பத்து வருட பரண்

எனது நூல்களைப் பெற

55B, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppupradhigal@gmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
July 9th, 2014 | : நேர்காணல்கள் | Comments (2)

அதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறு

இயக்குனர் பிரசன்ன விதானகேயின் புதிய திரைப்படமான ‘ஒப நத்துவ ஒப எக்க’ (With you Without you ) தாஸ்தயேவ்ஸ்கி 1876-ல் எழுதிய A Gentle Creature என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. போருக்குப் பின்னான இலங்கையில் தத்தளிக்கும் இனத்துவ உறவுகளைச் சித்திரிக்கும் இந்தத் திரைப்படம் சர்வதேசப் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்று மதிப்புக்குரிய விருதுகளையும் வென்றிருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவின் முக்கியமான ஆறு நகரங்களில் பதினேழு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. சென்னையில் திரையிடப்பட்ட பி.வி.ஆர். திரையரங்கிற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகளால் படத்தைத் தொடர்ந்து திரையிட முடியாது எனத் திரையரங்க நிர்வாகம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, மாற்றுச் சினிமாவிற்கான களத்தையும் தளத்தையும் உருவாக்க கடினமாக உழைத்துக்கொண்டிருக்கும் ‘தமிழ் ஸ்ரூடியோ’ தோழர்களின் ஏற்பாட்டில் உடனடியாகவே ஆர்.கே.வி திரையரங்கில் ஒரு சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இயக்குனர் பிரசன்ன விதானகேயும் கலந்துகொண்ட அத்திரையிடலில் பல சர்ச்சைகள் கிளம்பின. காவற்துறை தலையிடுமளவிற்கு குழப்பங்கள் தீவிரமடைந்திருந்தன. அங்கே கைகலப்புகளும் நிகழ்ந்ததாக  ஊடகங்கள் தாரளமாகப் பொய்ச் செய்திகளை வெளியிட்டன. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அந்தத் திரையிடலில் பங்குபற்றியதோடு தொடர்ந்து நடந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டிருந்தார்.

இத்திரைப்படம் எதிர்வரும் 13-ம் தேதி பாரிஸில் ( THEATER MENILMONTANT) திரையிடப்படவிருக்கும் நிலையில் திரைப்படம் குறித்தும் சென்னைத் திரையிடல் சர்ச்சைகள் குறித்தும் கவிஞர் ஜெயபாலனுடன் உரையாடினேன். இந்த உரையாடல் இணைய வழியிலும் அலைபேசியிலும் நிகழ்ந்தது.

-ஷோபாசக்தி

09.07.2014


  With you Without you திரைப்படத்தை சென்னை பி.வி.ஆர். திரையரங்கில் திரையிடுவதை தமிழ்த் தேசியவாதிகள் தடுத்தார்கள் என்ற செய்தி எவ்வளவு தூரத்திற்கு உண்மையானது என நினைக்கிறீர்கள்?

இது தப்பான செய்தி. தாங்களும் தேசியவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒருசிலர் எதிர்த்தார்கள் என்று சொல்லியிருக்கலாம்.

 • தமிழ்நாட்டில் கும்பல் தணிக்கை (Mob censorship ) செயற்படுவதாக படத்தின் இயக்குனர் பிரசன்ன விதானகே ‘இந்து’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிடுவது சற்று மிகையாகத் தெரிகிறதே. எந்தக் குழுக்களும் அவரது படத்தைத் தணிக்கை செய்ய முயன்றதாகத் தெரியவில்லையே. தீவிரவாதிகள் என்ற வசனத்தை நீக்குங்கள் என்பது கோரிக்கைதானே?

தீவிரவாதிகள் என்ற வசனத்தை நீக்குங்கள் என்பது கோரிக்கைதான். ஆனால் திரைப்படத்தில் தமிழ் பெண் பாத்திரம், சிங்கள இராணுவத்தை வன்புணர்வு, கொலை தொடர்பாகத் திட்டும் வசனம் போலவே; இராணுவத்தினன் அந்தத் தமிழ் பெண்ணின் சகோதரர்களை பயங்கரவாதி என்று சொல்வதும் இயல்பானதே. அதை ‘நீக்குங்கள்’ எனக் கோரிக்கை வைத்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

 • தமிழ் ஸ்ரூடியோ நடத்திய திரையிடலின் பின்பு நடந்த விவாதங்கள் ஆரோக்கியமாக இருந்ததாகக் கருதுகிறீர்களா?

