பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
August 16th, 2013 | : கதைகள் | Comments (5)

கச்சாமி

-ஷோபாசக்தி

ண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன்.

நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனது உள்ளுணர்வு சொல்லியது. வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் எனது உணர்திறன் என்னை எப்போதும் கைவிட்டதில்லை. நான் கெய்லாவின் கையைப் பற்றிக்கொண்டேன்.

இரண்டு பொலிஸ்காரர்களும் வேகவேகமாக எங்களருகே வந்தனர். அவர்கள் இருவரும் மிக இளையவர்கள். அவர்களது மூஞ்சிகள் கடுகடுவென இருந்தன. முன்னால் வந்தவன் சிங்களத்தில் இரண்டு வார்த்தைகள் சொன்னான். எனக்குச் சிங்களமொழி நன்கு தெரியும். கெய்லா எனது முகத்தைப் பார்த்தாள். நான் சிங்களம் புரியாதவன் போல பாவனை செய்து, குரலைச் சற்று உயர்த்திஉங்களுக்கு என்ன வேண்டும்?” என ஆங்கிலத்தில் பொலிஸ்காரர்களிடம் கேட்டேன். எனக்குப் பக்கத்தில் வெள்ளைக்காரப் பெண் இருப்பதும் எனது கேள்வியின் தொனியும் பொலிஸ்காரர்களைச் சற்று மிரட்சியுற வைக்கலாம் என எண்ணினேன்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பொலிஸ்காரர்களின் மூஞ்சிகளிலிருந்த கடுப்புத்தான் சற்று அதிகரித்தது. அவர்கள் என்னையும் கெய்லாவையும் வேற்றுக்கிரகவாசிகள் போல பார்த்தனர். அவர்களது கண்களிலே அருவருப்பு இருந்தது. ஒருவன் ஆங்கிலத்தில்நீங்கள் இருவரும் எங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும்என்றான். அப்போது வீதியில் நின்றிருந்த சில பெண்கள் கெய்லாவின் பின்புறம் போய் நின்றுகொண்டு தங்களுக்குள் இரகசியக் குரலில் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

இப்போது கெய்லா பேசினாள். “எதற்கு உங்களுடன் நாங்கள் வரவேண்டும்?” எனப் பொலிஸ்காரர்ளைப் பார்த்துக் கேட்டாள். பொலிஸ்காரர்கள் மறுபடியும் சிங்களம் பேசினார்கள். “நேரத்தை வீணடிக்க வேண்டாம், எங்களுடன் கிளம்புங்கள்!” என்றார்கள். நான் கெய்லாவிடம்இங்கே பிரச்சினை வேண்டாம், வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடிக்கொண்டேயிருக்கிறது. வா பொலிஸ் நிலையம் போய் என்ன எதுவென்று பேசிக்கொள்வோம்எனப் பிரஞ்சு மொழியில் சொன்னேன். அவள் எனது முகத்தில் படிந்திருந்த கலவரத்தை வாசித்தாள். “போகலாம்எனச் சொல்லிவிட்டுப் பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.

நாங்கள் வந்திருந்த வாடகைக்கார் வீதியோரத்தில் நின்றிருந்தது. முதியவரான சாரதி வண்டிக்கு வெளியே நின்றிருந்தார். அவர், தான் ஏதோ தேவையில்லாத பிரச்சினையில் சிக்கிக்கொண்டது போன்ற தோரணையில் நிலத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தார். நான் கைளைத் தட்டி அவரை அழைத்து வண்டியை எங்களுக்கு அருகே கொண்டுவருமாறு சைகை செய்தேன். வண்டி வந்ததும் பின்புற இருக்கையில் நானும் கெய்லாவும் அமர்ந்துகொண்டோம். ஒரு பொலிஸ்காரன் முன்புற இருக்கையில் அமர்ந்துகொண்டான். கார் புறப்பட்டுச் சென்றபோது நான் கண்ணாடி வழியே பின்னால் பார்த்தேன். சனங்கள் அங்கிருந்து கலைந்து கொண்டிருந்தார்கள். மற்றைய பொலிஸ்காரன் மோட்டார் சைக்கிளில் காரின் பின்னால் வந்துகொண்டிருந்தான். அவனது முகத்திலிருந்த கடுகடுப்பும் கண்களிலிருந்த அருவருப்பும் இவ்வளவு தூரத்திலும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனது நெஞ்சம் படிப்படியாக அச்சத்தில் மூழ்கிக்கொண்டிருந்தது. நான் இலங்கைக்கு வருவது குறித்துச் சிந்தித்தபோதெல்லாம் என்னுடைய பிரான்ஸ் நண்பர்களில் சிலர்இப்போது நிலமை மோசமாகயிருக்கிறது, போகாதீர்கள்என்றார்கள். சில நண்பர்கள்இப்போது பிரச்சினைகள் ஏதும் கிடையாது, தைரியமாகப் போங்கள்என்றார்கள். என்னால் ஒரு முடிவுக்கு வர முடியாமலிருந்தது. கடைசியில், நான் கெய்லாவுக்காக இருபத்தைந்து வருடங்கள் கழித்து இலங்கைக்கு வந்தேன்.

