வு அழிக்கப்படுவது தவிர அதற்கு வேறு எந்தப் பலனுமில்லை.”


    ஹெர்ஸன் சொல்வார்: “மனித குல வளர்ச்சி என்பது காலவரிசையிலான அநீதி (Chronological Unfairness) என்கிற வடிவிலேயே அமைந்துள்ளது. பின்னால் வந்தவர்கள், முன்னால் வாழ்ந்தவர்கள் என்ன விலையைக் கொடுத்தார்களோ அதைக் கொடுக்காமலேயே (அவர்கள் அனுபவிக்காமற்போன) பலன்களை அனுபவிக்கின்றனர்”. இதைச் சற்றே வேறு சொற்களில், “முந்தைய தலைமுறையினர் தமக்குப் பின் வரும் தலைமுறையினருக்காகவே பெருஞ்சுமையைச் சுமந்து நிற்க வேண்டி யிருந்தது என்கிற நினைப்பு என்னை எப்போதுமே தடுமாறச் செய்துவிடுகிறது. (சிரமம் மேற்கொண்டு கட்டப் பட்ட) அக்கட்டடத்தில் வசிக்கும் நல்லதிர்ஷ்டம் கடைசியாய் வந்தவர்களுக்குத்தான் சாத்தியமாகிறது” என்றார் இம்மானுவல் கான்ட். ஹெர்ஸன் மற்றும் கான்ட்டின் கூற்றுகள் கூட இயல்பான மானிட வளர்ச்சியைக் குறித்தன. உறுதியற்ற எந்த ஒரு லட்சியத்தையும் முன்வைத்து மேற்கொள்ளப் படும் ஆயுதப் போராட்டங்களினூடாகப் பலியிடப்படும் நிகழ்கால வாழ்வுகளுடன் ஒப்பிடும்போது இந்த அநீதி. மேலும் பலமடங்காகிறது. புரட்சி, தேசவிடுதலை என்கிற எந்தவொரு தொலை தூர லட்சியமும் உறுதியானவையல்ல. கிட்டத்தட்ட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவை அம்மக்களுக்கு அந்த லட்சியத்தின் பலன்களை அளித்ததில்லை. ரஷ்யப் புரட்சி முதல் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
    ஆக சமகால வாழ்வைப் பொருத்தமட்டில் வன்முறை என்கிற வழிமுறையின் நியாயப்பாடு (Justification) தொலைதூர நோக்கத்தை (End) பொறுத்து அமையவியலாது. உடனடி நோக்கம், உடனடிப் பயன் மட்டுமே அதை நியாயப்படுத்த இயலும். அதனால்தான் அஹிம்சையை ஒரு மதமாக முன்வைத்த காந்தியடிகள் கூட உடனடியாக ஒரு ஆபத்தை எதிர்கொள்ளும்போது உன் உயிரையோ, கற்பனையோ காப்பாற்றிக்கொள்ள வன்முறையைப் பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்று கூற நேர்ந்தது.


    X
    ஆனால் மார்க்சியம் வன்முறையை நியாயப்படுத்தியதே, புரட்சியைப் பிரசவிக்கும்போது சொல்லவில்லையா என்று கார்ல் மார்க்ஸ் வன்முறையை நியாயப்படுத்தவில்லையா என்கிற கேள்விகள் எழுகின்றன. மார்க்சோ, எங்கல்சோ இல்லை லெனினோ புரட்சியின் பிரதான அம்சமாக வன்முறையை வைக்கவில்லை. ஆக உட்சபட்சமாக வன்முறை என்பது புரட்சியின் இறுதிக் கட்டத்தில் ஒரு துணையாளாக (Facilitator) மட்டுமே பயன்பட இயலும். கரு உயிர்ப்பு, பத்துமாத கால கருவறை வளர்ச்சி ஆகியவை எல்லாம் இன்றி வெறும் பிரசவ வேதனையாலோ சிசேரியன் அறுவை சிகிச்சையாலோ மட்டும் குழந்தையைப் பெற்றுவிட இயலாது.


    சமூக மாற்றத்திற்கான பிரதான காரணியாக மார்க்சியம் அதற்குள் இயங்கும் முரண்பாடுகளையே கண்டது. உலக வரலாற்று இயக்கத்தில் வன்முறையின் பங்கை மார்க்ஸ் இரண்டாம் பட்சமாகவே கண்டார். ஒரு பழைய சமூக வடிவம் முடிவுக்கு வருவது வன்முறையின் மூலமாகவன்றி பழைய சமூகத்தின் முரண்பாடுகளின் மூலமே. அரசை ஒரு வன்முறைக் கருவி என அவர் கூறியபோதும் அரசின் அதிகாரம் வன்முறை யின் மூலம் உருப்பெறுவதாக அவர் கூறவில்லை. உற்பத்தியில் ஆளும் வர்க்கத்தின் பங்கினூடாகவே அது தன் அதிகாரத்தைப் பெறுகிறது.


    இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு அரசின் அதிகாரமும் சட்டபூர்வ ஏற்பும் (Legitimacy) மக்களின் கருத்தையே (Opinion)ஆதாரமாகக் கொண்டு அமைகிறது. இந்த ஆதரவுக் கருத்தை ஆளும் வர்க்கம் எவ்வாறு உற்பத்தி செய்கிறது. கருத்தியல் சார் கருவிகளின் பங்கு இதிலென்ன என்பது குறித்தெல்லாம் அல்துஸ்ஸர் வழி மார்க்சியர்கள் விரிவாக ஆய்ந்துள்ளனர். ஆனால் Opinion ஐத் தகர்க்காமல் அரசின் அதிகாரத்தைக் குலைப்பது சாத்தியமில்லை. ஆதரவு கருத்து இவ்வாறு தகர்க்கப்படும்போது அரசதிகாரம் தன் ஆதாரத்தை இழந்துவிடுகிறது. இப்படி அரசதிகாரம் சிதை யும்போதுதான் வன்முறையின் மூலமாக அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறது. இந்தச் சூழலில், அதாவது ஏற்கனவே அது தன் இருப்பின் ஆதாரத்தை இழந்து நிற்கையில் ஒரு எளிதான உசுப்பின் மூலம் அதை வீழ்த்திவிட இயலும். அதுவரை அது தன் வன்முறைக் கருவியின் பலத்தைக் காட்டிலும் மக்களின் ஒப்புதலின் பலத்திலேயே நிற்கிறது.


    அரசதிகாரத்தின் ஆதாரமாக உள்ள மக்கள் கருத்தைச் சிதைப்பதே. ஒரு புரட்சிகர இயக்கத்தின் முதன்மையான பணியாக இருக்க முடியும். அரசியலை முதன்மையில் வைப்பது என்பது இதுவே. முரண்பாடுகளினூடாக சமூக மாற்றத்தைச் சாத்தியப்படுத்துவதும் இதுதான். ஆனால் வன்முறை முதலில் அழித்தொழிப்பது அரசியலைத்தான். வன்முறை அரசியலுக்கான, தத்துவத்திற்கான, வாசிப்பிற்கான, உரையாடலுக் கான சாத்தியங்கள் அனைத்தையும் அழித்துவிடுகிறது. வன்முறையை உபாசிக்கிற சமகால இளைஞர்கள் குறித்த அவதானிப்பிலிருந்து ஒன்றை நான் சொல்ல இயலும். மார்க்சியமும் மாவோவிசமும் சேமித்து வைத்துள்ள ஆழமான அறிவுச் செல்வத்தையோ சமகாலச் சிந்தனைகளையோ ஏன் தினசரி இதழ்களில் வரும் ஆழமான கட்டுரைகளையோகூட இவர்கள் படிப்பதில்லை. எந்த இதழியத்தை இழிவான தாக இவர்களின் கருத்தியல் வரையறுக்கிறதோ அவற்றின் வாசகர்களாக மட்டுமே இவர்கள் உள்ளனர். வாசிப்பு, சுய சிந்தனை ஆகியவற்றினிடத்தில் Adventurisam வந்து குந்திவிடுகிறது. கட்சி சொல்வது சரி. வன்முறை ஒன்றே தீர்வு என்கிற நிலைபாடு அவர்களைப் படிப்பிலிருந்தும், சிந்திப்பதிலிருந்தும் காப்பாற்றிவிடுகிறது.


    XI
    இடதுசாரிப் பாரம்பரியத்தில் வன் முறையை வெளிப்படையாக ஆதரித்தவர்கள் எனச் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து ரஷ்யப் புரட்சிக்குப் பின் மரித்த மார்க்சியச் சிந்தனையாளர் ஜார்ஜ் சோரெல் (1847-1922). சென்ற நூற்றாண்டு அறிஞரான சார்த்தர், அறுபதுகளின் நாயகர்களாக விளங்கிய பிரான்ஸ் ஃபனான், அமில்கார் கப்ரால் முதலியவர்களே. Revolutionary Romanticism த்தின் உச்சமெனச் சொல்லப்படக் கூடிய ஃபனானின் The Wretched of the Earth நூலும் சார்த்தர் அதற்கெழுதிய முன்னுரையும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கன. மார்க்சியத்தையும் பெர்க்சனின் வாழ்க்கைத் தத்து வத்தையும் (Philosophy of Life) போட்டுக் குழப்பி வன்முறையை சோரெல் நியாயப்படுத்தினார் என்றால், மார்க்சியத்தையும் (தான் புரிந்துகொண்ட வகையிலான) இருத்தலியலையும் குழப்பி சார்த்தர் அதை நியாயப்படுத்தினார். மார்க்சியத்தின் அடிப்படை சித்தாத்தங்களை (Tenets), உழைக்கும் வர்க்கங்களைச் செயலுக்குத் (Action) தூண்டும் தொன்மங்களாகக் கருத வேண்டும் என்ற சோரல், தனது செயல்களின் மூலமாகவே, குறிப்பாக வன்முறையின் மூலமாகவே உழைக்கும் வர்க்கம் தன் அற நியாயத்தை உறுதிப்படுத்தி, பூர்ஷ்வா எதிரிகளை வீழ்த்தி, சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்றார். எனினும் செயலுக்குத் தூண்டும் உச்சபட்ச மார்க்சியத் தொன்மமாக அவரால் சுட்ட முடிந்தது பொது வேலை நிறுத்தத்தை மட்டுமே. பொது வேலை நிறுத்தம் ஒரு வன்முறை வடிவமல்ல என்பது சிந்திக்கத்தக்கது. வன்முறையை வழிபட்ட சோரல், வலதுசாரி அரசியல் பக்கம் சாய நேர்ந்ததையும், லெனினைப் போலவே முசோலினியையும் ஒரு சேர வியக்க நேர்ந்ததையும் மறக்க இயலாது. அவரது வன்முறைத் தத்துவம் முசோலினிக்குத்தான் பயன்பட்டது.