ஒரு விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். தமிழ் ஸ்ரூடியோ ஏற்பாடு செய்த திரையிடலில் இந்தப் படத்திற்கான எதிர்ப்புகள் ஆரம்பிக்கவில்லை. ஏற்கனவே படத்திற்கு எதிர்ப்புகள் இருந்ததாலேயே தமிழ் ஸ்ரூடியோ திரையிடலை ஒழுங்கு செய்தது. அந்தத் திரையிடலிலும் படத்தைப் புரிந்துகொள்ளாமல் எதிர்க்கும் ஒருசிலரின் எத்தனங்கள் தொடர்ந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அரங்கில் எதிர் வசைகள் கேட்டன. பின்பு நடந்த கலந்துரையாடல் நிகழ்வும் ஒரு சிலரின் கூச்சலால் பதற்றமானபோது பொலிஸார் சபையோரைக் கலைந்து போகும்படி சொன்னார்கள். அதன் பின்னர் நான் பிரசன்னவுடன் நின்றுவிட்டு, இயக்குனர் கவுதமனோடு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். என் அனுபவத்தில் இதெல்லாம் சின்னப் பிரச்சினைகள். போராட்டத்தில் தோழனை பாதுகாக்கும் அடிப்படைக் கடமை உணர்வுதான் என்னை இயக்கியது.

 • அந்த விவாதத்தின் போது பலர் உங்களை நோக்கிக் கூச்சலிட்டதை காணொளியில் பார்க்கக் கூடியதாகயிருந்தது. அப்படி என்னதான் பேசினீர்கள்?

பிரசன்ன விதானகே யாரென்றே தெரிந்திராத, அவரது இனவாதமற்ற, பிரிந்துசெல்லும் உரிமையை மதிக்கும் கலை மனதை அறிந்திராத இளைஞர்கள் பலர் படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ‘சிங்களவன்’ என வசை பாடிக்கொண்டிருந்தனர். அவரை தமிழர் விரோதியெனக் கருதி கூச்சல் போடப் போகிறார்கள் என்பதை நான் முன் உணர்ந்தேன். அதனாலேயே திரைப்படம் முடிந்ததும் உச்சஸ்தாயியில் ‘நன்றி பிரசன்ன, இது தமிழர் சார்பான படம்’ எனக் குரல் கொடுத்தபடியே பிரசன்னவுக்கு அருகில் சென்று நின்றுகொண்டேன். அதனால் என்னைத் தெரிந்த பலர் மவுனமாகிவிட்டார்கள். மே 17 அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் எனக் காட்டிக்கொண்ட ஒருசிலரே கூச்சல் போட்டார்கள். வேறுசிலர் கேள்விகள் கேட்டனர். என் குரலும் உயர்ந்தே இருந்தது. நானும் நாகரீகமான தொனியில் பேசவில்லை. ஏனெனில் அதற்கான சூழலோ வாய்ப்போ அங்கிருக்கவில்லை. தோழர் பிரசன்னா தமிழர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவானவர். வன்னியில் போராளிகளால் மதிக்கப்பட்டவர். அவரை எதிரியாகப் பார்ப்பதை அனுமதிக்க இயலாது என்பதையே நான் வலியுறுத்தினேன். நானும் கூச்சல் போட்டேன். பிரசன்ன, எழுப்பப்படும் கேள்விகளிற்கு விரிவாகப் பதில்களைச் சொல்லிவிட்டு இலங்கைக்கு திரும்பிப் போக முடியாத நிலை இருக்கிறது என்பதைத் தயவு செய்து மனங்கொள்ள வேண்டும். அத்தோடு தன் படைப்பே தன்னை நியாயப்படுத்தும் என்கிற பெரும் கலைஞனின் ஞானச் செருக்கு அவரிடமும் இருந்தது.

 • அரங்கில் குழப்பங்களோ எதிர்ப்புகளோ ஏதும் தொடங்கியிருக்காத நிலையில் நீங்கள் நாட்டாமை போல முன்னே சென்று அரங்கைக் கைப்பற்றியது சரியற்றதுதானே?