கெய்லாவுக்குச் சரியாக முப்பது வயது. எனக்கும் அவளுக்கும் இருபத்தியொரு வயதுகள் வித்தியாசமிருந்து. கெய்லாவுக்கு இருபத்தைந்து வயதாக இருந்தபோது அவள் என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். பாரிஸின்சென் மத்தான்நதியோரமிருக்கும் சிறிய அப்பார்ட்மென்டில் இருவரும் சேர்ந்து வாழ்கிறோம். காதல், படிப்பு, இசை, மது, சிறிது கஞ்சாப் புகை இவ்வளவாலும் எங்களது வசிப்பிடம் நிரம்பியிருக்கிறது.

கெய்லா யூத இனப் பெண். அவளது பெயருக்கு ஹீப்ரு மொழியில்அழகிய கிண்ணம்எனப் பொருள். எனது காதலால் மட்டுமல்லாமல் எனது துயரம், கழிவிரக்கம், கோபம், விரக்தி, இயலாமை என எல்லாவற்றாலும் அந்தக் கிண்ணம் நிரம்பியுள்ளது.

கெய்லாவின் முன்னோர்கள் இரண்டாம் உலகப்போர் காலத்தில் போலந்திலிருந்து பிரான்ஸுக்கு ஓடிவந்தவர்கள். கெய்லாவின் தந்தையும் தாயும் ஜீன் போல் சார்த்தருக்கு நெருக்கமான மாணவர்களாக இருந்தவர்கள். பாரிஸ் மாணவர் புரட்சியில் முன்னணிப் பாத்திரங்களை வகித்தவர்கள். தந்தையார் பேராசிரியர், தாயார் சிற்பக் கலைஞர். இருவருமே இப்போது இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். கெய்லா பாரிஸிலேயே தங்கிவிட்டாள். பாரிஸ் பல்கலைக் கழகங்களில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பட்டங்களைப் பெறுபவள் அவள். அவளது ஆய்வுகளின் முக்கிய பொருள் பவுத்தம்.

அவளது இந்த ஆய்வுப்பணிதான் என்னையும் அவளையும் சந்திக்க வைத்தது. ‘சேர்போன்பல்கலைக்கழகத்தில் நடந்த அம்பேத்கர் குறித்த கருத்தரங்கொன்றில் பார்வையாளர் பகுதியில் நாங்கள் இருவரும் அருகருகாக அமர்ந்திருந்தோம். நான் இலங்கையைச் சேர்ந்தவன் என அவள் தெரிந்துகொண்டதும் தேரவாத பவுத்தம் குறித்து என்னிடம் கண்களை விரித்து உரையாடத் தொடங்கிவிட்டாள். பிறகு தொடர்ச்சியான சந்திப்புகளைச் செய்தோம். ஒரு பின்மாலையில் அவளது அறையில் நான் அவளைச் சந்தித்தபோது நாங்கள் தம்மபதத்தை மீண்டும் வாசித்தோம். ‘நிழலின் தோற்றம் நீள்கதிர் ஒளியால், நிழலும் ஒளியும் நின்மன உருவாம்என்ற வரிகளை நான் வாசித்தபோது கெய்லா உணர்ச்சி மேலிட விம்மியவாறே என்னை அணைத்து முத்தமிட்டாள். தம்மபதத்தைச் சாட்சியாக வைத்து நாங்கள் ஒருவருள் ஒருவர் கலந்தவரானோம்.

கெய்லா கடந்த இரண்டு வருடங்களாகஹீனயானம்குறித்து ஆய்வுகளைச் செய்துகொண்டிருக்கிறாள். ஓர் அதிகாலையில் என்னை வருடியவாறே எனது காதுக்குள்நான் தின்தியான் புத்த மாடத்திற்குச் செல்ல வேண்டும், என்னை அழைத்துச் செல்வாயா ?” எனக் கேட்டாள். நான் கண்களைத் திறவாமலேயேம்என முனகிக்கொண்டே புரண்டு அவளை அணைத்தேன். அவளது மார்பில் ஒரு தடித்த புத்தகம் விரித்து வைக்கப்பட்டிருப்பதை எனது கை உணர்ந்தது.

வியட்நாமின் ஹோ லூ நகரத்தில் பிரமாண்டமான தின்தியான் புத்த மாடம் இருந்தது. பத்தாம் நூற்றாண்டில் வியட்நாமின் தலைநகரமாக இந்த நகரமே இருந்தது. வியட்நாமின் முதலாவது பேரரசன் தின்போலின் இந்தப் புத்த மாடத்தைக் கட்டியெழுப்பினான். இயற்கையின் வனப்புகள் அத்தனையும் ஊடும் பாவுமாக அந்த நிலப்பகுதியை நெய்திருந்தன. விரித்துக் கிடக்கும் வெள்ளிச் சரிகை இழைத்த பச்சைப் பட்டுத்துணியின் மத்தியில் கிடந்து ஒளிரும் செந்நிற இரத்தினக்கல் போல அந்தப் புத்த மாடமிருந்தது.