    சொல்லப் போனால் வரலாற்றில் வலதுசாரிகளே வன்முறையைப் பிரதான ஆயுதமாகக் கொண்டிருந்துள்ளனர். குறிப்பாகத் தனிமனித அழித்தொழிப்பு (anihilation) காலம் காலமாக ஆளும் வர்க்கங்கள் கடைபிடித்த நடைமுறைதான். நிலப் பிரபுக்களும் முதலாளிகளும், மாஃபியா கும்பல்களும் தயக்கமின்றிப் பயன்படுத்திய, பயன்படுத்துகிற ஆயுதமே தனி மனித அழித்தொழிப்பு.
    இந்தத் தனிமனித அழித்தொழிப்பையே ஒரு தத்துவமாக நியாயப்படுத்த முனைந்தார் சார்த்தர். ஃபனானுக்கு எழுதிய முன்னுரையில் அவர் முன்வைத்த, “ஒரு வெள்ளையனைக் கொல்வது ஒரு கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்துவது போல. அங்கே எஞ்சியிருப்பது ஒரு செத்த மனிதன் மட்டுமல்ல, ஒரு விடுதலையடைந்த மனிதனும் கூட” என்கிற புகழ்பெற்ற வாசகம். 60களின் கற்பனாவாதத்திற்குச் சான்றாக மட்டுமே பயன் படக் கூடியது. ஆழமான எந்தப் பொருளும் அற்ற அபத்த வாசகம் இது. வீழ்த்தப்பட்ட வெள்ளையனிடத்தில் இன்னொரு வெள்ளையன் நிற்பான். கொன்ற கருப்பர் தொடர்ந்து அடிமையாகவே இருப்பார். புத்ததேவ் பட்டாச் சார்யாவைக் கண்ணி வெடியில் வீழ்த்தினால் அந்த இடத்தில் ஒரு முகர்ஜியோ சட்டர்ஜியோ வந்து குந்துவார். லால்கார் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சியே வெற்றி பெறும். சில ஆயிரம் உள்ளூர் மக்கள் அகதிகளாக்கப்படுவர். உச்சபட்ச மாற்றம் என்று சொன்னால் மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும்.
    சார்த்தரையும் தாண்டிய கற்பனாவாதத்தையும் வன்முறை வழிபாட்டையும் ஃபனானிடம் காண இயலும். “அடிமையாய் வாழ்ந்து ரொட்டி சாப்பிடுவதைக் காட்டிலும் கண்ணியத்தோடு பட்டினி கிடப்பது மேல்” என்பார் ஃபனான். “குறைந்தபட்ச மனித உடலுணர்வு குறித்த அறிவையும், பசி அனுபவத்தையும் அறியாதவர்களின் கூற்றாகத்தான் இது இருக்க முடியும்” என்பார் ஹன்னா ஆரென்ட். பசி – அது வயிற்றில் எறியும் நெருப்பு என்கிற பொருள்படும். ‘படகினி’ என்கிற சிங்களச் சொல்லைத் தன் நாவலொன்றில் (‘கானல்’) பயன்படுத்துவார் டேனியல். “அடிமையாய் இருந்து சாப்பிடும் ‘கேக்’கைக் காட்டிலும் சுதந்திரமாக வாழ்ந்து சாப்பிடும் ரொட்டித் துண்டு மேல் என்றாவது ஃபனான் சொல்லியிருக்கலாமே” என்பார் ஹன்னா. ‘(கிரேக்க புராணத்தில் வரும்) அகில்லெசின் ஈட்டியைப் போல வன்முறை அதனால் உருவாகும் காயங் களைத் தன்னாலேயே ஆற்ற வல்லது’ என்பது ஃபனான் உதிர்த்த இன்னொரு வாசகம். இதை ஏற்றுக்கொண்டால் எல்லா இழிவுகளுக்குமான தீர்வு பழிவாங்கல்தான் என்றாகிவிடுகிறது. ஆனால் இத்த கைய பழிவாங்கல்கள் எதிர் வன் முறையை நியாயப்படுத்துவதிலேயே முடியும். வன்முறை காயத்தை ஆற்றாது. அது எதிர் வன்முறைக்குத்தான் இட்டுச்செல்லும். ‘வன்முறையே வழி சொல்லும்’ (‘Only violence pays’) என்று சொல்லும் ஃபனான் போன்றோர் எல்லாம் சொல்லிவிட்டு இறுதியாக வந்தடைவது எங்கு? ‘(எல்லோரையும்) உள்ளடக்கிய வளர்ச்சி’ (Inoclusive growth) ‘(எல்லோரும்) பங்கேற்கும் ஜனநாயகம்’ (Participatory democracy) என்பவைதாமே. இன்னும் சிறந்த ஒரு உலகை நோக்கிய அடுத்த அடி என்பதுதானே இதன் பொருள். எதிர்பார்க்கிற இம்முடிவை உள்ளார்ந்த முரண் பாடுகளின் இயக்கம், மோதல், கலப்பு (Synthesin) ஆகியவற்றின் மூலமாகத்தான் வந்தடைய லாமேயொழிய, வன்முறை முற்றிலும் எதிர்பாராத இன்னும் பெரிய வன்முறை வடிவம் ஒன்றிற்குத்தானே இட்டுச் செல்லும்.
    வன்முறை மூலமாக மாற்றம் சாத்தியம்தான். ஆனால் அந்த மாற்றம் மேலும் ஒரு வன்முறையான உலகத்தை நோக்கி இட்டுச் சென்றதே உலக வரலாறாக உள்ளது.