நிகழ்வுகளுக்கு வெளியில் தனிமைப்படுத்திப் பார்க்கும்போது நீங்கள் சொல்வது சரி. ஆனால் நிகழ்வு ஒரு சிலரின் யுத்த முஸ்தீபுகள் நிறைந்ததாக இருந்தது. அந்த ஒரு சிலர் மத்தியில் திரைப்படம் ஓடிக்ககொண்டிருக்கும்போதே படம் முடிந்ததும் எதிர்ப்புகளைக் காட்டுவதற்கும் குழப்பங்களை விளைவிப்பதற்குமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதை நான் கவனித்தேன். என்னிடமே அது குறித்துச் சிலர் பேசினார்கள். எனவே அந்த இடந்தில் நண்பன் பிரசன்னவைப் பாதுகாக்க நான் முன் கை எடுத்தேன். என் செயல் நல்ல மரபல்ல. ஆனாலும் திரையிடலுக்கு முன்னமே நாட்டாண்மை போல நடந்துகொண்ட கும்பல், சபையிலும் நாட்டாண்மை செய்யத் தயாராக நின்ற சூழலில் எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. நான் மவுனமாக நின்றிருந்தால் சபையோரை நாட்டாண்மை செய்யவந்த ஒருசிலரின் கூச்சலே வென்றிருக்கும். என்னுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் சரியென்று சொல்ல மாட்டேன். ஆனால் அறம் சார்ந்து நின்றேன் என்று சொல்வேன்.

அறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார்

மறத்துக்கும் அஃதே துணை

 • உங்களிற்கும் வேறு சிலருக்கும் வாக்குவாதம் வரவே, காவற்துறை அரங்கினுள் நுழைந்ததாகவும் தொடர் கூச்சல்களால் நிகழ்வை இடையிலேயே முடித்துக்கொள்ள வேண்டியிருந்ததாகவும் தமிழ் ஸ்ரூடியோ அருண் பதிவு செய்துள்ளார். உண்மையிலேயே உரையாடுவதற்கான சூழ்நிலை அரங்கில் இருக்கவில்லையா?

திரையிடலின் முன்னரே, தமிழர் விரோதமான சிங்களவர் படம் திரையிட அனுமதியோம் என நிலமை மோசமடைந்ததால்தான் அருண் மேற்படி திரையிடலை ஒழுங்குசெய்தார். மேற்படி சூழல் திரையிடலின்போது மோசமடைந்தது. உரையாடும் சூழல் இருக்கவில்லை.  உரையாடும் சூழல் இருந்ததாக அருண் சொன்னால், பழியை அவர் என் தலையில் போட விரும்பினால் நான் அதைத் தோழமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் தலையிடாதிருந்திருந்தால் அவையை எதிர்பாளர்களே கைப்பற்றி நிகழ்வையும் அவர்களே வன்முறையுடன் தீர்மானித்திருப்பார்கள். அருண் மிகவும் மென்மையாகவே நடந்துகொண்டார். பொலிஸார் அருணின் அழைப்பில்லாமல் வந்ததாகவோ அவரது சம்மதமில்லாமல் எந்தக் காரியத்திலும் தலையிட்டதாகவோ நான் நினைக்கவில்லை. பொலிஸார் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. பொலிஸார் நுழைந்தபோது அருணை நோக்கியும் பிரசன்னவை நோக்கியுமே எதிர்ப்பாளர்கள் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த சமயம் யாரும் என்னோடு கூச்சல் போடவில்லை. எதிர்ப்பாளர்களின் கவனமும் கூச்சலும் பிரசன்ன மற்றும் அருண்மீதே திரும்பியிருந்தன.

 • உங்களை, தமிழ் உணர்வாளர்கள் அடித்து உதைத்தார்கள் என்ற பொய்ச் செய்தி பரப்பப்பட்டதற்குப் பின்னணியில் இலங்கை தூதுவராலயம் இருக்கலாம் என்கிறீர்கள். ஆனால் இந்தச் செய்தியை புலம் பெயர்ந்த நாடுகளிலிருக்கும் தமிழ் தேசியவாத ஆதரவு ஊடகங்கள்தானேகுறிப்பாக ‘தமிழ்வின்’ முதலில் பரப்பின?

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் உள்ள விடுதலை ஆர்வலர்களுள் ஒருசிலரும், தமிழகத்தில் அவர்களோடு தொடர்புள்ள ஒருசிலரும் அதிதீவிரவாதம் பேசியபடியே, ராஜபக்சவை எதிர்ப்பவர்களையே எதிர்க்கிறார்கள்.

உண்மையில், புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் உள்ள உண்மையான விடுதலை ஆர்வலர்களையும் அமைப்புகளையும் விமர்சனங்களோடு நான் ஆதரிக்கிறேன். அவர்களோடு தொடர்புள்ள தமிழக ஆதரவுச் சக்திகளையும் நான் மதிக்கிறேன். ஆனால் ஒருசிலர் விடுதலையின் பெயரில் தமிழகத்தில் சிலரை பிழையாக வழிநடத்த முனைகிறார்கள். அவர்களையே நான் எதிர்க்கிறேன். அவர்களும் என்னை எதிர்க்கிறார்கள்.