கெய்லா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். புத்த மாடத்தை நுற்றுக்கணக்கான கோணங்களில் படம் எடுத்துக்கொண்டாள். அங்கே ஒரு நூலகமுமிருந்தது. பிரஞ்சு மொழியில் ஏராளமான பழைய நூல்களிருந்தன. காலையிலிருந்து மாலைவரை கெய்லா நூலகத்திலேயே இருந்தாள். எங்களது இரவுப் பொழுதுகள் வியட்நாமின் கிராமிய இசையாலும் மதுவாலும் மகிமைப்படுத்தப்பட்டன. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் வரவேற்பாளனிடம் கஞ்சா கிடைத்தது. வெள்ளையினப் பெண்ணோடு ஒரு கறுப்பன் இருப்பதைப் பார்த்தவுடனேயே, முதல் வேலையாக வியட்நாமில் கஞ்சாப் பொட்டலத்தைத் தூக்கிக் கொடுத்துவிடுகிறார்கள். கஞ்சாவைப் புகைத்துக்கொண்டிருந்த ஒரு தருணத்தில்தான் நாங்கள் அடுத்தபடியாக இலங்கைக்குச் செல்லலாம் என முடிவு செய்தோம். நான் கெய்லாவை முத்தமிட்டுஎன்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்வாயா?” எனக் கேட்டேன்.

எனக்கு இலங்கையில் தங்கி நிற்பதற்கு ஒரு வீடில்லை. கிராமத்திலிருந்த வீடு குண்டுவீச்சால் தரைமட்டமாகிவிட்டது. சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் எல்லோருமே வெளிநாடுகளில்தான் இருக்கிறார்கள். விடுதியில் தங்குவதுதான் ஒரேவழி. அதைத்தான் கெய்லாவும் விரும்பினாள். இலங்கைக்கு வந்ததும் முதலில் கண்டிக்கு வந்தோம். அங்கிருந்து யாழ்ப்பாணம் போவதாகத் திட்டமிட்டிருந்தோம்.

வண்டி நின்றதும் நிற்காததுமாக முன் இருக்கையிலிருந்த பொலிஸ்காரன் கதவைத் திறந்து கீழே குதித்தான். அந்தப் பொலிஸ் நிலையம் மிகச் சிறியது. எங்களை ஒரு மேசையின் முன்னால் அமர வைத்து விட்டு எங்களை அழைத்துவந்த பொலிஸ்காரன் வெளியே போய்விட்டான். நிலையத்திற்குள் ஒரு ஓரமாக இரண்டு பொலிஸ்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம்எப்போது அதிகாரி வருவார் ?” எனக் கேட்டேன். அவர்களில் நடுத்தர வயதாக இருந்தவன்பொறுத்திரு!’ என்பது போல கையைத் தூக்கிச் சைகை செய்தான். கெய்லா ஒன்றின்பின் ஒன்றாகப் பெருமூச்சுகளை வெளியேற்றிவிட்டு, தனது கால்களைத் தூக்கி நாற்காலியில் வைத்துக்கொண்டாள். கால்களை அவள் அவ்வாறு வைத்திருப்பது இந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாதது என நான் நினைத்தாலும் அதை அவளிடம் சொல்லவில்லை.

கிட்டத்தட்ட ஒருமணிநேரமாக நாங்கள் காத்திருந்தோம். அங்கே கடுமையான நிசப்தமிருந்தது. கெய்லா அமர்ந்தபடியே கண்ணயர்ந்து விட்டாள். எங்களுக்குப் பின்னால் சப்பாத்துகள் ஒலி எழுப்பியபோது நான் திரும்பிப் பார்த்தேன். வேகமாக நடந்து வந்த அந்த மனிதன் காக்கி முழுக்காற்சட்டையும் வெள்ளை அரைக் கைச் சட்டையும் அணிந்திருந்தான். அவனது இடுப்பில் கட்டப்பட்டிருந்த கைத்துப்பாக்கி சட்டைக்குக் கீழே பாதி தெரிந்தது. அவனுக்கு முப்பது வயதுகள் இருக்கும். ஒல்லியாக, ஆனால் திடகாத்திரமான உடலுடனும் சிறிய கண்களுடனுமிருந்தான். பார்ப்பதற்குச் சாயலில் புரூஸ்லீயைப் போலிருந்தான். அவன் எங்களுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு கெய்லா மீது ஒரு பார்வையை வீசிவிட்டு, மேசையைச் சுற்றிக்கொண்டு எங்கள் முன்னால் வந்து அமர்ந்தான். நான் கெய்லாவின் கைகளைப் பற்றினேன். கெய்லா விழித்துக்கொண்டு, கால்களை நாற்காலியிலிருந்து கீழே இறக்கினாள். எனக்குச் சற்று நிம்மதியாகயிருந்தது.

அவன் தன்னை அந்தப் பொலிஸ் நிலையத்தின் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டான். நான் பதிலுக்குப் புன்னகை செய்தேன். கெய்லா உணர்ச்சியற்ற முகத்துடன் அதிகாரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதிகாரி தூய ஆங்கிலத்தில் தனது விசாரணையை ஆரம்பிக்கலானான்.

எங்கிருந்து வருகிறீர்கள்?”

பிரான்ஸிலிருந்து..”

அதிகாரிஉங்களது சொந்த இடம் எது?” என என்னிடம் கேட்டான்.

நான் எனது கிராமத்தின் பெயரைச் சொன்னேன்.