    XII
    ‘துப்பாக்கிக் குழலிலிருந்து அதிகாரம் பிறக்கிறது’ என்கிற மாவோவின் வேத வாசகமும் இத்தகையதே. துப்பாக்கிக் குழலிலிருந்து ஆணை (command) பிறக்கும். அச்சம் பிறக்கும். அதிகாரம் (power) எப்படிப் பிறக்கும்? ஒரு கலாஷ்னிகோவ் துப்பாக்கியை வைத்து ஒரு நூறு பேரை உங்கள் முன் மண்டியிட்டுச் சில நாட்கள் நிற்க வைத்திருக்க இயலும். இது அச்சத்தின் விளைவே ஒழிய அதிகாரத்தின் விளைவு அல்ல. இந்த அச்சமும், ஆணைக்குப் பணிதலும் ஒரு வன்முறைக் கருவியை நம்பி இருக்கிறது. ஆனால் அதிகாரமோ ஒப்புதலை (opinion) நம்பி இருக்கிறது.அதிகாரத்தையும் (power), வன்முறையையும் (violence) ஒன்றாகப் பார்க்கும் தத்துவார்த்தக் குழப்பத்திற்கு மாவோ மட்டுமல்ல. ரைட் மில்ஸ் (“எல்லா அரசியலும் அதிகாரத்திற்கான போராட்டமே. அதிகாரத்தின் இறுதி வடிவம் வன்முறையே”), மேக்ஸ் வெபர் (“அரசு என்பது மனிதர்களை மனிதர்கள் ஆள்வது. சட்டபூர்வ அதாவது சட்டபூர்வம் எனச் சொல்லப்படுகிற வன்முறையின் மூலம் ஆள்வது”) முதலான பலரும் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர் என்கிறார் ஹன்னா ஆரென்ட்.


    வன்முறை என்பது, முன்பே குறிப்பிட்டதுபோல, அதன் நியாயப்பாட்டிற்கு அதற்கப்பாலுள்ள ஒன்றை (நோக்கம் – end) நம்பியுள்ளது. அதிகாரம் மக்களின் கருத்தைச் சார்ந்துள்ளது. மக்களின் ஒப்புதலே அதை உருவாக்கியது. எனவே அது தன் இருப்பிற்கு வன்முறை என்ற கருவியை நம்பத் தேவையில்லை. சொல்லப்போனால் அதிகாரம் வன்முறை யற்றது (Power is Non-violent). அதிகாரம் எப்போது சிதையத் தொடங்குகிறதோ அப்போதுதான் அது வன்முறையைக் கையில் எடுக்கிறது. Oilgarchy, monarchy, tyranny முதலான பல்வேறு அரசு வடிவங்களையும் பற்றிச் சொல்ல வருகிற மோன்டெங்கு சொல்வதுபோல, “அரசு வடிவங்களிலெல்லாம் கொடுங்கோன்மையே (Tyranny) உச்சபட்ச வன்முறை யையும் குறைந்தபட்ச அதிகாரத்தையும்” கொண்டுள்ளது. அதிகாரக் கட்ட மைப்பைத் தக்கவைப்பதற்கான கடைசிப் புகலிடமாகவும் வன்முறை அமைகிறது.