முதலில் ‘மாலை மலரி’ல்தான் நான் தாக்கப்பட்டதாகச் செய்தி வந்தது என நினைக்கிறேன். இலங்கை அரசு தன் கையாட்களின் மூலம் இச்செய்தியைப் பரப்புகிறது என்பதை உணர்ந்த பின்னர் ‘மாலை மலர்’ கவலை தெரிவித்து என் மறுப்பையும் வெளியிட்டார்கள். ஆனால் நான் தாக்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட ‘தமிழ்வின்’ செய்தி பிழையென்பது பகிரங்கமான பின்னரும் மறுப்புச் செய்தி வெளியிடவில்லை. அவர்களை மறுப்பு செய்தி வெளியிடாமல் எது தடுத்தது? இச் செய்தியின் பின்னணியில் இலங்கை உளவுத்துறை இருக்கிறது என நான் கருத அடிப்படைகள் உள்ளன.

‘தமிழ்வின்’ போன்ற ஊடகங்களுக்கு செய்திகளை உறுதிப்படுத்தும் பொறுப்புணர்வும் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் கண்ணியமும் இன்னமும் கைவரவில்லை. மாலை மலரின் மறுப்புச் செய்தியையாவது தமிழ்வின் பிரசுரித்திருக்கலாம்.

இதற்குமேல் எதுவும் கேட்பதெனில் என்மீது அவதூற்றுச் செய்தியை வெளியிட்டுவிட்டு மறுப்பு வெளியிட மறுத்துவிட்ட ‘தமிழ்வின்’ உரிமையாளரிடமும் ஆசிரியரிடமும்தான் கேட்கவேண்டும். சட்ட நடவடிக்கையை நான் விரும்புவதில்லை. ஒரு கவிஞனால் அறம் பாடிச் சபிக்கத்தான் முடியும்.

 • பிரசன்ன விதானகேயை நீங்கள் நன்கறிவீர்கள். அவர் விடுதலைப் புலிகளிற்கு திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடத்தினார் என்ற செய்திகள் எவ்வளவிற்கு உண்மையானவை? புலிகள் போன்ற மனிதவுரிமைகளை மதிக்கத் தெரியாத பச்சை இனவாதிகளுடன் பிரசன்ன போன்ற மனித உரிமைகள் சார்ந்து நிற்கும் கலைஞன் இணங்கி வேலைசெய்ததை எப்படிப் புரிந்துகொள்வது? சுதந்திரமாகப் பேச முற்பட்ட நமது கலைஞர்களைப் புலிகள் கொன்றுகொண்டிருக்கும் அதே நேரத்தில் பிரசன்ன புலிகளுடன் வேலை செய்தார் என்பது என்ன?

நீங்கள் வைப்பது விமர்சனமா குற்றச்சாட்டா எனத் தெரியவில்லை. உண்மையில் இது மிகச் சிக்கலான கோட்பாடு ரீதியான பிரச்சினை. வரலாற்றில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய தேசிய விடுதலை அமைப்புகளில் எல்லா வகையான போக்குள்ளவர்களும் உள்ளே இருந்தார்கள். இதற்கு புரட்சிகர அமைப்புகள்கூட விதிவிலக்காகவில்லை. லெனினும் ஸ்டாலினும் த்ரொட்ஸ்கியும் ஒரே அமைப்பில்தானே இருந்தார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றையும் கலாச்சாரப் புரட்சியையும் ஆராய்கிறவர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின், கலாச்சாரப் புரட்சி அணியின் குழந்தைதான் பொல்பொட் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இதனால் எல்லாம் நாம் ருசிய – சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு தொடர்புகளை வைத்திருந்தவர்களைக் குற்றம் சாட்ட முடியாது. 1996-ல் இருந்து வன்னியை நான் நன்கு அறிவேன். பாலகுமாரனையும் கஸ்ரோவையும் நான் எப்போதும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்ததில்லை. நிலாந்தன் தலைமையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடந்த கவிஞர் கருணாகரனின் புத்தக வெளியீடு நிகழ்வில், நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் அஞ்சி உறைய கஸ்ரோவை விமர்சித்துப் பேசியவன் நான். விடுதலை வரலாறு முழுவதிலும் எதிரிக்கு எதிரான அமைப்புகளோடு மக்கள் சார்பான விமர்சனத்துடனும், எதிரிக்கு எதிரான இணக்கமுமாகச் செயற்படுவது விடுதலைக்கான கலைஞர்களதும் அறிஞர்களதும் பாதையாகவே இருந்துள்ளது. இதற்கு வெளியில் மேலோர் அங்கலாய்ப்புகளுக்கும் அனார்க்கிஸத்துக்குமே இடமிருந்தது.