இப்போது அவன் கெய்லாவைப் பார்த்துக்கொண்டேமேடம் உங்களை நான் கைது செய்ய வேண்டியிருக்கிறதுஎன்றான்.

அவ்வளவுதான். கெய்லா நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிரஞ்சு மொழியில் சரமாரியாகக் கெட்ட வார்த்தைகளைக் கூவிக்கொண்டு எழுந்திருந்தாள். அதிகாரியை நோக்கிக் கையைக் காட்டிஅது உன்னால் முடியாதுஎன்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

அதிகாரி சில விநாடிகள் அமைதியாகயிருந்தான். பின்புஅது முடியாவிட்டால் உங்களது முதுகுப் பகுதியையாவது நான் கைது செய்ய வேண்டியிருக்கும்என்றான்.

கெய்லாவுக்கு செந்நிறச் சுருள்முடி. அவள் முடியை மிகக் கட்டையாக ஆண்கள் போல வெட்டியிருப்பாள். அவள் கையில்லாத நீலநிற பனியன் அணிந்திருந்தாள். அந்த பனியன் அவளது பாதி முதுகைத்தான் மறைத்திருந்தது. அவளது முதுகின் வலதுபுற மேற்பகுதியில் உள்ளங்கையளவில் புத்தரின் உருவம் வரையப்பட்டிருந்தது.

புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் சித்திரமது. வியட்நாமில் தின்தியான் புத்த மாடத்திற்கு முன்பாக நடைபாதையிலிருந்த பெண்மணி ஒருவர் அய்ந்து டொலர்களிற்கு கெய்லாவின் முதுகில் அந்த அழகிய சித்திரத்தை நுணுக்கத்துடன் வரைந்திருந்தார். சிலவேளைகளில் அந்தப் புத்தர் கெய்லாவின் முதுகில் அங்குமிங்கும் அசைந்துகொண்டிருப்பதாக எனக்குத் தோன்றும்.

புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்துவது தண்டனைக்குரிய குற்றம்என அதிகாரி எங்களுக்குச் சொன்னான். கெய்லா அனிச்சையில் தனது கையால் வாயை மூடிக்கொண்டாள். அவளது கண்கள் விரிந்துபோயின. நான் கெய்லாவின் கையைப் பற்றி உட்கார வைத்தேன்.

பின்பு மெதுவாகஅது தண்டனைக்குரிய குற்றமென்று எங்களுக்குத் தெரியாதுஎன்றேன். அதிகாரி உதடுகளை இறுக மடித்தவாறே மேலும் கீழும் தலையாட்டினான். உங்களுக்குத் தெரியாததற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்பது போலிருந்தன அவனது அசைவுகள்.

நான் அதிகாரியிடம்இந்தப் புத்தர் உருவம் முதுகில் பச்சை குத்தப்படவில்லை. இது ஒருவகையான இரசாயான வர்ணத்தால் வரையப்பட்டது. சிலமாதங்கள் வரைதான் இது உடலில்இருக்கும், பிறகு அதுவாகவே அழிந்துவிடும்என்று உண்மையைச் சொன்னேன்.

அதுவரை இந்தப் பெண் இலங்கையில் இருக்கமுடியாது, அப்படி இருப்பதானால் சிறையில்தான் இருக்க வேண்டும்என்றான் அதிகாரி.

அதிகாரி சொல்லி, சொன்ன வாயை மூட முன்பாகத் தனது கைப்பையைத் தூக்கி மேசையில் ஓங்கி அடித்துக்கொண்டு மறுபடியும் கெய்லா ஆவேசத்துடன் எழுந்தாள்.

இல்லைநாங்கள் இலங்கையில் இருக்க விரும்பவில்லை, நாங்கள் உடனேயே நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறோம்

அதிகாரி கெய்லாவை முறைத்துப் பார்த்தான். கெய்லா விறுவிறுவென வெளியே நடந்தாள். அவளைத் தடுப்பதுபோல வாசலிலிருந்த பொலிஸ்காரன் அவள் எதிரே வேகமாக வந்தபோது தனது கையால் அவனது தோளைக் கெய்லா தட்டிவிட்டாள். பொலிஸ்காரன் அப்படியே சிலைபோல நின்று அதிகாரியைப் பார்த்தான்.

கெய்லாவுக்கு கோபம் வந்தால் அவளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சினம் கொண்ட பெண்தெய்வம் போல நடந்துகொள்வாள். விளைவுகளைக் குறித்து அந்தத் தருணத்தில் கொஞ்சமும் கவலைப்படமாட்டாள். பின்னொரு பொழுதில்நான் அப்போது ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பது உண்மையிலேயே எனக்குப் புரியவில்லைஎன்பாள்.

கெய்லா பொலிஸ் நிலைய வாசலில் நின்றுகொண்டு என்னை நோக்கி ‘”வா போய்விடுவோம், என்ன செய்துவிடுவார்கள் பார்த்துவிடலாம்என்று பிரஞ்சு மொழியில் கத்தினாள். நான்இதே வருகிறேன்எனச் சொல்லிவிட்டு அதிகாரியைப் பார்த்தேன்.