    அதிகாரத்திற்குத் தேவை பணிவு (Obedience) அல்ல. ஒப்புதலே. ஆணைகள் (commands) மூலமாகவன்றி சலுகைகள் (Concessions) மூலமாகவே அதை அது சாத்தியப்படுத்திக்கொள்கிறது. துப்பாக்கிக் குழல் ஆணையைத் தான் பிறப்பிக்கும். பணிவைத்தான் அது சாத்தியப்படுத்தும். ஒப்புதலை அல்ல.
    வரலாற்றில் வெற்றிகரமாக நிகழ்ந்த ஆயுத எழுச்சிகள் அனைத்தும் அரசின் அதிகாரம் முற்றிலும் சிதைந்த நிலையில்தான் ஏற்பட்டுள்ளன.


    வன்முறையை Romanticize பண்ணுபவர்கள் அடிமைப் புரட்சிகளையும், பழங்குடி மக்களின் எழுச்சிகளையும் உன்னதப்படுத்துவதைக் காணலாம். அடிமைப் புரட்சிகள் வரலாற்றில் மிக மிக அரிதாகவே நடந்துள்ளன. மிகக் கொடூரமாகவும், ரத்தப் பெருக்கோடும் அவை அடக்கப்பட்டுள்ளன. பழங்குடி எழுச்சிகள் ரத்தப் பெருக்கோடு நிகழ்ந்ததில்லை. அடித்தள மக்கள் ஆய்வுத் தொகுதிகளில் (Subaltern Studies) காணக் கிடைக்கும் எழுச்சி எதுவும் பெரிய வன்முறைக் கலவரங்களாக அமைந்ததில்லை. பஞ்ச காலங்களில் பணக் காரர்கள் மற்றும் வட்டிக்கடைக்காரர்களின் சேமிப்புகளைக் கொள்ளையடித்து பகிர்ந்து கொள்வது, சௌகார்களின் தலையில் தண்ணீர் பானையைச் சுமக்கச் செய்து ஊர்வலம் விட்டு, இறுதியில் அம்புகளால் பானையை (பானையைத்தான், ஆளையல்ல) துளைப்பது, அரச திகாரிகளைத் தோப்புக் கரணம் போடச் சொல்வது, கூட்டமாக இடம் பெயர்வது முதலான வடிவங்களில்தான் பழங்குடி மக்களின் போராட்ட வடிவங்கள் இருந்தன. லால்காரில் கூட மாவோயிஸ்டுகள் நுழையுமுன் அங்குள்ள பழங்குடியினர் மார்க்சிஸ்ட் அரசின் வன்முறையை எதிர்கொண்ட விதம் போலீஸ் அதிகாரி களைத் தோப்புக்கரணம் போடச் செய்வது முதலான வடிவங்களில்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.


    XIII
    வன்முறையை விதந்தோதுவதற்கு ஃபனான் முன்வைக்கும் மேலும் இரு காரணங்களைப் பார்ப்போம். வன்முறையின் ஊடாக தனிமனிதவாதம் வீழ்ந்து குழு ஒற்றுமை தழைக்கும், சகோதரத்துவம் மலரும் என்கிறார் ஃபனான். ஒரு வகையில் இது உண்மைதான். சாவைக் காட்டிலும் மனிதர்களைச் சமப்படுத்தும் (Equaliser) காரணி வேறென் னவாக இருக்க முடியும்? ஒன்றாகச் சாகப் போகிறோம். நாம் புதைக்கப்படப் போவதில்லை. விதைக்கப்படப் போகிறோம். நமது சாம்பலிலிருந்து புதிய மனி தன் கிளர்ந்தெழுவான் என்கிற நம்பிக்கையோடு களம் புகும் போராளிகளி டையே சமத்துவமும் ஒருமையும் (Coherance) உருவாவது உண்மையே. ஆனால் இது இரு அபத்தங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று எதிர்காலப் புது மனிதன் என்கிற அநிச்சயம் (Uncertainity). இரண்டாவது இவ்வாறு உருவாகும் சகோதரத்துவம்தான் மனித உறவுகளிலேயே ஆகத் தற்காலிகமானது. மரணத்தை சாக்காக வைத்து நிகழும் எதுவும் மரணம் வரையிலுமே நிற்கக் கூடியது.
    வன்முறைக்கு ஆதரவாக ஃபனான் சுட்டும் இறுதிக் காரணம் வாழ்க்கையைத் தொடர்ந்த ஒரு போராட்டக் களமாகக் காண்பது (‘Life is anUnending Contest’).