இந்தப் பின்னணியில்தான் நான் பிரசன்னவைப் புரிந்து கொள்கிறேன்.

 • தமிழகத் தமிழ் உணர்வாளர்கள் நண்பர்களையும் எதிரிகளாக்கும் வேலையைச் செய்கிறார்கள் எனக் கவலைப்பட்டிருந்தீர்கள். இதைச் சரி செய்ய முடியுமா? அதேவேளையில் புலிகளையோ தமிழ்த் தேசியத்தையோ விமர்சிப்பவர்களிற்கு இனி இவர்களது வெளிகளில் இடமேயில்லையா?

மேற்படி சம்பவத்தை வரலாற்று நிகழ்ச்சியாக எண்ணிக் குழப்பமடைய வேண்டாம். இது ஒருசிலரின் தனிப்பட்ட எதிர்ப்பு மட்டுமே. இது தமிழ் உணர்வாளர்களது இயக்கமல்ல.

 • ‘பிரபாகரன்’ திரைப்பட இயக்குனர் தாக்கப்பட்டது, எழும்பூர் மகாபோதியில் பவுத்த துறவிகள் தாக்கப்பட்டது, தஞ்சாவூரில் பவுத்த துறவி தாக்கப்பட்டது, சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப்பட்டது ஆகியவற்றின் தொடர்ச்சிதானே அன்று திரையரங்கில் நடந்த கும்பல் கலாட்டா. அப்போதெல்லாம் மவுனமாயிருந்த தமிழக அறிவுஜீவிகள் இப்போது கலையின் பெயரால் வடிக்கும் கண்ணீரை எப்படி மொழிபெயர்ப்பது?

சித்தாந்தத் தெளிவும் தெரிவும் உள்ளமுறையில்; இலங்கை சிங்கள பவுத்த அரச பயங்கரவாதிகளையும் அவர்களது அணியினரையும் தனிமைப்படுத்தும் வகையிலான தமிழக மக்களின் விழிப்பும் எதிர்ப்பும் அவசியம். இனப்படுகொலைக்குப் பிந்திய சூழலில் தமிழக மக்கள் ஆதரவு என்கிற கவசம் இல்லாவிட்டால் உலகின் கவனம் எங்கள்மீது திரும்பியிருக்காது. ‘புதுதில்லி’யின் நிலையில் சிறு மாற்றமும்கூட ஏற்பட்டிருக்காது இன்றும் நிர்க்கதியான எங்கள் மக்கள்மீதும் பெண்கள்மீதும் சிங்கள இராணுவ வெறியாட்டம் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கும். தமிழக மக்களின் ஆதரவு இனப்படுகொலைக்கு எதிரான தடையாக என்றும் எங்களுக்கு அவசியம்.

சிங்கள பவுத்த அரச பயங்கரவாதிகளுக்கு எதிரான தமிழக மக்களின் கோபம் நியாயமானது. ஆனால் சிங்கள பவுத்த பேரினவாத அமைப்புகளுக்கு எதிராகச் செயலாற்றி ஆபத்துகளை எதிர்கொண்ட சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள், அரச பயங்கரவாததுக்கு எதிரான சிங்கள மக்கள் இருக்கிறார்கள் என்ற சேதி தமிழக மக்கள் பலருக்கும் தெரியவில்லை. அவர்கள் இது குறித்துத் தெளிவு பெற வேண்டும்.

 • அன்று நடந்த விவாதத்தின் காணொளியைக் கவனித்தவரை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இலங்கையில் இணைந்து வாழ்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றவாறாகவே தமிழ் உணர்வாளர்களின் வாதம் இருந்தது. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? இரண்டு இன மக்களும் படிப்படியாக பகைமையை மறந்து இணைந்து வாழ்வதைவிட இலங்கைக்கு இன்னொரு நல்ல தலைவிதி சாத்தியமென நீங்கள் கருதுகின்றீர்களா?

பிரசன்ன விதானகேயின் திரைப்படம், புரிந்துணர்வில்லாத சூழலில் ‘இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது’ போன்ற  உயர்ந்த பட்ச சலுகைகளுக்காக சேர்ந்து வாழமுடியாது என்றே சொல்கிறது. சுயநிர்ணய அடிப்படையில் பிரிவு அல்லது கூட்டாட்சி அமைய முடியும். செர்பியர்களுக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிறார்கள். கொசோவா மக்கள் இணைந்து வாழ முடியாது என்று முடிவெடுத்தார்கள். அண்மையில், எங்களைப் போன்ற இன ஒடுக்குதல் சூழலை எதிர்கொண்ட தென் சூடான் மக்களும் இணைந்து வாழ இயலாது என்ற முடிவை எடுத்தார்கள். வடக்கு சூடான் அரசுக்கும் சிங்கள அரசுக்கும் அதிக வேறுபாடுகளில்லை. உரிய தருணத்தில் எங்கள் மக்கள் எந்தத் தீர்வை முன்னெடுத்தாலும் அதை நான் ஆதரிப்பேன்.