அதிகாரி தலையைச் சாய்த்து என்னை உட்காரச் சொன்னான். எங்கள் இருவரது பெயர், பாஸ்போர்ட் விபரங்களையும் கண்டி நகரத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டான். உடனடியாகவே நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் கொடுத்திருந்த விபரங்களைச் சரிபார்த்தான். பின்புஅந்தப் பெண் நாட்டிலிருந்து இன்னும் இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும். அல்லது இந்த நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் அவள் கைதுசெய்யப்படுவாள்எனச் சொல்லிவிட்டுநீ போகலாம்என்பதுபோல வாசலை நோக்கிக் கையைக் காட்டினான்.

நான் வாசலை நோக்கி நடந்தபோது அதிகாரி எனக்கு முன்பாகச் சென்றான். வாசலில் நின்ற பொலிஸ்காரனின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிய அதிகாரிஇந்த வெள்ளைச் சரக்கு லாபிள் பழம்போல இருக்கிறாள், அவளால் தொடப்பட்ட நீ அதிர்ஷ்டசாலிஎன்று சொன்னது எனக்குக் கேட்டது. அந்தப் பொலிஸ்காரன்க்ளுக்எனச் சிரித்தான். அதிகாரி வேகவேகமாக நடந்துபோய் ஜீப்பில் தொற்றிக்கொண்டான்.

நானும் கெய்லாவும் வண்டியில் கண்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது செக்கலாகிவிட்டது. ஆபத்தான மலைவளைவுப் பாதையில் வண்டி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. அதலபாதாளங்களில் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்தன. கெய்லா எனது தோளில் சாய்ந்திருந்தாள். சில பெருமூச்சுகளை வெளியிட்டுவிட்டுநான் பொலிஸ் நிலையத்தில் அப்படி நடந்துகொண்டிருக்கக் கூடாது, அதனால் உனக்கு ஏதும் கஷ்டம் ஏற்படலாம் என நான் சிந்திக்கவேயில்லை, நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என எனக்கு உண்மையிலேயே புரியவில்லைஎன்றாள். நான் சாரதி கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு ஓசையெழுப்பாமல் கெய்லாவை முத்தமிட்டேன்.

வழியில்போகம்பரசந்தியில் வண்டியை நிறுத்தி தேநீர் குடித்தோம். “நான் கீழே இறங்கவில்லைஎனச் சொல்லிவிட்டு வண்டிக்குள் அமர்ந்தவாறே கெய்லா தேநீர் அருந்தினாள். எங்களது வண்டிக்கு இடதுபுறத்தில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டசிறைக்குச் செல்லும் வழியை அறிவிக்கும் பலகை இருந்தது. அந்தச் சந்தியிலிருந்து கிளைக்கும் பாதையொன்று இலங்கையின் மிகப் பெரியதும் பழமை வாய்ந்ததுமான சிறைச்சாலையை நோக்கிச் செல்கிறது. நான் கெய்லாவிடம்இந்தச் சிறையில்தான் என் இளமைக்காலத்தின் ஆறுவருடங்களை நான் கழித்தேன்என்றேன்.

நாங்கள் கண்டி நகரத்தை நெருங்கும்போது தலதா மாளிகையின்பத்திரிப்புவகோபுரம் முழுவதுமாக அலங்கார விளக்குகளால் இழைக்கப்பட்டு ஒளி பரப்புவதைக் கண்டோம். எங்களது விடுதிக்குள் நாங்கள் நுழைந்தபோது வரவேற்புப் பகுதியிலிருந்த பெண், இரண்டு பொலிஸ்காரர்கள் வந்து எங்களைக் குறித்து விசாரித்துவிட்டுப் போனதாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் தனது கால்களை அகல விரித்து நின்று இடுப்பில் தனது கைகளை ஊன்றியவாறு கெய்லா என்னைப் பார்த்தாள். பிறகு கைகளைத் தளர்த்திக்கொண்டு தலையைச் சடாரென மார்பை நோக்கிக் கவிழ்த்து பெருமூச்சு விட்டாள்.

அதிகாலையிலேயே நாங்கள் விடுதியைக் காலி செய்துகொண்டு கொழும்புக்குப் புறப்பட்டோம். கெய்லா தனது முதுகை முழுவதுமாக மறைக்கும்வகையில் சட்டையணிந்திருந்தாள். வியட்நாமில் வாங்கிய காவிநிறப் பட்டுச் சால்வையைக் கழுத்தில் சுற்றியிருந்தாள். எட்டுமணியளவில் கொழும்புக்கு வந்துவிட்டோம். கடற்கரையோரமாக இருந்த ஒரு விடுதியில் மதியம்வரை அடித்துப்போட்டது போல தூங்கினோம். தூக்கத்தால் எழுந்ததும்கொஞ்சம் கஞ்சா வேண்டும்எனக் கெய்லா கேட்டாள். அதை எங்கே வாங்குவது என எனக்குத் தெரியவில்லை. அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

உச்சி வெயிலில் வெளியே கிளம்பினோம். அந்த வெப்பத்திலும் கெய்லா தனது தோள்களில் காவிநிறச் சால்வையை விரித்துப் போட்டிருந்தாள். அந்தச் சால்வை அவளது முதுகை முழுவதுமாக மறைத்து அவளது இடுப்புவரை தொங்கியது. “வெக்கையாக இருக்கிறது அதை எடுத்துவிடுஎன்றேன். “இல்லை எனக்குச் சற்றுக் குளிராகயிருக்கிறதுஎன்றாள். விமானப் பயணச் சீட்டு அலுவலகத்துக்குச் சென்றுஎங்களது பயணத் தேதியை மாற்றவேண்டும், நாளைக்கே நாங்கள் பிரான்ஸுக்கு அவசரமாகப் புறப்பட வேண்டும்என்றோம். நல்வாய்ப்பாக, அடுத்தநாள் இரவு புறப்படும் விமானத்திலேயே எங்களுக்கு இடம் கிடைத்தது.