    வாழ்க்கையைப் புகழ்வதினூடாக இப்படி வன்முறையைப் புகழ் கிறார் ஃபனான். விலங்குலகில் செயல்படும் கொலைவெறியை (Aggressiveness) உயிர்ப்பைத் தக்க வைக்கும் செயலாகக் கண்டு இத்தகைய வன்முறையை உயிர்ப்புடனும் (Life),படைப்புத் திறனுடனும் (Creativity) ஒப்பிடும் பார்வையை கோன்ராட் லோரென்ஸ், ஜார்ஜ் சோரெல் போன்றோரிடம் காண இயலும் எனச் சுட்டிக் காட்டுகிறார் ஹன்னா. வன்முறையில் மிகுந்திருக்கும் படைப்பு வெறி (Creative Madness) என ஃபனான் கூறுவார். இவ்வாறு அதிகாரம் = வன்முறை = படைப்புத்திறன் = உயிரியற்கை என்பதாக ஒரு சமன்பாட்டை உருவாக்குவது முன்பே சுட்டிக் காட்டியது போல தத்துவார்த்த ரீதியான குழப்பத்தை மட்டு மின்றி உயிர்ப்புச் செயல்களை (Organic activity) சமூக இயக்கத்துடன் இணைத்துத் தவறான முடிவுக்கு வரும் ஆபத்தையே வெளிப்படுத்துகிறது.


    கடைசியாக: வன்முறையாளர்கள் முன் வைக்கும் இன்னொரு வாதம், இத்தகைய செயற்பாடு களினூடாகத்தான் அரசின், சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முடிகிறது என்பது. இப்படிக் கவன ஈர்ப்புக் கருவியாக வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் விளைவதென்ன? அதிகபட்சம் அந்தக் குறைகள் களையப்படும். இப்படிக் குறைகளைக் களைவது ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக (Reformation) இருக்க முடியுமே ஒழிய புரட்சிகரச் செயற்பாடாக அமையாது. ஆக இக்கருத்தின் படி வன்முறை ஒரு சீர்திருத்தக் கருவி. புரட்சிக் கருவி அன்று.

    XIV
    இறுதியாக 2001க்குப் பின் ஆயுதப் போராட்டங்களில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் குறித்துச் கொள்வோம். 2005 ஜூலை 28 அன்று அயர்லாந்துப் புரட்சிகரப்படை (IRA) தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது. ஆயுதங்களைக் கடாசிவிட்டு (‘dumb arms’) முற்றிலும் அமைதி யான முறையில் குறிக்கோளை நோக்கிற செயல்படுமாறு தனது அலகுகளுக்கு அது கட்டளையிட்டது (பார்க்க: இந்து ஜூலை 29, 2005). பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் பலஸ் தீனத் தேர்தலில் பங்கு பெற்று இன்று ஆட்சியிலுள்ளது. இன்னொரு பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லாவுடன் லெபனான் அரசு இராணுவக் கூட்டணி அமைத்துத்தான் இரண்டாண்டுகட்கு முன்பு முதன்முதலாக இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்தது. தாலிபான்களை ஆப்கான் அரசில் இணைக்குமாறு ஹமித் கர்சாயை புஷ் வற்புறுத்தியது நினைவிற்குரியது. தாலிபான்கள் அதை ஏற்கவில்லை. புஷ் நிர்வாகமும் தொடர்ந்து வந்த ஒபாமா நிர்வாகமும் தாலிபான்களை அழித்தொழிப்பதில் முனைப்புக் காட்டிச் செயல்படுகின்றன. சுமார் 12 ஆண்டுகாலமாக ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தி வந்த நேபாள மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை ஐ.நா. மேற்பார்வையில் விட்டுவிட்டுத் தேர்தல் களத்தில் பங்கேற்றனர். திருப்பி நிகழ்த்தவியலாத வகையில் 200 ஆண்டுகால முடியாட்சியை வீழ்த்தி முதற்கட்ட வெற்றியை அடைந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பலஸ்தீனத் தலைவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) தலைவருமான அப்பாஸ் தம் இயக்கம் வன்முறைச் செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.


    நேபாள மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு என்ன சாதித்தனர்? தொடர்ந்து அவர்கள் தமது குறிக்கோளை எட்டுவதற்குச் சாத்தியமில்லாத வகையில் பதவி இறக்கப் பட்டுவிட்டனரே. ஆயுதங்களைக் கீழே போட்டதன் விளைவுதானே இது என இந்திய மாவோயிஸ்ட்கள் அவர்களைக் கேலி செய்கின்றனர். நேபாள மாவோயிஸ்ட்கள் சென்ற தேர்தலில் 33 சத வாக்குகளைத்தான் பெற முடிந்தது. 67 சத வாக்குகளை அவர்களால் பெற இயலவில்லை என்பது மக்களின் முழுமையான கருத்தாதரவை (Opinion) இன்னும் அவர்கள் பெறவில்லை என்பதையே காட்டுகிறது. நேபாள மாவோயிஸ்ட்கள் இன்று மீண்டும் வீதியில் இறங்கியுள்ளனர். வன்முறையினிடத்தில் அவர்கள் அரசியலை வைத்து இயங்குவது எதிர்காலத்தில் முழு ஆதரவையும் பெற்று அதிகாரத்தில் அமர்வதற்கு வழிவகுக்கும்.