 • இயக்குநரிடம் திரைப்படத்திற்கு வெளியே கேள்விகள் கேட்கப்பட்டது சரியா தவறா என்ற வாதங்கள் ஒருபுறமிருக்க, இலங்கையில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரசன்ன விதானகேக்கு அப்படி என்னதான் சிக்கல்? கூர்மையான அரசியல் உணர்வுடைய அவரால் நடந்தது இனப்படுகொலை என ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயக்குனராக அல்லாமல் இலங்கையின் மதிப்புமிக்க ஒரு பிரசை என்றளவில் அவர் தனது கருத்தைத் தெரிவித்திருக்கலாமே?

பிரசன்ன விதானகே மீது எனக்கு விமர்சனங்கள் இல்லையென்றில்லை. ஆனால் அவை பகை விமர்சனங்கள் அல்ல.

குறிப்பாக இந்தப் படத்தில், முன்னைநாள் சிங்கள இராணுவத்தினன் என்பதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக சிங்கள இராணுவக் கொடுமையால் பாதிக்கப்பட்ட கதாநாயகி கொதித்தெழுகிறாள். அவள் காதல் முறிவால் சிலகாலம் சஞ்சலப்படுவது இயல்பானதுதான். ஆனால் தனக்கு நிகழ்ந்த அநீதியான திருமணத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்த ஒரு பெண் குற்ற உணர்வில் உழல்வதும், மன்னிப்பாயா என்பதும் இயல்பில்லாமல் நெருடலாயிருக்கிறது. கதாநாயகன் அவளைப் புரிந்துகொள்ள முயலவில்லை. ஆனால் சேர்ந்து வாழ இந்தியா போவது உட்பட எல்லாச் சலுகைகளும் அளிக்கத் தயாராக உள்ளான். கதாநாயகி புரிந்துணரத் தயாரில்லாதவனின் சலுகைகளை நிராகரிக்கிறாள். அவளது தற்கொலைக்கு அரச பயங்கரவாத இராணுவத்தின் மீதான வெறுப்பு, காதல் முறிவு , ஊரில் சென்றுகூட வாழமுடியாமல் தொடரும் உள்ளூர் தமிழ் தலிபான்களின் நடவடிக்கைகள்தான் காரணமாக இருந்திருக்க முடியும். ஈழத்தில் நூற்றுக்கணக்கான  முன்னைநாள் பெண் போராளிகளின் தற்கொலைக்குக் காரணமாயிருந்து, எஞ்சியவர்களை நிம்மதியாக வாழவிடாது ஒடுக்கும் இராணுவம், ‘செத்துப் போ!’ என வசைபாடும் உள்ளூர் தமிழ்க் கலாச்சாரக் காவலர்கள் உட்பட்ட பல்முனைச் சிக்கல்கள் கதாநாயகியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்திருப்பின் படம் தர்மத்துடன் உயர்ந்த தளத்தில் நிறைவு பெற்றிருக்கும்.

 • உங்களுக்கு ஈழப் போராட்டத்தோடு கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் நெருங்கிய உறவுண்டு. போராட்டத்தின் பங்காளி நீங்கள். ஆனால் “சுற்றுலா விசாவில் வந்துவிட்டு அரசியல் பேசுகிறாயா” என மே 17 இயக்க நபரொருவர் உங்களைக் கேட்டதாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். என்னதான் நடக்கிறது தமிழகத்தில்?