மறுபடியும் விடுதி அறைக்கு வந்தோம். கெய்லா மிகவும் சோர்ந்து போயிருந்தாள். இருவரும் அருகருகாகக் கட்டிலில் கிடந்தோம். கெய்லாவின் கண்களில் நீர் வடிந்துகொண்டிருந்தது. நான் அவளது கண்களைத் துடைத்துவிட்டு அவளது பச்சைநிறக் கண்மணிகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கெய்லாநான் உன்னை உனது கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறேன்என்று எனது காதுக்குள் சொன்னாள். நான் எதுவும் பேசாமலிருந்தேன்.

கெய்லா கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து தரையில் நின்றாள். அவள் அணிந்திருந்த மேற்சட்டையைக் கழற்றித் தரையில் வீசியடித்தாள். பிய்த்து எறிவது போன்ற அவசரத்துடன் மார்புக் கச்சையையும் கழற்றித் தரையில் வீசினாள். பின்பு கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டாள். அவளது முதுகின் வலதுபுற மேற்பகுதியில் புத்தர் தியான நிலையிலிருந்தார். நான் கூர்ந்து கவனித்தபோது புத்தர் மேலும் கீழுமாகச் சற்று அசைந்தார்.

கெய்லாவிடம் அழகிய சிறிய ஒப்பனைப் பெட்டியொன்றிருந்தது. அந்தப் பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்த ஒரு குறிப்பிட்ட குப்பியை எடுக்குமாறு கெய்லா என்னிடம் சொன்னாள். அந்தச் சிறிய குப்பியில் எரிசாராய வாசனையுடன் வெண்ணிறத் திரவமிருந்தது. அந்தத் திரவத்தைத் தனது முதுகில் ஊற்றி புத்தரின் உருவத்தை அழித்துவிடுமாறு கெய்லா சொன்னாள்.

கெய்லா, நான் சொல்வதைக் கேள்! இது தேவையில்லை, நாங்கள் நாளையே இங்கிருந்து போய்விடப் போகிறோம்என்றேன்.

கெய்லா தனது தலையைத் தூக்கி என்னைப் பார்த்துஇல்லைநாங்கள் நாளைக்குப் போகவில்லைஎன்றாள்.

மூன்றாவது நாள் அதிகாலையில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்டோம். அந்தத் தனியார் சொகுசுப் பேருந்தில் நாங்கள் இரண்டு முன் இருக்கைகளைக் கோரிப் பெற்றிருந்தோம். அந்த இருக்கைகளிலிருந்து பேருந்தின் முன்கண்ணாடி வழியே நிலவியல் காட்சிகளையும் சிறு நகரங்களையும் கிராமங்களையும் பார்த்தவாறே பயணித்தோம். கெய்லா எனது தோளில் சாய்ந்திருந்தாள். அவள் கையில்லாத, பாதி முதுகு தெரியும் செம்மஞ்சள் நிற பனியன் அணிந்திருந்தாள். அவளது வலதுபுற முதுகின் மேற்பகுதியில் உள்ளங்கையளவான இடம் கடுமையாகச் சிவந்திருந்தது. சிவப்பின் ஓரங்களில் தோல் சற்றுத் தடித்துக் கறுத்திருந்தது. நான் அந்தக் கறுப்பையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

காடு என் ஞாபகத்தில் வந்தது. என்னுடைய பதினெட்டாவது வயதில் அந்தச் சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவத்தை இந்த உலகத்தில் நான்கு பேர்கள் மட்டுமே அறிந்திருந்தோம். இப்போது என்னைத் தவிர மற்றவர்கள் யாரும் உயிருடனில்லை.

1977ம் வருடம் நிகழ்ந்த இனக்கலவரம் மலையகத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தது. கூட்டம் கூட்டமாக மலையகத் தமிழர்கள் வடக்கை நோக்கி இடம்பெயரத் தொடங்கினார்கள். இந்த இடப்பெயர்வுக்கு அரசாங்கம் பலவழிகளிலும் முட்டுக்கட்டை போட்டதால் இடப் பெயர்வு மெதுவாகவே நடைபெற்றது. வருடம்தோறும் அகதிகள் வந்துகொண்டிருந்தார்கள். ‘காந்தீயம்அமைப்பின் தொண்டர்கள் வன்னிக் காடுகளை அழித்துப் புதிய குடியிருப்புகளை உண்டாக்கி, வந்துகொண்டிருந்த மலையகத் தமிழர்களைக் குடியமர்த்திக் கொண்டிருந்தார்கள்.