    வன்முறையினிடத்தில் எதை வைப்பது என்கிற கேள்வியோடு இக்கட்டுரையை முடித்துக்கொள்வோம். ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டும். வன்முறையின் எதிர்ப்பதம் அஹிம்சை (வன்முறையற்ற நிலை – Non-Violence) அல்ல. ‘வன்முறையற்ற அதிகாரம் (Non-Violent Power) என ஒன்று கிடையாது. அது ஒரு கூறியது கூறல். வன்முறையற்ற செயல்பாடு அல்லது அஹிம்சை என்பதை காந்தியடிகளைப் போல ஒரு மதமாகக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. அதிகாரம் இன்று ஒரு சிறிய உசுப்பலில் வீழ்ந்துவிடும் என்கிற நிலையில் கூட அஹிம்சையின் பெயரால் அந்த உசுப்பலைக் கூடச் செய்ய முடியாது என ஓய்ந்திருப்பதோ அத்தகைய நிலை உருவாவாதுவரை சும்மா (Passive) இருப்பதோ சமூக மாற்றத்தை நோக்கிய ஒரு இயக்கத்தின் பணி அல்ல. அஹிம்சையை வற்புறுத்திய காந்தியடிகள் கூட எந்நாளும் சும்மா இருந்ததில்லை. மாறாக அவர் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டுதான் இருந்தார். அவரது passive resistances passiveness காட்டிலும் Resistance தான் பிரதானமாக இருந்தது.
    வன்முறையின் இடத்தில் வன்முறையற்ற நிலையை வைப்பது நம் நோக்க மில்லையெனில் பின் எதை அங்கு வைப்பது? வன்முறையின் மூலம் இடம் பெயர்க்கப்பட்டிருந்த அரசியலை அவ்விடத்தில் வைப்பதுதான். அரசியல் என்பது வெறுமனே தேர்தலில் பங்கு பெறுவதல்ல. அப்படி நினைத்ததுதான் இங்கேயுள்ள தேர்தல் சார்ந்த பொதுவுடைமைக் கட்சிகள் செய்த பெரிய தவறு.


    இன்று நிலவுகிற அரசதிகாரத்தைத் தாங்கி நிற்பது மக்களின் ஒப்புதல் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்த ஒப்புதல் பலவீனமானதாக இருக்கலாம். வேறுவழியில்லாத நிலையால், உளுத்துப்போன கருத்தியல்களால், அல்லது உருவாகியுள்ள புதிய கருத்தாக்கங்களால் (எ.டு.: Development) உருவாகியிருக்கலாம். மக்களின் ஒப்புதலில்லாத அரசாக இதைக் கருத முடியாது. இந்த ஒப்புதலைத் தகர்க்கும் நோக்கில் செயல்படுவதே இன்றைய அரசியல்.


    அரசியல் என்பது என்ன? அரசியல் “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்கிற கருத்தை நாம் அறிவோம். அதிகாரத்தை நோக்கிய ஒரு காய் நகர்த்தலாகவும், பொய் வாக்குறுதிகளின் புகலிடமாகவும் மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறையாகவும் நடைமுறையில் உள்ளதைக் கண்டு அதன் அடியாக உருவான பார்வை இது. இந்த அர்த்தத்தை அழித்து அரசியலை அதன் ஆதி மூல அர்த்தத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அரிஸ்டாட்டில் தனது ‘அரசியல்’ (Politics) நூலில் அவருக்கு முந்தையவரான பிளேட்டோவின் ‘குடியரசு’ (Republic) கூறப்படும் ஒரு கருத்தை மறுப்பார். பிளேட்டோ தமது அரசியலமைப்பை (polis -அரசின் வடிவம்) ஒற்றைத் தன்மையானதாகச் (Unitary) சுருக்குகிறார் என்பது அரிஸ்டாட்டில் வைத்த குற்றச்சாட்டு.