அய்க்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பையும் போர்க் குற்ற விசாரணையை ஆதரிக்கும் நாடுகளையும் மகிந்த ராஜபக்ச அரசு முழு மூச்சாக எதிர்க்கிறது. அதே எதிர்ப்புப் பணியை தம் உணர்வின் பேரில் சிலர் தமிழகத்தில் செய்கிறார்கள். இவை தற்செயல் நிகழ்வுகளா அல்லது “எதிரி செய்வதையே அதிதீவிரவாதிகளும் செய்து தம்மை அறியாமல் எதிரியைப் பலப்படுத்திப் போராட்டத்தைப் பின்னடையச் செய்வார்கள்” எனஅதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறுஎன்கிற கட்டுரையில் லெனின் சொல்லிய நிலையா ? என்பது நமது சிந்தனைக்குரியது, இத்தகைய சூழல்கள் ஊடுருவல்காரர்களுக்கு மட்டுமே வாய்ப்பானதாகும். என்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என அவர்களுடன் வந்த ஒருவர் சொல்லியிருக்கிறார். அவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவராம். சுற்றுலா விசாவில் வந்து அரசியல் பேசுவது பற்றி சிங்கள உளவுத்துறை சொன்னதையே அவர்களுடனிருந்த வேறு ஒருவர் சொன்னார். அவர்கள் மே 17 அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களும் பிறரும் அடையாளம் காட்டினார்கள். தமிழகத்தில் இலங்கைத் தூதரகத்தின் ஊடுருவல் நடக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது.

 • அந்தக் கொலை மிரட்டிலின் பின்னணியில் இருக்கும் கும்பல் மனநிலை என்ன?

மே 17 அமைப்பின் தலைவருக்கும் ஆலோசகருக்கும்   என்னோடு பகை இருந்தது. ஒரு புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் பெண்ணை டெல்லியில் தடுத்துவைத்துக் கொடுமைப்படுத்தியது தொடர்பாக முகநூலில் நான் அவர்களோடு  சண்டைபோட்டது பகிரங்கச் செய்திதான் . அமைப்பின் ஆலோசகர் என்னைக் கொல்லப்போவதாக,  வெட்டப்போவதாக எல்லாம் முகநூலில் எழுதியிருக்கிறார். ஏனைய தமிழ் உணர்வாளர்களது பெயர்கள் பாதிக்கப் படக்கூடாது என்கிற காரணத்தால் நாங்கள் காவற்துறையிடம் போகவில்லை. என் மனைவிக்கும் கொச்சை மின்னஞ்சல்களை  அனுப்பினார்கள். முன்னர், என்னைச் சுடுவதும் இழிவுபடுத்துவதும் தமிழ்ப் பெண்களை கொடுமை செய்வதும் கொச்சைப்படுத்துவதும் இலங்கை  உளவாளிகளின் விருப்பமாக இருந்தது. அவர்களை எதிர்ப்பதாகக் கூறுகிறவர்களும் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது ஆராய்ச்சிக்கும் விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உரியதாகும்.

நித்திய கொலை அச்சுறுத்தல் தீர்க்க ஆயுள் என இதுவரை வாழ்ந்துவிட்டேன். எனவே இப்போதும் கலவரப்படவில்லை.

 • பிரசன்னவை ஆதரித்து நின்ற காரணத்தால் ஒரே இரவில் பல்வேறு நபர்களால் நீங்கள் துரோகி எனவும் ராஜபக்சவின் கைக்கூலி எனவும் வசைப்பாடப்பட்டீர்கள். துரோகிகளை வலிந்து உருவாக்கும் இந்தக் கலாசாரம் தமிழ்த் தேசியவாத அரசியலின் தவிர்க்கவே முடியாத ஒரு கூறா?

அப்படி ஒன்றுமில்லை. கூச்சல் போட்ட ஒருசிலரும் அடங்கிவிட்டார்கள். அதன்பிறகு ஈழத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் புலம் பெயர் நாடுகளில் இருந்தும் ஆதரவாக விசாரிப்பது அதிகரித்துள்ளது. உண்மையில் ஈழ விடுதலையை ஆதரிக்கும் தமிழக மக்கள் மத்தியில் என்மீதான கரிசனையும் அதிகரித்துள்ளது.

 • நீங்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட விடயத்தில் உங்களுக்கு இலங்கை அமைச்சர்கள் இருவரோடு நெருங்கிய நட்பு இருப்பதாகவும் அவர்களிற்கு தெரிவித்துவிட்டே நீங்கள் இலங்கை சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இனப்படுகொலை அரசாங்கத்தில் பங்கெடுக்கும் இரு அமைச்சர்களுடன் கவிஞன் ஜெயபாலனுக்கு நல்லுறவு சாத்தியம்தானா?

1996-ல் இருந்து 2006- வரைக்கும் இருதரப்பும் கேட்டுக்கொண்டதற்கு அமைய நேரடியாக விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் தலைமைக்கும் இடையில் தூதுவராகப் பணியாற்றினேன். அக்கால கட்டத்தில் விடுதலைப் புலிகளும் முஸ்லிம் அமைச்சர்களும் என் பாதுகாப்பில் அக்கறையாக இருந்தார்கள். நானும் முஸ்லிம் அமைச்சர்களது பாதுகாப்புத் தொடர்பாகத் தொடர்சியாக வன்னியோடு தொடர்பில் இருந்தேன். 2006-ன் பின்னர் இணையத்தின் ஊடாக மேற்படி பணிகளைச் செய்தேன். அந்த வரலாற்றின் தொடர்ச்சிதான் நான் இலங்கை சென்றபோது கோத்தபாய அணியினரை அச்சுறுத்தியது. மீண்டும் தூதுவராக நான் பணியாற்றுகிறேனோ என அவர்கள் சந்தேகப் பட்டார்கள்.

வரலாறு காணாத ஒரு நிகழ்வு நடந்தது. பயங்கரவாதியெனக் குற்றஞ்சாட்டி அரசு என்னைக் கைது செய்தபோது அதனை நியாயப்படுத்தவேண்டிய நீதி அமைச்சர் தோழமைக்குரிய ரவூப் ஹக்கீம், ‘ஜெயபாலன் ஒரு குற்றமும் செய்யவில்லை’ எனப் பிரகடனப்படுத்தினார். சர்வதேச சமூகம் அவரது நிலைபாட்டைப் பின்பற்றியது. தோழர் ரவூப் ஹக்கீமின் அறிக்கையில் இருந்த வாசகங்ளை அடியொற்றி எரிக் சொல்கைம் இலங்கை அரசை எச்சரித்தார்.

தமிழையே பேசினாலும் மலையகத் தமிழர்கள் தனி இனமென்கிற பிரக்ஞையே அரசில் அமைச்சராக இருந்த அமரர் தொண்டமானை நாம் அங்கீகரித்து உறவாடும் அரசியல் வெளியை (Political space) உருவாக்கியது. தமிழ் பேசுவதால் முஸ்லிம்கள் தனி இனம் இல்லையென்கிற மனோபாவம் இங்கு தடையாக இருக்கின்றது. ஆனாலும் விடுதலைப் புலிகளும் ஏனைய விடுதலை அமைப்புகளும் அமரர் பதியூன் முஹமத், அமரர் ஹமீத், அமைச்சர் ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒப்பந்தமெல்லாம் செய்திருக்கிறார்கள். ஈழத்துக்குப் பங்காளிகளான முஸ்லிம் மக்களையும் அவர்களது தலைமையையும் தனி இனமாக உணர்ந்தால் அவர்களோடும் அவர்களது தலைவர்களோடும் நட்பு வலிமையானதாக மாறிவிடும். ஈழ விடுதலையும் முஸ்லிம் மக்களின் தலைமைகளுடான நட்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தான்.

 • முடிவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

சுய விமர்சனத்திற்கும் தயங்காமல் பிழைகளைக் களைவதற்கும் அதைத் தொடரவிருக்கும் பரந்துபட்ட அய்க்கியத்துக்கும் விடுதலைக்கும் தயாராகுங்கள்!

***

VN:F [1.9.4_1102]
Rating: 5.8/10 (8 votes cast)
VN:F [1.9.4_1102]
Rating: +6 (from 6 votes)
அதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறு, 5.8 out of 10 based on 8 ratings
2 comments to அதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறு
 • Saravanapavan

  தமிழ்வின் இணையத் தளம் என்னுடையது இல்லை. உதயன் பத்திரிகை அல்லது உதயன் இணையத் தளத்தில் ஏதாவது தகவல்கள், செய்திகள் வெளியானால் மட்டுமே நான் பொறுப்பாளி.
  உங்களுடைய பதிவில் இருந்து இந்தத் தவறான தகவலை நீக்கிவிடுவது விரும்பத்தக்கது.

  கௌரவ ஈ. சரவணபவன்
  நாடாளுமன்ற உறுப்பினர்.

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)
 • Shobasakthi

  நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மறுப்புக் குறித்து கவிஞர் ஜெயபாலனிடம் நான் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தனது கருத்தாக கீழ்வருபவற்றைப் பதிவிடச் சொன்னார்:

  “சரவணபவன் குறித்து நான் சொன்ன தகவல்கள் உறுதிப்படுத்த முடியாத தகவல்களே. எனவே எனது நேர்காணலிலிருக்கும் குறிப்பிட்ட அந்தப் பகுதியை நான் மீளப்பெற்றுக்கொள்கிறேன். அதுபோன்றே என் குறித்த அவதூறுச் செய்தியை வெளியிட்ட தமிழ்வின் இணையத்தளமும் அதை நீக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”

  VA:F [1.9.4_1102]
  Rating: 0.0/5 (0 votes cast)
  VA:F [1.9.4_1102]
  Rating: 0 (from 0 votes)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enter your email address:

Delivered by FeedBurner