எனது கிராமத்திலிருந்து நானும் இன்னும் மூன்று இளைஞர்களும் புறப்பட்டு, வன்னிக்குச் சென்று காந்தீயம் அமைப்பில் தொண்டர்களாகப் பதிவு செய்துகொண்டோம்.  ‘செல்வா நகர்என்ற புதிய குடியிருப்புக்காகக் காடு வெட்டிக்கொண்டிருந்த தொண்டர் குழுவுடன் நாங்கள் சேர்ந்துகொண்டோம்.

வவுனியாவிலிருந்து வடக்குநோக்கிச் செல்லும் கண்டி வீதியின் இருபத்திநான்காவது கிலோமீற்றரில் புளியங்குளம் இருக்கிறது. புளியங்குளத்திலிருந்து இன்னும் சில கிலோமீற்றர்கள் தொலைவில் கண்டி வீதியையொட்டிசெல்வா நகர்உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அய்ம்பது குடும்பங்களை அங்கே குடியேற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஒருநாள் மாலையில் வேலைகள் முடிந்த பின்பாகத் தொண்டர்கள் புளியங்குளத்திற்குத் திரும்பினார்கள். நானும் இன்னும் இரண்டு தோழர்களும் மட்டும் கண்டி வீதியிலிருந்து பத்து மீட்டர்கள் தூரம் விலகி ஒரு குழி தோண்டிக்கொண்டிருந்தோம். அந்தக் குடியேற்றத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் வரப்போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. எனவே விடிவதற்குள் அந்த இடத்தில்செல்வா நகர்என்றெழுதப்பட்ட கல்லை நடுவதாகயிருந்தோம். மூன்று அடிகள் ஆழத்திற்குத் தோண்டியதன் பின்னாக மண்வெட்டி மீண்டும் மீண்டும் கல்லில் மோதியது. கைகளால் மணலை விலக்கிப் பார்த்தபோது உள்ளே ஒரு சிலையிருப்பதாகத் தெரிந்தது. நாங்கள் மூவரும் வேகமாக மணலை வாரிக்கொட்டியபோது ஆறு அடிகள் உயரமான சிலையொன்று குப்புறக் கிடப்பதைக் கண்டோம். மிகுந்த பிரயாசைப்பட்டு அந்தச் சிலையைப் புரட்டிப் போட்டபோது, புராதன புத்தர் சிலையொன்றை நாங்கள் கண்டோம். உடனேயே இலைதழைகளால் புத்தரை மூடி வைத்தோம்.

நான் வேக வேகமாகச் சைக்கிளை மிதித்துக்கொண்டு புளியங்குளத்தை நோக்கிச் சென்றேன். ‘செல்வா நகர்குடியேற்றத் திட்டத்துக்குப் பொறுப்பான அத்தனாஸ் பாதிரியார் அங்கேதானிருந்தார். அவரிடம் நான் புத்தர் சிலை குறித்த செய்தியைச் சொன்னதும்ஆண்டவரே!” என வாய்விட்டுக் கூவிய பாதிரியார் மார்பில் சிலுவைக் குறியிட்டுக்கொண்டார். எனது சைக்கிளில் பாதிரியாரையும் ஏற்றிக்கொண்டு செல்வா நகருக்குத் திரும்ப வந்தேன்.

அத்தனாஸ் பாதிரியார் குழிக்குள் இறங்கி, புத்தர் சிலையைச் சோதித்தார். தனது சட்டைப் பையிலிருந்து சிறிய குறிப்புப் புத்தகத்தை எடுத்து அதில் கிறுக்கலான ஆங்கில எழுத்துகளில் கடகடவென எழுதினார். பின்னர் அவர் ஒரே தாவலில் குழியிலிருந்து மேலே வந்தார். எங்கள் மூவரையும் ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டுஇந்தச் செய்தி வேறு யாருக்காவது தெரியுமா?” எனக் கேட்டார். இல்லையென்றோம்.

பாதிரியார், வெட்டப்பட்டு விழுந்து கிடந்த மரமொன்றின் மீது அமர்ந்துகொண்டு தனது காற்சட்டையில் ஒட்டிக்கிடந்த மணலைத் தட்டிவிட்டார். பின்பு தாழ்ந்த குரலில் எங்களிடம் இப்படிச் சொன்னார்:  “இங்கே புத்தர் சிலை கிடைத்த செய்தி அரசாங்கத்துக்குத் தெரியவந்தால் இந்த இடத்தில் முன்னொருகாலத்தில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான தடயம் இதுவென அவர்கள் சொல்வார்கள். புத்த பிக்குகள் வழிபாட்டிற்காக இங்கே வருவார்கள். சிங்களத் தொல்பொருள் ஆய்வாளர்கள் இங்கே படையெடுப்பார்கள். வன்னிமண் தமிழர்களது பாரம்பரிய நிலம் என்பதை அவர்கள் மறுப்பார்கள். அது நல்லதல்லஆகவே இந்தச் சிலையைக் காதும் காதும் வைத்ததுபோல அழித்துவிடுங்கள்!”