    “அரசியலமைப்பை (Polis) ஒருமையை(Unity) நோக்கி நகர்த்திச் சென்றுகொண்டே இருந்தால் ஒரு புள்ளியை அது எட்டும்போது அது தனது polis என்கிற தன்மை யையே இழந்துவிடும். இதற்குச் சற்றுமுன் உள்ள ஒரு புள்ளியில் அது தனது polis தன்மையை முழுமையாக இழக்காத நிலையில் இருந்தபோதிலும், தன் சாராம்சத்தன்மையை இழந்து ஒரு மோசமான அரசாக அமையும். பல குரல் ஒத்தி சையை (harmony) ஒரு ஒற்றை இசையாக (unison) மாற்றுவதற்கும் ஒரு themeஐ ஒற்றை beat ஆகச் சுருக்குவதற்கும் ஒப்பு இப்படி polisஐ ஒருமையாகச் சுருக்குவது. உண்மை என்னவெனில் polis என்பது பல்வேறு உறுப்பினர்களின் கூட்டுச் சராசரி (Aqregate)” என்பது அரிஸ்டாட் டில் கூற்று. ‘எனவே அரிஸ்டாட்டிலின் கருத்தின்படி அரசியல் என்பது அமைப்பாக்கப்பட்ட அரசுகளில் உருவானது. தன்னை ஏதேனும் ஒரு ஒற்றை இனம், மதம், நோக்கம், மரபு என்பதாகவன்றி பல்வேறு உறுப்பினர்களின் சராசரியாகக் கருதிக் கொள்வது. பல்வேறு குடிகள், அவற்றின் பல்வேறு நலன்கள், வேறுபட்ட மரபுகளுடன் ஓரே ஆட்சியின் கீழ், ஒரே நாட்டெல்லைக்குள் ஒரே நேரத்தில் வாழ்வதுஎனப்தை ஏற்பதிலிருந்தே அரசியல் உருவாகிறது’’ என விளக்க மளிப்பார் பெனார்ட் கிரிக். பல்வேறு எதிர் எதிரான நலன்கள் தத்தம் கருத்துக்கு ஆதரவு தேடும் செயற்பாடுகளை அனுமதிக்கும் ஒரு சமூக அமைவை நிர்வகிப்பதே அரசியல். ஒவ்வொரு பிரிவினரின் சகல விதமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் அது ஏற்கிறது.


    ஒரு ஆட்சி அலகிற்கு வேறுபட்ட நலன்கள் அரவரர்களின் அளவிற்கு ஏற்ப அதிகாரத்தில் பங்கு பெறச் செய்யும் சமூகச் செயற்பாடே அரசியல். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து யாரும் யாரையும் அதிகாரம் செய்யாமல், சுரண்டாமல் வாழ்வதைச் சாத்தியமாக்கும் நிலையே அரசியல். அத்தகைய நிலை இன்று இல்லை. அதற்கான காரணங்களை மார்க்சியம் முதலான சமூக விஞ்ஞானங்கள் ஆய்வு Polis- Politics-Polity-Poly எனச் சமூகத்தின் பன்மைத்தன்மையை அங்கீகரிப்பது இன்றைய பல் இனக்கூட்டு வாழ்வில் முதன்மைத் தேவையாகிறது. சரியான சமூக அமைப்பு எது என்பது குறித்த வேறுபட்ட கருத்துகள் சுயேச்சையாக இயங்குவதை ஏற்றுக் கொண்டே நமது கருத்தை நாம் முன் னெடுத்துச் செல்ல வேண்டும். பல்வேறு சாத்தியங்களுக்கிடையேயான ஒரு Concilation அடிப்படையிலேயே அரச திகாரத்திற்கு ஆதாரமான ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. வன்முறையையே அரசியலாகக் கொள்பவர்களால் இதைச் சாத்தியப்படுத்த இயலாது.
    இது அரசியல் குறித்த அடிப்படைப் புரிதல் மட்டுமே. நடைமுறை அரசியல் மேலும் சிக்கலானது. உலக அளவில் படுவேகமாக நிகழும் அன்றாட மாற்றங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு மக்கள் பிரிவும், இயக்கமும் தம் அரசியலை முன்னெடுக்கும்போது அரசியலின் இந்த அடிப்படையைத் தவறவிட்டுவிடக் கூடாது. இந்த நோக்கி லிருந்து பார்க்கும்போது நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள இயலும். வன்முறை எளிமையானது. அரசியல் சிக்கலானது. சிக்கலானது என்பதற்காகவே அரசியலைக் கைவிடுவோமாயின் அது பேரழிவிற்கே இட்டுச் செல்லும். இன்றைய உலகச் சூழலில் இந்தப் பேரழிவு மேலும் விரைவுபடுத்தப்படும்.

    பயன்படுத்தப்பட்ட நூற்கள், கட்டுரைகளில் சில:

    Eric Hobswam, Globalization, democracy and Terrorism, 2007
    Hannah Arendt, Reflections on Violence (1969)
    Franz Faron, The Wretched of the Earth,
    Bernard Crick,In Defence of Politics, 2000
    Violence Today, socialist Registar, 2009
    Tom Bottomore (Ed), A Divtionary of Marxist Thought, 1987

    நன்றி: அடவி