அன்று இரவு, நாங்கள் மூன்றுபேரும் கயிறுகளால் புத்தரைப் பிணைத்து நடுவே பலமான இரும்புக் கம்பிகளைச் செருகி, புத்தரை அடர்ந்த காட்டிற்குள் தூக்கிச் சென்றோம். புத்தரைக் கீழே போட்டுவிட்டு, நான் அலவாங்கால் முதல் அடியை புத்தரின் மார்பில் இறக்கினேன். சிலையிலிருந்துகிலுங் கிலுங்எனச் சில்லறை நாணயங்கள் குலுங்குவது போல ஒலி எழுந்தது. அலவாங்கு என் கைகளிலிருந்து துள்ளப் பார்த்தது. ஏதோ நூதனமான கல்லில் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது அடியில் புத்தரின் மார்பு இரண்டாகப் பிளந்தது. நாங்கள் மூவரும் ஆள்மாறி ஆளாக அடித்து அந்தச் சிலையைத் தூள் தூளாக்கினோம். ஒவ்வொரு அடிக்கும்கிலுங் கிலுங்என்ற ஒலி எழுந்துகொண்டேயிருந்தது. சிலையைச் சல்லிக் கற்களாகச் சிதைத்தோம். அந்தக் கற்களைகாட்டின் எல்லாத் திசைகளிலும் சில்லஞ் சில்லமாகக் குழிதோண்டிப் புதைத்தோம். அங்கேயொரு புத்தர் சிலையிருந்ததற்கான எந்தத் தடயத்தையும்விட்டுவைக்க நாங்கள் விரும்பவில்லை. இவ்வளவையும் செய்து முடிக்கும்போது பொழுது விடிந்துவிட்டது. தூங்கச் செல்லாமல் அப்படியே வந்து அந்த விடிகாலையில்செல்வா நகர்என்ற பெயர்க் கல்லை நாங்கள் தோண்டிய குழியில் நாட்டினோம்.

கெய்லா ஆர்வத்துடன் நிலவியல் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பேருந்து கண்டிவீதியால் புளியங்குளத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. இந்த இருபத்தைந்து வருடங்களில் அந்தப் பகுதிகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. வீதியோரத்தில் சில வாகனங்கள் எரிந்து கிடந்தன. ஆள்நடமாட்டமே இருக்கவில்லை.

நான் வீதியையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த வீதியின் ஒவ்வொரு கல்லும் எனக்குப் பரிச்சயமானது. அந்த வீதியின் ஒவ்வொரு மேடுபள்ளத்திலும் எனது சைக்கிள் நூற்றுக்கணக்கான தடவைகள் பயணித்திருக்கிறது. வீதியோரத்தில் நின்றிருந்த மரங்கள் ஒவ்வொன்றையும் நான் அறிவேன். பேருந்து இன்னும் இரண்டு நிமிட நேரத்தில்செல்வா நகரைக் கடக்கும் என நான் அனுமானித்தபோது எனது கண்களை இறுக மூடிக்கொண்டேன். தூங்குவதுபோல தலையை இருக்கையில் சாய்த்துக்கொண்டேன்.

சரியாக இரண்டு நிமிடங்களில் பேருந்து நிறுத்தப்பட்டது. நான் கண்களை மூடியவாறேயிருந்தேன். பேருந்துக்கு வெளியேகிலுங் கிலுங்எனச் சத்தம் கேட்டது. “இந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை அமைக்கப்போகிறோம், அதற்குத் தர்மம் செய்யுங்கள்என்ற குரல்கள் சிங்களத்தில் ஒலித்தன. நான் கண்களை இறுக மூடியவாறேயிருந்தேன்.

பேருந்து மறுபடியும் புறப்பட்டபோது கெய்லா எனது தோளில் சாய்ந்துகொண்டாள். நான் அவளது முதுகைத் தடவிக்கொடுத்தேன். அப்போது கெய்லாவின் வலதுபுறத் தோள் சடுதியில் உலுக்கிக்கொண்டதை எனது கை உணர்ந்தது. கெய்லாவிடமிருந்துஷ்..’ என மெல்லிய வேதனைக் குரல் எழுந்தது. அப்போது புத்தர் எனது உள்ளங்கைக்குள் இருந்தார்.

(குவர்னிகாயாழ் இலக்கியச் சந்திப்பு மலரில் வெளியானதுஜுலை, 2013)


VN:F [1.9.4_1102]
Rating: 8.6/10 (13 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +10 (from 12 votes)
கச்சாமி, 8.6 out of 10 based on 13 ratings
5 comments to கச்சாமி
 • p ganeshan

  Enjoyed a wonderful historical short story after long years.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • inthak kathaiyinoolaaka shoba niruva mujalvathu enna? ilankai oru sinhala powththa naadu. athu sinhalalavarkalukke sontham. enave thamilarkal thankal thesam entru solla ontrumillai. arumai shopa keep it up.

  VA:F [1.9.4_1102]
  Rating: 3.0/5 (2 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 2 votes)
 • kadhirvel

  udaiththa buththar silai, meeendum ungalathu kaiyil varugirathendraal,
  buthar innum irukkirathu, inaveriyaay arasiyalaay…
  vaazthukkal anna

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • karunaakran

  Touching story sir. Nanum ungalodu Yazpanathirkum Selva nagarukum vandathu pondru unarvu erpadukirathu. en kannil neerum varukirathu. nandri vazthukkal

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • இளம்பூரணன்

  புத்த பிக்குகளின் பித்து. அருமையான கதை.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner